முன்னோக்கு

அந்தோனி பௌசிக்கு எதிரான வேட்டையும் பொதுச் சுகாதாரத்தின் மீதான போரும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றிய பிரதிநிதிகள் சபையின் பணிக்குழுவின் முன்பாக டாக்டர் அந்தோனி பௌசி சாட்சியமளிக்கிறார். [AP Photo/Mariam Zuhaib]

கடந்த புதன்கிழமை அன்று, செனட் குடியரசுக் கட்சியினர் அந்தோணி பௌசிக்கு எதிராக மக்கார்த்திய (McCarthyite) பாணியிலான ஒரு வேட்டையாடலை அரங்கேற்றினர். இது, அவரைப் பொய் சாட்சி சொல்லத் தூண்டும் வெளிப்படையான நோக்கத்துடன் கூட்டப்பட்ட மற்றும் அறிவியலுக்கு எதிரான ஒரு விசாரணையாகும். முடிவில்லாத பொய்கள் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியில், பெளசி ஒரு கேள்விக்குக் கூடப் பதிலளிக்காமல், தனது ஐந்தாவது அரசியலமைப்புத் திருத்த உரிமையை 100-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தினார்.

ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தை (NIAID) 38 ஆண்டுகள் வழிநடத்திய பெளசியை சிறையில் அடைப்பேன் என்று பலமுறை சூளுரைத்த குடியரசுக் கட்சியின் குழுத் தலைவர் ரேண்ட் போல் அனுப்பிய ஆணைக்கு இணங்க அவர் ஆஜரானார். சில நாட்களுக்கு முன்பு, போல், பெளசியின் 1,100 பக்கங்களுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட நாட் குறிப்புகளையும், 2001-ஆம் ஆண்டு வரையிலான 465 பக்க ஆவணத் தொகுப்பையும் வெளியிட்டார். இவை பௌசியின் அந்தரங்க உரிமையை அப்பட்டமாக மீறும் வகையில் சுகாதார மற்றும் மனித சேவைகள் (HHS) திணைக்களத்தின் செயலாளர் ரொபர்ட் எஃப். கென்னடி ஜூனியரால் வழங்கப்பட்டவை ஆகும்.

“இந்தக் குற்றத்திற்கு நீங்கள் உதவியும் ஒத்தாசையும் செய்யாமல் தொற்றுநோய் ஊரடங்கு முடக்கங்களை திணித்திருக்க முடியாது” என்று பௌசியிடம் கூறிய போல் தனது உரையைத் தொடங்கினார். பௌசியின் வழக்கறிஞர் டேவிட் ஷெர்ட்லர் பேச முயன்றபோது, அவரை வெளியேற்றுமாறு கேபிட்டல் பொலிசுக்கு போல் உத்தரவிட்டார். இதற்கு பாசிஸ்டுகள் நிறைந்த பார்வையாளர்கள் மாடத்திலிருந்து பலத்த கரகோஷம் எழுந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, பதிலளிக்க மாட்டார் என்று தெரிந்தும் சாட்சியிடம் குடியரசுக் கட்சியினர் கேள்விகளை எழுப்பினர். மரபணு ஆய்வு முறைகள், வுஹான் ஆய்வகப் பொய், ஒரு செனட்டர் “சோதனைமுறை மரபணு சிகிச்சை” என்று குறிப்பிட்ட விவகாரங்கள் மற்றும் பிற தீவிர வலதுசாரி சதித்திட்டக் கோட்பாடுகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். இறுதியாக, காங்கிரஸை அவமதித்ததற்காக பெளசி மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தின் மீது ஆகஸ்ட் 5 அன்று வாக்களிப்பு நடைபெறும் என அறிவித்து போல் கூட்டத்தை முடித்துக்கொண்டார்.

செய்தி ஊடகங்கள் இந்த நாடகத்தனமான நிகழ்வைப் பற்றிச் செய்தி வெளியிட்டு, அதன் உண்மையான நோக்கத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. இந்தக் கேள்விக் கேட்கும் நிகழ்வை ஏதோ தனிப்பட்ட பகைமையின் மற்றொரு சுற்றைப் போல் சித்தரித்து, இதன் மூலம் இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு நியாயமான தன்மையை வழங்கின. ஆனால் உண்மையில், இலாபத்தைக் கட்டுப்படுத்தும் அறிவியல் ஆலோசனைகள் ஒரு குற்றச்செயல் என்று நிறுவுவதற்கும், ட்ரம்ப் நிர்வாகத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொதுச் சுகாதாரத்தின் முழுமையான அழிவுக்கு அரசியல் களத்தை தயார் செய்வதற்கும் நடத்தப்படும் ஒரு பாசிசப் பிரச்சாரத்தின் மிகக் கடுமையான வெளிப்பாடே இந்த விசாரணை ஆகும்.

இந்தக் குற்றவியல் பொறிமுறையை குழுத் தலைவர் ரேண்ட் போலினாலும் மற்றவர்களாலும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. 2025 ஜனவரியில் பௌசிக்கு ஜோ பைடென் வழங்கிய முன்கூட்டிய மன்னிப்பு, அது கையெழுத்திடப்பட்ட தேதி வரையிலான குற்றங்களை மட்டுமே உள்ளடக்கும். எனவே, புதன்கிழமை அன்று சத்தியப்பிரமாணத்தின் கீழ் செய்யப்பட்ட ஒரு பொய்யான அறிக்கை, அதன் வரம்பிற்கு அப்பாற்பட்ட ஒரு புதிய குற்றமாக இருக்கும். “அவர் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னால், அது அந்த நேரத்திலேயே செய்யப்பட்ட ஒரு புதிய குற்றமாகும். அதை ஈடுசெய்ய எந்த மன்னிப்பும் காத்திருக்காது,” என்று விசாரணைக்கு முன்பு போல் எழுதினார். அந்த சூழ்ச்சி தோல்வியடைந்தபோது, மன்னிக்கப்பட்ட சாட்சிக்கு ஐந்தாவது திருத்தத்தின் கீழ் எந்த உரிமையும் இல்லை என்ற கோட்பாட்டை போல் முன்வைத்தார். மேலும், அந்த வாதம் “சட்டரீதியாக ஒருபோதும் சோதிக்கப்பட்டதில்லை” என்றும் ஒப்புக்கொண்டார்.

ட்ரம்ப் மற்றும் கென்னடியுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில், போல் அறிவியலுக்கு எதிரான காங்கிரஸின் சிலுவைப் போரை முன்னின்று நடத்தியுள்ளார். சீனாவில் வௌவால் கொரோனா வைரஸ் பற்றிய கண்காணிப்பை நடத்திவந்த எக்கோ சுகாதார கூட்டமைப்பைச் சேர்ந்த பீட்டர் தாசாக் என்பவரைக் இவர்கள் இலக்கு வைத்து, அவருக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைப்பதைத் தடைசெய்து, அவரது அமைப்பையும் முடக்கியுள்ளனர். பௌசியின் நீண்டகால ஆலோசகரான டேவிட் மோரன்ஸ், மத்திய அரசின் ஆவணங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக ஏப்ரல் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை, முன்னெப்போதும் இடம்பெறாத ஒன்றாக இல்லையென்றாலும் அசாதாரணமானது என்று விஞ்ஞானம் என்ற இதழ் குறிப்பிட்டுள்ளது. ஜூன் மாதம், தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) வைரஸ் நிபுணரான வின்சென்ட் மன்ஸ்டர், உயிரியல் மாதிரிகளை இறக்குமதி செய்தது தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில், சுங்க ஆவணங்கள் இன்றி ஆபத்தில்லாத குடற் புழுக்கள் மற்றும் நுண்ணுயிரியல்களை அனுப்பியதற்காக நீதியமைச்சகம் சீன ஆராய்ச்சியாளர்களை ஒன்றன்பின் ஒன்றாக பலரை சிறையிலடைத்தது. ஒரு முனைவர் பட்ட மாணவரை “வூஹானைச் சேர்ந்த அந்நியர்” என்று முத்திரை குத்தியது. பின்னர் பிப்ரவரியில் மற்ற மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தது. கடந்த ஆண்டு, வெள்ளை மாளிகை ஒரு கூட்டாட்சி பொதுச் சுகாதார வலைத்தளத்தை மாற்றி, கோவிட்-19 ஆய்வகத்தில் இருந்துதான் உருவானது என்பதைத் தீர்க்கப்பட்ட உண்மையாக அறிவிக்கும் ஒரு பக்கத்தை நிறுவியது.

மேலும் விரிவாகக் கூறினால், கென்னடி பதவியேற்றதிலிருந்து, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஊழியர்களில் தோராயமாக கால் பகுதியினர் உட்பட, அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையைச் (HHS) சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றியுள்ளார். 2025 ஜூன் மாதத்தில், தடுப்பூசி நடைமுறைகளுக்கான ஆலோசனைக் குழுவின் (ACIP) 17 வாக்களிக்கும் உறுப்பினர்களையும் அவர் பணிநீக்கம் செய்து, அவர்களுக்குப் பதிலாகத் தடுப்பூசி எதிர்ப்பு ஆதரவாளர்களை நியமித்தார். அவர் தேசிய சுகாதார நிறுவனத்தின் 49 அறிவியல் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்துள்ளதோடு, அடுத்த பெருந்தொற்றுக்கான விரைவான தீர்வுக்கு ஆதாரமாக விளங்கும் எம்.ஆர்.என்.ஏ (mRNA) ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் டாலர்கள் நிதியையும் ரத்து செய்துள்ளார்.

தடுப்பூசிக்கு எதிரான தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் கென்னடி தனது தொழில் வாழ்க்கையையும் தனிப்பட்ட செல்வத்தையும் கட்டியெழுப்பியுள்ளார். இதற்காக அவர் குழந்தைகள் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து 326,056 டாலர்களையும், மெர்க் நிறுவனத்தின் கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி தொடர்பாக அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்த ஒரு சட்ட நிறுவனத்திடமிருந்து பரிந்துரைக் கட்டணமாக ஏறக்குறைய 2.5 மில்லியன் டாலர்களையும் பெற்றுள்ளார். அவர் ட்ரம்பின் அமைச்சரவையில் நுழைந்தபோதும் இந்த சட்ட நிறுவனத்தில் தனது பங்கைத் தக்கவைத்துக் கொண்டார். இந்த ஆண்டு ஜனவரி 5 அன்று, உலகளாவிய பரிந்துரையுடன் இருந்த 17 நோய்களுக்கான குழந்தைப் பருவ தடுப்பூசி அட்டவணையை 11 ஆக அவர் குறைத்தார். இந்த முடிவுக்கு மார்ச் மாதம் ஒரு கூட்டாட்சி நீதிபதி தடை விதித்தார். மேலும், ட்ரம்ப் அவரை வேகமாகவும், தீவிரமாகவும் செயல்படுமாறு வற்புறுத்தி வருவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஏற்கனவே அளவிடக்கூடியதாக உள்ளன. அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை 2,318 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகபட்ச அளவாகும். மேலும், 2000 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தக்கவைத்து வந்துள்ள தட்டம்மை ஒழிக்கப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை, வரும் நவம்பர் மாதத்தில் அது இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பௌசி மற்றும் பொது சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை மீதான தாக்குதல்களின் முதன்மை நோக்கம், அறிவியலை மத மூடநம்பிக்கைகளுக்கும், சதித்திட்டக் கோட்பாடுகளுக்கும், சந்தையின் தேவைகளுக்கும் அடிபணிய வைப்பதே ஆகும். கடந்த புதன்கிழமை நடந்த விசாரணையில், “தேவாலயங்களும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டன” என்ற செனட்டர் ஜேம்ஸ் லேன்க் போர்டின் குறை, மத்திய அரசின் நிதியுதவி பெறும் ஆராய்ச்சியில் கரு திசுக்களைப் பயன்படுத்துவதை செனட்டர் ஜோனி எர்ன்ஸ்ட் கண்டித்தது, மற்றும் பிற அடிப்படைவாதப் பிரகடனங்கள் மூலம் இது வெளிப்பட்டது.

இந்த பிற்போக்குத்தனமான விசித்திரக் கூத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் எந்தவொரு தீவிரமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஈரானுக்கு எதிரான போரில் ட்ரம்ப் “வெற்றி பெற வேண்டும்” என்று கடந்த வாரம் வலியுறுத்திய குழுவின் மூத்த உறுப்பினரான செனட்டர் கேரி பீட்டர்ஸ், பௌசி மீதான விசாரணை “கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறது” என்றும், “தேசிய பாதுகாப்பு சவால்களிலிருந்து” குழுவின் கவனத்தைத் திருப்புகிறது என்றும் மட்டுமே குற்றம் சாட்டினார். மற்றொரு செனட்டரான ரிச்சர்ட் புளூமெந்தால், தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகளை, “சந்தேகத்திற்கு இடமின்றி ஜனாதிபதி ட்ரம்பின் மிகப்பெரிய சாதனை” என்று பாராட்டினார்.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பௌசிக்கு எதிராக நடத்தப்படும் இந்த வேட்டையாடலைத் தீர்க்கமாக எதிர்ப்பதுடன் அவரைப் பாதுகாக்கிறது. அதே வேளையில், அவரைப் பற்றி நாங்கள் எழுதிய எதையும் திரும்பப் பெறப்போவதில்லை. அவர் உண்மையில் நடைமுறைப்படுத்திய கொள்கைகளுக்காகப் பழிவாங்கப்படவில்லை. பௌசி 2020 இன் தொடக்கத்தில் உண்மையான எச்சரிக்கைகளை விடுத்தார், அதற்காக பாசிச வலதுசாரிகளால் அவர் இழிவுபடுத்தப்பட்டார். ஆனால், அவர் ஒருபோதும் ட்ரம்பை விட்டு விலகவில்லை. 2021 இல் ஜனநாயகக் கட்சியினர் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அவர்கள் பொதுச் சுகாதாரத்தின் மீது நடத்திய ஒவ்வொரு தாக்குதலுக்கும் அவர் அறிவியல் ரீதியான அங்கீகாரத்தை வழங்கினார்: பள்ளிகளைப் பாதுகாப்பற்ற முறையில் மீண்டும் திறப்பது, முகக்கவசம் அணிவதைக் குறைத்து மதிப்பிடுவது, பரிசோதனை மற்றும் அறிக்கை அளிக்கும் முறைகளை முடக்குவது, இறுதியாகப் பெருந்தொற்று முடிந்துவிட்டது என்ற பைடெனின் முதிர்ச்சியற்ற பிரகடனம் ஆகியவற்றுக்கு அவர் துணை நின்றார்.

ஆகஸ்ட் 2023 இல் BBCயின் நேர்காணலில், பெருந்தொற்றின் ஏழாவது அலை தொடங்கியபோது பௌசி பேசுகையில், “பாதிக்கப்படக்கூடியவர்கள் கைவிடப்படுவார்கள், அவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவார்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள், சிலர் இறந்துபோவார்கள்” என்று கூறினார். நெடுங் கோவிட் காரணமாகத் தொடர்ந்து நிகழும் பெருந்திரளான மரணங்களுக்கும் உடல்நலக் குறைபாடுகளுக்கும் அவர் அளித்த நியாயப்படுத்தலாகவே இது இருந்தது.

ஜனவரி 20, 2021 அன்று பைடென் ஆட்சியைப் பொறுப்பேற்ற போது அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக, தோராயமாக 4,00,000 மக்கள் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்திருந்தனர். அவருடைய ஆட்சிக் காலத்தின் முடிவில் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 12 இலட்சத்தையும் கடந்தது. அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்றில் இரண்டு பங்கு மரணங்கள் அவருடைய நிர்வாகத்தின் கீழேயே நிகழ்ந்தன. மிகவும் துல்லியமான அளவீடான அதிகப்படியான மரணங்கள் பற்றிய மதிப்பீடுகள், அமெரிக்காவின் உண்மையான பலி எண்ணிக்கையைத் தோராயமாக 14 இலட்சமாகவும், உலகளாவிய பலி எண்ணிக்கையைச் சுமார் 3 கோடியாகவும் வைக்கின்றன. இந்த மரணங்கள் இன்னும் நிற்கவில்லை. 2025 ஆம் ஆண்டில் மட்டுமே 1,09,000 முதல் 1,75,000 வரை அதிகப்படியான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பெருந்தொற்றுத் தணிப்புக்கான கூட்டு முயற்சியின் (PMC) தரவுத் தளம் மதிப்பிடுகிறது. இது அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோயால் ஆண்டுதோறும் ஏற்படும் மரணங்களுக்கு நிகரானது.

பௌசியை அவமானப்படுத்துவதற்காக போல் வெளியிட்ட நாட்குறிப்புகள், அவர் எதிர்பாராத ஒரு விஷயத்தை வெளிப்படுத்துகின்றன. “எனது தேசிய மற்றும் சர்வதேசப் புகழ் பற்றிய நிலைமை வெடிக்கும் தன்மையுடனும், உண்மையிலேயே கற்பனை செய்ய முடியாததாகவும் உள்ளது” என்று அமெரிக்க மரணங்கள் 1,00,000 ஐ நெருங்கிக்கொண்டிருந்த நிலையில், மே 21, 2020 அன்று பௌசி எழுதியுள்ளார். மேலும், “அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து வெளிச்சத்தை நான் பறித்தபோதிலும், என் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவராக அவர் தோன்றுகிறார். நாங்கள் மிகவும் தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான ஒரு உறவை வளர்த்து வருகிறோம்” என்று ட்ரம்ப் குறித்து அவர் குறிப்பிட்டார்.

பௌசியின் தலையாட்டும் பொம்மைகள், சுவரோவியங்கள், மற்றும் அவரது ஹாலிவுட் அபிமானிகள் பற்றிய பதிவுகள் உள்ளன. இது ஒரு குறிப்பிட்ட சமூக அடுக்கின் கண்ணோட்டமாகும். ஒரு காலத்தில் தீவிர விஞ்ஞானியாக இருந்த அவர், ஜனநாயகக் கட்சியைச் சுற்றியுள்ள செல்வந்த சூழலில் உள்வாங்கப்பட்டு, ஒரு சமூகப் பேரழிவைத் தனது தனிப்பட்ட உயர்வுக்கான ஒரு சந்தர்ப்பமாக மாற்றிக்கொண்டார். சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த சமூக அழுத்தங்கள் ஒரு சீரழிக்கும் விளைவை ஏற்படுத்தி, பெருந்தொற்றை இயல்பாக்குவதில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை வகிக்க பௌசியைத் தயார்படுத்தின.

பௌசிக்கு எதிரான பாசிசப் பிரச்சாரத்தை நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும், மேலும் அதன் நோக்கம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதன் நோக்கம் தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பதை நிறுவுவது அல்ல, மாறாக, அறிவியலையும் பொது சுகாதாரத்தையும் குற்றமயமாக்கி, அடுத்த பெருந்தொற்றுக்கு முன்பாக சமூகத்தைப் பாதுகாப்பற்ற நிலையில் விட்டுவிடுவதே ஆகும். தட்டம்மை ஏற்கனவே கட்டுப்பாடின்றி பரவி வருகிறது. கொங்கோ ஜனநாயகக் குடியரசில், இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பரவிவரும் எபோலா பெருந்தொற்று, மே மாதம் முதல் 1,437 பேரைக் கொன்றுள்ளது. இதற்கு எந்த தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லாத ஒரு வகை கிருமியே காரணமாகும். காடழிப்பும் காலநிலை மாற்றமும், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவுவதை வேகப்படுத்துகின்றன. இது எந்த நேரத்திலும் அடுத்த பெருந்தொற்றை உருவாக்கக்கூடும்.

அறிவியல் மீதான போரானது சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வழிநடத்தப்படும் ஒரு பொதுவான சமூக எதிர்ப் புரட்சியின் ஒரு முனையாகும். சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையை (HHS) கலைக்கும் அதே அரசாங்கம்தான், மருத்துவ உதவித் திட்டத்தை அழித்து, காஸாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்கி, ஈரானுக்கு எதிராகப் போர் தொடுக்கிறது. தொற்று நோய்களை ஒழிக்கக்கூடிய வளங்கள் ஆயுதங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இதை எதிர்க்கும் விஞ்ஞானிகள் மீது வழக்குத் தொடரப்படுகிறது.

எந்தவொரு முதலாளித்துவக் கட்சியும் அறிவியலைப் பாதுகாக்காது. ஜனநாயகக் கட்சியினர் இந்தத் தாக்குதலுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, இருகட்சி கண்ணியத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்து இதற்குப் பதிலளிக்கின்றனர். அதே வேளையில், ஒவ்வொரு நிறுவனமாகப் பிரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும் அறிவியல் அமைப்புகளோ, திறந்த மடல்கள் மூலமாக மட்டுமே இதற்குப் பதிலளிக்கின்றன.

அறிவியல் பூர்வமான உண்மையை பாதுகாக்கும் பொறுப்பு, அதில் புறநிலை ரீதியாக அக்கறை கொண்ட ஒரேயொரு சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீதே விழுகிறது. அதற்கு சோசலிச அடித்தளங்களின் மீது சமுதாயத்தை மறுஒழுங்கமைப்பது அவசியமாகிறது: தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல் மனிதத் தேவைகளுக்காக உற்பத்தி செய்வது, பொதுச் சுகாதாரத்தைச் சர்வதேச அளவிலான முயற்சியாகக் கொண்டு நடத்துவது, மற்றும் இப்போது போருக்காக ஒதுக்கப்படும் பெருமளவிலான வளங்களை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பக்கம் திருப்புவது ஆகியவையே அவை. சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) போராடும் முன்னோக்கு இதுவே ஆகும்.

Loading