உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கிற்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகால சிறைத்தண்டனைக்கு எதிராக உலகளவில் எதிர்ப்பு அதிகரிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜான் ரீடின் "உலகை உலுக்கிய பத்து நாட்கள்" நூலின் பழைய சோவியத் பதிப்பில் உள்ள லியோன் டிராட்ஸ்கியின் புகைப்படத்துடன் போக்டான் சிரோடியுக், ஏப்ரல் 2023.

ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்கள் போருக்கு எதிராக ஐக்கியப்பட வேண்டும் என்றும், நாஜி ஒத்துழைப்பாளர்களை அதிகாரபூர்வமாகப் போற்றுவதற்கு எதிராகவும் எழுதியதற்காக “தேசத்துரோகக் குற்றம்” சுமத்தப்பட்டு, உக்ரேனிய நீதிமன்றத்தால் 27 வயது சோசலிஸ்ட்டான போக்டன் சிரோடியுக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

நான்கு கண்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொது அறிவுஜீவிகள், போக்டனை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர் அல்லது தீர்ப்பை வழங்கிய பெர்வோமைஸ்க் நகர மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிர்ப்புக் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

கடந்த சில நாட்களில், உலகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கானோர் போக்டனை விடுதலை செய்யக் கோரும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அது வெளியிடப்பட்டதிலிருந்து இதுவரை 5,700க்கும் அதிகமான கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்டதற்குப் பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, இலங்கை, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, அயர்லாந்து, பின்லாந்து, துருக்கி, பெல்ஜியம், சுவீடன், போர்த்துக்கல், இந்தியா, சீனா, தைவான், போலந்து, நோர்வே, டென்மார்க், தென் கொரியா, ருமேனியா, நெதர்லாந்து, லித்துவேனியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், குரோஷியா, சுவிட்சர்லாந்து, பெரு மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசுத் தரப்பு தொடுத்த வழக்கு முழுவதுமாக, ரஷ்யாவின் படையெடுப்பையும் அமெரிக்க-நேட்டோவின் பினாமிப் போரையும் எதிர்த்த போக்டனின் கட்டுரைகளயும், உலக சோசலிச வலைத் தள (WSWS) ஆசிரியர்களுடனான அவரது செய்தி தொடர்புகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. நீதிமன்றமானது போக்டன் தலைமை தாங்கிய போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் இலக்கியங்களை பறிமுதல் செய்து அழிக்கவும் உத்தரவிட்டது.

2024 ஏப்ரல் 25 அன்று, உக்ரேனின் பாதுகாப்புச் சேவை அவரைக் கைது செய்து, அவர் ஒரு ரஷ்ய முகவர் என்று அறிவித்ததிலிருந்து போக்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், அரசு ஒருபோதும் அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.

பொட்ஸ்டாமில் உள்ள சமகால வரலாற்றுக்கான லைப்னிட்ஸ் மையத்தின் கம்யூனிச வரலாற்றாசிரியரும் சிரேஷ்ட ஆய்வாளருமான மரியோ கெஸ்லர், புதன்கிழமை எதிர்ப்புக் கடிதம் ஒன்றை அனுப்பினார். “பெர்லினைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான டாக்டர் மரியோ கெஸ்லர் ஆகிய நான், திரு. போக்டன் சிரோடியுக்கிற்கு எதிராக பெர்வோமைஸ்க் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எனது கடுமையான எதிர்ப்பை இதன் மூலம் பதிவு செய்கிறேன்,” என தொடங்கும் அந்தக் கடிதத்தில் கெஸ்லர் தொடர்ந்து எழுதியதாவது:

லியோன் ட்ரொட்ஸ்கி, பாதுகாப்புக்கான மக்கள் ஆணையராக இருந்தபோது, செஞ்சேனை அமைக்கப்படுவதை உறுதி செய்தார் என்பதையும், உள்நாட்டுப் போரின்போது உக்ரேனிய யூதர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்ததே அந்தப் படைதான் என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா? 1939இல், மேற்கு உக்ரேனை ஜேர்மனிக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் பிரித்ததை ட்ரொட்ஸ்கி கடுமையாகக் கண்டித்ததோடு, (ஸ்டாலினின் சோவியத் ஒன்றியம் உட்பட) சோவியத் ஒன்றியத்தில் இருந்துசுயாதீனமான உக்ரேனை ஆதரித்தார் என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா? தன்னை ஒரு சோசலிஸ்ட் மற்றும் ட்ரொட்ஸ்கிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளும் திரு. சிரோடியுக், புட்டின் சார்பாக செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டுடன் இது எவ்வாறு பொருந்துகிறது?”

மாசசூசெட்ஸ், வோர்செஸ்டரில் உள்ள கிளார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்ட்ராஸ்லர் நாஜி இனப்படுகொலை மற்றும் இனப்படுகொலை ஆய்வுகளுக்கான மையத்தில் கற்பிக்கும் நாஜி இனப்படுகொலை குறித்த உக்ரேனிய வரலாற்றாசிரியரான மார்டா ஹவ்ரிஷ்கோ, புதன்கிழமை காலை X தளத்தில் WSWS வெளியிட்ட, நீதிமன்ற தீர்ப்பு குறித்த செய்தியை, “செலென்ஸ்கியின் கீழ் உக்ரேனில் அரசியல் ஒடுக்குமுறைகள்” என்ற தனது சொந்த தலைப்பின் கீழ் பகிர்ந்தார். சில மணி நேரங்களுக்குள் அந்தப் பதிவு 10,000க்கும் அதிகமான பார்வைகளையும் 500 “விருப்பங்களையும்” பெற்றது.

மிசோரி பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும், ஐரிஷ் குடியேற்றம் குறித்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியருமான கெர்பி மில்லர், நீதிமன்றத்திற்கு எழுதியதாவது:

“அதன் தோற்றம் எதுவாக இருந்தாலும், கொடுங்கோன்மைக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடுபவரான போக்டன் சிரோடியுக்கின் வழக்கில் அவரை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். உக்ரேனிய நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட கொடூரமான, அநீதியான மற்றும் அளவுக்கு மீறிய தண்டனையானது, உக்ரேன் “சுதந்திரம்” மற்றும் “ஜனநாயகத்திற்காக” போராடுகிறது என்ற கூற்றை கேலிக்கூத்தாக்குகிறது. நீதி மற்றும் இரக்கத்தின் அடிப்படையில் இல்லாவிட்டாலும் (அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது), குறைந்தபட்சம் உக்ரேன், அடிக்கடி குற்றம்சாட்டப்படுவது போல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாஜிமயமாக்கப்பட்ட கருவி அல்ல என்பதை உங்கள் நாட்டின் சாத்தியமான ஆதரவாளர்களுக்கு நம்ப வைப்பதற்காகவாவது, அவருக்கு உடனடியாக மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்.”

ஆஸ்திரேலியாவின் கீலோங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்துடன் இணைந்த அரசியல் பொருளாதார நிபுணரும், முதலாளித்துவ நெருக்கடியின் சகாப்தத்தில் செவ்வியல் மார்க்சியம் என்ற நூலின் ஆசிரியருமான வில்லியம் பிரிக்ஸ், போக்டன் கைது செய்யப்பட்டதிலிருந்து இந்த வழக்கைத் தான் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், “தெளிவாகவே ஒரு ‘போலி விசாரணையாக’ இருந்துவரும் இந்த வழக்கிற்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பில்” தனது குரலையும் இணைக்க விரும்புவதாகவும் எழுதினார். அவர் எழுதியதாவது:

அவரது “குற்றம்” அவர் போருக்கு உறுதியுடன் எதிராக நிற்பதுதான். இதை அவர் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரித்தார் என்று பொருள்படும் வகையில் திரித்துக் கூறியுள்ளனர். எந்த நாடு வெற்றிபெற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கவில்லை; மாறாக, தேசிய எல்லைகளைக் கடந்து உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காகவே அழைப்பு விடுத்தார். அவரது நிலைப்பாடு ஒரு கொள்கைரீதியான மார்க்சிய நிலைப்பாடாக இருப்பதோடு அதற்காக அவர் 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.”

“ஜனநாயக நடைமுறைகளே மூடப்பட்டுவிட்ட நிலையில், அதை அங்கீகரிக்கத் தவறியதாக ஒருவர் குற்றம்சாட்டப்படுவது கடினமானதாகும்,” என்று பிரிக்ஸ் மேலும் கூறினார்.

கனடாவின் ஒன்டாரியோ, செயின்ட் கேத்தரின்ஸைச் சேர்ந்த சட்ட உதவியாளரான புரூஸ் ஆலன், நீதிமன்றத்திடம் கூறியதாவது: “அவர் துன்புறுத்தப்படுவது புட்டினின் ரஷ்யாவில் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகும். நீங்கள் புட்டினை விடச் சிறந்தவர்கள் அல்ல என்பதை இது காட்டுகிறது.”

வியாழக்கிழமை, இத்தாலியின் புரட்சிகர சர்வதேசவாதப் போக்கின் வலைப்பதிவான புங்கோலோ ரொஸ்ஸோ, WSWS அறிக்கையை இத்தாலிய மொழியில் மறுபிரசுரம் செய்து, “சோசலிச சமத்துவக் கட்சியுடன் எங்களுக்கு ஆழமான வேறுபாடுகள் இருந்தபோதிலும், சர்வதேசவாதிகளாக தோழர் போக்டன் சிரோடியுக்கிற்கு முழுமையான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்துவது எங்களது அடிப்படைக் கடமையாகும்” என்று எழுதியது.

“மெல்போர்ன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுற்றுச்சூழல் வேதியியலாளராகவும் ஸ்பிரிங்களர் பொறிமுறையாளராகவும் இருக்கும் நான், பாசிச ஆதரவு பெற்ற செலென்ஸ்கி ஆட்சியால் போக்டன் சிரோடியுக்கிற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கோருகிறேன்” என்று ஸ்டீவன் பொல்லக் செவ்வாயன்று மனுவில் எழுதினார்.

“ஒருவருக்கு ஏற்படும் காயம் அனைவருக்கும் ஏற்படும் காயமாகும்!” என்று கனடாவைச் சேர்ந்த டேனியல் பெர்க்லி புதன்கிழமை எழுதினார்.

“பத்திரிகைச் சுதந்திரத்தைப் பயன்படுத்தியதற்காக ஒருவரை (15 ஆண்டுகளுக்கு!!!) சிறையில் அடைப்பது பாசிசத்தனமானது” என்று புதன்கிழமை இரவு எழுதிய பிரான்ஸைச் சேர்ந்த யெலேனா பைஷான்ஸ்கி, “பாசிசத்துடனான ஒப்பீடுகளுக்காக” அவர் தண்டிக்கப்பட்டிருப்பது “நம்பமுடியாத அளவுக்கு முரண்பாடானது” என்றும் குறிப்பிட்டார்.

வியாழக்கிழமை காலை டென்மார்க்கைச் சேர்ந்த ஸ்டீபன் பார்சன்ஸ் எழுதியதாவது: “போக்டன் சிரோடியுக்கிற்கு எதிராக விதிக்கப்பட்ட கொடூரமான தண்டனையானது சோசலிச சர்வதேசவாதத்தின் மீதும், போருக்கு எதிரான போராட்டத்தில் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைப்பதற்கான போராட்டத்தின் மீதும் மேற்கொள்ளப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இது முதலாம் உலகப் போரின்போது ஜேர்மன் அதிகாரிகளால் ரோசா லுக்செம்பேர்க் சிறையில் அடைக்கப்பட்டதுடன் ஒப்பிடத்தக்கதாகும். லுக்செம்பேர்க்கின் தலைவிதியைப் போலவே, இந்தத் தண்டனையும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்தப் போர் நடத்தப்படுகிறது என்ற பேச்சை ஒரு கேலிக்கூத்தாக்குகிறது.”

தீர்ப்பு வழங்கப்பட்ட நாளான திங்கட்கிழமை, மிச்சிகன் டுடே இதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியரான ஜோன் வுட்ஃபோர்ட் மனுவில் பின்வருமாறு எழுதினார்: “ரஷ்யாவின் காவலில் உள்ள ஒரு உக்ரேனியர் குறித்து அமெரிக்காவில் நாங்கள் தொடர்ந்து படிக்க முடிகிறது. ஆனால், தங்கள் நாட்டின் தலைவர்களை எதிர்த்து அவர்களை பகிரங்கமாகக் கண்டிப்பதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட அல்லது அதைவிட மோசமான நிலைக்கு உள்ளாக்கப்பட்ட சிரோடியுக் மற்றும் ஏனைய உக்ரேனியர்கள் குறித்து எமது செய்தி ஊடகங்கள் கிட்டத்தட்ட எதுவும் தெரிவிப்பதில்லை...”

தொழிலாளர்கள், இளைஞர்கள், தொழிலறிஞர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களும் ஆங்கிலம், ஜேர்மன், துருக்கி, போர்த்துக்கீசியம், ஸ்பானிஷ் மற்றும் ஏனைய மொழிகளில் எழுதியுள்ளனர். சுவிட்சர்லாந்தின் பேர்னைச் சேர்ந்த ஒருவர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்: தீர்ப்பை இரத்துச் செய்து போக்டனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அவரது வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் துரிதப்படுத்தி பரிசீலிக்க வேண்டும்; உக்ரேனிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். போர்ட்டோவைச் சேர்ந்த ஒருவர் போர்த்துக்கீசிய மொழியில் எழுதியதாவது: போக்டன் தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாவிட்டால், “அப்போது உக்ரேனிய அமைப்பு ஒரு ஒடுக்குமுறை மற்றும் பாசிச அமைப்பாகும்.” ஜேர்மனியில் உள்ள துருக்கிய மொழி பேசும் ஒருவர், கடுமையாக நோய்வாய்ப்பட்ட கைதிக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவது “இந்தத் தண்டனையை நடைமுறையில் ஒரு மரண தண்டனையாக மாற்றுகிறது” என்று எழுதினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், போக்டனை விடுதலை செய்வதுடன் மட்டுமல்லாமல், அவரது சொத்துக்களை மீட்டளித்து, தவறாகச் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டுகளுக்கான இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்று கோரினார். சிலருக்கு, இந்த வழக்கு அவர்களுக்குக் கூறப்பட்ட அனைத்தின் மீதான நம்பிக்கையையே உலுக்கியுள்ளது: அயர்லாந்தின் கவுண்டி விக்லோவைச் சேர்ந்த ஒருவர், “இது ஏன் என்று என்னைச் சிந்திக்க வைக்கிறது” என்று எழுதினார். “உக்ரேனில் நடைபெறும் இந்தப் போர் குறித்து முழு உண்மையும் எங்களுக்குக் கூறப்படவில்லை என்று இது என்னை உணரச் செய்கிறது.” இலங்கையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, “இலங்கையின் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் தற்போது எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையின் தன்மை, இது உக்ரேனுக்கு மட்டுமே மட்டுப்பட்ட ஒரு நிலைமை அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இதுதான் உலகம் முழுவதும் நிலவும் நிலைமை” என்று எழுதினார்.

மேற்கத்திய பத்திரிகைகளின் மௌனத்திற்கு மத்தியில் இந்தக் கடிதங்களும் கையெழுத்துக்களும் தொடர்ந்து குவிந்து வருகின்றன. போக்டன் கைது செய்யப்பட்டு 27 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பின்வரும் எந்தவொரு வெளியீடும் அவரது வழக்கு குறித்து ஒரு வரியைக்கூட வெளியிடவில்லை: நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், கார்டியன், டெலிகிராப், டைம்ஸ் ஆஃப் லண்டன், எகனாமிஸ்ட், பிபிசி, சிஎன்என், என்பிசி, ஏபிசி, சிபிஎஸ், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் பொலிட்டிகோ. அதேபோல் செய்தி நிறுவனங்களான ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ், அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ராய்ட்டர்ஸும் அவரது வழக்கு குறித்து செய்தி வெளியிடவில்லை.

தண்டனை வழங்கப்பட்ட நாளன்று, செப்டம்பர் மாத பாராளுமன்றத் தேர்தலில் யப்லோகோ கட்சி போட்டியிடுவதற்கு ரஷ்ய உச்ச நீதிமன்றம் விதித்த தடையைப் பற்றி வாஷிங்டன் போஸ்ட் இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது; ஆனால் போக்டன் குறித்து அது ஒருபோதும் ஒரு வார்த்தைகூட வெளியிடவில்லை. WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், போக்டனின் வழக்கு குறித்து செய்தி வெளியிடுமாறு கோரி, நியூயோர்க் டைம்ஸ் சர்வதேச ஆசிரியர் பிலிப் பானுக்கு செவ்வாயன்று கடிதம் எழுதினார். இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து போக்டனின் தரப்புக்கு மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது. அவரைத் தடுத்து வைத்திருப்பது தொடர்பான புகார் ஒன்று 2025 வசந்த காலத்திலிருந்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

போக்டனின் வழக்கு தொடர்பான அறிக்கைகளை சக தொழிலாளர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில், அத்துடன் சமூக ஊடகங்களிலும் முடிந்தவரை பரவலாகப் பரப்புமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போர் அனைவருக்கும் WSWS அழைப்பு விடுத்துள்ளது.

தீர்ப்பை இரத்துச் செய்து போக்டனை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் அறிக்கைகளை பெர்வோமைஸ்க் நகர மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்புங்கள்: inbox@pm.mk.court.gov.ua. அதன் பிரதிகளை உலக சோசலிச வலைத் தளத்துக்கு freebogdan@wsws.org என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

Loading