இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி நான்காவது பேராளர் மாநாட்டை நடத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), உலக முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் நெருக்கடி, தீவிரமடைந்துவரும் ஏகாதிபத்தியப் போர், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) / தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியில், கொழும்பில் செப்டெம்பர் 11 முதல் 13 வரை அதன் நான்காவது தேசிய பேராளர் மாநாட்டை நடத்தியது.

“ஜே.வி.பி. அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தில் சோ.ச.க.யின் மூலோபாயமும் வேலைத்திட்டமும்” என்ற பிரதான தீர்மானத்தை பேராளர் மாநாடு ஏற்றுக்கொண்டது. பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதேவேளை, லசித லக்மால், ரொஹந்த டி சில்வா, சமன் குணதாச ஆகியோர் ஜே.வி.பி.யின் பரிணாம வளர்ச்சி, இலங்கையின் இனவாதப் போர் மற்றும் 2022 வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள் தொடர்பாக துணை அறிக்கைகளை முன்வைத்தனர்.

இலங்கை சோ.ச.க.யின் நான்காவது பேராளர் மாநாட்டில் தீபால் ஜயசேகர உரையாற்றிய போது

உலகப் போரின் அச்சுறுத்தல் உடனடி யதார்த்தமாக மாறியுள்ள நிலைமைகளின் கீழ் பேராளர் மாநாடு நடைபெறுவதாக ஜயசேகர வலியுறுத்தினார். “மூன்றாம் உலகப் போர் இனிமேல் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் ஓர் அச்சுறுத்தல் அல்ல, அது எமது கண்களுக்கு முன்னால் விரிவடைந்து கொண்டிருக்கும் ஓர் யதார்த்தமாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர், காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலைப் போர், ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுடன் இராணுவ மோதலுக்கான அமெரிக்காவின் தீவிரமடைந்து வரும் தயாரிப்புகள் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். இவை தனித்தனியான மோதல்கள் அல்ல, மாறாக முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியில் வேரூன்றிய ஏகாதிபத்திய வன்முறையின் ஒன்றோடொன்று தொடர்புடைய முன்னரங்குகளாகும்.

இலங்கையின் நெருக்கடியை இந்த உலகளாவிய நெருக்கடியின் ஒரு குவிந்த வெளிப்பாடாக பேராளர் மாநாட்டுத் தீர்மானம் அணுகியது. உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிவிட்ட தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான மோதல், சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமைக்கும் இடையிலான முரண்பாடு ஆகிய முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளே, ஆளும் வர்க்கங்களை வெளிநாடுகளில் போரையும் உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்தையும் முன்னெடுப்பதை நோக்கித் தள்ளுகின்றன என்று ஜயசேகர விளக்கினார். அதேநேரம், இதே முரண்பாடுகள் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மறுமலர்ச்சியையும் உருவாக்குகின்றன.

தொழிலாள வர்க்கம் இந்தப் போராட்டங்களை தனது சொந்த சுயாதீன புரட்சிகர தலைமையின் கீழ் சோசலிசத்திற்கான ஒரு நனவுபூர்வமான இயக்கமாக மாற்றுமா என்பதே “அடிப்படையான மூலோபாயக் கேள்வியாகும்” என ஜயசேகர பேராளர் மாநாட்டில் கேட்டார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் அதன் பகுதிகளான இலங்கை சோ.ச.க. உட்பட அனைத்துப் பகுதிகளினதும் மையப் பணியானது, இந்த மாற்றத்திற்குத் தேவையான புரட்சிகர முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் தலைமைத்துவத்தை வழங்குவதாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் அபிவிருத்திகளைச் சுட்டிக்காட்டிய ஜயசேகர கூறியதாவது: “ஐ.எம்.எஃப். சிக்கன நடவடிக்கைகள், அரச அடக்குமுறையைப் பலப்படுத்துதல் மற்றும் ஏகாதிபத்தியப் போர் தயாரிப்புகளுடன் அணிசேர்தல் ஆகியவற்றை எதிர்ப்பதாக ஜே.வி.பி./தே.ம.ச. சில காலத்திற்கு முன்னர் கூறிக்கொண்டது. இப்போது அவை அதன் ஆட்சியின் மைய அம்சங்களாக மாறிவிட்டன. ... தொழிலாளர்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அது தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நம்பியிருக்கும் அநேநேரம், அரசாங்கம் பொலிஸ்-அரச வழிமுறைகளை தீவிரப்படுத்துவதற்குத் தயாராகி வருகிறது.”

ஜே.வி.பி. முதலாளித்துவ ஆட்சியின் ஒரு கட்சியாக மாற்றமடைந்தது குறித்து அறிக்கையின் ஒரு முக்கியப் பகுதி ஆராய்ந்தது. அது ஒரு காலத்தில் மார்க்சிச அல்லது சோசலிசக் கட்சியாக இருந்து பின்னர் சீரழிந்தது என்ற கூற்றை ஜயசேகர நிராகரித்தார். ஜே.வி.பி.க்கும் மார்க்சிசத்திற்கும் சோசலிசத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அதன் பரிணாம வளர்ச்சியானது அதன் குட்டி முதலாளித்துவ, சிங்களப் பேரினவாத மற்றும் தொழிலாள வர்க்க விரோத அடித்தளங்கள் மற்றும் அரசியலிலேயே வேரூன்றியிருந்தது.

ஜனநாயகக் கடமைகளை பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் மூலமே நிறைவேற்ற முடியும் என்ற முடிவை நிராகரிக்கின்றமை, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு அடிபணியச் செய்து, இறுதியில் ஜே.வி.பி.யை முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு இணைப்பாக மாற்றிவிடும் என்று கீர்த்தி பாலசூரிய 1970 இல் விடுத்த எச்சரிக்கையை ஜயசேகர நினைவுகூர்ந்தார். “ஜே.வி.பி.யின் முழு பரிணாம வளர்ச்சியும்,” குறிப்பாக “கடந்த இரண்டு ஆண்டுகளில் அது அரசாங்கத்தில் இருந்தபோது மேற்கொண்ட செயற்பாடுகளும்” பாலசூரியவின் பகுப்பாய்வை வலுவாக உறுதிப்படுத்துகின்றன என்று ஜயசேகர வாதிட்டார்.

எதிர்காலப் போராட்டங்களுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்காக, இலங்கையின் தொழிலாள வர்க்கம் 2022 வெகுஜன எழுச்சியில் இருந்து தீர்க்கமான படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜயசேகர வலியுறுத்தினார். அந்த எழுச்சியில் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு அரசியல் போக்குகள் மோதின. சோ.ச.க. ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்காகப் போராடியது. அதேவேளை, ஜே.வி.பி./தே.ம.ச. உட்பட எதிர்க்கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி-இடது குழுக்களின் உதவியுடன், ஒரு “இடைக்கால அரசாங்கத்தை” உருவாக்கும் திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் அந்த இயக்கத்தை முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்பிற்குள் கட்டுப்படுத்த முயன்றன.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி-இடதுகளால் வெகுஜன இயக்கம் காட்டிக்கொடுக்கப்பட்டமை, ஆளும் வர்க்கம் தனது ஆட்சிக்கு தற்காலிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்குப் பாதையைத் திறந்து விட்டது என்று ஜயசேகர சுட்டிக்காட்டினார். முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) அமெரிக்க சார்பு தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மூலமாகவும், பின்னர் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் மூலமாகவும் இது இடம்பெற்றது.

கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 9 ஜூலை 2022 அன்று, இலங்கை ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் தெருவில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள். [AP Photo/Amitha Thennakoon]

எனவே, தீர்மானகரமான பிரச்சினையாக இருந்தது “அகநிலை காரணியே” ஆகும்: தன்னெழுச்சியான எதிர்ப்பை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நனவுபூர்வமான போராட்டமாக மாற்றக்கூடிய ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியை கட்டியெழுப்புவதே ஆகும். தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சோசலிசப் பாதையில் பயணிக்கத் தவறியதை, அதன் உள்ளார்ந்த பலவீனத்திற்குக் காரணமாகக் கூற முடியாது என்று ஜயசேகர வலியுறுத்தினார். பல தசாப்தங்களாக இடம்பெற்ற ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் பப்லோவாத காட்டிக்கொடுப்புகள், தொழிலாள வர்க்கத்திற்குள் சோசலிச நனவையும் மார்க்சிச அரசியல் கலாச்சாரத்தையும் அழித்துவிட்டதன் விளைவாக, பிரமாண்டமான அரசியல் தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, அரசியல் கல்வியூட்டல், வரலாற்றுத் தெளிவுபடுத்தல் மற்றும் புரட்சிகர காரியாளர்களை வளர்த்தெடுப்பதும் தவிர்க்க முடியாத பணிகளாகும்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தேசியத் தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த், இணையவழி உரையொன்றின் மூலம் அனைத்துலகக் குழுவின் சகோதரத்துவ வாழ்த்துகளைத் தெரிவித்தார். இலங்கைப் பேராளர் மாநாடு முதலாளித்துவத்தின் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறுவதாக அவர் கூறினார்.

நாஜி ஆட்சிக்கு வரத்தம் தெரிவிக்கும் தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி குறித்து பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத் தேர்தலில் அக்கட்சி கிட்டத்தட்ட 45 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், தற்போது அங்கு ஓர் அரசாங்கத்தை அமைக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

“இது மிகப்பெரும் அரசியல் முக்கியத்துவம் கொண்ட நிகழ்வாகும். ஹிட்லரின் ஆட்சி வீழ்ச்சியடைந்து 81 ஆண்டுகளுக்குப் பின்னர், நாஜிக்களின் அரசியல் மற்றும் சித்தாந்த வாரிசுகள் ஜேர்மனியில் மேலாதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளனர். இது ஜேர்மனியில் மட்டுமே நடைபெறவில்லை. முசோலினியின் நவ-பாசிச வாரிசுகள் ஏற்கனவே இத்தாலியில் ஆட்சியில் உள்ளனர். விச்சி ஆட்சியின் வாரிசுகளான லு பென் இயக்கம், பிரான்சில் மேலாதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. ஸ்பெயினில் பிராங்கோவின் வாரிசுகள் பலமடைந்து வருகின்றனர். பிரிட்டனிலும்கூட தீவிர வலதுசாரிகள் வெகுஜன ஆதரவைப் பெற்று வருகின்றனர்.

“இது எவ்வாறு சாத்தியமாகிறது? இதற்குப் பொறுப்பானவர்கள் யார்? ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பாசிசத்தின் எழுச்சியிலிருந்து பெற வேண்டிய அரசியல் முடிவு என்ன?

“இது முதலாளித்துவ முறைமையின் திவால்நிலையையும் பிற்போக்குத் தன்மையையும் நிரூபிக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஜேர்மனியும் கலைக்கப்பட்டன. இது ஜனநாயகத்தின் வெற்றியாகப் போற்றப்பட்டது. ஆனால் அது சமூகப் பிற்போக்கிற்குப் பாதையைத் திறந்துவிட்டது. மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான அமைப்புகளான போலி-இடதுகள், ஸ்ராலினிசத்தின் எஞ்சிய சக்திகள், சமூக ஜனநாயகவாதிகள், முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் ஆகிய அனைத்தும், வளர்ந்து வரும் சமூகப் பிற்போக்கிற்கு வசதியளித்து அதனுடன் ஒத்துழைக்கும் பிற்போக்கு சக்திகளாக அரசியல் ரீதியாக அதில் உடந்தையாக உள்ளன என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.”

பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஊடாக 1968 இல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் (பு.க.க.) இருந்தே சோசலிச சமத்துவக் கட்சியின் தோற்றம் தொடங்குகிறது என்று நோர்த் சுட்டிக்காட்டினார். புரட்சிகர அரசியல் செய்வதாக கூறிக்கொண்டு தொடங்கி, முதலாளித்துவ எதிர்ப்புரட்சியை நடைமுறைப்படுத்தும் அரசாங்கமாக ஜே.வி.பி. பரிணாமமடைந்துள்ளமை, இந்த வரலாற்றை உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

“வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க வெகுஜன இயக்கத்தின் தீவிரமயமாதலை வெளிப்படுத்தக்கூடிய இயக்கம், எமது புரட்சிகர இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதனாலேயே, உலக சோசலிச வலைத் தளத்துடன் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் உலக சோசலிசப் புரட்சிக்கு ஆதரவளித்தமை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்யக் கோரும் எமது பிரச்சாரம் தனித்துவமானதாக மாறியுள்ளது,” என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“இந்தப் பேராளர் மாநாட்டில் இடம்பெறும் கலந்துரையாடல் இந்த நாட்டில் உள்ள இயக்கத்திற்கு மட்டுமல்ல, உலகளாவிய சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு பங்களிப்பாகும்” என்று கூறி அவர் தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளர் ஜோ கிஷோரும் பேராளர் மாநாட்டில் உரையாற்றினார். அத்துடன், அவுஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் துருக்கியில் உள்ள அனைத்துலகக் குழுவின் பகுதிகள் எழுத்துமூல வாழ்த்துகளை அனுப்பின. அவை ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களின் அனுபவங்களையும் போராட்டங்களையும் பேராளர் மாநாட்டின் கலந்துரையாடல்களுக்குள் கொண்டு வந்தன.

ஜே.வி.பி.யின் வரலாறு குறித்து லசித லக்மால் முன்வைத்த துணை அறிக்கை, 1960களின் பிற்பகுதியில் அது தோன்றியதில் இருந்து, முதலாளித்துவ ஆட்சியின் ஒரு கருவியாக அதன் தற்போதைய வகிபாகம் வரையிலான அதன் பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்தது.

1964 இல் லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) செய்த காட்டிக்கொடுப்பின் அரசியல் விளைவுகளில் இருந்து லக்மால் தனது அறிக்கையைத் தொடங்கினார். அந்தக் கட்சி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்தது. இந்தக் காட்டிக்கொடுப்பு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஓர் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியதுடன், ஜே.வி.பி. போன்ற குட்டி முதலாளித்துவ தேசியவாதப் போக்குகளுக்கு பாதையைத் திறந்துவிட்டது.

மார்க்சிசக் கட்சியல் ஆயுதபாணியாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய முடியும் என்ற கீர்த்தி பாலசூரியவின் வலியுறுத்தலை ஜே.வி.பி.யின் வரலாறு உறுதிப்படுத்துகிறது என்று லக்மால் கூறினார். 1971 கிராமப்புற கிளர்ச்சி, 1980 பொது வேலைநிறுத்தத்திற்கு ஜே.வி.பி. எதிர்ப்பு தெரிவித்தமை, இனவாதப் போரின் போது அது நடத்திய சிங்களப் பேரினவாதப் பிரச்சாரம், தொழிலாள வர்க்கத்துக்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் எதிராக அது நடத்திய தாக்குதல்கள் ஆகியவை, சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியலுக்கு அது கொண்டிருந்த விரோதத்தை நிரூபித்தன.

ஜே.வி.பி. தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெடுத்த இனவாதம், அது ஏகபோக முதலாளித்துவத்தின் ஒரு கருவியாக மாறி, பாசிசத்தை நோக்கி இட்டுச் செல்லக்கூடும் என்ற பாலசூரியவின் எச்சரிக்கையை அந்த அறிக்கை நினைவுகூர்ந்தது.

ல.ச.ச.க.வின் காட்டிக்கொடுப்புக்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வழங்கிய பதில் அடிப்படையில் வேறுபட்டதாக இருந்தது. அது சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடியதோடு, அரசாங்கத்தின் இனவாதப் போரையும் ஜே.வி.பி.யின் பேரினவாத அரசியலையும் எதிர்த்தது.

கூட்டணி அரசாங்கங்களில் பங்கேற்றமை, இனவாதப் போருக்கு ஆதரவளித்தமை, முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டணிகளை அமைத்தமை, ஏகாதிபத்திய சக்திகளின் பக்கம் படிப்படியாக நகர்ந்தமை உட்பட, பின்னர் ஜே.வி.பி. முதலாளித்துவ ஸ்தாபனத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டமை வரை லக்மால் தொடர்ந்து விளக்கமளித்தார்.

2019 இல் தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது, இந்தப் பரிணாம வளர்ச்சியில் மற்றொரு கட்டத்தைக் குறித்தது. கல்விமான்கள், தொழிலறிஞர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உயர் மத்தியதர வர்க்கத்தின் சில பிரிவுகளை உள்வாங்கிக் கொண்டு, தன்னை ஒரு மரியாதைக்குரிய அரசியல் சக்தியாக மறுபெயரிட ஜே.வி.பி. முயன்றது. அதேநேரம், முதலாளித்துவப் பொருளாதார உறவுகளைப் பாதுகாப்பதாக வணிகத்துறையினருக்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் அது உறுதியளித்தது.

இந்த மாற்றத்தை 2022 வெகுஜன எழுச்சியில் ஜே.வி.பி. ஆற்றிய வகிபாகத்துடனும், அதைத் தொடர்ந்து அது அரசாங்கத்தைக் கைப்பற்றியதுடனும் நேரடியாகத் தொடர்புபடுத்தி அந்த அறிக்கை ஆராய்ந்தது.

இனவாதப் போரின் வரலாறு தொடர்பாக துணை அறிக்கையை முன்வைத்த ரொஹந்த டி சில்வா, 2009 இல் இராணுவ மோதல் முடிவடைந்த பின்னரும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என்று விளக்கினார். நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன், இன்னும் பலர் இடம்பெயர்ந்தனர். இது முதலாளித்துவ முறைமையின் வங்குரோத்தை நிரூபிக்கிறது.

“இந்தப் போர் ஒரு இயல்பான வளர்ச்சியின் விளைவல்ல, மாறாக இலங்கை ஆளும் உயரடுக்கினால் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் விளைவாகும். ஒரு போர்க்குணமிக்க மற்றும் சோசலிச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட நிலையில், பலவீனமான முதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக சிங்கள-பௌத்த பேரினவாதத்தை ஊக்குவித்தது. இது இனவாதப் போருக்கு வழிவகுத்தது. ஆனால் இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதல்ல. தொழிலாள வர்க்கத் தலைமையின், குறிப்பாக ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பே தீர்க்கமான காரணியாக இருந்தது. இது 1964 இல் ல.ச.ச.க. மக்கள் முன்னணி அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் உச்சக்கட்டத்தை அடைந்தது,” என்று அவர் கூறினார்.

“இந்தக் காட்டிக்கொடுப்பு குட்டி முதலாளித்துவ இயக்கங்களான வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளும் (LTTE) தெற்கில் ஜே.வி.பி.யும் உருவாவதற்கு வழிவகுத்தது,” என்று அவர் தொடர்ந்து கூறினார். இந்தக் குட்டி முதலாளித்துவ இயக்கங்களின் வங்குரோத்து இப்போது வெளிப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பேரழிவை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தது.

1987 இல் கம்கரு மாவத பத்திரிகையில் (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அப்போதைய வெளியீடு) வெளியான ஒரு கட்டுரையை மேற்கோளிட்டு, தேசிய ரீதியில் பிரத்தியேகமான ஓர் இயக்கத்தால் விடுதலையை அடைய முடியாது என்றும், முதலாளித்துவ தேசிய-அரசு முறைமைக்குள் அது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு, செயலிழந்துவிடும் என்றும் டி சில்வா விளக்கினார்.

முடிவாக, தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே முன்னோக்கிய பாதை, உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே என்று ரொஹந்த வலியுறுத்தினார்.

சமன் குணதாசவின் துணை அறிக்கை, 2022 வெகுஜன எழுச்சியின் அரசியல் படிப்பினைகளை சோ.ச.க. எவ்வாறு கிரகித்துக்கொள்வது, எதிர்காலப் போராட்டங்களுக்குத் தன்னை எவ்வாறு தயார்படுத்துவது என்பவற்றை எடுத்துரைத்தது.

2022 வெறுமனே முடிவடைந்த ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படக்கூடாது என்று குணதாச வலியுறுத்தினார். எதிர்காலப் போராட்டங்களை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் தயாரிப்புகள், அதன் படிப்பினைகளை உடனடியாகப் பொருத்தமானவையாக ஆக்குகின்றன. 2022 போராட்டத்தின் அரசியல் வரம்புகளைத் தாண்டிச் செல்லும் ஓர் எழுச்சிக்காக சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தையும் வெகுஜனங்களையும் எவ்வாறு தயார்படுத்துகிறது என்பதே மைய பிரச்சினையாகும்.

1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்னோடியாக இருந்த 1905 நிகழ்வுகள் குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை சுட்டிக்காட்டிய குணதாச, ஓர் எழுச்சிலிருந்து அரசியல் முடிவுகளைப் பெற்று, சர்வதேச சோசலிச முன்னோக்கின் ஊடாக எதிர்காலப் போராட்டங்களுக்குத் தொழிலாள வர்க்கத்தைத் தயார்படுத்துவதே தீர்க்கமான பணியாகும் என்று கூறினார்.

இதே அணுகுமுறை சோ.ச.க.க்கும் இன்றியமையாதது என்று குணதாச வாதிட்டார். கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் போரினாலும் தீவிரமடைந்த சர்வதேச நெருக்கடியிலிருந்து 2022 வெகுஜன எழுச்சி உருவானது. உலக சோசலிச வலைத் தளம், கட்சி வெளியீடுகள், கூட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களுடனான கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் சோ.ச.க. ஆரம்பத்தில் இருந்தே இதில் தலையீடு செய்தது.

இரண்டு பொது வேலைநிறுத்தங்கள் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சக்தியை வெளிப்படுத்தியதுடன், புரட்சிகர சாத்தியக்கூறுகளும் தோன்றின. ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சுயாதீனமான அரசியல் போராட்ட வேலைத்திட்டத்திற்கு போர்க்குணமிக்க தொழிலாளர்களை வென்றெடுக்கும் அளவுக்கு சோ.ச.க. அவர்களிடையே போதுமான அளவு வேரூன்றியிருக்கவில்லை. இதனால், போலி-இடது மற்றும் மத்தியதர வர்க்க சக்திகளுக்கு, அந்த இயக்கத்தை மீண்டும் முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சியை நோக்கித் திசைதிருப்புவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

தோல்வியானது புரட்சிகர வேலைத்திட்டத்தின் தோல்வியை நிரூபிக்கவில்லை, மாறாக புரட்சிகர தலைமை இல்லாமையின் விளைவுகளையே நிரூபித்தது. தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள், கிராமப்புற உழைக்கும் மக்களை அணிதிரட்டுதல் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான பேராளர் மாநாடு ஆகியவற்றை உருவாக்குவதற்கான சோ.ச.க.யின் வேலைத்திட்டம் இதற்கு மாற்றீட்டை வழங்குகிறது.

“புரட்சிகரப் போராட்டம் சர்வதேச ரீதியானது, அது ஏற்கனவே உள்ள தேசியவாத முதலாளித்துவ கட்டமைப்பின் நீட்சியல்ல” என்பதை தொழிலாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று குணதாச வலியுறுத்தினார். “சோசலிச நனவு தன்னெழுச்சியாக உருவாவதில்லை. அதற்கு நனவுபூர்வமான புரட்சிகர தலைமை தேவைப்படுகிறது. இந்தப் பேராளர் மாநாட்டின் முன்னுள்ள சவால் இதுவாகும்,” என்று அவர் முடித்தார்.

போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம் தொடர்பான தீர்மானத்தை பேராளர் மாநாடு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

பேராளர் மாநாடு புதிய மத்திய குழுவைத் தேர்ந்தெடுத்தது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய குழு உறுப்பினர்கள், தீபால் ஜயசேகரவை பொதுச் செயலாளராகவும், சமன் குணதாசவை துணை தேசியச் செயலாளராகவும், லசித லக்மாலை தேசிய ஆசிரியராகவும், பானி விஜேசிறிவர்தனவை உதவி தேசிய ஆசிரியராகவும் மீண்டும் தேர்ந்தெடுத்தனர்.

தீவிரமடைந்து வரும் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு மத்தியில், இலங்கையில் சோ.ச.க. முன்னெடுக்கும் வேலைகள், உலக சோசலிசப் புரட்சியின் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான சர்வதேசப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை பேராளர் மாநாடு நிறுவியது.

எதிர்வரும் போராட்டங்களுக்காக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அரசியல் ரீதியாகத் தயார்படுத்துவதற்காக, மாநாட்டின் அறிக்கைகள், தீர்மானங்கள் மற்றும் பங்களிப்புகள் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படும்.

Loading