இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
போருக்கு எதிராக ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்ததற்காக, ஆகஸ்ட் 10, திங்கட்கிழமையன்று, உக்ரேனிலுள்ள பெர்வோமாய்ஸ்க் [Pervomaisk] நகர நீதிமன்றம் ஒன்று, உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை இராணுவச் சட்டத்தின் கீழ் தேசத்துரோகக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து, அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்புக்கான எதிர்வினை குறிப்பிடத்தக்க அளவிலும் பரவலாகவும் இருந்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து, உக்ரேன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 500 பேர் போக்டானின் விடுதலைக்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளனர் அல்லது எதிர்ப்புக் கடிதங்களை எழுதியுள்ளனர்; இந்த மனுவில் இப்போது 6,000க்கும் மேற்பட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன. வரலாற்றாசிரியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்தத் தண்டனைத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த எதிர்வினையானது அமெரிக்காவின் முக்கிய ஊடக நிறுவனங்களின், குறிப்பாக நியூயோர்க் டைம்ஸின், மௌனத்திற்கு முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. 2024 ஏப்ரல் 25 அன்று அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது குறித்தோ, அல்லது ஆகஸ்ட் 10 அன்று அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்தோ, போக்டானின் வழக்கு பற்றி டைம்ஸ் ஒருபோதும் செய்தி வெளியிட்டதில்லை.
டைம்ஸ் பத்திரிகையால் தனக்கு எதுவும் தெரியாது என்று சாக்குச் சொல்ல முடியாது. ஆகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமையன்று, உலக சோசலிச வலைத்தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச ஆசிரியரான பிலிப் பானுக்குக் கடிதம் எழுதி, இந்த வழக்கு குறித்து செய்தி வெளியிடுமாறு அப்பத்திரிகையைக் கேட்டுக்கொண்டார். போக்டானுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதே நாளில், “நாட்டின் ஒரே போர் எதிர்ப்புக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை ரஷ்ய நீதிமன்றம் தடை விதிக்கிறது” என்ற தலைப்பில் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்ததை நோர்த் சுட்டிக்காட்டினார். 2022ல் வெளியிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவுக்காக யாப்லோகோ கட்சியின் துணைத் தலைவரான மக்சிம் க்ருக்லோவிற்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத்தண்டனையை அச்செய்தி குறிப்பிட்டிருந்தது; ஆனால் அதேவேளையில், அதைவிட இரு மடங்குக்கும் அதிகமான தண்டனை விதிக்கப்பட்ட ஒரு உக்ரேனியரைப் பற்றி அப்பத்திரிகை எதுவும் வெளியிடவில்லை.
“ரஷ்யாவில் போர்-எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகள் அடக்கியொடுக்கப்படுவது விரிவான செய்தியாக்கத்திற்குத் தகுதியானது என்றால்—நிச்சயமாக அது தகுதியானதுதான்—அப்படியானால், போர்-எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிடுவது உட்பட்ட நடவடிக்கைகளுக்காக ஒரு உக்ரேனிய சோசலிஸ்ட் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதும் அதற்குக் குறையாத தீவிரமான கவனத்திற்கு உரியது,” என்று நோர்த் எழுதினார்.
டைம்ஸ் பதில் அளிக்கவில்லை. போக்டானுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, “ரஷ்யாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உக்ரேனியர் ‘நசுக்கும்’ அச்சத்தை உணர்கிறார்” என்ற தலைப்பில், ஒன்பது நிமிட ஒலிப்பதிப்புடன், ஒரு முதற்பக்கக் கட்டுரையை அது வெளியிட்டது. 2023 மார்ச் மாதம் ஆக்கிரமிக்கப்பட்ட மெலிட்டோபோலில் [Melitopol] கைது செய்யப்பட்டு, பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு ரஷ்ய நீதிமன்றத்தால் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு உக்ரேனிய வங்கி ஊழியரான ஆர்ட்டெம் முர்திட் பற்றி அது செய்தி வெளியிடுகிறது.
கீவ், பேர்லின் மற்றும் மாஸ்கோ ஆகிய இடங்களில் இருந்து நான்கு செய்தியாளர்கள் இந்தச் செய்திக்காகப் பணியாற்றினர். போக்டன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிகோலேவ் பிராந்தியத்திலிருந்து ஒரு நாள் வாகனப் பயணத் தூரத்தில் உள்ள கீவ் நகரில், அதாவது உக்ரேனுக்குள்ளேயே, டைம்ஸ் பத்திரிகை நிருபர்களைக் கொண்டுள்ளது.
முர்திட்டின் சித்திரவதை வாக்குமூலத்தை அது “சரிபார்க்க இயலாதது” என்று தனது சொந்த வார்த்தைகளிலேயே ஒப்புக்கொண்டபோதிலும், அது “டஜன் கணக்கான வாக்குமூலங்களுடன் ஒத்துப்போவதால்” வெளியிடுவது நியாயமானது என்று சாக்குக் கூறி, டைம்ஸ் அதை அச்சிட்டது. ஆனால் போக்டானி்ன் வழக்குக்கு அத்தகைய எந்த நியாயப்படுத்தலும் தேவையில்லை: தீர்ப்பு ஒரு பொது ஆவணமாகும், நிபுணர் அறிக்கைகள் காகிதத்தில் உள்ளன, அவர் மீதான தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்குச் சான்றாகக் காட்டப்பட்ட WSWS கட்டுரைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டவை; அவற்றை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். போக்டன் சிரோட்டியூக்கிற்கு டைம்ஸ் ஒரு வரியைக் கூட ஒதுக்கவில்லை.
முர்திட் அறிக்கை, உக்ரேனியக் குடிமக்களை ரஷ்யா சிறையிலடைப்பதை ரஷ்ய அரசின் இயல்பைக் காட்டும் சான்றாக முன்வைக்கிறது. அவர்களில், “உக்ரேன் ஆதரவுப் பாடல்களைப் பாடியதற்காக, சமூக ஊடகங்களில் உக்ரேன் ஆதரவுக் கருத்துகளைப் பதிவிட்டதற்காக அல்லது உக்ரேனிய வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர்” என்று டைம்ஸ் எழுதுகிறது. இருப்பினும், அதே பத்திரிகை உக்ரேனிய அரசின் இயல்பை மறைக்கிறது. அந்த அரசு போர்-எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்டதற்காக தனது சொந்தக் குடிமக்களையே சிறையிலடைக்கிறது; ஏப்ரல் 2025-ல் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. குழுவால் நெரிசல் மிகுந்தவை என்றும், உணவு-நீர் பற்றாக்குறை உள்ளவை என்றும் கண்டறியப்பட்ட சிறைகளில் அவர்களை அடைத்து வைக்கிறது; மேலும் தேர்தல்கள் இன்றி இராணுவச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்கிறது.
போர் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ரஷ்யக் காவலில் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட சுமார் 2,600 உக்ரேனியக் குடிமக்களை டைம்ஸ் அறிக்கை கணக்கிடுகிறது; அவர்களில், “ஏறத்தாழ 900” பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது அல்லது அவர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர் என்று, மனித உரிமைகளுக்கான ஊடக முன்னெடுப்பை மேற்கோள் காட்டி, அது கூறுகிறது. இருப்பினும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின்படி, போர் தொடங்கியதிலிருந்து உக்ரேனின் தேசத்துரோகம் மற்றும் ஒத்துழைப்புச் சட்டங்களின் கீழ் சுமார் 20,000 குற்றவியல் வழக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. “நம்பகமான பதிவேட்டுப் பத்திரிகையின்” வாசகர்கள் எதை அறிய அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த இரு எண்ணிக்கைகளும் அளவிடுகின்றன. போர்க்கால வழக்குத்தொடரலின் ஒரு எண்ணிக்கை முதற்பக்கத்தில் வைக்கப்படுகிறது, அதேவேளையில் மற்றொன்று மௌனமாகக் கடந்து செல்லப்படுகிறது.
ரஷ்யாவில் நடக்கும் அரசியல் ஒடுக்குமுறை குறித்த டைம்ஸின் செய்தியாக்கம் மிக விரிவானதாக உள்ளது. ரஷ்யச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உக்ரேனியர்கள் குறித்து அப்பத்திரிகை தொடர்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ளது—”ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் மூர்க்கமான ரஷ்ய ஒடுக்குமுறை பற்றி உக்ரேனியர்கள் கூறுகின்றனர்” (அக்டோபர் 30, 2024), “ரஷ்யாவின் புதிய குலாக்கில் [Gulag] சிக்கியுள்ள உக்ரேனியர்கள்” (நவம்பர் 29, 2025) மற்றும் இப்போது முர்திட் பற்றியும்—மேலும் போரை விமர்சித்ததற்காகச் சிறையிலடைக்கப்பட்ட ரஷ்யர்கள் குறித்தும் வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமையன்று, தடை செய்யப்பட்ட யாப்லோகோ கட்சி குறித்து, “வாக்குச்சீட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஒரு கட்சி, ரஷ்யர்களின் அதிருப்திக்கான கலனாக மாறுகிறது” என்ற தலைப்பில், ஒரே வாரத்தில் தனது இரண்டாவது செய்தியை அது வெளியிட்டது.
நான்கரை ஆண்டுகாலப் போரில், உக்ரேனின் சிறைகளின் நிலைமைகள் குறித்தோ அல்லது உக்ரேனிய குடிமக்களின் அரசியல் கருத்துகளுக்காக அவர்கள் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோக வழக்குத்தொடரல்கள் குறித்தோ டைம்ஸ் எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை. மாறாக, “ உக்ரேனியர்கள் தங்களது ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடுவதைப் போலவே கடுமையாக அமெரிக்கர்களும் தங்களது ஜனநாயகத்திற்காகப் போராட வேண்டும்” என்று, 2025 செப்டம்பர் 23 அன்று தாமஸ் ஃபிரீட்மேனின் தலைப்பு கூறியதைப் போல, அதன் கட்டுரையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த இரட்டை நிலைப்பாடு, ரஷ்யாவை அரக்கத்தனமாகச் சித்திரிப்பதையும், ரஷ்ய “எதேச்சாதிகாரத்திற்கு” எதிரான ஜனநாயகத்தின் கோட்டையாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சர்வாதிகாரத்தை முன்னிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் போர்ப் பிரச்சாரக் கொள்கையாகும். போக்டானி்ன் வழக்கு அந்தக் கதையாடலை வெடித்துச் சிதறடிப்பதால், டைம்ஸால் அவ்வழக்கை செய்தியாக்க முடியாது.
2016 முதல், ஜனநாயகக் கட்சியையும் உளவுத்துறை நிறுவனங்களையும் மையமாகக் கொண்ட அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் பிரதான ஊடகமாக டைம்ஸ் இருந்து வருகிறது. இந்தப் பிரிவு, ரஷ்யாவுடனான மோதலை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மையக் குறிக்கோளாக ஆக்கியுள்ளது. 2016 தேர்தலில் 2016 தேர்தலில் “ரஷ்யத் தலையீடு” குறித்த அதன் பிரச்சாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வலதுசாரிக் கண்ணோட்டத்தில் தாக்கி, அவர் மாஸ்கோவிற்குப் போதிய பகைமை காட்டவில்லை என்று சுட்டிக்காட்டியதுடன், உக்ரேனில் போருக்கான பொதுக் கருத்தையும் ஆயத்தப்படுத்தியது. 2022 பிப்ரவரி முதல், போர் ஆதரவுப் பிரச்சாரத்திற்கு டைம்ஸ் முன்னணி வகித்து வருகிறது.
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா இன்னும் ஆழமாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தும் உளவுத்துறை மற்றும் இராணுவ ஸ்தாபகத்தின் கணிசமான பிரிவுகளின் பத்திரிகைத்துறைக் கொடிக்கப்பலாக அது உள்ளது. அந்த வட்டங்ககளுக்கு அப்பால், ரஷ்யா மீதான பகைமையை ஒரு நம்பிக்கைப் பிரமாணமாகக் கொண்டுள்ள உயர்-நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளுக்காக டைம்ஸும் ஜனநாயகக் கட்சியும் பேசுகின்றன.
உளவுத்துறை நிறுவனங்களுடனான டைம்ஸின் உறவு பல தசாப்தங்களுக்கு முந்தையது. 1977 அக்டோபரில், டைம்ஸின் வெளியீட்டாளர் ஆர்தர் ஹேஸ் சல்ஸ்பெர்கர் “1950களில் CIA-வுடன் ஒரு இரகசியப் பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்” என்றும், ஒரு CIA அதிகாரியின் கூற்றுப்படி அந்தப் பத்திரிகை CIA ஊழியர்களுக்கு மறைப்பு அளித்தது என்றும், கார்ல் பேர்ன்ஸ்டைன் ரோலிங் ஸ்டோனில் செய்தி வெளியிட்டார்.
போக்டன் மீதான ஒடுக்குமுறை குறித்த டைம்ஸின் மௌனம், இந்தப் பாத்திரத்திற்கு முற்றிலும் இணக்கமானதே. ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்துவதற்குப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட போர்ப் பிரச்சாரத்தை வழங்குவதே அதன் இலக்கு.
இந்தத் தீவிரப்படுத்தல் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மாஸ்கோ மேயர் செர்கீ சொபியானின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய இரவில் உக்ரேன் மாஸ்கோ மீது சுமார் 600 ட்ரோன்களை ஏவியது; அதே இரவில் ரஷ்ய ஏவுகணைகளும் ட்ரோன்களும் கீவைத் தாக்கின. ரஷ்ய படையெடுப்பை நிராகரித்து, உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தபடி, அமெரிக்க-நேட்டோ போரை எதிர்த்ததற்காகவே போக்டன் சிறையிலடைக்கப்பட்டார்.
நியூயோர்க் டைம்ஸின் மௌனத்திலிருந்தும், அது எவற்றுக்காகப் பேசுகிறதோ அந்த ஜனநாயகக் கட்சிப் பிரிவுகளின் மௌனத்திலிருந்தும் தொழிலாளர்கள் பாடங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ரஷ்யாவுடனான போரில் உக்ரேனின் இளைஞர்களை பீரங்கித் தீனியாகப் பயன்படுத்துகின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு முழுமையாக அர்ப்பணித்திருக்கும் இவர்கள், கருத்துச் சுதந்திரம் உட்பட மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளைக் கூடப் பாதுகாக்கும் எந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டனர்.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், உலகப் போரை எதிர்க்கவும் விரும்பும் தொழிலாளர்களும் இளைஞர்களும், அரசியல் ஸ்தாபகத்தின் எந்த அணியிலிருந்தும் அதன் பெருநிறுவன ஊடக ஊதுகுழல்களிலிருந்தும் சுதந்திரமாக அணிதிரள வேண்டும். போக்டானைப் பாதுகாக்கும் பணியும், உக்ரேனிலும் மற்றெல்லா இடங்களிலும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பணியும், தொழிலாள வர்க்கத்தின் மீதே விழுகிறது.
போக்டானி்ன் வழக்கறிஞர் தரப்பு மேல்முறையீடு செய்வதற்கு செப்டம்பர் 9 வரை காலக்கெடு உள்ளது; அதேவேளை, 2025 வசந்த காலத்தில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் அவரது தடுப்புக்காவலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
wsws.org/freebogdan என்ற முகவரியில் தங்களது பெயர்களைச் சேர்க்குமாறு உலக சோசலிச வலைத்தளம் தனது வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறது. தண்டனை ரத்து செய்யப்பட்டு போக்டன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி, பெர்வோமாய்ஸ்க் நகர மாவட்ட நீதிமன்றத்திற்கு inbox@pm.mk.court.gov.ua என்ற முகவரிக்கும், நிகோலேவ் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு inbox@mka.court.gov.ua என்ற முகவரிக்கும் கடிதம் எழுதுங்கள்; அத்துடன் அக்கடிதத்தின் நகலை freebogdan@wsws.org என்ற முகவரிக்கும் அனுப்புங்கள்.
