முன்னோக்கு

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: ட்ரம்பிற்கும் குடியரசுக் கட்சியினருக்கும் கிடைத்த மிகப்பெரிய நிராகரிப்பு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செவ்வாய்க்கிழமை அன்று, நோலன்ஸ்வில் பொழுதுபோக்கு மைய வாக்குச்சாவடியில் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வரிசையில் காத்திருக்கின்றனர். நவம்பர் 3, 2026, டென்னசியின் நோலன்ஸ்வில்லில். [AP Photo/George Walker IV]

2026 இடைக்காலத் தேர்தல்கள். டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அரசாங்கத்தின் கொள்கைகளை அமெரிக்க மக்கள் பெருவாரியாக நிராகரித்துள்ளதைக் காட்டுகிறது. குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தில் இருந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்து வெளியேற்றப்பட்டதுடன், செனட் சபையின் கட்டுப்பாட்டையும் இழந்தது.

இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை, குடியரசுக் கட்சியினர் வட கரோலினா, தென் கரோலினா, டெக்சாஸ், ஓஹியோ, கன்சாஸ், மெய்ன் மற்றும் ஐயோவா ஆகிய மாநிலங்களில் செனட் சபையின் இடங்களை இழந்துள்ளனர், அதே வேளையில் ஜனநாயகக் கட்சியினர் வசம் இருந்த எந்தவொரு இடத்தையும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அலாஸ்கா மற்றும் மிசிசிப்பியில் நடைபெற உள்ள தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, புதிதாக அமையவுள்ள செனட் சபையில் ஜனநாயகக் கட்சி 56-44 என்ற மிக உயர்ந்த பெரும்பான்மையைப் பெறக்கூடும்.

ட்ரம்பிற்கு எதிரான இந்த அலை, டெக்சாஸின் ஆளுநரான கிரெக் அபோட் போன்ற சக்திவாய்ந்த குடியரசுக் கட்சி ஆளுநர்களையும், ஓஹியோவில் தொழிலதிபர் விவேக் ராமசுவாமி மற்றும் ஜோர்ஜியாவில் ரிக் ஜாக்சன் போன்ற பில்லியனர் ஆளுநர் வேட்பாளர்களையும் தோற்கடித்து வீழ்த்தியுள்ளது.

ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த வெற்றிகள் மிகப்பாரிய வாக்கு வித்தியாசத்தில் இருந்ததால், அசோசியேட்டட் பிரஸ் (AP) மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களால் அவை மிக விரைவாகவே அறிவிக்கப்பட்டன. மேலும், குடியரசுக் கட்சி வேட்பாளர்களிடமிருந்து இதற்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க சவாலும் எழவில்லை. அத்துடன், ட்ரம்ப் நிர்வாகத்தால் வாக்காளர்களை வாக்களிப்பு மையங்களுக்கு செல்லவிடாமல் அச்சுறுத்தவும் முடியவில்லை—மாறாக, ஜனாதிபதி தேர்தல் அல்லாத ஒரு தேர்தலில் பதிவான வாக்குகள், இதுவரை இல்லாத அளவிற்குக் மிக அதிகமாக இருந்ததாகத் தெரிகிறது.

குடியரசுக் கட்சி ஆட்சியின்கீழ் உள்ள மிகப்பெரிய மாநிலமான டெக்சாஸில், மூன்று முறை பதவியில் இருந்த தற்போதைய ஆளுநர் அபோட், உள்ளூர் நேரப்படி இரவு 10:00 மணிக்கு ஜனநாயகக் கட்சியின் ஜினா ஹினோஹோசாவை தொலைபேசியில் அழைத்துத் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். ஏனெனில், அவர் ஹினோஹோசாவை விட ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் பின்தங்கியிருந்தார். ஹினோஹோசா டெக்சாஸின் முதல் ஹிஸ்பானிக் ஆளுநராக இருப்பார். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சேவியர் பெசெரா கலிபோர்னியாவின் முதல் ஹிஸ்பானிக் ஆளுநராக இருப்பார் — இது குடியேறியவர்களை, குறிப்பாக மெக்சிகோவைச் சேர்ந்தவர்களை ட்ரம்ப் இனவெறியுடன் அரக்கத்தனமாகச் சித்தரித்ததற்கு வழங்கப்பட்ட ஒரு தகுந்த பதிலடியாகும்.

டெக்சாஸ் மாநில தலைமை வழக்கறிஞரும், ட்ரம்பால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கென் பாக்சனை ஒரு மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஜேம்ஸ் தலாரிகோ, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களில் டெக்சாஸிலிருந்து செனட் இடத்தைக் கைப்பற்றிய முதல் ஜனநாயகக் கட்சியினரானார். குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் ஆனி ஆண்ட்ரூஸ், நீண்டகால குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரகாமின் சகோதரியும், ட்ரம்பால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான டார்லீன் கிரகாம் வகித்த தென் கரோலினா செனட் இடத்தைக் கைப்பற்றினார். மேலும் கன்சாஸில், ஆடம் ஹாமில்டன் 1932க்குப் பிறகு அமெரிக்க செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனநாயகக் கட்சியினரானார்.

பிரதிநிதிகள் சபையில் ஏற்பட்ட மாற்றமும் அதே அளவிற்கு வியத்தகு முறையில் இருந்தது. மேற்கு கடற்கரை மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெற்று வரும் நிலையிலேயே, நியூ யோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வேர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா, டெக்சாஸ், ஓஹியோ, மிச்சிகன், இந்தியானா, விஸ்கான்சின், மிஸ்சூரி, நெப்ராஸ்கா மற்றும் கொலராடோ ஆகிய மாநிலங்களில் குடியரசுக் கட்சியினர் வசம் இருந்த இடங்களை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றினர்.

சில மாநிலங்களின் பிரதிநிதிகள் குழு முற்றிலும் மாற்றமடைந்தது: கொலராடோவில் 4-4 என்றிருந்த நிலை மாறி, அங்குள்ள எட்டுத் தொகுதிகளிலுமே ஜனநாயகக் கட்சியினர் முன்னிலை பெற்றனர். வட கரோலினாவில், பிரதிநிதிகள் குழுவை 11-3 என்ற கணக்கில் தங்களுக்குச் சாதகமாகப் பிரிக்கும் நோக்கில் குடியரசுக் கட்சியினரால் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை, இதுவரை ஐந்து ஜனநாயகக் கட்சி வெற்றிகளுக்கும், எஞ்சிய தொகுதிகளில் 5-4 என்ற ஜனநாயகக் கட்சியின் முன்னிலைக்கும் வழிவகுத்துள்ளது. இது ஒரே மாநிலத்தில் கிடைத்த ஏழு இடங்களின் வெற்றியாகும். புளோரிடாவில், குடியரசுக் கட்சியினருக்குச் சாதகமாக மீண்டும் வரையறுக்கப்பட்ட நான்கு ஜனநாயகக் கட்சித் தொகுதிகளிலுமே ஜனநாயகக் கட்சியினரே வெற்றி பெற்றனர். டெக்சாஸிலும் குடியரசுக் கட்சியின் தொகுதி மறுவரையறையால் இதேபோன்ற விளைவு ஏற்பட்டது.

கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க அரசியல் குறித்த பெருநிறுவன ஊடகங்களின் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த “சிவப்பு” மற்றும் “நீல” மாநிலங்கள் என்ற கட்டுக்கதையை இந்தத் தேர்தல் தகர்த்தெறிந்துள்ளது. குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகக் கருதப்பட்ட ஐயோவா, கன்சாஸ், ஓஹியோ மற்றும் டெக்சாஸ் ஆகியவை ஜனநாயகக் கட்சி ஆளுநர்களையும் ஜனநாயகக் கட்சி செனட்டர்களையும் ஒருசேரத் தேர்ந்தெடுத்துள்ளன.

வாக்குச்சாவடிக் கருத்துக்கணிப்புகள் இந்த நிராகரிப்பு எந்தளவுக்குப் பரந்ததாக இருந்தது என்பதைக் காட்டுகின்றன. முப்பத்தொன்பது சதவீத வாக்காளர்கள் பொருளாதாரத்தையே மிக முக்கியமான பிரச்சினையாகக் குறிப்பிட்டனர்; 32 சதவீதத்தினர் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறிப்பிட்டனர். வெறும் 3 சதவீதத்தினர் மட்டுமே 'குற்றத்தை' மிக முக்கியமான பிரச்சினையாகக் குறிப்பிட்டனர். இது பாசிச வலதுசாரிகளின் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான மக்கள் மயக்க அரசியலுக்கான ஆதரவு முற்றிலும் சரிந்துவிட்டதன் அறிகுறியாகும்.

இந்த வாக்குப்பதிவு ஈரான் மீதான போருக்கு எதிரான ஒரு தீர்ப்பாகவும் அமைந்தது. தேர்தலின் போது, அமெரிக்கா ஈரானின் கெஷ்ம் தீவு (Qeshm Island) மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதுடன், வாக்குப்பதிவுக்குப் பிறகு உடனடியாக ஒரு நடவடிக்கைக்குத் தயாராகுமாறு வளைகுடா நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், NBC நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், 62 சதவீத வாக்காளர்கள் இந்தப் போர் ஒரு தவறான முடிவு என்றும், 74 சதவீதத்தினர் இந்தப் போரே தங்களது வாக்களிப்பில் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது என்றும் தெரிவித்தனர்.

வாக்காளர்கள் இரு முதலாளித்துவக் கட்சிகளையும் எதிர்மறையாகவே பார்த்தனர். இது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் தீவிரமயமாதலின் அறிகுறியாகும். அறுபத்தொன்பது சதவீதத்தினர், அமெரிக்கப் பொருளாதார அமைப்பு “செல்வந்தர்களுக்குச் சாதகமாக” இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் 57 சதவீதத்தினர், அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை தற்போதைய நிலையை விட மோசமாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

மின்னிசோட்டாவில் கூட்டாட்சி குடிவரவு முகவர்களால் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ குட் ஆகிய போராட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், டெக்சாஸ், மெய்ன் மற்றும் பல மாநிலங்களில் குடியேறிய தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் பிறகான முதல் தேசிய தேர்தல் இதுவாகும். இதில் அமெரிக்க மக்கள் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் குடியேற்ற எதிர்ப்பு வெறிக்கு ஒரு சக்திவாய்ந்த அடியைக் கொடுத்துள்ளனர். வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் லத்தீனோ வாக்காளர்கள், இளம் தொழிலாள வர்க்க ஆண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ட்ரம்பிற்கும் குடியரசுக் கட்சியினருக்கும் எதிராக மிகப் பெரிய அளவிலான திருப்பம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன.

மிச்சிகனில், ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயீத்துக்கு எதிரான ட்ரம்பின் இனவெறி மற்றும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம், தலைகீழாக அவருக்குப் பின்னடைவையே ஏற்படுத்தியது. இதில், ஜனநாயகக் கட்சியின் செனட் வேட்பாளர் போட்டியில் எல்-சயீத்திடம் தோல்வியடைந்த பிரதிநிதி ஹேலி ஸ்டீவன்ஸ், கடைசி நேரத்தில் அவருக்கு எதிராகச் செயல்பட்டதும் அடங்கும். கமலா ஹாரிஸ் 2024 தேர்தலில் மிச்சிகனில் தோல்வியடைந்ததற்கு, காஸா இனப்படுகொலையுடன் அவர் தொடர்புபடுத்தப்பட்டதே முக்கிய காரணமாக இருந்தது. எல்-சயீத், காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையையும், ஈரானுக்கு எதிரான போரையும் விமர்சித்ததன் மூலமே அரசியல் முக்கியத்துவம் பெற்றார். இருப்பினும், பிற்காலத்தில் அவர் இந்த இரண்டு நிலைப்பாடுகளிலிருந்தும் பின்வாங்கினார்.

இந்த தேர்தல் முடிவுகள் ட்ரம்பை நிராகரித்தது மட்டுமல்லாமல், ஜனநாயகக் கட்சிக்கும், அந்த இரு கட்சிகளையும் ஆதரித்து கட்டுப்படுத்தும் ஒட்டுமொத்த நிதிய தன்னலக் குழுவிற்கும் ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பிற்கு முன்னால் மண்டியிட்டு, அவரை ஒரு வலிமைமிக்க பிரம்மாண்டமான சக்தியாகச் சித்தரித்தனர். அதே சமயம், அவரைத் தடுப்பதற்குத் தங்களால் இயலாது என்பது போலத் தங்களைக் காட்டியும் கொண்டனர்.

ஆனால், இந்த வாக்குப்பதிவு முற்றிலும் வேறுபட்ட ஒன்ற வெளிப்படுத்தியுள்ளது: அது, ஜனநாயகக் கட்சியை விட மிகவும் இடதுசாரிக் கண்ணோட்டம் கொண்டவர்களாகவும், ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பலத்த அடியைக் கொடுக்க உறுதிகொண்டவர்களாகவும் மக்கள் உள்ளனர் என்பதைக் காட்டியுள்ளது.

ட்ரம்பிற்கு எதிரான இந்த இயக்கத்தின் தொடக்க காலத் தேர்தல் பயனாளியாக ஜனநாயகக் கட்சி விளங்கியுள்ளது. ஆனால், ஜனநாயகக் கட்சியினரின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதையும், மீண்டும் இதனை “சாதாரண” முதலாளித்துவ அரசியலின் எல்லைக்குள் திருப்பி விடுவதையுமே நோக்கத்தைக் கொண்டிருக்கும்.

தொழிலாள வர்க்கம் இடது நோக்கிய திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஜனநாயகக் கட்சி வலதுசாரிக் திசையை நோக்கி நகர்கிறது. புதிதாக அமையவுள்ள பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையில், “ஜனநாயக சோசலிசத்தை” ஆதரிப்பதாகக் கூறிக்கொள்பவர்களை விட முன்னாள் இராணுவத்தினரும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளுமே மிக அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருப்பர்.

திங்கள்கிழமை இரவு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (பெர்க்லி) உரையாற்றிய WSWS ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் குறிப்பிட்டது போல்: “நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் முடிவு எதுவாக இருப்பினும், கொள்கையானது இறுதிப் பகுப்பாய்வில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நெருக்கடியாலும், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உழைப்பு நிலைகளையே மாற்றியமைத்து வரும் தொழில்நுட்பத்தின் [AI] தன்மையாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போருக்கான முனைப்பாலும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பதிலடியாலுமே தீர்மானிக்கப்படும்.”

காங்கிரஸின் (அமெரிக்க நாடாளுமன்றத்தின்) கட்டமைப்பில் ஏற்படும் மாற்றம், இந்தச் செயல்பாடுகள் எதையும் மாற்றிவிடப் போவதில்லை. வாக்களித்தவர்களின் நோக்கங்களுக்கும், அவர்கள் வாக்களித்த கட்சியின் கொள்கைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை, இருகட்சி முறைக்குள் தீர்க்க முடியாது. இது வர்க்கப் போராட்டத்தின் மூலமே தீர்க்கப்படும்.

Loading