இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவுக்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரை, முதலாளித்துவ தன்னலக்குழு ஆட்சியைப் பீடித்திருக்கும் பீதியையும், அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு தீவிரமடைந்து வரும் சதியினதும் வெளிப்பாடாகும்.
தெற்கு டகோட்டாவில் உள்ள மவுண்ட் ரஷ்மோர் நினைவுச் சின்னத்திற்கு முன்னால் நின்று உரையாற்றிய ட்ரம்ப், அமெரிக்க மக்கள்தொகையின் கணிசமான மற்றும் வளர்ந்து வரும் ஒரு பிரிவினருக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தார். “எமது நாட்டில் கம்யூனிச அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்கியுள்ளது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியதுடன், அதை “அமெரிக்க சுதந்திரத்திற்கு ஒரு மரண அச்சுறுத்தல்... முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், பேர்ல் ஹார்பர் அல்லது 9/11 தாக்குதல் உட்பட, எமது நாட்டிற்கு இதுவே மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், “ஒரு ஜனநாயகத்தில் இத்தகைய கோட்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.” சோசலிஸ்டுகள் தேசத்திற்கு வெளியே நிற்கிறார்கள் என்று அவர் கூறினார்: “நீங்கள் கார்ல் மார்க்ஸுக்கு விசுவாசமாக இருக்கலாம் அல்லது அமெரிக்காவிற்கு விசுவாசமாக இருக்கலாம். நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக இருக்கலாம் அல்லது ஒரு தேசபக்தராக இருக்கலாம். நீங்கள் இரண்டாகவும் இருக்க முடியாது” என்று குறிப்பிட்ட அவர், “அமெரிக்காவின் குடிமக்கள் கம்யூனிசத்தை விரைவாக வீழ்த்துவார்கள் என்பதை அனைவரும் கேட்கும் வண்ணம்” உறுதியளித்தார்.
இதன் தர்க்கரீதியான விளைவு என்னவென்றால், சோசலிஸ்டுகள் அரசின் எதிரிகளாக நடத்தப்பட வேண்டும், மேலும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற கால் நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட வழிமுறைகளை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிட வேண்டும் என்பதாகும். ட்ரம்பின் இந்த பாசிச வசைமொழியின் நேரடி இலக்கு, கடந்த மாதம் கொலராடோ மற்றும் நியூ யோர்க்கில் உள்ள அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) உறுப்பினர்களை ஆதரித்து வாக்களித்தவர்களே ஆவர். இதை ட்ரம்பும் வலதுசாரி ஊடகங்களும் அமெரிக்காவை கம்யூனிஸ்டுகள் உடனடியாகக் கைப்பற்றப் போவதாகச் சித்தரித்துக் காட்டுகின்றன.
ட்ரம்ப் பேசுவதற்கு முந்தைய இரண்டு வாரங்களில், டெக்சாஸில் உள்ள பிரெய்ரிலாந்து குடிவரவு தடுப்பு மையத்திற்கு வெளியே கடந்த ஆண்டு ஜூலை நான்காம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒன்பது இளைஞர்களுக்கு, “பயங்கரவாதத்திற்கு சட ரீதியான ஆதரவு வழங்கியமை” உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், நீதிமன்ற விசாரணையில் தண்டனை விதிக்கப்பட்டு, 30 முதல் 100 ஆண்டுகள் வரை மத்திய கூட்டாட்சி நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ட்ரம்ப் தனது கம்யூனிச-எதிர்ப்பு பிரச்சாரத்தை பெருந்திரளான நாடுகடத்தல் இயந்திரத்துடனும் இணைத்துக் கொண்டார். மேலும் அவர், “எமது நாட்டிற்குப் புதிதாக வருபவர்கள் உட்பட பலரிடமிருந்தும் இந்த அச்சுறுத்தல் வருகிறது”, அதே சமயம் “கம்யூனிஸ்ட் கட்சி [அதாவது, ஜனநாயகக் கட்சி] சட்டவிரோதக் குடியேறிகள், குற்றவாளிகள் மற்றும் வேலை செய்ய விரும்பாத அனைவராலும் ஆனது” என்று குறிப்பிட்டார்.
இந்த வெறித்தனமான கண்டனங்களுக்கு அப்பால், ட்ரம்பின் உரை ஒரு அரசியல் நோக்கத்தின் பிரகடனமாகும். இது, இடைக்காலத் தேர்தல்களின் முடிவுகளை மாற்றுவதற்கும் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்குமான ஒரு சதியாகவும் உள்ளது. “நாம் முட்டாள்தனமாகவும், அறிவற்றவர்களாகவும், விவேகமற்றவர்களாகவும் இருந்தால் மட்டுமே, இடைக்காலத் தேர்தல்களில் தோற்க முடியும்,” என்று அவர் கூட்டத்தினரிடம் கூறினார். வாக்காளர் பதிவுக்குக் குடியுரிமைக்கான ஆவணச் சான்றையும், வாக்களிக்கப் புகைப்பட அடையாள அட்டையையும் கட்டாயமாக்கும் SAVE சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கோரினார். இது மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும்.
இதைச் செய்தால், “நாம் 100 ஆண்டுகளுக்கு ஒரு தேர்தலில் கூட தோற்க மாட்டோம்” என்று ட்ரம்ப் அறிவித்தார். இது, ஹிட்லரின் “ஆயிரம் ஆண்டு பேரரசு” என்ற பிரகடனத்தை எதிரொலிப்பதாக இருந்தது. இருப்பினும் அது பத்தில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதன் முடிவு உறுதிசெய்யப்பட்ட ஒரு தேர்தல், ஒரு தேர்தலே அல்ல. மேலும், தோற்பதற்கு தன்னைத் தானே “அனுமதிப்பதன் மூலம்” மட்டுமே தோற்க முடியும் என்று கூறும் ஒரு ஆளும் கட்சி, எந்தவொரு தோல்வியும் சட்டவிரோதமானதாகவே கருதப்படும் என்பதை முன்கூட்டியே அறிவித்துவிட்டது.
இது, இதற்கு முன்பும் பார்க்கப்பட்ட ஒன்றுதான். 2020 ஆம் ஆண்டு முழுவதும், தான் தோற்பதற்கு ஒரே வழி மோசடி தான் என்று ட்ரம்ப் பிரகடனம் செய்தார், தேவைப்படும்போது அந்தப் பொய்யைத் தயாராக வைத்திருக்க, பல மாதங்களுக்கு முன்பே தபால் வாக்குகளை அவர் கண்டித்தார். அவர் தோற்றபோதும், வெற்றியை அறிவித்து, மாநில அதிகாரிகள் தனக்கு வாக்குகளைக் “கண்டுபிடிக்க வேண்டும்” என்று கோரினார், மேலும், போலி வாக்காளர் குழுக்களை அமைத்தார். ஜனவரி 6, 2021 அன்று, ட்ரம்ப் வாஷிங்டனுக்கு ஒரு கும்பலை வரவழைத்து, தேர்தல் சான்றளிப்பைத் தடுப்பதற்காக நாடாளுமன்றக் கட்டிடத்தை (Capitol) முற்றுகையிட அவர்களைத் தூண்டினார்.
ஆளும் வர்க்கமானது, இந்த பாசிச சதிப்புரட்சி முயற்சியை மேற்கொண்ட எவரையும் ஒருபோதும் பொறுப்பாக்கவில்லை. ஜனநாயக்கட்சியினர், “முன்னோக்கி நகர்வது” என்ற பெயரில், இந்த சதியின் வேர்கள் பற்றிய எந்தவொரு தீவிரமான விசாரணையையும் தடுத்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார், அங்கு அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே, சதிப்புரட்சி முயற்சியை மேற்கொண்ட சுமார் 1,600 பாசிச கிளர்ச்சியாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.
2020 இல் இருந்து ட்ரம்ப் கற்றுக்கொண்ட பாடம் சதிப்புரட்சிகள் தோல்வியடையும் என்பதல்ல, மாறாக அவை இன்னும் முழுமையாகத் திட்டமிடப்பட வேண்டும் என்பதாகும். ட்ரம்ப் இப்போது அமெரிக்க நகரங்களுக்கு எதிராக ஏற்கனவே நிலைநிறுத்தியுள்ள ஒரு கடைந்தெடுத்த இராணுவத்தையும், அனைத்து சட்டக் கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு செயல்படும் ICE இல் உள்ள ஒரு துணை இராணுவப் படையையும், பெரும்பாலும் இணங்கிப்போகும் உச்ச நீதிமன்றப் பெரும்பான்மையையும் தனது கட்டளையின் கீழ் வைத்துள்ளார்.
2020-ல், வாக்குகள் எண்ணப்பட்டதில் நடந்ததாகக் கூறப்படும் கற்பனையான மோசடியே தேர்தலை ரத்து செய்வதற்கான சாக்குப்போக்காக இருந்தது. இப்போது, ஜனநாயக ஆட்சி வடிவங்கள் மீதான தாக்குதலின் கட்டமைப்பு பகிரங்கமாக அரசியல் ரீதியானதாக, சோசலிசத்திற்கு எதிரான போராட்டமாக உள்ளது. வாக்குகள் தவறாக எண்ணப்படும் என்று ட்ரம்ப் வெறும் உரிமை கோரவில்லை. அவர் கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்தும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் சில வாக்குகள், தாமாகவே சட்டவிரோதமானவை என்று அவர் வலியுறுத்துகிறார்.
ட்ரம்பின் வெறித்தனமான கண்டனங்கள் முதலாளித்துவ தன்னலக் குழுவை பீடித்திருக்கும் ஆழமான பீதியை பிரதிபலிக்கின்றன. டென்வரில் நடந்த ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உள்கட்சித் தேர்தலில் 15 முறை பதவியில் இருந்தவரை ஒரு DSA உறுப்பினர் தோற்கடித்த மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் பேசினார்; இது ஜூன் மாதம் நியூ யோர்க் நகர நாடாளுமன்ற உள்கட்சித் தேர்தல்கள், வாஷிங்டன் டி.சி.யின் ஜனநாயகக் கட்சி மேயர் உள்கட்சித் தேர்தல் மற்றும் கடந்த நவம்பரில் நியூ யோர்க் மேயராக ஜோஹ்ரான் மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்தது. அந்தத் தேர்தல் முடிவுகளுக்கு ட்ரம்ப், மவுண்ட் ரஷ்மோரில் ஏறக்குறைய அதே வார்த்தைகளில் மீண்டும் கூறக்கூடிய ஒரு மொழியில் பதிலளித்தார்.
இந்த வாக்குகள் மிக ஆழமான ஒன்றைப் பதிவு செய்கின்றன என்பதை ஆளும் வர்க்கம் புரிந்துகொள்கிறது. அது, தாங்க முடியாத வாழ்க்கைச் செலவுகள், முடிவில்லாத போர், காஸாவில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் தன்னலக்குழுவின் நிர்வாகக் குழுவாகச் செயல்படும் ஒரு அரசாங்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த தீவிரமயமாக்கலாகும். “கம்யூனிச அச்சுறுத்தல்” பற்றிய ட்ரம்பின் அலறல்கள், பெருகிவரும் எண்ணிக்கையிலான மக்கள் முதலாளித்துவத்தையே இந்த நெருக்கடியின் ஆதாரமாக அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர் என்பதை தன்னலக் குழு ஏற்றுக்கொள்வதை குறிக்கின்றது.
இருப்பினும், இந்த உரையைப் போலவே முக்கியமானது, ஜனநாயகக் கட்சியின் எதிர்வினை, அல்லது எதிர்வினை ஆற்றாமை ஆகும். ட்ரம்பின் பாசிச வசைமொழிக்கு பதிலளிக்கும் விதமாக, ஷூமர், ஜெஃப்ரீஸ் அல்லது ஜனநாயகக் கட்சியின் தலைமை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினரின் கம்யூனிச எதிர்ப்பு மனப்பான்மையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த நவம்பரில், பரந்த ஜனநாயகக் கட்சி ஆதரவுடன், பிரதிநிதிகள் சபை “சோசலிசத்தைக் கண்டனம் செய்யும்” ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மேலும், கட்சியின் தலைமை, ட்ரம்ப் இப்போது அச்சுறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக உள்கட்சித் தேர்தல்களில் பணத்தைக் கொட்டுவதற்கு வசந்த காலத்தைச் செலவிட்டது.
சர்வாதிகாரத்தின் ஆபத்து மற்றும் சோசலிசத்தின் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு தேர்வை எதிர்கொள்ளும்போது, ஜனநாயகக் கட்சியினர் பிந்தையதைக் கண்டு மிகவும் அஞ்சுகிறார்கள்.
மம்தானியைப் பொறுத்தவரை, ட்ரம்ப் பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, DSA நியூ யோர்க் நகர மேயரான அவர், நகர மண்டபத்தில் உள்ள ஜோர்ஜ் வாஷிங்டனின் மேசைக்குப் பின்னால் இருந்து, கவனமாகத் திட்டமிடப்பட்ட தனது உரையை நிகழ்த்தினார். வெள்ளை மாளிகையில் ட்ரம்பை இரண்டு முறை சந்தித்த மம்தானியால், ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிடவோ அல்லது என்ன தயாராகிக் கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கவோ முடியவில்லை என்பதே மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். DSA என்பது ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவாகும், மேலும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு அதன் எதிர்வினை, அது சார்ந்திருக்கும் கட்சியின் எதிர்வினையைப் போன்றதே ஆகும்.
சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவை ஒட்டி விடுக்கப்பட்ட ட்ரம்பின் இந்த வெறிப்பேச்சு, அந்த ஆவணத்தில் பொதிந்துள்ள கொள்கைகள் ஆளும் வர்க்கத்திற்கு ஒரு செத்த கடிதமாகிவிட்டன என்ற ஒரு அதிகாரப்பூர்வ பிரகடனத்திற்குச் சமமாகும்.
ட்ரம்ப் தனக்காக மட்டும் பேசவில்லை, மாறாக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ தன்னலக் குழுவிற்காகப் பேசுகிறார். ஏறக்குறைய 1,000 பில்லியனர்கள் 8.4 டிரில்லியன் டாலர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மேல்மட்டத்திலுள்ள 1 சதவீதம் பேர் கீழ்மட்ட 90 சதவீதம் பேரின் மொத்த செல்வத்திற்குச் சமமான செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். மேலும், தனது முதல் டிரில்லியனரை உருவாக்கியுள்ள இந்த சமூகத்திற்கு ஜனநாயக ஆட்சி முறைகள் இணக்கமற்றவையாகும்.
தன்னலக் குழுவின் ஆட்சியை சர்வாதிகாரத்தை நோக்கித் தள்ளும் அதே நெருக்கடிதான் தொழிலாள வர்க்கத்தைப் போராட்டத்திற்குள் தள்ளுகிறது. கடந்த ஆண்டில், தொழிலாளர்கள் லோங் ஐலேண்ட் இரயில் பாதையை முடக்கினர், சான் பிரான்சிஸ்கோவின் பள்ளிகளில் வேலைநிறுத்தம் செய்தனர் மற்றும் நியூ யோர்க், சிக்காகோ மற்றும் நியூ ஜெர்சியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜூலை 4 நள்ளிரவில் —சுதந்திரப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நகரமான பிலடெல்பியாவில்— PECO நிறுவனத்தில் 1,600 மின்சாரம் மற்றும் எரிவாயு தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளிநடப்பு செய்தனர், இது அந்த பொதுப் பயன்பாட்டு நிறுவனத்தின் 145 ஆண்டுகால வரலாற்றில் நடந்த முதல் வேலைநிறுத்தமாகும்.
உலக சோசலிச வலைத் தளமானது, சுதந்திரப் பிரகடனம் வெளியாகி 250 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அறிக்கையில் எழுதியது போல, “வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைப் பின்தொடர்வது” என்பதற்கான உரிமை “சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளது.” முதலாளித்துவத்தின் நெருக்கடி அத்தகைய ஒரு புள்ளியை எட்டியுள்ளது என்று அந்த அறிக்கை முடிவு செய்தது, அங்கு “ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே முன்னோக்கி கொண்டு செல்லப்பட முடியும்.”
ட்ரம்பின் உரை, இந்த அடிப்படை முடிவு வரவிருக்கும் காலகட்டத்தில் இன்னும் நேரடியாகத் திணிக்கப்படும் என்பதை நிரூபிக்கிறது.
