சோசலிச சமத்துவக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸிற்கான அறிக்கை

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் குறித்த ஒரு மதிப்பீடும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் வழங்கிய, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் தொடக்க அறிக்கையை இங்கு வெளியிடுகிறோம். இந்தக் காங்கிரஸ் 2026 ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது. ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட “சோசலிச சமத்துவக் கட்சியும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும்” என்ற முதல் தீர்மானத்தை இந்த அறிக்கை அறிமுகப்படுத்தியது.

ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

1. சோசலிச சமத்துவக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸ், அமெரிக்கா மற்றும் உலக அரசியல் வரலாற்றின் ஒரு தீர்க்கமான திருப்புமுனையில் —அதாவது போர், பொருளாதார நெருக்கடி, மற்றும் வேகமாக வளர்ந்துவரும் சமூக தீவிரமயமாதல் ஆகியவை சந்திக்கும் புள்ளியில்— கூடுகிறது. “அதிர்ச்சி மற்றும் அச்சமூட்டும்” வகையிலான கொடூரமான குண்டுவீச்சு மூலோபாயத்தின் அடிப்படையில் மூன்றரை தசாப்தங்களாகக் கட்டியெழுப்பப்பட்டிருந்த அமெரிக்காவின் தோற்கடிக்க முடியாத சக்தி என்ற மாயத் தோற்றம் இப்போது தகர்க்கப்பட்டுள்ளது.

2. ஒரு நெறிமுறையற்ற குண்டரால் தன்னலக்குழுவின் நலன்கள் நன்கு பேணப்படும் என்ற நம்பிக்கையில் ஆளும் வர்க்கம் ட்ரம்பை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது. அமெரிக்க அரசியல் குறித்த மிக முக்கியமான சமகால நூலான தன்னலக்குழு: ட்ரம்பும் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவும் (Oligarchy: Trump and the Breakdown of American Democracy) எனும் நூலின் முன்னுரை பின்வரும் கேள்வியை எழுப்புகிறது:

எந்த வகையான சமூக மற்றும் பொருளாதார செயல்முறைகளின் சேர்க்கை இப்படிப்பட்ட ஒரு மனிதனை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது? முந்தைய அமெரிக்க அரசியல்வாதிகள் எவரின் அரசியல் வாழ்வையும் முற்றிலுமாக அழித்திருக்கக்கூடிய ஒரு தசாப்த கால ஊழல்கள் மற்றும் குற்றங்கள் மத்தியிலும், ட்ரம்ப்பைத் தொடர்ந்து நிலைநிறுத்தியது எது? எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமாக, யாருடைய நலனுக்காக அவர் ஆட்சி செய்கிறார்?

கடைசிக் கேள்விக்கான பதிலில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. அமெரிக்காவை ஆட்சி செய்ய வந்துள்ள பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுக்களின் அரசியல் கருவியே ட்ரம்ப் ஆவார். இது மனித வரலாற்றில் ஈடு இணையற்ற அளவில் செல்வத்தைக் குவித்து வைத்துள்ள ஒரு நிதிப் பிரபுத்துவம் ஆகும். மேலும் இது, தன் அத்தியாவசிய நலன்களின் அடிப்படையில், ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குச் சமரசம் செய்ய முடியாத பகைமை கொண்டதாகும்.

3. அமெரிக்க ஒன்றியத்தையே அழித்துவிடும் அபாயத்தை ஏற்படுத்திய அடிமைமுறை ஆட்சியை தோற்கடிப்பதற்கான போராட்டத்தில், அப்போது இளமையாக இருந்த அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம், இலினொய் மாநிலத்தின் ஸ்பிரிங்பீல்ட் எனும் புல்வெளிப் பிரதேச நகரத்தில் ஒரு ஆபிரகாம் லிங்கனைக் கண்டெடுத்து அவரை வெள்ளை மாளிகையில் அமர்த்த முடிந்தது. 1930-களில் நிலவிய பெரும் பொருளாதார மந்தநிலையின்போது, அப்போது இன்னும் எழுச்சிபெற்றுக்கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால், பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டைப் போன்ற தரம் வாய்ந்த ஒரு அரசியல்வாதியை உருவாக்க முடிந்தது. ஆனால் இன்றோ, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சீரழிவு என்பது, ஸ்கோர்செசி (Scorsese) திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தைப் போன்ற தோற்றமும் தன்மையும் கொண்ட ஒரு ஜனாதிபதியின் வடிவில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் வெளிப்படுகிறது.

4. ஆனால் நியூ யோர்க் ரியல் எஸ்டேட் மற்றும் அட்லாண்டிக் நகர சூதாட்ட விடுதிகளின் பாதாள உலகில் ட்ரம்ப் பெற்ற அனுபவம், ஈரானுக்கு எதிரான தனது குற்றகரமான போரின் பேரழிவுகரமான விளைவுகளுக்கு அவரைத் தயார்படுத்தவில்லை. திசைதடுமாறி நம்பகத்தன்மையை இழந்திருப்பது ட்ரம்ப் நிர்வாகம் மட்டுமல்ல. இது இரு கட்சிகளின் ஆதரவையும் பெற்ற ஒரு போராகும். ஜனநாயகக் கட்சி ஆரம்பக்கட்ட குண்டுவீச்சையும் ஈரானிய அரசாங்கத்தின் தலைமையை அகற்றுவதையும் வரவேற்றது. முப்பத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்திவந்த மூலோபாயம் —வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் இழிபுகழ்பெற்ற சொற்றொடரான “பலம் பலனளிக்கும்” என்பதில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது— துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசுகிறார். அப்போது, ​​வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (இடதுபுறம்) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத் (வலதுபுறம்) ஆகியோர் கூட இருக்கின்றனர். [AP Photo/Julia Demaree Nikhinson]

5. ஈரான் பேரழிவு, ஒட்டுமொத்த அமெரிக்க மற்றும் சர்வதேச அரசியல் அமைப்புமுறையிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும். ஆரம்பக்கட்ட பொருளாதார மற்றும் அரசியல் அதிர்வுகள் ஏற்கனவே உணரப்பட்டு வருகின்றன. இதன் உடனடி விளைவுகளில் ஒன்று, முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய சமூக அமைப்புமுறையின் அழுகிய தன்மையை வெளிப்படுத்தியதாகும்—அதன் இருகட்சி முறைமை, பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள், ஊழல் நிறைந்த உயர்கல்வித் துறை, அதிகாரத்துவ தொழற்சங்க அமைப்புகள், அடையாள அரசியலில் மூழ்கிய வசதி படைத்த போலி இடதுகள் மற்றும் அறிவுப்பூர்வமாகச் சீரழிந்த கலாச்சாரம் ஆகியவற்றின் அழுகலை இது அம்பலப்படுத்தியுள்ளது.

6. இந்தப் போர், பரந்த செயற்பாடுகளுடன் தொடர்பற்ற, தனிமைப்பட்ட ஒரு நிகழ்வல்ல. இராணுவத் தோல்வி, சமூக தீவிரமயமாக்கல் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஒன்றிணைவு ஒரு விபத்தோ அல்லது எதிர்பாராத அதிர்ச்சியோ அல்ல. இது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் விளைவாகும், மேலும் இது ட்ரோட்ஸ்கிச இயக்கத்தால் முன்னரே கணிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. எனவே, இந்தக் காங்கிரஸின் பணி, கட்சியின் பணியை வழிநடத்துகின்ற முன்னோக்கைப் பரிசீலிப்பதில் இருந்து தொடங்க வேண்டும்.

I. சோசலிசப் புரட்சியின் தசாப்தம்

7. 2020 ஜனவரி 3 அன்று, உலக சோசலிச வலைத் தளம் தனது புத்தாண்டு அறிக்கையான “சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது” என்பதை வெளியிட்டது. இது வெளியாகி ஆறரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்காட்டியைச் சுட்டிக்காட்டுவதை மட்டுமே முழு முறையியலாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட வகை விமர்சனத்தை இந்த அறிக்கை ஈர்த்துள்ளது. உலகில் எங்குமே இன்னும் தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்படவில்லை. ஆனால், இந்த வாதமானது அந்த ஆவணத்தில் உண்மையில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு வாக்கியத்தைக்கூடக் கையாளவில்லை.

8. இந்த வகை விமர்சனம், ஜோன் கெல்லியின் உலக ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம்  (The Twilight of World Trotskyism) எனும் நூலில் தனது மிக விரிவான கல்விப்புல வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் அழிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரு வரலாற்று எச்சம் என்ற ஆய்வறிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நூலில், உலக சோசலிச வலைத் தளத்தின் 2020 முன்னோக்கு தனிப்படுத்திக் கண்டனம் செய்யப்பட்டுள்ளது கெல்லி பின்வருமாறு எழுதுகிறார்:

மரபுவழி ட்ரொட்ஸ்கிச அமைப்புகள், அவற்றின் கோட்பாட்டுவாதத்திற்குள் முடங்கிக்கொண்டு, உண்மையான அனுபவவாத விசாரணை அல்லது தத்துவார்த்தக் கண்டுபிடிப்புகளுக்கு விரோதமானவையாகவும், இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியின் சுலோகங்கள் மற்றும் கொள்கைகளை என்றென்றும் திரும்பத் திரும்பக் கூறும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. இந்த சிந்தனைகளும் இந்தச் சிந்தனைகள் மட்டுமே, உலகெங்கிலும் முதலாளித்துவ அதிகாரத்தின் மீதான லெனினிச-பாணியிலான தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கும் வெகுஜன புரட்சிகரக் கட்சிகளாக தங்களை உடனடியாக உருமாறுவதற்கான திறவுகோலைக் கொண்டுள்ளன என்று அவை உறுதியாக நம்புகின்றன.[2]

9. இந்தப் பத்தியானது, நவ-ஸ்ராலினிசத்தின், மற்றும் கல்விப்புலத்தில் தழைத்தோங்கும் அதனுடன் தொடர்புடைய குட்டி-முதலாளித்துவ அரசியல் வடிவங்களின், அறிவார்ந்த மற்றும் அரசியல் திவால்நிலையை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டின் ஒவ்வொரு கூறுகளும் யதார்த்தத்தைத் தலைகீழாக்குகின்றன. கெல்லி “கோட்பாட்டுவாதம்” என்று ஏளனம் செய்வது உண்மையில், மார்க்சிசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பாதுகாப்பதையே ஆகும். ஏனெனில், இதன் தத்துவார்த்த அடித்தளத்தின் மீது மட்டுமே ஒரு அறிவியல் பூர்வமான முன்கணிப்பை வழங்க முடியும். அவர் தனக்காகக் கோரும் “அனுபவவாத விசாரணை”, 1945க்குப் பிறகான உலக முதலாளித்துவத்தின் மிகப் பெரிய நெருக்கடி வெடிக்கவிருந்த முந்தைய தருணத்திலேயே, ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமக் காலத்தைப் அறிவிக்கும் ஒரு நூலை உருவாக்கியது.

10. கெல்லியால் ஏளனம் செய்யப்படும் “முழக்கங்களும் கொள்கைகளும்” ஏகாதிபத்திய சகாப்தத்தில் சோசலிசப் புரட்சிக்கான மூலோபாயத்தின் தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட அடித்தளங்களை அமைக்கின்றன. கெல்லி ஆட்சேபிக்கும் அந்த “கோட்பாட்டுவாதத்திற்கு” சில உதாரணங்களை மேற்கோள் காட்டுவோம்:

தற்போதைய போர் அடிப்படையில், தேசம் மற்றும் அரசு என்ற அரசியல் வடிவத்திற்கு எதிராக உற்பத்தி சக்திகள் நடத்தும் ஒரு கிளர்ச்சியாகும்... இந்தப் போரின் உண்மையான, புறநிலை முக்கியத்துவம் என்பது தற்போதைய தேசியப் பொருளாதார மையங்களின் சிதைவும், அதற்குப் பதிலாக ஒரு உலகப் பொருளாதாரம் பிரதியீடு செய்யப்படுவதுமே ஆகும். ஆனால், ஏகாதிபத்தியத்தின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கங்கள் முன்மொழியும் வழியானது, மனிதகுலத்தின் அனைத்து உற்பத்தியாளர்களின் அறிவார்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட ஒத்துழைப்பின் மூலம் அல்ல. மாறாக, வெற்றிபெற்ற நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தால் உலகப் பொருளாதார அமைப்புமுறை சுரண்டப்படுவதன் மூலமே ஆகும்... [ட்ரொட்ஸ்கி, போரும் அகிலமும், 1915]

ஏகாதிபத்தியம் என்பது ஒட்டுண்ணித் தனமான அல்லது அழுகிவரும் முதலாளித்துவம் என்ற உண்மையானது, முதலாவதாக உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமை அமைப்பின் கீழ் உள்ள ஒவ்வொரு ஏகபோகத்திற்கும் உரித்தான அழுகும் போக்கில் வெளிப்படுகிறது. ஜனநாயகக் குடியரசுவாத மற்றும் பிற்போக்குத்தனமான-முடியாட்சிவாத ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கு இடையே உள்ள வேறுபாடு துடைத்தெறியப்படுகிறது. ஏனெனில் அவை இரண்டுமே உயிருடன் அழுகிக் கொண்டிருக்கின்றன... எல்லாத் தளங்களிலும் நிலவும் அரசியல் பிற்போக்குத்தன்மை என்பது ஏகாதிபத்தியத்தின் ஒரு தனிச்சிறப்புப் பண்பாகும். [லெனின், ஏகாதிபத்தியமும் சோசலிச இயக்கத்தில் பிளவும், 1916]

11. கடந்த நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளின் துல்லியமான கால எல்லையைச் சில ஆண்டுகள் கடந்து சென்று, கெல்லியின் ஆட்சேபனைகள்  இருந்தபோதிலும் புரட்சிகர மூலோபாயத்தின் இன்றியமையாத அடித்தளங்களாக நிலைத்திருக்கும் அந்த “கோட்பாட்டுவாதத்திற்கு” உதாரணங்களாக விளங்கும் இன்னும் சில பத்திகளை நான் மேற்கோள் காட்டுகிறேன்:

ஏகாதிபத்திய சகாப்தமாகிய எமது சகாப்தத்தில், அதாவது நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின்  கீழுள்ள உலகப் பொருளாதாரமும் உலக அரசியலும் இயங்கும் சூழலில், எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும் தனது சொந்த நாட்டில் உள்ள நிலைமைகள் மற்றும் வளர்ச்சிப் போக்குகளிலிருந்து மட்டுமே அல்லது முதன்மையாக அவற்றிலிருந்து தொடங்கி தனது வேலைத்திட்டத்தை நிறுவ முடியாது…

சர்வதேச வேலைத்திட்டமானது, உலகப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியல் அமைப்புமுறை ஆகியவற்றின் நிலைமைகள் மற்றும் போக்குகளை — அவற்றின் அனைத்துத் தொடர்புகள் மற்றும் முரண்பாடுகளுடனும் மற்றும் அவற்றின் தனித்தனிப் பகுதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையுடனும் — முழுமையாகப் பகுப்பாய்வு செய்வதிலிருந்து நேரடியாகத் தொடங்கப்பட வேண்டும். தற்போதைய சகாப்தத்தில், கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஒரு உலக நோக்குநிலையிலிருந்து மட்டுமே ஊற்றெடுக்க  வேண்டும், ஊற்றெடுக்க  முடியும்; அதற்கு நேர்மாறாக அல்ல. கம்யூனிச சர்வதேசியவாதத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையான மற்றும் முதன்மையான வேறுபாடு இங்குதான் உள்ளது. [ட்ரொட்ஸ்கி, கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டத்தின் மீதான விமர்சனம், 1928]

நெருக்கடிக் காலத்தில், அமெரிக்காவின் மேலாதிக்கம், செழிப்புக் காலத்தைவிட மிக முழுமையாகவும், மிக வெளிப்படையாகவும், மிகவும் இரக்கமின்றியும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பா என எங்கு நிகழ்ந்தாலும் சரி, அல்லது அது அமைதியான முறையிலோ அல்லது போரின் மூலமோ நடந்தாலும் சரி, அமெரிக்கா தனது சிரமங்களையும் நோய்களையும் கடந்து, முதன்மையாக ஐரோப்பாவின் இழப்பிலேயே தன்னை விடுவித்துக்கொள்ள முயலும். [ட்ரொட்ஸ்கி, கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டத்தின் மீதான விமர்சனம், 1928]

சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்குகிறது, சர்வதேச அரங்கில் விரிவடைகிறது, உலக அரங்கில் நிறைவடைகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது, இச்சொல்லின் புதிய மற்றும் பரந்த பொருளில் ஒரு நிரந்தரப் புரட்சியாக மாறுகிறது; எமது முழுப் பூமியிலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில் மட்டுமே அது நிறைவை அடைகிறது. [ட்ரொட்ஸ்கி, “நிரந்தரப் புரட்சி என்றால் என்ன”, 1930]

தேசிய பாதுகாப்பைப் பற்றிப் போதிக்கும் ஒரு “சோசலிஸ்ட்”, சிதைந்து கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்குச் சேவகம் செய்யும் ஒரு குட்டி-முதலாளித்துவப் பிற்போக்குவாதியே ஆவார். போர்க் காலத்தில் தன்னைத் தேசிய அரசுடன் பிணைத்துக்கொள்ளாமல் இருப்பதும், போர் வரைபடத்தையல்ல மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தைப் பின்பற்றுவதும், அமைதிக் காலத்தில் தேசிய அரசுக்கு எதிராக ஏற்கனவே சமரசமற்ற போரை அறிவித்துவிட்ட அந்தக் கட்சிக்கு மட்டுமே சாத்தியமாகும். ஏகாதிபத்திய அரசின் புறநிலை ரீதியான பிற்போக்கான பாத்திரத்தை முழுமையாக உணர்வதன் மூலம் மட்டுமே, பாட்டாளி வர்க்க முன்னணி அனைத்து வகையான சமூக தேசபக்தியாலும் பாதிக்கப்படாததாக மாற முடியும். இதன் பொருள், “தேசிய பாதுகாப்பு” எனும் சித்தாந்தத்திலிருந்தும் கொள்கையிலிருந்தும் உண்மையான முறிவு என்பது, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நிலைப்பாட்டிலிருந்து மட்டுமே சாத்தியமாகும். [ட்ரொட்ஸ்கி, போரும் நான்காம் அகிலமும், 1934]

1920 மே மாதம் லெனின் ஒரு கூட்டத்தினரிடம் உரையாற்றுகிறார், மேடைக்கு அருகில் ட்ரொட்ஸ்கி நிற்கிறார்.

12. இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியிலும் முதல் மூன்றிலொரு பங்கிலும் உருவான இந்தக் கருத்தாக்கங்கள், இருபத்தோராம் நூற்றாண்டின் தீர்க்கமான இந்த இரண்டாவது காற்பகுதியை நாம் தொடங்கும்போது, மார்க்சிச மூலோபாயத்தின் அடித்தளமாகத் தொடர்கின்றன. தொண்ணூறு ஆண்டுகளாக ட்ரொட்ஸ்கிசம் மறைந்துவிடும் என்று முன்னறிவித்துக்கொண்டே, முதலில் தனது உறுப்பினர்களையும் பின்னர் தன்னையுமே அழித்துக்கொண்ட ஸ்டாலினிச இயக்கத்தின் வழியே செல்லும் அரசியல் வம்சாவளியைக் கொண்ட கெல்லி, எந்தப் போக்கின் முன்னோக்கை நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளனவோ, அந்தப் போக்கிற்கே இரங்கற் குறிப்பு எழுதுகிறார். ஆனால், ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாட்டுவாதத்திற்கு அவர் முன்வைக்கும் மாற்றீட்டை உரிய கவனத்துடன் கருத்தில் கொள்ளாமல், திரு. கெல்லியை நாம் கண்டிக்கக் கூடாது. அவர் நமக்குத் தெரிவிக்கிறார்:

தொழிலாள வர்க்க அரசியலைச் சீர்திருத்தவாத சோசலிசம் அல்லது புரட்சிகர சோசலிசம் என்ற இருமுனைத் தேர்வுக்குள் முடக்குவது... ‘சமூக சீர்திருத்தம்’ எனும் மிக முக்கியமான மூன்றாவது பிரிவை விட்டுவிடுகிறது; இது முதலாளித்துவத்தின் எல்லைகளுக்குள்ளேயே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான தேடுதலாகும்.[3]

13. 1898 இல் எட்வேர்ட் பேர்ன்ஸ்டைனுக்கு ரோசா லுக்சம்பேர்க் எழுதிய பதிலான சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்பதைத் திரு. கெல்லி கவனமாக வாசித்திருக்க மாட்டார் என்று நான் சந்தேகிக்கிறேன். 2022இல் அவரது நூல் வெளியிடப்பட்டது. எனினும், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், கெல்லி தனது சமூக சீர்திருத்தப் பார்வையின் சாத்தியக்கூற்றுக்கு ஆதாரமாக லத்தீன் அமெரிக்காவைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், கடந்த நூற்றாண்டைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை, கடந்த ஐந்து ஆண்டுகளின் வரலாறாவது, லத்தீன் அமெரிக்காவில், அல்லது அந்த வகையில் ஐரோப்பாவில், அல்லது வேறெங்கேனும், கெல்லியின் முன்னோக்கை உறுதிப்படுத்தியுள்ளதா?

14. கெல்லி புரட்சியை ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பியதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில், எந்த ‘முதலாளித்துவத்தின் வரம்புகளுக்குள்’ அமைதியாக மேம்பாடுகள் தேடப்பட வேண்டியிருந்தனவோ, அந்த வரம்புகள் தமது உண்மையான உள்ளடக்கத்தை வெளிப்படுத்திவிட்டன: சிக்கன நடவடிக்கை, சர்வாதிகாரம், போர் ஆகியவற்றின் வரம்புகள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை மிகவும் சிலிர்க்க வைத்த, அவர் கனவுகண்ட அந்த ஜனநாயகமயமாக்கப்பட்ட லத்தீன் அமெரிக்கா இப்போது, லிமாவில் ஒரு புஜிமோரியாலும், சாண்டியாகோவில் ஒரு பினோச்சே ஆதரவாளராலும், புவெனஸ் அயர்ஸில் சங்கிலி ரம்பம் ஏந்தி இராணுவச் சதிக்குழுவைப் போற்றும் ஒருவராலும், மேலும் காரகஸில், அமெரிக்கக் கமாண்டோக்கள் ஒரு நாட்டுத் தலைவரைக் கடத்திச்சென்று அந்த நாட்டின் எண்ணெயை வோல் ஸ்ட்ரீட்டிடம் ஒப்படைத்த பிறகு அமர்த்தப்பட்ட ஒரு பதில் அரசாங்கத்தாலும் தலைமை தாங்கப்படுகிறது.

15. “சமூக சீர்திருத்தத்தின்” மாதிரிகளாக அவர் முன்வைத்த சமூக ஜனநாயகக் கட்சிகள், ஐரோப்பாவை மறு ஆயுதபாணியாக்கிக்கொண்டும், முதலாளித்துவம் சீர்திருத்தத்திற்கான ஆற்றல் கொண்டது என்பதற்குச் சான்றாக எந்த நலன்புரி அரசின் கட்டளைகளையும் சட்டங்களையும் அவர் விவரப்பட்டியலிட்டாரோ, அந்த நலன்புரி அரசில் எஞ்சியிருப்பதைச் சிதைத்துக்கொண்டும் இருக்கின்றன. ஒருபோதும் அடையமுடியாத ஒரு வேலைத்திட்டத்தை ட்ரொட்ஸ்கிசம் வீணாக முன்னெடுக்கிறது என்று கெல்லி கூறுகிறார்.

16. முதலாளித்துவ ஜனநாயகத்தின் நிலைத்தன்மை, உலகப் போரின் சாத்தியமின்மை, புரட்சிகர சகாப்தம் தீர்ந்துவிட்டது என்பது என, ஒவ்வொரு முன்முடிவும் நிகழ்வுகளால் மறுக்கப்பட்டுவிட்ட ஒரு முன்னோக்கையே கெல்லி முன்வைக்கிறார் என்று மிக அதிக நியாயத்துடன் நாம் பதிலளிக்கலாம். அந்த அந்திமப் பொழுது, நான்காம் அகிலத்தின் மீதல்ல, மாறாக அதன் இரங்கற் குறிப்பை எழுதியவர்களின் மாயைகளின் மீதே இறங்கியுள்ளது என்பது தெரியவருகிறது.

17. 2020-ஆம் ஆண்டிற்கான அறிக்கையின் தொடக்க வாக்கியம் இவ்வாறு கூறியது: “புத்தாண்டு பிறப்பானது, தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டங்கள் மற்றும் உலக சோசலிசப் புரட்சி ஆகியவற்றைக் கொண்ட ஒரு தசாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.” இதில் ‘தொடக்கத்தைக் குறிக்கிறது’ என்பதே மிக முக்கியமான சொற்றொடராகும். அந்த அறிக்கை புறநிலைச் சூழலையும் அதன் போக்கையும் விவரித்ததே தவிர, கிளர்ச்சிகளுக்கான கால அட்டவணையை வெளியிடவில்லை. இந்த தசாப்தத்தைத் தொடங்கியபோது நாம் கொண்டிருந்த முன்னோக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளின் நிகழ்வுகள் முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளன.

18. ஒன்பதாவது காங்கிரஸின் முன் வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள், இந்தத் தசாப்தத்தின் பாதியைத் தாண்டி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், உலக நிலைமையைப் பற்றிய ஒரு முறையான மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. இந்த தீர்மானங்களில் அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு அடிப்படைப் போக்கும்— ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் வெடிப்பு, உலகப் பொருளாதாரத்தின் நெருக்கடி, முதலாளித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கிய திருப்பம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் தனியார் உடைமையை அடிப்படையாகக் கொண்ட இலாப அமைப்பு முறைக்கும் இடையிலான வெடிப்புப் பூசல், பகுத்தறிவற்ற அளவிலான செல்வக் குவிப்பு மற்றும் சமூக சமத்துவமின்மை, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச தீவிரமயமாக்கல் என அத்தீர்மானங்களில் அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு அடிப்படைப் போக்குமே, 2020-ஆம் ஆண்டிற்கான முன்னோக்கில் முன்வைக்கப்பட்ட கணிப்புகளை விஞ்சும் வகையிலான வீச்சிலும் வேகத்திலும் வளர்ச்சியடைந்துள்ளன.

II. மூன்றாம் உலகப் போரின் புற்றுநோய் போன்ற பரவல்

19. 2020 ஆம் ஆண்டின் அறிக்கை, வரவிருக்கும் தசாப்தம் பற்றிய தனது பகுப்பாய்வில் மூன்றாம் உலகப் போர் அபாயத்தை மையமாகக் கொண்டிருந்தது. உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் மைய முரண்பாட்டிலேயே இந்த அபாயம் வேரூன்றியிருந்தது. அதாவது, உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி சக்திகளின் தன்மைக்கும், முதலாளித்துவம் வரலாற்று ரீதியாக வேரூன்றியுள்ள தேசிய-அரசு கட்டமைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டில், இந்த இந்த அபாயம் வேரூன்றியிருப்பதை அது சுட்டிக்காட்டியது. ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தகைய ஒரு போர் வெடிக்குமா என்பது இனி கேள்வியல்ல.

20. உலகப் போர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது; அது ஒரு புற்றுநோய் பரவலைப் போல வளர்ந்து வருகிறது: ஒரு நாள்பட்ட மற்றும் விரிவடையும் நிலையாக அது உலகெங்கும் பரவிக்கொண்டு, புதிய பிராந்தியங்களைக் காலனியாக்கிக்கொண்டு, முன்னர் தனித்தனியாக இருந்த மோதல்களை ஒன்றிணைத்துக்கொண்டு, தான் நோக்கிச் செல்லும் பொதுவான பேரழிவுத் தீக்கு அவற்றைத் தயார்படுத்தும் வகையில், உலகப் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தேசிய அரசையும் படிப்படியாக மாற்றிக்கொண்டும் இருக்கிறது. இவ்வாறு நோக்கும்போது, “மூன்றாம் உலகப் போர் நிகழுமா?” எனும் பரிச்சயமான கேள்வி, தவறாகக் கருதப்பட்ட ஒன்று என்பது வெளிப்படுகிறது.

21. 2026 மே தினத்தன்று நான் கூறியது போல், “உலகப் போர் என்பது எதிர்கால அச்சுறுத்தல் அல்ல, மாறாக தற்போது விரிந்துகொண்டிருக்கும் ஒரு யதார்த்தம்.” இது பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய, தொடர்ச்சியான ஒரு செயல்முறையாகும். இதில் போர்முனைகளின் பெருக்கம், போர்க் களங்களின் ஒன்றோடொன்று பிணைப்பு, பொருளாதார வாழ்வை இராணுவத் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்துதல், சர்வாதிகாரத்தை நோக்கி அரசு மறு ஒழுங்கமைக்கப்படுதல், மற்றும் மக்களைக் கருத்தியல் ரீதியில் தயார்படுத்துதல் ஆகியவை அடங்கியுள்ளன.

22. இந்தப் பகுப்பாய்வு இப்போது முதலாளித்துவக் கருத்தின் மிகவும் நிதானமான ஊடகங்களால் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. ஜூலை 26 அன்று, பைனான்சியல் டைம்ஸ், அதன் தலைமை வெளியுறவு விவகார வர்ணனையாளரான கிடியன் ராக்மன் எழுதிய ஒரு கட்டுரையை, “உக்ரேன், ஈரான், மற்றும் பிராந்தியப் போர்கள் எவ்வாறு உலகளாவியதாக மாறுகின்றன” எனும் தலைப்பில் வெளியிட்டது. ராக்மன் அத்தியாவசியமான உண்மைகளைத் தொகுத்து வழங்குகிறார்: 1945க்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக இரத்தக் களரியான போர்; பன்னிரண்டு நாடுகளை நேரடியாகப் போரில் இழுத்துள்ள மத்திய கிழக்குப் போர்; வட கொரியாவின் இராணுவக் கட்டமைப்பின் விரிவாக்கம் மற்றும் அமைதியான முறையில் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சியைக் கைவிடுதல்; தைவானுக்கான விநியோகப் பாதைகளைத் துண்டிப்பதற்கான சீனாவின் ஒத்திகைகள் ஆப்பிரிக்கப் போர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு இரண்டு கண்டங்களிலும் ஒன்றோடொன்று இணையத் தொடங்கியுள்ள பிராந்திய மோதல்கள்; மற்றும் அமெரிக்க மூலோபாய வகுப்பாளர்களால் “எதிரிகளின் அச்சு” என்று அழைக்கப்படும் கூட்டணியின் உருவாக்கம் ஆகியவை இதில் அடங்கும்.

உக்ரேனின் கார்க்கிவ் பிராந்தியத்தில், அமெரிக்கா வழங்கிய M777 ஹோவிட்சர் பீரங்கியைக் கொண்டு ரஷ்ய நிலைகள் மீது தாக்குதல் நடத்த உக்ரேனிய படையினர்கள் தயாராகின்றனர், ஜூலை 14, 2022. [AP Photo/Evgeniy Maloletka]

23. இரு உலகப் போர்களை வரையறுக்கும் அளவுகோல்களில் தற்போதைய மோதல்களின் தொகுப்பு “சிலவற்றை ஏற்கனவே பூர்த்திசெய்கிறது” என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். வட கொரியப் படைகளைக் களமிறக்கியதை “உலகப் போருக்கான முதல் படி” என்று ஜெலென்ஸ்கி விவரித்ததையும் அவர் மேற்கோள் காட்டி, உக்ரேன் இப்போது ஈரானியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால், “இரண்டாவது படி எடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று வாதிடலாம்” என்றும் அவர் குறிப்பிடுகிறார். 2020 ஜனவரியில், புரட்சிகர இயக்கம் முன்வைத்த கணிப்பை, ஐரோப்பிய நிதிய மூலதனத்தின் முன்னணி கட்டுரையாளர் ஒருவரும் இப்போது உறுதிப்படுத்துகிறார்.

24. காஸாவில் நடக்கும் இனப்படுகொலை, ஈரானுக்கு எதிரான போர் மற்றும் உக்ரேனில் விரிவடைந்து வரும் மோதல் ஆகிய அனைத்தும் ஒரு உலகளாவிய போரின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட போர்க் களங்கள் ஆகும்.  ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்டு ஒரு பினாமிப் போராகத் தொடங்கிய உக்ரேனிய போர், இப்போது மறுக்கமுடியாத வகையில், ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ சக்திகள் நடத்தும் அறிவிக்கப்படாத, ஆனால் மிகவும் நிஜமான ஒரு போராக உருவெடுத்துள்ளது. ரஷ்யாவின் மீதான ட்ரோன் தாக்குதல்கள், எந்த மறைப்பு முயற்சியும் இன்றி, அமெரிக்காவாலும் அதன் நேட்டோ கூட்டாளிகளாலும் இயக்கப்படுகின்றன. பைனான்சியல் டைம்ஸ் ஜூலை 29 அன்று அறிவித்தபடி, “அமெரிக்காவும் பிரான்சும் வழங்கிய உளவுத் தகவல்கள், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் நிலைகளை வரைபடமாக்கவும், அவற்றைத் தவிர்த்து ரஷ்யாவுக்கு உள்ளே ஆழமான இலக்குகளை அடைய ட்ரோன்களை அனுமதிக்கும் பாதைகளை அடையாளம் காணவும் உதவியுள்ளன.”

25. உக்ரேனின் ஆளில்லா அமைப்புப் படைகளின் தளபதி ரொபேர்ட் புரோவ்டியை மேற்கோள் காட்டி, ரஷ்யாவின் ஐரோப்பியப் பிரதேசம் இப்போது இலக்கு வைக்கப்படுகிறது என்று பைனான்சியல் டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. “எண்பது மில்லியன் மக்கள் —அதாவது ரஷ்யாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர்— நாட்டின் ஐரோப்பியப் பகுதியில், தாக்குதல் மண்டலத்திற்குள் வாழ்கின்றனர். இனி, இப்பகுதி ரஷ்யாவின் பாதுகாப்பான பின் பகுதியாகக் கருதப்படாது, இனிமேலும் அவ்வாறு கருதப்படவும் போவதில்லை.” மேலும், “அமெரிக்க மற்றும் பிரெஞ்சு உளவுத்துறைகளும் இலக்குத் தேர்வை மேம்படுத்தியுள்ளன... இதன்மூலம், உக்ரேனின் ஆழ்-தாக்குதல் ட்ரோன் குழுக்கள் எங்கு தாக்குவது என்பதைக் கற்றுக்கொள்ள’ உதவுகிறது...” என்றும் டைம்ஸ் தெரிவிக்கிறது.

26. ரஷ்யா மீதான தாக்குதல்களை நேட்டோ வழிநடத்துவதன் பேரழிவுகரமான தாக்கங்கள் வெளிப்படையானவை. நேட்டோ நாடுகளின் மீது ரஷ்யா எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “அமைதியான சகவாழ்வு” எனும் ஸ்டாலினிசப் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட முன்னாள் சோவியத் பொலிஸ் முகவரான புட்டின், தனது “மேற்கத்திய கூட்டாளிகள்” ரஷ்யாவுடன் சமரசம் செய்துகொள்வார்கள் என்ற முழு எதிர்பார்ப்புடன் தனது “சிறப்பு இராணுவ நடவடிக்கையைத்” தொடங்கியபோது, எதையும் முன்கூட்டிக் காணவில்லை. சோவியத் ஒன்றியத்தை ஸ்டாலினிசம் கலைத்தொழித்ததன் பேரழிவுகரமான விளைவுகள் குறித்து ட்ரொட்ஸ்கிச இயக்கம் எச்சரித்தது; அந்த விளைவுகளை நாம் இப்போது கண்கூடாகக் காண்கிறோம்.

27. இப்போது ஐந்து கண்டங்களிலும் பரவிவரும் உலகப் போர், இந்தச் சகாப்தத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை அதன் உச்சபட்ச மட்டத்திற்கு உயர்த்துகிறது: அதாவது, உலகளாவிய ஏகாதிபத்திய போருக்கும் உலகப் புரட்சிக்கும் இடையிலான போராட்டம்; பூமியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அடிமைப்படுத்த ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் முனைப்பிற்கும், ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்படும் இத்தகைய மறுபங்கீட்டிற்கு வழிவகுக்கும் சமூக ஒழுங்கை தூக்கியெறிய சர்வதேசத் தொழிலாள வர்க்கம் மேற்கொள்ளும் மிகவும் நனவுடனான முயற்சிக்கும் இடையிலான போராட்டம் இதுவாகும்.

III. 1991-ம் ஆண்டும் தற்போதைய போரின் தோற்றுவாயும்

28. தற்போதைய உலக மோதலானது 2022-லிருந்தோ அல்லது 2014-லிருந்தோ உருவானதல்ல. மாறாக 1990–91 காலப்பகுதியிலிருந்தே வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும், அதன் எதிர்ப்புரட்சி பரிணாம வளர்ச்சியின் இறுதிக்கட்ட நடவடிக்கையாக அமைந்த அந்த நிகழ்வும், 1917-ல் தொடங்கிய போராட்டத்தின் இறுதி வெற்றியாகவே மேற்கத்திய ஆளும் வர்க்கங்களால் வரவேற்கப்பட்டன. 'வரலாற்றின் முடிவு' என்ற பிரகடனம், அடிப்படையில் தாராளவாத ஜனநாயகம் பற்றிய ஒரு கோட்பாடு அல்ல. மாறாக, அது சோசலிசம் என்ற பூதம் இறுதியாக விரட்டியடிக்கப்பட்டுவிட்டதாகவும், அக்டோபர் புரட்சி விடுத்த சவால் உறுதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், இருபதாம் நூற்றாண்டையே இனி ரத்து செய்துவிடலாம் என்றும் அறிவிப்பதாகவே அது அமைந்திருந்தது.

29. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு ஏகாதிபத்தியம் அளித்த எதிர்வினை, அக்டோபர் புரட்சி ஒருபோதும் நிகழாதிருந்தால் உலகம் எப்படி இருந்திருக்குமோ, அப்படியே அதை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு முயற்சியைத் தவிர வேறொன்றுமில்லை: புரட்சியும் அதன் பின்னதிர்வுகளும் ஏகாதிபத்திய அமைப்பிலிருந்து அகற்றிய, அல்லது அதற்கு எதிராகப் பாதுகாத்த ஒவ்வொரு பிரதேசம், வளம் மற்றும் மக்கள்தொகையின் மீதும் மூலதனத்தின் இடைநிலையற்ற ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதும்; முதலாம் உலகப் போரில் அமெரிக்கா நுழைந்தபோது கொண்டிருந்த நோக்கத்தை, அதாவது, ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் 'புதிய உலக ஒழுங்கு' (New World Order) என்று வர்ணித்ததன் கீழ், அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தின் கீழ், முழுக் கிரகத்தையும் ஒழுங்கமைக்கும் அந்த நோக்கத்தை, எழுபத்தைந்து ஆண்டுகள் தாமதமாக நிறைவேற்றுவதும் ஆகும்.

30. இதிலிருந்து, சோவியத் யூனியனுக்குப் பிந்தைய ஏகாதிபத்தியக் கொள்கையின் இரண்டு வரையறுக்கப்பட்ட மூலோபாய உந்துதல்கள் உருவாகின. முதலாவது, முன்னாள் சோவியத் பகுதிகளையே மீண்டும் மறுபங்கீடு செய்வதாகும். சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, தொழிலாளர் அரசின் கட்டமைப்பிற்குள் இருந்த பரந்த நிலப்பரப்பு, தொழில் துறை மற்றும் வளங்களின் பாரம்பரியத்தை துண்டாடிப் பிரித்தெடுப்பதற்கான சாத்தியத்தை நேரடியாக ஏற்படுத்தியது. இது ஏகாதிபத்திய வரலாற்றிலேயே உரிமை கோரப்படாத மிகப்பெரிய பரிசாகும். அந்தத் தருணத்திலிருந்து, உலகை மறுபங்கீடு செய்வது என்பது, நடைமுறையில் முன்னாள் சோவியத் அரசின் முழுப் பகுதியையும் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதோடு பிணைக்கப்பட்டிருந்தது: அதாவது அதன் நிலம், எரிசக்தி, கனிம வளங்கள், உழைப்பு மற்றும் யூரேசியாவிற்கு நடுவே அமைந்த அதன் முக்கிய மூலோபாய அமைவிடம் ஆகியவற்றைத் தன்வசப்படுத்துவதாகும்.

31. இந்த நோக்கம் முப்பத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் கொள்கையின் மையத்தில் நிலைத்திருந்துள்ளது. இது ஏற்கனவே 1992ஆம் ஆண்டு பாதுகாப்புத் திட்டமிடல் வழிகாட்டுதலிலேயே (Defense Planning Guidance) நெறிமுறைப்படுத்தப்பட்டது. யூரேசிய நிலப்பரப்பில் எந்தவொரு புதிய போட்டியாளர் உருவாவதையும் தடுப்பதை அது அமெரிக்க மூலோபாயத்தின் முதல் நோக்கமாக வரையறுத்தது. சோவியத்துக்குப் பிந்தைய புறப்பகுதியின், எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரேனின், கட்டுப்பாட்டை உலக முதன்மைக்கான திறவுகோலாக அடையாளம் கண்ட புவிசார் அரசியல் இலக்கியத்திலும் இது வெளிப்படையாகக் கோட்பாட்டுரீதியில் முன்வைக்கப்பட்டது. நேட்டோவின் ஐந்து கட்டக் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தின் மூலம் ரஷ்யாவின் எல்லைகள் வரை இது செயல்படுத்தப்பட்டது[4]. 1945-க்குப் பிறகு ஐரோப்பாவின் முதல் போராக அமைந்து, 'மனிதாபிமான' ஏகாதிபத்திய தலையீட்டிற்கான முன்மாதிரியை வழங்கிய யுகோஸ்லாவியாவின் இராணுவ அழிவு மற்றும் பிரிவினையில் இது செயல்படுத்தப்பட்டது. மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகள் முழுவதும் வரிசையாக ஒருங்கிணைக்கப்பட்ட 'வண்ணப் புரட்சிகள்' மூலமாகவும் இது செயல்படுத்தப்பட்டது. இதன் உச்சக்கட்டமாக 2014-இல் கியேவில் நடந்த ஆட்சிமாற்றச் சதி, உக்ரேனை கிழக்கு நோக்கிய உந்துதலின் முன்தளமாக மாற்றியது.

1949 முதல் நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தைக் காட்டும் வரைபடம் [Photo by Patrickneil / CC BY-NC-SA 4.0]

32. நேட்டோவின் ஆத்திரமூட்டலுக்குப் புட்டின் ஆட்சி அளித்த எதிர்வினையின் பிற்போக்குத்தனமான தன்மை இருந்தபோதிலும், 2022இல் வெடித்த போர், இந்த ஒட்டுமொத்தப் பாதையின் உச்சக்கட்டமாகும். 'மூலோபாயத் தோல்வி', 'காலனித்துவநீக்கம்' எனும் மொழியில் மேற்கத்திய மூலோபாயச் சொல்லாடலில் இப்போது மேன்மேலும் வெளிப்படையாகக் கூறப்படும் அதன் நோக்கம், ரஷ்யக் கூட்டமைப்பை உடைத்துச் சிதறடிப்பதாகும்.

33. இரண்டாவது மூலோபாய உந்துதல், உலகின் ஏனைய பகுதிகளில் சோவியத் ஒன்றியம் என்ற எதிர் சக்தி அகற்றப்பட்டதிலிருந்து உருவானது. காலனித்துவ மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் சோவியத் ஸ்டாலினிசக் கொள்கை ஒருபோதும் உண்மையிலேயே ஏகாதிபத்திய-எதிர்ப்புத் தன்மை கொண்டதாக இருந்ததில்லை. சோவியத் ஒன்றியத்தின் மீதான ஏகாதிபத்திய அழுத்தத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு வழிமுறையாகவே, 'மூன்றாம் உலகில்' சுயநிர்ணயத்திற்கான தேசிய இயக்கங்களை கிரெம்ளின் ஆதரித்தது. சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்கு அப்பால் சோசலிசப் புரட்சியை கிரெம்ளின் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை, ஊக்குவித்ததும் இல்லை.

34. எவ்வாறாயினும், ஸ்டாலினிச வெளியுறவுக் கொள்கையின் நலன்களுக்காக கிரெம்ளின் இவற்றை எவ்வளவு சூழ்ச்சிகரமாகப் பயன்படுத்திக் கையாண்டபோதிலும், சோவியத் ஒன்றியத்தின் இருப்பு, முன்னாள் காலனித்துவ உலகில் இருந்த முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் ஒரு முழு அடுக்கிற்கும் இராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் ஓரளவு பாதுகாப்பை வழங்கியிருந்தது. இந்த ஆட்சிகளின் சூழ்ச்சித் திறனானது ஏகாதிபத்திய மற்றும் ஸ்டாலினிச முகாம்களுக்கு இடையே சமநிலையைப் பேணும் திறனையே சார்ந்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் மறைவு, அவர்கள் மீதான நேரடி ஏகாதிபத்திய வன்முறைக்கான அனைத்துத் தடைகளையும் நீக்கியது.

35. சோவியத் ஒன்றியம் கலைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தொடுக்கப்பட்ட 1990–91ன் வளைகுடாப் போர், 'முடிவில்லாப் போர்களின்' சகாப்தத்தைத் திறந்து வைத்தது. 1990 ஆகஸ்டில், அமெரிக்காவும் ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு கூட்டணியும் ஈராக்கை உடனடியாகப் படையெடுக்கவிருந்த சூழலில், வேர்க்கர்ஸ் லீக்கின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பு) ஒரு சிறப்புக் காங்கிரஸ் கூட்டப்பட்டது. அந்தக் காங்கிரஸுக்கு நான் அளித்த அறிக்கையில் பின்வருமாறு கூறினேன்:

ஈராக்குக்கு எதிரான இந்தச் சர்வதேசக் குண்டர் நடவடிக்கை, பாரசீக வளைகுடா நெருக்கடியின் வரலாற்றுச் சாரத்தின் வெளிப்பாடாகும். இது உலகை ஏகாதிபத்திய சக்திகள் புதிதாகப் பங்கிட்டுக்கொள்ளும் ஒரு காலகட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 2ம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் முடிவு என்பது காலனித்துவத்திற்குப் பிந்தைய சகாப்தத்தின் முடிவையும் குறிக்கிறது. 'சோசலிசம் தோல்வியடைந்துவிட்டது' என்று பிரகடனப்படுத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கம், இன்னும் வார்த்தைகளால் கூறாவிட்டாலும், தனது செயல்களின் மூலம் தேசியச் சுதந்திரமும் தோல்வியடைந்துவிட்டதாகப் பிரகடனப்படுத்துகிறது. அனைத்து முக்கிய ஏகாதிபத்திய சக்திகளும் எதிர்கொள்ளும் தீவிரமடைந்து வரும் நெருக்கடி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வளங்கள் மற்றும் சந்தைகளின் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ள அவற்றைக் கட்டாயப்படுத்துகிறது. ஓரளவு சுதந்திரத்தைப் பெற்றிருந்த முன்னாள் காலனிகள் மீண்டும் அடிமைப்படுத்தப்பட வேண்டும். ஈராக்குக்கு எதிரான தனது கொடூரமான தாக்குதலின் மூலம், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு நிலவியதைப் போன்ற, பின்தங்கிய நாடுகளின் மீதான கட்டுப்பாடற்ற மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டவே தான் உத்தேசித்திருப்பதாக ஏகாதிபத்தியம் எச்சரிக்கை விடுக்கிறது.[5]

பாலைவனப் புயல் நடவடிக்கையில் (Operation Desert Storm) ஈராக்கியப் படைகள் குவைத்திலிருந்து பின்வாங்கியபோது அழிக்கப்பட்ட, 'மரணத்தின் நெடுஞ்சாலை' எனப்படும் நெடுஞ்சாலை 80இல் வரிசையாகக் கிடக்கும் தகர்க்கப்பட்ட வாகனங்கள். 1991 ஏப்ரல் 8.

36. அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளும் இந்தப் பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளன. ஈராக் 1990கள் முழுவதும் நிரந்தர முற்றுகைக்கும் குண்டுவீச்சுக்கும் உள்ளாக்கப்பட்டு, 2003இல் படையெடுப்பால் அழிக்கப்பட்டது. சோமாலியா மற்றும் யூகோஸ்லாவியா மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் இருபது ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. லிபியா 2011இல் இடிபாடுகளாக்கப்பட்டது. சிரியா ஒரு தசாப்தகால பினாமிப் போரால் விழுங்கப்பட்டது. ஏமன் பட்டினிக்கு ஆளாக்கப்பட்டது; சூடான் துண்டாடப்பட்டது. இப்போது, 2026இல், ஈரான் வெளிப்படையான, வரம்பற்ற போருக்கு உட்படுத்தப்படுகிறது. பால்கனிலிருந்து இந்து குஷ் வரையிலான பரந்த பிராந்தியத்தில் நீடிக்கும் இந்த மூன்றரை தசாப்த கால இடைவிடாத போர்கள், ஒரு நீண்டகாலத் தொடர் நடவடிக்கையாக அமைந்துள்ளன: அதாவது, உலகின் மிக முக்கியமான எரிசக்தி உற்பத்திப் பகுதிகளில் ஏகாதிபத்தியத்தின் நேரடி மேலாதிக்கத்திற்கு எதிராக இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர மற்றும் காலனித்துவ-எதிர்ப்பு எழுச்சிகளால் உருவாக்கப்பட்ட தடைகள் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு நாடாகத் திட்டமிட்டு அழித்தொழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

37. ஈரானுக்கு எதிரான போர், இந்த 35 ஆண்டுகால முழுப் பாதையின் உச்சக்கட்டமாகும். இது, அதன் வரலாற்றுரீதியான கணக்குத் தீர்க்கும் தருணமாகவும் அமைகிறது. அதீத ஆணவத்திற்கு இப்போது தக்க தண்டனை (Nemesis — கிரேக்கத் தொன்மத்தில் அளவு கடந்த ஆணவத்தைத் தண்டிக்கும் தெய்வம்) கிடைத்து வருகிறது. 1991-க்குப் பிந்தைய திட்டத்தின் மிக முக்கிய நடவடிக்கையாகத் திட்டமிடப்பட்ட பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதல், பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோதே ஒரு நாட்டுத் தலைவரையும் அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்ததன் மூலம் தொடங்கப்பட்டது. அமெரிக்க இராணுவப் பலத்தின் ஒருங்கிணைந்த பிரயோகத்தை எந்த அரசாலும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை, என்றென்றைக்குமாக, நிரூபிப்பதே அதன் நோக்கமாக இருந்தது.

38. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இதன் முடிவு ஒரு மிகப்பெரிய மூலோபாயப் பின்னடைவாக அமைந்துள்ளது. ஈரான் சரணடையவில்லை. உலகின் ஐந்திலொரு பங்கு கச்சா எண்ணெய் கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணை, இன்னமும் தகராறுக்குரிய போர்க் களமாகவே உள்ளது. அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்புகள் தீர்ந்துவிட்டனழ இந்தப் பிராந்தியத்திலுள்ள படைத் தளக் கட்டமைப்பு தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியாத ஒரு 'மூலோபாய முட்டுச்சந்தை' அடைந்துவிட்டதாக, வாஷிங்டனின் சொந்த மூலோபாய ஆய்வாளர்களே இப்போது ஒப்புக்கொள்கின்றனர். தற்போதைய முட்டுச்சந்திலிருந்து தப்பிப்பதற்கு, ஈரான மீதான படையெடுப்பு உட்பட மேலும் போரை தீவிரப்படுத்துவதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகம் வழிதேட முயலாது என்று இந்த மதிப்பீட்டிற்குப் பொருள் கொள்ளக்கூடாது. ஆனால், அத்தகைய மிகக் கொடூரமான பொறுப்பற்ற நடவடிக்கை, இந்த பேரழிவின் அளவை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதிக்கு அருகே ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் காணப்படுகின்றன, செவ்வாய்க்கிழமை, 2026 ஜூன் 30. [AP Photo/Amirhosein Khorgooi]

39. படையெடுப்பு இல்லாமலேயே, இந்தப் பேரழிவின் முக்கியத்துவம் பாரசீக வளைகுடாவைத் தாண்டி வெகுதூரம் விரிகிறது. 1991 முதல் அமெரிக்கக் கொள்கையை வழிநடத்திய நம்பிக்கை — இராணுவ பலத்தின் கட்டுப்பாடற்ற பிரயோகத்தின் மூலம் உலகின் மீது ஓர் அமெரிக்க அமைதியை திணிக்க முடியும் என்ற நம்பிக்கை — ஒரு மாயை என அம்பலமாகியுள்ளது. முந்தைய தொடர் போர்களுக்கு இரையானவை தனிமைப்படுத்தப்பட்ட, வறிய நிலையில் உள்ள மற்றும் இராணுவ ரீதியாகப் பலவீனமான நாடுகளாகும். அத்தகைய நாடுகளுக்கு எதிராக மூன்று மற்றும் அரை தசாப்தங்களாக நடத்தப்பட்ட போர்கள் கூட ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கவில்லை, மாறாக இடிபாடுகளையே எஞ்சின. ஆனால் 90 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஈரானுக்கு எதிராக, அந்தச் சூத்திரம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. ஆயினும், இந்த மாயை, தனது பொருளாதார நிலையின் நீடித்த வீழ்ச்சியை இராணுவ வழிமுறைகள் மூலம் தலைகீழாக்க முயன்ற ஒரு ஆளும் வர்க்கத்தின் கருத்தியல் எதிர்வினையேயாகும். துல்லியமாக இந்தக் காரணத்தினாலேயே, வளைகுடாவில் ஏற்பட்ட இந்த மூலோபாயப் பின்னடைவானது, பின்வாங்கலை ஏற்படுத்தாமல், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக இயக்கப்படும் மேலும் வெறித்தனமான தீவிரப்படுத்தலையே உருவாக்கும்— அதாவது, இந்த அறிக்கை எந்த உலகப் போரின் முனையை ஆய்வு செய்கிறதோ, அதன் விரிவாக்கத்தையே உருவாக்கும்.

40. அமெரிக்கா புதிய ஏகாதிபத்தியச் சிலுவைப்போரை வழிநடத்துகிறது. ஆனால் அது ஒருபோதும் அமெரிக்காவின் தனி முயற்சியாக இருந்ததில்லை. 1990 அறிக்கை குறிப்பிட்டதுபோல்,

'பழைய உலகின்' ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள், காலனித்துவ பாணியிலான மேலாதிக்கத்தை மீட்டெடுக்க புஷ் வழங்கியுள்ள வாய்ப்பை வரவேற்கின்றனர். அமெரிக்கத் தலையீடு, உலகைப் புதிதாக மறுபங்கிடுவதன் தொடக்கமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு ஏகாதிபத்திய அரசும், ஈராக்கிய மத விரோதிக்கு எதிரான இன்றைய சிலுவைப்போரில் பங்கேற்க இத்தனை ஆர்வமாக உள்ளன. மிகத் தொய்ந்துபோன வயதான அயோக்கியர்கள்கூட, தங்கள் தொப்பை வயிறுகளை உள்ளிழுத்துக்கொண்டு, பல தசாப்தங்களாகக் கிடங்கில் போட்டு வைக்கப்பட்டிருந்த ஏகாதிபத்திய சீருடைகளை மீண்டும் அணிய முற்படுகின்றனர்.[7]

41. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவுடன் தீவிரமடைந்துவரும் மோதல் இதே வரலாற்றுத் தொகுதியைச் சேர்ந்ததாகும். சீனா அமெரிக்காவின் சக்திவாய்ந்த பொருளாதாரப் போட்டியாளராக மாறியுள்ளது. இதை வாஷிங்டனால் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், சீனாவின் பிரம்மாண்டமான பொருளாதார வளர்ச்சியை அதன் புரட்சிகர வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது என்ற உண்மை, இந்தப் பதட்டத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது. அக்டோபர் புரட்சியால் (1917) தொடங்கப்பட்ட காலகட்டத்தின் விளைவாக அமைந்த 1949-ஆம் ஆண்டு சீனப் புரட்சி, ஒரு நூற்றாண்டு கால ஏகாதிபத்தியச் சிதைவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்நிய மூலதனத்தை வெளியேற்றியதுடன் நாட்டை ஒருங்கிணைத்தது. மாவோயிசத்தின் கீழ் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் 1978-இல் தொடங்கப்பட்ட முதலாளித்துவ மீட்சி ஆகியவற்றைக் கடந்து பார்த்தாலும், அக்டோபர் புரட்சியால் தூண்டப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியிலேயே வேர்களைக் கொண்ட ஒரு அரசை அது உருவாக்கியது. அதன் வளர்ச்சித் திறன் என்பது அந்தப் புரட்சியின் நேரடி மரபுரிமையாகும்.

42. சீனாவில் அமெரிக்காவின் கொள்கையானது, அங்கு முதலாளித்துவம் மீண்டும் நிறுவப்படுவதை, மலிவான உழைப்பின் எல்லையற்ற களஞ்சியத்தை உள்ளடக்குவதாகக் கருதி ஆரம்பத்தில் வரவேற்றது. அந்த ஒருங்கிணைப்பு அடிபணிதலுக்கு வழிவகுக்கும்; இறுதியாக—ஏகாதிபத்தியப் பொருளாதார அழுத்தம் மற்றும் மொழி, இனம், தேசிய மோதல்களைத் தூண்டுதல் ஆகியவற்றின் கலவையின் மூலம்— சீனாவின் சிதைவுக்கு வழிவகுக்கும் என்று அது கருதியது.

மக்கள் சீனக் குடியரசை மாவோ பிரகடனப்படுத்துகிறார், 1949

43. கடந்த பதினைந்து ஆண்டுகளின் முழு மூலோபாய நோக்குநிலையும், அதாவது 'திசைமாற்றம்', வர்த்தகப் போர், தொழில்நுட்ப முற்றுகை, குவாட் (Quad) முதல் ஆகஸ் (AUKUS) வரையிலான கூட்டணிகளின் வலைப்பின்னல் ஆகியவை, இந்தக் கருதுகோள் தோல்வியடைந்துவிட்டது என்ற கண்டறிதலாலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீன முதலாளித்துவ அரசு தனக்கு ஒதுக்கப்பட்ட கீழ்நிலைப் பாத்திரத்தை ஏற்க மறுத்துவிட்டது. எனவே, அதன் பொருளாதார எழுச்சியானது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பதைத் தொடர்ந்து உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்பிற்கு ஒரு சந்தை வாய்ப்பாக இல்லாமல், ஒரு போட்டியாளரான முதலாளித்துவ சவாலாகவே வாஷிங்டனுக்கு முன் நிற்கிறது.

44. தேசியவாதத்தில் ஊறிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அரசியல் பாதை அடிப்படையில் பிற்போக்கானது என்ற உண்மையை இது மாற்றாது. 'சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம்' என்பது சொற்களிலேயே ஒரு முரண்பாடாகும். அதன் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், சீனாவின் தலைவிதி என்பது சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் முடிவாலேயே தீர்மானிக்கப்படும். அதில், ஆளும் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான சீனத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மகத்தான பங்கை வகிக்கும். முதலாளித்துவ தன்னலக்குழுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, சீனாவிலேயே ஒரு உண்மையான தொழிலாளர் அரசை நிறுவும் ஒரு சமூகப் புரட்சி இல்லாமல், சீனாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவுடனான ஒரு பேரழிவுகரமான போருக்குத் தவிர்க்கவியலாமல் இட்டுச்செல்லும்.

45. தற்போதைய நிலைமையின் மிகக் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான போர் தவிர்க்கமுடியாதது என்றும், அதற்குத் தயாராவதே அரசு நிர்வாகத்தின் பணி என்றும் பிரதான ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் தங்களின் நம்பிக்கையை இனி ரகசியமாக வைக்கவில்லை என்பதாகும். பனிப்போரின் உச்சக்கட்டத்தில், அவர்களின் தயாரிப்புகளின் உண்மைத்தன்மை எதுவாக இருந்தாலும், பிரதான நாடுகளின் தலைவர்கள் போரைத் தடுப்பது பற்றியே பகிரங்கமாகப் பேசினர். ஜூன் 1963 இல் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கென்னடி, அணு ஆயுத யுகத்தில் 'முழுமையான போர் என்பது அர்த்தமற்றது' என்று தனது பார்வையாளர்களிடம் கூறினார். அமைதி என்பது 'சிந்தனைத் திறன் கொண்ட மனிதர்களின் அவசியமான மற்றும் பகுத்தறிவு சார்ந்த இலக்கு' என்றும் பிரகடனப்படுத்தினார்.

46. கென்னடியின் புகழ்பெற்ற உரை, அவரது சொந்தக் கொள்கைகளே கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு வழிவகுத்து ஓராண்டுக்குள்ளாகவும், அவரது படுகொலைக்கு வெறும் ஐந்து மாதங்களுக்கு முன்னருமாக நிகழ்த்தப்பட்டது. அக்டோபர் 1962 இல் அணு ஆயுத போரின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டதால், அத்தகைய முடிவு 'அர்த்தமற்றது' என்ற அவரது பிரகடனத்தில் ஒருவேளை அவர் நேர்மையாக இருந்திருக்கலாம். ஆனால் கென்னடியின் முடிவில் இருந்த அடிப்படைக் குறைபாடு என்னவென்றால், ஏகாதிபத்தியமானது மனித உயிர்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தருமநெறி சார்ந்த பகுத்தறிவால் நிர்வகிக்கப்படுகிறது என்று அது அனுமானித்ததாகும். இன்றைய ஆட்சியாளர்கள் பைத்தியக்காரர்களைப் போல செயல்படுவதாகத் தோன்றினால், அதற்கு காரணம் அவர்களின் முடிவுகள்—விளைவுகள் எதுவாக இருந்தாலும்—உலகம், சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் முதலீட்டு மண்டலங்களின் மறுபங்கீட்டிற்கான வன்முறைப் போராட்டத்திலேயே தீவிரமாக இருக்கும் ஒரு பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவின் அடிப்படையில் பகுத்தறிவற்ற நலன்களால் தீர்மானிக்கப்படுவதே ஆகும்.

47. இன்று ஒவ்வொரு ஏகாதிபத்தியத் தலைநகரிலும் 'போருக்குத் தயாராதல்' என்பதே முக்கிய முழக்கமாக உள்ளது. 'நாம் போரில் இல்லை, ஆனால் நாம் இனி அமைதியிலும் இல்லை' என்று ஜேர்மன் மக்களிடம் அதிபர் மேர்ஸ் கூறியுள்ளார். அரசு, பொருளாதாரம் மற்றும் சமூகத்தை 'நெருக்கடியைத் தாங்கும் திறன் கொண்டதாக' மாற்றும் வகையிலான போர் நடவடிக்கைகளை அவரது அரசாங்கம் செயல்படுத்தி வரும் சூழலிலும், 2029-ஆம் ஆண்டிற்குள் ஜேர்மனி போருக்குத் தயாரான நிலையை (kriegstüchtig) அடைய வேண்டும் என்று அவரது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டிருக்கும் சூழலிலும் இக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன. பிளாக் ரொக் ஜேர்மனி நிறுவனத்தின் மேற்பார்வைக் குழுவின் முன்னாள் தலைவரான மெர்ஸ், கெய்சர் வில்ஹெல்மைப் போலத் திமிராக நடந்துகொள்வதோ அல்லது அடொல்ஃப் ஹிட்லரைப் போல ஆவேசமாகப் பேசுவதோ இல்லை. ஆனால், ரஷ்யாவுடனான போருக்கான அவரது தயாரிப்புகள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் ஜேர்மன் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை நோக்கங்களின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன.

48. முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மர் 2025 ஜூனில், பிரிட்டன் 'எமது ஆயுதப் படைகளின் மைய நோக்கமாகப் போர்-நடத்தும் தயார்நிலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது' என்று அறிவித்ததுடன், 'போர்க்கால வேகத்தில்' புத்தாக்கம் செய்வதாகவும் உறுதியளித்தார். பிரெஞ்சு இராணுவ பட்ஜெட்டை இரட்டிப்பாக்குவதாக அறிவித்த ஜனாதிபதி மக்ரோன், '1945-க்குப் பிறகு சுதந்திரம் இவ்வளவு அச்சுறுத்தலுக்கு உள்ளானதில்லை' என்று அறிவித்ததுடன், 'இந்த உலகில் சுதந்திரமாக இருக்க வேண்டுமெனில், நீங்கள் பயத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும்; பயத்தை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டுமெனில், நீங்கள் சக்திவாய்ந்தவராக இருக்க வேண்டும்' என்று தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இடமிருந்து வலமாக: ஜேர்மன் சான்சலர் பிரெட்ரிச் மேர்ஸ், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கெயர் ஸ்டார்மர் மற்றும் இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் ஹோர்முஸ் நீரிணையில் கடல்வழிப் போக்குவரத்துக்கான முன்முயற்சி குறித்த ஒரு மாநாட்டில் பங்கேற்க பாரிஸில் உள்ள எலிசே அரண்மனைக்கு வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026 அன்று வருகை தந்தனர். [AP Photo/Jeanne Accorsini]

49. இந்த ஜனவரி தனது புத்தாண்டு உரையில் ஆயுதப் படைகளிடம், 'நாம் தயாராக இருக்கிறோம்' என்றும், பிரெஞ்சு மறுஆயுதமயமாக்கலின் தசாப்தம் 'பலனளித்துள்ளது' என்றும் அவர் தெரிவித்தார். ஜூலை மாதத்திற்குள், 'எமது இரத்தத்தின் விலையிலும்கூட' போரிடுவதற்கான பிரான்சின் தயார்நிலையை மக்ரோன் பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தார். இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது, 'இந்தப் பைத்தியக்காரத்தனம் எங்கிருந்து வருகிறது? அவர்கள் தங்கள் சொந்த வார்த்தைகளையேனும் நம்புகிறார்களா?' என்று ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளத் தோன்றும். இவை இராணுவத் தலைமையின் தனிப்பட்ட கணக்கீடுகளோ, அல்லது பத்திரிகைகளுக்குக் கசிந்த தகவல்களோ, அல்லது ஒரு இராணுவப் பேரழிவிற்குப் பிறகு வரலாற்றாசிரியர்களால் தொகுக்கப்பட்டவையோ அல்ல. இவை, அரசாங்கத் தலைவர்கள் தங்கள் சொந்த மக்களிடம் ஆற்றிய பொது உரைகள். மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும், அவர்களின் தலைக்கு மேலாகவும் நடத்தப்படும் போருக்கு அவர்களைப் பழக்கப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

50. இந்தப் போர் வெறி பழைய ஏகாதிபத்திய மையங்களுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. உலகப் போர் தீவிரமடைவது, பிராந்திய சக்திகளை மேலும் மேலும் ஆழமாக அதன் சுழலுக்குள் இழுக்கிறது. அவற்றில் எதுவும் துருக்கியைப் போல் அவ்வளவு ஆக்ரோஷமாக இழுக்கப்படவில்லை. ஐரோப்பிய நேட்டோவின் மிகப்பெரிய தரைப்படையையும், வேகமாக விரிவடையும் ஆயுதத் தொழிற்துறையையும் கொண்ட துருக்கிய எர்டோகன் அரசாங்கம், சிரியா, லிபியா மற்றும் தெற்கு காக்கசில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு, ஆப்பிரிக்காவில் தனது பொருளாதார மற்றும் இராணுவச் செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது. இன்று அது உலக நெருக்கடியின் இன்றியமையாத நடுவராகத் தன்னை முன்னிறுத்துகிறது. மாஸ்கோவுக்கும் கீயேவ்வுக்கும் இடையே தொடர்பு வழிகளை அது பராமரித்து வருகிறது. இன்சிர்லிக், கோன்யா மற்றும் கூரெசிக்கில் உள்ள நேட்டோ தளங்கள் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின் ஒருங்கிணைப்பு மற்றும் உளவு மையங்களாகச் செயல்படும் வேளையிலும், ஈரானுக்கு எதிரான போரில் மத்தியஸ்தராகத் தனது சேவைகளை அது முன்வைக்கிறது. மேலும் இந்த ஜூலையில் அங்காராவில் நேட்டோ உச்சிமாநாட்டை நடத்தியது. இந்த உச்சிமாநாட்டிலிருந்துதான் எர்டோகன், துருக்கியை 'ஒரு புரவலர் நாடு மட்டுமல்ல, ஒரு முக்கிய கூட்டாளி' என்று பிரகடனப்படுத்தினார்.

51. உலக அரசியலில் தீவிரமடைந்துவரும் இந்தத் தலையீடு வலிமையை வெளிப்படுத்தவில்லை, மாறாக நடுநிலை வகிப்பதன் இயலாமையையே காட்டுகிறது: போரின் புற்றுநோய்ப் பரவல், ஒவ்வொரு பிராந்திய சக்தியின் முதலாளித்துவ வர்க்கத்தையும், தானே அந்த மறுபங்கீட்டின் பொருளாகிவிடாதிருக்கும் பொருட்டு, உலகின் மறுபங்கீட்டில் ஒரு இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறது. மேலும், எல்லா இடங்களிலும் காணப்படுவதைப் போலவே, இராணுவ வலிமையை வெளிநாடுகளில் பிரயோகிப்பதும் உள்நாட்டு பிற்போக்குத்தனமும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன—எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்தல், குர்திஷ் மக்கள் மீதான பல தசாப்த கால ஒடுக்குமுறை மற்றும் போர்-எதிர்ப்பு மற்றும் சோசலிச எதிர்ப்பாளர்கள் மீதான திட்டமிட்ட துன்புறுத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

52. 2026 கோடையில் நாம் கூடும் இந்த வேளையில், ஐந்து கண்டங்களில் போர்கள் நடைபெற்று வருகின்றன: ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களிலும்; வெனிசுவேலா மீதான நடவடிக்கையின் மூலமாகவும், கியூபா நோக்கிய அதன் விரிவாக்கம் மற்றும் அதையொட்டி கரீபியன் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் மூலமாகவும் வட மற்றும் தென் அமெரிக்காவிலும் போர்கள் நடக்கின்றன. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா மற்றும் கிரீன்லாந்து ஆகியவை இன்னும் நேரடி இராணுவ மோதலில் ஈடுபடவில்லை என்றாலும், அவை பொருளாதார மற்றும் அரசியல் மோதல்களின் பெரும் தீவிரமடைதலைக் கண்டு வருகின்றன; இம்மோதல்கள் போராக வெடிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன.

53. எனவே, மூன்றாவது உலகப் போர் என்பது எதிர்காலத்தைப் பற்றிய ஒரு யூகம் அல்ல. அது தற்போதைய நிகழ்வுகளின் விவரிப்பாகும். போருக்கு எதிரான போராட்டம் வரும் தசாப்தத்தின் மையத்தில் நிற்கும் என்ற 2020 ஆம் ஆண்டின் அறிக்கையின் எச்சரிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போர் என்பது ஆரோக்கியமான அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு அசாதாரண நிலை அல்ல. அது பொருளாதாரத்தின் சொந்த முரண்பாடுகளின் அரசியல் விளைவாகும். 2020 ஆம் ஆண்டின் அறிக்கை இந்த வீழ்ச்சிக்கான புறநிலை குறியீடுகளைச் சுட்டிக்காட்டியது. ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு குறியீடும் பன்மடங்கு மோசமடைந்துள்ளது.

IV. பொருளாதார அடித்தளம்

54. 2020ன் இறுதியில், அமெரிக்காவின் தேசியக் கடன் தோராயமாக 27.7 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. 2026 ஜனவரி 7 நிலவரப்படி, அது 38.43 டிரில்லியனை டாலர்களை எட்டியது — இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட 10.73 டிரில்லியன் டாலர்கள் அதிகம் — அதற்கு முந்தைய ஆண்டில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 8.03 பில்லியன், மணிக்கு 334 மில்லியன், அல்லது வினாடிக்குத் தோராயமாக 93,000 டாலர்கள் என்ற விகிதத்தில் கடன் அதிகரித்திருந்தது. 2026 ஜூன் நிலவரப்படி, மொத்தத் தொகை 39.5 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. மேலும் நிதியாண்டு  2026 முடியும் போது 40 டிரில்லியனை நெருங்கும் பாதையில் உள்ளது. இவ்வாறு ஐந்தரை ஆண்டுகளில் கடன் சுமார் 12 டிரில்லியன் டாலர்கள் அல்லது 40 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது; தற்போது ஏறக்குறைய ஒவ்வொரு ஐந்து மாதங்களுக்கும் புதிதாக ஒரு டிரில்லியன் டாலர் கடன் கூடுதலாகச் சேர்கிறது. 2035-ஆம் ஆண்டிற்குள் இந்தக் கடன் 53 டிரில்லியன் டாலர்களை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 120 சதவீதத்தைத் தாண்டும் என்று பொறுப்பான கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்திற்கான குழு கணித்துள்ளது.

55. 2020 நிதியாண்டில், நிகர வட்டிச் செலவுகள் தோராயமாக 345 பில்லியனாக டாலர்களாக இருந்தன. மேலும் சந்தைப்படுத்தக்கூடிய கடனுக்கான சராசரி வட்டி விகிதம் சுமார் 1.5 சதவீதமாக இருந்தது. அதன்பின் நிகர வட்டி கிட்டத்தட்ட மூன்று மடங்காகியுள்ளது. சந்தைப்படுத்தக்கூடிய கடனுக்கான சராசரி விகிதம் இப்போது 3.36 சதவீதமாக உள்ளது. மேலும் 2026 நிதியாண்டில் கூட்டாட்சியின் அனைத்து செலவினங்களிலும் 13.85 சதவீதத்தை நிகர வட்டி எடுத்துக்கொள்ளும் என்றும், 2028 நிதியாண்டில் இது 14.52 சதவீதமாக உயரும் என்றும் காங்கிரஸின் வரவு செலவுத் திட்ட அலுவலகம் கணித்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களை ஒருவர் பார்க்கும்போது, 1788இல் பிரெஞ்சு நிதியமைச்சர் நெக்கர் பிரெஞ்சுக் கடனைக் குறித்து ஏன் மிகவும் கலக்கமடைந்தார் என்று வியந்து பார்ப்பார். இதனுடன் ஒப்பிடும்போது, அது தீவிர சிக்கனத்தின் ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. 2025இல் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர்களை எட்டிய ஆண்டு வட்டிச் செலுத்துதல்கள், 2035க்குள் 1.8 டிரில்லியனை எட்டும் என்று கணிக்கப்படுகிறது. கடனுக்கான வட்டி இப்போது இராணுவ வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக உள்ளது—இது ஏகாதிபத்திய நிதிச் சீரழிவின் ஒரு தெளிவான அறிகுறியாகும்.

அமெரிக்கக் கூட்டாட்சி அரசின் கடன் [Photo: FRED]

56. 2020-ஆம் ஆண்டின் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றாக்குறை 678.7 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2025ல் இது 901.5 பில்லியனாக இருந்தது —இதில் 1.24 டிரில்லியன் டாலர் அளவிலான சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை, 339.5 பில்லியன் டாலர் அளவிலான சேவை வர்த்தக உபரியால் ஓரளவு ஈடுசெய்யப்பட்டது. இதன் முக்கியத்துவம், 2020-ஐ விட ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு அதிகமாக உள்ள பற்றாக்குறையின் அளவில் மட்டுமல்ல, சுங்கவரித் தாக்குதலின் நிரூபிக்கப்பட்ட தோல்வியிலும் அடங்கியுள்ளது: ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆக்ரோஷமான சுங்கவரி விதிப்பு முறை இருந்தபோதிலும், 2025ன் பற்றாக்குறை 2024ஐ விட வெறும் 0.2 சதவீதம் — அதாவது 2.1 பில்லியன் டாலர்கள் — மட்டுமே குறைந்தது. குறிப்பிடத்தக்க வகையில், மிகப்பெரிய பொருட்கள் பற்றாக்குறை இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் (218.8 பில்லியன் டாலர்கள்) உள்ளது; இது சீனா (202.1 பில்லியன் டாலர்கள்) மற்றும் மெக்சிகோ (196.9 பில்லியன் டாலர்கள்) ஆகியவற்றுடனான பற்றாக்குறைகளை விட அதிகமாகும்— இது அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மோதல் தீவிரமடைவதற்கு நேரடியாகத் தொடர்புடைய ஒரு தரவு ஆகும்.

57. 2020 நிதியாண்டின் 3.1 டிரில்லியன் டாலர் பற்றாக்குறை என்பது அசாதாரணமானதாகும். இது கோவிட் பெருந்தொற்று அவசரகால நடவடிக்கைகளின் ஒரு விளைபொருளாகும். ஆனால், அதன்பிறகு 1.7 முதல் 1.9 டிரில்லியன் டாலர் வரையிலான பற்றாக்குறை என்பது அமைதிக்காலத்தின் நிரந்தரமான இயல்பான நிலையாக மாறிவிட்டது. 2025-ல் 1.7 டிரில்லியன் டாலராக உள்ள பற்றாக்குறை 2035-ல் 2.6 டிரில்லியன் டாலராக உயரும் என்றும், வரும் பத்தாண்டுகளில் ஒட்டுமொத்தப் பற்றாக்குறைகள் 22.7 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகத்தின் (CBO) நீண்ட காலக் கணிப்புகள், அடுத்த மூன்று தசாப்தங்களில் நிதிப் பற்றாக்குறை சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7.2 சதவீதமாக இருக்கும் என்பதையும், பொதுமக்களிடம் உள்ள கடன் 2026-ல் GDP-யில் 100 சதவீதமாக இருந்து 2056-க்குள் 175 சதவீதமாக உயரும் என்பதையும் காட்டுகின்றன. இந்த நிலை நீடிக்க முடியாது என்பது தெளிவாகிறது.

58. 2020-ஆம் ஆண்டில் தங்கத்தின் சராசரி விலை ஒரு அவுன்ஸிற்கு சுமார் 1,770 டாலராக இருந்தது. அந்த ஆண்டின் இறுதியில் அதன் விலை 1,895 டாலர் என்ற அளவில் இருந்தது. ஜூலை 30, 2026 நிலவரப்படி, அதன் விலை ஒரு அவுன்ஸிற்கு சுமார் 4,080 டாலராக உள்ளது—இது கடந்த ஓராண்டில் மட்டும் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, அது தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இவ்வாறு 2020-க்குப் பிறகு தங்கத்தின் விலை இருமடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது: இது டாலர் மற்றும் பொதுவாக காகித வடிவிலான சொத்துகள் (paper assets) மீதான உலகச் சந்தையின் தெளிவான தீர்ப்பாக அமைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் உலகளவில் தங்கத்திற்கான தேவை சாதனை அளவை எட்டியதாக உலக தங்க கவுன்சில் (World Gold Council) தெரிவித்துள்ளது. இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது மத்திய வங்கிகளின் கொள்முதல் நடவடிக்கைகளே ஆகும்—இது டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் நேரடி வெளிப்பாடாகும்.

59. கடந்த ஓராண்டில் முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு தோராயமாக 10 சதவீதம் சரிந்தது. 2026 ஜனவரியில் மட்டும் அது மேலும் 1.2 சதவீதம் சரிவைக் கண்டது. 2020ல் உலகளாவிய அன்னிய செலாவணி இருப்புக்களில் தோராயமாக 59 சதவீதமாக இருந்த டாலரின் பங்கு, 2025ன் மூன்றாம் காலாண்டில் 56.9 சதவீதமாகக் குறைந்தது. இது 1995க்குப் பிந்தைய மிகக் குறைந்த மட்டமாகும், மேலும் 2001ல் அது எட்டிய 72 சதவீத உச்சத்தைவிட வெகுவாகக் குறைவாகும். 2022-ல் ரஷ்ய மத்திய வங்கியின் 300 பில்லியன் டாலர் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிகழ்வு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது உலகெங்கிலும் உள்ள கையிருப்பு மேலாளர்களின் இடர் கணிப்பை அடிப்படையாக மாற்றியமைத்ததுடன், தங்கம் மற்றும் டாலர் அல்லாத சொத்துக்களில் பல்வகைப்படுத்தலையும் துரிதப்படுத்தியது. அதே நேரத்தில், சீனாவின் எல்லை கடந்த வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை அமைப்பு (CIPS) தற்போது 117 நாடுகளில் உள்ள பங்கேற்பாளர்களை இணைக்கிறது.

60. அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சீரழிவு, அதற்குத் தலைமை தாங்கும் நிதியியல் தன்னலக்குழுவின் மலைக்க வைக்கும் அளவிலான செல்வச் செழிப்பிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட மத்தியிலுள்ள கூட்டாட்சியின் ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2025ன் மூன்றாம் காலாண்டில், மிகச் செல்வந்தர்களான அமெரிக்கர்களில் 1 சதவீதத்தினர் வைத்திருக்கும் தேசியச் செல்வத்தின் பங்கு 31.7 சதவீதத்தை எட்டியது. இது இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே மிக உயர்ந்த மட்டமாகும். அதேவேளையில், மேல்மட்ட 10 சதவீதத்தினர் 68 சதவீதத்திற்கும் அதிகமான செல்வத்தையும், மக்கள்தொகையின் கீழ்மட்டப் பாதியினர் வெறும் 2.5 சதவீத செல்வத்தையும் மட்டுமே கொண்டுள்ளனர். உலகளவில், பில்லியனர்களின் செல்வம் 2025-இல் முந்தைய ஐந்து ஆண்டுகளின் சராசரி விகிதத்தை விட மூன்று மடங்கு வேகமாக வளர்ந்து, சாதனை அளவான 18.3 டிரில்லியன் டாலர்களை எட்டியது. இது, 2020-ஆம் ஆண்டின் அறிக்கை வெளியானதிலிருந்து 81 சதவீத வளர்ச்சியாகும். தற்போது பில்லியனர்களின் எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டியுள்ளது. 1990-இல் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.5 சதவீதமாக இருந்த இவர்களின் கூட்டுச் சொத்து மதிப்பு, இப்போது 14 சதவீதத்திற்குச் சமமாக உள்ளது. ஏகாதிபத்தியப் போர்களின் முப்பத்தைந்து ஆண்டுகால வெடிப்புக்கு இணையாகவே இந்த தன்னலக் குழுவினரின் செல்வமும் பெருகியுள்ளது. இந்தப் போர்களுக்கு அவர்களே உந்துசக்தியாகவும், அதன் மூலம் பயனடைபவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

61. ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு சுழற்சிமுறைச் சிக்கலை அல்ல, மாறாக ஒரு கட்டமைப்பு சார்ந்த நிலையையே விவரிக்கின்றன: அதாவது, ஏறக்குறைய ஒவ்வொரு ஐந்து மாதங்களுக்கும் ஒரு டிரில்லியன் டாலர் அளவில் கடனைச் சேர்க்கும் ஒரு அரசு; அமெரிக்காவின் வரவு-செலவுத் திட்டத்தில் ஏழில் ஒரு பங்கை விழுங்கும் கடன் சேவைச் செலவுகள்; பாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்குக் கட்டுப்படாத வர்த்தகப் பற்றாக்குறை; பரிமாற்ற மதிப்பு மற்றும் இருப்பு நாணய அந்தஸ்து ஆகிய இரண்டையும் இழந்துவரும் ஒரு நாணயம்; டாலர் சார்ந்த ஒட்டுமொத்தக் கடன் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் தங்கம் —மதிப்பின் உச்சகட்ட அளவுகோல்—; மற்றும் இவை அனைத்திற்கும் மேலாக, நாட்டின் செல்வத்தில் தங்கள் பங்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்திக்கொண்ட ஒரு நிதியியல் தன்னலக்குழு ஆகியவற்றையே இவை காட்டுகின்றன.

62. இந்தப் புள்ளிவிவரங்கள் வெறுமனே செல்வப் பங்கீட்டை அல்ல, மாறாக ஓர் ஆட்சி வடிவத்தையே பதிவு செய்கின்றன. சமகால அமெரிக்க அரசு அதன் அடிப்படைத் தன்மையில் தன்னலக்குழு சார்ந்த அரசாகவே உள்ளது. ஆக்ஸ்பாம் ஜனவரி 2026 வெளியிட்ட “செல்வந்தர்களின் ஆட்சியை எதிர்த்தல்” என்ற அறிக்கையில், பிற குடிமக்களை விட பில்லியனர்கள் அரசியல் பதவிகளை வகிப்பதற்கான வாய்ப்பு 4,000 மடங்கு அதிகம் என்றும்; 2024 அமெரிக்கத் தேர்தலில் செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு ஆறு டாலரிலும் ஒரு டாலர் வெறும் 100 பில்லியனர் குடும்பங்களிடமிருந்தே வந்தது என்றும்; 7 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ஒட்டுமொத்த செல்வத்தைக் கொண்ட ட்ரம்ப்பின் அமைச்சரவை, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் செல்வந்தர் நிறைந்த அமைச்சரவை என்றும்; மேலும் ஜனாதிபதி ஒரே ஆண்டில் தனது தனிப்பட்ட சொத்தை 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்த்திக்கொள்ள தனது பதவியைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் ஆவணப்படுத்துகிறது. உலகின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் பத்து முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் பில்லியனர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. [8]

ட்ரம்ப் மற்றும் தொழில்நுட்ப தன்னலக் குழுவினருடன் வெள்ளை மாளிகை விருந்து. [Photo: White House]

63. முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுவான விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அரசு என்ற மார்க்ஸின் வகைப்படுத்தல், ஏறக்குறைய வார்த்தைக்கு வார்த்தை துல்லியமான உண்மைத் தன்மையைப் பெற்றுள்ளது. அமெரிக்க அரசாங்கம் ஒரு பெருநிறுவன-நிதிய பிரபுத்துவத்தின் நேரடித் கருவியாகச் செயல்படுகிறது. மேலும், தொழிலாளி வர்க்கத்திடமிருந்து தங்கள் செல்வத்தைப் பாதுகாத்துக்கொள்ள, ஜனநாயக வடிவங்களை அழித்தல், சர்வாதிகாரத்தை நோக்கி நகர்தல் மற்றும் போரை நாடுதல் ஆகியவையே அந்த வர்க்கத்திற்குத் தேவையான அரசியல் வழிமுறைகளாக உள்ளன. இப்போது, எதிர்காலத்தில், வரலாற்றாசிரியர்கள் இந்தப் புள்ளிவிவரங்களை உற்றுநோக்கி, பதிவுசெய்து, ஆய்வுசெய்யும்போது, ஒரு புரட்சி தவிர்க்கவியலாததாக இருந்தது என்பது அவர்களுக்கு மிகவும் தெளிவாகத் தோன்றும். “இதை எப்படி பார்க்காமல் தவறவிட்டிருக்க முடியும்?” என்று அவர்கள் அனைவரும் எழுதுவார்கள். ஆனால் நிச்சயமாக, வரலாற்றாசிரியர்களும் அதைக் காண்பதில்லை; அரசியல் வர்ணனையாளர் கூட்டத்தின் பரந்த, மிகப் பெரும் பெரும்பான்மையினரும் அதைக் காண்பதில்லை.

64. கடன் மற்றும் கடன்சுமையின் பிரம்மாண்டமான விரிவாக்கத்திலிருந்து எழும் பொருளாதார நெருக்கடியின் மற்றொரு தீர்க்கமான கூறு, புனை மூலதனத்தின் (fictitious capital) வளர்ச்சியாகும்; இது இப்போது, ஆளும் வர்க்கம் “செயற்கை நுண்ணறிவு” என்று அழைப்பதைச் சுற்றியுள்ள ஊக மோகத்தில் குவிந்துள்ளது. உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இந்தச் சொல்லை நிராகரித்து, மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு என்ற சொல்லை ஆதரிக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் ஒரு செயற்கை நுண்ணறிவும் அல்ல, ஓர் அன்னிய நுண்ணறிவும் அல்ல. இது, திரட்டப்பட்ட மனித அறிவுசார் உழைப்பின் பொருள்மயமாக்கமாகும்; மேலும், மார்க்ஸ் பகுப்பாய்வுசெய்த சரக்கு மயக்கத்தைப் போலவே, நிலவும் சொல்லியல், மனிதகுலத்தின் சொந்த சமூக விளைபொருளை, அதற்கு மேலாக நிற்கும் ஒரு தன்னாட்சி சக்தியாகச் சித்தரிக்கிறது.

65. ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், ஊகவணிகர்களின் செல்வங்களுக்கு அப்பால் வெகுதூரம் நீள்கிறது. கடந்த இலையுதிர்காலத்தில் பெர்லின் மற்றும் லண்டனில் வழங்கப்பட்ட விரிவுரைகளில் விளக்கப்பட்டது போல, மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவானது, உபரி மதிப்பின் ஒரே மூலமான உயிருள்ள உழைப்பை உற்பத்திச் செயல்முறையிலிருந்து முன்னெப்போதுமில்லாத அளவில் வெளியேற்றுவதன் மூலம், முதலாளித்துவம் அடிப்படையாகக் கொண்டுள்ள முழு மதிப்பு அமைப்பையும் புறநிலையாகப் பலவீனப்படுத்துகிறது. இது மூலதனத்தின் சேதன அமைப்பை முன்னெப்போதுமில்லாத உயரங்களுக்குத் தள்ளுகிறது; இலாப விகிதம் வீழ்ச்சியடையும் போக்கைத் துரிதப்படுத்துகிறது; மேலும், பரிமாற்ற மதிப்பை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி முறிந்துவிழும் நிலையை — கிரண்ட்ரிஸ்ஸில் (Grundrisse) மார்க்ஸ் முன்னறிந்த அந்த நிலையை — நோக்கி அழுத்துகிறது. அந்த விரிவான பகுப்பாய்வை இங்கு மறுஆய்வு செய்ய இயலாது; ஆனால், ஊக மோகத்தை எந்தப் புறநிலைச் சட்டகத்திற்குள் வைத்துப் பார்க்க வேண்டுமோ, அந்தச் சட்டகத்தையே அது வரையறுக்கிறது.

66. முதலாளித்துவ உடைமையின் கீழ், மகத்தான விடுதலை ஆற்றல் கொண்ட ஒரு தொழில்நுட்பம், ஒரு ஊகக் குமிழியின் கருவியாக மாறிவிட்டது. முழு அமெரிக்க நிதிக் கட்டமைப்பும் இப்போது அசாதாரணமாகக் குறுகிய ஒரு அடித்தளத்தின் மீது தங்கியுள்ளது: ஒரு சில தொழில்நுட்ப ஏகபோகங்கள். மூன்று தசாப்தங்களாக மீண்டும் மீண்டும் தோன்றிய குமிழிகள், ஒவ்வொன்றும் கடன் விரிவாக்கத்தால் மீட்கப்பட்டன; இதன் விளைவாக, பாரம்பரியத் தீர்வுகளான நிதிசார் விரிவாக்கமும் பணவியல் தளர்வும் கடன் மலையாலும் டாலரின் நலிவுத்தன்மையாலும் கட்டுப்படுத்தப்படும் நிலைமைகளின் கீழ் ஊகவணிகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலைமைகளின் கீழ், ஆளும் வர்க்கம் பொருளாதார நெருக்கடிக்கான தனது பதிலாகப் போரை நாடுகிறது. அதிஉற்பத்தி மற்றும் அதிகுவிப்பு நெருக்கடிக்கான செவ்வியல் முதலாளித்துவத் தீர்வே போராகும்: மூலதனத்தின் பௌதிக அழிவு; வளங்கள் மற்றும் சந்தைகளைக் கைப்பற்றுதல் — இதற்கு வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளம் மிக அண்மைய எடுத்துக்காட்டாகும் —; மற்றும் தேசிய அவசரநிலை நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல்.

67. போர் அடிப்படையிலான பொருளாதாரத்திற்கான மாற்றம் இப்போது ஐரோப்பாவில் மிகவும் முன்னேறியுள்ளது. 2025ன் ஹேக் (Hague) உச்சிமாநாட்டில், நேட்டோ தனது 2 சதவீத இலக்கை மாற்றி, 5 சதவீத இலக்கை நிர்ணயித்தது. இதில் முக்கிய இராணுவச் செலவினத்திற்கு 3.5 சதவீதமும், போர் தொடர்பான உள்கட்டமைப்பிற்குக் கூடுதலாக 1.5 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஜூலையில், அங்காரா உச்சிமாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகள் தமது இணக்கத் திட்டங்களை முன்வைத்தன. பால்டிக் நாடுகளும் போலந்தும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்புக்காக 4 முதல் 5 சதவீதம் வரை செலவழிக்கின்றன.

68. ஜேர்மனி, கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றிலேயே மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் வரவுசெலவுத் திட்டத்தை இயற்றியுள்ளது. இராணுவச் செலவினத்திற்காகத் தனது அரசியலமைப்புசார் கடன் தடையை அது இடைநிறுத்தியுள்ளது; கூட்டணியின் கால அட்டவணையைவிட ஆறு ஆண்டுகள் முன்னதாக, 3.5 சதவீத மைய இலக்கை எட்ட உறுதிபூண்டுள்ளது; ஆண்டுக்கு 200 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான போர் தொடர்பான செலவினத்தை நோக்கிய பாதையில் இறங்கியுள்ளது; மேலும், ஐரோப்பாவிலேயே மிக வலிமையான மரபுவழிப் படையைக் களமிறக்கும் இலக்கை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

69. ஜனவரி மாதம் முதல், ஜேர்மனியில் பதினெட்டு வயதுடைய ஒவ்வொருவருக்கும் இராணுவ சேவைக்கான பொருத்தம் குறித்த கேள்வித்தாள் ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. 2027 ஜூலையிலிருந்து, முதல் ஆண் தொகுதியினருக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயமாகிறது; தன்னார்வ ஆட்சேர்ப்பு போதுமானதாக இல்லாவிட்டால் முழுமையான கட்டாய இராணுவச் சேவையைச் செயல்படுத்தும் சட்டப்பூர்வ வழிமுறையும் இதில் உள்ளது. அமெரிக்காவில், டிசம்பரில் அமலுக்கு வர இருக்கும், பதினெட்டு முதல் இருபத்தாறு வயதுடைய அனைத்து ஆண்களின் தானியங்கிப் பதிவு, அதே கருவியைத் தயார்செய்கிறது.

70. ஒரு உலக நிலைமையை அதன் புறநிலை உண்மைகளிலிருந்து மட்டும் மதிப்பிட முடியாது; அதற்குள் செயல்படும் வர்க்கங்களின் நனவையும் ஆய்வுசெய்ய வேண்டும். வெளியுறவு உறவுகள் குழுவின் (Council on Foreign Relations) இதழான ஃபாரின் அஃபேர்ஸின் (Foreign Affairs) ஜூலை–ஆகஸ்ட் பதிப்பின் முகப்பில்: “அடுத்த போரில் யார் வெற்றி பெறுவார்கள்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பெரும் சக்திகளுக்கு இடையிலான போர் நிகழுமா என்பதைச் சுற்றியோ, அதைவிடக் குறைவாக, அது எவ்வாறு தடுக்கப்படலாம் என்பதைச் சுற்றியோ அல்ல, மாறாக அதில் அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைச் சுற்றியே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மைய தத்துவார்த்த இதழ் ஒரு முழுப் பதிப்பையும் ஒழுங்கமைத்துள்ளது. அனுமதிக்கப்பட்ட விவாதம், அடுத்த போரை விரைவில் நடத்த விரும்புவோர் முதல், அதை இன்னும் சிறப்பாகத் தயாராகி நடத்த விரும்புவோர் வரை மட்டுமே நீள்கிறது; அப்போர் நடத்தப்படவே கூடாது என்ற நிலைப்பாடு இதில் இடம்பெறவில்லை. ஆளும் வர்க்கம் மூன்றாம் உலகப் போரை அதன் செயல்பாட்டு அனுமானமாக உள்வாங்கிக்கொண்டுள்ளது.

V. தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதலும் தலைமைத்துவ நெருக்கடியும்

71. 1914 முதல் 1945 வரையிலான சகாப்தம் எமக்கு வழங்கும் மிக முக்கியமான பாடமானது, தற்போதைய சூழலோடு நேரடித் தொடர்புடையது. உலகப் போரும் சமூகப் புரட்சியும் ஒரே நெருக்கடியின் ஒன்றோடொன்று பிணைந்த இரு கூறுகள் ஆகும். முதல் உலகப் போர், வெறும் மூன்றாண்டுகளுக்குள்ளேயே வரலாற்றிலேயே மிகப்பெரிய புரட்சிகர அலையை உருவாக்கியது. இரண்டாம் உலகப் போர் 1943–1948 காலகட்டத்தில் பெரும் கொந்தளிப்புகளைத் தோற்றுவித்தது. ஏகாதிபத்தியத்தினதும் ஸ்டாலினிசத்தினதும். கூட்டு முயற்சிகளால் மட்டுமே அவை கட்டுப்படுத்தப்பட்டன. மேலும் நிச்சயமாக, 1950-கள், 60-கள் மற்றும் 70-கள் வரை நீடித்த மாபெரும் காலனித்துவ-எதிர்ப்பு இயக்கங்கள் என்பவை, இரண்டாம் உலகப் போர் மற்றும் அந்தப் புரட்சிகர அலையின் தொடர் விளைவுகளாகவே அமைந்தன.

72. 1917-லும், இரண்டாம் உலகப் போரின் இறுதி ஆண்டுகளிலும் அதன் பின்னரும் நிகழ்ந்ததைப் போலவே, முழுமையான போர் என்பது தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அணிதிரட்டலையும், சமூக மற்றும் அரசியல் ரீதியான தீவிர மாற்றங்களை நோக்கிய செயல்முறையைத் தொடங்கி வைப்பதையும் கோருகிறது. தற்போதைய காலகட்டத்தின் ஆட்சியாளர்களுக்கு இந்த வரலாறு தெரியும். இது ஒவ்வொரு முதலாளித்துவ அரசின் நிறுவனரீதியான நினைவிலும் பதிந்துள்ளது. 1914-ல் தொடங்கிய ஏகாதிபத்தியப் போரினால் ஏற்பட்ட புரட்சிகர விளைவுகள் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன. அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழாவின்போது வலதுசாரி வரலாற்றாசிரியர் சீன் மெக்மீக்கின் எழுதியது போல: “1917-ல் தொடங்கி வைக்கப்பட்ட சித்தாந்த யுகத்தில் பிறந்த அணுஆயுதங்களைப் போல, லெனினிசத்தைப் பற்றிய சோகமான உண்மை என்னவென்றால், அது ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதை மீண்டும் இல்லாமலாக்க முடியாது என்பதே.”[9]

1917 புரட்சியின்போது நடந்த பெட்ரோகிராட் சோவியத்தின் ஒரு படைவீரர் அமர்வு

73. ஏகாதிபத்தியப் போரின் புற்றுநோய்ப் பரவல், வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய விரிவாக்கத்தில் தனது இயங்கியல் எதிர்முனையைக் காண்கிறது. புரட்சிகர நனவின் முதிர்ச்சிக்கு ட்ரொட்ஸ்கி பயன்படுத்திய சொல்லில், இதன் வளர்ச்சி மூலக்கூற்று ரீதியாக, அதிகாரப்பூர்வ அரசியலின் பரப்பிற்குக் கீழே, சுரண்டல், போர் மற்றும் அரச வன்முறையின் மில்லியன் கணக்கான தனிநபர் அனுபவங்களில் நிகழ்கிறது. இவை அமைதியாகத் திரண்டு, ஒவ்வொரு அரசாங்கத்தையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு பலத்துடன் கூட்டு வெளிப்பாட்டைக் காணும் வரை தொடர்கின்றன. போர் உலகைப் போர்க் களங்களாகப் பிரிக்கும் இடத்தில், வர்க்கப் போராட்டம் அதனை ஒன்றிணைக்கிறது.

74. தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம், 1988 ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற வேர்க்கர்ஸ் லீக்கின் (Workers League) பதின்மூன்றாவது தேசியக் காங்கிரஸுக்கான தொடக்க அறிக்கையில் முன்கூட்டியே கணிக்கப்பட்டது:

புறநிலை ரீதியான பொருளாதாரப் போக்குகள் மற்றும் மார்க்சிசவாதிகளின் அகநிலைத் தாக்கம் ஆகிய இரண்டின் கூட்டு அழுத்தத்தின் கீழ், பாட்டாளி வர்க்கப் போராட்டங்களின் அடுத்த கட்டம் தவிர்க்கவியலாத வகையில் சர்வதேசவாதப் பாதையில் வளர்ச்சியடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாட்டாளி வர்க்கம் நடைமுறையில் தன்னை ஒரு சர்வதேச வர்க்கமாக வரையறுத்துக்கொள்ளும் போக்கு மேலும் வலுப்பெறும். இந்தப் இயல்பான செயல்முறையின் வெளிப்பாடாகத் தங்கள் கொள்கைகளைக் கொண்டுள்ள மார்க்சிய சர்வதேசவாதிகள், இச்செயல்முறையை வளர்த்தெடுத்து அதற்கு ஒரு தெளிவான வடிவத்தை அளிப்பார்கள்.[10]

75. 1988இல், உற்பத்தியின் உலகளாவிய ஒருங்கிணைப்பு, அதன் தற்போதைய அளவுடன் ஒப்பிடும்போது, மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருந்தது. ‘நாடு கடந்த நிறுவனம் அதன் பழைய பல்தேசிய அமைப்பு வடிவத்தை மாற்றீடு செய்யத் தொடங்கிய காலமது. அதற்குப் பிந்தைய நான்கு தசாப்தங்களில், அந்தச் செயல்முறை அதன் உச்சக்கட்ட முடிவை எட்டியுள்ளது. பழைய வகையிலான பன்னாட்டு நிறுவனம் என்பது, அடிப்படையில் வெளிநாடுகளில் செயல்பாடுகளைக் கொண்ட ஒரு தேசிய நிறுவனமாகவே இருந்தது. அதாவது, அமெரிக்க, ஜேர்மானிய அல்லது ஜப்பானிய நிறுவனங்கள் வெளிநாடுகளில் துணை நிறுவனங்களை அமைத்தாலும், அவற்றின் தயாரிப்புகள் தேசிய அடையாளத்துடனேயே திகழ்ந்தன. அந்த உலகம் இன்று இல்லை. உற்பத்தி என்பது இப்போது ஒற்றை, உலகளாவிய ஒருங்கிணைந்த செயல்முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைப்பின் விளைவாக, அந்தப் பொருட்களிலிருந்து அவற்றின் தேசிய அடையாளமும் நீக்கப்பட்டுவிட்டது..

76.  இன்று அமெரிக்கக் கார், ஜேர்மானிய இயந்திரக் கருவி, கொரியத் தொலைபேசி அல்லது சீனக் கணினி என்றெல்லாம் எதுவும் இல்லை. மிச்சிகனில் உருவாக்கப்படும் வாகனத்தில், டச்சு அச்சுக்கலை இயந்திரங்களால் தயாரிக்கப்பட்ட ஜப்பானிய உலோகத் தகடுகளில் தைவானில் உருவாக்கப்பட்ட குறைமின்கடத்திகள் (semiconductors) சியுடாட் ஜுவாரெஸ் மற்றும் ஹோண்டுராஸிலிருந்து வரும் மின்னிணைப்புக் கம்பிகள், சீனாவில் சுத்திகரிக்கப்பட்ட அரிய கனிமங்கள், பெங்களூர் மற்றும் சியாட்டிலில் எழுதப்பட்ட மென்பொருள், மற்றும் கினியன் பாக்சைட்டிலிருந்து உருக்கப்பட்ட அலுமினியம் ஆகியவை அடங்கியுள்ளன. ஒரு காலத்தில் ஒரு பொருளின் தேசிய மூலத்தைக் குறிப்பிட்ட மூலத்தின் அடையாளம் என்பது, இன்று ஒரு பொருளாதாரப் புனை கதையாக மாறிவிட்டது. அது மறைக்கும் முக்கிய உண்மை இதுதான்: ஒவ்வொரு குறிப்பிடத்தக்க பண்டமும் இப்போது, ​​ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களின் கூட்டு உழைப்பை உள்ளடக்கிய, சிக்கலான உற்பத்தி வலைப்பின்னல்களைக் கொண்ட ஒரு உலகளாவிய உற்பத்திச் செயல்முறையின் விளைபொருளாகும்..

தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நான்ஷா மாவட்டத்தில் அமைந்துள்ள குவாங்சூ துறைமுகத்தில், போக்குவரத்துக்குத் தயாராக உள்ள கப்பல் கொள்கலன்கள் காணப்படுகின்றன, 2025 ஏப்ரல் 17. [AP Photo/Ng Han Guan]

77. இன்று முதன்மையாகத் திகழ்வது, தேசிய எல்லைகளைக் கடந்து மேற்கொள்ளப்படும் உற்பத்தியின் ஒழுங்கமைப்பே ஆகும் —இது, எந்தவொரு தேசியப் பகுதியும் தற்சார்புடையதாகவோ அல்லது தன்னிச்சையாக இயங்கக்கூடியதாகவோ இல்லாத ஒரு தொடர்ச்சியான, ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்ட செயல்முறையாகும். உண்மையில், அந்தத் தொழிற்சாலை உலகம் முழுவதும் பரவியுள்ளது. குவாங்டாங், ஸ்டட்கார்ட், சாவ் பாலோ மற்றும் டெட்ராய்ட் ஆகிய இடங்களில் உள்ள தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பொருட்களைத் தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ மட்டும் உற்பத்தி செய்வதில்லை. மாறாக, அவர்கள் ஒரே உற்பத்திச் செயல்முறையின் வெவ்வேறு நிலைகளில், ஒரே பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்..

78. இந்த மாற்றத்திலிருந்து முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்த முடிவுகளை எடுத்துள்ளது: அதாவது, முழு உலகின் வளங்களும், சந்தைகளும், விநியோகப் பாதைகளும் இன்றியமையாத தேசிய நலன்கள் என்றும், அவை பலப்பிரயோகத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது. ஆனால், அதே மாற்றம் தொழிலாளி வர்க்கத்தை இதற்கு நேர்மாறான ஒரு முடிவை நோக்கி இட்டுச் செல்கிறது.

79. உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி வலைப் பின்னல்கள் ஆகியவை, ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் ஒரே மாதிரியான வங்கிகளையும், ஒரே மாதிரியான நிறுவனங்களையும் மற்றும் ஒரே மாதிரியான அரசாங்கங்களையும் எதிர்கொள்கிறோம் என்பதைக் கண்டறிவதற்கான இரத்த நாளங்களாக (தமனிகளாக) செயல்படுகின்றன.

80. இந்த ஒன்றுகூடலின் மனித அடிப்படையானது, சர்வதேசத் தொழிலாளி வர்க்கம் அடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சியாகும். சர்வதேசத் தொழிலாளர் அமைப்புகளின் கணக்கீட்டின்படி, தற்போதைய உலகளாவிய தொழிலாளர் படை சுமார் 350 கோடி மனிதர்களைக் கொண்டுள்ளது. இது வரலாற்றிலேயே ஒன்றுதிரண்ட மிகப்பெரிய சமூக சக்தியாகும். அத்துடன், மனிதகுலத்தில் பெரும்பான்மையானோர் இப்போது நகரங்களில் வசிக்கின்றனர். இந்த மைல்கல் தற்போதைய நூற்றாண்டில்தான் முதன்முறையாக எட்டப்பட்டுள்ளது.

81. ஆசியாவின் தொழில் துறைத் தொழிலாளர் வர்க்கம் மட்டுமே, 1917-ல் இருந்த ஒட்டுமொத்த உலகப் பாட்டாளி வர்க்கத்தை விடப் பல மடங்கு பெரியதாகும். சுமார் 75 கோடி (முக்கால் பில்லியன்) எண்ணிக்கையைக் கொண்ட சீனாவின் தொழிலாளர் வர்க்கம், உலக வரலாற்றிலேயே மிகப்பெரியதாகும். இந்தியாவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தங்கள், ஒரே நாளில் 20 கோடிக்கும் (200 மில்லியன்) அதிகமான தொழிலாளர்களை மீண்டும் மீண்டும் அணிதிரட்டியுள்ளன. இவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகளாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, தூய குடும்பம் (The Holy Family) என்ற நூலிருந்து மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டும் ஒரு பத்தியில், இந்த வெகுஜன மக்களுக்கும் அவர்களின் வரலாற்றுப் பணிக்கும் இடையிலான தொடர்பை நிர்வகிக்கும் விதியை மார்க்ஸும் எங்கெல்ஸும் நிறுவினர்: எனவே, “வரலாற்று நடவடிக்கையின் முழுமையான தன்மையுடன் இணைந்து, அந்தச் செயலை மேற்கொள்ளும் மக்கள் திரளின் அளவும் அதிகரிக்கும். அரசியல் கண்ணோட்டத்தில், இந்த நுண்ணறிவு ஐன்ஸ்டீனின் E = mc² எனும் சமன்பாட்டைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

82. இந்தக் கூற்றை தலைகீழாகவும் வாசிக்கலாம். அவ்வாறு வாசிக்கும்போதே, எமது சகாப்தத்திற்கான அதன் முழுமையான முக்கியத்துவம் புலப்படுகிறது. இப்போது நடவடிக்கைக்குள் இழுக்கப்படும் வெகுஜனத்தின் அளவே, நெருங்கிவரும் வரலாற்று நடவடிக்கையின் முழுமையின் அளவுகோலாகும். நகரங்களில் குவிந்துள்ள, இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் ஒருங்கிணைந்த உற்பத்தி அமைப்பால் பிணைக்கப்பட்டுள்ள, அதேவேளையில் உலகப் போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக வறுமை ஆகியவற்றை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் மூன்றரை பில்லியன் மக்கள் கொண்ட ஒரு சமூக சக்தியை, வெறும் ஒரு போராட்டத்திற்காக வரலாறு ஒன்றிணைக்கவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்டதிலேயே மிக முழுமையான சமூக மாற்றத்திற்காகவே — அதாவது உலக சோசலிசப் புரட்சிக்காகவே — அந்தச் சக்தி ஒன்றிணைக்கப்பட்டு வருகிறது..

83.  2020-ஆம் ஆண்டிற்கான முன்னோக்கு இந்த தசாப்தத்தின் தீர்க்கமான போக்காக அடையாளம் கண்ட தொழிலாள வர்க்கத்தின் தீவிரமடையும் போக்கு, தற்போது தெளிவாகவே நிகழ்ந்து வருகிறது. 2018-2019 காலகட்டத்தில் காணப்பட்ட உலகளாவிய எழுச்சிகளை — அதாவது பிரான்சில் மஞ்சள் சீருடை இயக்கம், சிலி முதல் சூடான் வரை நடைபெற்ற பாரிய வெகுஜன எழுச்சிகள் மற்றும் அமெரிக்காவில் மீண்டும் தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டங்கள் ஆகியவற்றை — அந்த அறிக்கை தனது ஆய்வின் தொடக்கப் புள்ளியாகக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வந்த ஆறரை ஆண்டுகால நிகழ்வுகள், இந்தப் போக்கு விரிவடைந்து வரும் அளவிலேயே தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளன.

84.  கோவிட் பெருந்தொற்று, திரளான தொற்றை உருவாக்கும் திட்டமிட்டக் கொள்கையின் மூலமாக முப்பது மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்டது. இது, உயிரையே இலாபத்திற்குப் அடிபணிய வைக்கும் கொடூரமான வடிவத்தை அம்பலப்படுத்தியதோடு, அனைத்துக் கண்டங்களிலும் வேலைநிறுத்த அலைகளைத் தூண்டியது. பிரெஞ்சு ஓய்வூதியப் போராட்டங்கள், பிரிட்டிஷ் வேலைநிறுத்த அலைகள், அமெரிக்க வாகன, சரக்கு மற்றும் சுகாதாரத் துறை வேலைநிறுத்தங்கள், தெற்கு ஐரோப்பா மற்றும் தெற்காசியா முழுவதும் நடந்த பொது வேலைநிறுத்தங்கள், காஸா இனப்படுகொலைக்கு எதிரான இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள், மற்றும் மூன்று “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள் —அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள்— ஆகிய அனைத்தும் ஒரு ஒற்றை ஏறுமுக வளைவரைப் போக்கை உருவாக்குகின்றன. அமெரிக்காவில் எண்பது ஆண்டுகளாக நிலவி வந்த ஒரு விலக்கப்பட்ட கருத்தாக்கமாக இருந்துவந்த சோசலிசம், மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இது அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளால் (DSA) மீண்டும் ஜனநாயகக் கட்சியை நோக்கியே திருப்பப்படும் ஒரு சிதைந்த வடிவமாக இருந்தாலும், எந்தவொரு அமைப்பாலும் நிரந்தரமாகக் கட்டுப்படுத்த முடியாத ஒரு நனவான மாற்றத்தையே இவை வெளிப்படுத்துகின்றன.

ஓரிகன் மாநிலம் போர்ட்லாண்டில் “மன்னர்கள் வேண்டாம்” போராட்டத்தின்போது, நீர்முனைப் பூங்கா ஒன்றில் மக்கள் கூடியுள்ளனர், சனிக்கிழமை, 2025 அக்டோபர் 18. [AP Photo/Jenny Kane]

85. வட அமெரிக்காவில், ஒரு சமூக சக்தியாக அழிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட ஒரு வர்க்கம், ஒவ்வொரு துறையிலும் மீண்டும் தனது போராட்டத்தைத் தொடங்கியுள்ளது—அமேசான் மற்றும் யுபிஎஸ் (UPS) நிறுவனங்களில் வெடித்த கிளர்ச்சிகள், மற்றும் கண்டம் தழுவிய அளவில் ஒருங்கிணைந்த தொழிலாளி வர்க்கத்தின் நுழைவை ஒரே சக்தியாக அறிவித்த மெக்சிக்கோவின் மாடமோரோசில் இடம்பெற்ற (Matamoros) தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் ஆகியவை இதற்குச் சான்றாகும். தொழிற்சங்கங்களுக்குள், 90 சதவீதத்திற்கும் அதிகமான ஒப்பந்த நிராகரிப்புகளும், UAW தலைவர் தேர்தலுக்கான வில் லெஹ்மன் (Will Lehman) பிரச்சாரத்திற்கு கிடைத்த வரவேற்பும், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான கிளர்ச்சியைப் பதிவு செய்கின்றன. உலக ஏகாதிபத்தியத்தின் மிக முக்கிய மையப் பகுதியான அமெரிக்காவிலேயே இந்த நனவு விரிவடைந்து வருகிறது. மேலும், அமெரிக்க மேலாதிக்கமானது எந்தத் தொழிலாளி வர்க்கத்தின் அமைதியான சம்மதத்தை ஒரு முன்நிபந்தனையாகக் கொண்டுள்ளதோ, அதே தொழிலாளி வர்க்கத்திற்குள்ளேயே இது நிகழ்கிறது. இது அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் போராட்டங்களை ஒரே நீரோட்டமாக ஒருங்கிணைக்கிறது.

86. ஆப்பிரிக்காவில், உலகின் மிக இளமையான மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கம், உலக வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புரட்சிகர சக்தியாக உருவெடுத்து வருகிறது. நைஜீரியாவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தங்கள், நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட கென்ய இளைஞர்களின் எழுச்சி மற்றும் தென் ஆப்பிரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டங்கள் ஆகியவை, இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகப் புரட்சியின் மையத்தில் நிலைபெறவிருக்கும் ஒரு வர்க்கத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளாகும்.

87. ரஷ்யாவிலும் சீனாவிலும், ஏகாதிபத்தியத்தின் சுற்றிவளைப்பும் ஆத்திரமூட்டல்களும், அந்த இரு தன்னலக்குழுக்களின் ஆட்சிகளும் தங்கியிருக்கும் அடக்குமுறையின் வரலாற்று நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன. ரஷ்யாவில், கொள்ளையடிக்கப்பட்ட சோவியத் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போரில், தொழிலாளர்கள் உயிரிழந்தோர் பட்டியலில் இடம்பெறுகின்றனர். 1917-ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர்கள் என்ன முடிவுக்கு வருவார்கள் என்று அஞ்சுவதால், அந்த ஆட்சி லெனினைக் கண்டிக்கிறது. சீனாவில், அதன் இராணுவச் செலவினங்களுக்கு நிகரான உள்நாட்டுப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட ஒரு அரசு, சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது பிரதான எதிரியை எங்கே காண்கிறது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. இந்த இரு நாடுகளிலும் வரவிருக்கும் இயக்கங்கள், வாஷிங்டனிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட வண்ணப் புரட்சிகளாக இருக்காது. அவை ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய தன்னலக்குழுக்களுக்கும் எதிராக ஒருசேர இயக்கப்படும். மேலும், ஸ்டாலினிசத்திற்கு எதிராக நான்காம் அகிலம் பாதுகாத்த மரபிலேயே அவற்றுக்கான பதில்களையும் கண்டறியும்.

88. இந்த இயக்கத்திற்கும் அதன் அரசியல் வெளிப்பாட்டிற்கும் இடையில் நிற்பது புரட்சிகர தலைமையின் நெருக்கடியாகும். இந்த தலைமைமைப் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும் என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஒருபோதும் கருதியதில்லை. வெகுஜன இயக்கங்கள் இன்னமும் அரசியல் ரீதியாகச் சிறைபிடிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்கள், போரின் கட்சியான ஜனநாயகக் கட்சியை நோக்கியே மீண்டும் திசைதிருப்பப்பட்டுள்ளன. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், போர்ப் பொருளாதாரத்தின் தொழில்முறைப் பொலிஸாராக மேன்மேலும் பகிரங்கமாகச் செயல்படுகின்றன.

89. மில்லியன் கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட AFL-CIO தொழிற்சங்கமானது, ஈரான் போர் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. UAW தொழிற்சங்கத் தலைவர், இரண்டாம் உலகப் போரின் “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியம்” என்ற பழைய ஏகாதிபத்தியப் புராணத்தைத் தனது முன்மாதிரியாகக் குறிப்பிடுகிறார். அவர் தலைமைதாங்கும் தொழிற்சங்க இயந்திரம், வேலைநிறுத்த வாக்கெடுப்புகளைக் சீர்குலைத்து, 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களை வலுக்கட்டாயமாகத் திணிக்கிறது. மேலும், சாமானிய உறுப்பினர்களின் எதிர்ப்பை தணிக்கை, முறைகேடான தேர்தல்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் அது எதிர்கொள்கிறது. வில் லேஹ்மனின் பிரச்சாரம் மற்றும் அவரது சட்டப் போராட்டங்கள் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளவாறு, அரசு மற்றும் முதலாளிகளுடன் இந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் கொண்டுள்ள கூட்டணியை இனி உறுப்பினர்களிடம் தர்க்கரீதியான வாதங்கள் மூலம் நியாயப்படுத்த முடியாது என்பதே இதற்குக் காரணமாகும்..

90. தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்து தொழிலாளர்களுக்கே அதிகாரத்தை மாற்றுவது என்ற முன்னோக்கின் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டில் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) தொடங்கப்பட்டது.

VI. முடிவுரை

91. 2020-ஆம் ஆண்டின் அறிக்கை, புதிய தசாப்தத்தின் வளர்ச்சிப் போக்குகளை மதிப்பிட்டது: மூன்றாம் உலகப் போரை நோக்கிய ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் வெடிப்பு; முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தின் முறிவு; முதலாளித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சியும் எதேச்சாதிகார ஆட்சியை நோக்கிய உந்துதலும்; மேலும் புரட்சிகரத் தலைமை நெருக்கடியை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அளவிலான தீவிரமயமாதலும் ஆகும். இந்த தசாப்தத்தின் நடுப்பகுதியில், இந்தப் போக்குகள் ஒவ்வொன்றும் அந்த அறிக்கையின் சொந்த மதிப்பீடுகளையே மிஞ்சும் வலிமையுடன் தம்மை வெளிப்படுத்தியுள்ளன.

92. வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, தற்போதைய மோதலானது 1914 இல் தொடங்கிய ஒரு நாடகத்தின் மூன்றாவது அங்கமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது மேலாதிக்கத்தின் கீழ் உலகை மறுஒழுங்கமைப்பதற்காக, 1917 ஏப்ரலில் ஐரோப்பியப் போரில் நுழைந்தது. அடுத்த ஏழு தசாப்தங்களாக, அந்தத் திட்டம் அக்டோபர் புரட்சியாலும் அதன் உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விளைவுகளாலும் தடைசெய்யப்பட்டது. 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் (USSR) கலைப்பு, அந்தத் தடையை அகற்றியதுடன், அக்டோபர் புரட்சி ஒருபோதும் நிகழ்ந்திருக்காதது போல உலகை மீளுருவாக்கி அந்தத் திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கான அனுமதியாகவும் வரவேற்கப்பட்டது.

93. இந்தப் போர், அதன் சாராம்சத்தில், சோசலிசப் புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் நூற்றாண்டு காலப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இருக்குமானால், போருக்கு எதிரான போராட்டம் அந்தப் புரட்சியை மீண்டும் முன்னெடுப்பதாகவே இருக்க வேண்டும், இருக்கவும் முடியும். அது வேறு எந்த வடிவத்தையும் எடுக்க முடியாது. அது எந்தவொரு தேசிய அரசையும் பாதுகாக்கும் வடிவத்திலோ, அல்லது எதிர்புரட்சிகரத் திட்டத்தின் ஒரு கருவியாகவே இருந்த “விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கை” மீள நிறுவும் வடிவத்திலோ, அல்லது போலி-இடதுகளின் அழுத்த அரசியலின் வடிவத்திலோ அமைய முடியாது. மாறாக, சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் அவசியமாகும்.

94. ஒரு முன்னோக்கு என்பது போராட்டத்திற்கான ஒரு கருவியாகும். அதன் வெளியீடும், அதன் சரிபார்ப்பும், அதன் பாதுகாப்பும், தலைமை நெருக்கடிக்கான தீர்வின் முக்கிய தருணங்களாகும். இந்த நெருக்கடி வெறும் புறநிலைச் செயல்முறைகளால் மட்டும் தீர்க்கப்படுவதில்லை. மாறாக, இச்செயல்முறைகளுக்குள் புரட்சிகரக் கட்சியை நனவுபூர்வமாகக் கட்டியெழுப்புவதன் மூலமே அது தீர்க்கப்படுகிறது.
இந்த அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் மேலும் வெடிப்புத் தன்மையைப் பெற்று வருகின்றன. இதுவே புரட்சிகரத் தலைமைக்கான போராட்டத்திற்கு அதன் தீர்க்கமான மற்றும் ஒத்திவைக்க முடியாத தன்மையை வழங்குகிறது.

95. ஏகாதிபத்தியப் போரின் புற்றுநோய்ப் பரவலும், உலக வர்க்கப் போராட்டத்தின் சங்கமிப்பும் இரண்டு தனித்தனியான செயல்முறைகள் அல்ல; அவை ஒரே செயல்முறையாகும். மோதிக்கொண்டிருக்கும் இரு வர்க்கங்களின் நிலைப்பாடுகளிலிருந்து பார்க்கப்படும் அதே நெருக்கடிதான் அது. இந்த இரு வர்க்கங்களுக்கிடையிலான மோதலே, இந்தச் சகாப்தத்தின் சாத்தியமான இரண்டு விளைவுகளில் எது மேலோங்கும் என்பதைத் தீர்மானிக்கும்.
கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் ஏகாதிபத்தியப் போர் தொடங்குவதற்கு முன்னதாக, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் ட்ரொட்ஸ்கி இந்தச் சகாப்தத்தின் சாராம்சத்தை இவ்வாறு வரையறுத்தார்: மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடியானது, புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாகச் சுருக்கப்பட்டுள்ளது.

லியொன் ட்ரொட்ஸ்கி

96. நான்காம் அகிலம் என்பது வரலாற்றின் ஒரு கட்சியாகும். மார்க்சிசத்தின் நிலைப்பாட்டிலிருந்து, இதன் பொருள், கட்சியின் முன்னோக்கும் நடைமுறையும் வரலாற்றுச் சகாப்தத்தின் தன்மை குறித்த ஒரு கருத்தாக்கத்தில் வேரூன்றியுள்ளன, அதனாலேயே வரையறுக்கப்படுகின்றன என்பதாகும். ஒரு கட்சி தனது பணிகளைச் சரியாகத் தீர்மானிக்க வேண்டுமானால், நிகழ்வுகளை ஒட்டுமொத்த வரலாற்று சகாப்தத்தின் பின்னணியில் அது நனவுபூர்வமாகப் பொருத்திக் காண வேண்டும். புரட்சிகர இயக்கம் எதிர்கொள்ளும் அடிப்படை தத்துவார்த்த மற்றும் அரசியல் சவாலானது, போர் மற்றும் புரட்சிகர சகாப்தத்தின் வரலாற்றுப் பாதையில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியைச் சரியாகக் கண்டறிந்து நிறுவுவதாகும்.

97. 2020 ஜனவரி 3 அன்று வெளியிடப்பட்ட முன்னோக்கு, ஏதோ ஒரு திடீர் நுண்ணறிவின் விளைவாக எழுந்ததல்ல. ஆகஸ்ட் 2019-இல் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேசக் கோடைக்காலப் பள்ளியில், அனைத்துலகக் குழுவின் வரலாற்றைப் பற்றிய விரிவான மதிப்பாய்வை நாங்கள் மேற்கொண்டோம். இந்த ஆய்வின் போக்கில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஐந்து கட்டங்களை நாங்கள் அடையாளம் கண்டோம்.

98. முதல் கட்டம் 15 ஆண்டுகால காலகட்டத்தை உள்ளடக்கியது. இது 1923-ல் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இடது எதிர்ப்பு (Left Opposition) அணி உருவானதிலிருந்து, 1938-ல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸ் நடைபெற்றது வரையிலான காலமாகும். இரண்டாம் கட்டம், ஸ்தாபக காங்கிரஸிலிருந்து 1953 நவம்பரில் நான்காம் அகிலத்தில் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பிளவு —பாப்லோவாத திருத்தல்வாதிகளுடனான பிளவு— வரையிலான காலத்தை உள்ளடக்கியது. மூன்றாம் கட்டம், அனைத்துலகக் குழு நிறுவப்பட்டதிலிருந்து 1985-86இல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான (WRP) பிளவு வரை நீண்டது. இந்தக் கட்டம், நான்காம் அகிலத்தின் மீதும் அதற்குள்ளும் ஊடுருவியிருந்த பாப்லோவாதக் கோட்பாடு மற்றும் அரசியலின் தீய செல்வாக்கிற்கு எதிரான நீண்ட போராட்டத்தால் வரையறுக்கப்பட்டது. நான்காம் கட்டம், 1986 பிப்ரவரியில் WRP உடனான பிளவு முழுமையடைந்ததிலிருந்து, 2019-ல் நடைபெற்ற கோடைகாலப் பயிற்சி முகாம் வரையிலான காலத்தை உள்ளடக்கியது. இந்தக் கட்டமானது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்துவதிலும், உலக சோசலிசப் புரட்சிக் காலத்தில் பெறப்பட்ட முந்தைய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்தப் பாரம்பரியத்தை மேலும் கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்தியது.

99. இந்தப் பள்ளி, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் 2019 ஆம் ஆண்டை ஐந்தாவது கட்டத்தின் தொடக்கமாக அடையாளம் கண்டது. நிச்சயமாக, இந்தத் தொடக்கப்புள்ளி ஓரளவிற்கு உத்தேசமான தன்மையைக் கொண்டிருந்தது. 1923, 1938, 1953 மற்றும் 1985-86 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்ததைப் போல, இது ஒரு குறிப்பிட்ட முக்கியமான நிகழ்வுடன் மட்டும் அடையாளப்படுத்தப்படவில்லை. இருப்பினும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை அடையாளம் கண்டது என்பது தன்னிச்சையான ஒன்று அல்ல. 2019 கோடை காலத்திற்குள், உலகளாவிய நெருக்கடியின் ஒரு புதிய கட்டம் எட்டப்பட்டுவிட்டது என்பதும், இது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் அனைத்துலகக் குழுவின் பங்கினை ஆழமான தாக்கத்தை எற்படுத்தும் என்பதும் போதுமான அளவிற்குத் தெளிவாக்கப்பட்டிருந்தது.

100. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் புதிய ஐந்தாவது கட்டம் குறித்து, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைக்காலப் பள்ளியின் தொடக்க அறிக்கை பின்வருமாறு கூறியது:

சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரம்மாண்டமான வளர்ச்சியை இக்கட்டம் சாட்சியப்படுத்தும். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துலகக் குழுவால் அடையாளம் காணப்பட்ட பொருளாதார உலகமயமாக்கலின் புறநிலைச் செயல்பாடுகள், மேலும் ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பங்களின் எழுச்சியோடு இணைந்து, இச்செயல்பாடுகள் வர்க்கப் போராட்டத்தை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்ப்பதற்குக் கூடக் கடினமாக இருந்த அளவிற்கு சர்வதேசமயமாக்கியுள்ளன. இந்த புறநிலைச் சமூக-பொருளாதாரச் செயல்பாட்டின் நனவுபூர்வமான அரசியல் தலைமைத்துவமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்படும். இது, ஏகாதிபத்தியப் போருக்கான முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சி எனும் வர்க்க அடிப்படையிலான மூலோபாயத்தை முன்வைக்கும். இது நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டமாகும்.[12]

101. இந்தக் காங்கிரஸ் எதிர்கொள்ளும் சவால்கள் என்னவென்றால், நான்காம் அகிலத்தின் ஐந்தாம் கட்டம் மற்றும் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி குறித்த ஒன்றோடொன்று பிணைந்த கருத்துகளுக்கு ஏற்ப, கட்சியின் செயல்பாடுகளைச் சீரமைத்து முன்னெடுத்துச் செல்வதாகும்.

102. நடைமுறையில் இந்த அணிசேர்க்கை எதனை உணர்த்துகிறது? இது, எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்திற்குள் கட்சியைக் கட்டியெழுப்புவதையே குறிக்கிறது. இந்த அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு என்பது நிகழ்வுகள் குறித்த ஒரு விமர்சனம் அல்ல. மாறாக, அந்நிகழ்வுகளுக்குள் தலையீடு செய்வதற்கான ஒரு வழிகாட்டியாகும். ஒவ்வொரு கண்டத்திலும் முன்னேறிச் செல்லும் தீவிரமயமான தொழிலாள வர்க்கத்தின் தலைமையைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது. மேலும் அந்தத் தலைமை பற்றிய கேள்வியானது ஒரே ஒரு வழியில் மட்டுமே தீர்க்கப்படுகிறது—அது தொழிலாள வர்க்கத்தின் சொந்தப் போராட்டங்களுக்குள்ளேயே புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதன் மூலமாகும்.

103. இந்தப் பணியின் மையம், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) பணியை விரிவுபடுத்துவதாகும். முதலாவதாக, சாமானிய தொழிலாளர் குழுக்கள் வர்க்கப் போராட்டத்திற்கான கருவிகளாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதாவது, தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வகுத்துக்கொள்ளவும், பணியிடங்கள், தொழில்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளைத் தாண்டி தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், அதிகாரபூர்வ அமைப்புகளால் ஒவ்வொரு போராட்டத்தின் மீதும் திணிக்கப்படும் தனிமைப்படுத்தலை உடைத்தெறியவும் பயன்படும் உறுப்புகளாக அவை இருக்க வேண்டும். இரண்டாவதாக, அவை அதிகாரத்துவத்திற்கு எதிரான கிளர்ச்சியின் அமைப்பு மையங்களாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். சாமானிய தொழிலாளர்கள் பெருநிறுவனவாத அதிகாரத்துவங்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி, தங்கள் போராட்டங்களின் தலைமையைத் தங்கள் சொந்தக் கரங்களில் எடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகளாக அவை திகழ வேண்டும். மூன்றாவதாக, அவை வெறுமனே தற்காப்பு அமைப்புகளாக மட்டுமன்றி, உண்மையான தொழிலாளர் ஜனநாயகத்தின் மற்றும் தொழிலாளர் அதிகாரத்தின் முன்னோடி வடிவங்களாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இவற்றை உருவாக்குவதன் மூலம், தொழிலாள வர்க்கம் தற்போதைய நிலைமையை வெறுமனே எதிர்ப்பதோடு நின்றுவிடுவதில்லை. மாறாக, அது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையை மறுஒழுங்கமைக்கும் உறுப்புகளை அவற்றின் ஆரம்ப வடிவங்களிலேயே உருவாக்கி, எதிர்கால ஆளும் வர்க்கமாகத் தன்னை வடிவமைத்துக்கொள்ளத் தொடங்குகிறது.

104. தொழிலாள வர்க்கத்தில் கட்சியைக் கட்டியெழுப்புவது என்பது, சமூகச் சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் (IYSSE) விரிவாக்கத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 38 முதல் 39 சதவீதத்தினர் 30 வயதிற்குட்பட்டவர்கள். அதாவது, சுமார் 340 மில்லியன் மக்களில் ஏறத்தாழ 128 முதல் 130 மில்லியன் பேர் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் தோராயமாக 22 சதவீதம் பேர் 18 வயதிற்குட்பட்டவர்களாகவும், மேலும் 16 முதல் 17 சதவீதம் பேர் 18 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களாகவும் உள்ளனர். சமூகத் தீவிரமயமாதல் செயல்முறை இளைஞர்களிடையே மிகுந்த தீவிரத்துடன் வெளிப்படுகிறது.

105. போர், பொருளாதார நெருக்கடி, பெருந்தொற்று மற்றும் சமூகச் சமத்துவமின்மையின் தடையற்ற வளர்ச்சி ஆகியவற்றைத் தவிர வேறெதையும் அறிந்திராத, மேலும் முதலாளித்துவத்தைச் செழிப்பு மற்றும் ஜனநாயகத்துடன் அல்லாமல் பேரழிவுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் ஒரு தலைமுறையினரிடையே, சோசலிசத்திற்கான ஆதரவு உணர்வு மிகவும் பரந்த அளவில் வெளிப்படுகிறது என்பதை ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ல்லூரிக் கல்வி பெறுவது ஒரு பாரிய பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளது. ஆனால் இலட்சக்கணக்கான இளைஞர்கள் தாங்க முடியாத கடன் சுமையுடன் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறுகின்றனர். சுரண்டலுக்கு உள்ளாகும் உரிமையைப் பெறுவதற்காக அவர்கள் தங்கள் எதிர்காலத்தையே அடமானம் வைக்கின்றனர்.முதலாளித்துவ வர்க்கத்தின் மூலோபாயவாதிகள் இந்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி ஆழ்ந்த விழிப்புணர்வுடன் உள்ளனர். கட்சி தனது முந்தைய அறிக்கைகளில் சுட்டிக்காட்டியபடி, ஆளும் வர்க்கத்தின் சிந்தனைக் குழாம்களும் பிரதான ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களும் இளைஞர்களிடையே உருவாகி வரும் இந்த இடதுநோக்கிய நகர்வை வெளிப்படையான பதற்றத்துடன் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. தற்போதைய சமூக மற்றும் அரசியல் ஒழுங்கின் ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு மரண அச்சுறுத்தலாக இருப்பதை அவை உணர்கின்றன.

106. மேலும், போரின் சுழலுக்குள் இழுக்கப்படப்போவது இளைஞர்களே ஆவர். ஏகாதிபத்திய போர்த் தீ தீவிரமாகப் பரவி வருகையில், கட்டாய இராணுவச் சேர்க்கை தவிர்க்க முடியாமல் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்படும். “சாதாரண” காலங்களில் இளைஞர்களுக்குக் கடன் சுமையையும் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் தவிர வேறெதையும் வழங்காத ஆளும் வர்க்கம், போரில் அவர்களின் உயிரையே பலியாகக் கேட்கும். எனவே, ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டம் IYSSE-இன் பணிகளில் மிக முக்கியமான முக்கியத்துவத்தைப் பெறும். வாழ்வா-சாவா என்ற இந்தப் போராட்டத்தில், போரை நிறுத்தும் திறன் கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை நோக்கி இளைஞர்கள் திரும்ப வேண்டும். மேலும், அவர்கள் சர்வதேச சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தை அடித்தளமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

2024 மார்ச் 28 அன்று, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் காஸா இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

107. ட்ரொட்ஸ்கி, தனது இடைமருவு வேலைத்திட்டத்தில், புரட்சிகர இயக்கத்தின் புத்துயிர்ப்பில் இளைஞர்களின் “புத்துணர்ச்சியான உற்சாகத்தையும் தீவிரமான முனைப்பையும்” இன்றியமையாத கூறுகளாகச் சுட்டிக்காட்டினார். ஆனால், இந்த உற்சாகம் எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்தாலும், கட்சி அதை மட்டுமே நம்பியிருக்கவில்லை. கல்வியால் செழுமைப்படுத்தப்படாத உற்சாகம் சிதறடிக்கப்படுகிறது அல்லது தவறான திசையில் திருப்பிவிடப்படுகிறது. இளைஞர் தலைமுறையின் இயல்பான தீவிரமடைந்துவரும் போக்கை நனவு பூர்வமான புரட்சிகர நம்பிக்கையாக மாற்றுவதே IYSSE-இன் பணியாகும். அதாவது, மாணவர்களையும் இளம் தொழிலாளர்களையும் தத்துவார்த்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பயிற்றுவிப்பது, மார்க்சிச இயக்கத்தின் வரலாறு மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள் குறித்த அறிவால் அவர்களை ஆயுதபாணியாக்குவது, மேலும் நான்காம் அகிலத்தின் உறுப்பினர்களாக அவர்களைப் பயிற்றுவிப்பது ஆகியவையே அதன் பணிகளாகும். நாடு முழுவதிலும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் IYSSE இன் கிளைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். உயர்நிலைப் பள்ளி இளைஞர்கள் மத்தியிலான தனது பணியையும் IYSSE புறக்கணிக்க முடியாது. சமூக நிலைமைகள் ஏற்படுத்தும் தாக்கத்தால், அவர்களது இளம் வயதின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே அவர்களின் தீவிரமயமாதல் தூண்டப்படுகிறது. அவர்கள் போலி-இடது அமைப்புகளின் செல்வாக்கிற்கோ அல்லது இராணுவத்தின் ஆள்சேர்ப்பு முகவர்களிடமோ விட்டுவிடப்படக் கூடாது.

108. கட்சியின் வளர்ச்சி என்பது வெறுமனே உறுப்பினர் எண்ணிக்கையின் அதிகரிப்பு மட்டுமல்ல. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது என்பது, அவர்களுக்கு முறையான அரசியல் கல்வியை வழங்குவதோடு இணைந்திருக்க வேண்டும். உண்மையில், அதிலிருந்து அதைப் பிரிக்கவே முடியாது. போர், சர்வாதிகாரம் மற்றும் சமூகச் சமத்துவமின்மை ஆகியவற்றால் தீவிரமயப்படுத்தப்படும் தொழிலாளர்களும் இளைஞர்களும், நான்காம் அகிலத்தின் வரலாற்றில் செறிவூட்டப்பட்டுள்ள சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் மூலோபாய அனுபவங்களை உள்வாங்கிக்கொள்ளும் அளவிற்கு மட்டுமே ஒரு புரட்சிகர சக்தியாக மாற்றப்படுவார்கள்.
மார்க்சிசக் கோட்பாடு என்பது கட்சியின் நடைமுறைக்குரிய ஒரு அலங்காரப் பொருள் அல்ல. அதுவே அதன் அஸ்திவாரமாகும். புரட்சிகரக் கோட்பாடு இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது.

109. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட்கள் (DSA) அமைப்பின் விரிவாக்கத்தில், சோசலிச உணர்வுகளின் வளர்ச்சி ஒரு ஆரம்பகட்ட மற்றும் இன்னும் சிதைவுற்ற வெளிப்பாட்டைக் காணும் சூழலில், இது குறிப்பிட்ட முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்த வளர்ச்சியின் புறநிலை முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும்: இது பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இடது நோக்கிய நகர்வையும், பல தசாப்த கால சோசலிச எதிர்ப்புத் தடைகளின் வீழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது. ஆனால் அங்கீகரிப்பு என்பது அதற்குத் தழுவிக்கொள்வது அல்ல. DSA என்பது, வேலைத்திட்டத்திலும் அமைப்புரீதியிலும் ஜனநாயகக் கட்சியுடன் பிணைக்கப்பட்டுள்ள ஒரு குட்டி முதலாளித்துவ அமைப்பாகும். தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் தீவிரமயமாக்கலைக் கட்டுப்படுத்தி, அதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியச் செய்வதே அதன் பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இந்தப் போக்கிற்கோ அல்லது புரட்சிகர சோசலிசத்திலிருந்து விலகிச்செல்லும் இதர குட்டி முதலாளித்துவத் திசைதிருப்பல்களுக்கோ தன்னைத் தழுவிக்கொள்ளாது. எவ்வாறாயினும், இந்த அமைப்புகளில் எதற்கும்—குறிப்பாக DSA-விற்கு எதிர்காலம் இல்லை. உருவாகி வரும் சமூக மற்றும் அரசியல் புயல்களை எதிர்கொள்வதற்கு அவை தகுதியானவையுமல்ல, தயாரானவையுமல்ல. வரலாற்று மற்றும் வர்க்கப் பிரச்சினைகளைப் பொறுமையுடனும் விஞ்ஞானபூர்வமாகவும் விளக்குவதன் மூலமும், போலி-இடதுகளின் அரசியலையும் ஏகாதிபத்தியத்தின் அனைத்து முகமைகளையும், குறிப்பாக ஸ்ராலினிசத்தின் எச்சங்களையும் சர்வதேசத் தொழிலாள வர்க்க இயக்கத்தின் மீது அது தொடர்ந்து செலுத்தி வரும் தீங்கான செல்வாக்கையும் சமரசமின்றி விமர்சிப்பதன் மூலமும், புதிதாகத் தீவிரமயமடைந்த தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கி வென்றெடுக்க SEP தொடர்ந்து போராடும்.

110. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, பிரித்தானியாவில் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) விடுத்த எச்சரிக்கையை SEP மறக்கவில்லை. அக்காலகட்டத்தில், SLL ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கமாகச் செயல்பட்டதுடன், பாப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கியும் வந்தது. அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவாக அப்போது விளங்கிய சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (French: Organisation Communiste Internationaliste, OCI) மத்தியவாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததை எதிர்த்து, SLL பின்வருமாறு எச்சரித்தது:

வளர்ச்சியின் இத்தகையதொரு கட்டத்தில் [அதாவது, தொழிலாள வர்க்கத் தீவிரமயமாதலின் ஆரம்பக் கட்டங்களில்] ஒரு புரட்சிகரக் கட்சியானது, தொழிலாள வர்க்கத்தின் சூழ்நிலைக்குப் புரட்சிகரமான பாதையில் பதிலளிப்பதற்குப் பதிலாக, பழைய தலைமைத்துவங்களின் கீழ் தொழிலாளர்கள் தங்களின் சொந்த அனுபவத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போராட்டத்தின் மட்டத்திற்குத் தன்னைத் தழுவிக்கொண்டு செயல்படும் ஆபத்து எப்போதும் உள்ளது. அதாவது, தவிர்க்க முடியாமல் தோன்றும் ஆரம்பகாலக் குழப்பத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அபாயம் அதற்கு உள்ளது.[13]

111. இந்த எச்சரிக்கைகள், OCI இன் அடுத்தடுத்த காட்டிக்கொடுப்புகளால் மட்டுமன்றி, SLL இன் சொந்தக் காட்டிக்கொடுப்புகளாலும் உண்மையென நிரூபிக்கப்பட்டன. சரியாக இந்தச் சூழலில்தான் கட்சியின் வரலாறு மிக முக்கியமான அர்த்தத்தைப் பெறுகிறது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டம், அதன் சாராம்சத்தில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை இத்தகைய குட்டி முதலாளித்துவப் போக்குகளுக்குள் கரைத்து அழிப்பதற்கு எதிரான ஒரு போராட்டமாகவே இருந்தது. 2019 கோடைப் பள்ளியில் ஆய்வு செய்யப்பட்ட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றிலான ஐந்து கட்டங்களும் வெறுமனே கல்விசார் காலப்பிரிவுகள் அல்ல. அவை உலக சோசலிசப் புரட்சியின் திரட்டப்பட்ட மூலோபாய அனுபவங்களும், அதன் அரசியல் மூலதனமும் ஆகும்.

112. 2028 இல் நடைபெறவுள்ள SEP இன் அடுத்த காங்கிரஸ், 1928 இல் சர்வதேச இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் நூற்றாண்டு நிறைவுடன் ஒத்துவருகிறது. அந்த எதிர்ப்பியக்கத்தின் தோற்றத்தில் ஜேம்ஸ் பி. கனன் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு நிறைவுக்கான தயாரிப்பே, இந்த வரலாற்றில் ஒரு புதிய தலைமுறையைக் கல்வியூட்டி அரசியல் ரீதியாக நெறிப்படுத்துவதற்கான கவனத்தின் மையமாக இருக்க வேண்டும். தொழிலாள வர்க்கத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுவே தவிர்க்க முடியாத முன்நிபந்தனையாகும். 2025 டிசம்பரில் WSWS ஆல் தொடங்கப்பட்ட சோசலிசம் AI, கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் கல்வியூட்டுவதில் ஒரு தீர்க்கமான பங்காற்றும்.

113. இந்த அறிக்கை எடுத்துக்காட்ட முயன்றுள்ளபடி, கட்சியின் முன்னோக்கும் வரலாற்றின் புறநிலை இயக்கமும் வெளிப்படையாக ஒன்றிணையும் புள்ளியில்தான் ஒன்பதாவது காங்கிரஸ் கூடுகிறது. இந்த ஒன்றிணைவு தவிர்க்க முடியாததாக ஆக்கும் புரட்சிகரப் போராட்டங்களுக்கு கட்சியை, அரசியல் ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் தயார்படுத்துவதே அதன் முன்நிற்கும் பணியாகும்.

---

[1] மெஹ்ரிங் புக்ஸ், 2026, ப. x

[2] ஜோன் கெல்லி, உலக ட்ரொட்ஸ்கிசத்தின் அந்திமம் (நியூயோர்க், ரூட்லெட்ஜ், 2023), ப. 97

[3] கெல்லி, ப. 78

[4] முதல் கட்டம் (1999): ஒன்றிணைக்கப்பட்ட ஜேர்மனிக்கு அப்பால் நேட்டோ 'கிழக்கு நோக்கி ஓர் அங்குலம்கூட' நகராது என்று 1990இல் கோர்பச்சேவுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நேரடியாக மீறி, கிளிண்டனின் நிர்வாகத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் முன்னாள் வார்சா ஒப்பந்த நாடுகளான போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு.

இரண்டாம் கட்டம் (2004): எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ருமேனியா, பல்கேரியா ஆகியவை சேர்க்கப்பட்ட, மிகப் பெரிய ஒற்றைச் சுற்று. இதன் மூலம் முதல் முறையாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நிலப்பரப்புக்குள்ளேயே நேட்டோ கொண்டுவரப்பட்டது; மூன்று பால்டிக் குடியரசுகளும் இந்தக் கூட்டணியை ரஷ்யாவின் வடமேற்கு எல்லையில் நேரடியாகக் கொண்டுவந்து நிறுத்தின.

மூன்றாம் கட்டம் (2009): 1999இல் நேட்டோ நடத்திய குண்டுவீச்சுப் பிரச்சாரம் தீர்க்கமான பங்கு வகித்த யூகோஸ்லாவியாவின் துண்டாடலைத் தொடர்ந்து, கூட்டணியை மேற்கு பால்கன் பகுதி வழியாக விரிவுபடுத்திய அல்பேனியா, குரோவாசியா.

நான்காம் கட்டம் (2017 மற்றும் 2020): முன்னாள் யூகோஸ்லாவிய நிலப்பரப்பின் பெரும்பகுதியை உள்வாங்கும் செயல்முறையை நிறைவுசெய்து, அட்ரியாட்டிக் கடல்பகுதியிலும் தெற்கு பால்கன் பகுதியிலும் நேட்டோவின் நிலையை உறுதிப்படுத்திய மொண்டெனேகுரோ (2017), வடக்கு மாசிடோனியா (2020).

ஐந்தாம் கட்டம் (2023–2024): உக்ரேன் போருக்கு நேரடிப் பதிலிறுப்பாக, பல தசாப்தங்களாகக் கடைப்பிடித்துவந்த முறையான நடுநிலைமையைக் கைவிட்ட பின்லாந்து (2023 ஏப்ரல்), சுவீடன் (2024 மார்ச்). பின்லாந்து இணைந்தது மட்டுமே ரஷ்யாவுடனான நேட்டோவின் தரை எல்லையின் நீளத்தை இரு மடங்குக்கும் அதிகமாக்கியது.

[5] டேவிட் நோர்த் , கால் நூற்றாண்டுப் போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்பு 1990-2016 (ஓக் பார்க்: மெஹ்ரிங், 2016), ப. 6

[6] இந்துகுஷ் என்பது, ஆப்கானிஸ்தானின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வழியாக வடக்குப் பாகிஸ்தான் வரை ஏறக்குறைய 800 கிலோமீட்டர் (500 மைல்கள்) நீண்டுள்ள ஒரு மலைத்தொடராகும்; இதன் மேற்குப் பகுதிகள் ஈரானிய எல்லையை நோக்கிப் படிப்படியாகத் தாழ்ந்து மறைய, இதன் கிழக்கு முனை காரகோரம் மலைத்தொடருடனும், அதற்கு அப்பால் பாமிர் மற்றும் இமயமலை அமைப்புகளுடனும் இணைகிறது.

[7] கால் நூற்றாண்டுப் போர், ப. 6

[8] செல்வந்தர்களின் ஆட்சியை எதிர்த்தல்: பில்லியனர்களின் அதிகாரத்திலிருந்து சுதந்திரத்தைப் பாதுகாத்தல், பின்வரும் முகவரியில் அணுகப்பட்டது: https://oi-files-d8-prod.s3.eu-west-2.amazonaws.com/s3fs-public/2026-01/EN%20-%20Resisting%20the%20Rule%20of%20the%20Rich.pdf

[9] ரஷ்யப் புரட்சி: ஒரு புதிய வரலாறு (நியூயோர்க்: பேசிக் புக்ஸ், 2017), ப. 351-352. ரஷ்யப் புரட்சியை ஏன் கற்க வேண்டும்? (ஓக் பார்க்: மெஹ்ரிங் புக்ஸ், 2017-2018), ப. 327இல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது

[10] டேவிட் நோர்த், நான்காம் அகிலம், 1988 ஜூலை-டிசம்பர், ப. 39

[11] பின்வரும் முகவரியில் அணுகப்பட்டது: https://www.marxists.org/archive/marx/works/1845/holy-family/ch06.htm

[12] நான்காம் அகிலமும் உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கும் 1986-1995 (மெஹ்ரிங், 2020), ப. 30-31

[13] ட்ரொட்ஸ்கிசம் எதிர் திருத்தல்வாதம், (லண்டன்: நியூ பார்க், 1975) தொகுதி 5, ப. 113-14

Loading