இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சோசலிச சமத்துவக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா) அதன் ஒன்பதாவது தேசிய காங்கிரசை 2026 ஆகஸ்ட் 2 முதல் 7 வரை நடத்தியது. ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம், அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவு, புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு, வர்க்கப் போராட்டத்தின் தீவிரமடைதல் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) உருவாக்குதல், AI தொழில்நுட்பம் குறித்த சோசலிஸ்டுகளின் அணுகுமுறை மற்றும் இரண்டு அமெரிக்க புரட்சிகளின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் ஆகிய தீர்மானங்களை பிரதிநிதிகள் விவாதித்து ஏற்றுக்கொண்டனர்.
சோசலிச சமத்துவக் கட்சி (SEP) 2008 இல் அதன் ஸ்தாபக காங்கிரசிற்குப் பிறகு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேசிய காங்கிரசை நடத்தி வருகிறது. ஒன்பதாவது காங்கிரஸ் இந்த ஆறு தீர்மானங்களையும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பகுதிகள் மற்றும் ஆதரவுக் குழுக்களின் வாழ்த்துக்களும் அறிக்கைகளும் இக்காங்கிரசில் கேட்கப்பட்டன.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய தொடக்க அறிக்கை, முதல் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியதுடன் இக்காங்கிரஸின் ஒட்டுமொத்த நோக்கத்தையும் வரையறுத்தது. “அமெரிக்கா மற்றும் உலகின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையில்—அதாவது போர், பொருளாதார நெருக்கடி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சமூக தீவிரமயமாதல் ஆகியவை ஒன்றாகச் சந்திக்கும் தருணத்தில்—சோசலிச சமத்துவக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸ் கூட்டப்படுகிறது,” என்று நோர்த் குறிப்பிட்டார். ஈரானுக்கு எதிரான போரைக் கண்டித்த அவர் மேலும் கூறினார்: “மூன்றரைத் தசாப்தங்களாக ‘அதிர்ச்சியும் அச்சமும்’ என்ற கொடூரமான குண்டுவீச்சு மூலோபாயத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட, அமெரிக்கா தோற்கடிக்க முடியாத சக்தி என்ற நீண்டகால போலிப் பிம்பம் இப்போது தகர்ந்துவிட்டது.”
ஒரு மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று விளக்கிய நோர்த், அது “ஒரு புற்றுநோய் உடலெங்கும் பரவும் தன்மையைப் போல உருவாகி வருகிறது: இது ஒரு நாள்பட்ட மற்றும் விரிவடையும் நிலையாக உலகளவில் பரவி, புதிய பிராந்தியங்களை ஆக்கிரமித்து, முன்பு தனித்தனியாக இருந்த மோதல்களை ஒன்றாகப் பிணைத்து, தான் இட்டுச் செல்லும் பொதுவான பெரும் பேரழிவுப் போருக்குத் தயாரிப்பாக உலகப் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தேசிய அரசையும் படிப்படியாக உருமாற்றி வருகிறது” என்றார்.
போரின் தனித்தனி முனைகள் ஒன்றாகப் பிணைவதை இந்த அறிக்கை பரிசீலித்தது. உக்ரேனில் ஒரு பினாமிப் போராகத் தொடங்கிய ஒன்று, “சந்தேகத்திற்கு இடமின்றி, ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ வல்லரசுகள் நடத்தும் அறிவிக்கப்படாத, ஆனால் மிகவும் உண்மையான போராக மாறியுள்ளது.” இப்போது அமெரிக்க மற்றும் பிரெஞ்சு உளவுத்துறையினரால் ஐரோப்பிய ரஷ்யாவில் உள்ள இலக்குகளுக்கு எதிராக நடத்தப்படும் ஆழமான ட்ரோன் தாக்குதல்கள் பகிரங்கமாகவே வழிநடத்தப்படுகின்றன. “ரஷ்யா மீதான தாக்குதல்களை நேட்டோ நேரடியாக வழிநடத்துவதன் பேரழிவு விளைவுகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன,” என்று நோர்த் குறிப்பிட்டார். “நேட்டோ நாடுகள் மீது ரஷ்யா எதிர் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.”
ஈரான் மீதான தாக்குதல் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதன் முடிவு “ஒரு பெரிய மூலோபாயப் பின்னடைவு” என்று அவ்வறிக்கை தொடர்ந்தது. ஈரான் சரணடையாத நிலை நீடிப்பதுடன், ஹார்முஸ் நீரிணை இன்னமும் ஒரு சர்ச்சைக்குரிய போர் மண்டலமாகவே உள்ளது, அமெரிக்காவின் ஆயுத இருப்புகள் தீர்ந்துபோயுள்ளன, அமெரிக்கா ஒரு “மூலோபாய முட்டுச்சந்திற்குச்” சென்றுவிட்டது என்பதை வாஷிங்டனின் சொந்த மூலோபாயப் பகுப்பாய்வாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.. இது பின்வாங்குவதற்கு வழிவகுக்காது; மாறாக, ஓர் ஆக்கிரமிப்பிற்கான சாத்தியக்கூறு உட்படப் போரை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும், அது “பேரழிவின் அளவை மட்டுமே அதிகரிக்கும்.”
போரின் போக்கு, “முழு அமெரிக்க மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் நிதி அமைப்பிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும்” என்று கூறிய நோர்த், “முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய சமூக அமைப்பின் அழுகலை—அதன் இருகட்சி முறை, பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், ஊழல் மலிந்த கல்விக்கழகங்கள், அதிகாரத்துவத் தொழிற்சங்க அமைப்புகள், அடையாள அரசியலில் மூழ்கியிருக்கும் வசதி படைத்த போலி-இடதுகள் மற்றும் அறிவு ரீதியாகச் சீரழிந்த கலாச்சாரம் ஆகியவற்றின் அழுகிய தன்மையை” அது அம்பலப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வை உந்தித்தள்ளும் அதே முரண்பாடுகள், தொழிலாள வர்க்கத்தை எதிர்ப்பின் ஒரு உலகளாவிய சக்தியாக எழுச்சி பெறச் செய்துள்ளன. 30 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பலிவாங்கிய ஒரு பெருந்தொற்றால் தூண்டப்பட்ட வேலைநிறுத்த அலைகளில் தொடங்கி, பிரெஞ்சு ஓய்வூதியப் போராட்டங்கள், தெற்கு ஐரோப்பா மற்றும் தெற்காசியா முழுவதிலுமான பொது வேலைநிறுத்தங்களின் ஊடாக, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் ஆர்ப்பாட்டங்களான மூன்று “மன்னர்கள் வேண்டாம்” (No Kings) எதிர்ப்புகள் வரை நீளும் “ஒரே ஏறுமுக வளைவை” இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
“80 ஆண்டுகால அரசியல் தடைக்குப் பிறகு,” நோர்த் குறிப்பிட்டார், “அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளால் (DSA) ஜனநாயகக் கட்சியை நோக்கியே மீண்டும் திருப்பிவிடப்பட்டு, திரிபுபட்ட வடிவங்களில் வெளிப்பட்ட போதிலும், சோசலிசம் அமெரிக்காவிலேயே மீண்டும் உருவெடுத்து வருகிறது; எனினும், எந்தவொரு அதிகாரத்துவ அமைப்பாலும் நிரந்தரமாகக் கட்டுப்படுத்த முடியாத நனவில் ஏற்படும் ஒரு மாற்றத்தையே இது வெளிப்படுத்துகிறது.”
இந்த இயக்கத்திற்கும் அதன் அரசியல் வெளிப்பாட்டிற்கும் இடையில் நிற்பது புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாகும் என்று அறிக்கை விளக்கியது—இந்த நெருக்கடி “தானாகவே தீர்ந்துவிடும்” என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஒருபோதும் கருதவில்லை என்பதை நோர்த் வலியுறுத்தினார். இந்தக் கண்ணோட்டத்தில்தான் அவர் இந்த காங்கிரசின் முக்கியத்துவத்தை வரையறுத்தார். “ஒரு முன்னோக்கு என்பது போராட்டத்திற்கான ஒரு கருவி,” என்று அவர் கூறினார். “அதன் வெளியீடு, அதன் சரிபார்ப்பு மற்றும் அதன் பாதுகாப்பு ஆகியவையே தலைமைத்துவ நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தருணங்களாகும்; இது புறநிலைச் செயல்முறைகளால் மட்டுமே தீர்க்கப்படுவதில்லை, மாறாக அச்செயல்முறைகளுக்குள் புரட்சிகரக் கட்சியை நனவுபூர்வமாகக் கட்டியெழுப்புவதன் மூலமே தீர்க்கப்படுகிறது.”
அனைத்துலகக் குழு பிரதிநிதித்துவப்படுத்தும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம் என்ற வரலாற்று அடித்தளத்தின் மீது இந்தப் போராட்டத்தை நிறுத்தி நோர்த் தனது உரையை முடித்தார். “2028-இல் சோசலிச சமத்துவக் கட்சியின் அடுத்த காங்கிரஸ், 1928-இல் அனைத்துலக இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் நூற்றாண்டு நிறைவோடு ஒத்துப்போகும்; இதில் ஜேம்ஸ் பி. கனன் மிக முக்கியமான பாத்திரம் வகித்தார்,” என்று அவர் கூறினார். “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு நிறைவிற்கான தயாரிப்பானது, புதியதொரு தலைமுறைக்கு இந்த வரலாற்றைக் கற்பிப்பதில் கவனத்தின் மையமாக இருக்க வேண்டும். புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுவே இன்றியமையாத முன்நிபந்தனையாகும்.”
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளரான ஜோசப் கிஷோர், அமெரிக்க அரசியல் நிலைமை பற்றிய இரண்டாவது தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியிடப்பட்ட தன்னலக்குழு: ட்ரம்பும் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவும் (Oligarchy: Trump and the Breakdown of American Democracy) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள, ட்ரம்பின் தோற்றம் மற்றும் எழுச்சி குறித்து சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் மேற்கொண்ட பகுப்பாய்வை இந்த அறிக்கை மீளாய்வு செய்தது. “இந்தக் காங்கிரசின் முன் வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அடிப்படையாக அமைந்த பகுப்பாய்வின் ஆவணப் பதிவே இந்தப் புத்தகமாகும்,” என்று கிஷோர் கூறினார். கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பின்னர் அறிக்கை, அமெரிக்காவிற்குள் தற்போது வளர்ந்து வரும் தீவிரமயமாக்கலைப் பற்றி ஆராய்ந்தது. “தாங்க முடியாத வாழ்க்கைச் செலவுகள், முடிவில்லாத போர், ICE-இன் (அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு) படுகொலைகள் மற்றும் வெளிப்படையாகக் கட்டமைக்கப்பட்டு வரும் சர்வாதிகாரம் ஆகியவற்றின் தாக்குதல்களால், மில்லியன் கணக்கான மக்கள் அரசியல் வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதோடு இடது நோக்கியும் நகர்கிறார்கள்; இந்த இயக்கத்தையே ஜனநாயகக் கட்சி நசுக்கவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முயல்கிறது.”
இந்த இயக்கத்தின் மூலம் ஆரம்பகட்ட அரசியல் ஆதாயமடைந்த அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) என்பது, “கிட்டத்தட்ட 90 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தின் அடிப்படையில் 44 ஆண்டுகளாக இயங்கிவரும் ஒரு அமைப்பாகும்; இதன் ஒவ்வொரு கட்டமும் மார்க்சிசத்திலிருந்தும் தொழிலாள வர்க்கத்திலிருந்தும் முறித்துக் கொள்வதாலேயே வரையறுக்கப்பட்டது”—1940-இல் மாக்ஸ் ஷாக்ட்மன் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து முறித்துக் கொண்டதில் இருந்து, ஜனநாயகக் கட்சிக்குள்ளான மைக்கேல் ஹாரிங்டனின் “மறுசீரமைப்பு” திட்டம் வழியாக, 1982-இல் DSA-ஐ உருவாக்கிய இணைப்பு வரை இது நீடிக்கிறது. “DSA என்பது ஒரு தொழிலாள வர்க்க அமைப்பு அல்ல,” என்று கிஷோர் கூறினார். “இரண்டு குட்டி முதலாளித்துவப் போக்குகளில் இருந்து உருவான இக்கட்சி, இன்று தொழில்முறை நடுத்தர வர்க்கத்தின் வசதிமிக்க அடுக்குகளையே சார்ந்து இயங்குவதுடன், அரசியல் அமைப்பிற்குள் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மாறாக ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவர்களைக் கட்டுப்படுத்தி நிர்வகிப்பதே இதன் பணியாகும்.”
“தற்போது சோசலிசத்தை நோக்கி நகர்ந்து வரும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஒரு உண்மையான புரட்சிகர முன்னோக்கிற்கு வென்றெடுப்பதே கட்சியின் பணி,” என்று கூறி கிஷோர் தனது உரையை முடித்தார்.
எரிக் லண்டன், புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பைப் பற்றிய மூன்றாவது தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். முழு மக்கள் தொகையின் ஜனநாயக உரிமைகளையும் தகர்ப்பதற்கான ஒரு கருவியாகக் குடியேற்றப் பிரச்சினையைப் பயன்படுத்தி, சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான தனது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஒரு நிர்வாகத்தை அவரது அறிக்கை ஆவணப்படுத்தியது.
“அமெரிக்க ‘ஜனநாயகத்தின்’ எஞ்சியிருக்கும் பகுதிகள் நம் கண் முன்னேயே சிதைந்து கொண்டிருக்கின்றன,” என்று லண்டன் கூறினார். “அரசியல் ஸ்தாபனத்தின் எந்தவொரு நிறுவனமும் ட்ரம்பைத் தடுக்கவில்லை.” மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, இரு கட்சிகளுமே இப்போது மக்களுக்கு எதிராகத் திருப்பப்படும் இந்த அரசு எந்திரத்தைக் கட்டியெழுப்பின. இந்த நிர்வாகம், “வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்ட அளவிலான ஒரு சமூக மோதலை உருவாக்கி வருகிறது; அதற்குக் கட்சியும் தொழிலாள வர்க்கமும் அரசியல் ரீதியாகத் தயாராக இருக்க வேண்டும்,” என்று அவ்வறிக்கை நிறைவுற்றது.
டாம் ஹால், ஒவ்வொரு கண்டத்திலும் தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ந்து வருவதை ஆவணப்படுத்தும் நான்காவது தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். வேலைநிறுத்த எதிர்ப்புப் பெருநிறுவனக் காவல் படையாகச் செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியமைப்பதை இத்தீர்மானம் முன்வைக்கிறது. இக்கூட்டணியின் நோக்கம், “தற்போதுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீது செல்வாக்குச் செலுத்துவது அல்ல; மாறாக அவர்களுக்கு எதிராகச் சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியைத் திரட்டுவதேயாகும்.”
ஹால் தனது உரையை நிறைவு செய்கையில் இவ்வாறு கூறினார்: “நனவான காரணியே தீர்க்கமானதாக இருக்கும். புறநிலை நெருக்கடி தானாகவே தீர்க்கப்படும் என்றோ, அல்லது நிகழ்வுகளைக் கவனிப்பதோடும் அவை நடந்து முடிந்த பிறகு அவற்றைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதோடும் நமது பாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றோ கருதுவது ஒரு தீவிரமான அரசியல் பிழையாக இருக்கும்.”
ஈவன் பிளேக், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த கட்சியின் அணுகுமுறை பற்றிய ஐந்தாவது தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். தொழில்நுட்பம் தொடர்பான மார்க்சிச அணுகுமுறையின் அடிப்படையிலேயே தனது பகுப்பாய்வை அமைத்திருந்த இவ்வறிக்கை, AI இன் பிற்போக்குத்தனமான பயன்பாடுகள் எதுவும் “தொழில்நுட்பத்திலிருந்தே வருவதில்லை; மாறாக அது உருவாக்கப்படும் சமூக உறவுகளான தனியார் உடைமை, இலாப அமைப்புமுறை மற்றும் உலகைப் போட்டியிடும் தேசிய-அரசுகளாகப் பிரித்து வைத்திருக்கும் நிலை ஆகியவற்றிலிருந்தே உருவாகிறது,” என்று விளக்கியது.
இதன் அடிப்படையில், போலி-இடதுகளிடையே பரப்பப்படும் AI மீதான விரோதப் போக்கை அந்த அறிக்கை நிராகரித்தது. “AI-ஐ திட்டவட்டமாக நிராகரிப்பதால் ஏற்படும் நடைமுறை விளைவு, பெருநிறுவனங்களையோ அரசையோ நிராயுதபாணிகளாக்கப் போவதில்லை—ஏனெனில் அவை எவ்வாறாயினும் அதைப் பயன்படுத்தவே செய்யும்; மாறாக அது தொழிலாள வர்க்கத்தை மட்டுமே நிராயுதபாணியாக்குவதாகும்,” என்று விளக்கியது. AI மீதான விரோதப் போக்கு, “தொழில்நுட்பம் பற்றிய முழு மார்க்சிச அணுகுமுறையும் தங்கியிருக்கும் அந்த வேறுபாட்டை முற்றிலுமாக அழித்துவிடுகிறது; அதாவது ஒரு இயந்திரத்திற்கும், அது செயல்படும் சமூக ஒழுங்கிற்கும் இடையிலான வேறுபாடே அதுவாகும்,” என்று பிளேக் கூறினார். இத்தீர்மானம், தொழில்நுட்ப ஏகபோகங்களைப் பறிமுதல் செய்யவும், ஒரு திட்டமிடப்பட்ட உலகப் பொருளாதாரத்திற்குள் மனிதத் தேவைகளை நோக்கித் தொழில்நுட்பத்தை வழிநடத்தவும் கோருவதுடன், AI-சார்ந்த தானியங்கிமயமாக்கலால் ஒரு வேலைகூட இழக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது.
டிசம்பர் 2025இல் அனைத்துலகக்குழுவால் தொடங்கப்பட்ட ‘சோசலிசம் AI’ (Socialism AI) இன் முக்கியத்துவத்தை இந்த அறிக்கையும் அதைத் தொடர்ந்த விவாதமும் வலியுறுத்தின. பிளேக் குறிப்பிட்டது போல, இது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி, லக்சம்பர்க் மற்றும் பிளக்கனோவ் ஆகியோரின் படைப்புகளையும், உலக சோசலிச வலைத்தளத்தின் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால ஆவணக்காப்பகங்களையும், “எங்கும், ஒரே நேரத்தில், எந்த மொழியிலும், எந்த நேரத்திலும் போராட்டத்தில் இறங்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்கிறது.”
சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவு ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதித் தீர்மானத்தை, டாம் மக்காமன் அறிமுகப்படுத்தினார். மன்னர் மீதான பிரகடனத்தின் குற்றச்சாட்டு, “பக்கிங்ஹாம் அரண்மனையின் முன்னாள் குடியிருப்பாளருக்கு எதிராக எழுதப்பட்டது போலவே, வெள்ளை மாளிகையின் தற்போதைய குடியிருப்பாளருக்கு எதிராகவும் எழுதப்பட்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது,” என்று அவர் கூறினார்.
செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்திருக்கும் ஒரு தன்னலக்குழுவின் ஆதிக்கமானது “ஜனநாயக ஆட்சி முறைகளுக்குப் பொருந்தாதது” எனச் சுட்டிக்காட்டிய மக்காமன், அத்தகைய அமைப்பு “அமெரிக்க மற்றும் உலக வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த கருத்தான சமத்துவம் என்பதையே அழித்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது” என்று விளக்கினார்—சுதந்திரப் பிரகடனத்தின் கொள்கைகளின் மீது நிறுவப்பட்ட ஒரு குடியரசாக அமெரிக்காவைக் கருதாமல், அதனை ஒரு ஃபோல்கிஷ் (völkisch - ரத்த வழியிலான தீவிர இனவாத) இன-தேசமாக மறுவரையறை செய்துள்ள துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், இந்தச் சமத்துவ நிராகரிப்பைத்தான் பகிரங்கமாக முன்னெடுத்து வருகின்றார்.
ஆலன் கெல்ஃபாண்ட் (ஜூலை 28, 1949 – அக்டோபர் 29, 2025) அவர்களின் நினைவிற்கும், ஸ்டாலினின் ஜி.பி.யு.வால் (GPU) லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டது மற்றும் அரசு முகவர்களால் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஊடுருவப்பட்டது குறித்து அனைத்துலகக் குழு நடத்திய விசாரணையான “பாதுகாப்பும் நான்காம் அகிலமும்” பற்றிய விவாதத்திற்கும் ஒரு தனி மாலை அமர்வு அர்ப்பணிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சலஸ் பொதுப் பிரதிவாதி வழக்கறிஞரான கெல்ஃபாண்ட், சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP - Socialist Workers Party) தலைமையில் அரசு முகவர்கள் இருப்பது குறித்து விசாரணை கோரியதை அடுத்து 1979 இல் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பிந்தைய நான்கு தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில், SWP-க்குள் அரசு முகவர்கள் ஊடுருவியது தொடர்பாக கெல்ஃபாண்ட் எழுப்பிய ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஒரு புதிய தேசியக் குழுவைத் தேர்ந்தெடுத்ததுடன், டேவிட் நோர்த்தை மீண்டும் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியக் குழுவின் உறுப்பினர்கள், ஜோசப் கிஷோரை தேசியச் செயலாளராகவும், கேத்லீன் மார்ட்டினை உதவி தேசியச் செயலாளராகவும், பாரி கிரே மற்றும் ஆண்ட்ரே டேமன் ஆகியோரை உலக சோசலிச வலைத் தளத்தின் இணை தேசிய ஆசிரியர்களாகவும் மீண்டும் தேர்ந்தெடுத்தனர்.
இந்த காங்கிரஸ் அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்றில் ஒரு நிகழ்வு மட்டுமே அல்ல. இது சர்வதேசத் தன்மை கொண்டதாகவும் இருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளினதும் ஆதரவுக் குழுக்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கு பெற்றனர்.
பிரித்தானியாவின் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியச் செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன்; பிரான்சின் PES-இன் தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்டியர்; இலங்கையின் SEP-இன் பொதுச் செயலாளர் தீபால் ஜெயசேகர; ஆஸ்திரேலியாவின் SEP-இன் தேசியச் செயலாளர் செரில் கிரிஸ்ப்; நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் டாம் பீட்டர்ஸ்; துருக்கியின் SEP-இன் தேசியத் தலைவர் உலாஸ் அடேஷி; பிரேசிலின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் தோமாஸ் காஸ்தான்ஹேரா; கனடாவின் SEP-இன் தேசியச் செயலாளர் கீத் ஜோன்ஸ்; மற்றும் ஜெர்மனியின் SGP-இன் தலைவர் கிறிஸ்டோஃப் வான்ட்ரியர் ஆகியோர் உரையாற்றினர். முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் உள்ள போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிடமிருந்தும் (Young Guard of Bolshevik-Leninists) இக்காங்கிரஸுக்கு வாழ்த்துகள் வரப்பெற்றன.
இந்த வாழ்த்துகளும் அறிக்கைகளும் வெறும் நடைமுறைசார்ந்த விவகாரங்கள் அல்ல; மாறாக, ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்களை விவாதங்களுக்குக் கொண்டுவந்த அரசியல் பங்களிப்புகளாகும்.
நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானங்கள் வெறும் அமெரிக்கச் சூழல்களில் இருந்து மட்டுமே உருவானவை அல்ல; மாறாக, உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலின் பகுப்பாய்வில் இருந்தே உருவாகியுள்ளன. இதில் அமெரிக்காவில் நிலவும் நெருக்கடியானது, அவ்வுலக அரசியல் சூழலின் ஒரு குறிப்பிட்ட மற்றும் செறிவூட்டப்பட்ட வெளிப்பாடாகும். சோசலிச சமத்துவக் கட்சியின் பணியானது, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைத் கட்டியமைப்பது எனும் ஒற்றைச் சர்வதேசப் போராட்டத்தின் ஒரு தேசியக் கூறுபாடாகும்.
ஒரு உண்மையான மார்க்சிச பகுப்பாய்வும் புரட்சிகரமான முன்னோக்கும் எத்தகையவை என்பதை இக்காங்கிரசின் ஆவணங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. தீவிரமடைந்து வரும் உலகப் போர், அமெரிக்காவில் வெளிப்படையாக நிறுவப்பட்டு வரும் சர்வாதிகாரம் மற்றும் நவீன வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத சமூக நெருக்கடி ஆகியவற்றுக்கு மத்தியில், தற்போதைய சூழலை ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதற்கோ அல்லது அதற்குத் தீர்வு காணும் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்கோ வேறு எந்தக் கட்சியோ அல்லது அமைப்போ திறன் கொண்டிருக்கவில்லை. தற்போதைய முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தந்திரோபாயங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, உலக சோசலிசப் புரட்சி எனும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிராக அணிதிரட்டுவதற்கான முன்னோக்கையே இக்காங்கிரஸ் விரிவாக முன்வைத்தது.
ஒன்பதாவது தேசிய காங்கிரசின் அறிக்கைகள், தீர்மானங்கள் மற்றும் விவாதப் பங்களிப்புகள் வரவிருக்கும் நாட்களில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படும். பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் கல்வியில் இவை முக்கியப் பங்கு வகிப்பதோடு, இப்போது வெடித்துவரும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கம் தம்மை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டியப் பகுப்பாய்வையும் வேலைத்திட்டத்தையும் இவை வழங்குகின்றன.
போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் குறித்துத் தீவிரமாக இருக்கும் ஒவ்வொருவரும்—ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தைத் தேடும் ஒவ்வொருவரும்—இந்த ஆவணங்களைப் படித்து, அவற்றிலிருந்து பெறப்படும் முடிவுகளை எடுத்துச் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையத் தீர்மானிக்க வேண்டும்.
