வட இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற மீனவர்கள் காணாமல் போதல், உயிரிழப்பு மற்றும் உயிர்தப்பிய சம்பவங்கள், ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மோசமான சமூக நிலைமைகளை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்கள் வெறும் இயற்கை விபத்துகளோ அல்லது தற்செயலாக நிகழ்ந்த துயரங்களும் அல்ல. பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சீரழித்ததன் விளைவாக உருவான வறுமை, அதிகரித்துவரும் கடன்சுமை, போதிய பொதுச் சேவைகளின் இன்மை, மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு இணங்க அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது முன்னெடுத்த தாக்குதல்களின் கூட்டுவிளைவாகவே இந்தப் பேராபத்துகள் உருவாகியுள்ளன.
மே 27 அன்று பருத்தித்துறையிலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்கள் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்றபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேவேளை, குருநகரைச் சேர்ந்த மற்றொரு மீனவரும் கடலில் காணாமல் போயுள்ளார். ஜூன் 11 அன்று, நெடுந்தீவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய ஜேசுதாசன் அரோக்கியன் அன்ரனி (சதீஸ்), கடும் கடல்கொந்தளிப்பின் போது படகிலிருந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டார். பல நாட்கள் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவரது உடல் இந்தியக் கரையோரத்தில் கரை ஒதுங்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்தத் துயரச் சம்பவங்கள் ஏற்கனவே வாழ்வாதாரத்தின் விளிம்பில் தத்தளித்து வந்த மீனவச் சமூகங்களில் மேலும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.
உலக சோசலிச வலைத் தளம் (WSWS) சமீபத்தில் புங்குடுதீவிற்கு சென்று, ஜூன் 4 அன்று நயினாதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையிலான கடற்பரப்பில் படகு செயலிழந்து உயிர்தப்பிய மூன்று மீனவர்களைச் சந்தித்தது. அவர்களின் அனுபவம், வடக்கிலுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் எவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி கடலுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஜீவன், 37 வயதான சாகாயசீலன் சரண்ராஜ், மோகன் ஆகியோர் இணைந்து, முன்பே கடலில் விட்டு வந்த நண்டு வலைகளை எடுத்து வர சுமார் 24 கிலோமீட்டர் தூரம் கடலுக்குள் சென்றிருந்தனர். திரும்பி வரும் வழியில், எரிபொருள் குழாயில் ஏற்பட்ட கோளாறால் இயந்திரத்திற்கான எரிபொருள் வழங்கல் தடைப்பட்டு, அவர்களின் படகு பரந்த கடலில் செயலிழந்து நின்றுவிட்டது.
“மதியம் சுமார் 1.30 மணியளவில் கரையில் இருந்த எங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தோம்,” என்று சரண்ராஜ் கூறினார். “யாராவது வந்து எங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பினோம். ஆனால் யாரும் வரவில்லை.”
அவர்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் இரண்டு பாண்களும், ஐந்து லிட்டர் குடிநீரும் மட்டுமே. முழு இரவும், யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்த அவர்கள், படகுக்குள் தொடர்ந்து புகுந்த கடல் நீரை வாளியால் அள்ளி வெளியேற்றியபடி, படகு மூழ்காமல் காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம் வைத்து போராடினர்.
மறுநாள் காலை சூரியன் உதித்த பின்னர்தான், மாதகலைச் சேர்ந்த “அலையோசை” என்ற மீன்பிடிப் படகில் வந்த இரண்டு மீனவர்கள், கடலில் செயலிழந்து மிதந்துகொண்டிருந்த அவர்களைக் கண்டுபிடித்தனர். அவர்கள், பயணத்தைத் தொடருவதற்கு போதுமான எரிபொருளை வழங்கியதோடு, உயிர்தப்பிய மீனவர்களின் கைப்பேசிகள் செயலிழந்திருந்ததால், அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், கரையை அடைவதற்கு முன்பே அந்த எரிபொருளும் மீண்டும் தீர்ந்துவிட்டது. அதன் பின்னர், ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் செயலிழந்து மிதந்துகொண்டிருந்த படகைக் கண்டுபிடித்து, அதை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.
இந்த மீனவர்கள், தாங்கள் இவ்வாறான ஆபத்தான கடலுக்குச் சென்றது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக அல்ல, வாழ்வாதார நெருக்கடியே தங்களை நிர்ப்பந்தித்ததாக வலியுறுத்தினர்.
“மோசமான காலநிலை இருந்தும் நீங்கள் ஏன் கடலுக்குச் சென்றீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள்,” என்று சரண்ராஜ் கூறினார். “ஆனால் நாங்கள் வீட்டிலேயே இருந்து என்ன செய்வது? வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகிவிட்டது. எரிபொருள் விலை இரட்டிப்பாகிவிட்டது. திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் இருக்கின்றன. வட்டி கட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். அதனால்தான், உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்திருந்தும், கடலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.”
சரண்ராஜ் தனது பதினேழாவது வயதிலிருந்தே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குச் சொந்தமாக பழைய மீன்பிடிப் படகும், எட்டு குதிரைத்திறன் கொண்ட வெளி இணைப்பு இயந்திரமும் இருந்தாலும், அவை ஆழ்கடல் மீன்பிடிக்கப் பொருத்தமானவை அல்ல. ஆண்டின் ஒரு பகுதி காலத்தில், அவர் மற்ற மீனவர்களின் படகுகளில் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். மீன்பிடி செலவுகள் அனைத்தும் கழிக்கப்பட்ட பின்னர் எஞ்சும் வருமானத்தில் ஒரு சிறு பங்குதான் அவருக்குக் கிடைக்கிறது.
அவரது அனுபவம், சிறிய அளவிலான மீன்பிடித் தொழில் எவ்வாறு படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. படகுகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பவர்கள்கூட இனி சுயாதீனமாக வாழ முடியாமல், அதிகரித்து வரும் சுரண்டல் நிலைமைகளின் கீழ் தங்கள் உழைப்புச் சக்தியை விற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
“மீன்பிடித் தொழிலைத் தொடர்வதற்காக நான் கடன் வாங்குகிறேன். மீன்பிடி பருவம் சரியாக அமையவில்லை என்றால், அந்தக் கடனைத் திருப்பிக் கட்ட முடியாது. பிறகு, பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டியிருக்கும். இன்று நான் என் குடும்பத்திற்காக உழைப்பதில்லை. கடனையும் வட்டியையும் அடைப்பதற்காக மட்டுமே உழைக்கிறேன்,” என்று ஜீவன் கூறினார்.
அவரது இந்த வார்த்தைகள், வட இலங்கையின் ஏராளமான சிறிய மீனவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான யதார்த்தத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு முறையும் கடலுக்குச் செல்வதற்கு, எரிபொருள் வாங்கவும், இயந்திரத்தைப் பழுதுபார்க்கவும், சேதமடைந்த வலைகளை மாற்றவும், அன்றாட குடும்,பச் செலவுகளைச் சமாளிக்கவும் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் மீனவர்கள் உள்ளனர். மீன்பிடி குறைந்துவிட்டால், அந்தக் கடன்கள் குவிந்து கொண்டே செல்கின்றன. உழைப்பின் மூலம் வறுமையிலிருந்து மீளுவதற்குப் பதிலாக, மீண்டும் கடலுக்குச் செல்லவே புதிய கடன் வாங்க வேண்டிய முடிவில்லா சுழற்சிக்குள் அவர்கள் சிக்கிக்கொள்கின்றனர்.
கரைக்குத் திரும்பிய பின்னர், குறிகட்டுவான் இறங்குதுறையில் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவர்களைச் சந்தித்தனர். அவர்களின் கூற்றுப்படி, தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) நாடாளுமன்ற உறுப்பினர் கருணானந்தன் இளங்குமரன், இரண்டு மாதங்களுக்குள் இரண்டு மீட்புப் படகுகள் வழங்கப்படும் என்றும், அதனுடன் மீனவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
“சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எங்களுக்கு வழங்கினார்கள், ஆனால் அது மட்டுமே எங்களுடைய பிரச்சினை அல்ல. நாளை மீண்டும் கடலுக்குச் செல்லும்போது, எங்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என்று சரண்ராஜ் கூறினார்.
அவசரநிலை குறித்து முதல் தகவல் வழங்கப்பட்ட பின்னரும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார். ஒருவர் காணாமல் போனதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்படாத வரை தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியாது என்று கடற்படை, அவர்களது உறவினர்களிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். இதனால், மாலை முழுவதும் அவர்களது உறவினர்கள் பல்வேறு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
“நாங்கள் முதலில் தகவல் தெரிவித்தபோது, பல மணி நேரங்கள் எந்த உதவியும் வரவில்லை. பின்னர் கடற்படையினர் எங்களை கரைக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால் அதற்குள், முழு இரவையும் எங்கள் உயிரைக் காப்பாற்றப் போராடியே கழித்துவிட்டோம்,” என்று அவர் கூறினார்.
வட இலங்கையின் மீனவக் சமூகங்கள் எதிர்கொள்ளும் இந்த சமூகப் பேரழிவு, சமீபத்தில் நடந்த மற்றொரு துயரமான சம்பவத்தின் மூலம் இன்னும் தெளிவாக வெளிப்படுகிறது.
ஜூலை 9 அன்று, வட்டுக்கோட்டை அராலி மேற்கைச் சேர்ந்த சிவகுமார், கைகளால் நண்டுகளைப் பிடிப்பதற்காக கடலுக்குள் நடந்து சென்றபோது வலிப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
அவரது வீட்டிற்கு சென்ற எமது செய்தியாளரிடம், அவரது 70 வயதுடைய தாயார் செல்லையா கோகிலவாணி, குடும்பம் எதிர்கொண்டுவரும் மிகக் கொடூரமான வாழ்க்கை நிலைமைகளை மனவேதனையுடன் விளக்கினார்.
ஒருகாலத்தில் சிவகுமாருக்குச் சொந்தமாக ஒரு சிறிய மீன்பிடிப் படகு, ஒரு வெளி இணைப்பு இயந்திரம் மற்றும் இறால் வலைகள் இருந்தன. ஆனால் மீன்பிடி குறைவு மற்றும் வருமான வீழ்ச்சி காரணமாக, அவற்றையெல்லாம் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய வாழ்வாதாரத்திற்கான இந்தச் சிறிய உற்பத்திச் சாதனங்களைக்கூட இழந்த பின்னர், அவர் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வாழ்ந்தார். அதோடு, கடற்கரையோர ஆழம் குறைந்த பகுதிகளில் கைகளால் நண்டுகளைப் பிடித்து சிறிதளவு கூடுதல் வருமானம் ஈட்ட முயன்றார்.
மனைவியுடன் சுமார் பதினெட்டு ஆண்டுகளாகப் பிரிந்திருந்தபோதிலும், தனது மகனும் மகளும் வாழ்வதற்காக மாதந்தோறும் 10,000 ரூபாயை பராமரிப்புத் தொகையாக வழங்கி வந்தார். அதேநேரத்தில், வயதான தனது தாயையும், கணவரால் கைவிடப்பட்ட 42 வயது சகோதரியையும், மனநோயால் பாதிக்கப்பட்ட 36 வயது சகோதரரையும் பராமரிக்கும் பொறுப்பையும் அவர் ஏற்றிருந்தார். இந்த அளவுக்கு அதிகமான பொருளாதாரச் சுமைகளே சிவகுமாருக்கு வலிப்பு நோய் உருவாகக் காரணமாக இருந்ததாக அவரது தாயார் கோகிலவாணி கூறினார். இருந்தபோதிலும், குடும்பத்திற்கு வேறு வருமானம் இல்லாத காரணத்தால், அவர் உயிருக்கு ஆபத்தான வேலைகளைத் தொடரத் தள்ளப்பட்டிருந்தார்.
“எங்கள் குடும்பத்திற்கு போதுமான வருமானம் இல்லாததால், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை உள்ளூர் கடைகளில் கடனாக வாங்கித்தான் வாழ்ந்தோம்,” என்று கோகிலவாணி கூறினார். “இப்போது கடைகளுக்கே மட்டும் சுமார் 60,000 ரூபாய் கடன் இருக்கிறது.”
மனநோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொடுப்பதில் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சிரமங்களையும் அவர் விளக்கினார்.
“மனநோயால் பாதிக்கப்பட்ட என் மகனை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. அதற்கே கணிசமான செலவு ஏற்படுகிறது. இனிமேல் அந்தச் செலவுகளைக் கூட எப்படிச் சமாளிப்போம் என்று தெரியவில்லை. இதுவரை அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான அர்த்தமுள்ள உதவியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.”
அவரது வார்த்தைகள், வடக்கின் கிராமப்புறங்களில் வாழும் ஏராளமான குடும்பங்கள் எதிர்கொள்ளும் தாங்க முடியாத சமூக நிலைமைகளை அம்பலப்படுத்துகின்றன.
“அரசாங்கத்திடமிருந்து எங்களுக்குக் கிடைப்பது மாதம் 10,000 ரூபாய் கொடுப்பனவு மட்டும்தான். எங்கள் கிராமத்தில் முறையான குடிநீர் வசதிக்கூட இல்லை. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, நீர்விநியோக வாகனம் மூலம் 40 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதற்குக்கூட மாதம் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.”
கோகிலவாணியின் சாட்சியம், கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்கும், இன்று உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் யதார்த்த நிலைமைகளுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படும், மீன்பிடி உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும், கடல்சார் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும், மீன்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும், மேலும் வடக்கு மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு—குறிப்பாக பெருமுலதன அடித்தள இழுவைப் படகுகளின் (bottom trawling) அழிவுகரமான நடவடிக்கைகளுக்கு—தீர்வு காணப்படும் என்று அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் கடந்த பின்னரும், இந்த வாக்குறுதிகளில் எதுவும் மீனவர்களின் வாழ்க்கையில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு மாறாக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மானிய வெட்டுகள், அரசுச் செலவுக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட கொள்கைகளும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மீது மேலும் மேலும் சுமைகளை ஏற்றுகின்றன. அதேவேளையில், நிதி மூலதனத்தினதும் பெருவணிக நிறுவனங்களினதும் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.
ஜீவன், சரண்ராஜ் மற்றும் கோகிலவாணியின் அனுபவங்கள், வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியை வெறுமனே மோசமான காலநிலையாலோ அல்லது துரதிர்ஷ்டவசமான விபத்துகளாலோ விளக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. வாழ்வாதாரங்களின் அழிவு, நீடித்த கடன்சுமை, போதிய சுகாதார சேவைகள் இன்மை, சீரழிந்துவரும் பொதுச் சேவைகள், அர்த்தமுள்ள சமூக நலத் திட்டங்களின் பற்றாக்குறை, மேலும் சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் தனியார் இலாபத்திற்கு அடிபணியச் செய்யும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பிலேயே இந்த நெருக்கடி வேரூண்றியுள்ளது.
சிறிய அளவிலான மீனவர்களில் பெரும் எண்ணிக்கையினர், தங்களுடைய உற்பத்திச் சாதனங்களை இழந்து, தினக்கூலி வேலை அல்லது பாதுகாப்பற்ற பிற வேலைவாய்ப்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் பலர், பாதுகாப்பற்ற படகுகளில் அல்லது உயிருக்கு ஆபத்தான கடலோர வேலைகளில் ஈடுபட்டு, தங்கள் குடும்பங்களுக்கு உணவு வழங்குவதற்காக உயிரைப் பணயம் வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எனவே, கடலில் மீண்டும் மீண்டும் நிகழும் உயிரிழப்புகள், வட இலங்கையின் கிராமப்புற ஏழை மக்களைப் பாதிக்கும் மிகப் பரந்த சமூக நெருக்கடியின் மிகவும் துன்பகரமான வெளிப்பாடாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும், முதலாளித்துவ இலாப அமைப்பிற்கும் எதிராக தங்களுடைய போராட்டத்தை பரந்த தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்துடன் ஒன்றிணைப்பதே மீனவர்கள் எதிர்கொள்ளும் அவசரப் பணியாகும். இதை முன்னெடுக்க, மீனவர்கள் வாழும் கிராமப்புறங்களில் முதலாளித்துவக் கட்சிகளின் கட்டுப்பாட்டிலிருந்து சுயாதீனமாகச் செயல்படும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவது அவசியமாகிறது.
இந்த நோக்கத்திற்காக, சோசலிச சமத்துவக் கட்சியின் அழைப்பை ஏற்று, ஊர்காவற்துறை பகுதி மீனவர்கள் ஏற்கனவே ஒரு நடவடிக்கைக் குழுவை உருவாக்கியுள்ளனர். வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மீனவர்களும் இதுபோன்ற சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி உதவத் தயாராக உள்ளது.
மேலும் படிக்க
- இலங்கை: வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மீனவர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குங்கள்
- இந்திய இழுவைப்படகுகள் தமது வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு எதிராக வட இலங்கை மீனவர்கள் போராடுகின்றனர்
- இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களும் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு முன்நோக்கிய பாதையும்
- இலங்கை மற்றும் இந்திய ஆளும் உயரடுக்குகள் வறுமையில் வாடும் மீனவ சமூகங்களுக்கு இடையே தேசிய பகைமையை தூண்டுகின்றன
