இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜூலை 16 அன்று, ஐக்கிய வாகனத் தொழிலாளர் (UAW) சங்கத்தின் உயர் அதிகாரியான ரேமண்ட் எல். ஜென்சன் ஜூனியர் என்பவர், சோசலிச மேக் ட்ரக்ஸ் தொழிலாளியும் UAW ன் தலைவர் வேட்பாளருமான வில் லேமனுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்டுள்ளார். இந்த மிரட்டல், லேமனின் பொது முகநூல் பிரச்சாரப் பக்கத்தில் AI-உருவாக்கிய ஒரு படம் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. அதில் லேமன் கயிற்றால் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு, வாயிலிருந்து இரத்தம் வழிய, முகமூடி அணிந்த ஒரு நபர் அவரது முதுகில் தானியங்கி துப்பாக்கியை இலக்கு வைப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது.
வில் லேமனுக்கு எதிரான இந்த வன்முறை தூண்டுதலைக் கண்டிக்குமாறும், UAW தொழிற்சங்கம் இதற்குத் தெளிவான முறையில் பகிரங்க மறுப்பு தெரிவிக்கக் கோருமாறும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி தொழிலாளர்களுக்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைத்துப் பாதுகாவலர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.
ஜென்சனின் இந்த அச்சுறுத்தல் பதிவை, ஏதோ ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட தனிநபர் தன்னிச்சையாகச் செய்த செயல் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஜென்சன் UAW தொழிற்சங்கத்தின் ஊழியர் அமைப்பில் ஒரு அமைப்பாளராக உள்ளார். சமீப காலம் வரை அவர் UAW பிராந்தியம் 9-ன் (Region 9) உதவி இயக்குநராக இருந்தார். இந்தப் பிராந்தியத்தில்தான் லேமனும் இருக்கிறார். அமெரிக்க தொழிலாளர் துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் LM-2 ஆவணங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் அவருக்கு தோராயமாக 202,000 டாலர்கள் மொத்த இழப்பீடாக வழங்கப்பட்டது. அவர் UAW தலைவர் ஷான் பெயினின் முக்கிய ஆதரவாளர் ஆவார். மேலும், அவரது முகநூல் சுயவிவரப் பக்கத்தில் “நான் ஷான் பெயினை ஆதரிக்கிறேன்” என்ற பிரச்சார முத்திரை இடம்பெற்றுள்ளது.
லேமன் UAW ன் தலைவர் பதவிக்கான அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வேட்பாளர் ஆவார். டெட்ராய்ட்டில் நடைபெற்ற தொழிற்சங்கத்தின் 39-வது அரசியலமைப்பு மாநாட்டில் ஜூன் 18 அன்று அவர் பரிந்துரைக்கப்பட்டார். தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒழித்தல், ஒவ்வொரு ஆலையிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குதல் மற்றும் தொழிற்சாலைத் தளத்தில் உள்ள தொழிலாளர்களிடம் அதிகாரத்தை மாற்றுதல் ஆகியவற்றை வலியுறுத்தும் கொள்கையின் அடிப்படையில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 2022 தேர்தலில், தொழிற்சங்க அமைப்பினால் வாக்குப்பதிவு திட்டமிட்டு ஒடுக்கப்பட்டபோதிலும் மற்றும் UAW உறுப்பினர்களில் வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்திருந்தபோதிலும், லேமன் கிட்டத்தட்ட 5,000 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கடந்த வெள்ளியன்று, லேமனின் வழக்கறிஞர் எரிக் லீ, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட UAW கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முழுமையான விசாரணையைக் கோரி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
தற்போதைய நிர்வாகத்தின் அதிக ஊதியம் பெறும் ஒரு அதிகாரி, தலைவரின் மறுதேர்தல் பிரச்சாரத்துடன் பகிரங்கமாக அடையாளம் காணப்பட்ட ஒருவர், எதிர்த்தரப்பு வேட்பாளரின் வாய் கட்டப்பட்டு, இரத்தக் காயங்களுடன், துப்பாக்கி முனையில் இருப்பதான ஒரு படத்தை வெளியிடும்போது, UAW உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும் செய்தி மிகவும் தெளிவானது: வில் லேமனுக்கு எதிரான தீவிரமான வன்முறை ஊக்குவிக்கப்படுகிறது, மேலும் அதற்கு தொழிற்சங்கத் தலைமையின் அங்கீகாரம் உள்ளது என்பதாகும்.
மத்தியிலுள்ள கூட்டாட்சி சட்டத்தின் கீழ், இத்தகையப் பதிவை வெளியிடுவது ஒரு குற்றமாகும். இணையத்தின் வழியாக மற்றொரு நபரை காயப்படுத்துவதற்கான அச்சுறுத்தலை அனுப்புவது 18 U.S.C. § 875(c) இன் கீழ் ஒரு கூட்டாட்சிக் குற்றமாகும், இதற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேலும் வன்முறை அச்சுறுத்தல்கள், அதேபோன்று மாநில சட்டத்தின் கீழும் குற்றவியல் குற்றங்களாகும். கூடுதலாக, 29 U.S.C. § 530 இன் படி, ஒரு தொழிற்சங்க உறுப்பினரின் உரிமைகளில் தலையிடும் நோக்கத்திற்காக, அவர்களைக் கட்டுப்படுத்த, வற்புறுத்த அல்லது மிரட்ட பலப்பிரயோகம் அல்லது வன்முறையைப் பயன்படுத்துவது அல்லது அதற்கான அச்சுறுத்தலை விடுப்பது ஒரு கூட்டாட்சிக் குற்றமாகும்.
தொழிற்சங்கத்தின் மிக உயர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு எதிராக இத்தகைய அச்சுறுத்தல் பகிரங்கமாக விடுக்கப்பட முடியுமானால், “தங்கள் சொந்த உள்ளூர் கிளையில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை எதிர்க்கும் எந்தவொரு தொழிலாளியும் பாதுகாப்பாக இருக்க முடியாது” என்று எச்சரித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை லேமன் அறிக்கை ஒன்றின் மூலம் இதற்குப் பதிலளித்தார்.
இந்த அச்சுறுத்தல் ஒரு தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாகும். ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பு, மத்திய கூட்டாட்சி கண்காணிப்பாளரான நீல் பரோப்ஸ்கி, பெயின் “தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி” “தனது அலுவலகத்தின் அதிகாரங்களை முறையற்ற முறையில் பயன்படுத்தினார்” என்றும், பெயின் “பொய்யானவை என்று தெரிந்தே சுமத்திய குற்றச்சாட்டுகளின்” அடிப்படையில் துணைத் தலைவர் ரிச் போயரை நீக்கியது உட்பட “பழிவாங்கும் தொடர் போக்கை” ஆவணப்படுத்தியதாகவும் கண்டறிந்தார். தற்போது கூட்டாட்சி மேல்முறையீட்டு நடுவர் மன்றம் பெயினை விசாரித்து வருகிறது.
மேலும், UAW ன் தலைமை ஒரு “பழிவாங்கும் நச்சுச் சூழலை” உருவாக்கியுள்ளது என்றும், தனது நெருங்கிய வட்டத்திற்குள் “தலையிடும்” எவரின் “கழுத்தையும் அறுத்து விடுவதாக” பெயின் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தினார் என்றும் கண்காணிப்பாளர் கண்டறிந்துள்ளார்.
சாமானிய தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு எதிராகத் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் ஏவப்படும் வன்முறையின் நீண்ட வரலாறு நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். UAW-ஐப் பொறுத்தவரையில், இந்த தொழிற்சங்கத்தின் குற்றப் பின்னணி காரணமாகவே கண்காணிப்பாளர் அலுவலகமே உருவாக்கப்பட்டது. வாகனத்துறை நிறுவனங்களிடம் இருந்து பணம் கையாடல் செய்தது, இலஞ்சம் மற்றும் கமிஷன் பெற்றதற்காக —இரண்டு முன்னாள் UAWன் சர்வதேசத் தலைவர்கள் உட்பட— பன்னிரண்டுக்கும் மேற்பட்ட தொழிற்சங்க அதிகாரிகளைச் சிறைக்கு அனுப்பிய ஊழல் விசாரணையைத் தொடர்ந்து, 2021-இல் கூட்டாட்சி அரசாங்கத்துடனான ஒப்பந்த ஆணையின் அடிப்படையில் இந்த அலுவலகம் நிறுவப்பட்டது.
லேமன் வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை IWA-RFC ஆதரிக்கிறது:
- முகநூலில் பதிவிட்டது குறித்தும், ஜென்சனின் நடத்தை மட்டுமன்றி, UAW தலைமையின் அறிவுறுத்தல், ஊக்கம் அல்லது அவர்களின் மெளன சம்மதம் ஆகியவை குறித்தும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- UAW இந்த அச்சுறுத்தலை மிகக் கடுமையான சொற்களில் பகிரங்கமாக மறுக்க வேண்டும், லேமனிடம் முறையான மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் லேமன் தனது பிரச்சாரத்தை நடத்தும் உரிமையை தொழிற்சங்கம் அங்கீகரித்து முழுமையாக ஆதரிக்கிறது என்ற தெளிவான பகிரங்க பிரகடனத்தை அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.
- இத்தகைய அச்சுறுத்தல்கள் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என எச்சரித்தும், இது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தும் கண்காணிப்பாளர் அலுவலகம் உடனடியாக ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டும்.
- விசாரணை முடிவடையும் வரை, பொருத்தமான சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, ஜென்சனை அவரது பதவியிலிருந்து ஊதியமின்றி உடனடியாக இடைநிறுத்தம் செய்ய வேண்டும்.
- இந்த விவகாரத்தை தொழிலாளர் துறைக்கும், தேவைப்படும் பட்சத்தில் கூட்டாட்சி சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் பரிந்துரைக்க வேண்டும்.
- 2026-ஆம் ஆண்டின் தேர்தலின் மீதமுள்ள பகுதிகள் அச்சுறுத்தல்கள் இன்றி நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள UAW உறுப்பினர்களையும், அனைத்துத் துறைகளிலும் உள்ள தொழிலாளர்களையும், லேமனின் பாதுகாப்பைத் தங்களின் சொந்தக் கடமையாக எடுத்துக்கொள்ளுமாறு IWA-RFC அழைப்பு விடுக்கிறது. லேமன் குறிப்பிட்டது போல: “இந்த அச்சுறுத்தல் என்னை மட்டும் இலக்காகக் கொண்டது அல்ல. இது ஒட்டுமொத்த சாமானிய தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கும் எதிராக விடுக்கப்பட்ட ஒரு மிரட்டல் செயலாகும்.”
அனைத்து இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகளும் இந்த மிரட்டலை திட்டவட்டமாகக் கண்டிக்க வேண்டும் என்றும் IWA-RFC அழைப்பு விடுக்கிறது.
வன்முறையைத் தூண்டும் இந்தச் செயலுக்கு உங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்! லேமனுக்கு எதிரான அச்சுறுத்தலை UAW பகிரங்கமாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, feedback@uaw.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். அதன் நகலை info@willforuawpresident.org என்ற முகவரியில் உள்ள வில் லேமனின் பிரச்சாரத்திற்கும் அனுப்புங்கள்.
