இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
புதன்கிழமை வடக்கு நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்தைத் தாக்கிய பேரழிவுகரமான திடீர் வெள்ளப் பெருக்குகள் ஒரு பாரிய மனிதப் பேரழிவை உருவாக்கியுள்ளன. நேபாளத்தில் குறைந்தபட்சம் 794 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நூற்றுக்கணக்கானோர் இன்னமும் காணாமல் போயுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும். நேபாளத்தில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏனைய பயணிகள் உட்பட 900க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். சீனாவில் 16 பேர் உயிரிழந்ததுடன், 546 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையின் சுமார் 5,200 மீட்டர் (17,060 அடி) உயரத்தில் இருந்த பனிப்பாறையின் கீழ்ப்பாகத்தின் ஒரு பெரிய பகுதி உடைந்து, 1,200 மீட்டர் கீழே பள்ளத்தாக்கில் சரிந்தது. அது கீழே விழும்போது பாறைகள் மற்றும் பிற சிதைவுப் பொருட்களையும் தன்னுடன் இழுத்துச் சென்றதால், மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது.
இதன் விளைவாக ஏற்பட்ட சேற்று நிலச்சரிவு வினாடிக்கு சுமார் 50 மீட்டர் (164 அடி) வேகத்தில் பயணித்தது. சரிந்த பாரிய பனிப்பாறைத் தொகுதி, போதே கோஷி நதியில் கலக்கும் லெந்தே கோலா ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. அது பின்னர் திரிசூலி நதியில் கலப்பதன் மூலம், நேபாள–திபெத் எல்லை முழுவதும் கீழ்நோக்கிய பகுதிகளில் பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது.
அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு, நில அதிர்வு நிலையங்கள், நீண்ட-கால அலைகள் மற்றும் செயற்கைக்கோள் படிமங்கள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ததில், இந்த சரிவினால் ஏற்பட்ட ஆரம்பகட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 அளவிலான நிலநடுக்கமாகப் பதிவாகியுள்ளதாக வியாழக்கிழமை கண்டறிந்தது. அதன் ஆற்றல், 5.2 அளவிலான நில அதிர்வு நிகழ்வுக்கு சமமானதாக இருந்தது.
மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரசுவா மாவட்டமும், சுமார் 50,000 மக்கள் வசிக்கும் திமுரே மற்றும் சியாப்ருபேசி பகுதிகளைச் சுற்றியுள்ள குடியிருப்புகளும், அத்துடன் கீழ்நோக்கிய பகுதியில் அமைந்துள்ள நுவாகோட்டின் சில பகுதிகளும் அடங்குகின்றன. இவை அனைத்தும் திபெத்துடனான நேபாளத்தின் வடக்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன. கிராமங்கள் வழியாக நீரும் சிதைவுப் பொருட்களும் பெரும் வேகத்தில் பாய்ந்து, கட்டிடங்களை மூழ்கடித்து, வாகனங்களை அடித்துச் செல்வதை காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.
“முழு கிராமங்களும் சந்தைப் பகுதிகளும் அழிக்கப்பட்டுவிட்டன,” என்று சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் (IFRC) நேபாளப் பிரிவுத் தலைவர் டேவிட் பிஷ்ஷர் கூறினார். உள்ளூர் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 56 வயதான ராஜு பாதே புதன்கிழமை AFPக்கு கூறுகையில்: “இன்று காலை எனது (மைத்துனரிடமிருந்து) எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் அழுதுகொண்டே, அவர்களது முழு வீடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகக் கூறினர். குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீட்கப்பட்டனர், ஆனால் அவரது சகோதரர் இன்னமும் காணாமல் போயுள்ளார்,” என்றார்.
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த கல்பனா மல்லா, தனது “குடும்ப உறுப்பினர்கள் என் கண்களுக்கு முன்னால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்” என்று BBCயிடம் தெரிவித்தார். அவரது தந்தை, தாய், சகோதரி மற்றும் அவர்களது பிள்ளைகள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றின் வழியாக வெள்ளம் தொடர்ந்து பெருக்கெடுத்து பாய்வதால், கீழ்நிலைப் பகுதிகளில் சேதம் அதிகரிக்கும்.
கோமா பண்டிட், தனது எருமைகளையும் ஏனைய அனைத்து கால்நடைகளையும் இழந்துவிட்டதாக BBCயிடம் தெரிவித்தார். “எனது விவசாய நிலமும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. பத்து மூட்டை கடுகு விதைகள், டன் கணக்கான சோளம் மற்றும் நெல் என அனைத்தும் போய்விட்டன. எதுவும் எஞ்சவில்லை,” என்று அவர் கூறினார். அவசர உணவுப் பொதிகள், பாதுகாப்பான தங்குமிடம், குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் மருந்துகள் உட்பட உடனடி நிவாரணம் சுமார் 10,000 குடும்பங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.
720க்கும் அதிகமான வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், 2,153 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. வடக்கு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கான நேபாளத்தின் உயிர்நாடியாகவும், நேபாளத்தை நேரடியாக சீனாவுடன் இணைக்கும் இரண்டு முக்கிய செயல்பாட்டிலுள்ள தரைவழி எல்லைக் கடக்கும் பகுதிகளில் ஒன்றாகவும் விளங்கும் ரசுவாகாதி நட்புப் பாலம், மேலும் 19 பாலங்கள் மற்றும் 40 கிலோமீட்டர் (ஏறக்குறைய 25 மைல்கள்) சாலைகளுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. வெள்ளப் பெருக்கு முக்கிய எல்லை வர்த்தக மையங்களை மூழ்கடித்ததுடன், இருதரப்பு வர்த்தகம் அனைத்தையும் நிறுத்தியது. சூரிய மின் மற்றும் நீர்மின் நிலையங்கள் உட்பட, சுமார் 430 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனையும் வெள்ளம் சேதப்படுத்தியது.
இந்த வெள்ளம், இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் ஜைனர்களால் புனிதமாகக் கருதப்படும் திபெத்தில் உள்ள மானசரோவர், கோசைகுண்டா ஆகிய இரண்டு புனித மலை ஏரிகளைக் கொண்ட ஒரு பிராந்தியத்தைத் தாக்கியது. இது பயணங்களுக்கான உச்ச பருவமாக இருப்பதால், ஆன்மீகப் பயணங்கள் மற்றும் புனித நீராடல்களுக்காக இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை இப்பகுதி வழமையாக ஈர்க்கிறது. இதனால் பல சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மீட்புத் தயாரிப்புகளோ அல்லது சிறப்பான முன் எச்சரிக்கைகளோ மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தன, அல்லது அவை எதுவுமே இருக்கவில்லை என்பதையே இந்தத் துயரத்தின் அளவு காட்டுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இரண்டாவது வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை, தெற்காசியா முழுவதும் வழமையாக உயிரிழப்பை ஏற்படுத்தும் வெள்ளங்களையும் நிலச்சரிவுகளையும் உருவாக்குகிறது. ஆனால், “புதிய ஆட்சி” என்ற தனது வாக்குறுதிகள் ஒருபுறம் இருக்க, நேபாளத்தின் புதிய ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ரா கட்சி (RSP) அரசாங்கம் இதை வெறுமனே புறக்கணித்தது. பாதுகாப்புப் படையினர் அணிதிரட்டப்பட்டுள்ளதாகவும், உணவு, சுத்தமான நீர், மருந்து மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்கப்படும் என்றும் பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்தார். “அரசு அதன் அனைத்து வழிமுறைகள் மற்றும் வளங்களுடன் உங்களுடன் உள்ளது” என்றும் அவர் கூறினார்.
ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளுடன் உள்ளூர் மக்கள் உடனடி நெருக்கடியை எதிர்கொண்டனர். கிராமப்புறத்தைச் சேர்ந்த பெமா டோர்ஜே காலே, திமுரேவில் உள்ள பல குடியிருப்பாளர்கள் உயரமான பகுதிகளுக்குத் தப்பிச் சென்றதாகவும், சில குடும்பங்கள் உணவின்றி விடப்பட்டு, மீட்புக் குழுக்களுக்காகக் காத்திருக்கும்போது ஆற்று நீரைப் பருகி உயிர்வாழ்ந்து வருவதாகவும் புதன்கிழமை onlinekhabar.com இடம் தெரிவித்தார். ஆரம்பத்தில், நேபாள இராணுவத்தின் 15 உலங்குவானூர்திகளில் இரண்டு மட்டுமே மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டன.
நேபாளம் இயற்கைப் பேரிடர்களுக்கு விதிவிலக்காக அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய நாடாக உள்ளது. அது இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டு அடுக்குகளின் மோதல் பகுதியில், செங்குத்தான மற்றும் நிலையற்ற மலைப்பாங்கான நிலப்பரப்புடன், தீவிரமான பருவமழையை அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், பூகோள வெப்பமாதலால் வேகமாகப் பாதிக்கப்படும் பனிப்பாறைகளையும் கொண்டுள்ளது. ஆனால், இவை மட்டும் இந்தத் துயரத்தின் அளவை விளக்கவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளங்களும் நிலச்சரிவுகளும் இப்பிராந்தியத்தைப் பேரழிவுக்குள்ளாக்குகின்றன. 2015 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில், நேபாளத்தில் பருவமழை தொடர்பான 8,418 பேரிடர் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை 56,000க்கும் அதிகமான குடும்பங்களைப் பாதித்ததுடன், 36,479 வீடுகளை சேதப்படுத்தி, 195 பாலங்களை அழித்தன. 2024ஆம் ஆண்டில் மட்டும், பருவமழை தொடர்பான பேரிடர்களில் 495 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் பருவமழை பேரிடர்களில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ஒரே வகையாக காணப்படும் நிலச்சரிவுகள், இந்த பத்து ஆண்டுகளில் பதிவான 2,317 பருவமழை தொடர்பான மரணங்களில் 1,296 மரணங்களுக்குக் காரணமாக இருந்தன. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட துயரத்தை அல்ல, ஒரு தொடர்ச்சியான போக்கையே அம்பலப்படுத்துகிறது.
முன்னைய பேரிடர்களில் உயிர்தப்பிய பல குடும்பங்கள் போதுமான இழப்பீட்டையோ நிரந்தர வீடுகளையோ ஒருபோதும் பெற்றதில்லை. ஆற்றங்கரைகள் பாதுகாப்பின்றி விடப்படுவதுடன் வறிய மக்களுக்கு வாழ்வதற்கு வேறு இடமில்லாத காரணத்தால், ஆபத்தான பகுதிகளிலேயே குடியிருப்புகள் தொடர்ந்து கட்டப்படுகின்றன. பேரழிவுகரமான 2015 நிலநடுக்கம் நிகழ்ந்து ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் கடந்த பின்னரும், உயிர்தப்பிய பலர் போதுமான வசதிகளற்ற வீடுகளிலோ அல்லது எதிர்கால நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளங்களால் பாதிக்கப்படக்கூடிய கட்டமைப்புகளிலோ தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மரணங்கள் மற்றும் அழிவுகளின் அளவை புவியியல் அல்லது வானிலை காரணிகளால் மட்டும் விளக்க முடியாது. இது காலநிலை மாற்றமானது பல தசாப்தங்களாக நீடித்து வரும் அரசின் அலட்சியத்தினதும் பொதுப் பாதுகாப்பு என்பது இலாபத்திற்கும் முதலாளித்துவத்தின் வரவு-செலவுத் திட்டக் கோரிக்கைகளுக்கும் கீழ்ப்படுத்தப்பட்டதனதும் விளைவாகும்.
முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட தேசிய-அரசு அமைப்புக்கு இயற்கை எந்தக் கவனமும் செலுத்துவதில்லை. இந்த வெள்ளப்பெருக்கு, சீனப் பகுதியில் தோன்றிய போதிலும், கீழ் பகுதியில் இருக்கும் நேபாளத்தைப் பேரழிவுக்குள்ளாக்கியமை, இத்தகைய பேரழிவுகளுக்கு எதிராக ஒரு பயனுறுதியான பாதுகாப்பை உருவாக்குவதற்கு தேசிய-அரசு அமைப்பு ஒவ்வாததாக இருப்பதோடு அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை எடுத்துக்காட்டுகிறது.
போதே கோஷி பேரழிவு, உலகளாவிய அளவில் தீவிரமடைந்து வரும் அதீத வானிலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாகும். அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களை மரணகரமான வெள்ளப் பெருக்குகள் தாக்கியுள்ள அதேவேளை, பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளத்தில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். சிலியில் ஏற்பட்ட புயல்களால் குறைந்தபட்சம் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 99,000க்கும் அதிகமான மக்கள் அடிப்படைச் சேவைகளிலிருந்து துண்டிக்கப்பட்டனர். ஐரோப்பா சாதனை அளவிலான வெப்பம் மற்றும் காட்டுத்தீகளை எதிர்கொண்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் சுமார் 375,000 பேர் வெளியேற்றப்பட்டதுடன், ஜூன் மாத வெப்ப அலையின் போது ஆயிரக்கணக்கான அதிகப்படியான மரணங்கள் ஏற்பட்டன.
நியூசிலாந்தின் புவி அறிவியல் நிறுவனத்தின் Mountains to Sea (மலைகள் முதல் கடல்வரை) திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான சைமன் காக்ஸ், “காலநிலை மாற்றம் உயரமான மலைப் பகுதிகளில் உள்ள பாறைகளையும் பனியையும் நிலையற்றதாக்கக்கூடிய நிலைமைகளை உருவாக்குகிறது,” என்று கூறினார்.
பல தசாப்தங்களாக தொடரும் புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகள், சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவு மற்றும் மனித உயிர்களைப் பாதுகாக்க முதலாளித்துவ அரசாங்கங்கள் மறுப்பதனாலும் உந்தப்பட்டு, உலகளாவிய காலநிலைப் பேரழிவுகள் தீவிரமடைந்து வருகின்றன. விஞ்ஞான ரீதியாக, வளிமண்டல வெப்பமயமாதல் ஆவியாதலைத் துரிதப்படுத்தும் அதேவேளை, கடுமையான மழைப்பொழிவின் தீவிரத்தையும் அதிகரிக்கிறது. இது மண்ணையும் தாவரங்களையும் உலரச் செய்து, ஒரே நேரத்தில் வெள்ளப் பெருக்குகள், கடுமையான வறட்சிகள், அதீத வெப்ப அலைகள் மற்றும் அழிவுகரமான காட்டுத்தீகளை மோசமாக்கும் நிலைமைகளை உருவாக்குகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி வளங்கள் கிடைக்கக்கூடியதாக இருந்த போதிலும், பூகோள வெப்பமாதல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளித்துவ அரசாங்கங்கள் எந்தவொரு தீவிரமான முயற்சியையும் மேற்கொள்வதில்லை. டொனால்ட் டிரம்ப், காலநிலை நெருக்கடியை ஒரு “மோசடி” என்று அழைத்தவாறு, புதைபடிவ எரிபொருள் அகழ்வுக்கும் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் முன்னுரிமை அளித்து, 2026 ஜனவரியில் அமெரிக்காவை பாரிஸ் காலநிலை உடன்படிக்கையிலிருந்து கூட விலக்கிக் கொண்டார்.
ஆயுதங்கள், இராணுவத் தளங்கள் மற்றும் ஏகாதிபத்தியப் போருக்காக டிரில்லியன் கணக்கான டொலர்கள் கிடைக்கின்ற அதேவேளை, நேபாளம் போன்ற வறிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கிய நாடுகளில் உறுதியான பாலங்கள், பாதுகாப்பான தகவல் தொடர்பு வசதிகள், செயல்படக்கூடிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவ உள்கட்டமைப்புகளோ இல்லை. நேபாள வெள்ளப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியான, நிபந்தனையற்ற நிவாரணம் வழங்கப்பட வேண்டும். காணாமல் போன அனைவரையும் தேட வேண்டும்; உயிர்தப்பியவர்களுக்கு உணவு, நீர், தங்குமிடம் மற்றும் மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட வேண்டும்; இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான வீடுகள் மற்றும் இழப்பீடும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப் பெருக்குகள், உழைக்கும் வெகுஜனங்களின் மிக அடிப்படையான தேவைகளைக்கூட தீர்ப்பதற்கு ஆளும் வர்க்கங்களின் இயலாமைக்கான ஒரு உதாரணம் மட்டுமே ஆகும். இது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகும். காலநிலைப் பேரழிவுகள் அதிகளவில் அடிக்கடி ஏற்படுவதோடு அழிவுகரமானவையாக மாறி வருகிறது; உயிரிழப்புகளின் எண்ணிக்கை சமூக முன்னுரிமைகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது. முதலாளித்துவத்தின் கீழ், செல்வம் பாதுகாக்கப்படும் அதேவேளை வறியவர்கள் பாதுகாப்பின்றி விடப்படுகின்றனர். மனிதத் தேவைகளின் அடிப்படையிலும் விஞ்ஞானபூர்வமான திட்டமிடலின் அடிப்படையிலும் சமூகத்தை மறுஒழுங்கமைப்பதற்கான ஒரு சோசலிசப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்துவது மட்டுமே இதற்கான மாற்றீடாகும்.
