இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய (EU) உச்சிமாநாடு, சர்வதேச போர் நெருக்கடியின் ஆபத்தான தீவிரப்பாட்டின் வெளிப்பாடாக அமைந்தது. ஐரோப்பிய வல்லரசுகளுடனான தனது மோதலுக்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகம் தற்போதைக்கு ரஷ்யாவுடன் ஒருவித இணக்கத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றது. அதே வேளையில், பேர்லின் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் உக்ரேன் போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், அதை மேலும் விரிவுபடுத்தவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அவர்கள் நிதி மற்றும் இராணுவ சுமைகளின் அதிகரித்த பங்கினைத் தாங்களே ஏற்றுக்கொள்ளவும், ஐரோப்பாவை ஒரு சுயாதீனமான இராணுவ வல்லரசாகக் கட்டியெழுப்பவும் விரும்புகிறார்கள்.
அணுஆயுதப் போர் உட்பட, நேட்டோவிற்கும் (NATO) ரஷ்யாவிற்கும் இடையே ஒரு நேரடிப் போரைத் தூண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு பதற்ற அதிகரிப்புடன் இது சேர்ந்துள்ளது. அதே நேரத்தில், மீள் ஆயுதமயமாக்கல், “போட்டித்தன்மை”, வர்த்தகப் போர் மற்றும் புலம்பெயர்ந்து குடியேறுபவர்கள் குறித்து உச்சிமாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், வெளிநாட்டிலான போர் முனைப்பானது உள்நாட்டில் தீவிரப்படுத்தப்படும் சமூகத் தாக்குதல்கள் மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளுடன் பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
வாஷிங்டனுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான மோதல்கள்
இந்த உச்சி மாநாட்டின் மையப் புள்ளியாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ரஷ்ய டீசல் விநியோகம் தொடர்பாகப் புட்டினுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ட்ரம்ப் தடைகளைத் தளர்த்தியதோடு, ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரேனின் தாக்குதல்களையும் விமர்சித்திருந்தார். மேலும் அவர் உக்ரேனின் தலைமையில் மாற்றத்தையும் கோரியிருந்தார். இதற்கு மாறாக, ஐரோப்பிய அரசாங்கங்கள், ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களைத் தொடரவும், தடைகளை கடுமையாக இறுக்கவும் உறுதியாக உள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஜெலென்ஸ்கியின் அருகில் நின்றுகொண்டு இவ்வாறு அறிவித்தார்: “உக்ரேனுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள இது நேரமல்ல. ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்துவதற்கும் இது நேரமல்ல.” மாறாக, ஐரோப்பிய ஒன்றியம் தனது ஆதரவை அதிகரிக்கவும், ரஷ்யா மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்தவும் வேண்டும். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ரஷ்யாவுக்கு எதிரான 22ஆவது தடைகள் தொகுப்பைத் தயாரித்து வருவதாக அறிவித்தார்.
ஜேர்மன் அரசாங்கம் குறிப்பாக ஆக்கிரோஷமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. உக்ரேனுக்குத் “தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்காக”, கியேவுக்கான நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் “மீண்டும் ... அதிகரிக்க” வேண்டும் என்று சான்சலர் பிரெட்ரிக் மெர்ஸ் அறிவித்தார்.
“ஐரோப்பாவின் அரசியல் ஒழுங்கைப்” பாதுகாப்பதற்கு இது அவசியம் என்று அவர் கூறினார். வாஷிங்டனுடனான மோதல் தற்போது, ஐரோப்பாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்ய மத்திய வங்கியின் ஏறக்குறைய 210 பில்லியன் யூரோ சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது. செய்திகளின்படி, இந்தச் சொத்துக்களில் ஒரு பகுதியை மாஸ்கோவுடனான பேச்சுவார்த்தைகளில் பயன்படுத்த அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் விரும்புகின்றனர். இதை மெர்ஸ் கடுமையாக நிராகரித்தார்: “அது எங்கள் விவகாரம்; நாங்கள்தான் அதைப்பற்றி முடிவு செய்வோம்” என்று அறிவித்தார்.
இந்த வேறுபாடுகளுக்குப் பின்னால் போட்டி நிறைந்த புவிசார்-மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் உள்ளன. புட்டினுடன் ட்ரம்ப் செய்துகொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தம், கிழக்கு ஐரோப்பாவில் தங்களது சொந்தப் போர் இலக்குகளையும் செல்வாக்கையும் பலவீனப்படுத்திவிடும் என்று ஐரோப்பிய சக்திகள் அஞ்சுகின்றன. அதே வேளையில், உக்ரேனின் போர் முயற்சி அமெரிக்க இராணுவத் தொழில்நுட்பத்தையும் உளவுத்துறை ஆதரவையும் சார்ந்தே உள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையிலான ஸ்டார்ஷீல்ட் அமைப்பின் மீதான கட்டுப்பாடுகள் குறித்த செய்திகள் இந்தச் சார்புநிலையை மிகவும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.
போருக்காக மேலும் மேலும் பல பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படுக்கின்றன
2027-ஆம் ஆண்டுக்கான உக்ரேனின் போர்ச் செலவுகள் 155 பில்லியன் யூரோக்கள் என ஜெலென்ஸ்கி மதிப்பிட்டதோடு, கூடுதலாகக் குறைந்தபட்சம் 70 பில்லியன் யூரோக்களுக்கு ஐரோப்பிய ஆதரவையும் கோரினார். இந்தப் பணத்தைக் கொண்டு, உக்ரேன் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமான ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கவும், ரஷ்யா மீதான இராணுவ அழுத்தத்தைப் பெருமளவில் அதிகரிக்கவும் முடியும். ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டுகளுக்காக 90 பில்லியன் யூரோ கடனை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. பில்லியன் கணக்கான யூரோக்களுக்கான இந்தப் புதிய கோரிக்கைகள் குறித்து பிரஸ்ஸல்ஸில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், நிதி ஆதாரங்களைத் திரட்டும் பணி ஐரோப்பிய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுவரை திரட்டப்பட்ட தொகையின் அளவு மிகப்பெரியது. உலகப் பொருளாதாரத்திற்கான கீல் நிறுவனத்தின் ஆய்வு ஒன்றின்படி, ஜேர்மன் அரசாங்கம் உக்ரேனுக்கு இதுவரை வழங்கியுள்ள ஆதரவு மற்றும் அளித்துள்ள வாக்குறுதிகளின் மொத்த மதிப்பு சுமார் 100 பில்லியன் யூரோக்கள் ஆகும். இதில் சுமார் 41.7 பில்லியன் யூரோக்கள் உக்ரேனுக்கான நேரடி உதவியாகவும், 22 பில்லியன் யூரோக்கள் எதிர்கால இராணுவ உதவிகள் மற்றும் இதர செலவினங்களுக்கான வாக்குறுதிகளாகவும் உள்ளன. இவை இரண்டையும் சேர்த்தால் மொத்தம் 63.7 பில்லியன் யூரோக்கள் ஆகிறது. இதில் சுமார் 56.3 பில்லியன் யூரோக்கள் இராணுவ உதவியாகும். மேலும், ஜேர்மனியில் உள்ள உக்ரேனிய அகதிகளுக்காக 35.9 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட இந்த நிதிகள் அனைத்தும் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.
கீல் நிறுவனத்தின் ஆய்வின் அரசியல் நோக்கம் வெளிப்படையானது. உக்ரேனுக்கு உண்மையில் சென்றடைந்த தொகை “வெறும்” 41.7 பில்லியன் யூரோக்கள் மட்டுமே என்று தலைப்பில் வலியுறுத்தும் அந்த ஆய்வு, அகதிகளுக்காகச் செய்யப்படும் செலவுகள் “உக்ரேனிய அரசாங்கத்தின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் உதவவில்லை” என்பதை அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஒப்பிட்டுப் பார்த்தலே அதன் அரசியல் போக்கை மிகத் தெளிவாக உணர்த்துகிறது: அகதிகளுக்கான ஆதரவும் பிற சமூகச் செலவினங்களும் வெட்டப்படுவதற்கான வளர்ந்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், போர் முயற்சிக்கு இன்னும் அதிகமான தொகைகள் திரட்டப்படவுள்ளன. அதனுடன், வரவிருக்கும் ஆண்டுகளில் இராணுவ வரவு-செலவுத் திட்டங்களுக்குள் பாயவிருக்கும் பல நூறு பில்லியன் கணக்கான டாலர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
நேட்டோ-ரஷ்யா போருக்கான உறுதியான தயாரிப்புகள்
இந்த உச்சி மாநாட்டுக்கு இணையாக, இராணுவ மோதலும் தீவிரமடைந்து வருகிறது. நேட்டோவின் ஐரோப்பிய கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி அலெக்சஸ் கிரின்கேவிச், வார்சோவில் தனது “வெற்றியின் கோட்பாட்டை” முன்வைத்தார்: “தடுத்து நிறுத்து, மழுங்கடி, தகர்த்து எறி” என்பதன் மூலம் ஒரு சாத்தியமான தாக்குதல் முதலில் முறியடிக்கப்பட வேண்டும், பின்னர் எதிர்த் தரப்பு ஆயுதப் படைகள் நசுக்கப்பட வேண்டும், இறுதியாக அவற்றை ஆதரிக்கும் கட்டளை, வழங்கல் மற்றும் உற்பத்தி கட்டமைப்புகள் முடக்கப்பட வேண்டும். அலெக்சஸ் கிரின்கேவிச் இந்த மூலோபாயத்தைப் பாதுகாப்பானது என்று விவரிக்கிறார். ஆனால், ஒரு பெரிய போரில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக ஊடறுத்து நீட்டிக்கப்படக்கூடும். அவர் ஜேர்மனியை “நேட்டோவின் இயந்திரம்” என்று புகழ்ந்தார்.
அதே நேரத்தில், நேட்டோ இந்த வாரம் இத்தாலியில் ஜேர்மன் டொர்னாடோ போர் விமானங்கள் உட்பட 17 நாடுகள் பங்கேற்ற “ஸ்டெட்பாஸ்ட் நூன்” என்ற அணுஆயுதப் போர் பயிற்சியை நடத்தியது. நேரடி அணு ஆயுதங்கள் ஏதுமின்றி நடத்தப்படும் வழக்கமான பயிற்சி என்றே நேட்டோ இதை விவரிக்கிறது. இருப்பினும், போரின் தீவிரம் அதிகரிக்கும் ஆபத்துக்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு காலகட்டத்தில், இது அணுஆயுத நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை ஒத்திகை பார்த்துள்ளது.
நேட்டோவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு ரஷ்யா அணுஆயுத அச்சுறுத்தல்கள் மூலம் பதிலளித்து வருகிறது. அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில், காலினின்கிராட் முற்றுகையிடப்பட்டால் ரஷ்யா தனது முழு ஆயுதக் களஞ்சியத்தையும் பயன்படுத்தக்கூடும் என்று புட்டின் எச்சரித்தார். இந்நிலையில், நேட்டோ தாக்குதல் நடத்தினால், ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதல்கள் நேட்டோ தலைமையகத்தையும், ஜேர்மனி, பெல்ஜியம், இத்தாலி மற்றும் துருக்கியில் உள்ள அமெரிக்க அணு ஆயுதத் தளங்களையும் குறிவைக்கக்கூடும் என்று ரஷ்ய அரசு டூம உறுப்பினர் அலெக்செய் ஜுராவ்லியோவ் Lenta.ru-விடம் கூறியுள்ளார். ஜுராவ்லியோவின் இந்த அச்சுறுத்தல் ஒரு அதிகாரப்பூர்வ அரசாங்க அறிக்கை அல்ல. இருப்பினும், ஐரோப்பாவில் அணு ஆயுதப் போர் குறித்து ரஷ்ய அதிகார அமைப்பின் சில பிரிவுகள் எவ்வளவு உறுதியாக விவாதித்து வருகின்றன என்பதை அவரது கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ரஷ்ய இராணுவ விமர்சகர்கள், நேட்டோவின் மூலோபாயம் “முன்கூட்டிய” தாக்குதல்களுக்கு ஒரு மறைப்பாக அமையக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். சோவியத் யூனியனுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய அழித்தொழிப்பு போருடன் அவர்கள் இதை ஒப்பிடுகின்றனர். சோவியத் ஒன்றியம் திட்டமிட்டதாகக் கூறப்பட்ட ஒரு தாக்குதலுக்கு எதிரான “தற்காப்பு” என்றே நாஜிக்களின் பிரச்சாரமும் அந்தப் போரை நியாயப்படுத்தியது.
போருக்கான நேட்டோவின் குறிப்பிட்ட கால அட்டவணை எதுவாக இருந்தாலும், பரஸ்பர அச்சுறுத்தல்கள், பதட்டம் விரைவாகக் கட்டுப்பாட்டை மீறி மிக வேகமாக விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்பதை ஏற்கனவே காட்டுகின்றன. கருங்கடலில், வர்த்தகக் கப்பல்கள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ருமேனியாவும் பல்கேரியாவும் கோரி வருகின்றன.
மீள் ஆயுதமயமாக்கலும் சமூகப் பேரழிவும்
போருக்கும், வாஷிங்டனுடனான தனது கூட்டணியின் நெருக்கடிக்கும் ஐரோப்பாவின் பதில் ஒரு பிரம்மாண்டமான மீள் ஆயுதமயமாக்கல் திட்டமாகும். “ஐரோப்பாவை மீள் ஆயுதமயமாக்கும்” திட்டமானது, 2030-ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 800 பில்லியன் யூரோக்கள் வரையிலான பாதுகாப்புச் செலவினங்களைச் சாத்தியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கை (SAFE) நிதியம் 150 பில்லியன் யூரோக்களை கடன்களாக வழங்குகிறது. ஜேர்மனியில், பாதுகாப்புச் செலவினம் 2027-இல் தோராயமாக 140 பில்லியன் யூரோக்களாகவும் — 2029-இல் 200 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாகவும் உயரும். ஜேர்மன் அரசாங்கம் அதன் இராணுவத்தை (Bundeswehr) ஐரோப்பாவின் மிகவும் வலிமையான மரபுவழி இராணுவமாகக் கட்டியெழுப்ப விரும்புகிறது.
இந்த மிகப்பெரிய தொகைகள் சமூகத்திற்கு உடனடியான பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மீள்-ஆயுதமயமாக்கலுக்காகக் கடன் விதிகள் தளர்த்தப்படும் அதே வேளையில், சமூக நலன்களிலும் பொதுச் சேவைகளிலும் வரலாறு காணாத வெட்டுக்களை ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒழுங்கமைத்து வருகின்றன. “போட்டித்தன்மை” என்ற முழக்கத்தின் கீழ், கட்டுப்பாடுகளை நீக்குதல், ஒப்புதல் நடைமுறைகளை விரைவுபடுத்துதல் மேலும் பொருளாதார மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக வேலைகள் பெருமளவில் ஒழிக்கப்படுகின்றன, ஊதியங்கள் வெட்டப்படுகின்றன, மற்றும் பணி நிலைமைகள் மேலும் மோசமடைகின்றன.
குறிப்பாக சீனாவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காகப் புதிய வர்த்தகக் கொள்கைக் கருவிகளை உருவாக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. இதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று மெர்ஸ் தெரிவித்தார். கூடுதல் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை வொன் டெர் லெயன் அறிவித்தார்.
இந்த உச்சி மாநாட்டில் இடம்பெற்ற புலம்பெயர்ந்தவர்கள் குறித்த கலந்துரையாடல்கள், அதன் பிற்போக்குத்தனமான போக்கை வெளிப்படுத்திக் காட்டியது. ஏறக்குறைய 600,000 புலம்பெயர்ந்தோரின் வதிவிட அந்தஸ்தைச் சட்டப்பூர்வமாக்க ஸ்பெயின் திட்டமிட்டதை இத்தாலி, டென்மார்க், போலந்து ஆகிய நாடுகள் தாக்கின. எல்லை நடைமுறைகளில் தடுப்புக்காவல் விதிகளைக் கடுமையாக்குவது மற்றும் நெருக்கடி காலங்களில் புகலிட விண்ணப்பங்களை நிறுத்தி வைப்பது ஆகியவை இந்த கலந்துரையாடல்களில் அடங்கியிருந்தன. மத்திய கிழக்கில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரின் பின்னணியில், இந்த உச்சிமாநாடு எல்லாவற்றிற்கும் மேலாக வர்த்தகம் மற்றும் எரிசக்தி வழித்தடங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியம் தனது உலகளாவிய போர்த் தாக்குதலையும் பிற்போக்குத்தனமான உள்நாட்டுச் செயல்திட்டத்தையும் முன்னெடுக்கும் அதே வேளையில், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. 2028 முதல் 2034 வரையிலான அடுத்த ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் தொடர்பான மோதல் இந்தப் போட்டி மனப்பான்மைகளை அம்பலப்படுத்தியது. சுவீடன் போன்ற நிகர நிதிப் பங்களிப்பு அளிக்கும் நாடுகள் கோரப்படும் அதிகப்படியான பங்களிப்புகளை வழங்க மறுக்கின்றன. அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியம் மூலோபாய மற்றும் இராணுவத் திட்டங்களுக்காகக் கூடுதல் நிதியைத் திரட்ட முயல்கிறது. இதுவரை எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
ஐரோப்பாவில் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புகளுக்கு ஒரு எதிர்வினையாகவே போரின் தீவிர அதிகரிப்பு அமைந்துள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளில், சமூக நலத்திட்டத்தில் இடம்பெறும் வெட்டுக்கள், இராணுவவாதம் மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வளர்ந்து வருகின்றன. ஸ்தாபனக் கட்சிகளின் ஆழமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஆளும் வர்க்கங்கள், போர் பிரச்சாரம் மற்றும் தேசியவாதத்தின் மூலம் இந்த எதிர்ப்பை வெளிப்புறமாகத் திசைதிருப்பி, தங்கள் போர்க் கொள்கைகளுக்குப் பின்னால் மக்களை அணிதிரளுமாறு நிர்ப்பந்திக்கவும் முயல்கின்றன.
ஆனால், இந்தப் போக்கானது சமூகப் பகைமைகளை மேலும் தீவிரப்படுத்த மட்டுமே செய்யும். பிரம்மாண்டமான இராணுவச் செலவினங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக நலன்களை அழிப்பது, மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதிகரித்து வரும் தாக்குதல்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பைத் தணித்துவிடாது. மாறாக, அதை மேலும் தூண்டிவிடும். அதே நேரத்தில், ரஷ்யாவுடனான தீவிரமடைந்து வரும் மோதலானது, ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஓர் அணுஆயுத உலகப் போருக்குள் தள்ளிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
வளர்ந்து வரும் எதிர்ப்பைச் சுயாதீன சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக்குவதே தீர்க்கமான கடமையாகும். தொழிலாள வர்க்கமானது நிறுவப்பட்ட பாரம்பரியக் கட்சிகளிடமிருந்து சுயாதீனமாகத் தன்னை அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும்; மேலும் முதலாளித்துவம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்து தனது போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டும். ஐரோப்பிய அரசாங்கங்களின் தேசியவாத மற்றும் இராணுவவாதத் திட்டத்தை, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் மூலம் எதிர்க்க வேண்டும்.
