முன்னோக்கு

போக்டன் சிரோட்டியுக்கின் மேல்முறையீடு ஓர் அரசியல் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துகிறது

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் நிறுவனரும் தலைவருமான போக்டன் சிரோட்டியுக்

உக்ரேனிய சோசலிசவாதியும், போருக்கு எதிரான செயற்பாட்டாளருமான போக்டன் சிரோட்டியுக்கின் வழக்கறிஞர்கள், உக்ரேனின் மைக்கோலைவ் பிராந்தியத்தில் உள்ள பெர்வோமைஸ்க் நகர மாவட்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 10 அன்று அவருக்கு விதித்த 15 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிராக, செப்டம்பர் 9 அன்று இரண்டு தனித்தனி மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்தனர்.

போக்டனின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர்களில் ஒருவரால் தயாரிக்கப்பட்ட 24 பக்க மனு, நீதிமன்றத் தீர்ப்பை நையப்புடைக்கும் வகையில் அம்பலப்படுத்துகிறது. போக்டன் தனது அரசியல் கருத்துக்களுக்காகவும், தனது எழுத்துக்களுக்காகவும், உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) அவர் கொண்டிருந்த ஆசிரியப் பணி ஒத்துழைப்புக்காகவும் தண்டிக்கப்பட்டார் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

இந்த மேல்முறையீடு, தீர்ப்பை “சட்டவிரோதமானது மற்றும் ஆதாரமற்றது” என்று கூறி, அதை ரத்து செய்து, இந்த நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மைக்கோலைவ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறது. ஏனெனில், போக்டன் மீது சுமத்தப்பட்ட நடவடிக்கைகள், உக்ரேனிய குற்றவியல் சட்டத்தின் 111-வது பிரிவின் பகுதி 2-இன் கீழ் பெரும் தேசத்துரோகமாக அமையவில்லை.

சட்டப்பிரிவு 111-ன் கீழ், உக்ரேனுக்கு எதிராக நாசவேலையில் ஈடுபடும் வெளிநாட்டு அரசு அல்லது அமைப்புக்கு வேண்டுமென்றே உதவி செய்ததை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும். மேலும், அத்தகைய நாசவேலை நடக்கிறது என்பதைப் போக்டன் அறிந்து, அதற்கு வேண்டுமென்றே உதவினார் என்ற நேரடியான நோக்கத்தை அவர் நனவுடன் கொண்டிருந்தார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

வழக்குத் தொடுத்த அரசுத் தரப்பு இதில் எதையும் நிரூபிக்கவில்லை.

மேல்முறையீட்டில் கூறப்பட்டுள்ளபடி, இந்த வழக்கு “முக்கியமாக போக்டன் சிரோட்டியுக்கின் அரசியல் மற்றும் வரலாற்று அறிக்கைகளின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. உக்ரேனுக்கு எதிராக நாசகர நடவடிக்கைகளை நடத்துவதில் ஆக்கிரமிப்பாளர் அரசுக்கு அவர் உதவினார் என்ற குறிப்பிட்ட உண்மையை நிரூபிக்காமல்” கட்டமைக்கப்பட்டது.

உக்ரேனிய அரசாங்கம், நேட்டோ அல்லது ஐக்கிய அமெரிக்கா மீதான விமர்சனம், முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு கருத்துக்கள், தேசியவாத வரலாற்று ஆளுமைகள் மீதான விமர்சனம் ஆகியவை உயர் தேசத்துரோகமாகக் கருதப்பட முடியாது என்பதை அவரைப் பாதுகாக்கும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

போக்டனுக்கும் ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கோ, ரஷ்ய அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இருந்ததற்கோ, ரஷ்யாவிடமிருந்து எந்தப் பணிகளோ அல்லது அறிவுறுத்தல்களோ வழங்கப்பட்டதற்கோ, ரஷ்யப் பிரதிநிதிகளுக்குத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கோ, ஆக்கிரமிப்பு நிர்வாகங்களுக்கோ அல்லது ரஷ்ய இராணுவப் படைகளுக்கோ உதவி செய்யப்பட்டதற்கோ, அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட நாசவேலை நடவடிக்கைகளில் பங்கேற்றதற்கோ அரசுத் தரப்பு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
“ஒரு பொது சர்வதேசப் பத்திரிகையின் ஆசிரியர்களுக்கு கட்டுரைகளை எழுதுதல், மொழிபெயர்த்தல், நேர்காணல் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் அவர்களுடன் தொடர்புகொள்ளுதல்” ஆகியவற்றைத்தான் சான்றுகள் உண்மையில் நிலைநாட்டுகின்றன என்று அந்த மேல்முறையீடு கூறுகிறது.

இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதானால்: இதழியல் மற்றும் அரசியல் செயல்பாடு ஆகியவைகளாகும்.

ஆதாரங்களில் உள்ள இந்த மிகப்பெரிய இடைவெளியை நிரப்புவதற்காக, WSWS மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ஆகியவற்றைத் தகவல் தளத்தில் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபடும் “வெளிநாட்டு அமைப்புகளாகவும்”, போக்டனின் கட்டுரைகள் மற்றும் ஆசிரியர் பணி ஆகியவற்றை அந்த நடவடிக்கைக்கு அளிக்கப்பட்ட உதவியாகவும் அந்தத் தீர்ப்பு சித்தரித்தது.

ஆனால் இங்கும், தீர்க்கமான கூறுகள் நிரூபிக்கப்படவில்லை, மாறாக வலியுறுத்தப்பட்டுள்ளன என்பதை இந்த மேல்முறையீடு காட்டுகிறது. “பிரிவு 111-இன் பொருளின்படி WSWS/ICFI-இன் நாசவேலை நடவடிக்கையையோ, அத்தகைய நடவடிக்கைக்கு போக்டன் சிரோட்டியுக் வழங்கிய உதவியையோ, அல்லது அவசியமான நேரடி நோக்கத்தையோ இந்தத் தீர்ப்பு நிலைநாட்டவில்லை,” என்று அது கூறுகிறது. “இந்த அடிப்படைக் கூறுகளை நிரூபிப்பதற்குப் பதிலாக, வெளியீடுகளின் அரசியல் தன்மைகளும் ஆசிரிய ஒத்துழைப்புக்கான சான்றுகளும் அவற்றின் ஆதாரத்திற்குப் பதிலாக அமைகின்றன.”

இதுவே இந்த அரசியல் சதித்திட்டத்தின் மையமாகும்.

இந்தத் தீர்ப்பு, உக்ரேனின் தவறான தகவல் தடுப்பு மையம் ஏப்ரல் 10, 2024 அன்று எழுதிய கடிதத்தை பெரிதும் சார்ந்திருந்தது. அந்தக் கடிதம், WSWS-ஐ “ரஷ்ய ஆதரவுக் கருத்துக்களை” பரப்பும் ஒரு கம்யூனிஸ்ட் ஊடகம் என்று சித்தரித்தது. அந்தக் கடிதம் ஒரு தடயவியல் நிபுணர் கருத்து அல்ல என்றும், அது ரஷ்யாவின் கட்டுப்பாடு, விரோத நோக்கம் அல்லது நாசவேலை நடவடிக்கையை நிறுவவில்லை என்றும் மேல்முறையீடு சுட்டிக்காட்டுகிறது.

இந்த தீர்ப்புக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவது, அரசுத் தரப்பின் தடயவியல் மொழியியல் ஆய்வு ஆகும். ஆய்வு செய்யப்பட்ட வெளியீடுகளில், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான அழைப்புகள், உக்ரேனிய தேசத்தை ஒழித்தல், உக்ரேனின் எல்லைகளில் மாற்றங்கள், ரஷ்யாவுடன் ஒத்துழைப்பு அல்லது உதவி, எதிரிக்குத் தகவல் அனுப்புதல் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுதல் போன்ற எந்தக் கருத்துக்களையும் நிபுணர்கள் கண்டறியவில்லை.

அவர்களின் பொதுவான முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது: “1 முதல் 14 வரையிலான வெளியீடுகளில், உக்ரேனுக்கு எதிராக ரஷ்யக் கூட்டமைப்பு மேற்கொண்ட ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் வகையிலான பிரச்சாரத்தின் எந்தவொரு அறிகுறியும் காணப்படவில்லை.”

போக்டன் மீது குற்றம் சாட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட WSWS-இன் ஆறு கட்டுரைகளின் முழு உள்ளடக்கமும், அரசுத் தரப்பு முன்வைத்த வாதங்களுக்கு முரணாகவே உள்ளன.

“போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சர்வதேச இயக்கத்தை ஒழுங்கமைப்பதற்காக!” [For the organization of an international movement of workers and young people against war!] என்ற கட்டுரையில், ரஷ்ய படையெடுப்பு “சாகசவாதமானது” என்று விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் “பிற்போக்குத் தன்மை” வெளிப்படையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியம் மற்றும் புட்டன் ஆட்சி ஆகிய இரண்டிற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டத்திற்கு அந்தக் கட்டுரை அழைப்பு விடுக்கிறது.

மேற்கோள் காட்டப்பட்ட மற்றொரு கட்டுரையான, “ரஷ்யாவுக்கு எதிராக ‘தாக்குதல் நடத்த’ அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது” [US pledges to ‘go on the offensive’ against Russia] என்பதன் ஆசிரியர் போக்டன் அல்ல. தீர்ப்பின்படி, அந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து உக்ரேனிய மொழிக்கு மொழிபெயர்த்து, பிரசுரத்திற்காக அனுப்புவதே அவரது பணியாக இருந்தது.

மேலும், “ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக!” [For the unity of the Russian and Ukrainian working class!] என்ற கட்டுரையில், அதன் நிலைப்பாடு மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில், “நாங்கள்... உக்ரேனிலோ அல்லது ரஷ்யாவிலோ நடக்கும் இந்தப் போரை ஆதரிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதர கட்டுரைகள், உக்ரேனிய பாசிசத் தலைவர் ஸ்டீபன் பண்டேரா மற்றும் உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பிற்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதையும், நாஜிக்களின் வாபென்-எஸ்எஸசின் ஒரு சிப்பாயான யாரோஸ்லாவ் ஹுன்கா கௌரவிக்கப்பட்டதையும் விமர்சித்தன. அவற்றில் எதுவும் ரஷ்யாவின் வெற்றியையோ அல்லது ரஷ்யப் படைகளுக்கு உதவியையோ ஆதரிக்கவில்லை.

இந்த மேல்முறையீட்டு மனுவில் பின்வருமாறு நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: “இந்தத் தீர்ப்பின் முக்கியக் குறைபாடு என்னவென்றால், இது ‘அரசியல் நிலைப்பாடு’ என்ற கருத்தாக்கத்தை ‘நாசகர நடவடிக்கை’ என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு நடைமுறையில் மாற்றியமைப்பதாகும்.”

இந்தத் தீர்ப்பின் தர்க்கத்தை, எவ்வித ஆதாரமும் இல்லாத அனுமானங்களின் ஒரு தொடர்ச்சியாக அது சுருக்கிக் கூறுகிறது: “விமர்சனரீதியான அரசியல் கருத்து → உக்ரேனுக்கு எதிரான பார்வை → ரஷ்யக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு → நாசகாரச் செயல் → தேசத்துரோகம்.” ஆனால், “இந்தத் தொடரில் உள்ள ஒவ்வொரு அடுத்தடுத்த இணைப்புக்கும் தனிப்பட்ட ஆதாரம் தேவைப்படுகிறது” என்று அவரைப் பாதுகாக்கும் வழக்கறிஞர்கள் தரப்பு வலியுறுத்துகிறது.

துல்லியமாக இதைத்தான் விசாரணை நீதிமன்றம் வழங்கத் தவறிவிட்டது. போருக்கு எதிரான சோசலிச எதிர்ப்பிற்கு ஒரு குற்றவியல் அர்த்தத்தைச் கற்பிப்பதன் மூலம், சட்டப்பூர்வமான அரசியல் பேச்சு, பத்திரிகை, மொழிபெயர்ப்பு, நேர்காணல்கள் மற்றும் சர்வதேச அரசியல் ஒத்துழைப்பு ஆகியவற்றைத் தேசத்துரோகத்திற்கான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களாக அது மாற்றியுள்ளது.

இந்த மேல்முறையீடு ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின் 10 வது பிரிவையும் குறிப்பிடுகிறது. ஐரோப்பிய மனித உரிமைக் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாறுகளை மேற்கோள் காட்டி, அரசியல் ரீதியான கருத்துகள் —அரசை “புண்படுத்தும், அதிர்ச்சியூட்டும் அல்லது கலக்கமடையச் செய்யும்” கருத்துகள் உட்பட— குறிப்பாக வலுவான பாதுகாப்பிற்கு உரியவை என்று அது வாதிடுகிறது. இக்கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, விசாரணை நீதிமன்றம் “அதிகாரப்பூர்வ அரசியல் நிலைப்பாட்டிலிருந்து மாறுபடுவதை நாசவேலையின் சான்றாக” கருதுகிறது.

ஆகஸ்ட் 10 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து, குற்றவியல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மைக்கோலாய்வ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை போக்டனை பாதுகாக்கும் வழக்கறிஞர்கள் தரப்பு கேட்டுக்கொள்கிறது. மாற்றாக, குற்றம் சாட்டப்பட்ட செயலுக்கான கூறுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதால், போக்டனை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறும் அது கோருகிறது.

இந்த மேல்முறையீடு, போக்டன் மீதான வழக்கு நடவடிக்கையின் அரசியல் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் நேட்டோ தலைமையிலான போர் கொள்கை ஆகிய இரண்டையும் எதிர்த்த ஒரு சோசலிசவாதியான போக்டன், உக்ரேனிய அரசின் தேசியவாத மற்றும் போர்-சார்பு நிலைப்பாட்டை எதிர்த்ததாலும், ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடியதாலும் ஒரு “துரோகி”யாகச் சித்தரிக்கப்பட்டார்.

இந்தக் கொடூரமான தீர்ப்பை ரத்து செய்வதற்கான சட்டரீதியான போராட்டத்தையும், அதற்காகக் கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவதையும் WSWS முழுமையாக ஆதரிக்கிறது. இந்த மேல்முறையீட்டு நடவடிக்கையானது, போக்டன் மீதான இந்தச் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துவதற்கும், அவருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான எதிர்ப்பை உலகம் முழுவதிலும் இருந்து திரட்டுவதற்கும் வலுவான கூடுதல் ஆதாரங்களை வழங்குகிறது.

ஆனால், போக்டனைக் கைது செய்து, சில வாரங்களுக்குப் பிறகு WSWS-ஐத் தடை செய்து, சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைக்காக அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த அதே அரசின் நீதிமன்றங்களின் கைகளில் போக்டனின் விடுதலையை விட்டுவிட முடியாது.

போக்டனின் விடுதலையை உறுதி செய்வதில் சர்வதேசத் தொழிலாள வர்க்கமே தீர்க்கமான சக்தியாக உள்ளது. போக்டன் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான சர்வதேசப் பிரச்சாரத்தை WSWS தீவிரப்படுத்தி விரிவுபடுத்தும். தொழிலாளர்கள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அனைவரும் இந்தப் போராட்டத்தைக் கையில் எடுத்து, உலகம் முழுவதும் உள்ள பணியிடங்கள், தொழிற்சங்கங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குக் கொண்டு செல்லுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

FreeBogdan.org என்ற வலைத் தளத்தில் உள்ள மனுவில் கையெழுத்திட்டு, தங்கள் சொந்த வார்த்தைகளில் ஆதரவுத் தெரிவிக்கும் குறிப்பை இணைக்குமாறும்; தீர்ப்பை ரத்து செய்து போக்டனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, உக்ரேனிய மற்றும் தங்கள் சொந்த மொழிகளில் மைக்கோலாய்வ் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு (inbox@mka.court.gov.ua) கடிதம் அனுப்ப அந்தத் தளத்தில் உள்ள வசதியைப் பயன்படுத்துமாறும் (அக்கடிதத்தின் நகலை freebogdan@wsws.org என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும்); தங்கள் பணியிடங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி வளாகங்களிலிருந்து ஆதரவு அறிக்கைகளைத் திரட்டுமாறும்; மேலும் அவரது விடுதலைக்கான பிரச்சாரத்திற்கு இயன்றவரை கணிசமான நன்கொடையை வழங்குமாறும் வாசகர்கள் அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தீர்ப்பை ரத்து செய்! போக்டன் சிரோட்யுக்கை விடுதலை செய் !

Loading