இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களைப் போருக்கு எதிராக ஒன்றிணைக்க முயன்றதற்காக, 27 வயதான போக்டன் சிரோடியுக்கு உக்ரேனிய நீதிமன்றம் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. ஆகஸ்ட் 10 அன்று வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பிலிருந்து, 58 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் அவரது விடுதலைக்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
கையெழுத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, இந்த வழக்கு குறித்துச் செய்தி வெளியிட்டு எதிர்க்கும் சமூக ஊடகக் கணக்குகள் வெளியிடும் உள்ளடக்கத்தைப் பல்லாயிரக்கணக்கானோர் பார்த்தும், விருப்பம் தெரிவித்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முக்கிய ஊடகங்கள், போர்க்காலப் பிரச்சார நடவடிக்கையாக அவரது வழக்குச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து வருகின்றன. இதற்கு நேர் மாறாக, பொதுமக்களிடையே பரவலான ஆதரவு நிலவுகிறது.
போக்டன் ஒரு சிந்தனைக் குற்றத்திற்காகத் தண்டனை விதிக்கப்பட்டார். போருக்கு எதிராக ஒன்றுபட வேண்டுமென ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை அவர் வலியுறுத்தினார்; புட்டினின் படையெடுப்பையும் வாஷிங்டனின் பினாமிப் போரையும் ஒரே கட்டுரைகளில் எதிர்த்தார்; நாஸி கூட்டுறவாளர்களை அதிகாரப்பூர்வமாகப் போற்றுவதைக் கண்டித்தார். இந்த நிலைப்பாடுகளை உயர் தேசத்துரோகம் என அரசு அறிவித்து, அவரது உலக சோசலிச வலைத்தள (WSWS) கட்டுரைகளைச் சாட்சியமாகத் தாக்கல் செய்தது. இந்தத் தண்டனை அவரது சொத்துக்களைப் பறித்ததோடு, போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) எனும் அவரது அமைப்பின் நூல்களையும் துண்டறிக்கைகளையும் அழிக்க உத்தரவிட்டது.
2024 ஏப்ரல் 25 அன்று போக்டன் கைது செய்யப்பட்ட பின்னர் தொடங்கப்பட்ட இந்த மனுவில், இப்போது 6,300-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பொலோஞா பல்கலைக்கழகத்தில் சீன இலக்கியம் கற்பிக்கும் ஃபெடரிகோ பிசெர்னி வியாழக்கிழமை கையெழுத்திட்டார்: “என்றென்றும் ஒற்றுமை! புரட்சிகர சர்வதேசியவாதிகளுக்கு விடுதலை!” புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் கையெழுத்திட்ட 42 இத்தாலியர்களில் இவரும் ஒருவர்; இந்த இரண்டு நாட்களிலும் பதிவான மொத்த எண்ணிக்கையில், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலி இடம்பெற்றது.
தீர்ப்புக்குப் பிறகு வந்த நாட்களில் மனுவில் கையெழுத்திட்ட அல்லது நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதிய கல்வியாளர்களுடன் பிசெர்னியும் இணைந்துள்ளார்: வரலாற்றாசிரியர்களான விக்டோரியா பைனம், மார்க் டாகர், மற்றும் ஸ்டெபான் பண்டேராவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் க்ஷெகோஷ் ரொஸ்ஸோலின்ஸ்கி-லீபே; மானுடவியலாளர் மிஹா கொஸோரோக்; சமூகவியலாளர் வோலோதிமிர் இஷ்செங்கோ.
வாரம் முழுவதும் இணையத்தில் எதிர்வினை பெருகி வந்துள்ளது. அமெரிக்க மாற்று ஊடகமான மின்ட்பிரஸ் நியூஸ் (MintPress News), தனது இன்ஸ்டாகிராம் வாசகர்களிடம் வியாழக்கிழமை கூறியது: “சிரோடியுக்கின் விடுதலையைக் கோரி சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்டோர் ஒரு பகிரங்கக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.” அந்த இடுகைக்கு 5,500 விருப்பங்கள் கிடைத்துள்ளன.
புதன்கிழமை, “Fight For A Future” (ஒரு எதிர்காலத்திற்கான போராட்டம்) என்ற கணக்கு, அந்தத் தீர்ப்பு குறித்த WSWS-இன் அறிக்கையை முழுமையாக மறுபதிவு செய்தது. இந்த இடுகை 32,000-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும், 1,100 கருத்துகளையும், 3,600 பகிர்வுகளையும் பெற்றுள்ளது. “போரை அல்ல, அமைதியைப் போதிக்கத் துணியும் ஒரு தனிமனிதனை விட முதலாளித்துவ அரசு வேறெதையும் அதிகம் வெறுப்பதில்லை,” என்று அந்தக் கணக்கு எழுதியது. “தேசியவாத வெறுப்புக்குப் பதிலாக வர்க்க ஒற்றுமைக்கு ஆதரவாகப் பேசத் துணியும் ஒருவரை.”
அதே நாளில், “ஒரு ராணுவ சேர்க்கைத் தவிர்ப்பாளனின் அன்றாட வாழ்க்கை” எனப் பொருள்படும் புட்னி உகிலியந்தா (Budni Ukhilyanta) என்ற உக்ரேனிய டெலிகிராம் சேனல், WSWS-இன் ரஷ்ய மொழி அறிக்கையின் திரைப்பிடிப்பைத் தனது 30,500 சந்தாதாரர்களுக்குப் பதிவிட்டது. அதன் இடுகை: “வதை முகாம் அல்ல. ஆட்சியை விமர்சித்ததற்கு 15 ஆண்டுகள்.”
உக்ரேனில் கட்டாய ராணுவ சேர்க்கைக்கு எதிர்ப்பு மகத்தானது. ஜனவரியில், 200,000 வீரர்கள் தங்கள் படைப்பிரிவுகளை விட்டு வெளியேறியதாகவும், ராணுவ சேர்க்கையைத் தவிர்த்ததற்காக 2 மில்லியன் உக்ரேனியர்கள் தேடப்படுவதாகவும் உக்ரேனின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மிஹைலோ ஃபெடோரோவ் கூறியதாக கீவ் போஸ்ட் செய்தி வெளியிட்டது. தெருவில் ஆண்களைப் பிடித்துச் செல்லும் ஆட்சேர்ப்புப் படைகள் குறித்து போக்டனே ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
கிளார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உக்ரேனிய ஹோலோகாஸ்ட் வரலாற்றாசிரியர் மார்தா ஹவ்ரிஷ்கோ, திங்கட்கிழமை X தளத்தில் இந்தத் தீர்ப்பு குறித்து எழுதினார்; அந்த இடுகை 50,000-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது. வாஃபன்-SS கலீசியா பிரிவை அரசு போற்றுவதற்கும், உக்ரேனிய ராணுவப் பிரிவுகளில் இடம்பெறும் நாஸி சின்னங்களுக்கும் அவர் தெரிவித்த ஆட்சேபனைகள், தீர்ப்பில் பட்டியலிடப்பட்டுள்ள தேசத்துரோகச் செயல்களில் அடங்கும்.
“இதோ, விநோதமாகப் பின்னப்பட்ட தர்க்கம்,” என அவர் எழுதினார், “நாஸி கூட்டுறவாளர்களைப் போற்றுவதோ, அல்லது வுல்ஃப்சேங்கல், SS மின்னல் குறியீடுகள், கருஞ்சூரியன் போன்ற சின்னங்களைச் சகித்துக்கொள்வதோ ரஷ்யப் பிரச்சாரத்திற்கு வலு சேர்ப்பதில்லை போலும். இல்லை—இவற்றில் எதையேனும் வெளிப்படையாக விமர்சிப்பதுதான் தேசத்துரோகமாகி விடுகிறது.”
அவர் மேலும் கூறினார்: “எனவே, நான் எப்போதேனும் உக்ரேனிய எல்லையைக் கடந்தால், தயங்காமல் என்னை ஒரு SBU நிலவறையில் தேடிக்கொள்ளுங்கள். உக்ரேனில் நாஸிசத்தை நியாயப்படுத்துவதை விமர்சிக்கும் துரதிர்ஷ்டவசமான போக்கால் நானும் பாதிக்கப்படுகிறேன். யூத ஹோலோகாஸ்ட் ஆய்வாளர்களிடையே இது ஒரு தொழில்சார் அபாயம் போலும்.”
ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியலாளர் இவான் கச்சனோவ்ஸ்கி, அவரது இடுகையைத் தனது 47,000 பின்தொடர்பவர்களுக்கு மறுபதிவு செய்து, அந்தத் தண்டனையை “ஆர்வெல்லியன்” என்று வர்ணித்தார். செவ்வாய்க்கிழமை வெளியான இத்தாலிய ஊடகமான InsideOver-இன் தீர்ப்பு குறித்த இன்ஸ்டாகிராம் இடுகை 5,500-க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றது; வெள்ளிக்கிழமை, பாகுவிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான அஸெர்நியூஸ், “ரஷ்யா மற்றும் ஜெலென்ஸ்கி இருவரையும் விமர்சிக்கும் கட்டுரைகளுக்காக உக்ரேனிய செயற்பாட்டாளருக்கு உயர் தேசத்துரோகத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறை” என்ற தலைப்பில் இத்தீர்ப்பைச் செய்தியாக வெளியிட்டது.
உக்ரேனுக்குள், பத்திரிகைகள் இந்த வழக்கை அரசின் போக்கின்படியே கையாண்டுள்ளன. ஆகஸ்ட் 14 அன்று உக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பைக் குறைந்தது ஏழு உக்ரேனிய ஊடகங்கள் வெளியிட்டன. முழுமையாக வாசிக்கக்கூடிய ஒவ்வொரு பதிப்பும் போக்டனின் பெயரை மறைத்து, அவரை “கிரெம்ளின் சார்பு தூண்டிவிடுபவர்” என்றோ அல்லது ஒரு “நவ-போல்ஷிவிக் நிலத்தடி அமைப்பின்” அமைப்பாளர் என்றோ வர்ணிக்கிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் போக்குகளும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த வாரம் உக்ரேன், ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவில் உள்ள சோசலிச குழுக்கள் போக்டனின் வழக்கை முன்னெடுத்துள்ளன; இவற்றில் WSWS-இன் நீண்டகால அரசியல் எதிராளிகளும் அடங்கும்.
அனைத்துலக மார்க்சிய போக்கு (International Marxist Tendency) அந்தப் பெயரில் மீண்டும் தொடங்கப்பட்டபோது 2024 ஜூன் மாதம் நிறுவப்பட்ட அமைப்பான புரட்சிகர கம்யூனிச அகிலத்தின் (Revolutionary Communist International) உறுப்பினர்கள், புதன்கிழமை அயர்லாந்து, இத்தாலி மற்றும் கனடாவிலும், வியாழக்கிழமை ஸ்பெயினிலும் கையெழுத்திட்டனர். புதன்கிழமை அந்த அமைப்பின் உக்ரேனிய ஆதரவாளர்கள், அதன் இணையதளமான marxist.com-இல் ஒற்றுமைக்கான அழைப்பு ஒன்றை வெளியிட்டனர்.
கனடாவில் உள்ள பார்ட்டிசன் பாதுகாப்புக் குழு (Partisan Defense Committee) புதன்கிழமை கையெழுத்திட்டது; அதன் பிரிட்டிஷ் இணைக்குழு கையெழுத்திட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு. இவ்விரண்டும் ஸ்பார்டசிஸ்ட் போக்கான அனைத்துலக கம்யூனிச லீக்குடன் இணைந்த சட்டப் பாதுகாப்பு அமைப்புகள் ஆகும்.
பிரெஞ்சு அமைப்பான லுட் உவ்ரியேர் (Lutte Ouvrière), புதன்கிழமை இந்த வழக்கு குறித்து “உக்ரேன்: ட்ரொட்ஸ்கிசத்திற்காக பதினைந்து ஆண்டுகள் சிறை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஒரு சிறிய ரஷ்யக் குழுவான சோசலிச தொழிலாளர் கட்சி, வியாழக்கிழமை தனது டெலிகிராம் சேனலில் ஓர் அறிக்கையை வெளியிட்டது: “YGBL மற்றும் WSWS ஆகிய இரண்டின் மீதுமான எங்கள் நிலைப்பாடு எப்படியிருந்தாலும், ஒரு அரசியல் கைதி என்ற முறையில் போக்டன் சிரோடியுக்குடன் நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம். மார்க்சிய அரசியல் கருத்துகள் ஒரு குற்றம் அல்ல; ஏதேனும் ஒரு அரசு வேறுவிதமாக நினைத்தால், அது அந்த அரசைப் பற்றி நிறையவே சொல்கிறது.”
இந்த அமைப்புகள் அனைத்தும், WSWS-உடன் குறிப்பிடத்தக்க அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்துள்ளன.
2023 ஏப்ரல் 30 அன்று நடைபெற்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இணையவழி மே தின பேரணியில் போக்டன் ஆற்றிய உரையை, அவர் ரஷ்யப் படையெடுப்பை நியாயப்படுத்தியதற்கான சான்றாக இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டுகிறது. அவர் கூறினார்: “இந்த ஏகாதிபத்தியப் போர், ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம், உக்ரேனின் பாட்டாளி வர்க்கம் மற்றும் அமெரிக்காவின் பாட்டாளி வர்க்கம் ஆகியோரின் நலன்களுக்காக அல்ல, மாறாக இந்த நாடுகளின் மூலதனத்தின் நலன்களுக்காகவே கட்டவிழ்க்கப்பட்டது.”
2024 ஏப்ரல் 25 அன்று, போக்டனுக்கு 25 வயதாக இருந்தபோது, SBU அதிகாரிகள் அவரைக் கைது செய்து, ரஷ்ய முகவர் என முத்திரை குத்தினர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், எந்த ஆவணத்தையோ, எந்த சாட்சியையோ, எந்த உளவுச் செயலையோ அது முன்வைக்கவில்லை. இராணுவச் சட்டத்தின் கீழ் தேசத்துரோகத்திற்கு, உக்ரேனின் குற்றவியல் சட்டம் நீதிமன்றத்திற்கு இரண்டே தண்டனைகளை மட்டுமே அனுமதித்தது: 15 ஆண்டுகள் அல்லது ஆயுள்; இரண்டு நிலைகளிலும் சொத்துப் பறிமுதல் கட்டாயம். குற்றத்தைக் கடுமையாக்கும் சூழ்நிலைகள் இல்லாத கற்பழிப்புக்கு உக்ரேனில் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் தண்டனையே.
போக்டனின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்ய செப்டம்பர் 9 வரை அவகாசம் உள்ளது. 2025 வசந்த காலத்தில் அவர் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட புகார், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் இன்னும் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.
மனு wsws.org/freebogdan என்ற முகவரியில் உள்ளது. 15 ஆண்டுகள் தண்டனையை ரத்து செய்து போக்டனை விடுவிக்குமாறு கோரி, பெர்வோமய்ஸ்க் நகர மாவட்ட நீதிமன்றத்திற்கு (inbox@pm.mk.court.gov.ua) மற்றும் நிகோலேவ் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு (inbox@mka.court.gov.ua) கடிதங்களை அனுப்புங்கள்; அவற்றின் நகலை freebogdan@wsws.org-க்கும் அனுப்புங்கள்.
