இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் முதலாளித்துவ தேசிய அரசுகளின் பிரதிநிதிகள் போரைத் தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டக் கூடியிருந்த வேளையில், ஒவ்வொரு கண்டத்திலும் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தில் மற்றொரு சக்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
ஐக்கிய நாடுகளின் 81வது பொதுச் சபை இராணுவவாதத்தின் மற்றும் பிற்போக்குத்தனத்தின் ஒரு விழாவாக இருந்தது. டொனால்ட் ட்ரம்ப் ஈரானை “முற்றிலுமாக அழித்துவிடுவேன்” என்று மிரட்டினார். அவர், வெனிசுவேலாவின் எண்ணெய் —”வெற்றியாளருக்கே கொள்ளைப் பொருட்கள் சொந்தம்”— வளத்திற்கும், கிரீன்லாந்தின் மீதான “நிரந்தரக் கட்டுப்பாட்டுக்கும்” உரிமை கோரினார். மேலும், “கம்யூனிசம் ஒருபோதும் அமெரிக்காவிற்கு வராது” என அறிவித்தார். அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவிற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் என ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் நடத்திய போர்களையும் படுகொலைகளையும் கொண்டாடிய நெதன்யாகு, வெளிநடப்பு செய்த ஐ.நா. தூதுக் குழுக்களை “நெறிமுறையற்ற கோழைகள்” எனக் கண்டனம் செய்ததோடு, ஈரான் அரசாங்கத்தைத் தூக்கியெறியுமாறும் அழைப்பு விடுத்தார்.
அதே சமயம், உலகளாவிய உற்பத்தியால் சர்வதேச அளவில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கம் தன்னை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்திற்குள், தேசிய எல்லைகளைத் தாண்டிய ஒற்றுமைக்கான வளர்ந்து வரும் தேடல் காணப்படுகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில், ட்ரம்ப் நிர்வாகம் இரு நாடுகளிலும் பணியாற்றும் சுமார் 25,000 லாரி ஓட்டுநர்களின் (இது மொத்த ஓட்டுநர்களில் ஐந்தில் ஒரு பங்காகும்) விசாக்களை ரத்து செய்ததைக் கண்டித்து, மெக்சிகாலி மற்றும் காலெக்ஸிகோ இடையே உள்ள வணிகப் போக்குவரத்துப் பாதையை மூடி சுமார் 300 மெக்சிகன் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் சான் லூயிஸ் ரியோ கொலராடோ மற்றும் அரிசோனாவின் யூமா நகருக்கு இடையிலான எல்லைப் பகுதிக்கும் பரவியது. 1,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழுவின் மூலம் இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. எல்லைக்கு மறுபுறம், ஒரு கேலன் டீசலின் விலை 6.50 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், அக்டோபர் 1-அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு அமெரிக்க லாரி ஓட்டுநர்களிடையே அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
வட அமெரிக்காவின் இதர பகுதிகளில், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில், தேசிய உருக்கு வாகன நிறுவனத்தின் தொழிலாளர்கள், ஊதியம், பாதுகாப்பு மற்றும் மூன்று தொழிலாளர்களின் உயிரைப் பறித்த பகுதிநேர வேலை முறையை மையமாகக் கொண்ட வேலைநிறுத்தத்தின் ஏழாவது வாரத்தில் நுழைந்துள்ளனர். 14,000ம் உறுப்பினர்களைக் கொண்ட சஸ்கட்சுவான் சுகாதாரப் பணியாளர் பிரிவினர், பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லாத நிலையில், 99 சதவீத வாக்குகளுடன் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், அமெரிக்காவின் பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள், டீம்ஸ்டர்ஸ் சங்கத்தின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தை கடந்த வாரம் 53.5 சதவீதம் பேர் நிராகரித்தனர். 9,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாக்களித்த நிலையில், இது கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த இரண்டாவது நிராகரிப்பாகும். பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியம் குறைந்ததைக் கண்டித்து, கிளீவ்லேண்ட் இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள், தங்கள் இசைக்குழுவின் வரலாற்றில் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பொஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில், 2,986 செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அங்கீகாரம் அளிக்க கடந்த வியாழக்கிழமை வாக்களித்தனர். இதற்கு 215 பேர் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.
ஆர்ஜென்டினாவில், மிலெய் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு எதிராக, 350-க்கும் மேற்பட்ட அமைப்புகள் செப்டம்பர் 19 அன்று “மார்ச்சா தே லா ப்ரோங்கா” (கோப அணிவகுப்பு) எனப் பெயரிடப்பட்ட அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்தன. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு பியூனஸ் அயர்ஸ் நகருக்கு வந்திருந்த வேளையில், பத்தாயிரக்கணக்கானோர் பிளாசா தே மாயோ சதுக்கத்தில் அணிதிரண்டனர். ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு, பணிநீக்கங்களுக்குத் தடை, தொழிலாளர் சீர்திருத்தத்தை ரத்து செய்தல், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தாமை, மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான உறவை முறித்துக் கொள்ளுதல் ஆகியவை இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளில் அடங்கும். அமைப்பாளர்கள், பணியிடங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் “கீழிருந்து” ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுத்தனர். மேலும், இந்தப் பேரணிக்கு ஆதரவளிக்க மறுத்த CGT மற்றும் CTA தொழிலாளர் கூட்டமைப்புகளிடமிருந்து பொது வேலைநிறுத்தத்தையும் கோரினர்.
கென்யாவில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் எரிபொருள் விலைகளுக்கு எதிராக இந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தென் கொரியாவில் ஹூண்டாய் தொழிலாளர்கள் ஒரு நாள் முழு வேலைநிறுத்தத்திற்குத் தயாராகினர். எஸ்டோனியாவில் 15,000 ஆசிரியர்கள் செப்டம்பர் 22 அன்று வெளிநடப்பு செய்தனர். டீசல் விலையில் ஏற்பட்ட 40 சதவீத உயர்வைத் தொடர்ந்து, அசாத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததிலிருந்து இதுவரை காணப்படாத மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் சிரியாவில் நடைபெற்றன. எரிபொருள் விலைக்கு எதிரான போராட்டங்கள் சிரியா, குவாத்தமாலா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முழுவதும் நடைபெற்றுள்ளன.
சமூகப் போராட்டங்களுக்கும், வர்க்கப் போராட்டங்களுக்கும் தூண்டுதலாக இருக்கும் அனைத்து நிலைமைகளையும் போர் ஒருங்கே குவிக்கிறது. அது உலகப் பொருளாதாரம் முழுவதும் எரிசக்திச் செலவுகளை அதிகரிக்கச் செய்கிறது, வட்டி விகிதங்களை உயர்த்துகிறது, பொதுச் செலவினங்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துகிறது, மேலும் இராணுவ உற்பத்திக்காகத் தொழில்துறையை மறுஒழுங்கமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. தேசிய எல்லைகளுக்குள் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளைத் தீர்ப்பது சாத்தியமற்றது என்ற நிலையை அது மிகவும் கூர்மையான வடிவில் முன்வைக்கிறது.
ஜேர்மனி, 2027ஆம் ஆண்டுக்கான இராணுவம் மற்றும் போர் தொடர்பான செலவினங்களுக்காக ஏறக்குறைய 152 பில்லியன் யூரோவை ஒதுக்கத் தயாராகி வருகிறது —இது ஒரே ஆண்டில் 57 சதவிகித அதிகரிப்பாகும். 2018-ஆம் ஆண்டு முதல் அதன் வாகனத் தொழில் 142,500 வேலைகளை இழந்துள்ள நிலையில், ஜூன் மாதம் வரையிலான பன்னிரண்டு மாதங்களில் மட்டும் 42,000-க்கும் மேற்பட்ட வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசாங்கம் பரவலான சமூக நலத் திட்டக் குறைப்புகளைச் செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவில், ட்ரம்ப் 1.5 டிரில்லியன் டாலர் இராணுவ நிதி ஒதுக்கீட்டைக் கோருகிறார். அதே வேளையில், ட்ரம்ப் நிர்வாகம் 760,000 மக்களுக்கான மலிவு விலை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து, 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான உணவு முத்திரைகளையும் நீக்குகிறது. சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கான போராட்டத்தினாலும், சாத்தியமற்ற பொருளாதாரச் சூழலையும் தாங்க முடியாத கடன் மலைகளையும் கைப்பற்றல் மற்றும் கொள்ளையடித்தல் மூலம் சமாளிக்கும் முயற்சியினாலும் இந்தப் போர்கள் இயக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இந்தப் போரை நடத்தும் அதே ஆளும் வர்க்கங்கள், உள்நாட்டில் தொழிலாளர்கள் மீது பணிநீக்கங்களையும், சிக்கன நடவடிக்கைகளையும், தீவிரமான சுரண்டலையும் திணிக்கின்றன.
ஏகாதிபத்தியப் போர் மற்றும் வர்க்கப் போராட்டம் ஆகிய இந்த இணைச் செயல்முறைகளில், தொழிற்சங்க அதிகாரத்துவம் போரின் பக்கம் நிற்கிறது. பல தசாப்தங்களாக விற்றுத்தள்ளலை திணித்து, நிர்வாகத்துடனும் முதலாளித்துவக் கட்சிகளுடனும் தன்னை ஒன்றிணைத்துக் கொண்ட பிறகு, தொழிற்சங்க அமைப்பானது போருக்கான பொருளாதார மற்றும் அரசியல் அணிதிரட்டலுக்குள் நேரடியாக இழுக்கப்பட்டு, தேசிய முதலாளித்துவ அரசு மற்றும் அதன் இராணுவ மூலோபாயத்துடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ள முயல்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) மிச்சிகன் சமூக நடவடிக்கைத் திட்ட மாநாட்டில், ஷான் பெயினும், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பின் ஆதரவுபெற்ற செனட் வேட்பாளர் அப்துல் எல்-சயீதும், சீன வாகன உற்பத்தியாளர்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் அமைக்கலாம் என ட்ரம்ப் கூறியதற்காக, “அமெரிக்க வேலைகள்” மற்றும் “தேசியப் பாதுகாப்பு” ஆகியவற்றை முன்னிறுத்தி, ட்ரம்ப்பை வலதுசாரிக் கண்ணோட்டத்தில் இருந்து தாக்கினர். ஜேர்மனியில், மூடப்படும் அபாயத்தில் உள்ள வாகன ஆலைகளை ஆயுத உற்பத்தி ஆலைகளாக மாற்றுவதை IG Metall தொழிற்சங்கம் ஆதரிக்கிறது. இந்த சங்கத்தின் துணைத் தலைவர், யுர்கன் கெர்னர், இந்த மாற்றத்தில் “ஆரம்பத்திலிருந்தே” ஈடுபடுவதே தொழிற்சங்கத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளிகளும் தொழிலாளர்களும் ஒரு “தேசிய” நலனால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர் என்பது அதிகாரத்துவத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு அடிப்படைப் பொய்யாகும். அதே சமயம், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் அமைப்புகள், ஓர் நாட்டில் உள்ள தொழிலாளர்களை மற்றொரு நாட்டில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுக்கு எதிராகத் தூண்டிவிட உதவுகின்றன. மெக்சிகன் தொழிலாளர்களிடம், அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்களின் போட்டியாளர்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்கத் தொழிலாளர்களிடம் தங்கள் வேலைகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிரான வரிவிதிப்புகளைச் சார்ந்தே இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
போலி-இடது அமைப்புகள், தொழிலாள வர்க்கத்தின் இடதுபக்கம் நோக்கிய நகர்வை வேண்டுமென்றே திசைதிருப்பச் செயல்படுகின்றன. அவை தேசியவாதத்தையும் முதலாளித்துவ அரசையும் பாதுகாப்பதன் மூலம், தீவிர வலதுசாரிகளுடன் தங்களை மேன்மேலும் கூட்டணி அமைக்கும் நிலைக்குக் கொண்டு செல்கின்றன. செயற்கை நுண்ணறிவு குறித்த “மனித-ஆதரவு பேரவையில்” செப்டம்பர் 15 அன்று, முன்னாள் ட்ரம்ப்பின் ஆலோசகர் ஸ்டீவ் பேனனுடன் பெர்னி சாண்டர்ஸ் ஒரே மேடையில் தோன்றினார். ஐ.நா-வில் ஈரானை “முற்றாக அழித்துவிடுவேன்” என்று ட்ரம்ப் அச்சுறுத்துவதற்கு முந்தைய நாள், நியூ யோர்க் மேயர் மம்தானி கிரேசி மேன்ஷனில் ட்ரம்பை வரவேற்று உபசரித்தார். நெதன்யாகுவுக்கு எதிரான போராட்டங்களைத் தான் “ஊக்குவித்ததாக” கூறப்படுவதை மம்தானி மறுத்தார். மேலும், நெதன்யாகு பேசிக்கொண்டிருந்தபோது, நியூ யோர்க் நகர போலிஸ்துறையால் 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதற்கும் மம்தானி தலைமை தாங்கினார்.
ஆனால், இந்த சக்திகள் தொழிலாள வர்க்கத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றாலும், பல தசாப்தங்களாக பூகோள மயமாக்கப்பட்ட உற்பத்தியால் மாற்றமடைந்துள்ள அதன் புறநிலைச் சக்தி முன்னெப்போதையும்விட இப்போது மிக அதிகமாக உள்ளது.
தேசிய எல்லைகளைத் தாண்டிய ஐக்கியத்தின் அவசியமும், சுயாதீனமான அமைப்பின் தேவையும் அதிகரித்து வருவது செப்டம்பர் 20 அன்று நனவுபூர்வமான வெளிப்பாட்டைக் கண்டது. அன்றைய தினம், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் நோர்வே நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், மேக் டிரக்ஸ் (Mack Trucks) தொழிலாளியும் UAW சங்கத்தின் தலைவர் பதவிக்கான வேட்பாளருமான வில் லெஹ்மனுடன் நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
“சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காகவும்” எனப் பெயரிடப்பட்ட இந்தக் கூட்டம், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. பணிநீக்கங்கள், வர்த்தகப் போர், இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான உலகளாவிய மூலோபாயத்தைப் பற்றி கலந்துரையாட, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சாமானிய தொழிலாளர் குழுக்களைச் சேர்ந்த பேச்சாளர்களை இது ஒன்றிணைத்தது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தேசிய உருக்கு வாகனத் தொழிலாளர், நோர்வேயில் உள்ள வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் துணை நிறுவனமான MAN நிறுவனத் தொழிலாளர் ஒருவர், மெக்சிகோவின் சிலாவோவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர் ஒருவர், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வாகனத் தொழிலாளர்களும் தபால் தொழிலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இத்தகைய கூட்டம், மகத்தான புறநிலை அடித்தளங்களைக் கொண்டுள்ள ஒரு இயக்கத்தின் தொடக்க வடிவமாகவும், தற்போதைக்கு வரம்பிற்குட்பட்ட வடிவமாகவும் உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஒன்பதாவது மாநாட்டில் தனது தொடக்க அறிக்கையில் டேவிட் நோர்த், உலகளாவிய உற்பத்தி என்பது “தொற்சாலையை... பூமி முழுவதும் பரவச் செய்துள்ளது” என்றும், அதேசமயம் “உலகளாவிய தொழிலாளர் படை இப்போது சுமார் மூன்றரை பில்லியன் (சுமார் 350 கோடி) மனிதர்களைக் கொண்டுள்ளது, இது வரலாற்றில் இதுவரை ஒன்றிணைக்கப்பட்ட மிகப்பெரிய சமூக சக்தியாகும்” என்றும் எழுதியுள்ளார்.
அவர் இவ்வாறு முடித்தார்: “நகரங்களில் குவிந்துள்ள, இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் ஒருங்கிணைந்த உற்பத்தி அமைப்பால் பிணைக்கப்பட்டுள்ள, அதே வேளையில் உலகப் போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக வறுமை ஆகியவற்றை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் மூன்றரை பில்லியன் மக்கள் கொண்ட ஒரு சமூக சக்தியை, வரலாறு வெறும் ஒரு போராட்டத்திற்காக மட்டும் ஒன்றிணைக்கவில்லை. இது, இதுவரை மேற்கொள்ளப்பட்டதிலேயே மிக முழுமையான சமூக மாற்றத்திற்காக, அதாவது உலக சோசலிசப் புரட்சிக்காக ஒன்றிணைக்கப்பட்டு வருகிறது”.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலமாக, இந்த இயக்கத்திற்கு நனவான மற்றும் சுயாதீனமான அமைப்பு வடிவத்தை வழங்கப் போராடி வருகிறது. பல்வேறு பணியிடங்கள், தொழில்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள சாமானிய தொழிலாளர் குழுக்களை ஒன்றிணைப்பதன் மூலம், அதிகாரத்தை அதிகாரத்துவ அமைப்புகளிடமிருந்து தொழிலாளர்களிடமே மாற்றவும், தொழிற்சங்கக் கட்டமைப்பு மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் பிடியிலிருந்து தொழிலாளி வர்க்கத்தை விடுவிக்கவும் IWA-RFC 2021-இல் நிறுவப்பட்டது. இந்தப் போராட்டத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடு, ICFI-யின் பிரிவுகளில் வர்க்க உணர்வு மிக்க தொழிலாளர்களை மார்க்சிசவாதிகளாக ஆக்குவதும், அவர்களுக்குப் பயிற்சியளிப்பதுமாகும்.
