இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
காஸாவிலுள்ள பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவத்தின் கொலைவெறி வன்முறையைப் பற்றிய நாஸா (Naza) என்ற ஆவணப்படம், அமெரிக்காவில் திரையிடப்பட்டுப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இஸ்ரேலிய இயக்குநர்களான யுவால் ஆபிரகாம் மற்றும் ரேச்சல் சோர் இயக்கிய இத்திரைப்படம், இந்த ஆண்டின் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களைக் மெய்சிலிர்க்க வைத்து, சாதனை அளவிலான கரவொலியைப் பெற்றதோடு, விழாவின் சிறப்பு நடுவர் விருதையும் வென்றுள்ளது.
அமெரிக்காவில் திரையிடப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நாஸா “500,000 டாலர் என்ற எல்லையைத் தாண்டவுள்ளது; எந்தவொரு புனைவற்ற (ஆவணப்) படத்திற்கும், குறிப்பாக இத்தகைய சர்ச்சைக்குரிய, அரசியல் ரீதியாகக் கொதிநிலையில் உள்ள தலைப்பிலான படத்திற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்” என்று இண்டிவயர் (IndieWire) தெரிவித்தது.
டெல் அவிவ் நகரின் கூரைமாடிகளில் அடையாளம் வெளிப்படுத்தப்படாமல் இரகசியமாக நேர்காணல் செய்யப்பட்ட, இஸ்ரேலிய இராணுவத்தைச் (IDF) சேர்ந்த இரண்டு டசின் உறுப்பினர்களின் வாக்குமூலங்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் வாழும் பொதுமக்களை இலக்கு வைப்பதற்கும் அவர்களைக் கொலை செய்வதற்கும் இஸ்ரேலிய பாதுகாப்பைப் படை பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் வழிமுறைகளைப் பற்றி அவர்கள் இதில் விரிவாக விளக்குகிறார்கள். நாஸா என்பது எபிரேய மொழியின் ஒரு சுருக்கப் பெயராகும் (acronym). சாராம்சத்தில் அதன் பொருள் “இணைச் சேதம்” என்பதாகும்.
இத் திரைப்படத்தின்படி, தாக்குதல் நடத்துவதற்கோ அல்லது அழிப்பதற்கோ இலக்கு வைக்கப்படும் நபர்கள் அல்லது கட்டிடங்களை அடையாளம் காண IDF பல வகையான திட்டங்களை உருவாக்கியுள்ளது. இது குறித்து உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பின்வருமாறு விளக்கியுள்ளது:
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மிகக் கொடூரமான விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டங்கள் 15 சதவீத அளவிலான “அனுமதிக்கப்பட்ட பிழை” விகிதத்துடன் (அதாவது, மனித உயிரிழப்புகள் அல்லது பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புடன்) உருவாக்கப்பட்டன என்பதாகும். நேர்காணலில் பங்கேற்றவர்களில் ஒருவர், எதிர்பார்க்கப்படும் தவறு விகிதம் 20 சதவீதம் வரை இருக்கும் எனக் கூறுகிறார். ஆனால், உண்மையில் இந்த “பிழை விகிதங்கள்” இன்னும் அதிகமாக இருந்திருக்கக்கூடும் என்பதையே இது உணர்த்துகிறது.
நேர்காணலில் பங்கேற்றவர்களின் கூற்றுப்படி, தாக்குதலுக்கு இலக்காகும் நபரின் முக்கியத்துவத்தைப் பொறுத்து இந்த வரம்புகள் மாறுபடலாம். அதாவது, ஒரு ஹமாஸ் தலைவரை ஒரே தாக்குதலில் கொல்வதற்கு, 500 பொதுமக்கள் வரை இறப்பது ஒரு தவிர்க்க முடியாத சேதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைத்துக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, வடக்கு காஸாவில் வாழும் பொதுமக்கள் மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்குத் திரும்புவதைத் தடுக்கும் வகையில், ஒட்டுமொத்தப் பகுதிகளையும் அழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
சியோனிச அமைப்பும் இஸ்ரேலிய பாதுகாப்பைப் படையின் அதிகாரிகளும் நாஸா திரைப்படத்தையும் அதன் இயக்குநர்களையும் நஞ்சைக் கக்கும் வகையில் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றனர். அவர்களை “தேசத்துரோகிகள்” என்று குற்றம் சாட்டுவதோடு, No Other Land என்ற புகழ்பெற்ற ஆவணப்படத்தின் நான்கு இயக்குநர்களில் இருவரான இணை இயக்குநர்கள் ஆபிரகாம் மற்றும் சோர் ஆகியோர் மீது வலதுசாரிகளும் சட்டத்தைக் கையிலெடுக்கும் கும்பல்களும் தாக்குதல் நடத்துவதை மறைமுகமாக ஊக்குவித்தும் வருகின்றனர்.
ஒரு போர்க் குற்றவாளியான நெத்தன்யாகு, நாஸா படத்தில் இடம்பெற்றுள்ள தகவலாளர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தப் படத்திற்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.
அக்டோபர் 10 சனிக்கிழமையன்று நெத்தன்யாகு சமூக ஊடகத்தில் இவ்வாறு எழுதினார்:
“நாஸா” திரைப்படத்தில் பங்கேற்றவர்கள் மீது விரிவான விசாரணை நடத்தி, தீவிரமான தகவல் பாதுகாப்பு மீறல்கள், குற்றவியல் அவதூறு மற்றும் இஸ்ரேலின் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நலன்களுக்குத் தீங்கு விளைவித்தமைக்காக அவர்கள் மீது வழக்குத் தொடருமாறு தலைமைப் தளபதி, இரகசிய உளவு அமைப்பான ஷின் பெட்டின் தலைவர் மற்றும் தலைமை வழக்கறிஞரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இத்திரைப்படம், சர்வதேச அளவில் இஸ்ரேலிய அரசை (இஸ்ரேலிய இராணுவத்தையும்) அவதூறு செய்யும் வகையிலும், இஸ்ரேலின் நற்பெயருக்குக் கடும் பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொய்யான, தவறான மற்றும் ஒருதலைப்பட்சமான கதையாடலை முன்வைக்கிறது.
இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களின் மரணத்திற்கும் காயங்களுக்கும் காரணமான பாசிசக் கொள்ளைக் கூட்டத்தினரிடமிருந்து இத்தகைய எதிர்வினையைப் பெற்றிருப்பது, இந்தத் திரைப்படத்திற்குச் சேர வேண்டிய ஒரு பெருமையாகும். நிச்சயமாக, ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து உலகிலேயே மிகவும் வெறுக்கப்படும் மற்றும் இழிவாகக் கருதப்படும் ஆட்சியாக ஏற்கனவே திகழும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் நற்பெயருக்கு, நாஸா திரைப்படம் “கடும் பாதகத்தை” ஏற்படுத்திவிட்டது என்று கூறுவது முற்றிலும் நகைப்புக்குரியது.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் வில்சன், “இஸ்ரேலிய அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் இஸ்ரேலிய அரசியல்வாதிகளிடமிருந்து வரும் அநாகரிகமான, வெறிபிடித்த மற்றும் கட்டுப்பாடற்ற எதிர்வினைகளையும்”, மேலும் இயக்குநர்களின் “குடியுரிமையை ரத்து செய்வதற்கான அச்சுறுத்தல்கள்” உட்பட அவர்களுக்கு விடுக்கப்படும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் அணைத்து இணை இயக்குநர்களைப் பற்றியும் கூறிய வில்சன், “தங்கள் தாய்நாட்டின் அரசியல் உயரடுக்குகளால் தேசத்துரோகம் மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளால் அச்சுறுத்தப்பட்ட இணை இயக்குனர்களுக்கு, இது மிகவும் கடினமானதாகவும், மன அழுத்தமானதாகவும், பயங்கரமானதாகவும், அச்சமூட்டும் விதமாகவும் இருந்துள்ளது” என்றார்.
ரேச்சல் சோர் தி நியூ யோர்க் டைம்ஸ் பொட்காஸ்ட் (podcast) நிகழ்ச்சியில் கூறுகையில், “நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. இந்தப் படத்திற்கு வந்த எதிர்வினைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கின்றன. எனது பெற்றோரின் வீட்டின் வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்கள், எங்களைத் தூக்கிலிட வேண்டும் என்று முழக்கமிட்டனர். எங்களுக்கு எதிராகப் பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது” என்றார்.
யுவால் ஆபிரகாம் மேலும் கூறுகையில், “நாங்கள் இஸ்ரேலில் உள்ள எங்கள் வீட்டிற்குத் திரும்ப விரும்புகிறோம், ஆனால் இப்போதைக்கு எங்களால் திரும்பிச் செல்ல முடியாது. எங்கள் திரைப்படம் இஸ்ரேலைக் குறிவைத்து வீசப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போன்றது என்று நெதன்யாகு சமீபத்தில் கூறினார். அங்கு தூண்டிவிடும் வன்முறைச் சூழலே நிலவுகிறது. எங்களுக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளதால், எங்கள் பெற்றோரும் நண்பர்களும் எங்களை மீண்டும் வரவேண்டாம் என்று கூறுகிறார்கள். எங்களுக்கு அங்கு பாதுகாப்பில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்றார்.
செப்டம்பர் இறுதியில், சுமார் 1,500 இஸ்ரேலியத் திரைப்படக் கலைஞர்களும் திரைப்படத் துறைப் பிரமுகர்களும் “யுவல், ரேச்சல் ஆகியோருடன் நாங்கள் நிற்கிறோம்” என்ற மனுவில் கையொப்பமிட்டனர். சமீபத்திய நாட்களில் “இப் படத்தின் படைப்பாளிகளுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் தூண்டிவிடப்படும் வெறுப்புப் பிரச்சாரத்தை நாங்கள் கண்டு வருகிறோம். இதற்கும், அவர்கள் மீதான வன்முறைத் தூண்டுதலுக்கும் மற்றும் அவர்களின் உயிருக்கு ஏற்படும் நேரடி அச்சுறுத்தலுக்கும் இடையேயான தூரம் சுருங்கி வருகிறது” என்று அந்த மனு குறிப்பிட்டது.
ஆரி ஃபோல்மன் (Ari Folman), நடவ் லாபிட் (Nadav Lapid) உள்ளிட்டோர் கையொப்பமிட்டுள்ள அந்த மனு தொடர்ந்து கூறுவதாவது:
கலை மற்றும் படைப்புச் சுதந்திரத்திற்காக இப்போதும் போராடி வரும் அனைவரும், ரேச்சல் சோர் மற்றும் யுவால் ஆபிரகாம் ஆகியோருக்குத் தங்களது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதில் இணையுமாறு திரைப்படப் படைப்பாளிகளாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கலை மற்றும் இதழியலின் மையப் பணியே, அவை இயங்கும் சமூகத்திற்கு ஒரு கண்ணாடியைப் பிடித்துக் காட்டுவதும், யதார்த்தம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், முன்முடிவுகள் ஏதுமின்றி ஆரோக்கியமான உரையாடல்களையும் விவாதங்களையும் உருவாக்குவதுமாகும்.
மேலும் கடந்த மாத இறுதியில், சர்வதேச ஆவணப்பட சங்கம் (IDA), நாஸா திரைப்படம் மீதான இஸ்ரேலிய அரசாங்கத்தின் தாக்குதல்களைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அமைப்பு நெதன்யாகு ஆட்சியிடம் கோரியதாவது:
திரைப்பட இயக்குநர்களான யுவால் ஆபிரகாம் மற்றும் ரேச்சல் சோர் ஆகியோருக்கு எதிரான தனது அச்சுறுத்தல்களைத் திரும்பப் பெற வேண்டும். மேலும், அவர்களுக்கு எதிரான பகிரங்க அச்சுறுத்தல் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
நாஸா திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் விருதை வென்றதிலிருந்து, இஸ்ரேலிய மூத்த அதிகாரிகள் அதன் இயக்குநர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். கலாச்சார அமைச்சர் அவர்களைத் தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டியதோடு, அவர்களின் குடியுரிமையை ரத்து செய்யவும் முயன்றுள்ளார். “இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர்களை அவதூறு செய்பவர்களின்” குடியுரிமையை ரத்து செய்வதற்கும், அவதூறுக்கான இழப்பீட்டுத் தொகையை இருபது மடங்கு உயர்த்துவதற்கும் பிரதமர் சட்ட மசோதாக்களை அறிவித்துள்ளார்.
இந்த அதிகாரபூர்வ வாய்வீச்சுடன் கூடவே, திரைப்படப் படைப்பாளிகளுக்கு எதிரான ஒரு பொதுப் பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ... இது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேலிய திரைப்படப் படைப்பாளிகளும் மனித உரிமை அமைப்புகளும் எச்சரித்துள்ளன. ஒரு திரைப்படத்துடனான கருத்து வேறுபாடு, அதை உருவாக்கிய மனிதர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடாது.
நாஸாவின் வசூல் நிலவரம் குறித்த தனது விவரிப்பில், “இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீனியர்களைக் கொல்லப் பயன்படுத்தியுள்ள அமைப்புகளைக் கடுமையாக அம்பலப்படுத்தும் இப்படம், முன்னணி சுயாதீனத் திரைப்பட நிறுவனங்கள் வாங்கி வெளியிடுவதற்கு மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது” என்று இண்டிவயர் ஏதோ போகிற போக்கில் குறிப்பிடுகிறது. அரசியல் கோழைத்தனமோ, இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான வெளிப்படையான ஆதரவோ, உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படத்தை அமெரிக்க விநியோகஸ்தர்கள் பொதுமக்கள் முன் கொண்டுவருவதைத் தடுத்தன.
சுயமாக விநியோகிக்கப்பட்ட நாஸா திரைப்படம் குறித்து அக்டோபர் 11 அன்று இண்டிவயர் கவனித்துக் கூறியதாவது:
கடந்த வார இறுதியில் நியூ யோர்க்கின் IFC சென்டரில் திரையிடப்பட்ட இப்படம், முதல் எட்டு நாட்களில் 125,000 டாலருக்கும் அதிகமான வருவாயைப் ஈட்டியது. அதனைத் தொடர்ந்து, வட அமெரிக்கா முழுவதும் உள்ள 30 நகரங்களில் 85 திரையரங்குகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இப்படம், மூன்று நாள் வார இறுதியில் கூடுதலாக 298,240 டாலர்களையும், நான்கு நாள் விடுமுறை காலத்தில் சுமார் 378,200 டாலர்களையும் ஈட்டியுள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி, இதன் ஒட்டுமொத்த உள்நாட்டு வருவாய் 504,074 டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான விமர்சன ஒருங்கிணைப்பு இணையதளமான ரொட்டன் டொமேட்டோஸில் (Rotten Tomatoes) “100 சதவீத விமர்சகர் ஒப்புதலைப்” பெற்றுள்ள இப்படத்தைத் திரையிடும் ஒருசில அரங்குகளுக்கு வெளியே சியோனிச ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
