இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தின் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜூன் தொடக்கத்திலிருந்து அமர்வுப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொதுப் போக்குவரத்து, கடைகள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களை முடக்கும் “போக்குவரத்து முடக்கம்” மற்றும் “கதவடைப்பு” வேலைநிறுத்தங்கள் உட்பட வெகுஜனப் போராட்டங்களால் உலுக்கப்பட்டு வருகிறது.
அரசின் வன்முறை தொடர்ந்து தீவிரமடைந்தபோதிலும், இந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன. போராட்டக்காரர்களுக்கும் பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படையினருக்கும் இடையிலான மோதல்களில், பாதுகாப்புப் படையினருள் ஒரு சிலர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஜூலை 14, செவ்வாய்க்கிழமை, ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சுத்னோட்டி மாவட்டத்திலுள்ள தரார்காலில், பாதுகாப்புப் படை வாகன அணிவகுப்பை மறிக்க முயன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், ஆறு போராட்டக்காரர்கள் உட்பட குறைந்தபட்சம் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் கூட்டு அவாமி (பொது மக்கள்) நடவடிக்கைக் குழுவை கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் தடைசெய்தமையும், அதன் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்தமையுமே தற்போதைய வெகுஜன எழுச்சிக்கான உடனடி தூண்டுதலாக அமைந்தது.
தன்னாட்சி பெற்றதாகக் கூறப்படும் ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கமே கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவை ஜூன் 5 அன்று அதிகாரபூர்வமாக குற்றவியல் அமைப்பாக அறிவித்திருந்தாலும், அது மத்திய அரசின் உத்தரவின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவாகும். ஆரம்பத்திலிருந்தே, கைது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்ப்புகளை அடக்கவும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் மற்றும் எல்லைப்புற காவல்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டிருந்த கைப்பேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிப்பு, அதற்கும் அப்பால் நீடிக்கப்பட்டது. அதன் பின்னரும், குறிப்பாக ராவலாகோட் மற்றும் அதன் தலைநகராக உள்ள பூஞ்ச் மாவட்டத்தில், அதிகாரிகள் இடைக்கிடையே தொலைத்தொடர்பு சேவைகளை முடக்கி வருகின்றனர்.
ராவலாகோட்டை மையமாகக் கொண்டுள்ள இந்தப் போராட்ட இயக்கத்தை உடைக்கும் நோக்கில், பாதுகாப்புப் படையினர் ஆசாத் காஷ்மீரின் மூன்றாவது பெரிய நகரை நடைமுறையில் முற்றுகையிட்டுள்ளனர். ஜூன் 7 அன்று அதிகாரிகளின் தடையை மீறி தொடங்கப்பட்ட தொடர்ச்சியான அமர்வுப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுவரும் நிலையில், ராவலாகோட்டுக்கு உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் சென்றடைவதை அரசாங்கம் தடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், கோதுமைக்கான மானியத்தை அரசாங்கம் நீக்கியதை எதிர்த்து சிறு வணிகர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களில் இருந்தே இந்த நடவடிக்கைக் குழு உருவானது. அந்தப் போராட்டம் விரைவாக ராவலாகோட்டிலிருந்து ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் பரவியது. பின்னர், சர்வதேச நாணய நிதியம் திணித்த சிக்கனக் கொள்கைகள், மத்திய அரசின் பிராந்தியப் புறக்கணிப்பு, மோசமடைந்துவரும் சமூக ஏற்றத்தாழ்வு, பரவலான வறுமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் எதிரான பரந்த மக்களின் அதிருப்திக்கான மையமாக அது மாறியது.
2023 செப்டம்பரில் நிறுவப்பட்ட கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு, அதன் பின்னர் ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் மீண்டும் மீண்டும் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளது. 2025 செப்டம்பர் இறுதியில், பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகள் அடங்கிய 38 அம்சக் கோரிக்கைச் சாசனத்துக்கு ஆதரவாக நடத்திய “கதவடைப்பு” வேலைநிறுத்தம் மூலம், ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதிலுமுள்ள பொருளாதார நடவடிக்கைகளை அது முடக்கிவிட்டது. அரசியல் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க, மத்திய அரசும் ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசும் 2025 அக்டோபர் தொடக்கத்தில், அந்தக் கோரிக்கைகளில் “பெரும்பாலானவற்றை” ஏற்றுக்கொண்டதாகக் காட்டிக்கொண்டதோடு, நடவடிக்கைக் குழு தனது போராட்டத்தை இடைநிறுத்தியதற்குப் பிரதியுபகாரமாக, ஆறு மாதங்களுக்குள் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக உறுதியளிக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த நடவடிக்கைக் குழுவின் தலைமையில் வணிகர்கள், கடைக்காரர்களின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ அடுக்குகளைச் சேர்ந்த ஏனைய பிரிவினரும் உள்ளனர். இருப்பினும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் இல்லாத சூழ்நிலையிலும், தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளர்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்கள் உட்பட மக்களின் பரந்த அடுக்குகளைத் தன் பின்னால் அணிதிரட்டிக்கொள்ள அதனால் முடிந்துள்ளது.
ஜூன் 5 அன்று கூட்டு அவாமி நடவடிக்கை குழுவை ஒரு “பயங்கரவாத அமைப்பு” என அறிவித்து தடைசெய்தமை, அதிகாரிகள் 38 அம்சக் கோரிக்கைச் சாசனத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதன் காரணமாக மக்களிடையே அதிகரித்துவரும் அதிருப்தி மற்றும் நடவடிக்கைக் குழு தனது போராட்டத்தை மீண்டும் தொடங்கும் என பாகிஸ்தான் ஆளும் உயரடுக்கு அச்சம் கொண்டிருந்த சூழலில் மேற்கொள்ளப்பட்ட முன்கூட்டிய தாக்குதலாக இருந்தது.
ஜூலை 27 அன்று நடைபெறவிருந்த ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களை சீர்குலைக்க கூட்டு அவாமி நடவடிக்கை குழு தயாராகி வருவதாகவும், மேலும் அது “வெளிநாட்டுச் சதி”, அதாவது பரம எதிரியாகக் கருதப்படும் இந்தியாவின் பணத்தில் இயங்கும் அமைப்பு என்றும் கூறி, அச்சுறுத்தும் வகையில் இந்த அடக்குமுறை உத்தியோகப்பூர்வமாக நியாயப்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த அடக்குமுறையானது எதிர்ப்பை ஒடுக்குவதற்குப் பதிலாக, அதை மேலும் வலுப்படுத்தி தீவிரப்படுத்தியது. ஜூன் 7 ஆம் திகதிக்குள், ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் நகரங்களிலும் சிற்றூர்களிலும் போராட்டங்கள் வெடித்தன. அதன் பின்னர் நூற்றுக்கணக்கானோர் மேலும் கைது செய்யப்பட்டபோதிலும், அந்தப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்த மாதத் தொடக்கத்தில், நடவடிக்கைக் குழு ஜூலை 15 தொடங்கி, ராவலாகோட்டிலிருந்து ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமான முசாஃபராபாத் நோக்கி “நீண்ட பேரணி” ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்தது. ஆனால், வெளிநாட்டு பாகிஸ்தானியர் அறக்கட்டளை உட்பட செல்வாக்குமிக்க இடைத்தரகர்கள் பங்கேற்ற மறைமுகத் தொடர்புகளுக்குப் பிறகு, அந்தப் பேரணியின் தொடக்கத்தை ஜூலை 22 வரை ஒத்திவைப்பதாக அது அறிவித்தது.
இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்றாலும், பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் தலைவரும், அந்நாட்டின் சிவில் அரசாங்கத்தின் பின்னணியில் உண்மையான அதிகார மையமாக விளங்குபவருமான பீல்ட் மார்ஷல் அமீர் முனீர், இந்த மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
நீண்ட பேரணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தபோது, கூட்டு அவாமி நடவடிக்கை குழு தலைவர் உமர் நசீர் காஷ்மீரி, காஷ்மீர் மக்களின் குறைகளை “புரிந்துகொண்டதற்காக” முனீருக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தார். ஆசாத் காஷ்மீரின் நிலைமை குறித்து அவருக்கு சரியான தகவல்கள் சென்றடையவில்லை என்றும், அதில் தலையிடுமாறும் வலியுறுத்தி, பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் தலைவருக்கு நடவடிக்கைக் குழு ஒரு கடிதம் அனுப்பியிருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக் கருவியின் உச்சியில் அமர்ந்திருக்கும் நபரிடமே இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்பட்டமை, கூட்டு அவாமி நடவடிக்கை குழு தலைமையின் குட்டி முதலாளித்துவ தேசியவாதத் பண்பைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வின் மீது இராணுவத்தின் பிடியை மேலும் வலுப்படுத்தவும், இஸ்லாமாபாத்திற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான நெருங்கிய இராணுவ-மூலோபாயக் கூட்டுறவை மீண்டும் உயிர்ப்பிக்கவும் செயல்பட்டுவரும் முனீர், ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவ விரும்புபவர் ஆவார். 2024 தேசிய சபைத் தேர்தலை முறைகேடாக நடத்துவதற்கான சதியில் அவர் மையப் பங்காற்றியதுடன், பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தான் தாலிபானுக்கும் எதிராக நடத்தப்படும் இரக்கமற்ற எதிர்கிளர்ச்சி போர்களுக்கு தற்போது அவர் தலைமை தாங்கி வருகிறார்.
காஷ்மீரும் தெற்காசியாவின் மதவாத அடிப்படையிலான பிரிவினையும்
மலைப்பாங்கான பிராந்தியமான பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் சுமார் 40 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அதன் தெற்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ள இந்தியா கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரைப் போலவே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிற்போக்கு மோதலில் அதன் மைய நிலையும், சீனாவுக்கு அருகாமையில் அமைந்துள்ளதாலும், இந்தப் பகுதி மிகுந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
2025 மே மாதத்தில் நான்கு நாள் எல்லைப் போரை இந்தியாவும் பாகிஸ்தானும் நடத்தியதிலிருந்து, அணு ஆயுதங்களைக் கொண்ட தெற்காசியாவின் இந்த இரு போட்டியாளர்களுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து மிகுந்த பதற்றமான நிலையில் இருந்து வருகின்றன. புதுடெல்லியும் இஸ்லாமாபாத்தும் அடிக்கடி போர்மிரட்டல்களைப் பரிமாறிக்கொண்டு வருகின்றன.
புறநிலையாகப் பார்க்கும்போது, ஆசாத் காஷ்மீரில் நடைபெற்று வரும் இந்தப் போராட்ட இயக்கம், தற்போது இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள முன்னாள் சமஸ்தானமான ஜம்மு-காஷ்மீரின் பெரும் பகுதிக்கு எதிரிடையாக இருக்கும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை “சுதந்திரமான” (உருது மற்றும் காஷ்மீரி மொழிகளில் “ஆசாத்”) பிராந்தியமாகச் சித்தரிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வக் கதையளப்பை அம்பலப்படுத்துகிறது. யதார்த்தத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது போட்டிமிக்க கொள்ளையடிப்பு நோக்கங்களுக்கு ஏற்ப காஷ்மீர் மக்களை கையாள முற்பட்ட அதே வேளை, அவர்களின் ஜனநாயக உரிமைகளையும் திட்டமிட்ட முறையில் நசுக்கியுள்ளன.
காஷ்மீர் பிராந்தியமும் அதன் மக்களும், 1947–48 ஆம் ஆண்டுகளில் தெற்காசியா மதவாத அடிப்படையில் பிரிக்கப்பட்ட பரந்த செயல்முறையின் ஒரு பகுதியாகப் பிளவுபடுத்தப்பட்டனர். இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வெளியேறிய பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களும், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கில் இருந்த காலனித்துவ முதலாளித்துவத்தின் போட்டி பிரதிநிதிகளும் இணைந்து நடைமுறைப்படுத்திய அந்தப் பிரிவினை, துணைக்கண்டத்தை வெளிப்படையாக முஸ்லிம் நாடாகிய பாகிஸ்தான் மற்றும் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் இந்தியா என இரண்டாகப் பிரித்தனர்.
தடைசெய்யப்பட்ட நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் தற்போது நடைபெற்று வரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஏறத்தாழ எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, கடந்த வார இறுதியில் முசாஃபராபாத்திற்கு பயணித்து, தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண உதவும் வகையில் ஒரு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க முன்மொழிந்தார். ஜூலை 27 அன்று, ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஆசாத் காஷ்மீரில் நீடித்துவரும் ஸ்திரமற்ற நிலை, இந்தியா கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் மீது இஸ்லாமாபாத் கொண்டுள்ள இறையாண்மை உரிமைக் கோரலான “காஷ்மீர் நோக்கத்தையும்” பிராந்தியப் பதற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியுள்ள நிலையில், பாகிஸ்தானின் சர்வதேச தரநிலையையும் பாதிக்கக்கூடும் என்று எச்சரித்தார். தற்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் விரிவான அரசியல் ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரை ஆளும் கூட்டணிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமை வகிக்கிறது.
தனித்தனியாக, இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியான ஜமாஅத்-இ-இஸ்லாமி, அதிகாரிகளுக்கும் கூட்டு அவாமி நடவடிகை குழுவுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதற்காக ஒரு “அமைதி ஜிர்கா” (சமரசக் குழு) அமைத்துள்ளது.
அரசியல் ஸ்தாபனத்தின் சில பிரிவுகள், தற்போதைய நிலைமையைத் தணிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றன என்பது தெளிவாகிறது. ஆனால் அதே நேரம், ஆசாத் காஷ்மீரில் வெகுஜன எதிர்ப்புக்கு முன், அரசாங்கத்தின ஒரு தற்காலிக பின்வாங்கல் கூட, நாட்டின் பிற பகுதிகளிலும் சமூக அமைதியின்மையை ஊக்குவிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
நிலைமை மிகவும் வெடிப்புமிக்கதாக உள்ளது. மக்களின் பரந்த அடுக்குகளால் சட்டபூர்வத் தன்மையற்றதாகக் கருதப்படும் மத்திய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் இன்னுமொரு சுற்று கொடூரமான சிக்கனக் கொள்கைகளை திணித்து வருகிறது. கடந்த வாரம் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், வாஷிங்டன் தெஹ்ரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிராகரித்து, ஈரானுக்கு எதிரான அதன் குற்றவியல் போரை மீண்டும் தொடங்கியமை, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை கடுமையாக உலுக்கக்கூடும் என்று எச்சரித்தார். மேலும், அந்தப் போர் பிராந்தியம் முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி, சவூதி அரேபியாவுடன் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் கொண்டுள்ள பாகிஸ்தானை மேலும் ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளக்கூடும்.
இவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள எண்ணற்ற நெருக்கடிகளின் மத்தியில், ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலவும் சூழல் கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும். அது, ஆசாத் காஷ்மீரின் மீது பாகிஸ்தான் அரசின் அதிகாரத்தை இரக்கமின்றி நிலைநிறுத்தும் நோக்கில் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கைக்கு வழிவகுக்கலாம்/அல்லது இந்தியாவுடனான பதற்றம் மிக விரைவாக தீவிரமடையவும் காரணமாக அமையலாம்.
இந்நிலையில், புதுடெல்லி, ஆசாத் காஷ்மீரில் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறையைக் பாசாங்குத்தனமாக கண்டித்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். ஆனால் அதே நேரத்தில், இந்தியா கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு-காஷ்மீரில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்தி, அங்கு போராட்டங்களை ஒடுக்குவதை வழக்கமாக கொண்டிருப்பதோடு, இணைய மற்றும் கைப்பேசி சேவைகளையும் அடிக்கடி முடக்கி வருகிறது. 2019 ஆம் ஆண்டில், இந்து மேலாதிக்கவாதியான நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம், இந்திய ஒன்றியத்திற்குள் “அரைத் தன்னாட்சி” மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரின் அந்தஸ்தை சட்டவிரோதமாக நீக்கி, அதை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையில் ஒன்றியப் பிரதேசமாக மாற்றியது.
தற்போதைய நடவடிக்கைக் குழுவின் போராட்டம், அதன் மீதான தடையை நீக்குதல்; தற்போது அரசின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட கூட்டு அவாமி நடவடிக்கை குழுவின் தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்தல்; பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல்; பாகிஸ்தானின் பிற பகுதிகளில் வாழும் இந்திய ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீரைச் சேர்ந்த அகதிகளாக வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத்தின் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசனங்களில் 12 ஆசனங்களை ஒழித்தல் ஆகிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளது.
அந்த “அகதி” ஆசனங்களை ஒழிப்பது, பிற்போக்கு மதவாத “இரு தேசங்கள்” கோட்பாட்டின் மீது அமைந்துள்ள முழு காஷ்மீரின் மீதும் இஸ்லாமாபாத் முன்வைக்கும் சட்டபூர்வ உரிமைக் கோரிக்கையை பலவீனப்படுத்தும் என்று பாகிஸ்தானிய ஆளும் உயரடுக்கு கூறுகிறது. இதற்கு மாறாக, ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீரில் அரசாங்கங்களை அமைப்பதை கையாள்வதற்கும், அங்குள்ள மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை முறியடிப்பதற்கும் பாகிஸ்தானிய ஆளும் ஸ்தாபனம் இந்த “அகதி” ஆசனங்களைப் பயன்படுத்துகிறது என்று கூட்டு அவாமி நடவடிக்கை குழு வலியுறுத்துகிறது.
இத்தகைய கூற்றுகளில் எவ்வளவு உண்மை இருந்தாலும், இந்த ஆசனங்களை ஒழிப்பது ஆசாத் காஷ்மீரிலும் மொத்த பாகிஸ்தானிலும் நிலவும் உண்மையான ஜனநாயகமற்ற நிலையை எந்த வகையிலும் மாற்றாது. சமூக-பொருளாதார வாழ்வின் மீது ஊழல் நிறைந்த தேசிய முதலாளித்துவ வர்க்கம் செலுத்தும் ஏகபோக ஆதிக்கத்திலும், முதலாளித்துவச் சுரண்டலையும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும் பாதுகாக்கும் சக்தியாக இராணுவம் ஒரு அனுபவிக்கும் அதிகாரத்திலும் உள்ளன. இவற்றுக்கு 1947–48 பிரிவினையும் அமெரிக்கா–பாகிஸ்தான் இராணுவ-மூலோபாய கூட்டாண்மையும் அடிப்படையான, நீடித்த வெளிப்பாடுகளாக இருக்கின்றன.
நடவடிக்கைக் குழு, கோதுமை மற்றும் மின்சார மானியங்களை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்மையான சமூக-பொருளாதாரக் குறைகளை முன்வைத்ததன் மூலமும், ஆசாத் ஜம்மு மற்றும காஷ்மீர் அமைச்சரவை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஏராளமான ஆடம்பரச் சலுகைகளை ஒழிக்க வேண்டும் என்று கோரி, அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிரான மக்களின் விரோத உணர்வுக்கு குரல் கொடுத்ததன் மூலமும் முக்கியத்துவம் பெற்றது.
ஆனால், அதன் 38 அம்சக் கோரிக்கைகளில் எதுவும், முதலாளித்துவச் சொத்துரிமையை மீறுவது அல்லது இராணுவ உயரதிகாரிகளின் சிறப்புரிமைகளையும் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் மாபெரும் நிதியையும் சவாலுக்கு உட்படுத்துவது ஒருபுறம் இருக்க, முதலாளித்துவ உயரடுக்கின் செல்வத்தின் மீது கைவைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கொள்கைகள், சமூக ஏற்றத்தாழ்வு, அரச அடக்குமுறை மற்றும் இராணுவத்தால் பதவியில் அமர்த்தப்பட்ட ஏகாதிபத்திய சார்பு முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன இயக்கத்தில் இணையுமாறு பாகிஸ்தான் முழுவதுமுள்ள தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் நடவடிக்கைக் குழு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.
மாறாக, அதன் கோரிக்கைகள் பாகிஸ்தானிய ஆளும் ஸ்தாபனத்தையே நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத் மீது அழுத்தம் கொடுக்க ஏகாதிபத்திய சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிடமும் கூட அது முறையிட்டுள்ளது. நடவடிக்கை குழுவின் தலைவர்களில் ஒருவரான சர்தார் அமானுல்லா கான், ஆசாத் காஷ்மீருக்கும் இந்திய ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீருக்கும் இடையிலான எல்லையை “திறந்து” பூஞ்ச் பகுதிக்கு பொருட்கள் செல்ல அனுமதிக்குமாறு இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாஜக அரசாங்கத்திடம் கூட வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை இந்திய ஊடகங்கள் உடனடியாக முக்கியத்துவத்துடன் வெளியிட்டன.
நிரந்தரப் புரட்சியும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றவியல் பாத்திரமும்
ஆசாத் காஷ்மீர் போராட்டம் தெற்காசியா முழுவதுமுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு அடிப்படையான மூலோபாயக் கேள்விகளை எழுப்புகிறது. அவற்றில் மிக முக்கியமானது, நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தை அந்த போராட்டத்தின் அச்சாணியாக ஆக்கிக் கொள்வதன் அவசியமாகும். லியோன் ட்ரொட்ஸ்கியால் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த மூலோபாயம், 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சிக்கான மூலோபாயத் திசைகாட்டியாகவும், பின்னர் போரினால் நாசமாக்கப்பட்ட, பெருமளவில் பின்தங்கிய நாட்டில் புரட்சி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அதன் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிரான போராட்டத்திற்கும் வழிகாட்டியாகவும் இருந்தது.
நிலப்பிரபுத்துவத்தை ஒழித்தல், சாதி அமைப்பை ஒழித்தல், மதத்தையும் அரசையும் (மசூதி/கோவில் மற்றும் அரசு) பிரித்தல், ஏகாதிபத்தியத்திலிருந்து உண்மையான விடுதலையைப் பெறுதல் போன்ற, ஜனநாயகப் புரட்சியுடன் வரலாற்று ரீதியாக தொடர்புபடுத்தப்பட்ட பணிகள், ஏகாதிபத்திய சகாப்தத்தில், தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியின் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்பட முடியும் என்பதை ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்ததோடு, அது அக்டோபர் புரட்சியில் யாதார்த்தமானதாகவும் பின்னர் தெற்காசியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினையில் துன்பகரமாகவும் நிரூபிக்கப்பட்டது.
ஆசாத் காஷ்மீரில் வெடித்துள்ள வெகுஜனப் போராட்டங்கள், இலங்கை, வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் அரசாங்கங்களை வீழ்த்திய சமூக-அரசியல் அமைதியின்மையின் அலையின் பாகமாகும். ஆனால், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொண்டு, கூட்டு அவாமி நடவடிக்கை குழுவின் தலைமையிலான காஷ்மீர் தேசியவாத குட்டி முதலாளித்துவ முன்னோக்கை நிராகரித்து, முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் தெற்காசியாவின் பிற்போக்கு மதவாத-அரசு அமைப்புக்கு எதிராக, சோசலிச சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பாகிஸ்தான் மற்றும் இந்திய தொழிலாள வர்க்கத்தையும், கிராமப்புற உழைக்கும் மக்களையும் அணிதிரட்ட முற்படும் அளவிற்கே இந்தப் போராட்டம் நீடித்த முற்போக்கான அரசியல் முக்கியத்துவத்தைப் பெறும்.
கீழிருந்து பிரிவினையை ஒழித்து, தெற்காசிய சோசலிச ஐக்கிய அரசுகளை நிறுவுவதன் மூலமாக மட்டுமே, துணைக்கண்டத்தின் பல்வேறு மக்களிடையே உண்மையான சமத்துவத்தின் அடிப்படையில் காஷ்மீர் மக்களின் தேசிய ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.
ஆலன் வூட்ஸ் தலைமையிலான புரட்சிகர கம்யூனிஸ்ட் அகிலத்துடன் (RCI) (RCI, முன்னாள் சர்வதேச மார்க்சிசப் போக்கு) இணைந்துள்ள பாகிஸ்தானிய அமைப்பான இன்கிலாபி கம்யூனிஸ்ட் கட்சி (புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி), ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் போராட்டத்திலும் நடவடிக்கை குழுவின் குடையின் கீழ் இயங்கும் குழுக்களின் வலையமைப்பிலும் முன்னணிப் பாத்திரம் வகிப்பதாகக் கூறிக்கொள்கிறது. இந்தக் கூற்றுகளின் துல்லியத்தை உறுதிப்படுத்த முடியாது. ஆனால், ட்ரொட்ஸ்கிஸ நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்திற்கு எதிரான கடும் எதிர்ப்பில், நடவடிக்கை குழு பண்பு மற்றும் அதன் தேசியவாத வேலைத்திட்டம் பற்றி மிகவும் ஆபத்தான மாயைகளை அது திட்டமிட்டு பரப்பி வருகிறது என்பதை உறுதியாகக் கூற முடியும்.
இதில், சமூக ரீதியாக பல்வகைத் தன்மை கொண்ட கூட்டு அவமி நடவடிக்கை குழுவுக்குள் உள்ள அனைத்து வர்க்க வேறுபாடுகளையும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளுக்கும் தொழிலாளர் ஆட்சி மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும் இடையிலான அனைத்து வேறுபாடுகளையும் திட்டமிட்டு குழப்புவதும் அடங்கும். ஜூலை 13 வெளியிடப்பட்ட, பின்னர் RCI/IMT இணையதளத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், இன்குலாப் கம்யூனிஸ்ட் கட்சியானது “அனைத்து அதிகாரமும் குழுக்களுக்கே” என்ற கோஷத்தை முன்வைத்தது. இதன் வெளிப்படையான நோக்கம், நடவடிக்கை குழுவுடன் இணைந்த குடிமக்கள் குழுக்களை 1917 ரஷ்யப் புரட்சியின் போது வெகுஜனங்களால் உருவாக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், படையினர் மற்றும் கடற்படையினரின் சோவியத்துகளுக்கு இணையானவை எனக் காட்டுவதாகும். குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாத மென்ஷெவிக்குகள் மற்றும் சோசலிசப் புரட்சியாளர்களுக்கு எதிரான சமரசமற்ற அரசியல் போராட்டத்தின் மூலம், அந்த சோவியத்துகள் இறுதியில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷ்விக்குகளின் தலைமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு அதுவே அக்டோபர் புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்தது.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, கூட்டு அவாமி நடவடிக்கை குழுவினால் ஒரு “மக்கள் புரட்சிகர அரசாங்கத்திற்கு” அடிப்படையை அமைக்க முடியும் என்றும் தொடர்ந்து கூறுகிறது. அது அறிவிப்பதாவது: “நீண்ட பேரணி ராவல்கோட்டை முற்றுகையை உடைத்து முன்னேறியவுடன், அதிகாரச் சமநிலை முழுமையாக இயக்கத்திற்கும் குழுவிற்கும் சாதகமாக மாறும்... அப்போது அந்தக் குழு (அதாவது குட்டி முதலாளித்துவ தலைமையிலான நடவடிக்கை குழு), தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான காஷ்மீர் மக்களின் ஆதரவுடன் ‘அவாமி இன்கிலாபி (மக்கள் புரட்சிகர) அரசாங்கம் நிறுவப்படுகிறது’ என்று வெறுமனே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டியிருக்கும்.”
தொழிலாளர்களும் இளைஞர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி / புரட்சிகர கம்யூனிஸ்ட் அகிலத்தினதும் நடவடிக்கைகள் அரசியல் ரீதியாகக் குற்றவியலானவை. பாகிஸ்தானிய ஆளும் வர்க்கத்திலிருந்தும் ஏகாதிபத்தியத்திலிருந்தும் உண்மையில் சுயாதீனம் அற்ற ஒரு குட்டி முதலாளித்துவ தலைமையின் மீது மாயைகளை வளர்ப்பதாலும், வெகுஜனங்களின் தன்னிச்சையான எதிர்ப்பின் வெறும் பரிமாணமே வர்க்க வேலைத்திட்டம், புரட்சிகர முன்னோக்கு, மூலோபாயம் ஆகிய அனைத்தையும் தேவையற்றதாக மாற்றிவிடும் என்ற பொய்யைப் பரப்புவதாலும் அவை குற்றவியல்தனமானவை. பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம், அதன் அரசு மற்றும் இராணுவத்தின் எதிர்ப்பு தானாகவே கரைந்துவிடும் என்ற கருத்து முற்றிலும் அபத்தமானது. பாகிஸ்தான் உருவானது முதல், ஆளும் வர்க்கம் தனது அடிப்படை நலன்கள் அச்சுறுத்தப்படுவதாகக் கருதிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இரத்தக்களரி அடக்குமுறையையே நாடியுள்ளது. ஆசாத் காஷ்மீரின் மீது தடையற்ற ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது அதன் அடிப்படை நலன்களில் ஒன்றாகும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
தெற்காசியாவிலும் உலகம் முழுவதிலும் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தீர்க்கமான பிரச்சினை என்னவெனில், தொழிலாள வர்க்கம் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் வழிநடத்தும் வகையில், அதன் அரசியல் சுயாதீனத்தையும் மேலாதிக்கத்தையும் நிறுவுவதற்கான போராட்டமாகும். கடந்த 150 ஆண்டுகளின் மாபெரும் புரட்சிகரப் போராட்டங்களின் படிப்பினைகளை உள்வாங்கிய வர்க்க உணர்வுமிக்க முன்னணிப் படையை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே இது நிறைவேற்றப்பட முடியும். அதாவது, பாகிஸ்தானிலும் தெற்காசியா முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும்.
