சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்பின் ஆண்டு நிறைவு நாள்: லித்துவேனியாவில் ரஷ்யாவிற்கு எதிரான போருக்குப் பிஸ்டோரியஸ் தயாராகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

லித்துவேனியாவின் தலைநகரான வில்னியஸுக்கு வடக்கே உள்ள பப்ராடே (Pabrade) பயிற்சி தளத்தில், புதன்கிழமை, மே 29, 2024 அன்று நடைபெற்ற லித்துவேனிய-ஜேர்மன் பிரிவு மட்டத்திலான சர்வதேச இராணுவப் பயிற்சியான ‘கிராண்ட் குவாட்ரிகா 2024’ (Grand Quadriga 2024) இன் போது ஜேர்மன் இராணுவத்தின் சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் பீரங்கி PzH 2000 இன் அருகே ஜேர்மன் பன்டெஸ்வெர் (Bundeswehr) வீரர்கள் நிற்கிறார்கள். [AP Photo/Mindaugas Kulbis]

திங்களன்று, பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் லித்துவேனியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) 45-வது கவசப் படைப்பிரிவின் முதலாவது பெரிய கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க அங்கு விஜயம் செய்தார். இந்த விஜயம் சரியாக சோவியத் ஒன்றியம் மீதான ஜேர்மன் படையெடுப்பின் 85 வது ஆண்டு நிறைவு நாளில் நிகழ்ந்தது என்பது ஒரு ஆத்திரமூட்டலை விட மேலானது. ஐரோப்பிய சக்திகளால், குறிப்பாக பேர்லினால் பெருகிய முறையில் வழிநடத்தப்படுகின்ற உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர்த் தாக்குதலின் தன்மையை இது நிரூபிக்கிறது.

“சுதந்திர கவசம்” என்றழைக்கப்படும் பயிற்சியில், எட்டு நேட்டோ நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,900 வீரர்கள்—அவர்களில் பெரும் பகுதியினர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள்—பெலாரஸ் எல்லையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் (12.4 மைல்) தொலைவில் உள்ள பப்ராடே (Pabradė) பயிற்சிப் பகுதியில் பயிற்சி செய்து வருகின்றனர். இதில் சுமார் 800 வாகனங்கள், டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஈடுபட்டுள்ளன. இப்பயிற்சியானது நேட்டோவின் கிழக்கு எல்லையில் உயர் தொழில்நுட்பப் போரை பயிற்றுவிக்கிறது: ட்ரோன்களுடன் மற்றும் அவற்றுக்கு எதிரான போர், டாங்கிகள் மற்றும் பீரங்கிகளுடன் ஆளில்லா அமைப்புகளின் பரஸ்பர செயல்பாடு, உளவு பார்த்தல், விரைவான படைவகுப்பு மற்றும் பெலாரஸ் மற்றும் ரஷ்யாவின் வெளிப்புறப் பிராந்தியமான கலினின்கிராட்டின் (Kaliningrad) உடனடி அருகாமையிலான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இதில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

4,800 வீரர்கள் மற்றும் 200 சிவில் ஊழியர்களுடன் ஜேர்மன் படைப்பிரிவு 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாகச் செயல்பட உள்ளது. ஏற்கனவே சுமார் 1,800 ஜேர்மன் இராணுவப் பணியாளர்கள் லித்துவேனியாவில் நிரந்தரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு வெளிநாட்டில் ஜேர்மன் போர் படைப்பிரிவு ஒன்று நிரந்தரமாக நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பெலாரஸ் எல்லையோரம் உள்ள ரூட்நின்காய் (Rūdninkai) இல், ஒரு ஜேர்மன் இராணுவ நகரம் கட்டப்பட்டு வருகிறது: படைமுகாம்கள், வெடிமருந்து கிடங்குகள், தளவாடப் பகுதிகள், டாங்கிகள் மற்றும் இதர போர் வாகனங்களுக்கான பராமரிப்புக் கூடங்கள், அத்துடன் துப்பாக்கிச் சூடு தளங்கள் மற்றும் பயிற்சி வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

தனது விஜயத்தின் போது, இந்த போர்த் திட்டங்கள் கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை பிஸ்டோரியஸ் தெளிவுபடுத்தினார். கூட்டாட்சி அரசாங்கம் முக்கியமாக தன்னார்வலர்களைக் கொண்டு இப்படைப்பிரிவை உருவாக்க விரும்புவதாகக் கூறினாலும், கட்டாயப்படுத்தப்பட வேண்டிய வீரர்கள் “அநேகமாக” இருப்பார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக்கொண்டார். இராணுவ ஆய்வாளர் லெப்டினன்ட் ஜெனரல் கிறிஸ்டியன் பிராய்டிங் மிகவும் வெளிப்படையாகக் கூறினார்: ஒரு இராணுவம் தன்னார்வத் தொண்டின் மூலம் மட்டுமே இயங்குவதில்லை. வீரர்கள் “சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில் தங்கள் பணியைப் பெறுவது” உறுதிசெய்யப்படும் என அவர் கூறினார். “அதோடு, நாங்கள் 2027 இன் இறுதிக்குள் முழுமையாகச் செயல்படுவோம்” என்று அவர் பின்னர் கூறினார்.

இந்த வார்த்தைகள் எவ்வித சந்தேகத்திற்கும் இடமற்றவை. கூட்டாட்சி அரசாங்கம் ஒரு அருவமான “தடுப்புக்காக” தன்னைத் தயார்படுத்தவில்லை, மாறாக ரஷ்யாவிற்கு எதிரான போருக்கே தயாராகி வருகிறது. ஜேர்மன் இராணுவம் கிழக்கு முன்னணியில் நிலைநிறுத்தப்படுகிறது, சமூகம் இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது, கட்டாய இராணுவ சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது, மேலும் தேவைப்பட்டால், ரஷ்ய எல்லைக்கு படைகளை அனுப்ப வீரர்கள் கட்டாயப்படுத்தப்பட உள்ளனர்.

பிஸ்டோரியஸின் விஜயத்தின் நேரம் மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஜூன் 22, 1941 இல், நாஜி ஜேர்மனி சோவியத் ஒன்றியம் மீது படையெடுத்தது. இது வரலாற்றிலேயே மிகக் கொடூரமான அழிவுப் போரின் தொடக்கத்தைக் குறித்தது. மூன்று மில்லியன் (முப்பது இலட்சம்) ஜேர்மன் சிப்பாய்கள், 600,000 மோட்டார் வாகனங்கள், 3,350 டாங்கிகள், 7,000 பீரங்கிகள் மற்றும் 3,900 விமானங்கள் எல்லையைக் கடந்தன. படையெடுத்து வந்த இராணுவம் ஆயுதங்களை மட்டுமல்ல, விரிவான கொலைத் திட்டங்களையும் எடுத்து வந்தது. அதனுடன் ஐன்சாட்ஸ்க்ரூப்பன் (Einsatzgruppen - நடமாடும் கொலைப் படைகள்) சென்றன; கம்யூனிஸ்டுகள், மறைமுகப் போராளிகள், யூதர்கள் மற்றும் சிந்தி (Sinti) மக்களை முறையாகக் கொலை செய்வதே அவற்றின் பணியாக இருந்தது.

கிழக்கிலான போர் ஆரம்பத்திலிருந்தே ஒரு அழிவுப் போராகவே திட்டமிடப்பட்டது. இது இராணுவ வெற்றியை மட்டுமல்ல, “யூத போல்ஷிவிசத்தை” ஒழிப்பது, ஸ்லாவிக் மக்களை அடிமைப்படுத்துவது மற்றும் அழிப்பது, மற்றும் கிழக்கில் ஜேர்மன் லெபென்ஸ்ராவ்ம் (Lebensraum - வாழும் இடம்) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஒட்டுமொத்த கிராமங்களும் துடைத்தழிக்கப்பட்டன, பொதுமக்கள் பெருமளவில் சுட்டுக் கொல்லப்பட்டனர், யூதர்கள் குழிகளுக்குள் தள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர், சோவியத் போர்க்கைதிகள் பட்டினி போடுவதன் மூலம் திட்டமிட்டு கொல்லப்பட்டனர்.

ஜேர்மனியின் ஆணையாளர் உத்தரவு அரசியல் ஆணையாளர்களை உடனடியாக தூக்கிலிடுமாறு உத்தரவிட்டது. இராணுவ அதிகார வரம்பு மீதான ஆணை சிவிலியன் மக்களை நடைமுறையில் எந்தவொரு சட்டப் பாதுகாப்பிற்கும் வெளியே நிறுத்தியது. ஜெனரல்பிளான் ஒஸ்ட் (Generalplan Ost - கிழக்கு பொதுத் திட்டம்) என்று அழைக்கப்படுவது மில்லியன் கணக்கான மக்களை வெளியேற்றுவது, அடிமைப்படுத்துவது மற்றும் கொலை செய்வதை முன்னறிவித்தது.

இதன் ஒட்டுமொத்தப் பாதிப்பு பயங்கரமானதாக இருந்தது. குறைந்தபட்சம் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் தங்களின் உயிர்களை இழந்தனர், அவர்களில் மிகப்பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மூன்று மில்லியன் சோவியத் போர்க்கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது பசி, குளிர் மற்றும் கட்டாய உழைப்பால் கொல்லப்பட்டனர். லெனின்கிராட் முற்றுகை மட்டுமே நூறாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைப் பலிவாங்கியது. கிவ் அருகே உள்ள பாபி யாரில், ஜேர்மன் கொலைப் படைகள் இரண்டு நாட்களுக்குள் 33,771 யூதர்களை —ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட— சுட்டுக் கொன்றன. தொடர்ந்து வந்த மாதங்களில், அங்கு மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.

நாஜிக்களும் அவர்களின் உள்ளூர் கூட்டாளிகளும் குறிப்பாக கொடூரமான குற்றங்களைச் செய்த நாடுகளில் லித்துவேனியாவும் ஒன்றாகும். போருக்கு முன்பு, வில்னியஸ் யூத வாழ்வின் ஒரு முக்கிய மையமாக இருந்தது. ஜெர்மன் படையெடுப்பிற்குப் பிறகு, லித்துவேனியாவின் யூதர்கள் தங்களின் உரிமைகளைப் பறிக்கப்பட்டு, கெட்டோக்களுக்குள் (Ghettos) அடைக்கப்பட்டு, நெஞ்சை உலுக்கும் வேகத்தில் படுகொலை செய்யப்பட்டனர். வில்னியஸ் அருகிலுள்ள பொனாரியில், ஜேர்மன்பிரிவுகளும் லித்துவேனிய துணைப் படைகளும் பல்லாயிரக்கணக்கான யூதர்கள், கம்யூனிஸ்டுகள், சோவியத் போர்க்கைதிகள் மற்றும் போலந்து புத்திஜீவிகளைச் சுட்டுக் கொன்றனர். லித்துவேனிய யூதர்களை அழித்தது யூத இனப்படுகொலையின் மிகக் கொடூரமான அத்தியாயங்களில் ஒன்றாகும்.

சரியாக இந்த நாட்டில் ஜெர்மன் டாங்கிகள் மீண்டும் ரஷ்ய எல்லையை நோக்கி உருண்டு வருவது, அழிவுப் போர் தொடங்கி 85 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் கிழக்கு நோக்கி விரிவடைந்து வருவதைக் காட்டுகிறது. 1945க்குப் பிறகு “இனி ஒருபோதும் இல்லை” என்று பிரகடனப்படுத்தப்பட்டது, நீண்ட காலத்திற்கு முன்பே அதற்கு நேர் எதிரானதாக மாற்றப்பட்டுவிட்டது. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன, சார்புநிலையாக்கப்பட்டு மழுப்பப்படுகின்றன அல்லது இருட்டடிப்பு செய்யப்படுகின்றன; அதே நேரத்தில் ஜேர்மனி மீண்டும் ஐரோப்பாவின் முன்னணி இராணுவ சக்தியாக மாற முயல்கிறது.

பிஸ்டோரியஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கார்ஸ்டன் பிராயர் ஆகியோரால் ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய இராணுவ மூலோபாயம் இந்த நோக்கத்தை வெளிப்படையாக முன்வைக்கிறது. ரஷ்யா முக்கிய எதிரியாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் இராணுவம் “ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவமாக” கட்டியெழுப்பப்பட உள்ளது. “ஒட்டுமொத்த பாதுகாப்பு” என்ற கட்டமைப்பிற்குள் அரசு, பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவை போருக்குத் தயாராக சீரமைக்கப்பட உள்ளன. ஜேர்மனி செயல்பாட்டுத் திட்டம், கூட்டாட்சிக் குடியரசை கிழக்கு முன்னணியில் நேட்டோ நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய தளவாட விநியோக மையமாக மாற்றுகிறது. சாலைகள், இரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள், நிர்வாகங்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் போர்த் திட்டமிடலில் உள்வாங்கப்படுகிறார்கள்.

லித்துவேனியாவில் உள்ள இந்தப் படைப்பிரிவு இந்த மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். ஜேர்மனி படைகள், ஆயுதங்கள் மற்றும் விநியோகங்களை பின்புறப் பகுதியில் மட்டும் நகர்த்த விரும்பவில்லை, மாறாக போரின் முன்னணியிலேயே நேரடியாக இருக்க விரும்புகிறது. வில்னியஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபத்தின் சுவரில் இப்போது கூட காணப்படும் ஃபிரெட்ரிக் மெர்ஸின் வாக்கியம் இந்தத் திட்டத்தைச் சுருக்கமாகக் கூறுகிறது: “லித்துவேனியாவின் பாதுகாப்பு நமது பாதுகாப்பும் ஆகும். வில்னியஸின் பாதுகாப்பு என்பது பேர்லினின் பாதுகாப்பு ஆகும்.” ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் ஒருமுறை கிழக்கு ஐரோப்பாவை ஜேர்மன் அதிகார அரசியலின் மூலோபாய முன்களமாக வரையறுக்கிறது.

இந்தக் கொள்கையானது உக்ரேனில் நேட்டோவின் போர் தீவிரமடைவதோடு பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் ஜெலென்ஸ்கி பேர்லினுக்கு விஜயம் செய்தபோது, ஜேர்மன் ஆயுதத் தொழில்துறையை உக்ரேனிய போர் எந்திரத்துடன் இணைப்பதை முன்னெடுத்துச் செல்லும் ஒரு “மூலோபாய கூட்டாண்மையில்” ஜேர்மனியும் உக்ரேனும் கையெழுத்திட்டன. ட்ரோன்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், வெடிமருந்துகள் மற்றும் நீண்ட தூர ஆயுத அமைப்புகளின் உற்பத்தியை ஜேர்மனி ஆதரிக்கிறது.

மே மாதம் கிவ்விற்கு விஜயம் செய்த போது, ஜேர்மனியும் உக்ரேனும் இணைந்து 1,500 கிலோமீட்டர் (932 மைல்கள்) வரையிலான பாயும் வரம்புகளைக் கொண்ட ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா ஆயுத அமைப்புகளை உருவாக்கவும் தயாரிக்கவும் உத்தேசித்துள்ளதாக பிஸ்டோரியஸ் அறிவித்தார். இது மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீதும், அதே போல் ரஷ்யாவின் உட்பகுதியில் உள்ள தொழிற்துறை மையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் கட்டளை மையங்கள் மீதும் தாக்குதல்களை நடத்த வழிவகை செய்கிறது— இது ஏற்கனவே அதிகரித்த வகையில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.

இது, ரஷ்ய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக உக்ரேனையோ அல்லது ஐரோப்பாவையோ பாதுகாப்பது பற்றியது என்ற கூற்று ஒரு அரசியல் பொய்யாகும். நேட்டோ தனது பல தசாப்த கால கிழக்கு நோக்கிய விரிவாக்கம், வாஷிங்டன் மற்றும் பேர்லினின் ஆதரவுடன் 2014 இல் கிவ்வில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு, மற்றும் உக்ரேனை ரஷ்யாவிற்கு எதிரான ஒரு இராணுவ புறக்காவல் நிலையமாக திட்டமிட்டு மாற்றியதன் மூலம் இந்தப் போரைத் தூண்டியது. பிப்ரவரி 2022 இல் ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு, நேட்டோ சக்திகள் போரை மேலும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. அவர்கள் ஆயுதங்களை வழங்குகிறார்கள், உக்ரேனிய வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள், உளவு வேவு மற்றும் இலக்கு தரவுகளை வழங்குகிறார்கள், தளவாடங்களை ஒருங்கிணைக்கிறார்கள், மற்றும் ரஷ்யாவின் உட்பகுதியில் தாக்குதல்களை நடத்த வழிவகை செய்கிறார்கள்.

அவ்வாறு செய்வதன் மூலம், பாசிச சக்திகளை பகிரங்கமாகச் சார்ந்திருக்கும் மற்றும் இரண்டாம் உலகப் போரின் உக்ரேனிய நாஜி கூட்டாளிகளைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து புனிதப்படுத்துகின்ற கிவ்வில் உள்ள ஓர் ஆட்சியுடன் பேர்லின் இணைந்து செயல்படுகிறது. ஸ்டீபன் பண்டேரா, ஆண்ட்ரி மெல்னிக் மற்றும் உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு ஆகியோரைப் போற்றிப் புகழ்வது என்பது முக்கியத்துவமற்ற ஒரு சிறிய விஷயம் அல்ல, மாறாக உத்தியோகபூர்வ அரச சித்தாந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்தச் சக்திகள் அந்தப் போரின் போது நாஜிக்களுடன் ஒத்துழைத்ததோடு, யூத எதிர்ப்புப் படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு மற்றும் வெகுஜனக் கொலைகளிலும் ஈடுபட்டன. ஏகாதிபத்திய சக்திகள் “ஜனநாயகம்” மற்றும் “சுதந்திரத்தை” பாதுகாப்பதாக உரிமை கோரும் அதேவேளையில், இன்று இவர்கள் அங்கு “தேசிய நாயகர்களாக” கௌரவிக்கப்படுகிறார்கள்.

இந்தப் பிரச்சாரம் ஒரு நடுக்கமூட்டும் வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது. ஹிட்லரும் கூட, சோவியத் ஒன்றியம் மீதான படையெடுப்பை நாடுகளைக் கைப்பற்றுதல், கொள்ளையடித்தல் மற்றும் முற்றாக அழித்தொழித்தல் ஆகியவற்றிற்காகவே செய்கிறேன் என்று பகிரங்கமாக நியாயப்படுத்தவில்லை. ஜூன் 22, 1941ஆம் ஆண்டின் தனது பிரகடனத்தில், ஜேர்மனி எப்போதும் அமைதியையே விரும்பியதாகவும், ஆனால் மாஸ்கோவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தலால் இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.

ஐரோப்பாவின் பாதியை அடிமைப்படுத்துவது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகவும், இராணுவ ஆக்கிரமிப்பு தற்காப்பாகவும், ஆக்கிரமிப்புப் போர் ஒரு முன்கூட்டியே தொடுக்கப்பட்ட தற்காப்புத் தாக்குதலாகவும் முன்வைக்கப்பட்டது. ஜேர்மன் ஆயுதப்படையின் தலைமைத் தளகத்தின் அறிவிப்பு ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “கிழக்கிலிருந்து வரவிருக்கும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக, ஜேர்மன் ஆயுதப்படை ஜூன் 22 அன்று அதிகாலை 3 மணிக்கு, எதிரிப் படைகளின் பிரமாண்டமான படைக்குவிப்புக்கு மத்தியில் தனது தாக்குதலைத் தொடுத்தது.”

லித்துவேனியாவிலும் கூட, ஜேர்னியின் போர்க் கொள்கை வரலாற்றை மாற்றி எழுதுவதுடன் எவ்வளவு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது. ரூட்நின்காயில் உள்ள ஜேர்மன் இராணுவ தளத்தில், இராணுவப் பயிற்சிப் பகுதியின் விரிவாக்கமானது யூத கொரில்லாப் போராளிகளின் நினைவுச் சின்னத்தையே அங்கிருந்து அகற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. முன்னாள் போராளிகளின் முகாமைப் பாதுகாக்கப் பாடுபடுவதாக கூட்டாட்சி அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகக் உரிமை கோரியது. ஆனால் யதார்த்தம் வேறு கதையைக் கூறுகிறது: நாஜிக்களுக்கு எதிரான யூத மற்றும் இடதுசாரி எதிர்ப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மண்ணில், ஜேர்மன் டாங்கிகளுக்காகவும் ரஷ்யாவிற்கு எதிரான அடுத்த போருக்காகவும் ஒரு புதிய இராணுவ உள்கட்டமைப்பு கட்டப்பட்டு வருகிறது.

டெர் ஸ்பீகல் (Der Spiegel) செய்தி இதழின் அறிக்கையின்படி, பொறுப்பான லித்துவேனிய கலாச்சார அமைச்சகம் முன்னாள் கொரில்லாப் போராளிகளின் முகாமைப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதவில்லை. ஒரு பிரச்சாரக் கட்டமைப்பாக இருக்கும் இந்த வரலாற்றுத் தளம், லித்துவேனியாவின் “முழுமுதலாதிக்கம் மற்றும் சர்வாதிகார ஆட்சிகள் மற்றும் அவற்றின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்கான” தடையின் கீழ் வருகிறது. அதன்படி, “இது பொதுவெளியில் இருக்கும் ஒரு சின்னம் என்ற நிலையிலிருந்து சாத்தியமான அளவில் அகற்றப்படலாம்.” தீவிர வலதுசாரி மற்றும் கம்யூனிச எதிர்ப்பு லித்துவேனிய அதிகாரிகள் யூத கொரில்லாப் போராளிகளை குற்றவாளிகளாகச் சித்திரிக்கிறார்கள்; ஏனெனில் அவர்கள் நாஜி ஜேர்மனிக்கு எதிராக சோவியத் படைகளுடன் இணைந்து போராடினார்கள். “அவர்களின் நடவடிக்கைகள் உள்ளூர் மக்கள் மற்றும் லித்துவேனிய அரசுக்கு எதிரான விரோதப் போக்காக மதிப்பிடப்படுகின்றன” என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக டெர் ஸ்பீகல் மேற்கோள் காட்டியுள்ளது.

இது பல உண்மைகளைப் பறைசாற்றுகிறது. உக்ரைனிய நாஜி கூட்டாளிகள் கௌரவிக்கப்பட்டு, தீவிர வலதுசாரி சக்திகள் நேட்டோ போர் எந்திரத்திற்குள் ஒருங்கிணைக்கப்படும் அதே வேளையில், பாசிசத்திற்கு எதிரான யூத மற்றும் கம்யூனிச எதிர்ப்பின் நினைவுகள் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டுத் தடை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில், இன்று போர், பாசிசம் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிராகப் போராடுபவர்கள் துன்புறுத்தப்பட்டு குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள் — உக்ரைனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ட்ரொட்ஸ்கிசவாதி போக்டன் சிரோட்டியுக் போன்ற இடதுசாரி போர் எதிர்ப்பாளர்கள் முதல் ஜேர்மனியில் மீண்டும் ஆயுதபாணியாக்குதலை எதிர்ப்பவர்கள் வரை அனைவரும் வேட்டையாடப்படுகிறார்கள்.

மெர்ஸ்-கிளிங்பெய்ல் (Merz-Klingbeil) அரசாங்கம் என்பது நாஜி ஆட்சியுடன் முற்றிலும் ஒன்றானதல்ல. ஆனால், ஆளும் வர்க்கத்தை மீண்டும் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கித் தள்ளும் புறநிலை உந்துசக்திகள் 1930களில் இருந்ததைப் போலவே தான் இப்போதும் இருக்கின்றன: அவை ஜேர்மன் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியப் பசி, மூலப்பொருட்கள், சந்தைகள், செல்வாக்கு மண்டலங்கள் மற்றும் புவிசார் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் ஆகியவை ஆகும். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, இப்போதும் கிழக்கு ஐரோப்பா மற்றும் உக்ரைன் மீதான கட்டுப்பாடு ஒரு மையப் பங்கை வகிக்கிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் தனது தலைமையின் கீழ் ஐரோப்பாவை அணிதிரட்டவும், யூரேசிய நிலப்பரப்பைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவை இராணுவ ரீதியாகப் பின்னுக்குத் தள்ளவும் முயற்சிக்கிறது.

ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த மாற்றங்களை ஆரம்பத்திலிருந்தே அதன் உண்மையான பெயரிட்டு அழைத்து, அதன் விளைவுகள் குறித்து எச்சரித்ததோடு, அதே நேரத்தில் அதற்கு எதிரான ஒரு சாத்தியமான முன்னோக்கையும் முன்வைத்துள்ளது. பேரழிவுகரமான ஒரு மூன்றாவது உலகப் போரை நோக்கிய இந்த நகர்வை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலின் மூலம் மட்டுமே தடுக்க முடியும். ஜேர்மனி, ரஷ்யா, உக்ரேன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் தத்தமது ஆளும் வர்க்கங்களின் இலாபங்களுக்காகவும் வல்லரசு நலன்களுக்காகவும் படுகொலை செய்யப்படுவதில் எவ்வித விருப்பமும் இல்லை. போர், மீண்டும் ஆயுதபாணியாக்குதல் மற்றும் பாசிசம் ஆகியவற்றுக்கான உண்மையான பதில், அவற்றுக்கெல்லாம் மூல காரணமான முதலாளித்துவ முறைக்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே ஆகும்.

Loading