முன்னோக்கு

அமெரிக்க தொழிலாளர்களும் இளைஞர்களும் சோசலிசத்தை நோக்கித் திரும்புகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மார்ச் 28, 2026 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான “மன்னர்கள் வேண்டாம்” பேரணியின் ஒரு பகுதி.

கடந்த சில நாட்களில் வெளியிடப்பட்ட பல புதிய கருத்துக்கணிப்புகள், அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டு வரும் குறிப்பிடத்தக்க இடது நோக்கிய நகர்விற்கான சான்றுகளை வழங்கியுள்ளன. கம்யூனிச எதிர்ப்பு என்பது நடைமுறையில் ஒரு அரச மதமாகவும், சோசலிசக் கருத்துக்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக உத்தியோகபூர்வ அரசியலில் இருந்து பெருமளவில் விலக்கி வைக்கப்பட்டும் உள்ள ஒரு நாட்டில், பதிவுசெய்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் ஜனாதிபதி பதவிக்கான ஒரு சோசலிச வேட்பாளருக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்ட வாஷிங்டன் போஸ்ட்-இப்சோஸ் (Washington Post-Ipsos) கருத்துக்கணிப்பின்படி, இந்த எண்ணிக்கை 30 வயதிற்குட்பட்ட வாக்காளர்களிடையே 46 சதவீதமாகவும், ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையே 64 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

சோசலிசத்திற்கான ஆதரவின் இந்த வேகமான வளர்ச்சி இருந்தபோதிலும்—அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், அதன் காரணமாகவே—கருத்துக்கணிப்பு முடிவானது ஆரம்பத்தில், “பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒரு ஜனநாயக சோசலிசவாதியை ஜனாதிபதியாக ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்” என்ற தலைப்பின் கீழேயே வெளியிடப்பட்டது. நூறு பில்லியன் டாலர் கோடீஸ்வரரான ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான செய்தித்தாளில் பணியாற்றும் போஸ்ட் பத்திரிகை ஆசிரியர்களுக்கு, தங்களின் சொந்த நலன்கள் எங்கு அடங்கியுள்ளன என்பது நன்றாகவே தெரியும்.

வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்ட, SSRS அமைப்பால் நடத்தப்பட்ட CNN கருத்துக்கணிப்பின்படி, ஜனநாயகக் கட்சியினரிலும் ஜனநாயகக் கட்சி சார்புடைய சுயேச்சைகளிலும் மூன்றில் ஒரு பங்கினர் தங்களை “ஜனநாயக சோசலிசவாதிகள்” என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கதாகும். தங்களை ஜனநாயக சோசலிசவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளாத ஜனநாயகக் கட்சியினரில் 46 சதவீதம் பேர் மட்டுமே 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கும் நிலையில், ஜனநாயக சோசலிசவாதிகளிடையே இந்த எண்ணிக்கை 59 சதவீதமாக உள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் 2026 இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்; அவர்களில் 99 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியினருக்கே வாக்களிக்கவுள்ளனர்.

தங்களை ஜனநாயக சோசலிசவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்ளாத ஜனநாயகக் கட்சியினருடன் ஒப்பிடும்போது, தங்களை ஜனநாயக சோசலிசவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் “கல்லூரிப் பட்டம் பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு (66% லிருந்து 54% ஆக) மற்றும் ஆண்டிற்கு $100,000-க்கும் குறைவாகச் சம்பாதிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் (65% லிருந்து 76% ஆக)” என்று CNN கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. வெள்ளை இன வாக்காளர்களை விட கருப்பின வாக்காளர்கள் ஒரு ஜனநாயக சோசலிசவாதியை ஆதரிப்பதில் அதிக விருப்பம் கொண்டிருந்தனர்.

சோசலிசத்திற்கான ஆதரவு என்பது பொருளாதாரத்துடன் தொடர்புடையது அல்ல, மாறாக வாழ்க்கைமுறையுடன் தொடர்புடைய ஒரு வெள்ளை இன மேல்-நடுத்தர வர்க்க உணர்வு என்று ஊடகங்களில் இடைவிடாது முன்வைக்கப்படும் கூற்றை இது முற்றிலும் நிராகரிக்கிறது. சோசலிசத்திற்கான ஆதரவானது தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமுறையின் அனுபவத்தால் உந்தப்படுகிறது; முதலாளித்துவம் தங்களுக்கு போர், வறுமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் நிறைந்த ஓர் இருண்ட எதிர்காலத்தை மட்டுமே வழங்குகிறது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இது மார்க்சிசத்தின் ஓர் அடிப்படைக் கோட்பாட்டை உறுதிப்படுத்துகிறது: அதாவது “சமூக இருப்பு நனவை தீர்மானிக்கிறது”.  சோசலிச சமத்துவக் கட்சி துல்லியமாக இந்த வளர்ச்சியையே எதிர்பார்த்தது. அதன் 2010 ஸ்தாபக வேலைத்திட்டம், “ புறநிலை நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றம்”—அதாவது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி—அமெரிக்க தொழிலாளர்கள் சோசலிசம் குறித்த “தங்களது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டது. அன்று ஒரு அறிவியல் பூர்வமான கணிப்பாக முன்வைக்கப்பட்ட அந்த விஷயம், இன்று ஒரு பரந்த நிகழ்வாக மாறியுள்ளது.

சோசலிசத்திற்கான ஆதரவுக்கும், ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் போர் மற்றும் காஸாவில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலைக்கு எதிரான நிலைப்பாட்டிற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை இரண்டு கருத்துக்கணிப்புகளும் காட்டுகின்றன. ஜனநாயக சோசலிசவாதிகளில் கிட்டத்தட்ட பாதியினர், அதாவது 48 சதவீதம் பேர், இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவைக் குறைப்பதை ஆதரிக்கும் ஒரு வேட்பாளரைத் தாங்கள் ஆர்வத்துடன் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தங்களை ஜனநாயக சோசலிசவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் ஈரானுக்கு எதிரான போரை பெருமளவில் எதிர்க்கின்றனர்; இந்த உணர்வு ஒட்டுமொத்த அமெரிக்க மக்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. குயின்னீபியாக் கல்லூரியால்  (Quinnipiac College) நடத்தப்பட்டு  புதனன்று வெளியிட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில், 66 சதவீதம் பேர் ட்ரம்ப்  போரைக் கையாண்ட விதத்தை எதிர்த்தனர்; அதே நேரத்தில் 60 சதவீதம் பேர் போரையே எதிர்த்தனர். பிப்ரவரி 28 அன்று ட்ரம்ப்  இந்த ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியதில் இருந்து இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் மிக உயர்ந்தவையாகும்.

கடந்த மாதம் நியூயார்க் மற்றும் கொலராடோவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தல் முடிவுகள் ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல என்பதை இந்தக் கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன; அத்தேர்தல்களில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்போடு தொடர்புடைய அல்லது அவர்களால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளர்கள், மூன்று நீண்டகால ஜனநாயகக் கட்சி பதவியிலிருப்பவர்களைத் தோற்கடித்து, நான்கு காங்கிரஸ் தொகுதிகளில் வேட்பாளர் நியமனங்களை வென்றிருந்தனர்.

தொழில்துறை சார்ந்த மத்திய-மேற்குப் (Midwest) பிராந்தியத்தில் நடைபெறும் முக்கியமான முதன்மைத் தேர்தல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் இந்த இடதுசாரி மாற்றத்திற்கு மேலும் வெளிப்பாட்டைக் கொடுக்கக்கூடும். மிச்சிகனில், செனட்டிற்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனத்திற்கான ஆகஸ்ட் 4 போட்டியின் கருத்துக்கணிப்புகளில் முன்னாள் பொது சுகாதார அதிகாரியான அப்துல் எல்-சயத், பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ஹேலி ஸ்டீபன்ஸுடன் சமநிலையில் உள்ளார். எல்-சயத், பெர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கார்டெஸ் ஆகியோரின் ஆதரவைப் பெற்றுள்ளார்; அதே நேரத்தில் ஸ்டீபன்ஸுக்கு ஜனநாயகக் கட்சி ஸ்தாபனம், ஆளுநர் கிரெட்சன் விட்மர் மற்றும் இஸ்ரேல் ஆதரவுச் செல்வாக்குக் குழுவின் ஆதரவு உள்ளது.

ஆளுநர் வேட்பாளர் நியமனத்திற்கான விஸ்கான்சின் ஜனநாயகக் கட்சி முதன்மைத் தேர்தல் போட்டியில், மாநிலப் பிரதிநிதிகள் சபை உறுப்பினரும் DSA உறுப்பினருமான பிரான்செஸ்கா ஹாங், கட்சி ஸ்தாபனத்தின் அதிக ஆதரவைப் பெற்ற பிரபல வேட்பாளர்களான மில்வாக்கி மேயர் டேவிட் குரோலி மற்றும் முன்னாள் துணை ஆளுநர் மண்டேலா பார்ன்ஸ் ஆகிய இருவருக்கு எதிராகக் கருத்துக்கணிப்புகளில் கணிசமான முன்னிலையில் உள்ளார். அந்த வாக்கெடுப்பு ஆகஸ்ட் 11 அன்று நடைபெறும்.

ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் ஆகிய இரு முதலாளித்துவக் கட்சிகளையுமே பெரும்பான்மையான வாக்காளர்கள் வெறுக்கும் நிலைமைகளின் கீழ் சோசலிசத்திற்கான ஆதரவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. எந்தக் கட்சி மாற்றத்திற்கான கட்சி, தங்களைப் போன்ற மனிதர்களைப் பற்றிக் கவலைப்படும் கட்சி, ஊழலை எதிர்த்துப் போராடும் கட்சி மற்றும் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் கட்சி என்று CNN கேட்டபோது, இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியை ஆதரித்தவர்களை விட, ஒவ்வொரு கேள்விக்கும் “இரண்டுமே இல்லை” என்று அதிகமான வாக்காளர்கள் பதிலளித்தனர். வரும் நவம்பரில் பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று பெரும்பான்மையினர் CNN-யிடம் தெரிவித்தனர்.

கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் (Reuters/Ipsos) கருத்துக்கணிப்பு ஒன்று, ஜனநாயக சோசலிசக் கருத்துக்களுக்கும் MAGA (அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்) குடியரசுக் கட்சியினரின் கருத்துக்களுக்கும் தலா 27 சதவீதம் என்ற துல்லியமாக ஒரே அளவிலான ஆதரவை சுட்டிக்காட்டியுள்ளது. பெருநிறுவன ஊடகங்கள், குடியரசுக் கட்சி மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தால் MAGA கொள்கைகளுக்கு இடைவிடாத விளம்பரம் கொடுக்கப்பட்டு வரும் சூழலில், பதிலளித்தவர்களில் பாதியிலும் குறைவானவர்களே ஜனநாயக சோசலிசக் கொள்கைகளைப் புரிந்து கொண்டுள்ளதாகக் கூறியிருந்த போதிலும், இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்.

கருத்துக்கணிப்புகள் என்பவை—ஊடகப் பிரச்சாரம், கேள்விகள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன, பதிலளிப்பவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் கருத்துகள் மக்கள்தொகை ரீதியாக எவ்வாறு “எடையிடப்படுகின்றன” ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு—மக்கள் உணர்வின் ஒரு சிதைக்கப்பட்ட வெளிப்பாட்டை மட்டுமே வழங்குகின்றன என்று கூற வேண்டும். மேலும், முதலாளித்துவத்தை சமூகத்தின் சாத்தியமுள்ள ஒரே பொருளாதார அடிப்படையாகச் சித்தரிக்கும் ஒரு பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலான இரு கட்சி அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளேயே அவை நடத்தப்படுகின்றன.

போர், சர்வாதிகாரம் மற்றும் பொருளாதார சீர்குலைவு ஆகியவற்றின் அதிகரித்து வரும் ஆபத்துகளின் தாக்கத்தின் கீழ், மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் ஆரம்பகட்ட இடதுசாரி நோக்கிய நகர்வு, DSA இன் தேர்தல் வெற்றிகளின் ஆரம்ப வடிவத்தை எடுத்துள்ளது. ஆனால் DSA என்பது தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் இயக்கத்தின் கருவி அல்ல. அது அதற்கு ஒரு தடையாக இருக்கிறது—வால் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் இரு கட்சிகளில் ஒன்றான ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே இயங்கும் ஒரு பிரிவே அது; தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அதிகரித்து வரும் எதிர்ப்பை மீண்டும் முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்பிற்குள் திருப்பி விடுவதே அதன் பணியாகும்.

இருப்பினும், இந்த தீவிரமயமாக்கலின் அடிப்படை உள்ளடக்கம் சீர்திருத்தவாதத் தன்மை கொண்டதல்ல; அது அந்தச் சீர்திருத்தவாதக் கட்டமைப்புக்குள் முடக்கி வைக்கப்படப் போவதும் இல்லை. தொழிலாளர்களையும் இளைஞர்களையும் முதலாளித்துவத்திற்கு எதிராகத் திருப்பும் அதே நெருக்கடி, அவர்களை ஜனநாயகக் கட்சியுடன் மோதலுக்குக் கொண்டுவரும். ஜனவரி 4, 2025 அன்றைய தனது புத்தாண்டு அறிக்கையில் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) குறிப்பிட்டது போல: “கடந்த ஐந்து ஆண்டுகள் முதலாளித்துவ நெருக்கடிக்கு ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. அடுத்த ஐந்து ஆண்டுகள், ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புமிக்க எழுச்சியால் ஆதிக்கம் செலுத்தப்படும்.”

இந்தக் கருத்துக்கணிப்புகளில் பதிவாகியுள்ள சோசலிசத்திற்கான ஆதரவின் வளர்ச்சி, அடிப்படை அரசியல் பிரச்சினையைத் தீர்த்துவிடவில்லை; மாறாக அதை மேலும் கூர்மையாக முன்வைக்கிறது. வெகுஜன உணர்வு என்பது இன்னும் ஒரு நனவான அரசியல் இயக்கமாக இருக்கவில்லை. சோசலிசம் உண்மையில் என்ன என்பதையும், அதை எவ்வாறு அடைய முடியும் என்பதைத் தெளிவுபடுத்தும் வல்லமை கொண்ட ஒரு புரட்சிகரத் தலைமையை தொழிலாள வர்க்கத்திற்குள் கட்டியெழுப்புவதே அவசியமாகும்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் 20 ஆம் நூற்றாண்டின் அடிப்படை வரலாற்றுப் பிரச்சினைகளை, எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்டாலினிசத்திற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி நடத்திய போராட்டத்தை தீவிரமாக ஆராய வேண்டும். இன்றைய தொழிலாளர்களும் இளைஞர்களும் ட்ரொட்ஸ்கியின் அறிவுரையான, “இளைஞர்களே, அரசியலைக் கற்றுக்கொள்ளுங்கள்!” என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலின் மூலமாக மட்டுமே சோசலிசத்தை அடைய முடியும்; அடைந்தே தீரும்.

இதற்கு ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டம் தேவைப்படுகிறது: ஆளும் வர்க்கத்தின் இரு கட்சிகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்; நிதி தன்னலக்குழுவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொதுப் பயன்பாட்டுச் சேவைகளாக மாற்றுவதும்; தனிநபர் லாபத்திற்குப் பதிலாக மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைப்பதும் ஆகும். கருத்துக்கணிப்புகள் ஒரு தொடக்கத்தைப் பதிவு செய்கின்றன. முக்கியமான கேள்வி அதன் நனவான அரசியல் திசைவழியாகும்—அதாவது, ஐக்கிய அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதாகும்.

இதன் அர்த்தம், ஐக்கிய அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் கட்டியெழுப்புவதாகும். எங்களுடன் இணையுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading