இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடி உலகளவில் மோசமடைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

உலக இளைஞர்களின் வேலைவாய்ப்பு எதிர்காலம் குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) சமீபத்திய அறிக்கை, உலகளவில் தீவிரமடைந்து வரும் இளைஞர் வேலையின்மை நெருக்கடியையும், இளைஞர்கள் தங்கள் பணி வாழ்க்கையில் நிலையான வருமானம் கிடைக்கும் வேலையைப் பெறுவது மேலும் கடினமாகி வருவதையும் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய அறிக்கைகளுக்கே உரிய கவனமான மொழியில், “இளைஞர்கள் தொழிலாளர் சந்தைக்குள் நுழைவதற்கான பாதை கரடுமுரடானதாக…” இருப்பதாக அது விவரிக்கிறது.

இளைஞர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2026: எதிர்காலத்திற்குத் திரும்புதல் (GET for Youth) என்ற அறிக்கை, இளைஞர் வேலையின்மை உயர்ந்த நிலையில் இருப்பதுடன் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகிறது. உலகளவில், இளைஞர் வேலையின்மை விகிதம் 2025 ஆம் ஆண்டில் 12.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 67 மில்லியன் இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

இளைஞர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2026: எதிர்காலத்திற்குத் திரும்புதல் [Photo: ILO]

வேலையின்மைப் புள்ளிவிவரம், இளைஞர்கள் வேலையிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையின் உண்மையான அளவைப் பெருமளவில் குறைத்துக் காட்டுகிறது. வேலை, கல்வி அல்லது பயிற்சி எதிலும் இல்லாத இளைஞர்களின் (NEET) உலகளாவிய விகிதம், 2023ஆம் ஆண்டிலேயே மிக அதிகமாக இருந்த 19.7 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, 257 மில்லியன் இளைஞர்கள் வேலை செய்யவும் இல்லை, கல்வி அல்லது பயிற்சியிலும் இல்லை. ILO குறிப்பிடுவது போல, “மேலும் அதிகமான இளைஞர்கள் இந்த நிலையில் சிக்கியிருப்பதாலும், தொழிலாளர் சந்தையிலிருந்தும் கல்வி, பயிற்சி அமைப்புகளிலிருந்தும் விலகியுள்ள இளைஞர்களை மீண்டும் ஈடுபடுத்துவது கடினமாகி வருவதாலும், அதிகரித்து வரும் NEET விகிதம் குறிப்பாகக் கவலைக்குரியது.”

இது உண்மையிலேயே உலகளாவிய நெருக்கடி என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ILO-வின் பதினொரு உலகளாவிய துணைப் பிராந்தியங்களில் எட்டில், 2023ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் இளைஞர் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது. எஞ்சிய மூன்று துணைப் பிராந்தியங்களில் இரண்டில், வேலையின்மை விகிதம் குறைந்தபோதிலும் NEET விகிதம் அதிகரித்துள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் மட்டுமே இந்த இரண்டு குறியீடுகளிலும் சரிவு பதிவாகியுள்ளது; இதற்குக் காரணமான காரணிகளில் ஒன்று, இளைஞர் மக்கள்தொகையின் அளவு குறைந்து வருவதாகும்.

ஏழ்மையான நாடுகளில் இந்த நெருக்கடி குறிப்பாகக் கடுமையாக உள்ளது. அரபு நாடுகளும் வட ஆப்பிரிக்காவும் 2025ஆம் ஆண்டில் முறையே 26.2 சதவீதம், 22.6 சதவீதம் என்ற உலகிலேயே அதிகமான இளைஞர் வேலையின்மை விகிதங்களைத் தொடர்ந்து கொண்டுள்ளன. இதற்கிடையில், குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒன்பது பேர் முறைசாரா துறையில், தற்காலிக அடிப்படையில் வேலை செய்கின்றனர்; முறையான வேலைவாய்ப்புடன் கிடைக்கும் குறைந்தபட்ச வேலைப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் கூட அவர்களுக்கு இல்லை.

NEET நிலையில் உள்ள இளைஞர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் பெண்கள். சிறுமிகளுக்குக் கல்வியை அணுகுவதற்குச் சமமான வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஊதியமற்ற பராமரிப்புப் பொறுப்புகள், பாகுபாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை அணுகுவதில் உள்ள குறைந்த வாய்ப்புகள் காரணமாக, குறிப்பாக அரபு நாடுகள், வட ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில், இளம் பெண்கள் கல்வியிலோ வேலைவாய்ப்பிலோ ஈடுபடாமல் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

ILO-வின் மிக முக்கியமான கண்டறிதல்களில் ஒன்று, இந்தச் சீரழிவு இனி உலகின் குறைந்தளவு வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதாகும். முன்னர் இளம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியதாக இருந்த உயர் வருமானப் பொருளாதாரங்களிலேயே, மிகக் கூர்மையான அதிகரிப்புகள் சில பதிவாகியுள்ளன. வட அமெரிக்காவில் இளைஞர் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது; 2023ஆம் ஆண்டில் 8.3 சதவீதமாக இருந்த அது, 2025ஆம் ஆண்டில் 9.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவிலும் இதேபோன்ற போக்கு காணப்படுகின்றது, ஆனால் அது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. இந்த இரு துணைப் பிராந்தியங்களிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர்களும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளும் வேலை பெறுவது மேலும் மேலும் கடினமாகி வருகிறது. தங்களது வேலை வாழ்க்கையின் தொடக்க நிலையிலிருக்கும் மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை இது ஏமாற்றமடையச் செய்து வருவதாக ILO குறிப்பிடுகிறது.

பல பிராந்தியங்களில், இளைஞர் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அதேவேளை, நடுத்தரத் திறன்கள் தேவைப்படும் தொடக்கநிலைத் தொழில்கள் மறைந்து வருவதையும், சுருங்கி வருவதையும் ILO சுட்டிக்காட்டுகிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழைவதற்கான மேலும் ஒரு அச்சுறுத்தலாக மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவை (AI) அது அடையாளம் காண்கிறது. 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் வகிக்கும் வேலைகளில் 6.1 சதவீதம், மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவுடன் தொடர்புடைய மாற்றங்களால் மிக அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய தொழில்களில் இருப்பதாக ILO மதிப்பிடுகிறது. இத்தொழில்கள் குறிப்பாக, இளம் தொழிலாளர்களிடையே ஏற்கனவே குறைந்து வரும் நடுத்தரத் திறன் தொழில்களில் குவிந்துள்ளன. முதலாளித்துவத்தின் கீழ், தேவையான உழைப்பின் அளவைக் குறைத்து மனித சுதந்திரத்தை விரிவுபடுத்தக்கூடிய தொழில்நுட்ப முன்னேற்றம், அதற்குப் பதிலாக, வேலை வாழ்க்கைக்குள் நுழைய முயலும் ஒரு தலைமுறை எதிர்கொள்ளும் வேலைப் பாதுகாப்பின்மையை மேலும் தீவிரப்படுத்தும் அச்சுறுத்தலாக மாறுகிறது.

உலகப் பொருளாதாரத்தில் இளைஞர்களின் நிலை மோசமடைந்து வருவதையே இந்த அறிக்கை சாராம்சத்தில் விவரிக்கிறது. புதிதாகத் தொழிலாளர் சந்தைக்குள் நுழைவோரை உள்வாங்கும் அளவுக்கு பொருளாதாரம் வலுவாக இல்லாத சூழலில் இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழைகின்றனர். அதேவேளை, வேலையளிப்போர் முன் அனுபவத்தைக் கோருவதால், தொடக்கநிலை வேலைவாய்ப்புகள் மறைந்து வருவதுடன், அவற்றைப் பெறுவதும் மேலும் மேலும் கடினமாகி வருகிறது. இதையே அறிக்கை “அனுபவ முரண்பாடு” (experience paradox) என்று அழைக்கிறது.

மேலும், மக்கள்தொகை வளர்ச்சி மிக அதிகமாக உள்ள பிராந்தியங்களில், குறிப்பாக சஹாராவுக்குத் தெற்கே உள்ள ஆபிரிக்காவிலும் தெற்காசியாவிலும், கண்ணியமான வேலைவாய்ப்பு மிகக் குறைவாகவே கிடைக்கிறது.

இந்த அறிக்கை ஒரு ஆழமான முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது: வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான இளைஞர் மக்கள்தொகைக்கு மிகப் பெரிய எண்ணிக்கையிலான உற்பத்தி வேலைகளை உலகப் பொருளாதாரம் உருவாக்க வேண்டியுள்ள அதே தருணத்தில்தான், தொழில்நுட்ப மாற்றம், பலவீனமான முதலீடும் வளர்ச்சியும், மறுசீரமைப்பும் ஆகியவை அத்தகைய வேலைகளை உருவாக்குவதை மேலும் கடினமாக்கி வருகின்றன.

அறிக்கையின் கண்டுபிடிப்புகள் எவ்வளவு கடுமையானவையாக இருந்தபோதிலும், அதைப் பற்றிய ஊடகச் செய்தி கிட்டத்தட்ட இல்லவே இல்லை. தி கார்டியன் உள்ளிட்ட பிரிட்டிஷ் பத்திரிகைகள், பிரிட்டனின் இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடி அல்லது “பின்தங்கிய தலைமுறை” பற்றிய செய்திகளால் நிரம்பியுள்ள நிலையில் இது மேலும் குறிப்பிடத்தக்கதாகிறது. ஏறத்தாழ ஒரு மில்லியன் NEET இளைஞர்கள், குறைந்து வரும் தொடக்கநிலை வேலைவாய்ப்பு வாய்ப்புகள், மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவை தொடர்ந்து செய்தி வெளியிடுகின்றன. எனினும், இப்பிரச்சினைகள் அனைத்தையும் மிகவும் பரந்த சர்வதேச அளவில் மோசமடைந்து வரும் நிலைமையின் பின்னணியில் வைத்துப் பார்ப்பதற்குப் பதிலாக, அவை ஒரு பிரிட்டிஷ் கொள்கைப் பிரச்சினையாகவே அணுகப்படுகின்றன.

இளைஞர்களின் வேலையின்மையும் வருமானமின்மையும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து, குறிப்பாக 15-24 வயதுடைய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ILO எந்தவொரு பரந்த அரசியல் முடிவுகளையும் முன்வைக்கவில்லை. தற்போது 15-24 வயதுடையோர் எண்ணிக்கை ஏறத்தாழ 1.3 பில்லியனை எட்டியுள்ளது. முழுமையான எண்ணிக்கையின் அடிப்படையில், இதுவே இதுவரை பதிவான மிகப் பெரிய இளைஞர் மக்கள்தொகையாகும். எனினும், மொத்த உலக மக்கள்தொகையில் இளைஞர்களின் பங்கு குறைந்து வருகிறது; உலக மக்கள்தொகையோ அதிகரித்தும் முதுமையடைந்தும் வருகிறது.

மிக முக்கியமாக, 2025ஆம் ஆண்டில் 757 மில்லியன் பேர், அதாவது உலக இளைஞர்களில் சுமார் 59 சதவீதம் பேர், குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்ந்தனர். 2050ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 878 மில்லியனாக உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) கணித்துள்ளது. இது 122 மில்லியன் அல்லது 16 சதவீத அதிகரிப்பாகும். இதன் விளைவாக, உலகின் மொத்த இளைஞர்களில் ஏறத்தாழ 69 சதவீதம் பேர் குறைந்த மற்றும் கீழ்-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிப்பார்கள்.

வேலைக்காக ஏங்கும் இளைஞர்கள், 2023 டிசம்பர் 6 அன்று ஹராரேயில் நடந்த அரசாங்க வேலைவாய்ப்புக் கண்காட்சியில் வரிசையில் நிற்கின்றனர். வேலை தேடுவோரின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும் வாய்ப்புக்காக நூற்றுக்கணக்கானோர் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டனர். கண்காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிலர் காயமடைந்தனர். [AP Photo/Tsvangirayi Mukwazhi]

இதன் பொருள், உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய இளைஞர் தலைமுறை, அந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பாதுகாப்பு அல்லது நிலையான எதிர்காலத்தை வழங்குவதற்கு மிகக் குறைந்த திறன் கொண்ட நாடுகளில் வாழப்போகிறது என்பதாகும். அதேவேளை, இளைஞர் மக்கள்தொகை குறைந்து வரும் செல்வந்த முதலாளித்துவப் பொருளாதாரங்கள்கூட, இளைஞர்கள் வயதுவந்தவர்களின் வேலை வாழ்க்கைக்குள் பாதுகாப்பாக நுழைவதற்கான வாய்ப்பை வழங்கத் தவறி வருகின்றன.

பொருளாதார ஒதுக்கல், நிறைவேறாத எதிர்பார்ப்புகள் மற்றும் வரலாற்றிலேயே மிகப் பெரிய இளைஞர் மக்கள்தொகை ஆகியவற்றின் இந்தக் கலவையானது ஒரு தெளிவான வரலாற்று ஒப்புமையை நினைவுக்குக் கொண்டுவருகிறது: 2011ஆம் ஆண்டின் அரபு வசந்தம். “எதிர்காலத்திற்குத் திரும்புதல்” என்ற அதன் தலைப்பிலேயே அடங்கியுள்ள வெளிப்படையான முரண்நகை இருந்தபோதிலும், இந்த வரலாற்று ஒப்புமையை ILO வெளிப்படையாகக் குறிப்பிடாமல் மறைமுகமாகவே விட்டுவிடுகிறது.

பெரிய எண்ணிக்கையிலான, கல்வியறிவு பெற்ற, மேலும் மேலும் ஒன்றோடொன்று தொடர்புபட்ட ஒரு தலைமுறை, நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கு தனக்கு நிலையான பொருளாதார எதிர்காலத்தை வழங்க முடியாது என்பதை உணரும்போது உருவாகக்கூடிய அரசியல் விளைவுகளை 2011ஆம் ஆண்டின் எழுச்சிகள் எடுத்துக்காட்டின. ஆயினும், அரபு வசந்தத்தின் போது வெளியிடப்பட்ட ILO-வின் இளைஞர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2011 அறிக்கை, இளைஞர் வேலையின்மையை அரசியல் எழுச்சிகளின் பின்னணியில் வைத்து வெளிப்படையாக விவாதித்தது. அரபு உலகில் இளைஞர் வேலையின்மை அசாதாரணமான அளவில் உயர்ந்திருந்தது, அந்த எழுச்சிகளுக்குப் பங்களித்த முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.

அதேபோல், ILO-வின் இளைஞர்களுக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப் போக்குகள் 2013: ஆபத்தில் உள்ள ஒரு தலைமுறை அறிக்கையும், இளைஞர்கள் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் சமூக ஆபத்துகளின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகியது. 2011ஆம் ஆண்டை, வேலைவாய்ப்பைக் கோரி உலகெங்கிலும் இளைஞர்கள் தலைமையில் குறிப்பிடத்தக்க போராட்ட இயக்கங்கள் நடைபெற்ற ஆண்டாகவும் அது விவரித்தது.

2011ஆம் ஆண்டில், தீவிரமயமாக்கப்பட்ட இளைஞர்களின் வெகுஜன இயக்கங்கள், தங்களது இளைஞர்களுக்கு எதிர்காலத்தை வழங்கத் தவறிய எதேச்சாதிகார அரபு ஆட்சிகளில் குறிப்பாகத் தெளிவாக வெளிப்பட்டன. இன்று, இளைஞர் வேலையின்மை உலகப் பொருளாதாரம் முழுவதும் பரவியுள்ளது. இளைஞர்களை வேலைவாய்ப்புக்குள் ஒருங்கிணைக்கும் பிரச்சினையை மிகவும் முன்னேறிய முதலாளித்துவப் பொருளாதாரங்கள் தீர்த்துவிட்டதாகக் கருதப்பட்ட வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளிலேயே மிகப் பெரிய அதிகரிப்புகள் பதிவாகியுள்ளன.

கார்னகியின் உலகளாவிய போராட்டக் கண்காணிப்பு (Global Protest Tracker) ஜூலை மாதம் வெளியிட்ட தகவலின்படி, அதற்கு முந்தைய 12 மாதங்களில் 57 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இது வழக்கத்திற்கு மாறாக அதிகமான எண்ணிக்கையாகும். அவற்றில் 32 போராட்டங்கள் அந்த நேரத்தில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன. வங்காளதேசம், கென்யா, இந்தியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், மொராக்கோ, நேபாளம் மற்றும் செர்பியா ஆகிய நாடுகளிலும் அவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றன.

பல்லாயிரக்கணக்கான இளம் மொராக்கோவினர், தாங்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் மட்டுமே செயூட்டாவை அடைய மேற்கொண்ட வெகுஜன முயற்சிகள் குறிப்பாக நிலைமையை வெளிப்படுத்துகின்றன. அப்பகுதியில் இருந்து வெளியான செய்திகள், அவர்களின் விரக்தியை குறைந்த ஊதியங்கள், எட்ட முடியாத வீட்டு வசதி, நிலையற்ற வேலைவாய்ப்பு மற்றும் சொந்த நாட்டில் வாழ்வதற்கு ஏற்ற எதிர்காலம் இல்லை என்ற உணர்வு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தின.

இளைஞர்களால் எதிர்காலத்தைக் காண முடியாதபோதும், நிலைமையை மாற்றுவதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் உணரும்போதும், சிலர் நாட்டைவிட்டு வெளியேறுவதன் மூலம் அந்த எதிர்காலத்தைத் தேடுகின்றனர். ஆனால், வறுமையிலிருந்து தப்பியோடும் இளைஞர்களை அதிகாரிகள் வேலிகள், காவல்துறை மற்றும் எல்லைகளின் இராணுவமயமாக்கல் ஆகியவற்றைக் கொண்டு எதிர்கொண்டனர்; அவர்கள் கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டிய உபரி மக்கள்தொகையாகவே நடத்தப்பட்டனர். அதேவேளை, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக பெருநிறுவன ஊடகங்கள் பாசிசத் தன்மை கொண்ட புலம்பெயர்வோர்-எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டன.

இளைஞர்கள் வறுமை வாழ்க்கைக்குத் தள்ளப்படும் ஓர் உலகத்திற்கான ஒரே தீர்வு சமூகத்தின் சோசலிச மாற்றமே ஆகும். இதற்கு, முதலில் அவர்களை வறுமைக்குள் தள்ளும் ஏகாதிபத்தியச் சுரண்டலை முறியடிப்பது அவசியமாகிறது. ஆனால் பொருளாதார மற்றும் சமூக ரீதியான தீவிரமயமாதல் தானாகவே ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தை உருவாக்காது. 2011ஆம் ஆண்டின் அனுபவம் துல்லியமாக இந்தப் பிரச்சினையையே எடுத்துக்காட்டியது:  வெகுஜன அணிதிரட்டல் நிலவும் அரசியல் ஒழுங்கை சவாலுக்குள்ளாக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக எந்த சமூக வர்க்கம் ஒரு மாற்றை வழங்கும் என்ற கேள்விக்கு அது தானாகவே தீர்வு காணாது.

எனவே, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் தீவிரமயமாதல் முன்வைக்கும் அரசியல் பணி என்னவென்றால், அவர்களின் போராட்டங்களை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் இணைப்பதும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்புவதும் ஆகும். அதாவது, முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிந்து, தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் மனிதத் தேவையின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைப்பதற்கான சோசலிசத் திட்டத்தைச் சுற்றி, அனைத்து தேசிய இனத்தவர்களான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைக்கும் திறன் கொண்ட, உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை உருவாக்குவதாகும்.

Loading