இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
1940-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதிய வேளையில், மெக்சிகோவின் கோயோகானில் தனது மேசையில் அமர்ந்திருந்த லியோன் ட்ரொட்ஸ்கியை, ஸ்டாலினின் இரகசிய பொலிஸ் படையின் (GPU) முகவரான ரமோன் மெர்காடர் தாக்கினார். மறுநாளான ஆகஸ்ட் 21 அன்று மெக்சிகோ நகர மருத்துவமனையில் ட்ரொட்ஸ்கி உயிரிழந்தார்.
கெர்சன் மாகாணத்தில் உள்ள யனோவ்கா என்ற உக்ரேனிய கிராமத்தில் பிறந்த ட்ரொட்ஸ்கி, 1917 அக்டோபர் புரட்சியில் விளாடிமிர் லெனினுடன் இணைத் தலைவராகவும், செம்படையின் தளபதியாகவும், நான்காம் அகிலத்தின் நிறுவனராகவும் இருந்தார்.
ட்ரொட்ஸ்கியின் படுகொலை, போல்ஷிவிக் புரட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதான வன்முறைமிக்க எதிர்ப்புரட்சித் தாக்குதலின் உச்சக்கட்டத்தைக் குறித்தது. இந்த ஆண்டு ட்ரொட்ஸ்கியின் நினைவு தினமானது. ஆகஸ்ட் 19, 1936-ல் தொடங்கி பாரிய பயங்கரத்தை தொடங்கிவைத்த முதல் மாஸ்கோ விசாரணையின் 90-வது ஆண்டு நினைவு தினத்துடன் இணைந்து வருகிறது.
முதலாவது விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அக்டோபர் புரட்சியின் முக்கிய தலைவர்களும் சோவியத் அரசை நிறுவியவர்களும் உள்ளடங்குகின்றனர்.
கிரிகோரி சினோவியேவ் 1908 முதல் நாடு கடத்தப்பட்ட காலத்தில் லெனினின் மிக நெருங்கிய தோழராகவும், டிசம்பர் 1917 முதல் பெட்ரோகிராட் சோவியத்தின் தலைவராகவும், மார்ச் 1919 முதல் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுத் தலைவராகவும் இருந்தார். லெவ் காமனேவ் 1918 முதல் மாஸ்கோ சோவியத்தின் தலைவராகவும், மக்கள் ஆணையர்கள் சபையின் துணைத் தலைவராகவும், லெனினின் இறுதி நோய்க்காலம் முழுவதும் சோவியத் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும் இருந்தார்.
ஜனவரி 1937 மற்றும் மார்ச் 1938 இல் நடந்த அடுத்த இரண்டு விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் யூரி பியாடகோவ் என்பவரும் அடங்குவார். மேலும் இவரை, புக்காரினுடன் சேர்த்து கட்சியின் இளைய தலைமுறையின் “மிகவும் தலைசிறந்த ஆளுமைகள்” என லெனின் தனது மரண சாசனத்தில் வரிசைப்படுத்தியிருந்தார். ஒரு தசாப்த காலமாக பிராவ்தா பத்திரிகையின் ஆசிரியராக இருந்த புக்காரினையும், அதே சாசனத்தில் “கட்சியின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் முக்கிய கோட்பாட்டாளர்” என்று அழைக்கப்பட்டார். மேலும், லெனினுக்குப் பிறகு சோவியத் அரசாங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற அலெக்ஸி ரைக்கோவும் இதில் அடங்குவார்.
1936 இல் தொடங்கிய மாஸ்கோ விசாரணையின் ஜோடிக்கப்பட்ட பின்னணி என்னவென்றால், டிசம்பர் 1934 இல் செர்ஜி கிரோவைக் கொலை செய்யவும், ஸ்டாலின் மற்றும் பிற தலைவர்களை படுகொலை செய்யவும் நாடுகடத்தப்பட்ட நிலையில் ட்ரொட்ஸ்கியால் வழிநடத்தப்பட்ட “ட்ரொட்ஸ்கிச-சினோவியேவிச பயங்கரவாத மையத்தை” குற்றம் சாட்டப்பட்டவர்கள் உருவாக்கினர் என்பதாகும். இந்த விசாரணையை உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று ட்ரொட்ஸ்கி சரியாகக் குறிப்பிட்டுக் கண்டித்திருந்தார். 1936 வாக்கில், தனி நாட்டில் சோசலிசம் என்ற ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் வேலைத்திட்டம், கட்டாய கூட்டுப்பண்ணையாக்கம் மற்றும் தேசிய வருமானத்தில் பெரும் பங்கை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு சலுகை பெற்ற பிரிவு ஆகியவற்றின் விளைவாக சோவியத் சமூகத்தின் முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. பதினாறு பிரதிவாதிகள் ஆகஸ்ட் 25, 1936 அன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். அடுத்து வந்த இரண்டு விசாரணைகளில் மேலும் 31 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்டாலினிசத்திற்கும் ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான மோதல், அடிப்படையில் ஒன்றுக்கொன்று எதிரான இரு அரசியல் முன்னோக்குகளுக்கு இடையிலானதாக இருந்தது. இதற்குப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1923ல், ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பு அணியும் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சோவியத் அரசினதும் அதிகாரத்துவச் சீரழிவுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தச் சீரழிவை உருவகப்படுத்தியவர், அதற்கு முந்தைய ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராகியிருந்த ஜோசப் ஸ்டாலின் ஆவர்.
உருவாகி வந்த ஸ்டாலினிச பிற்போக்கு வேலைத்திட்டத்தின் அடித்தளமாக, 1924ல் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற கோட்பாடு இருந்தது. இது, 1917 அக்டோபர் புரட்சியில் சரியென நிரூபிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டிற்கு எதிராக முன்வைக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டின்படி, சோசலிசப் புரட்சி தேசிய அரங்கில் தொடங்குகிறது, ஆனால் உலக அரங்கில் மட்டுமே அது முழுமையாக பூர்த்தியடைய முடியும்.
ட்ரொட்ஸ்கி 1927ல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, 1929ல் சோவியத் ஒன்றியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். ஸ்டாலின் “புரட்சியின் சவக்குழி தோண்டியாக” செயல்பட்டதாகவும், ஸ்டாலினிசம் உலக ஏகாதிபத்தியத்தின் ஒரு முகவராகச் செயல்பட்டதாகவும் ட்ரொட்ஸ்கி விளக்கினார். “ஒரு நனவுள்ள அரசியல் சக்தியாக, அதிகாரத்துவம் புரட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டது” என அவர் 1936ல் காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலில் எழுதினார். ஒரு மேல்தட்டின் நலனுக்காக முதலாளித்துவ விநியோக நெறிமுறைகளை அமுல்படுத்துவதன் மூலம், ஸ்டாலினிச அதிகாரத்துவம் “ஒரு முதலாளித்துவ மீட்சிக்குத் தயாராகி” வந்தது. இதனால், அக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர்களை, அரசியல் ரீதியாக அழிக்கப்பட வேண்டிய ஒரு தடையாக அதிகாரத்துவம் கருதியது.
சோவியத் ஆவணக் காப்பக பதிவுகளின்படி, 1937 மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 6,81,692 பேர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1934-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக் குழுவின் 139 உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர் உறுப்பினர்களில் 98 பேர் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை சோவியத் தலைவர் நிகிதா குருஷ்சேவ் 1956-ல் ஒப்புக்கொண்டார்.
ட்ரொட்ஸ்கி, 1937ல் எழுதிய “ஸ்டாலினிசமும் போல்ஷிவிசமும்” என்ற கட்டுரையில், “தற்போதைய சுத்திகரிப்பு நடவடிக்கையானது, போல்ஷிவிசத்திற்கும் ஸ்டாலினிசத்திற்கும் இடையே வெறுமனே ஓர் இரத்தக் கோட்டை அல்ல, மாறாக ஒரு முழு இரத்த ஆற்றையே வரைகிறது” என எழுதினார்.
வரலாற்றாசிரியர் வாடிம் ரகோவின் ஆவணப்படுத்தியபடி, இந்தப் பயங்கரம் போல்ஷிவிக் கட்சியின் தலைமையைத் தாண்டி வெகுதூரம் விரிவடைந்தது: விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகள் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டனர். கவிஞர் ஒசிப் மண்டேல்ஷ்டாம் 1938ல் ஓர் இடைமாற்று முகாமில் இறந்தார். எழுத்தாளர் ஐசக் பாபேல் 1940ல் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடக இயக்குநர் வெசெவோலோட் மேயர்ஹோல்டும் அவ்வாறே கொல்லப்பட்டார். மரபியலாளர் நிகோலாய் வாவிலோவ் ஒரு சரடோவ் சிறையில் பட்டினியால் சாகவிடப்பட்டார். அங்கு அவர் 1943ல் இறந்தார்.
இந்தக் கொலைகள் சோவியத் எல்லையோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஜூன் 1937 இல் பார்சிலோனாவில், POUM அமைப்பின் தலைவரான ஆண்ட்ரெஸ் நின்னை (Andrés Nin) ஸ்பானிய பொலிஸ் கைது செய்து GPU முகவர்களிடம் ஒப்படைத்தது; அவர்கள் அவரை சித்திரவதை செய்து கொன்றனர். நோர்வேயில் ட்ரொட்ஸ்கியின் செயலாளராக இருந்த எர்வின் வுல்ப், அதே ஆண்டு ஜூலை மாதம் பார்சிலோனாவில் கடத்தப்பட்டார்; அதன் பிறகு அவர் மீண்டும் காணப்படவில்லை செப்டம்பரில், GPU அமைப்பின் அதிகாரிகளில் ஒருவரான இக்னேஸ் ரீஸ், ஸ்டாலினுடன் பகிரங்கமாக முரண்பட்டு நான்காம் அகிலத்திற்கு ஆதரவாக அறிவித்ததைத் தொடர்ந்து, லோசானுக்கு வெளியே ஒரு சாலையில் GPU அவரைச் சுட்டுக் கொன்றது. 1938 ஜூலை மாதம், நான்காம் அகிலத்தின் செயலாளராக இருந்த ருடால்ப் கிளெமென்ட்டை GPU அமைப்பு பாரிஸில் வைத்து கடத்தியது. பின்பு அவரது துண்டிக்கப்பட்ட உடல் ஆகஸ்ட் மாத இறுதியில் செயின் நதியிலிருந்து மீட்கப்பட்டது.
இது ஒரு அரசியல் இனப்படுகொலை. ஒருமுழு அரசியல் தலைமுறையையும் குறிவைத்து அழிக்கப்பட்டதாகும். இந்தப் பயங்கரம், ஆகஸ்ட் 23, 1939 அன்று ஸ்டாலினுக்கும் ஹிட்லருக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு வழிவகுத்தது; இது நாஜி ஜேர்மனிக்கு இரண்டாம் உலகப் போரைத் தொடங்குவதற்கான முழுச் சுதந்திரத்தையும் வழங்கியது.
இந்தப் பயங்கரத்தின் மையத்தில் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கான சதித் திட்டம் இருந்தது. ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்டிருந்த நிலையிலும் அவரே ஸ்டாலினின் மிக ஆபத்தான எதிரியாக இருந்தார். சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த மில்லியன் கணக்கானோர், அக்டோபர் புரட்சியிலும் உள்நாட்டுப் போரிலும் ட்ரொட்ஸ்கி வகித்த பாத்திரத்தை நினைவில் வைத்திருந்ததுடன், அவருக்கு எதிரான பிரச்சாரம் பொய்களின் மீது கட்டியெழுப்பப்பட்டது என்பதையும் அறிந்திருந்தனர். இந்த நடவடிக்கையை நடத்திய இரகசிய பொலிஸ் அதிகாரியான பாவெல் சுடோப்லடோவ், 1939 மார்ச்சில் ஸ்டாலின் இந்த உத்தரவைப் பிறப்பித்தார் என தனது 1994 நினைவுக் குறிப்பான சிறப்புப் பணிகள் என்ற நூலில் விவரித்தார்: “ட்ரொட்ஸ்கி அழிக்கப்பட்டால், அச்சுறுத்தல் ஒழிக்கப்படும்.” என்பதே அந்த உத்தரவாகும்.
இந்தப் படுகொலைச் சதித்திட்டம் என்பது ஒரு மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாகும். மேலும் அதன் மையப் புள்ளியாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளேயே ஊடுருவுவது இருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தனது பாதுகாப்பும் நான்காம் அகிலமும் [Security and the Fourth International] என்ற விசாரணையில் நிறுவியபடி, ஸ்டாலின் உத்தரவைப் பிறப்பிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே GPUவின் முகவர்கள் பாரிஸ், நியூ யோர்க் மற்றும் கொயோகான் ஆகிய இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.
பாரிஸில் ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடோவின் அருகில் இருந்த GPU முகவரான மார்க் ஸ்போரோவ்ஸ்கி, ரைஸின் கொலையையும், அவர் தேர்ந்தெடுத்த ஒரு மருத்துவமனையிலேயே பிப்ரவரி 1938 இல் உயிரிழந்த செடோவின் கொலையையும் திட்டமிட்டு நடத்தினார். சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவர் ஜேம்ஸ் பி. கேனனின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சில்வியா காலன், தான் ஒரு GPU முகவர் என்பதை 1958 இல் ஒரு கூட்டாட்சி பெரு நடுவர் குழுவின் (federal grand jury) முன் ஒப்புக்கொண்டார். கோயோகான் இல்லத்தில் ட்ரொட்ஸ்கியின் செயலாளர்களில் ஒருவராக இருந்த ஜோசப் ஹேன்சனும் GPU அமைப்பிற்காகப் பணியாற்றினார். 2021-ல் உலக சோசலிச வலைத் தளத்தால் வெளியிடப்பட்ட ஒரு புலனாய்வு முடிவு, கொலையாளி மெர்காடர் ட்ராட்ஸ்கியின் இல்லத்திற்குள் நுழைவதற்கு வழியமைத்துக் கொடுத்த சில்வியா அகலொப், “லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் முக்கியப் பங்காற்றிய GPU-வின் அமைப்பின் முகவர் என்ற முடிவுக்கு ஆதாரங்கள் வலுவாக இட்டுச் செல்கின்றன” எனத் தெரிவித்தது.
ட்ரொட்ஸ்கியின் படுகொலை என்பது, 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய விளைவுகளைக் கொண்ட அரசியல் படுகொலையாகும்; அதாவது, இது சோசலிச இயக்கத்தின் அரசியல் தலை துண்டிக்கப்பட்டதற்குச் சமமாகும்.
இவை அனைத்திற்கும் மத்தியில்தான் —தீவிரமடைந்து வந்த பயங்கரமான தாக்குதல்கள், ஸ்பானியப் புரட்சிக்கு இழைக்கப்பட்ட துரோகம், ஹிட்லருடன் ஸ்டாலின் கூட்டணி அமைக்கும் சூழல்— ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை நிறுவினார். இதன் ஸ்தாபக காங்கிரஸ் 1938 செப்டம்பர் 3 அன்று பாரிஸுக்கு வெளியே இரகசியமாக நடைபெற்றது.
நான்காம் அகிலத்தின் உருவாக்கத்திற்கு, உலக சோசலிசப் புரட்சியின் வேலைதிட்டமும், புரட்சிகரத் தலைமை நெருக்கடியுமே மையமாக இருந்தன. ஸ்டாலினிச அதிகாரத்துவத்தை தொழிலாள வர்க்கம் வீழ்த்தாவிட்டால், அது சோவியத் யூனியனில் மீண்டும் முதலாளித்துவத்தை நிலைநிறுத்தும் என்று ட்ரொட்ஸ்கி அப்போது உறுதியாகக் கூறினார். அவர் அழைப்பு விடுத்த அரசியல் புரட்சி என்பது உலக சோசலிசப் புரட்சித் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தது.
காங்கிரசுக்காக ட்ரொட்ஸ்கியால் வரையப்பட்ட வேலைத்திட்டம் இதை நேரடியாகக் கூறியது: “தொழிலாளர் அரசில் மேலும் மேலும் உலக முதலாளித்துவ வர்க்கத்தின் கருவியாக மாறிவரும் அதிகாரத்துவம், புதிய சொத்து வடிவங்களை வீழ்த்தி நாட்டின் நிலையை மீண்டும் முதலாளித்துவத்திற்குள் தள்ளும். அல்லது தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை நசுக்கி சோசலிசத்திற்கான வழியைத் திறந்துவிடும்.”
ட்ரொட்ஸ்கியின் முன்கணிப்பு சரியென நிரூபிக்கப்பட்டது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே வாரத்தில், ஆகஸ்ட் 19–21, 1991 இல் நடந்த தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, சோவியத் யூனியனின் கலைப்பின் இறுதி அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.
ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பதவிகளை நிரப்பிய நபர்கள், காலியான அந்த இடங்களின் மூலமே தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டனர். வாடிம் ரகோவின் பதிவு செய்தபடி, அவர்கள் “1937 இல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று அறியப்பட்டனர். அவர்கள் அடுத்த அரை நூற்றாண்டு காலம் சோவியத் யூனியனை ஆட்சி செய்து, அதைச் சரிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றனர். மார்ச் 1985 முதல் பொதுச் செயலாளராக இருந்த மிகைல் கோர்பச்சேவால் இந்தக் கலைப்பு முழுமையடைந்தது. டிசம்பர் 26, 1991 இல், சோவியத் யூனியன் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுவதை நிறுத்திக்கொண்டது.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, அதனைப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முதலாளித்துவ நாடுகளாகப் பிளவுபடுத்தியது. அவை ஒவ்வொன்றிலும், அரசுச் சொத்துக்களைச் சூறையாடியதன் மூலம் ஒரு புதிய ஆளும் வர்க்கம் உருவானது. உக்ரேனில் இந்தச் செயல்முறை வாஷிங்டன் மற்றும் பேர்லினுடன் பிணைக்கப்பட்ட ஒரு தன்னலக்குழுவை உருவாக்கியது. ரஷ்யாவில், இது மாபெரும் ரஷ்ய தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆட்சியை உருவாக்கியது. இப்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இவ்விரு நாடுகளுக்கு இடையிலான போர், 1991 இன் நேரடி விளைவாக ஏற்பட்டதாகும். நேட்டோவால் (NATO) தூண்டிவிடப்பட்ட இந்தப் போர், ரஷ்யத் தரப்பில் உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அல்லாமல், மாறாக முதலாளித்துவ மீட்சியிலிருந்து உருவான முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காகப் போராடும் ஓர் ஆட்சியால் நடத்தப்படுகிறது.
மாஸ்கோ விசாரணைகள் நடந்து தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு புதிய காலகட்டத்தில், உலகப் பிற்போக்கு சக்திகள் மீண்டும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை பலவந்தமாக அடக்க முயல்கின்றன. ஆகஸ்ட் 10, 2026 அன்று, உக்ரேனின் நிக்கோலாயேவ் பிராந்தியத்தில் உள்ள பெர்வோமைஸ்க் நகர மாவட்ட நீதிமன்றம், உக்ரேனிய சோசலிஸ்ட்டும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவோடு (ICFI) அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுச் செயல்படும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பை சேர்ந்த இளம் ட்ரொட்ஸ்கிசத் தலைவருமான போக்டன் சிரோடியுக்கிற்கு. இராணுவச் சட்டத்தின் கீழ் தேசத்துரோகக் குற்றம் சாட்டி, அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்து 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றம் விதித்தது. மேலும், அந்த அமைப்பின் வேலைத்திட்டம் மற்றும் அச்சிடப்பட்ட இலக்கியங்களை அழிக்கவும் அது உத்தரவிட்டது.
போக்டானுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், லியோன் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களைப் பரப்புவதையே தாங்கள் தண்டிப்பதாக உக்ரேனிய அரசு வெளிப்படையாகக் கூறியது. போக்டானும் உலக சோசலிச வலைத் தளமும் “’ட்ரொட்ஸ்கிசம்’ என்ற அரசியல் நீரோட்டத்தின்” மரபில் “கம்யூனிச சித்தாந்தத்தை” ஊக்குவிக்கின்றனர் என அது அறிவித்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் போக்டான் மேற்கொண்ட ஒத்துழைப்பிற்காக நீதிமன்றம் அவரை வெளிப்படையாகக் கண்டிக்கிறது. “நான்காம் அகிலம் என்பது ஒரு கம்யூனிச அனைத்துலக அமைப்பு, ஸ்டாலினிசத்திற்கு ஒரு மாற்று. அது லியோன் ட்ரொட்ஸ்கியின் கோட்பாட்டு மரபை அடிப்படையாகக் கொண்டது. உலகப் புரட்சியை நிறைவேற்றுதல், தொழிலாள வர்க்கத்தின் வெற்றி மற்றும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றைத் தனது பணியாக அது நிர்ணயித்துக்கொள்கிறது” என்று அது கூறுகிறது.
ட்ரொட்ஸ்கிச முன்னோக்கை ஆதரித்ததற்காக, போக்டானுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஒடுக்குமுறை, ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்கு ஆளும் வர்க்கங்களில் தூண்டும் அச்சத்தின் ஓர் அளவுகோலாகும்.
உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களுக்குப் போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்தை மட்டுமே வழங்கும் ஒரு சமூக அமைப்பு முறைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது எமது காலத்தின் உண்மையான மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிசத்தின் மகத்தான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதன் பாரம்பரியத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பல தசாப்த காலப் போராட்டங்கள் மூலம் பாதுகாத்து வந்துள்ளது. ட்ரொட்ஸ்கி வாழ்ந்ததும், அதற்காகவே உயிர் நீத்ததுமான உலக சோசலிசப் புரட்சி எனும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, அவர்கள் தமக்கான முன்னேற்றப் பாதையைக் கண்டறிய வேண்டும். அவர்கள் நிச்சயமாகக் கண்டறிவார்கள்.
