முன்னோக்கு

சுதந்திரப் பிரகடனம் வெளியாகி 250 ஆண்டுகள்

தேசிய ஆவணக் காப்பகத்தில் பார்வையாளர்களுக்கு மேலே, சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிடப்பட்டதைக் காட்டும் ஒரு பெரிய சுவர் ஓவியம் காணப்படுகிறது. வாஷிங்டன், 2026, ஜனவரி 29 வியாழக்கிழமை [AP Photo/John McDonnell]

'அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர்,' அரசாங்கங்கள் தங்களின் அதிகாரங்களை பகுத்தறிவிலிருந்தும் 'ஆளப்படுபவர்களின் சம்மதத்திலிருந்தும்' பெறுகின்றன, மேலும் 'வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடும் உரிமை' ஆகிய தங்களின் 'பறிக்க முடியாத' உரிமைகளுக்குத் தடையாக நிற்கும் எந்தவொரு அரசாங்கத்தையும் 'மாற்றுவது அல்லது ஒழிப்பது' மக்களின் கடமையாகும் என்று பிரகடனப்படுத்திய சுதந்திரப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றுடன் 250 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

உலகளாவிய மனித சமத்துவம் பற்றிய இந்த தீவிரத்தன்மைகொண்ட பிரகடனம் 1789 இன் பிரெஞ்சுப் புரட்சி, 1791 இன் ஹைட்டி புரட்சி, 1848-ஆம் ஆண்டின் புரட்சிகள் மற்றும் ஐரோப்பாவையும் அமெரிக்க நாடுகளையும் உலுக்கிய தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயக ஆட்சிக்கான போராட்டங்களில் எதிரொலித்தது. இந்த அர்த்தத்தில்தான் மார்க்ஸ், மூலதனம் நூலின் முன்னுரையில், அமெரிக்க சுதந்திரப் போர் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் ஐரோப்பிய முதலாளித்துவ புரட்சிகளுக்கான 'எச்சரிக்கை மணியை ஒலித்தது' என்று எழுதினார்.

மார்க்சிச இயக்கம் எப்போதுமே அமெரிக்கப் புரட்சியை, அதற்குப் பின் வந்த பிரெஞ்சுப் புரட்சியைப் போலவே, அதன் வரலாற்று உள்ளடக்கத்துக்குள் வைத்தே பார்க்கிறது. இவை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகள் என்பதால், அவை தாங்கள் பிரகடனப்படுத்திய கொள்கைகளை மிகவும் வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே செயல்படுத்த முடிந்தது. மிக நேரடியாகச் சொல்வதானால், பிற்காலத்தில் அமெரிக்காவாக உருவாகியிருந்த அந்தப் பகுதியில், இந்தப் பிரகடனம் அடிமை முறையின் நீடிப்பை ஒரு பிரச்சினையாக எழுப்பியது. ஆனால், அதற்கான தீர்வை அதனால் காண முடியவில்லை. இருப்பினும், அது அந்த செயல்முறையைத் தொடங்கி வைத்தது, இது இரண்டாவது அமெரிக்கப் புரட்சியான உள்நாட்டுப் போரில் (1861-65) அடிமை முறை ஒழிக்கப்பட்டதன் மூலம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது.

இந்த இரண்டு அமெரிக்கப் புரட்சிகளும் 1776 இல் பிரகடனப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளின் எழுச்சியைக் குறித்தன என்றால், இந்த 250 வது ஆண்டு நிறைவானது, அக்கொள்கைகளின் அதிர்ச்சியூட்டும் நெருக்கடி மற்றும் சிதைவு நிலைமைகளின் கீழ் குறிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கமும், அது தலைமை தாங்கும் சமூக ஒழுங்கும், ஒவ்வொரு அர்த்தத்திலும் அமெரிக்கப் புரட்சியையும் சுதந்திரப் பிரகடனத்தில் தங்களின் மிக ஆழமான வெளிப்பாட்டைக் கண்ட கொள்கைகளையும் நிராகரிப்பதாகவே உள்ளன.

அனைத்து மாபெரும் புரட்சிகர ஆவணங்களின் வார்த்தைகளைப் போலவே, சுதந்திரப் பிரகடனத்தின் வார்த்தைகளும் சமூகப் போராட்டக் காலங்களில் திடீரென உயிர்பெறுகின்றன. 'ஒரு கொடுங்கோலனை வரையறுக்கக்கூடிய, ஒவ்வொரு செயலாலும் குறிக்கப்பட்ட... ஒரு சுதந்திரமான மக்களின் ஆட்சியாளராக இருக்க தகுதியற்ற' ஒரு ஆட்சியாளரான மூன்றாம் ஜோர்ஜை அது கண்டனம் செய்வது, இன்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான கண்டனத்தைப் போலவே படிக்கப்படுகிறது. ஜூன் 25 அன்று உலக சோசலிச வலைத் தளம் (WSWS) நடத்திய இணையவழி கருத்தரங்கில் வரலாற்று ஆசிரியர் ஆடம் ஹோஷ்சைல்ட் குறிப்பிட்டது போல, மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் மீதான சுதந்திரப் பிரகடனத்தின் குற்றச்சாட்டு 'இன்று காலை எழுதப்பட்டது' போல படிக்கப்படுகிறது.

சுதந்திரப் பிரகடனத்தின் மொழியில் கூறுவதானால், அமெரிக்க நகரங்களில் இராணுவப் படைகளை நிலைநிறுத்தியதன் மூலம் இராணுவமானது 'சிவில் அதிகாரத்தை விட மேலானதாக' மாற்றப்பட்டுள்ளது. குடியேறியவர்கள் எந்தவொரு குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ இன்றி எல் சல்வடாரில் உள்ள ஒரு முகாமிற்கு 'கடல்களைத் தாண்டி கடத்தப்படுகிறார்கள்'. மினியாபோலிஸில் ரெனீ குட்டைக் சுட்டுக் கொன்ற ICE முகவர் மற்றும் அலெக்ஸ் பிரெட்டியைப் சுட்டுக் கொன்ற CBP முகவர்களின் சம்பவங்களைப் போல, கூட்டாட்சி முகவர்கள் 'தாங்கள் செய்யும் எந்தவொரு கொலைகளுக்கான தண்டனையிலிருந்தும்' பாதுகாக்கப்படுகிறார்கள்.

சுதந்திரப் பிரகடனத்தின் 'அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர்' என்ற கூற்று, தனது முதல் டிரில்லியனரான எலோன் மாஸ்க்கை உருவாக்கியுள்ள ஒரு சமூகத்தின் மீதான குற்றப்பத்திரிகையாக நிற்கிறது. கிட்டத்தட்ட 1,000 பில்லியனர்கள் 8.4 டிரில்லியன் டாலர் சொத்துக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், மேலும் சமூகத்தின் மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினர், மக்கள் தொகையின் அடிமட்டத்தில் உள்ள 90 சதவீதத்தினரின் ஒட்டுமொத்த செல்வத்திற்கு இணையான செல்வத்தைக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதவிக் காலத்தின் முதல் ஆண்டிலேயே கிரிப்டோகரன்சி மோசடி மூலம் 1.43 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ள நிலையில், அமெரிக்க சமூகம் ஊழலிலும் குற்றத்தன்மையிலும் மூழ்கியுள்ளது.

ஒரு காலத்தில் 'சுதந்திரமாக சுவாசிக்க ஏங்கும் உங்களது சோர்வுற்ற, ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களை என்னிடம் தாருங்கள்,' என்று பிரகடனப்படுத்திய நாடானது, தனது பிறப்பின் 250-வது ஆண்டுவிழாவை, குடியேறிய மக்களை குறிவைக்கும் அதிரடிச் சோதனைகளின் அதிகரிப்புடன் நினைவு கூர்ந்தது. அமெரிக்க அரசியலமைப்பின் பிறப்புரிமைக் குடியுரிமைக்கான உத்தரவாதத்திற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், தி இன்டிபென்டன்ட் பத்திரிகையின் புதிய அறிக்கை ஒன்றின்படி, வெறும் ஐந்து நாட்களில் 10,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கப் புரட்சியானது மதத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு 'பிரிவினைச் சுவரை' அறிவித்திருந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட 224 பக்க அறிக்கையில் அந்த 'சுவர்' ஒரு 'பாலத்தால்' மாற்றப்படும் என்று அறிவித்துள்ளது.

ஆளும் வர்க்கமும் அதன் அரசும் இந்த அளவிற்கு அழுக்கிலும் குற்றப் பின்னணியிலும் மூழ்குவதற்குக் காரணம் ட்ரம்ப் மட்டுமே என்று கூறிவிட முடியாது. அவர் ஒரு நீண்டகால செயல்முறையின் உருவகம், வெளிப்பாடு மற்றும் அதன் விளைவு மட்டுமே ஆவார். உலகளாவிய ஒருங்கிணைந்த பொருளாதாரம், முதலாளித்துவ ஆட்சி சார்ந்திருக்கும் தேசிய-அரசு அமைப்பைச் சிதைத்துள்ளது. ஏகபோகங்கள், 'சுதந்திர' சந்தைகள் என்று சொல்லப்படுபவற்றை வெகு காலத்திற்கு முன்பே மாற்றிவிட்டன. மேலும் உற்பத்தி முறையானது நிதிச் சூதாட்டத்திற்கும் கற்பனையான மூலதனக் குவிப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. தனது போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் நீண்டகால வீழ்ச்சியைக் கண்டுவரும் அமெரிக்க முதலாளித்துவம், தனது பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வன்முறை மூலம் ஈடுகட்டும் முயற்சியாக 1991 முதல் தொடர்ந்து ஏகாதிபத்தியப் போர்களை நடத்தி வருகிறது.

இந்தச் சீரழிவிலிருந்து ஒரு நிதிசார் தன்னலக்குழு உருவாகியுள்ளது. அது அனைத்து சட்டபூர்வ தன்மையையும் முறித்துக் கொண்டுள்ளது —அமெரிக்காவிற்குள்ளான அதன் நடவடிக்கைகளில், அது அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் மற்றும் சட்டங்களை தூக்கி எறியப்பட வேண்டிய தடைகளாக காண்கிகிறது, மேலும் உலகம் முழுவதும், அது சர்வதேச சட்டத்தை காலின்கீழ் மிதித்து, ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி, இனப்படுகொலைக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

அமெரிக்கப் புரட்சியின் ஜனநாயகப் பாரம்பரியத்தை நிராகரிப்பது இன்று இரண்டு ஒன்றுக்கொன்று துணைபுரியும் சித்தாந்த வடிவங்களை எடுக்கிறது. ட்ரம்ப் மற்றும் தீவிர வலதுசாரிகளின் கட்டுக்கதை உருவாக்குபவர்கள், அமெரிக்கப் புரட்சித் தலைவர்களின் பெயர்களை உச்சரித்துக்கொண்டே, அவர்கள் நிறுவிய அனைத்தையும் தகர்த்து, தங்களை தேசியக் கொடியால் போர்த்திக்கொள்கிறார்கள். ட்ரம்ப் நிர்வாகத்தின் சார்பில் நடந்த இந்த ஆண்டுவிழாவின் அதிகாரப்பூர்வக் கொண்டாட்டங்கள், மிகக் குறைந்த மக்கள் கலந்துகொண்ட விழாக்கள், ட்ரம்பின் பிறந்தநாளில் வெள்ளை மாளிகைக்கு முன்னால் நடந்த ஒரு மல்யுத்த கூண்டுச் சண்டை மற்றும் 'சுதந்திர டிரக்குகள்' ஆகியவற்றின் நடமாடும் கண்காட்சி ஆகியவற்றை மட்டுமே கொண்டிருந்தன.

ஜனநாயகக் கட்சியும் அதன் துணை அமைப்புகளும் இனம் மற்றும் அடையாளத்தின் பிற்போக்கு அரசியலுக்கு சேவை செய்யும் வகையில் புரட்சியின் புரட்சிகரத் தன்மையையே மறுக்கின்றன. 2019 ஆம் ஆண்டில், ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கப் பிரிவுகளின் ஊதுகுழலான நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை, அதன் '1619 திட்டத்தில்' அமெரிக்கப் புரட்சியானது அடிமைமுறையைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு எதிர்-புரட்சி என்று அறிவித்தது. இந்தக் கருத்தின் அடிப்படையில், பிரகடனத்தின் 250-வது ஆண்டு நிறைவில், இதனைக் கொண்டாடுவதற்கோ அல்லது மதிப்பதற்கோ எதுவுமே இல்லை.

கடந்த கால முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிகள் மீதான தொழிலாளர் இயக்கத்தின் அணுகுமுறையை லியோன் ட்ராட்ஸ்கி முடிவுகளும் எதிர்காலங்களும் (1906) என்ற நூலில் இவ்வாறு தொகுத்துரைத்தார். 'முதலாளித்துவ வர்க்கம் தனது வரலாற்று ரீதியான இளமைக் காலத்தின் அனைத்து மரபுகளையும் வெட்கக்கேடான முறையில் காட்டிக்கொடுத்துள்ளது, மேலும் அதன் தற்போதைய கூலிப்படையினர் அதன் முன்னோர்களின் கல்லறைகளை அவமதிப்பதோடு, அவர்களின் சிந்தனைகளின் சாம்பலை கேலி செய்கிறார்கள். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் புரட்சிகர கடந்த காலத்தின் கௌரவத்தைத் தன் பாதுகாப்பின் கீழ் எடுத்துக்கொண்டுள்ளது.'

1850-ஆம் ஆண்டின் தப்பியோடிய அடிமைகள் சட்டம் மற்றும் 1857-ஆம் ஆண்டின் டிரெட் ஸ்காட் தீர்ப்பு ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, பிரகடனத்தின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, அடிமைத்தனத்திற்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே இருந்தது. எனவே இப்போது, முதலாளித்துவத்தின் நெருக்கடி அத்தகைய ஒரு கட்டத்தை எட்டியுள்ளது, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே முன்னோக்கி கொண்டு செல்லப்பட முடியும்.

'வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடும் உரிமை' என்பது சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் முழுமையாகப் பிணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் கண்ணியமான ஊதியத்துடனான வேலை, சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் கலாச்சாரம், போர் மற்றும் அடக்குமுறை இல்லாத வாழ்க்கை ஆகியவற்றுக்கான உரிமை இல்லாமல், இந்த உரிமைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இந்த உரிமைகள் ஒரு நிதிய தன்னலக் குழுவின் சமூக ஆதிக்கத்துடன் முற்றிலும் பொருந்தாதவை ஆகும்.

அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவினரிடையே சமூக, அரசியல் தீவிரமயமாக்கலுக்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. 'மன்னர்கள் வேண்டாம்' போராட்டங்களிலும், ICE படுகொலைகளுக்கு எதிரான பாரிய போராட்டங்களிலும் இலட்சக்கணக்கானோர் வீதிகளில் இறங்கியுள்ளனர். வர்க்கப் போராட்டம் சர்வதேச அளவில் தீவிரமடைந்து வருகிறது. வளர்ந்து வரும் இந்த இயக்கத்திற்கு ஒரு வரலாற்று முன்னோக்கையும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தையும் வழங்குவதே மிக முக்கியமான பணியாகும்.

1776-இன் புரட்சியாளர்கள், அவர்கள் காலத்து நடைமுறையில் இருந்த அமைப்பிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கவில்லை, மாறாக அவர்கள் அதை தூக்கியெறிந்தனர். மூன்றாவது அமெரிக்கப் புரட்சியானது, முதலாளித்துவத்திற்கு எதிரான உலகப் புரட்சியின் ஒரு பகுதியாக, தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படும் ஒரு சோசலிசப் புரட்சியாக இருக்கும். அதுவே, இந்த ஆண்டு நிறைவின் அர்த்தமும், இன்றுடன் 250 ஆண்டுகளுக்கு முன்பு உலகிற்கு பிரகடனப்படுத்திய சுதந்திரப் பிரகடனத்தின் வாழும் பாரம்பரியமும் ஆகும்.

Loading