இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஐரோப்பாவை உலுக்கி வரும் சர்வதேச இளைஞர் போராட்ட அலை இப்போது ஜேர்மனியையும் எட்டியுள்ளது. அக்டோபர் 31, சனிக்கிழமையன்று, கல்வி அழிப்பு, உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு, சமூக சமத்துவமின்மை, இராணுவமயமாக்கல் மற்றும் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு எதிராக 30 க்கும் மேற்பட்ட நகரங்களில் 120,000 க்கும் அதிகமான இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
பேர்லின், ஸ்டுட்கார்ட், எர்பர்ட், நூரெம்பேர்க், கொலோன், பிராங்பேர்ட், லைப்ஸிக் உள்ளிட்ட ஏராளமான நகரங்களில் பெரும் அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல பங்கேற்பாளர்கள் பள்ளி மாணவர்கள் ஆவர். அவர்கள் தங்கள் முதல் அரசியல் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அவர்களின் செய்தி மிகத் தெளிவாக இருந்தது: பள்ளிகள் இடிந்து விழுகின்றன, சமூக சேவைகள் கலைக்கப்படுகின்றன, மேலும் மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளுக்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் கூட செலவு செய்யப் போராடுகிறார்கள், ஆனால் அரசாங்கமானது மீள் ஆயுதமயமாக்கலுக்கும், போரில் சண்டையிட்டு மடிவதுக்கு இளைஞர்களைத் தயார் செய்வதற்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களைச் செலவழித்து வருகிறது.
ஆயிரக்கணக்கான கையால் தயாரிக்கப்பட்ட பதாகைகள், வளர்ந்து வரும் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. “குண்டுகளுக்குப் பதிலாக கல்வி!” மற்றும் “போர்வெறியர்களுக்கு எதிராக இளைஞர்கள்!” ஆகியவை முழக்கங்களில் அடங்கும். பிராங்பேர்ட் பகுதி மாணவர் ஒருவர், “உங்களின் செயல்களால் எங்கள் எதிர்காலத்தைப் பறிக்கிறீர்கள்” என்று கூறினார். மற்றவர்கள், “பிரான்சில் செய்வதைப் போல நீங்களும் செய்யுங்கள்!” மற்றும் “வரலாறு நம் பக்கத்தில் உள்ளது!” என்றும் முழங்கினார்கள்.
போருக்கு எதிரான எதிர்ப்பு குறிப்பாக வலுவாக இருந்தது. சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) உறுப்பினர்கள் பல இளம் போராட்டக்காரர்களை நேர்காணல் செய்தனர். பேர்லினில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவரான ஜோன் விளக்குகையில்: “நான் போருக்குப் போக விரும்பவில்லை.” “எனக்கு எதிராகப் போரிடுபவர்கள் என் எதிரிகள் அல்ல; உத்தரவுகளைப் பிறப்பிப்பவர்களே என் எதிரிகள் என்பது எனக்குத் தெரியும்” என்றும் அவர் கூறினார்.
பிராங்பேர்ட்டில் உள்ள மகளிர் காப்பகத்தில் பணிபுரியும் சாரா கூறுகையில், “எங்களிடம் தொடக்கத்திலிருந்தே மிகக் குறைந்த பணம்தான் உள்ளது, ஆனால் இப்போது சில நேரங்களில் எதுவும் மீதியிருப்பதில்லை, மேலும் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றியே எங்களுக்குத் துளியும் தெரியவில்லை” என்றார். ஆயுதங்களுக்கும் பணக்காரர்களுக்கும் தொடர்ந்து அதிகளவில் பணத்தைச் செலவழிக்கும் “இந்தக் கேடுகெட்ட கொள்கைகள்தான்” இதற்குக் காரணம் என்றும், “இதை இனி ஒரு நலன்புரி அரசு என்று நிச்சயமாக அழைக்க முடியாது” என்றும் சாரா குறிப்பிட்டுக் காட்டினார்.
இந்தக் கூற்றுகள், மோசமடைந்துவரும் வாழ்க்கை நிலைமைகளுக்கும் போர் முனைப்புக்கும் இடையிலான தொடர்பை மேலும் மேலும் அதிகமானோர் உணர்ந்துவருவதை வெளிப்படுத்துகின்றன. இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை இராணுவம், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்காக தியாகம் செய்ய மறுக்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டங்கள், ஒரு புதிய தலைமுறை அரசியல் போராட்டத்தில் நுழைவதைக் குறிக்கின்றன. மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம், போர்த்துக்கல், அல்பேனியா, சேர்பியா மற்றும் பிற நாடுகளில் ஏற்கெனவே வெடித்துள்ள இயக்கத்தை ஜேர்மனிக்கும் விரிவுபடுத்துகின்றன.
ஐரோப்பா முழுவதும், அரசாங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து, ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தி, மிகப்பெரிய வளங்களை இராணுவச் செலவுகளுக்குத் திருப்புகின்றன. அதே முதலாளித்துவ நெருக்கடியானது எங்குமுள்ள இளைஞர்களை வறுமை, எதேச்சாதிகாரம், போர் ஆகியவற்றால் அச்சுறுத்துகிறது.
ஜேர்மனியில் இந்த அபிவிருத்தி, குறிப்பான வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
ஜேர்மன் பாசிசத்தின் குற்றங்கள் மற்றும் சோவியத் யூனியனுக்கு எதிரான நாஜிக்களின் அழித்தொழிப்புப் போர் நடந்து எட்டு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டும் ஒருமுறை பாரிய இராணுவமயமாக்கலைப் பின்பற்றி வருகிறது. ஜேர்மனியை “போருக்குத் தயாராக” வைப்பதற்கும், அதன் இராணுவத்தை (Bundeswehr) விரிவுபடுத்தி, ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்குத் தயாராவதற்கும் தனது நோக்கத்தை மெர்ஸ்-கிளிங்பீல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜேர்மனி, உக்ரேனின் மிகப்பெரிய ஐரோப்பிய இராணுவ ஆதரவாளராக மாறியுள்ளதுடன், காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் பேரழிவுகரமான தாக்குதலுக்கு மத்தியிலும், அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருகிறது. கட்டாய இராணுவச் சேவை மீண்டும் கொண்டுவரப்படுவது, இளம் இராணுவத்தினரைப் பெருந்தொகையில் மரணத்திற்கு அனுப்பும் போர்களுக்கான தயாரிப்புடன் பிணைந்துள்ளது.
அனைத்து ஸ்தாபனக் கட்சிகளும் இராணுவத் தயாரிப்புகளையும் தேசிய தியாகத்தையும் ஊக்குவிக்கும் வேளையில், இளைஞர்கள் இந்த ஒருமித்த கருத்தையும் சவாலுக்கு உட்படுத்தத் தொடங்கியுள்ளனர். உத்தியோகபூர்வ அரசியலுக்குள் எதிர்ப்பு இல்லாதிருப்பது, மக்களின் மனப்போக்குகளைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, இந்த ஆர்ப்பாட்டங்கள், உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை வெளிப்படுத்துகின்றன.
இந்த ஆபத்தை உணர்ந்த அரசாங்கம், தனது பதிலடி நடவடிக்கைகளைத் தயார் செய்தது. போராட்டங்களுக்கு முன்பு, அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தீவிரவாதம் மற்றும் கலவரங்கள் குறித்த எச்சரிக்கைகளைப் பரப்பின. நீர்த்தாரை பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் படைகள் களமிறக்கப்பட்டன. ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்தபோதிலும், பல நகரங்களில் பொலிஸ் ஆக்ரோஷமாகத் தலையிட்டது. கொலோன் நகரில், அவர்கள் ஒரு பெரிய பேரணியை தடுத்து நிறுத்தி, நீர்த்தாரை பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.
ஆர்ப்பாட்டங்களின் அரசியல் நோக்கங்களுடன் தொடர்பில்லாத சில கலவரங்கள் மற்றும் சூறையாடல்கள் போன்ற சம்பவங்கள், இந்த இயக்கத்தின் பெயரைக் கெடுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று, உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் இதற்கு கடுமையான தண்டனைகளைக் கோரியதுடன், இந்த இடையூறுகளுக்கு “வன்முறையான இடதுசாரி குழுக்கள்” மற்றும் புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட மக்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
இந்தப் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தையும் உள்ளிழுத்து, போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான ஒரு பரந்த போராட்டமாக வளர்ந்துவிடும் என்று ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. ஆயினும், அச்சுறுத்தல்கள் இந்த இயக்கத்தை நிறுத்திவிடவில்லை. நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ள சர்வதேசப் போராட்டங்கள் உட்பட, மேலும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளன.
தீர்க்கமான கேள்வி என்னவென்றால், இந்த எதிர்ப்பை, அதன் கோரிக்கைகளை வென்றெடுக்கும் திறன்கொண்ட ஒரு நனவான அரசியல் இயக்கமாக எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதே.
IYSSE-உம் ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சியும் (SGP) ஜேர்மனி முழுவதும் தலையீடு செய்தன. “போருக்குப் பதிலாகக் கல்வி! சிக்கன நடவடிக்கைகள், கட்டாய இராணுவச் சேவை, பொலிஸ் அரசுக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுங்கள்!” என்ற தங்களது அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை அவை விநியோகித்ததுடன், முன்னோக்கிய பாதை குறித்துப் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடின. ஸ்டுட்கார்ட்டிலும் எர்பர்ட்டிலும் IYSSE பிரதிநிதிகள் பிரதான மேடைகளிலிருந்து ஆர்ப்பாட்டங்களில் உரையாற்றினர்.
இவர்களின் இந்தத் தலையீடு பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசாங்கக் கொள்கைகளை மட்டுமல்ல, முதலாளித்துவத்தையே இளைஞர்கள் அதிகளவில் கேள்விக்குட்படுத்தி, ஒரு அரசியல் மாற்றீட்டைத் தேடுவதை இந்த கலந்துரையாடல்கள் வெளிப்படுத்தின.
SGP-இன் தலைவரான கிறிஸ்டோப் வான்ட்ரையர், பேர்லினில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கருத்துரையில் இந்த இயக்கத்தின் முக்கியத்துவத்தைச் சுருக்கமாகக் கூறினார்:
இந்த ஆர்ப்பாட்டங்கள் சர்வதேசத்தன்மையை கொண்டிக்கின்றன. இவை முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவை முதலாளித்துவத்துடன் நேரடியாக மோதும் பாதையில் உள்ளன. சோசலிச சமத்துவக் கட்சி, இந்தக் கேள்விகளை நனவுபூர்வமாக முன்னெடுத்துச் செல்லவும், அதன் மூலம் இந்த இயக்கத்தின் சுய-நனவை வளர்த்தெடுக்கவும் போராடுகிறது.
ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று பணிகளை அவர் அடையாளம் காட்டி பின்வருமாறு கூறினார்:
பல நாடுகளில் ஒரே நேரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து, இந்த இயக்கம் உண்மையிலேயே ஒரு சர்வதேச இயக்கமாக வளர வேண்டும். பிரச்சினைகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன, ஏனெனில் அவற்றுக்கு ஒரே காரணம் தான் உள்ளது: அது முதலாளித்துவம். சர்வதேச வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மட்டுமே உடைக்க முடியும்.
அரசியல் சுயாதீனத்தின் அவசியம் குறித்தும் அவர் விளக்கினார்:
இந்த ஆர்ப்பாட்டங்கள் முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் தொழிற்சங்கங்களிடமிருந்தும் சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு: அவை எதிர்ப்பை ஒழுங்கமைப்பதில்லை, மாறாக அதை ஒடுக்குகின்றன. ஜேர்மனியின் இடது கட்சி, சமூகக் வெட்டுக்களை திணித்து, அரசு எந்திரத்தை வலுப்படுத்தும் அரசாங்கங்களை அமைத்து வருகிறது. அது ஜேர்மன் நாடாளுமன்றத்தில் டிரில்லியன் யூரோ மதிப்பிலான மறு ஆயுதமயமாக்கல் திட்டத்தை ஆதரித்துள்ளது. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பை ஒழுங்கமைக்கவில்லை, மாறாக பெருமளவிலான ஆட்குறைப்புகளை மேற்கொள்கின்றன. ஆயினும், போராட்டங்களை சுயாதீனமாக ஒழுங்கமைப்பது மட்டும் போதாது. தேவைப்படுவது நனவான அரசியல் முறிவாகும்.
இந்த இயக்கம் தொழிலாளர்களை நோக்கிய திசையில் தன்னை ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும் என்று வான்ட்ரையர் வலியுறுத்தினார். “தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவத்தை எதிர்கொள்ள முடியும். மேலும் இளைஞர்கள் தங்களை அந்த தொழிலாள வர்க்கத்தை நோக்கிய திசையில் திருப்பிக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
இறுதியாக, அவர் பின்வருமாறு விளக்கினார்:
இந்த இயக்கம் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு நனவான இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு ஆளும் வர்க்கம் அடக்குமுறையின் மூலம் பதிலளிக்கிறது என்ற உண்மையே, அது எந்தச் சலுகைகளையும் வழங்கிடத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. முதலாளித்துவம் இளைஞர்களுக்கு காட்டுமிராண்டித்தனம், பாசிசம் மற்றும் போரைத் தவிர வேறு எதையும் வழங்கத் தயாரில்லை. இதனால்தான் இந்த இயக்கம் ஒரு சோசலிச முன்னோக்கை நோக்கித் திரும்ப வேண்டும்.
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பணியிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றில் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப SGP-உம் IYSSE-உம் முன்மொழிகின்றன. ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் இந்தக் குழுக்கள் முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்தும் சுயாதீனமாக செயற்படுகின்றன. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலம் சர்வதேச அளவில் ஒன்றுபடும் இக்குழுக்களால், போருக்கும் சர்வாதிகாரத்திற்கும் சமூகப் பேரழிவுக்கும் எதிரான ஐரோப்பா முழுவதுமான பொது வேலைநிறுத்தம் உட்பட, ஒரு பொதுவான போராட்டத்தைத் தயாரிக்க முடியும்.
இறுதியில், இந்தப் போராட்டம் சமூகத்தின் செல்வத்தைக் கட்டுப்படுத்துபவர் யார் என்ற கேள்வியை எழுப்புகிறது. இராணுவ விரிவாக்கத்திற்கும் நிதியியல் தன்னலக்குழுவை வளப்படுத்துவதற்கும் ஒதுக்கப்படும் வளங்கள், சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு, முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை ஜனநாயக ரீதியான தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் பொது உடைமையாக்குவது உள்ளிட்ட சோசலிசக் கொள்கைகள் தேவைப்படுகின்றன.
கடந்த அக்டோபர் 31ல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஒரு முக்கியமான முன்னேற்றப் படியைக் குறிக்கின்றன. ஆளும் வர்க்கம் தனது போர்களுக்குப் பீரங்கித் தீவனமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்ற ஒரு தலைமுறை, அரசியல் வாழ்வில் சுயாதீனமாகத் தலையிடத் தொடங்கியுள்ளது. இராணுவவாதத்திற்கும் சமூகப் பேரழிவுக்கும் எதிரான அதன் எதிர்ப்பு, சமூகத்திற்குள் சக்திவாய்ந்த எதிர்ப்புச் சக்திகள் உருவாகி வருவதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
தற்போதைய பணி என்னவென்றால், வளர்ந்து வரும் இந்த எழுச்சியை, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு தெளிவான, சர்வதேச சோசலிச இயக்கமாக மாற்றுவதாகும்.
இந்த முன்னோக்கிற்காகவே சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், சோசலிச சமத்துவக் கட்சியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) போராடுகின்றன.
