இலங்கையின் வடக்கில் தமிழ் பொதுமக்களின் வெகுஜனப் புதைகுழியை நீதி அமைச்சர் பார்வையிட்டார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார [Photo: Facebook/Harshana Nanayakkara]

ஜூன் 19 அன்று, மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான ஒரு குழு, வடக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி சித்துப்பாத்தி வெகுஜன புதைகுழி அகழாய்வுத் தளத்தைப் பார்வையிட்டது. இலங்கை இராணுவம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்புக்கு எதிராக நடத்திய போரின் போது படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் பொதுமக்களின் எலும்புக்கூடுகள் இந்த வெகுஜனப் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளன.

ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், அகழாய்வுப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறியதுடன், “இந்த விவகாரத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவு கட்டும் வகையில், உண்மையையும் நீதியையும் கண்டறிய அரசாங்கம் விசாரணைகளை நடத்த விரும்புகிறது” என்று தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அதிகாரிகளுடன் இணைந்து நாணயக்கார இந்தத் தளத்திற்குச் சென்றபோது, அண்மைய வாரங்களில் மேலும் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தப் பயணத்தின் நோக்கம், பல தசாப்தங்களாக அரசால் மேற்கொள்ளப்பட்ட குற்றமூடிமறைப்புகளுக்கு எதிராக தமிழ் மக்களிடையே பெருகிவரும் ஆத்திரத்தைத் தணிப்பதற்காகவே அன்றி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி வழங்குவதற்கு அல்ல.

நீதியைக் கோரி நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோதிலும், அமைச்சர் மற்றும் அவருடன் சென்ற பிரதிநிதிகளும் அந்தப் போராட்டங்களை முற்றாகப் புறக்கணித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த அண்மைய அகழாய்வுப் பணிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின. ஜூன் 17 ஆம் தேதிக்குள், தொல்பொருள் ஆய்வாளர்கள் மேலும் பல எலும்புக்கூடுகளை கண்டுபிடித்ததன் மூலம், மொத்த எண்ணிக்கை 412 ஆக உயர்ந்தது. அவற்றில் 409 எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டிருந்தன. பல எலும்புக்கூடுகள் ஒன்றோடொன்று குவியலாகவும், ஒழுங்கற்ற முறையிலும் புதைக்கப்பட்டிருந்தன. இது, இந்தப் படுகொலைகளும் புதைக்கும் நடவடிக்கைகளும் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தன என்பதை வெளிப்படுத்துகிறது.

செம்மணி சமூகப் புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு

குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டுவனவாகும். இதுவரை அடையாளம் காணப்பட்ட எச்சங்களில், ஆறு குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் உள்ளன.

380 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய வளாகத்தில் உள்ள வெகுஜனப் புதைகுழியை விஞ்சும் வகையில், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய சமூகப் புதைகுழியாக செம்மணி புதைகுழி மாறியுள்ளது.

உண்மையை வெளிக்கொணர அரசாங்கம் உறுதியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியில், நாணயக்கார, இதற்காக போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலதிக நிதியையும் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சொந்த நடவடிக்கைகளே இந்தக் கூற்றை முற்றிலும் பொய்யென அம்பலப்படுத்துகின்றன.

முதற்கட்ட அகழ்வில் சுமார் 240 எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்ட பின்னர், அகழ்வுப் பணிகளைத் தொடர நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி விடுவிக்கப்படாததால், கடந்த ஆண்டு செப்டம்பர் 6 அன்று பணிகள் இடைநிறுத்தப்பட்டன. அதன் பின்னர், சுமார் எட்டு மாதங்கள் அகழ்வு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் அவை மீண்டும் தொடங்கப்பட்டன. பின்னர், இந்த நீண்டகால தாமதத்திற்கு மழைக்காலத்தையே அதிகாரிகள் காரணமாகக் குறிப்பிட்டனர்.

எவ்வாறெனினும், அகழ்வுகளின் பின்னரே பிரதான செலவுகள் ஆரம்பமாகின்றன. எலும்புகள் மற்றும் பற்களிலிருந்து டி.என்.ஏ. பிரித்தெடுத்தல் மற்றும் பரிசோதனை, ஒவ்வொரு எலும்புக்கூட்டுக்கும் தடயவியல் மானிடவியல் ஆய்வு, உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரித்து பரிசோதித்தல், சான்றுகளைப் பாதுகாத்து பட்டியலிடுதல், மேலும் நீண்டகால நீதித்துறை மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆகிய அனைத்திற்கும் பெருமளவிலான நிதி தேவைப்படுகிறது.

அமைச்சரின் வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க, அரசாங்கம் இந்த நடைமுறைகளில் எதனையும் இதுவரை தொடங்கவில்லை. அல்லது, உண்மையான சர்வதேச தடயவியல் அல்லது தொழில்நுட்ப உதவியையும் அது கோரவில்லை.

ஜூன் 25 அன்று பாராளுமன்றத்தில் பேசிய நாணயக்கார, “செம்மணி வெகுஜனப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் தடயவியல் ஆய்வுக்காக, தேவை ஏற்படும் போது சர்வதேச உதவி நாடப்படும்” என்று தெரிவித்ததாக தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தகைய வெற்று சொற்றொடர்கள் அனைத்தும் உண்மையான விசாரணையைத் தடுப்பதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை இராணுவம் போரின்போது புரிந்த கொடூரமான குற்றங்களின் முழு பரப்பளவையும், அவற்றுக்கான அரசின் பொறுப்பையும் அம்பலப்படுத்தக்கூடிய எந்தவொரு சுயாதீன விசாரணையையும் பற்றி அரசாங்கம் அஞ்சுகிறது.

இதற்கு வெறும் ஐந்து நாட்களுக்கு முன்னர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்த அதே அமைச்சர், “பொறுப்புக்கூறலையும் உண்மையையும் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் அரசாங்கம் மேற்கொள்ளும்” என்றும், “தமிழ் மக்களை ஏமாற்றாது” என்றும் வாக்குறுதியளித்திருந்தார்.

கடந்த கால் நூற்றாண்டாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மீண்டும் மீண்டும் வழங்கிய வாக்குறுதிகளைப் போலவே, இந்த வாக்குறுதிகளுக்கும் எந்த நம்பகத்தன்மையும் கிடையாது.

செம்மணி சமூகப் புதைகுழி பற்றிய தகவல் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டிலேயே வெளிச்சத்துக்கு வந்தது. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வு மற்றும் அவரது தாய், சகோதரர் மற்றும் அயலவரின் படுகொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன இராஜபக்ஷ, நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், செம்மணியில் புதைக்கப்பட்டிருந்த 300 முதல் 400 தமிழ் பொதுமக்கள் பற்றிய தகவல் தனக்குத் தெரியும் என்று தெரிவித்தார்.

அந்த லான்ஸ் கோப்ரல், இந்தக் கொலைகளிலும் அவற்றை மூடிமறைக்கும் நடவடிக்கைகளிலும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு என்று குற்றஞ்சாட்டினார். சித்திரவதையிலும் கொலைகளிலும் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 20 இராணுவ அதிகாரிகளை அவர் அடையாளம் காட்டியதுடன், தமிழ் பொதுமக்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களையும் விவரித்தார்.

அவர் குறிப்பிட்ட காலம், 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் எனப்படுவது முறிவடைந்ததைத் தொடர்ந்து, போர் மீண்டும் தீவிரமடைந்த காலமாகும்.

செம்மணியில் காணப்படும் இன்னொரு எழும்புக் கூடு

இராஜபக்ஷவின் சாட்சியத்தைத் தொடர்ந்து அகழாய்வுகள் தொடங்கப்பட்ட போதிலும், விசாரணை அதிகாரிகள் மூன்று இடங்களில் மட்டுமே தோண்டியெடுத்து, குறைந்த எண்ணிக்கையிலான உடல்களை மீட்ட பிறகு திடீரென தேடுதலை நிறுத்திவிட்டனர். விசாரணைகள் 2000 ஆம் ஆண்டு வரை தொடர்ந்ததோடு அதே ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழு இராணுவத்தினரை கைது செய்ய பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் பின்னர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2004 ஆம் ஆண்டளவில் முழு வழக்கும் நடைமுறையில் புதைக்கப்பட்டுவிட்டது.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உண்மை வெளிவராமல் இருப்பதை உறுதி செய்தன. 2025 பெப்ரவரி மாதத்தில், ஒரு தகனசாலை அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தற்செயலாக இந்த வெகுஜனப் புதைகுழியை மீண்டும் கண்டுபிடித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவின் கீழ் மே 15 அன்று அகழாய்வுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. முதல் 45 நாட்களில், சுமார் 240 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. ஆனால், போதுமான நிதியை அரசாங்கம் வழங்கத் தவறியதால் அகழ்வு நடவடிக்கைகள் மீண்டும் நிறுத்தப்பட்டன.

இந்த அகழ்வுகள், முந்தைய விசாரணைகள் வெளிக்கொணர்ந்ததை விட பல மடங்கு பரந்த அளவிலான படுகொலையை அம்பலப்படுத்தியுள்ளன. இருந்தபோதிலும், முந்தைய கொழும்பு அரசாங்கங்களைப் போலவே, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் இராணுவத்தின் பொறுப்பை வெளிக்கொணரும் எந்தவொரு உண்மையான விசாரணையையும் தடுப்பதில் உறுதியாக உள்ளது.

விசாரணை முழுமையாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தும் அதேவேளை, அர்த்தமுள்ள சர்வதேச தடயவியல் பங்கேற்பை அது நிராகரிக்கிறது.

“இராணுவம் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தால், இராணுவத்தின் மீது அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்,” என்று நாணயக்கார தெரிவித்தார்.

அதே சமயம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற வழக்குகள் மூலம் நீதி கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கலாம் என்றாலும், சில நேரங்களில் அது நிகழாது என்பதையும் சேர்த்துக் கூறினார். “எல்லாமே ஆதாரங்களையும் தகவல்களையும் பொறுத்தது” என்று அவர் அறிவித்தார்.

இலங்கை இராணுவம் பல தசாப்தங்களாகத் தனது குற்றங்களுக்கான ஆதாரங்களை திட்டமிட்டு அழித்துவந்துள்ளது என்ற உண்மையை இந்த வாதம் வேண்டுமென்றே புறக்கணிக்கிறது. இருப்பினும், 1998 முதல் முன்னெடுக்கப்பட்ட செம்மணி விசாரணைகளின் மூலம், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை நேரடியாகக் குற்றஞ்சாட்டும் சத்தியப்பிரமாண சாட்சியங்கள் உட்பட குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் ஏற்கனவே வெளிவந்திருந்தன.

முக்கிய தடையாக இருப்பது ஆதாரங்கள் இன்மை அன்றி, மாறாக, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இராணுவத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து பாதுகாப்பதில் கொண்டுள்ள உறுதியான அரசியல் நோக்கமே ஆகும்.

தோற்றம் முதலே சிங்கள இனவாதத்தில் ஊறிப்போயிருந்த ஜே.வி.பி., போர்காலம் முழுவதும், பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தீவிரமாக ஆதரித்தது. புலிகளுடன் நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் கூட ஜே.வி.பி. எதிர்த்ததுடன், இராணுவத்தில் ஆட்சேர்ப்பை ஊக்குவிக்கும் தீவிரப் பிரச்சாரத்தையும் நடத்தியது.

2009 இல், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போதிலும், புலிகளை இராணுவம் தோற்கடித்ததை ஜே.வி.பி. கொண்டாடியது. போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளையும் அது தொடர்ந்து நிராகரித்ததோடு, அரசியல் தலைவர்களுக்கும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கும் உள்ள குற்றவியல் பொறுப்பை மூடிமறைத்தது.

இன்று, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் தனது ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்காக இராணுவம், பொலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் அரச இயந்திரத்தைப் பெருமளவில் நம்பியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் பணியாற்றிய பலரை உள்ளடக்கிய, சுமார் 40,000 ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ஒருங்கிணைத்து தனியான முப்படைகளின் கையிருப்புப் படைப்பிரிவை அது உருவாக்கியுள்ளது.

இதற்கு முன்பு ஒருபோதும் ஆட்சியில் இல்லாத ஜே.வி.பி./தே.ம.ச., 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஏராளமான பொய் வாக்குறுதிகளை வழங்கி, பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக மக்களிடையே நிலவிய அதிருப்தியை சுரண்டிக்கொண்டது. ஜே.வி.பி. தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்களிடம், இராணுவம் ஆக்கிரமித்துள்ள அனைத்து நிலங்களையும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் “நீதி” வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இன்று அந்த வாக்குறுதிகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன. அண்மையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கிழக்கில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதில் அரசாங்கம் ஒரு “சமநிலையை” நாடுவதாகக் கூறினார். அதாவது, நிலத்தின் ஒரு பகுதியை இராணுவக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

1983 இல் தொடங்கி 2009 மே மாதத்தில் முடிவடைந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கொடூரத் தன்மையை செம்மணி சமூகப் புதைகுழி அம்பலப்படுத்துகிறது. இந்தப் போரில் சுமார் 100,000 அல்லது அதற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது. போரின் இறுதி மாதங்களில் மட்டும் சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் அமர்ந்துகொண்டு, நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றுவதோடு, மக்களைக் கண்காணித்தும் வருகின்றனர்.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகள், போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை “சர்வதேச சமூகத்தின்” ஆதரவை நாடும் பாதைக்குள் மக்களைத் தொடர்ந்து திசைதிருப்பி வந்துள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். சிறீதரன், “செம்மணி சமூகப் புதைகுழி தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையைச் சுட்டிக்காட்டுகிறது” என்றும், “சர்வதேச சமூகம் இதை இப்போதாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்புகள் மற்றும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்களும் இதே கோரிக்கையையே மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். அமைச்சரின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள், “எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும். உள்நாட்டு விசாரணையில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. எமக்கு இழப்பீடு வேண்டாம். மரணச் சான்றிதழ்களும் தேவையில்லை,” என்று தெரிவித்தனர்.

ஆனால், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய வல்லரசுகள் உட்பட இந்த “சர்வதேச சமூகம்” எனப்படுவது, இனவாத யுத்தத்தை நடத்திய இலங்கை அரசாங்கங்களுக்கு முழு ஆதரவு வழங்கியது. அண்மைய மாதங்களில், இவை காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கும், ஈரானுக்கு எதிரான அமெரிக்கா–இஸ்ரேல் குற்றவியல் போருக்கும் ஆதரவளித்து வந்துள்ளன.

இலங்கையின் தமிழ்க் கட்சிகள் காசா இனப்படுகொலையையோ, ஈரானுக்கு எதிரான போரையோ கண்டிக்கவில்லை. இது, வாஷிங்டனுடனும் இஸ்ரேலுடனும் அவை கொண்டுள்ள அரசியல் இணக்கத்தை வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழ் தொழிலாளர்களும் கிராமப்புற உழைப்பாளர்களும், நீதி அல்லது ஜனநாயக உரிமைகளுக்காக இந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்களை நம்ப முடியாது. அவர்களுடைய உண்மையான கூட்டாளிகள் இலங்கை முழுவதும், இந்தியாவிலும், உலகம் முழுவதுமுள்ள தொழிலாள வர்க்கமே ஆகும்.

தமிழ் மக்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் எதிரான ஒடுக்குமுறை, தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளிலேயே வேரூன்றியுள்ளன. கிராமப்புற ஏழைகளைத் தம் பின்னால் அணிதிரட்டி, முதலாளித்துவத்தை கவிழ்த்து, சர்வதேச சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்–விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவுவதை இலக்காகக் கொண்ட, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமே, தமிழர்களுக்கான உண்மையான ஜனநாயக உரிமைகளையும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும்.

Loading