வில் லெஹ்மனுக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்காக, UAW அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரேமண்ட் ஜென்சன், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வாஷிங்டன், டி.சி.யில் UAW தொழிற்சங்கத் தலைவர் ஷான் பெயினுடன் (மையத்தில்), ரேமண்ட் எல். ஜென்சன் ஜூனியர் (இடது) நிற்கிறார் [Photo: Raymond L. Jensen]

ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கத்தின் (UAW) சர்வதேச அமைப்பிலிருந்து ஊதியம் பெற்றுவரும் அமைப்பாளரான ரேமண்ட் எல். ஜென்சன் ஜூனியரின் உறுப்பினர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டதுடன், தொழிற் சங்கப் பதவிகளில் வாழ்நாள் முழுவதும் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. UAW தலைவர் பதவிக்கான வேட்பாளரும், சோசலிஸ்டுமான லெஹ்மனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஜென்சனின் முகநூல் பதிவு, கூட்டாட்சித் தேர்தல் விதிகளை மீறியதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் தடைகள் UAW-வின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவை என்பதோடு, தொழிலாள வர்க்கத்திற்கு கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வெற்றியாகும்.

கண்காணிப்பாளரான நீல் பரோப்ஸ்கி, ஜென்சனின் முகநூல் பதிவு 2026 தேர்தல் விதிகளின் விதி 4-4-ஐ மீறியுள்ளதைக் கண்டறிந்தார். இந்த விதி, எந்த விதமான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், பழிவாங்குதல் மற்றும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடை செய்கிறது. ஜென்சன் கையெழுத்திட்ட நிபந்தனையின்படி, இந்த ஆண்டு எந்தவொரு வேட்பாளரின் பிரச்சாரத்திலும் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், அவர் லெஹ்மனிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்கவும் வேண்டும். மேக் ட்ரக்ஸ் தொழிலாளியான் வில் லெஹ்மனும், அவரது வழக்கறிஞரும் கொண்டு வந்த புகாரை நீல் பரோப்ஸ்கி முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

ஜென்சன், UAW-இன் பேரம் பேசும் மூலோபாயத் துறையில் ஒரு அமைப்பாளராகவும், லெஹ்மனின் சொந்தப் பகுதியான மண்டலம் 9-இன் முன்னாள் உதவி இயக்குநராகவும் இருந்துள்ளார். அவருக்கு கடந்த ஆண்டு சுமார் 202,000 டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட்டது. ஜூலை 16 அன்று, ரேமண்ட் ஜென்சன், வேட்பாளர் லெஹ்மனின் முகநூல் பக்கத்திற்குச் சென்று, அங்கே ஒரு வன்முறை சார்ந்த AI படத்தை பதிவிட்டார். லெஹ்மன், UAW தலைவர் ஷான் பெய்ன் மீதான மத்திய அரசின் குற்றவியல் விசாரணை பற்றி ஒரு அறிக்கையைப் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலாக ஜென்சன், லெஹ்மன் கயிற்றினால் கட்டப்பட்டு, வாய் அடைக்கப்பட்டு, வாயிலிருந்து இரத்தம் சொட்டுவதையும், முகமூடி அணிந்த ஒருவர் அவரது முதுகில் துப்பாக்கியை வைத்திருப்பதையும் காட்டும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) படத்தை வெளியிட்டு லெஹ்மனுக்கு அச்சுறுத்தல் விடுத்தார். ஐந்து நாட்களுக்குப் பிறகு, கண்காணிப்பு அதிகாரி அமைப்பின் புலனாய்வாளர்கள், ஜென்சனை விசாரணை செய்தபோது, அந்த முகநூல் கணக்கும், அந்த வன்முறை சார்ந்த பதிவும் தன்னுடையதே என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

கண்காணிப்பாளரான பரோப்ஸ்கி தனது சொந்த விருப்பத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, UAW அதிகாரத்துவத்திடம் இருந்து லெஹ்மனுக்கு விடுக்கப்பட்ட இந்த மரண அச்சுறுத்தலை எதிர்த்து சாமானியத் தொழிலாளர்கள் தலையிட்டதால் தான் அவர் நடவடிக்கை எடுத்தார். ஸ்டெல்லாண்டிஸ் வாரன் ட்ரக், ஸ்டெர்லிங் ஸ்டாம்பிங் மற்றும் டெட்ராய்ட்டில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் இன்டீரியர்ஸ் ஆகிய இடங்களில் உள்ள வாகனத் தொழிலாளர்கள் இது தொடர்பாக காணொளிப் பேட்டிகளை அளித்தனர். இந்தக் கொலை மிரட்டலை எதிர்த்து, கடந்த மாதம் பிரிட்ஜ்வாட்டரைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலாளி லெஹ்மனின் பிரச்சாரக் குழுவிடம், “அவர்கள் உங்களை வாயடைக்கச் செய்ய முயற்சிக்கிறார்கள்,” என்று கூறியதோடு, “யாராவது உண்மையைச் சொல்லும்போது தான் வழக்கமாக அவர்கள் அதைச் செய்வார்கள்” என்றும் சேர்த்துக் கூறினார். ஸ்டெல்லாண்டிஸ் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் அசெம்பிளியில் பணிபுரியும் தோமஸ் என்ற தொழிலாளி, உலக சோசலிச வலைத் தளத்திடம், (WSWS) உயர் அதிகாரிகள் “அடிப்படையில் ஒரு மாஃபியா மனப்பான்மையைக் கொண்டுள்ளனர்” என்று கூறினார். டெட்ராய்டில் முன்னாள் வாகன உதிரிப்பாகத் தொழிலாளியான கமிலி, இதுபோன்ற ஒரு படத்தை வெளியிடும் எந்தவொரு தொழிலாளியும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்படுவார் என்று கூறினார். மேலும், “இதைவிடக் குறைவான காரணங்களுக்காகவே மக்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Dana மற்றும் Nexteer தொழிலாளர்கள், ஒரு UPS வாகன ஓட்டுநர், மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மற்றும் குவானாஜுவாடோவைச் சேர்ந்த வாகனத் தொழிலாளர்கள், பிரித்தானியாவின் அஞ்சல் தொழிலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார சேவை (NHS) ஊழியர்கள், கனடா மற்றும் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள், மற்றும் நியூசிலாந்து மாணவர்களிடமிருந்து லெஹ்மனுக்கான ஆதரவு அறிக்கைகள் WSWS க்கு அனுப்பப்பட்டன. இந்த அறிக்கைகளில் பலவும் சந்தேகத்திற்கு இடமின்றி நேரடியாக கண்காணிப்பாளருக்கும் அனுப்பப்பட்டன. கடந்த புதன்கிழமை லெஹ்மன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சர்வதேச அளவிலான சாமனிய தொழிலாளர்களின் தலையீடே இந்த முடிவைக் கொண்டுவர நிர்பந்தித்தது என்று பாராட்டியதுடன், அந்தக் காட்சி எதைச் சாதிப்பதற்காகக் கணக்கிடப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது என்பதையும் பின்வருமாறு விளக்கினார்:

கை கால்கள் கட்டப்பட்டு, வாயடைக்கப்பட்ட ஒரு வேட்பாளரின் படம் பதிவேற்றப்பட்டதன் நோக்கம், ஒரு ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்த, ஒரு கூட்டத்தில் குரல் எழுப்பிய, அல்லது தங்கள் சொந்த தொழிற்சங்க எந்திரத்தை எதிர்க்க நினைத்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் பாடம் புகட்டுவதே ஆகும்: உங்களுக்கும் இதுதான் நடக்கும்’ என்பதை உணர்த்துவதே அதன் நோக்கமாகும்.

நான் இலக்காக இருந்தேன், ஆனால் நான் மட்டும் ஒருபோதும் இலக்காக இருந்ததில்லை. தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்து தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்கின்றனர். தனது சொந்த ஆலையில் UAW அதிகாரிகளை எதிர்த்து நின்றதற்காக, ஆன்ட்வியான் சாண்டர்ஸ் சமீபத்தில் நெக்ஸ்டீர் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நாடு முழுவதிலும் உள்ள ஆலைகளில், வாராவாரம், இந்த அமைப்பை எதிர்ப்பதற்காகத் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள், தனிமைப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் தங்கள் வேலைகளிலிருந்து விரட்டப்படுகிறார்கள். ஆனால், இவற்றில் பெரும்பாலானவை ஒருபோதும் விசாரிக்கப்படுவதோ அல்லது தண்டிக்கப்படுவதோ இல்லை. அந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்குப் பின்னால் வழக்கறிஞரோ அல்லது பிரச்சாரக் குழுவோ இல்லை. இதுதான் இந்தத் தொழிற்சங்கத்தின் உண்மையான சூழல், மேலும் ஒரு தீர்ப்பு மட்டும் அதை மாற்றிவிடாது.

இந்த மிரட்டல்கள் உயர் மட்டத்திலிருந்தே தொடங்குகின்றன. ஜூலை 30 அன்று நடைபெற்ற UAW தலைவர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாதத்தில், லெஹ்மன் அந்தப் படத்தைக் குறித்து கேள்வி எழுப்பும் வரை பெயின் அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. “அத்தகைய செயல்களை நான் ஆதரிக்கவில்லை” என்று கூறிய பெயின், உடனடியாக, “நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறீர்கள் என்றால், தயாராக இருங்கள் சகோதரரே; ஏனெனில் தினமும் இத்தகையவற்றை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்றும் சேர்த்துக் கூறினார். இது லெஹ்மனுக்கு எதிரான அச்சுறுத்தலை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைந்தது. அந்தப் படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் UAWன் சர்வதேச நிர்வாகக் குழுவின் எந்தவொரு உறுப்பினரும் அதைக் கண்டிக்கவில்லை. பெயினும் அவர் தலைமை தாங்கும் அமைப்பும் எந்தத் தண்டனையையும் சந்திக்கவில்லை. ஆனால், இம்மாத இறுதியில் உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டுகள் அனுப்பப்படவுள்ள நிலையில், எந்தவொரு ஊடக நடவடிக்கையாலும் சரிசெய்ய முடியாத வகையிலான அரசியல் ரீதியிலான அம்பலப்படுத்தலை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

வாரன் டிரக் அசெம்ப்ளி ஆலையில் ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாள ஒருவர் வில் லெஹ்மனை ஆதரிக்கிறார். ஜூலை 20, 2026

தொழிலாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அரசை நம்பியிருக்கலாம் என்ற முடிவுக்கு வருவதை எதிர்த்து லெஹ்மன் இவ்வாறு எச்சரித்தார்:

எங்கள் பாதுகாப்பு கண்காணிப்பாளரிடமோ, தொழிலாளர் துறையிடமோ அல்லது நீதிமன்றங்களிலோ உள்ளது என்று எந்தவொரு தொழிலாளியும் இதிலிருந்து முடிவுக்கு வரக்கூடாது. அது நிச்சயம் இல்லை. இரு முன்னாள் தலைவர்கள் உட்பட டசின் கணக்கிலான அதிகாரிகளைச் சிறைக்கு அனுப்பிய அளவுக்கு, இந்த அமைப்பானது தனது சொந்த உறுப்பினர்களிடம் இருந்து திருடியதாலேயே கண்காணிப்பாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டது. இது, அந்த ஊழலைத் தடுக்கவில்லை. மேலும் குரல் கொடுக்கும் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதையும் அது நிறுத்தவில்லை.

கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு லெஹ்மனின் வழக்கறிஞர் எரிக் லீ எழுதிய கடிதத்தில் மேற்கோள் காட்டிய வரலாறு இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது. 1969 ஆம் ஆண்டில், தொழிற்சங்க எதிர்ப்பாளரான ஜாக் யாப்லான்ஸ்கி, ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் டோனி பாய்லை எதிர்த்துப் போட்டியிட்டார். மேலும், அவரது வழக்கறிஞர்கள், அந்த அதிகாரத்துவக் கட்டமைப்பு தனக்கு எதிராகத் தொழிற்சங்க நிதியையும் ஊழியர்களையும் பயன்படுத்துவதை ஆவணப்படுத்தி தொழிலாளர் துறையிடம் அடுத்தடுத்து புகார்களை அளித்தனர். தொழிலாளர் துறை எதுவும் செய்யவில்லை. டிசம்பர் 31 அன்று, தொழிற்சங்க கருவூலப் பணத்தில் அமர்த்தப்பட்ட துப்பாக்கிதாரிகள் யாப்லான்ஸ்கி, அவரது மனைவி மார்கரெட் மற்றும் அவரது 25 வயது மகள் சார்லோட் ஆகியோரை அவர்களின் படுக்கையில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலைகளுக்கு உத்தரவிட்டதாக பாயில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 1970 மார்ச் மாதத்தில்தான் தொழிலாளர் துறை அந்தத் தேர்தலை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தது.

தொழிலாளர்கள் தாங்கள் பெற்ற வெற்றியைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி லெஹ்மன் தனது அறிக்கையை பின்வருமாறு நிறைவு செய்தார்:

கண்காணிப்பாளர் ஜென்சனுக்குத் தண்டனை அளித்துள்ளார். ஆனால், தொழிற்சங்க எந்திரம் அப்படியேதான் உள்ளது. இந்த எந்திரத்தை ஒழித்துக்கட்டுவதும், எமக்குத் தேவையானவற்றுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதும் சாமானிய தொழிலாளர்களின் பணியாகும்.

எனவே, இந்த பிரச்சாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். அக்டோபரில் எனக்கு வாக்களியுங்கள், ஆனால் வாக்களிப்பதோடு நின்றுவிடாதீர்கள். நீங்கள் பணிபுரியும் இடத்தில், தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமாகவும், தங்களைத் தேர்ந்தெடுக்கும் தொழிலாளர்களைத் தவிர வேறு யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாததாகவும் ஒரு சாமானிய தொழிலாளர் குழுவை உருவாக்குங்கள். அதை நெக்ஸ்டீர், அமெரிக்கன் ஆக்சில், பிரிட்ஜ்வாட்டர் ஆகிய நிறுவனங்களின் குழுக்களுடனும், மெக்சிகோ, கனடா மற்றும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடனும் இணையுங்கள். இந்தத் தொழிற்சங்கத்தில், ஒப்பந்த நிராகரிப்புகள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஒவ்வொரு பணிச்சுழற்சியிலும் வெளிப்படும் கோபத்தின் மூலம் ஒரு கிளர்ச்சி ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. அதை ஆழப்படுத்துங்கள். அதை ஒழுங்கமைத்துக் கொள்ளுங்கள். தொழிற்சங்க எந்திரம் மிரட்டல் மூலம் அதிலிருந்து வெளியேற முடியாத ஒன்றாக அதை உருவாக்குங்கள்.

இந்த முடிவில் எதுவுமே சட்ட அமைப்பால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல. முகநூலில் அந்தப் படம் வெளிவந்த அன்றே விதி 4-4 நடைமுறையில் தான் இருந்தது. ஆனால், மூன்று கண்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஜென்சனின் மிரட்டலை எளிதில் புதைக்க முடியாத ஒரு அரசியல் கேள்வியாக மாற்றியதால் மட்டுமே அது அமல்படுத்தப்பட்டது. ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைப்பின் மூலம் செலுத்தப்படும் அழுத்தம், ஒரு அதிகாரிக்கு எதிராக ஒரு தண்டனையை விதிக்க மட்டுமே முடியும். ஆனால், அந்த அச்சுறுத்தலை உருவாக்கிய அதிகாரத்துவ நலன்களை அதனால் தொட முடியாது. இதற்கு ஒவ்வொரு ஆலையிலும் சாமானிய தொழிலாளர்களின் சுயாதீனமான அமைப்புக் குழுக்கள் தேவை. அவை சர்வதேச ரீதியாக, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி’ (IWA-RFC) மூலம் இணைக்கப்பட வேண்டும், மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியைக் (SEP) கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading