முன்னோக்கு

ஈரானில் “பாரிய” போர்த்தீவிரமாக்கலுக்கான ட்ரம்ப் கொண்டுள்ள திட்டங்கள் குறித்த விவாதம்: குற்றத்தைத் தவிர மற்ற அனைத்துமே விவாதிக்கப்படுகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகத்தால் வெளியிடப்பட்ட காணொளியில் இருந்து பெறப்பட்ட இந்தப் படம், ஜூலை 12, 2026 அன்று அமெரிக்க இராணுவத்தால் ஏவப்பட்ட மூன்று கோர்செய்ர் (Corsair) ஆளில்லா தரைவழித் தாக்குதல் ட்ரோன்கள் துறைமுகத்தில் தாக்கியபோது, ஈரானின் பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளத்தில் ஏற்பட்ட வெடிப்பைக் காட்டுகிறது. [AP Photo/U.S. Central Command]

ஞாயிற்றுக்கிழமையன்று, நியூ யோர்க் டைம்ஸ் நாளிதழ், அதன் மூத்த வெள்ளை மாளிகை மற்றும் தேசிய பாதுகாப்புச் செய்தியாளரான டேவிட் சாங்கரின் (David Sanger) செய்திப் பகுப்பாய்வு ஒன்றை, “உலகின் மிகப்பெரிய சுத்தியலை ட்ரம்ப் ஏந்தியிருந்தாலும், ஈரான் போரில் அவர் சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது” என்ற தலைப்பில் வெளியிட்டது. ட்ரம்ப், “சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது, அவரால் வெளியேற வழியைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு போரினால் அவரது ஜனாதிபதி பதவி படிப்படியாக ஆட்கொள்ளப்பட்டு வருகிறது” என்று சாங்கர் எழுதுகிறார்.

அமெரிக்கா தொடர்ந்து 13 இரவுகள் நடத்திய குண்டுவீச்சை வெள்ளிக்கிழமையன்று நிறுத்தியது. ஈரான் மீது ஒரு “பாரிய” தாக்குதலைத் தொடங்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார், ஆனால் அதை அவர் இன்னும் தொடங்கவில்லை—சாங்கரின் வார்த்தைகளில் கூறுவதானால், “அவரது உண்மையான தயக்கத்திற்குக் காரணம், இந்தப் போர் அமெரிக்காவின் ஏவுகணை இடைமறிப்பு ஆயுதங்களின் இருப்பைத் தீர்த்துவிட்டது என்ற உண்மையாக இருக்கலாம்.”

டைம்ஸ்  நாளிதழில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் சாங்கர், அமெரிக்க இராணுவ-உளவுத்துறை இயந்திரத்துடனான அந்நாளிதழின் முதன்மைத் தொடர்பாளராகச் செயல்பட்டுள்ளார். அரசு இயந்திரத்திற்குள்ளேயே இந்தப் போர் எவ்வாறு பார்க்கப்படுகிறது மற்றும் விவாதிக்கப்படுகிறது என்பதன் வெளிப்பாடாக அவரது பகுப்பாய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இருப்பினும், எது விடுபட்டுள்ளது என்பதே இதில் மிகவும் முக்கியமானது. போரின் சட்டபூர்வமான தன்மை குறித்த கேள்வியை இந்தப் பகுப்பாய்வு வெறுமனே புறக்கணிக்கிறது. இப்போரானது தோல்வியடைந்த ஒரு கொள்கையாகவே முன்வைக்கப்படுகிறதே தவிர, இழைக்கப்பட்ட ஒரு குற்றமாக அல்ல. இதில், அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் மற்றும் அதன் ஊடகங்களுக்குள் இப்போரைப் பற்றி நடக்கும் ஒட்டுமொத்த விவாதத்தையுமே இக்கட்டுரை பிரதிபலிக்கிறது.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் என்பது ஒரு குற்றவியல் ஆக்கிரமிப்புப் போராகும். பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையின் கீழ், அமெரிக்காவைத் தாக்கவோ அல்லது அச்சுறுத்தவோ செய்யாத, மேலும் அவ்வாறு செய்வதற்கான வல்லமையும் இல்லாத ஒரு நாட்டின் மீது பிப்ரவரி 28 அன்று இத்தாக்குதல் தொடுக்கப்பட்டது.

தொடக்கக் கட்டத் தாக்குதல்களிலேயே ஈரானின் அரசுத் தலைவரான அயதுல்லா அலி கமேனியும், அந்நாட்டின் இராணுவ மற்றும் அரசியல் தலைமையின் பெரும் பகுதியினரும் கொல்லப்பட்டனர். ஜூன் 17 அன்று ட்ரம்ப் போர்நிறுத்தக் குறிப்பாணையில் கையெழுத்திட்ட நேரத்தில், குறைந்தது 3,468 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் கணக்கிட்டிருந்தனர், அவர்களில் 376 குழந்தைகளும் அடங்குவர்.

மூன்றாம் ரைக்கின் (Third Reich) தலைவர்கள் தூக்கிலிடப்படுவதற்குக் காரணமான தீர்ப்பில், நூரம்பேர்க்கில் உள்ள சர்வதேச இராணுவத் தீர்ப்பாயம் ஓர் ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவதை, “அனைத்து போர்க் குற்றங்களிலிருந்தும் வேறுபடும் மிக உயர்ந்த சர்வதேசக் குற்றம்; ஏனெனில், அது ஒட்டுமொத்தத்தின் திரண்ட தீமையையும் தனக்குள்ளேயே அடக்கியுள்ளது” என வரையறுத்தது.

நூரம்பேர்க்கில் அமெரிக்காவே சர்வதேச சட்டமாக வடிவமைத்த அந்த நெறிமுறையின்படி, ஈரானுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போர் சட்டப்படி ஒரு குற்றவியல் நடவடிக்கையாகும்; அதை உத்தரவிட்ட, திட்டமிட்ட, நடைமுறைப்படுத்திய ஒவ்வொரு அதிகாரியும் போர்க் குற்றவாளியாவார்.

சட்டபூர்வமான தன்மை என்ற விஷயம் எப்போதாவது எழுப்பப்பட்டால், அது ஏதோ ஒரு பொருட்படுத்தத் தகாத கேள்வி என்பதைப் போல விரைவாக ஒதுக்கித் தள்ளப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று ஓவல் அலுவலகத்தில், நிருபர் ஒருவர் ட்ரம்பிடம்: “பொதுமக்களுக்கான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களைத் தகர்ப்பதைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்; நாகரிக உலகின் பெரும்பகுதி அதை ஒரு போர்க் குற்றம் என்றே கருதும். நீங்களும் அவ்வாறு கருதுகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு ட்ரம்ப், “நான் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்.

இந்தக் கருத்துப் பரிமாற்றம் போரைப் பற்றிய செய்திகளில் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டதுடன், எந்தவொரு தீவிரமான அல்லது குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் இல்லாத ஒரு விஷயமாகவே கையாளப்பட்டது.

இது போரைச் சூழ்ந்துள்ள மௌனச் சதிக்கு ஏற்பவே அமைந்துள்ளது. வியட்நாம் போரின்போது, அமெரிக்கச் செய்தியாளர்கள் போர்க்களத்திலிருந்தே செய்திகளை வழங்கினர். ஆனால், ஈரானுக்குள் இருந்தபடி எந்தவொரு அமெரிக்க நிருபரும் இந்தப் போரைப் பற்றிய செய்திகளை வழங்கவில்லை; ஈரானிய ஏவுகணைகளால் தாக்கப்பட்ட தளங்களின் எந்தவொரு காட்சிப் பதிவும் வெளியிடப்படவில்லை; மேலும் பென்டகன் உயிரிழப்பு எண்ணிக்கையை மாற்றி, அமெரிக்கப் பலியானோர் எண்ணிக்கையை 18-லிருந்து 14 ஆகக் குறைத்தது இந்த வாரம் அம்பலமானது.

சட்டபூர்வமான தன்மை என்ற கேள்வியை எழுப்புவது என்பது ட்ரம்பை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்தையுமே குற்றம் சாட்டுவதாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் உச்சி முதல் பாதம் வரை குற்றவியலில் தோய்ந்து கிடக்கிறது; அதிகாரத்தில் உள்ள குற்றவியல் பாதாள உலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குண்டர்-ஜனாதிபதியின் தலைமையில் இது வழிநடத்தப்படுகிறது. ஆனால் ட்ரம்ப் ஒரு தனிநபர் அல்ல, அவர் ஒரு சமூக வர்க்கத்தினதும் ஓர் அரசு எந்திரத்தினதும் பிரதிநிதி ஆவார்.

ட்ரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் தந்திரோபாய ரீதியான எதிர்ப்பானது, அப்போர் சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் அமைந்திருக்காமல், அது பயனற்றது என்ற கண்ணோட்டத்தையே முற்றிலும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. போர் நிதி மசோதா தொடர்பான கடந்த வாரச் செனட் விசாரணையில், மிச்சிகனைச் சேர்ந்த செனட்டர் கேரி பீட்டர்ஸ், பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத்திடம்: “உங்களிடம் எந்தவொரு மூலோபாயமும் இல்லை. இந்தப் போரில் உண்மையில் வெற்றி பெறுவதற்கான நீண்டகாலத் திட்டம் உங்களிடம் இல்லை. போரில் வெற்றி பெறுங்கள்!” என்று கூறினார்.

மேலும், ஈரான் மீதான தாக்குதலானது பல தசாப்த காலக் குற்றங்களின் விளைவாகும்: ஒரு கணக்கீட்டின்படி ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பலிகொண்ட ஈராக்கின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு; அமெரிக்க நிதி, ஆயுதங்கள் மற்றும் இராஜதந்திரப் பாதுகாப்போடு 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்ற காஸா இனப்படுகொலை போன்றவை இதில் அடங்கும்.

செவ்வாய்க்கிழமையன்று, 2024 நவம்பரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ட்ரம்ப் சந்திக்க உள்ளார். நெதன்யாகு “எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் கைது செய்யப்பட மாட்டார்” என்று ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது பிடியாணையிலிருந்து தப்பியோடியவரும், காஸா இனப்படுகொலையின் சிற்பியுமான ஒருவர், வெள்ளை மாளிகைக்கு ஒரு மதிப்பிற்குரிய விருந்தினராக வரவேற்கப்படுகிறார்.

தீவிரமடைந்து வரும் இந்த நெருக்கடி நிலைமைகளின் கீழ், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட, இன்னும் பெரிய குற்றங்களை இந்த நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

ஈரானின் நிலத்தடி ஏவுகணை ஆலைகளை அணுஆயுதங்களால் தாக்குவது “சாத்தியமானதா” என்று ட்ரம்ப் கேட்டதாக மூத்த செய்தியாளர் சீமோர் ஹெர்ஷ் (Seymour Hersh) ஜூன் 10 அன்று செய்தி வெளியிட்டிருந்தார். ஈரானின் பிக்ஆக்ஸ் மலையின் (Pickaxe Mountain) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஈரானின் ஆழமான நிலத்தடி மையங்கள் “அடிப்படையில் அணுஆயுதங்கள் அல்லாத பிற ஆயுதங்களால் சேதப்படுத்த முடியாதவை” என்று தி எகனாமிஸ்ட் இதழ் ஞாயிற்றுக்கிழமை சுட்டிக்காட்டியிருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெடிப்பின் ஒரு பகுதியாக—ஈரான் போர் தீவிரமடைவதானது மனிதகுலம் முழுவதையும் பேரழிவை நோக்கித் தள்ளுகிறது. ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடுக்கப்படும் உலகளாவிய போரானது அரசியல் ஸ்தாபனத்திடமிருந்து எந்தவொரு அர்த்தமுள்ள எதிர்ப்பையும் எதிர்கொள்ளவில்லை; ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய உலகளாவிய போட்டியாளர்களான ரஷ்யாவையும் சீனாவையும் அடக்குவதற்காக மத்திய கிழக்கை அடிமைப்படுத்தும் இலக்கை இந்த அரசியல் ஸ்தாபனம் அடிப்படையில் ஆதரிக்கிறது.

ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், சட்டபூர்வமான தன்மை என்ற கேள்வி மறைந்துவிடாது. ஈரானுக்கு எதிரான போர் ஒரு குற்றமாகும்; ஆனால் தற்போதைய அமைப்பின் எந்தவொரு நிறுவனமும் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூற வைக்காது. ஏனெனில், அக்குற்றத்தை உருவாக்கிய அதே அமைப்பைச் சார்ந்தவர்களாகவும், அதைப் பாதுகாப்பவர்களாகவுமே அவை அனைத்தும் உள்ளன.

அந்தப் பணி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முன்னால் உள்ளது. ஏகாதிபத்திய சூறையாடல் அமைப்பில் எந்தவொரு நலன்களையும் கொண்டிராத ஒரே சமூக சக்தியாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவரும் திறன் கொண்ட ஒரே சக்தியாகவும் அதுவே விளங்‌குகிறது. போருக்கு எதிரான போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதோடும்; சமத்துவமின்மை, சர்வாதிகாரம் மற்றும் போர் ஆகியவற்றின் மூலக்காரணமாக விளங்கும் முதலாளித்துவ முறைக்கு எதிரான போராட்டத்தோடும் இணைக்கப்பட வேண்டும்.

Loading