முன்னோக்கு

போருக்கு எதிரான மக்களின் பாரிய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஈரான் மீது புதிய தாக்குதலுக்கு ட்ரம்ப் தயாராகி வருகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

விமானந்தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் டுவைட் டி. ஐசனோவர் மற்றும் விரைவு போர் ஆதரவுக் கப்பலான யுஎஸ்என்எஸ் சப்ளை ஆகியவை ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்கின்றன. டிசம்பர் 14, 2023 [Photo: Navy Petty Officer 2nd Class Keith Nowak]

ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு நிர்வாகங்கள் ஈரான் மீது புதிய மற்றும் பரந்த அளவிலான தாக்குதலுக்கான இறுதிக் கட்டத் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தாக்குதல், இரு தலைவர்களும் பெரும் தேர்தல் பின்னடைவுகளைச் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் தேர்தல்களுக்கு முன்னதாக நடைபெறவுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, ஈரான் மீது மற்றொரு தாக்குதலைத் தொடுக்க திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்கப்பட்டபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புளோரிடாவில் செய்தியாளர்களிடம், “அதைச் செய்வதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன், ஒருவேளை நாளையும் கூடச் செய்யலாம்” என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “நான் அதை முடித்துவைக்க வேண்டி வரலாம், அல்லது அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வரலாம்” என்றார். ஞாயிற்றுக்கிழமை அவர் பொக்ஸ் நியூஸிடம் கூறுகையில், “இன்று எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது” என்று தெரிவித்த போதிலும்,: “நான் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளட்டுமா, அல்லது அவர்களை நான் முற்றிலுமாக அழிக்கட்டுமா?” என்று தனது தேர்வை அதே கோணத்தில் முன்வைத்தார்

இந்த அறிக்கைகள், நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் இடைக்காலத் தேர்தல்களுக்கு ஒரு வாரத்திற்குச் சற்று அதிகமான காலமும், அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் இஸ்ரேலின் தேசியத் தேர்தலுக்கு மூன்று நாட்களுமே உள்ள நிலையில் வெளிவந்துள்ளன. ஈரான் போருக்கு எதிரான மக்களின் பெரும் எதிர்ப்பை அமெரிக்கத் தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ட்ரம்பின் கட்சிக்கு பெரும் தோல்வி ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8 அன்று வெளியிடப்பட்ட பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) கருத்துக் கணிப்பு, போரை ட்ரம்ப் கையாளும் விதத்தை 65 சதவீத அமெரிக்கர்கள் ஏற்கவில்லை எனக் கண்டறிந்தது.

ஈரான் மீது புதிய தாக்குதலுக்கான இராணுவத் தயாரிப்புகள் வெகுதூரம் முன்னேறியுள்ளன. செப்டம்பர் மாத இறுதியில் சான் டியேகோவிலிருந்து இருந்து புறப்பட்ட USS தியூடர் ரூஸ்வெல்ட் விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுவைச் தொடர்ந்து, ஒரு நாள் கழித்து 2,000-க்கும் மேற்பட்ட கடற்படையினரைத் தாங்கிய ஒரு நீர்மூழ்கித் தாக்குதல் குழு புறப்பட்டது, மேலும் நவம்பர் இறுதிக்குள் மூன்று விமானந்தாங்கி கப்பல்களும் இரண்டு இரண்டு நீர்நிலைத் தரையிறக்கக் குழுக்களும் ஈரானுக்கு அருகில் நிலைநிறுத்தப்படும்.

இந்தப் போருக்கு முன்பே மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 40,000 முதல் 50,000 படையினர்களுக்கு மேலதிகமாக, தற்போது புதிதாக 9,000 முதல் 10,000 படையினர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அக்டோபர் 21 அன்று, சவூதி அரேபியாவில் இருந்த அவசியமற்ற பணியாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டது. மேலும், லெபனான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்த, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு பட்டவர்த்தனமான ஒரு பிரச்சாரக் கதையாடலை தயாரித்து வருகிறது. தேசிய உளவுத்துறை இயக்குநர் ஜே கிளேட்டன், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய ஒரு குறிப்பாணையை ஆக்சியோஸ் முதன்முதலில் வெளியிட்டது. அதில், “அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிராக ஈரானியர்கள் மேற்கொள்ளும் கொடிய சதித்திட்ட முயற்சிகள் முற்றிய நிலையை எட்டியுள்ளன” என்று கூறப்பட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமையன்று ஆறு பேர் இணைந்து எழுதிய கட்டுரை ஒன்றில், “ஈரானியர்கள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தூதர்களையும், அமெரிக்க மண்ணில் உள்ள அமெரிக்க அதிகாரிகளையும் கொல்ல முயலக்கூடும்” என்று குறிப்பிடும் உளவுத் தகவல்களில் அமெரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த உளவுத் தகவல் “மிக இரகசியமானதாகவே உள்ளதால், அதை மதிப்பிடுவது கடினம்” என்பதை அந்த நாளிதழ் ஒப்புக்கொண்டது. “குறிப்பிட்ட சதித் திட்டங்களுக்கான சான்றுகளை கலந்துரையாடி அதை நிரூபிக்க முடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்த நிலையில்”, இந்தக் குறிப்பாணை ஏன் வெளியிடப்பட்டது என்று சில அதிகாரிகள் குழம்பியதாகவும் அது மேலும் தெரிவித்தது. இதனை வேறு வார்த்தைகளில் சொன்னால், இது எந்தவித ஆதாரமும் இல்லாத ஒரு போர் பிரச்சார நடவடிக்கையாகும்.

“துளி அளவும் வெட்கமின்றி, “தேர்ந்தெடுக்கப்பட்ட உளவுத் தகவல்கள் எப்படி இராணுவ நடவடிக்கைக்கு ஒரு உண்மையான சாக்குப் போக்காகப் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு ஈராக் மற்றொரு எச்சரிக்கை நாடகமாக அமைகிறது” என்றும் டைம்ஸ் மேலும் கூறியது. உண்மையில், ஈரானுக்கு எதிரான இந்தக் குழப்பமான மறைமுகக் குற்றச்சாட்டுகள், 2003-ஆம் ஆண்டு ஈராக் மீதான படையெடுப்பிற்கு முன்னதாக நடைபெற்ற அரசாங்க-ஊடகப் பிரச்சாரத்தை, ஏறக்குறைய ஒருங்கமைக்கப்பட்டதாகத் தோன்றச் செய்கின்றன. அந்தப் படையெடுப்பிலும் டைம்ஸ் இதேபோல் ஒரு முக்கியப் பங்கை வகித்தது.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கங்கள், படுகொலைகளில் ஈடுபட்ட வரலாறு கொண்டவை ஆகும். பிப்ரவரி 28ஆம் தேதி, போரின் முதல் சில மணிநேரங்களிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனியைக் கொன்றதன் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் போரைத் தொடங்கின.

ட்ரம்பின் நிர்வாகம் எதைத் தயாரித்து வருகிறது? ஈரான் மீது “அனைத்துக் குண்டுகளின் தாய்” என்று அழைக்கப்படும் GBU-43 குண்டை வீசுவது உட்பட, புதிய தாக்குதல் திட்டங்களை அமெரிக்க இராணுவம் வகுத்துள்ளதாக அக்டோபர் 15 அன்று CNN செய்தி வெளியிட்டது.

தெஹ்ரான் மீது “அனைத்து குண்டுகளின் தாய்” குண்டை வீச ட்ரம்ப் திட்டமிடுகிறாரா? அணு ஆயுதங்களை ட்ரம்ப் பயன்படுத்துவாரா? தரைப் படையினரை அவர் அனுப்புவாரா? அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பைப் பெருமளவு தீர்த்துவிட்ட ஒரு முழு அளவிலான வான்வழிக் குண்டுவீச்சுக்குப் பிறகு, ட்ரம்ப் எப்படி “[ஈரானை] ஒழித்துக்கட்ட” எதிர்பார்க்கிறார்?

ட்ரம்ப் தனது அச்சுறுத்தல்களைச் செயல்படுத்துவாரா இல்லையா என்று யாராலும் கூற முடியாது. ஆனால், இந்த அச்சுறுத்தல்களே ஒருவித கையறுநிலையின் வெளிப்பாடாக உள்ளன. எட்டு மாத காலப் போர் மற்றும் முற்றுகைக்குப் பிறகும், ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பது, ஈரானிய இராணுவத்தைத் தோற்கடிப்பது அல்லது ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்துவிடுவது போன்ற ட்ரம்பின் இலக்குகள் எட்டப்படவில்லை. மாறாக, போரினால் ஆழமடைந்து வரும் நெருக்கடியானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இன்னும் பெரிய அபாயகரமான நடவடிக்கைகளை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது.

ட்ரம்பின் குற்றவியல் போர் நோக்கங்களுக்கு துணைநிற்பதில் ஜனநாயகக் கட்சியினர் தீர்க்கமான பங்கு வகிக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சியினர் போரைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் பெரும்பாலும் எரிவாயு விலைகள் மீதான அதன் தாக்கத்தைப் பற்றியே பேசுகிறார்கள். உண்மையில் நடப்பது என்ன என்பதையோ அதன் குற்றவியல் தன்மையையோ பற்றிப் பேசுவதில்லை. ரஷ்யாவுக்கு எதிரான போரிலும், ஈரானுக்கு எதிரான போரிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் ட்ரம்ப் தோல்வியடைந்துவிட்டார் என்பதே ஜனநாயகக் கட்சியினரின் உண்மையான கவலையாகும்.

ஞாயிற்றுக்கிழன்று சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சியின் “Face the Nation” நிகழ்ச்சியில் தன்னை “பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினரின் போர்க்களத் தலைவர்” என்று வர்ணித்த கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ஜேசன் குரோ, “ஈரான் தொடர்ந்து ஒரு ஆபத்தாகவே உள்ளது” என்று அறிவித்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் “திறமையற்றவர் என்றும், எமது இராணுவத்தைப் பாதுகாக்கத் தேவையானதை அவர் செய்யவில்லை” என்றும் குரோ கூறினார்.

அக்டோபர் 11 அன்று ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே பெரும்பாலும் அர்த்தமற்ற “எரிசக்தி தொடர்பான போர்நிறுத்தத்தை” ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, செனட் சபை ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷூமர் அக்டோபர் 17 அன்று எக்ஸ் (X) தளத்தில், “மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரை இலக்கு வைக்க ஈரானுக்கு உதவிய ஒரு சர்வாதிகாரிக்கு ட்ரம்ப் உடந்தையாகவும் துணையாகவும் இருக்கிறார்” என்று எழுதினார்.

பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள், வெளியுறவு மற்றும் உளவுத்துறைக் குழுக்களில் ஜனநாயகக் கட்சியின் முதன்மை உறுப்பினர்களாக உள்ள ஆடம் ஸ்மித், கிரிகோரி மீக்ஸ், ஜிம் ஹிம்ஸ் ஆகியோர், உக்ரேனுக்குப் “பாதுகாப்பு, பொருளாதார, உளவுத்துறை ஆதரவை” வழங்குமாறு ட்ரம்பைக் “கட்டாயப்படுத்தும்” சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக அக்டோபர் 20 அன்று உறுதியளித்தனர்.

ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்த்தால், அடுத்த காங்கிரஸ் கூடுவதற்குக் முன்பே ட்ரம்ப் தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் விரும்புவார்கள். ஜனநாயகக் கட்சியினர் இந்தப் போரை ஆதரித்தாலும், அவர்களது வாக்காளர் அடித்தளம் அதைப் பெருமளவில் எதிர்க்கிறது. மேலும் தேர்தல்களுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குச் சற்றுப் பின்போ ட்ரம்ப் உத்தரவிடும் ஒரு தாக்குதலானது, தாங்களும் பகிர்ந்து கொள்ளும் போர் இலக்குகளுக்கான —அதாவது மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்துவது மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரை தீவிரப்படுத்துவது— அரசியல் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள அவர்களுக்கு வழிவகை செய்கிறது.

ஜனநாயகக் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரத்தின் போர்ச் சார்புத் தன்மையானது, முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா சனிக்கிழன்று டெட்ராய்ட்டில் ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளர் அப்துல் எல்-சயீதுக்காக நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டதன் மூலம் தெளிவாகப் புலப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைன்று சிஎன்என் (CNN) தொலைக்காட்சி அவரை ஜனநாயகக் கட்சியின் “இறுதியில் வெற்றியை உறுதிசெய்பவர்” என்று அறிமுகப்படுத்தியது.

“ஏழு மாதங்களுக்குப் பிறகு, இந்தப் போர் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது?” என்று டெட்ராய்ட்டில் ஒபாமா கேட்டார். “எம்மிடம் உள்ள ஏவுகணைகளின் கையிருப்பு அபாயகரமான அளவிற்கு குறைந்துவிட்டது. மேலும் விஷயம் என்னவென்றால், ஹோர்முஸ் நீரிணையின் மீது ஈரானுக்கு இப்போது வீட்டோ அதிகாரம் உள்ளது... எனவே, போர் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட இப்போது அவர்கள் ஒரு வலுவான மூலோபாய நிலையில் உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வரலாற்றில், நாடு போரில் இருந்தபோது இரண்டு முழுமையான பதவிக் காலங்களைப் பூர்த்தி செய்த ஒரே ஜனாதிபதி ஒபாமா ஆவார். மேலும், அவரது நிர்வாகம் குறைந்தது ஏழு நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் சட்டவிரோத படுகொலைகளுக்காக “கொலைப் பட்டியலில்” சேர்க்கப்பட்ட ஒவ்வொரு பெயரையும் ஒபாமா தனிப்பட்ட முறையில் அங்கீகரித்தார். மேலும், ஒபாமாவின் இரண்டு பதவிக் காலங்களில் பாகிஸ்தான், சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் 563 அமெரிக்கத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக புலனாய்வுப் பத்திரிகைத் துறை கணக்கிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டவை. இது ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகமாகும்.

“முற்போக்கு” செனட் வேட்பாளரான எல்-சயீத், ஒபாமாவை அறிமுகப்படுத்தியபோது, “நாங்கள் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மீது நிற்கிறோம்” என்று அறிவித்து, முன்னாள் ஜனாதிபதியுடன் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார்.

நவம்பர் 2012-ல், ஒபாமா “போரைத் தொடர்ந்து முன்னெடுத்ததற்காகவும், குடிமை உரிமைகளை மீறியதற்காகவும், அவருக்கு முந்தைய எந்தவொரு ஜனாதிபதியையும் விட அதிக எண்ணிக்கையிலான மக்களை நாட்டை விட்டு வெளியேற்றியதற்காகவும்” எல்-சையத் அவரை விமர்சித்தார். அக்டோபர் 11 அன்று NBC-ன் “மீட் த பிரஸ்” (Meet the Press) நிகழ்ச்சியில் இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “நான் இளமையாக இருந்தபோது அந்த கட்டுரைகளை எழுதிய நபர்... அப்போது நான் இளமையாக இருந்தேன்” ​​என்று பதிலளித்தார்

ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்தவரை, போருக்கு எதிரான பெரும் எதிர்ப்பு என்பது கடக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகும். அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்காகப் பேசும் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சியினரும், மத்திய கிழக்கிலிருந்து கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியா வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களைத் தொடர்வதில் உறுதியாக உள்ளனர்.

ஏகாதிபத்தியப் போரின் உலகளாவிய வெடிப்பால் உருவாக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் மக்கள் எதிர்ப்பைத் தூண்டி வருகிறது. கடந்த சனிக்கிழமையன்று பிரான்ஸ் முழுவதும் 410,000 பேர் அணிவகுத்துச் சென்றனர்.

அக்டோபர் 23 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு வெளியிட்ட “இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் உலகளாவிய கிளர்ச்சியும் ஆளும் வர்க்கத்தின் போர் வெறியும்” என்ற அறிக்கை, வெகுஜனப் போராட்டங்களையும் போரின் தீவிரப்படுத்தலையும் “உலக முதலாளித்துவத்தின் அதே நெருக்கடியின்” விளைவுகளாக அடையாளம் காட்டியது. பணவீக்கம், சமூக நலத் திட்டங்கள் மீதான தாக்குதல், போருக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் திசைதிருப்பப்படுவது ஆகியவை பாரிஸில் இருப்பது போலவே அமெரிக்காவிலும் வாழ்க்கை நிலைமைகளாக உள்ளன.

கருத்துக்கணிப்புகளில் பதிவாகியுள்ள இந்த எதிர்ப்பானது இன்னும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தைப் பெறவில்லை. போருக்கு எதிரான போராட்டமானது, இரு பிரதான கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாக, வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த போராட்டத்தை, போருக்கு எதிராகவும், போரை உருவாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்துடன் இணைக்க வேண்டும்.

Loading