இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்த விரிவுரை 2026 நவம்பர் 2 திங்கள்கிழமை அன்று கலிபோர்னியா பல்கலைக்கழகம், பேர்க்லியில் டேவிட் நோர்த்தால் நிகழ்த்தப்பட்டதாகும். நோர்த் அவர்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராகவும், சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவராகவும் உள்ளார்.
***
2026 தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் நாளை எண்ணப்படும். இந்தத் தேர்தலைப் பற்றிய எந்தவொரு தீவிரமான பகுப்பாய்வுக்கும் தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டிய கேள்வி இதுதான்: இந்தத் தேர்தலில் எந்த முக்கிய பிரச்சினை ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டும்?
இந்த தேர்தலுக்குப் பிறகு ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு போருக்கு, அதாவது ஒரு “குறுகிய, தீவிரமான தாக்குதலுக்கு” ஆயத்தமாகுமாறு வாஷிங்டன் பல வளைகுடா அரபு அரசாங்கங்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை, பாதுகாப்பு அமைச்சர் ஹெக்செத் மற்றும் ஜெனரல் கெய்ன் முன்னிலையில் மத்திய கட்டளையகத்தின் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கியுள்ளார். USS தியோடோர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு மற்றும் USS மேக்கின் ஐலேண்ட் நீர்நில போர்க்கப்பல் குழு ஆகியவை நவம்பர் மாத இறுதியில் இந்தப் பிராந்தியத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்குள்ள விமானந்தாங்கிக் கப்பல்களின் எண்ணிக்கை மூன்றாக உயரக்கூடும்.
இந்த திட்டத்தின் நோக்கம் என்ன என்பது குறித்த இரகசிய விளக்கவுரையைப் பெற்ற கனெக்டிகட் மாநிலத்தின் செனட்டர் கிறிஸ் மர்பி, “இந்தத் திட்டம் பைத்தியக்காரத்தனமானது, இது நோக்கங்களை அடையாது, மாறாக போர் தீவிரமடைதலின் ஒரு புதிய சுழற்சியையே தொடக்கி வைக்கும்” என்று பகிரங்கமாக கூறியுள்ளார். இந்தத் திட்டம் நீடித்த மற்றும் தீவிரமடையும் போரை உருவாக்கும் என்று கூறிய அவர், தாக்குதலுக்கான இலக்குகள் பட்டியலில் பொதுமக்கள் வாழும் உள்கட்டமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளுடன் இதைத் தொடர்புபடுத்தியுள்ளார். அவர் இதற்கு “பேரழிவுகரமான தீவிரப்படுத்தல்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் உள்ள தாக்குதல் இலக்குகளின் பட்டியல்களில், பிக்அக்ஸ் மலையின் (Pickaxe Mountain) அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள், புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளின் தளபதிகளை படுகொலை செய்வது, மற்றும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை வர்ணிப்பது போல் “தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற பொதுமக்களின் உள்கட்டமைப்பு” வசதிகள் வரை நீள்கிறது. மத்திய கட்டளையகத்தின் துணைத் தளபதியாகப் பணியாற்றிய, ஓய்வுபெற்ற அமெரிக்கத் துணைத் தளபதி ஒருவர், இந்த அணுகுமுறையின் ஈர்ப்பை முழு வெளிப்படைத்தன்மையுடன் விளக்கினார்: “நீங்கள் சுத்திகரிப்பு ஆலைகளை அழித்துவிட்டால்... பிறகு அவர்களிடம் வாகனங்களுக்கு நிரப்புவதற்கு பெட்ரோலே இருக்காது.” இது, “இராணுவ இலக்குகளைத் தாக்க வேண்டிய அவசியமின்றி, ஒட்டுமொத்த நாட்டையும் தங்களின் காலடியில் மண்டியிட வைக்கும்” என்று அவர் கூறினார்.
ஈரான் 90 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாடாகும். ஒவ்வொரு நவீன சமூகத்தையும் போலவே அதன் இருப்பும் மின்சாரத்தைச் சார்ந்துள்ளது. மின்சாரமே தண்ணீரைச் சுத்திகரிக்கிறது; கழிவுநீர்ச் சுத்திகரிப்பை இயக்குகிறது. உணவையும் மருந்துகளையும் குளிரூட்டிப் பாதுகாக்கிறது. குடியிருப்புக் கட்டிடங்களின் மேல் தளங்களுக்குத் தண்ணீரை ஏற்றுகிறது; மருத்துவமனைகளிலுள்ள கருவிகளையும் பிரசவ வார்டுகளிலுள்ள குழந்தை பாதுகாப்புப் பெட்டிகளையும் (இன்குபேட்டர்கள்) இயக்குகிறது. 90 மில்லியன் மக்கள் வாழும் ஒரு நாட்டின் மின்சார கட்டமைப்பையே அழிப்பது என்பது, கணிப்பிட முடியாத, ஆனால் மிகப் பெரிய எண்ணிக்கையிலானோரை மரண தண்டனைக்கு உள்ளாக்குவதாகும்—குண்டுவெடிப்புக்களால் மட்டுமல்ல, மாறாக தைபோய்டு, கொலரா, வாந்திபேதி மற்றும் அசுத்தமான நீரினால் ஏற்படும் நோய்களால், எல்லாவற்றிற்கும் மேலாக, மிக இளம் வயதினர், மிக வயதானவர்கள் மற்றும் நோயுற்றோர் மத்தியில் இந்த மரணம் நிகழும்.
இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம், ஏனெனில் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிற்கு அமெரிக்கா இதையே செய்தது. 1991 ஆம் ஆண்டில் மத்திய கிழக்கு கண்காணிப்பகம் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “கூட்டணிப் படைகள் ஈராக்கின் ஐந்து நீர்மின் நிலையங்களில் நான்கு உட்பட, நாட்டின் மின்சார அமைப்பை ஏறக்குறைய முற்றிலுமாக அழித்தொழித்தன” என்று குறிப்பிட்டது. ஈராக்கின் மின் உற்பத்தித் திறனில் 25 சதவீதம் “முற்றிலும் செயல்படாதபடி” ஆக்கப்பட்டதாகவும், மேலும் 50 சதவீதம் “சீர்குலைக்கப்பட்டதாகவும்” ஜெனரல் சுவார்ஸ்காப் தெரிவித்தார். இந்த அறிக்கை தொடர்ந்து கூறுகையில், இதன் விளைவாக “நாட்டின் மின்சாரத்தை மட்டுமே நம்பியிருந்த நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் செயலிழந்து, கடுமையான சுகாதார அபாயத்தை உருவாக்கின,” அதே நேரத்தில் மருத்துவமனைகள் இதனாலேற்பட்ட அவசரநிலையை “அதிகபட்சமாக, அவசரகால மின் இயற்றிகளால் வழங்கப்பட்ட ஒழுங்கற்ற மின்சாரத்தைக் கொண்டே” எதிர்கொண்டன. நேரடி வெடிகுண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட மரணங்கள் 2,500 முதல் 3,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிட்ட அவ்வறிக்கை, “ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள் மற்றும் மருத்துவப் பராமரிப்பு இன்மையால் ஏற்பட்ட கணிசமான அளவிலான அதிகப்படியான மரணங்களை இந்த புள்ளிவிவரங்கள் சேர்க்கவில்லை” என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விளைவுகள் முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்தன. குண்டுவீச்சு தொடங்கி ஐந்து நாட்களுக்குப் பிறகு, அதாவது 1991 ஜனவரி 22 தேதியிட்ட “ஈராக் நீர் சுத்திகரிப்பு பாதிப்புகள்” என்ற தலைப்பிலான ஓர் ஆவணத்தை அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமை தயாரித்தது. அது, ஈராக்கிற்கு அதன் நீரைச் சுத்திகரிக்கும் வழிகளை மறுப்பதன் விளைவுகளையும், எதிர்பார்க்கப்பட்ட நோய்ப் பரவல்களையும் மதிப்பிட்டது. பொதுமக்களின் நீர் விநியோகம் அழிக்கப்படுவது முன்கூட்டியே அதில் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.
1991இல் ஈராக்கின் மக்கள்தொகை ஏறத்தாழ 18 மில்லியனாக இருந்தது. ஈரானின் மக்கள்தொகை 90 மில்லியன். தயாரிப்பில் இருக்கும் நடவடிக்கை என்பது, ஏற்கனவே எட்டு மாத கால குண்டுவீச்சுகளையும் கடற்படை முற்றுகையையும் சகித்துக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் தொகைக்கு எதிராக, அதே நடவடிக்கையை ஐந்து மடங்கு பெரிய அளவில் முன்னெடுக்கப்படுகிறது. இது ஒரு பொதுமக்கள் சமூகத்தின் வாழ்வாதார நிலைமைகளைத் திட்டமிட்டு அழிப்பதாகும்; மேலும் இது அமெரிக்க ஊடகங்களில் தந்திரோபாயம் சார்ந்த விருப்பத் தேர்வுகளின் பட்டியலாக கலந்துரையாடப்பட்டு வருகிறது. 1948 ஆம் ஆண்டின் இனப்படுகொலை தொடர்பான சாசனம், ஒரு மக்களின் உடல்ரீதியான அழிவைக் கொண்டுவரும் நோக்கில் அவர்கள் மீது திட்டமிட்டுத் திணிக்கப்படும் வாழ்வாதார நிலைமைகளை இனப்படுகொலை என்று வரையறுக்கிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இனப்படுகொலைக்கு இணையான ஒரு மோதலுக்குத் தயாராகி வருகின்றன.
ஜனாதிபதி அணு ஆயுதங்கள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார். அக்டோபர் 15 அன்று, ஒரு நேர்காணலாளரிடம் ட்ரம்ப், “நான் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன். அதற்கான அவசியம் எமக்கு இல்லை. உலகின் மிகப் பெரிய அணு ஆயுத வல்லரசு நாம்தான்” என்று கூறினார். ஆனால் ஏப்ரலில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியிருந்தபோது, “இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, அது மீண்டும் ஒருபோதும் மீண்டு வராது” என்று அறிவித்தார். மேலும், “மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் தகர்க்கும்” வகையிலான குண்டுவீச்சுத் தாக்குதல் ஒன்றை நடத்தப்போவதாகவும் அவர் உறுதியளித்தார். செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மேடையிலிருந்து, தன்னால் ஈரானை “முற்றிலும் அழித்துவிட” முடியும் என்று அவர் அறிவித்தார். இவ்வாறான முழுமையான அழிவு குறித்த அச்சுறுத்தல், பொதுவெளியில் பகிரங்கமாக பலமுறை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சமூகத்திற்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே ஆகும். அந்த உத்தரவை ஒரு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியே பிறப்பித்தார். மேலும். அணு ஆயுதங்கள் யப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்கள் மீது இருமுறை பயன்படுத்தப்பட்டது. மிசூரி மாநிலத்தின் இன்டிபென்டன்ஸ் நகரைச் சேர்ந்த, ஒரு காலத்தில் துணிக்கடை வணிகராக இருந்த ஜனாதிபதி ஹாரி ட்ரூமன், அந்த உத்தரவைப் பிறப்பித்ததற்காகத் தனது தூக்கம் ஒருமுறை கூட கெடவில்லை என்று கூறினார். ட்ரூமன் அணு குண்டைப் பயன்படுத்தியது குறித்து, அமெரிக்க வரலாற்றாசிரியரும் இரண்டாம் உலகப் போர் சிப்பாயுமான கேப்ரியல் ஜாக்சன் 1999-ல் இவ்வாறு எழுதினார்:
1945 ஆகஸ்ட் மாதத்தின் குறிப்பிட்ட சூழலில், அணு குண்டைப் பயன்படுத்திய நிகழ்வு, உளவியல் ரீதியாக மிகவும் இயல்பான மற்றும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமை நிர்வாகி, ஒரு நாஜி சர்வாதிகாரி எவ்வாறு அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியிருப்பாரோ, அதே போலவே அவரால் அதைப் பயன்படுத்த முடியும் என்பதைக் காட்டியது. இந்த வகையில், — பல்வேறு வகையான அரசாங்கங்களின் செயல்பாட்டில் உள்ள அறநெறி சார்ந்த வேறுபாடுகள் குறித்து அக்கறை கொண்ட எவருக்கும்— அமெரிக்காவானது பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மங்கச் செய்தது.
ஈரானுக்கு எதிராக இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது பாரிய படுகொலையாகவே அமையும்—ஒரே மதியப் பொழுதில் நூறாயிரக்கணக்கான மக்கள், அனைத்து சாத்தியக்கூறுகளின்படியும் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள். உயிர்தப்பியவர்கள் தீக்காயங்கள், கதிர்வீச்சு நோய் மற்றும் இன்னும் பிறக்காத குழந்தைகளுக்குக் கடத்தப்படும் மரபணு சேதங்களுடன் எஞ்சியிருப்பார்கள். இது வெறும் உடல்ரீதியான யதார்த்தம் மட்டுமே.
இதற்கு இரண்டாவது விளைவு ஒன்றும் உள்ளது, அது இந்த அறையில் உள்ள ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. இனப்படுகொலைக்குக் காரணமான ஒரு நாட்டின் குடிமக்களாகவே நீங்கள் உங்கள் வாழ்நாளின் எஞ்சிய பகுதியைக் கழிக்க வேண்டியிருக்கும். ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு 80 ஆண்டுகளுக்குப் பிறகும், அங்கு செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான முயற்சி இன்னும் அமெரிக்க அரசியல் மற்றும் அறிவுசார் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. அந்தச் செயல் அவசியமானது என்ற பொய், ஒவ்வொரு தலைமுறையிலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டும், ஏனெனில் அதன் உண்மை தாங்க முடியாதது. தற்போது திட்டமிடப்பட்டு வரும் நடவடிக்கையும், முன்னெப்போதையும் விடப் பெரும் தீவிரத்தன்மை கொண்டது. இது உலகம் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நிகழ்த்தப்படவிருக்கிறது. இதை உலகம் ஒருபோதும் மறக்காது, மேலும் இதிலிருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியமாகிவிடும். மேலும் இதிலிருந்து மீள்வது என்பதற்கு வழியே இருக்காது. இது அமெரிக்காவின் அறநெறிமுறைச் சிதைவை அடையாளப்படுத்தும். நீங்கள் உங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால், இது நடப்பதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான்?
நான் விவரித்த அனைத்தும் உலகறிந்த பொதுவான செய்திகளாகும். இது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஆக்ஸியோஸ் ஆகிய ஊடகங்களில் செய்தியாக வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தொலைக்காட்சியில் பேசும்போது, “இதைச் செய்து முடிக்கலாமா” என்று தான் யோசித்துக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்க செனட் உறுப்பினர் ஒருவர், இந்தத் திட்டம் ஒரு பைத்தியக்காரத்தனமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார். நூறாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக்கூடிய ஒரு போரை மீண்டும் தொடங்குவது பற்றிய தகவல்கள், நாளைய வாக்கெடுப்பு முடிந்த உடனேயே வரும் நாட்களில், ஊடகங்களில் அட்டவணைப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட இருக்கின்றன.
மேலும், இது தேர்தல் பிரச்சாரத்தில் ஏறக்குறைய எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. இந்தத் தேர்தலின் மிகவும் ஆச்சரியமளிக்கும் உண்மை இதுதான். இரண்டு கட்சிகளிலுமே இது குறித்து எந்தவொரு தீவிரமான விவாதமும் நடைபெறவில்லை. இது தேர்தலின் மையக் கேள்வியாக ஆக்கப்படவில்லை. இந்தப் போரின் மீதான பொது வாக்கெடுப்பாக இத்தேர்தலை மாற்ற வேண்டும் என்று எந்தவொரு முக்கிய அரசியல் தலைவரும் கோரவில்லை.
இதை 1968 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த ஆண்டில், வியட்நாம் போரே அமெரிக்க அரசியல் வாழ்க்கையின் மையப் பிரச்சினையாக இருந்தது. போருக்கு எழுந்த எதிர்ப்பானது, மார்ச் 31 அன்று, பதவியிலிருந்த ஒரு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியையே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக வைத்தது. யூஜின் மெக்கார்த்தி மற்றும் ரொபர்ட் கென்னடி ஆகிய இரு வேட்பாளர்கள், போரின் வெளிப்படையான எதிர்ப்பாளர்களாகவே ஜனநாயகக் கட்சியின் வேட்புமனுவுக்குப் போட்டியிட்டனர். மார்ட்டின் லூதர் கிங், போருக்கான எதிர்ப்பைச் சிவில் உரிமை இயக்கத்தின் மையப் புள்ளியாக அமைத்தார். கிங் 1968 ஏப்ரலில் படுகொலை செய்யப்பட்டார். ரொபர்ட் கென்னடி ஜூன் மாதத்தில் படுகொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதம் சிக்காகோவில் நடந்த அக்கட்சியின் மாநாடு முற்றுகையின் கீழ் நடைபெற்றது. அரங்கிற்குள் பிரதிநிதிகள் அமைதித் திட்டவரைவை விவாதித்துக் கொண்டிருந்தபோதே, வெளியில் வீதிகளில் இறங்கிப் போராடியவர்களைக் பொலிசார் அடித்து தாக்கினர்.
இன்று அதுபோன்ற எதுவுமே இல்லை. இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளிலிருந்து வந்த 67 வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ள ஜனநாயகக் கட்சி, இந்தப் போரை எதிர்க்கவில்லை, எதிர்க்கப்போவதும் இல்லை. மேலும், நாடாளுமன்றத்திலும் நியூ யோர்க் மேயர் பதவியிலும் இடங்களைக் கொண்டுள்ளதும், இந்நாட்டின் தீவிரமயமாக்கப்பட்ட இளைஞர்களின் சார்பில் பேசுவதாகக் கூறிக்கொள்வதுமான அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பும் கூட, ஈரானுக்கு விடுக்கப்பட்ட இந்த பேரழிவுக்கான அச்சுறுத்தலை இத்தேர்தலின் முதன்மைப் பிரச்சினையாக மாற்றவில்லை. போர் தொடங்கிய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட அதன் தேசிய வேலைத்திட்ட அறிக்கையில், ஈரானுக்கு எதிரான போரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அது அணு ஆயுதங்களைப் பற்றியோ, ஏகாதிபத்தியத்தைப் பற்றியோ எதையும் குறிப்பிடவில்லை.
ஆனால், யதார்த்தத்தை இவ்வாறு தவிர்த்து வந்தபோதிலும், அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலகட்டத்தின் நெருக்கடியையும் மிஞ்சும் ஒரு நெருக்கடிக்குள் அமெரிக்கா வேகமாகப் பாய்ந்து செல்கிறது என்ற உணர்வு பரவலாக நிலவுகிறது. இந்தப் பொதுவான உணர்வு அரசியல்ரீதியாகத் தெளிவாக வெளிப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால், அது அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடியில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
I. பொருளாதார நெருக்கடி
அமெரிக்கத் தன்னலக்குழுவை வாட்டும் நிதிரீதியான கொடுங்கனவு என்னவென்றால், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் முழுக் கட்டமைப்பும் இப்போது “செயற்கை நுண்ணறிவு” (AI) என்றழைக்கப்படுவதன் மீதான ஊகவணிக வெறியின் மீது தங்கியுள்ளது; அந்த வெறி ஏற்கனவே உடைந்து சிதறத் தொடங்கிவிட்டது.
அமேசானின் மூலதனச் செலவினம் ஒரே காலாண்டில் 75 பில்லியன் டாலரைத் தாண்டியது; இது ஓராண்டுக்கு முந்தைய அளவை விட இருமடங்குக்கும் அதிகமாகும். கடந்த 12 மாதங்களில் அதன் செயல்பாட்டுப் பணப்புழக்கம் 168.3 பில்லியன் டாலராக இருந்தது; இது 29 சதவீத உயர்வாகும். ஆயினும், அதன் கட்டற்ற பணப்புழக்கம் எதிர்மறையாக 42.4 பில்லியன் டாலராக இருந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக, மெட்டா எதிர்மறையான கட்டற்ற பணப்புழக்கத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டுக்கான மெட்டாவின் மூலதனச் செலவின மதிப்பீடு 135 முதல் 145 பில்லியன் டாலராகும்; 2025இல் அது 72 பில்லியன் டாலராக இருந்தது.
இந்தத் தொகைகளை நிறுவனங்கள் தங்களது வருவாய்களிலிருந்து நிதியளிக்க முடியாது. இந்த உள்கட்டமைப்புக் கட்டுமானத்தில் இப்போது கொட்டப்படும் மூலதனத்தின் பெரும் பகுதி ஒருபோதும் மீட்கப்படப் போவதில்லை. சந்தைகளில் இது எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. சுமார் 9 பில்லியன் டாலர் கட்டற்ற பணப்புழக்கப் பற்றாக்குறையை வெளிப்படுத்திய பின்னர், ஆல்பபெட் ஒரே நாளில் 482 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்தது; இதுவரை பதிவான இத்தகைய இழப்புகளில் இது இரண்டாவது பெரியதாகும். வெள்ளிக்கிழமை நாஸ்டாக் 2.86 சதவீதம் வீழ்ந்தது; இன்டெல் 28.6 சதவீதம் சரிந்தது; குறைக்கடத்திக் குறியீடு 7.2 சதவீதம் வீழ்ந்து, அந்த மாதத்தில் அதன் மொத்த இழப்பு 15 சதவீதத்தைத் தாண்டியது.
இது முன்னெப்போதும் இல்லாத சந்தை மதிப்பீட்டு மட்டத்தின் மீது நிகழ்கிறது. S&P 500 குறியீட்டில் தொழில்நுட்பத் துறையின் பங்கு இப்போது 39.3 சதவீதமாக உள்ளது. மிகப் பெரிய 15 நிறுவனங்கள் அந்தக் குறியீட்டின் சந்தை மதிப்பில் சாதனை அளவான 46.7 சதவீதப் பங்கை வகிக்கின்றன; டாட்-காம் குமிழியின் உச்சத்தில் இந்த விகிதம் 27.2 சதவீதமாக இருந்தது. மிகப் பெரிய ஐந்து நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மூலதன மதிப்பு, அடிமட்டத்திலுள்ள 434 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மதிப்புக்குச் சமமாகும். மொத்தச் சந்தை மூலதன மதிப்புக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (GDP) இடையிலான விகிதம் செப்டம்பர் இறுதியில் 243 சதவீதமாக இருந்தது; 2000 மார்ச்சில் இது 175 சதவீதமாக இருந்தது. 2000இல் S&P நிறுவனங்களில் 15 சதவீதம் தங்கள் வருவாயின் 10 மடங்குக்கும் அதிகமான சந்தை மதிப்பில் வர்த்தகமாயின; இன்று 40 சதவீதம் அவ்வாறு வர்த்தகமாகின்றன. பங்கு வாங்குவதற்கான கடன் (margin debt) ஏறத்தாழ 1.5 டிரில்லியன் டாலராக உள்ளது. தேசியக் கடன் 40 டிரில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது; 10 ஆண்டுக் கருவூலப் பத்திர வருவாய் விகிதம் 4.9 சதவீதத்தை நெருங்கியுள்ளது; வட்டி விகிதங்களை மேலும் உயர்த்துவது குறித்துப் பெடரல் ரிசர்வ் ஆலோசித்து வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்கர்களில் மிகப் பெரும் செல்வந்தர்களான 1 சதவீதத்தின் பத்தில் ஒரு பங்கினர் இப்போது ஒட்டுமொத்தக் குடும்பச் செல்வத்தில் சாதனை அளவான 15 சதவீதத்தைக் கொண்டுள்ளனர். கீழ்ப் பாதியினர் வைத்திருப்பதோ வெறும் 2 சதவீதம்தான். 2022க்கும் 2025க்கும் இடையில், வருமானப் பங்கீட்டில் உச்சத்திலுள்ள 10 சதவீதக் குடும்பங்களின் உண்மை மதிப்பிலான இடைநிலைச் செல்வம் 31 சதவீதம் உயர்ந்ததாகவும், அதேவேளையில் அடித்தளத்திலுள்ள 20 சதவீதக் குடும்பங்களின் இடைநிலைச் செல்வம் 6 சதவீதம் குறைந்ததாகவும் பெடரல் ரிசர்வே நடத்தும் நுகர்வோர் நிதி ஆய்வு (Survey of Consumer Finances) காட்டுகிறது.
எந்த வேட்பாளரும் விவாதிக்காத பொருளாதார யதார்த்தம் இதுவே. ஜனவரியில் காங்கிரஸ் எந்தக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நிதியியல் தன்னலக்குழுவுக்கான பிணையெடுப்பு இருகட்சி ஒத்துழைப்புடனேயே நடைபெறும்; அதற்கான விலை தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையின் இழப்பிலேயே செலுத்தப்படும்.
II. செயற்கை நுண்ணறிவு: தயாரிக்கப்பட்டு வரும் சமூகப் பேரழிவு
AI குமிழியின் சரிவு, டிரில்லியன் கணக்கான டாலர் ஏட்டளவிலான மதிப்புகளையும் மில்லியன் கணக்கான மக்களின் சேமிப்புகளையும் அழித்துவிடும். ஆனால் இதை வெறும் நிதி நிகழ்வாகக் கருதுவது கடும் தவறாகும். இந்தத் தொழில்நுட்பம் என்ன, அதைக் கொண்டு என்ன செய்யப்படுகிறது, அது யாருடைய கைகளில் உள்ளது என்பதே இதைவிட அடிப்படையான கேள்வியாகும்.
இந்த விஷயத்தைப் பெருமளவிலான மர்மப்படுத்தல் சூழ்ந்துள்ளது. முதலாவதாக, “செயற்கை நுண்ணறிவு” என்ற சொல் இந்தத் தொழில்நுட்பத்தின் இயல்பையும் அது உருவாக்குவதையும் திரித்துக் காட்டுகிறது. இது, பிளாஸ்டிக் பூக்கள், போலி நகைகள், முக அழகு அறுவைச் சிகிச்சைகள், பதிவு செய்யப்பட்ட சிரிப்பொலி, இன்னும் சொல்வதானால் பெர்னி சாண்டர்ஸ், ஒகாசியோ-கோர்ட்டெஸ், சோஹ்ரான் மம்தானி ஆகியோரின் போலிச் சோசலிசம் ஆகியவற்றைப் போல “செயற்கையானது” அல்ல.
இது மனித அறிவுசார் உழைப்பின் விஞ்ஞானபூர்வமான மறுஉருவாக்கமும் விரிவாக்கமும் ஆகும். மனிதகுலத்தின் திரட்டப்பட்ட அறிவைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது; தலைமுறைகளின் கூட்டு உழைப்பால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு எழுத்துப் படைப்பும், ஒவ்வொரு படமும், ஒவ்வொரு விஞ்ஞானக் கட்டுரையும், கணினி நிரலின் ஒவ்வொரு வரியும் அந்த அறிவில் அடங்கும். AI தீர்த்துள்ள கணிதச் சிக்கல்களும், AI-இன் பயன்பாட்டால் உருவாக்கப்பட்ட மருந்துகள் மூலம் வாழ்நாளில் சேர்க்கப்பட்டுள்ள ஆண்டுகளும் செயற்கையானவை அல்ல.
மார்க்ஸ், “குருண்ட்ரிஸ்ஸே” (Grundrisse) நூலில், “பொது அறிவாற்றல்” என்று தான் அழைத்த ஒன்று உருவாகும் என்பதை முன்கூட்டியே கண்டார்; அதாவது, உற்பத்திக் கருவிகளில் பொருளுருவம் பெற்ற, சமூகத்தின் திரட்டப்பட்ட விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவு. இப்போது ஒன்றிணைக்கப்பட்டிருப்பது அதுவே; அது ஒரு சில பெருநிறுவனங்களின் தனிச் சொத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதகுலத்தின் உற்பத்தித் திறனின் வரலாற்றில் மிக முக்கியமான வளர்ச்சிகளில் AI ஒன்றாகும். முதலாளித்துவத்தின் கீழ் ஒடுக்குமுறையின் சாதனமாக இருக்கும் தொழில்நுட்பம், சோசலிசத்தின் கீழ் மனிதகுலத்தை உழைப்புச் சுமையிலிருந்து விடுவிக்கும் சாதனமாக மாறுகிறது என்று ட்ரொட்ஸ்கி 1926இல் குறிப்பிட்டார். AI எழுப்பும் கேள்வி, அது இருக்க வேண்டுமா என்பதல்ல. அந்தக் கேள்வி அதன் கண்டுபிடிப்பாலும் வளர்ச்சியாலும் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது. அதன் உரிமை யாரிடம் உள்ளது, அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள், அதன் விளைவுகளை யார் சுமக்கிறார்கள் என்பதே கேள்வி.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் அமெரிக்காவில் ஏறத்தாழ 400,000 வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன; இவற்றுக்கு வேலையளிப்போர் சுட்டிக்காட்டிய முதன்மைக் காரணம் AI ஆகும். பல தசாப்த கால விஞ்ஞான முன்னேற்றத்தை ஆண்டுகளுக்குள் சுருக்கக்கூடிய இந்தத் தொழில்நுட்பம், அதற்கு மாறாக, வேலைவாய்ப்புகளை ஒழிக்கவும், வேலையில் எஞ்சியிருப்போரின் சுரண்டலைத் தீவிரப்படுத்தவும், அவர்கள் வேலை செய்யும்போது அவர்களைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொழில்நுட்பம் வேறு எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் மறக்கக்கூடாது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் முதல் 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 1,000 இலக்குகளைத் தாக்குவதற்குப் பலன்டிர் (Palantir) நிறுவனத்தின் மேவன் (Maven) அமைப்பு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோய்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்தக்கூடும் என்று அதன் ஊக்குவிப்பாளர்கள் கூறும் அதே தொழில்நுட்பம்தான், இந்த நொடியில் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் ஒரு நாட்டை அழிப்பதற்கான இலக்குப் பட்டியல்களைத் தயாரித்து வருகிறது. மேற்கு உலகின் மூலதனத்தை விழுங்கி வரும் தரவு மையங்கள், வணிகத்தின் உள்கட்டமைப்பாக இருப்பதைப் போலவே போரின் உள்கட்டமைப்பாகவும் உள்ளன.
இந்த நெருக்கடிக்குச் சீர்திருத்தவாதத் தீர்வு எதுவும் இல்லை. AI மீது விதிக்கப்படும் வரி, எதை உற்பத்தி செய்வது என்பதை யார் தீர்மானிக்கிறார்கள், யார் வேலையிலிருந்து தூக்கி வீசப்படுகிறார்கள் என்பதை மாற்றுவதில்லை. செனட்டர் சாண்டர்ஸ் ஒரு “AI இறையாண்மைச் செல்வ நிதியத்தை” முன்மொழிகிறார்; அதன்படி, பெருநிறுவனங்களில் அரசாங்கம் பங்குகளைப் பெறும், ஆனால் அந்தப் பெருநிறுவனங்கள் தனியார் உடைமையாகவும், இலாப நோக்கில் இயங்குபவையாகவும், தொழில்நுட்பத்தின் மீதான கட்டுப்பாட்டைத் தம் கையில் வைத்திருப்பவையாகவுமே தொடரும்; தொழிலாளர்களுக்கு எதுவும் சொந்தமாக இருக்காது, அவர்கள் எதையும் தீர்மானிக்கவும் மாட்டார்கள். உலகளாவிய அடிப்படை வருமானம் ஒரு தீர்வு அல்ல; மாறாக, அது நிரந்தரப் பாரிய வேலையின்மையை நிர்வகிக்கும் ஒரு வழிமுறையே; அதாவது, தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்கிய அதே அரசு, அவ்வாறு வேலையற்றவர்களாக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் ஓர் உதவித்தொகை. இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றும், ஒழிக்கப்பட வேண்டிய அந்த ஒரே அமைப்பை நிரந்தரமானதாக ஏற்றுக்கொண்டே முன்வைக்கப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தின் உரிமை யாரிடம் உள்ளது, அதை யார் வழிநடத்துகிறார்கள் என்ற கேள்வியைச் சட்டமியற்றலாலோ, ஒழுங்குமுறைகளாலோ, வரிவிதிப்பாலோ தீர்க்க முடியாது. அது, எந்த வர்க்கம் அரசியல் அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கிறது என்ற கேள்வியாகும். தொழில்நுட்ப ஏகபோகங்களின் சொத்துக்களைக் கைப்பற்றி அவற்றைத் தனியார் உடைமையிலிருந்து அகற்றுவது என்பது, அவற்றைப் பொதுப் பயன்பாட்டு நிறுவனங்களாக மாற்றுவதையும், உற்பத்தித்திறனில் கிடைக்கும் ஆதாயங்களை ஊதிய இழப்பின்றிக் குறைக்கப்பட்ட வேலை வாரமாக மாற்றுவதையும், இந்த மகத்தான உற்பத்தி சக்திகளை ஜனநாயக ரீதியாகத் திட்டமிடப்பட்ட ஓர் உலகப் பொருளாதாரத்திற்குக் கீழ்ப்படுத்துவதையும் குறிக்கிறது. அந்த ஏகபோகங்களால் நிதியளிக்கப்படும் ஒரு காங்கிரஸால் இதை நிறைவேற்ற முடியாது; தனது இராணுவ, உளவு முகமைகளே அந்த ஏகபோகங்களின் மிகப் பெரிய வாடிக்கையாளர்களாக இருக்கும் ஒரு முதலாளித்துவ அரசாலும் இதை நிறைவேற்ற முடியாது. ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பை முறியடித்து, அரசு அதிகாரத்தைத் தன் கையில் கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும். திட்டவட்டமாகச் சொன்னால், AI எழுப்பும் பிரச்சினை சோசலிசப் புரட்சி என்ற பிரச்சினையே ஆகும்.
தரவு மையங்கள் போரின் உள்கட்டமைப்பாகவும் உள்ளன. இவ்விரண்டையும் உருவாக்குவது ஒரே நெருக்கடிதான். உண்மையான மதிப்பை உற்பத்தி செய்வதில் இனியும் இலாபகரமான முதலீட்டு வாய்ப்பைக் கண்டறிய முடியாத மூலதனம் ஊகவணிகத்திற்குள் தூக்கி வீசப்படுகிறது; தனது பொருளாதாரச் சரிவிலிருந்து பொருளாதார வழிமுறைகளால் மீள முடியாத ஆளும் வர்க்கம் இராணுவ பலத்தை நாடுகிறது. ஈரானுக்கு எதிரான போர், அந்தச் செயல்முறையின் போர்முனைகளில் ஒன்று மட்டுமே.
அந்தப் போர், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ-உக்ரேன் போரின் தீவிரப்படுத்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது; அந்த நேட்டோ-உக்ரேன் போரே இப்போது முன்பைவிட மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்திற்குள் நுழைந்து வருகிறது. இந்த மோதல் வெப்ப அணுக்கருப் போராகத் தீவிரமடையும் சாத்தியம் மிக அதிகமாக உள்ளது. நேட்டோ கலினின்கிராட்டைத் தனிமைப்படுத்த முனைந்தால், “அணு ஆயுதங்கள் உட்பட, தன்வசமுள்ள படைகளையும் திறன்களையும் கொண்ட முழு ஆயுதக் களஞ்சியத்தையும்” பயன்படுத்தப் போவதாகச் செப்டம்பர் 30 அன்று ரஷ்யா எச்சரித்தது. அக்டோபர் 18 அன்று, உக்ரேன் ரஷ்யா மீது ஆயிரத்துக்கும் அதிகமான ட்ரோன்களால் (ஆளில்லா விமானங்கள்) தாக்குதல் நடத்தியது. ஐரோப்பிய சக்திகளும் 1930களுக்குப் பிறகு காணாத அளவில் மீள் ஆயுதமயமாக்கலில் ஈடுபட்டு வருகின்றன; போரைத் தீவிரப்படுத்துவதற்கான அழுத்தம் வாஷிங்டனிலிருந்து வருவதைப் போலவே பேர்லின், லண்டன், பாரிஸிலிருந்தும் வருகிறது. இவை தனித்தனி மோதல்கள் அல்ல. அவை, ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையே உலகை வன்முறையாக மறுபங்கீடு செய்யும் ஒரே செயல்முறையின் போர்முனைகள்; நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) புற்றுநோய் போலப் பரவி வரும் உலகப் போர் என்று வகைப்படுத்தியதன் உள்ளடக்கம் இந்த மறுபங்கீடே ஆகும்.
III. தொழிலாளர் வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் இயக்கம்
ஆனால் இந்த தீவிரமடைந்து வரும் நெருக்கடியின் செயல்பாட்டில் மற்றொரு முனையும் உள்ளது. கடந்த ஏழு வாரங்களாக ஐரோப்பா முழுவதும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் இயக்கம் ஒன்று வெடித்துள்ளதோடு, அது இப்போது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது.
பிரான்சில் நாம் 1968 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மிகக் கடுமையான சமூக எழுச்சியின் ஏறக்குறைய ஏழாவது வாரத்தில் இருக்கிறோம். இந்த எழுச்சி பாரிஸின் தொழிலாளர் வர்க்கம் வசிக்கும் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியான கிரெத்தேயில் உள்ள செயிண்ட்-எக்சுபெரி உயர்நிலைப் பள்ளியில், கடந்த செப்டம்பர் 17 அன்று தொடங்கியது; அங்கு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மாணவர்கள் பள்ளியை முடக்கினர். இதனால் இரண்டு வாரங்களுக்குள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் பாதிக்கப்பட்டன மற்றும் 200 க்கும் மேற்பட்டவை முற்றுகையிடப்பட்டன. அக்டோபர் 17 அன்று, இடம்பெற்ற போராட்டத்தில் 550,000 போராட்டக்காரர்கள் கலந்துகொண்டதாகக் உள்துறை அமைச்சகம் கணக்கிட்டது, அதில் 110,000 பேர் பாரிஸில் கலந்துகொண்டனர்; அமைப்பாளர்களோ இந்த எண்ணிக்கையை 800,000 எனக் குறிப்பிடுகின்றனர். அக்டோபர் 24 அன்று, தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளைத் தவிர மற்ற அனைத்துப் பேரணிகளுக்கும் அரசாங்கம் தடை விதித்ததோடு, பொதுக் கட்டடங்களைப் பாதுகாக்கும் பணியில் இராணுவத்தினர்களை ஈடுபடுத்தி 70,000 பொலிசாரையும் துணை இராணுவப் பொலிசாரையும் (gendarmes) களமிறக்கிய பின்னரும் கூட, உள்துறை அமைச்சகம் 410,000 போராட்டக்காரர்கள் கலந்துகொண்டதாகக் கணக்கிட்டுள்ளது.
பல தசாப்தங்களாகப் பிரான்சில் கண்டிராத அளவுக்கு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 10,000-த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லென்ஸ் நகரில் 15 வயது சிறுவன் ஒருவன் பொலிசாரின் எறிகுண்டினால் தனது ஒரு கையை இழந்தான். டூர்ஸ் நகரில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது கண்ணின் பார்வையை இழந்தான். பாரிஸ், மார்செய் மற்றும் லியோன் ஆகிய நகரங்களின் சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. “குடியரசை வீழ்த்த” முற்படுவதாகக் கூறி “தீவிர-இடதுசாரிகளின்” “கலகச் செயல்களை” கண்டித்துள்ள மக்ரோன், மேலும் “சட்டவிரோதமான” ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
ஐரோப்பியக் கண்டத்தில் நடந்து வரும் ஒரு பரந்த அரசியல் செயற்பாட்டின் மிக முன்னேறிய வெளிப்பாடாகப் பிரான்ஸ் திகழ்கிறது. இத்தாலியில், அக்டோபர் 16 அன்று நடைபெற்ற “மெலோனி வேண்டாம் தினத்தில்” இடம்பெற்ற மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து மிலான், துரின் மற்றும் போலோக்னா ஆகிய நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. மெலோனி அரசாங்கம் மிலானுக்குத் படைகளை அனுப்பியுள்ளதுடன், “பொதுப் போராட்டங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு” இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அதை அவர்கள் மறுத்து நிரூபிக்கும் வரை அவர்களே குற்றவாளிகள் எனக் கருதும் சட்டமும், அவர்களின் பெற்றோருக்கு அபராதங்களையும் விதிக்கவும் ஆணையைப் பிறப்பித்துள்ளது.
ஸ்பெயினில், மாட்ரிட் நகரில் 87 வயது வாடகைதாரர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வீட்டு உரிமைக்கான இயக்கம் வெடித்தது. நவம்பர் 11 அன்று வீட்டு உரிமை தொடர்பான பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிரேக்கத்தில், அக்டோபர் 13 அன்று மாணவர்கள் முதன்முதலில் சிந்தாக்மா சதுக்கத்தில் முகாமிட்டனர்.
போர்த்துகலில், லிஸ்பேன் மற்றும் போர்டோ நகர்களில் அமைக்கப்பட்டிருந்த வீட்டுரிமை முகாம்களைக் பொலிசார் அகற்றினர். பெல்ஜியத்தில், நவம்பர் 23 ஆம் தேதிக்காகத் தொழிற்சங்கங்கள் தேசிய அளவில் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன. அயர்லாந்தில், அக்டோபர் 14 அன்று இலட்சக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரியாவில், பல்கலைக்கழகங்களுக்கு 2 பில்லியன் யூரோ பற்றாக்குறையை ஏற்படுத்தும் நிதியுதவி ஒப்பந்தத்திற்கு எதிராக அக்டோபர் 22 அன்று வியன்னாவில் சுமார் 50,000 பேர் பேரணியாகச் சென்றனர். செர்பியாவில், ஜனாதிபதி வுசிக்கை மாணவர் கூட்டமைப்பு தோற்கடித்த தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 22 அன்று பெல்கிரேடில் 150,000 பேர் பேரணி நடத்தினர்.
இந்த இயக்கம் இப்போது ஜேர்மனிக்கும் வந்து சேர்ந்துள்ளது. வாழ்க்கைச் செலவினம் மற்றும் பள்ளிகளின் நிலைமைக்கு எதிராக, “Gen Z தலைமுறைதான் ஆதிக்கம் செலுத்துகிறது” என்று அழைத்துக் கொள்ளும் இளைஞர்களின் முன்னெடுப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், பேர்லின், பிராங்பேர்ட், கொலோன், ஹம்பேர்க், மியூனிக் மற்றும் பிற நகரங்களில் அமைப்பாளர்களின் கணக்கின்படி சுமார் 120,000 இளைஞர்கள் அணிதிரண்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ளக் பொலிசார் நீர்த்தாரை பீரங்கிகளைப் பயன்படுத்தினர். இந்த ஆண்டு தொடக்கத்தில், புதிய இராணுவ சேவைச் சட்டத்திற்கு எதிராக நடந்த பள்ளி வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து இவை நடைபெறுகின்றன. அச்சட்டத்தின்படி, ஜெர்மனியில் 18 வயதை எட்டிய ஒவ்வொருவருக்கும் இப்போது இராணுவ சேவை வினாத்தாள் வழங்கப்படுகிறது. இது இளைஞர்களுக்குக் கட்டாயமாகும்.
ஆனால், மிக முக்கியமான வளர்ச்சி மூன்று நாட்களுக்கு முன்புதான் நிகழ்ந்தது, இது இந்த இயக்கத்தின் தன்மையில் ஒரு மாற்றத்தை முன்னறிவிக்கிறது. அக்டோபர் 30, வெள்ளிக்கிழமை அன்று, ஐந்து கண்டங்களில் உள்ள 22 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 113 துறைமுகங்களில் துறைமுக மற்றும் கப்பல்துறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்; “துறைமுகத் தொழிலாளர்கள் போருக்காக வேலை செய்ய மாட்டார்கள்” என்ற முழக்கத்தின் கீழ் அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுகங்கள் ஆயுதங்கள், வெடிமருந்துகள், இராணுவ உபகரணங்கள் அல்லது படையினர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படக்கூடாது என்று அவர்களின் கூட்டறிக்கை பிரகடனப்படுத்தியது.
இத்தாலியில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த ஊதியங்கள் மற்றும் யுத்தப் பொருளாதாரத்திற்கு எதிராக, தொழிற்சங்கக் கூட்டமைப்பான யு.எஸ்.பி (USB) அழைப்பு விடுத்த 24 மணி நேரப் பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாகத் துறைமுகத் தொழிலாளர்களின் வெளிநடப்பு அமைந்தது. அக்டோபர் 27 அன்று போக்குவரத்து அமைச்சர் சல்வினி, அனைத்து புனிதர்கள் தினத்தை சுட்டிக்காட்டி, வேலைநிறுத்தங்களை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார். இதனை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு நாளொன்றுக்கு 500 முதல் 1,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த உத்தரவைச் சட்டவிரோதம் என்று அறிவித்த யு.எஸ்.பி (USB) சங்கம், வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தது.
இந்த தொழிலாளர்கள் போருக்கான தளவாடங்கள் விநியோகிக்கப்படும் முக்கியப் பாதைகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். ஒரே நாளில் அவர்கள் அந்தப் பாதைகளை மூடிவிட்டனர். போர் இயந்திரத்தை நிறுத்தும் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் திறன், ஐந்து கண்டங்களில், ஒரே நாளில், ஒருவரையொருவர் சந்தித்திராத தொழிலாளர்களால் நடைமுறையில் காட்டப்பட்டது.
துறைமுகத் தொழிலாளர்கள் எடுத்த நடவடிக்கை தொழிலாளர்களின் சக்தியின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஆனால் அரசியல் தலைமை மற்றும் வேலைத்திட்டம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. போருக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான போராட்டத்திற்குத் தொழிலாளர்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் தலைமை அமைப்புகளோ, போரை நடத்தி வரும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கும் அரசாங்கங்களுக்கே விசுவாசமாக இருக்கின்றன.
பாரிய மக்கள் எதிர்ப்பின் எழுச்சிக்கு அரசாங்கங்களின் அதிகாரப்பூர்வமான பதில் எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது. மக்ரோன் “தீவிர-இடதுகளை” குற்றம் சாட்டுகிறார்; ட்ரம்ப் குடியேற்றத்தைக் குற்றம் சாட்டுகிறார். மெலோனி “குண்டர்களாக” குற்றம் சாட்டுகிறார்; மெர்ஸின் உள்துறை அமைச்சர் இடதுகளையும் புலம்பெயர்ந்தோரையும் குற்றம் சாட்டுகிறார். ஐரோப்பிய அரசாங்கங்கள் ஒரே நேரத்தில் தங்களின் இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதமாக உயர்த்தி வருவது குறித்தும், தங்கள் கடன்களுக்குச் சாதனை அளவிலான வட்டியைக் செலுத்துவது குறித்தும், பள்ளிகள், ஓய்வூதியங்கள், சுகாதாரம் மற்றும் வீடமைப்புத் திட்டங்களுக்கான செலவினங்களைக் வெட்டிச் சுருக்குவது குறித்தும்—அல்லது பணவீக்கத்தை ஏற்படுத்தும் எரிசக்தி நெருக்கடியானது அவர்கள் ஆதரிக்கும் ஈரானுக்கு எதிரான போரின் நேரடி விளைவு என்பது குறித்தும் அவர்களில் ஒருவர்கூடக் குறிப்பிடவில்லை. பன்னிரண்டு நாடுகளில், ஒரே மாதிரியான குறைகளுக்காகவும், ஒரே மாதிரியான நடவடிக்கைகளை எதிர்த்தும் நிகழும் இந்த போராட்ட இயக்கங்கள் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன என்பது, இவற்றை தேசிய அரசியலின் அடிப்படையில் விளக்குவதை இயலாதாக்குகிறது. இந்த எழுச்சியை, உலக அளவில் செயல்படும் புறநிலை பொருளாதார சக்திகளின் வெளிப்பாடாகவே புரிந்துகொள்ள வேண்டும்.
IV. புறநிலை அடித்தளங்கள்
சர்வதேச அளவில் வெடித்துள்ள வெகுஜனப் போராட்டங்களுக்கு அடிப்படையாக இருப்பது, உற்பத்திச் செயல்முறை முழுவதுமே உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை அமைப்பாக உருமாறியிருப்பதாகும். உலகப் பொருளாதாரத்தின் புவியியலைப் பற்றிய முக்கியமான கல்விசார் ஆய்வு நூலாக விளங்கும் குளோபல் ஷிஃப்ட் நூலின் ஆசிரியரான பீட்டர் டிக்கன், பன்னாட்டு நிறுவனங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு உற்பத்திச் சங்கிலி வலையமைப்பு உருவாகியுள்ளது என்பதை விளக்குகிறார். அதாவது, இந்த வலையமைப்பில், உலக வர்த்தகத்தின் பெரும் மற்றும் வளர்ந்து வரும் பங்கானது, ஒரே செயல்முறையின் பல்வேறு நிலைகளுக்கு இடையில் நகரும் கூறுகள் மற்றும் இடைநிலைப் பொருட்களைக் கொண்டதாக உள்ளன என்று அவர் நிரூபிக்கிறார்.
ஒவ்வொரு நாடும் தனக்குள்ளேயே ஒரு பொருளை முழுமையாகத் தயாரித்து. அதை தேசியப் பொருளாதாரங்களுக்கு இடையே செய்துவந்த வர்த்தக முறை, எல்லைகளைக் கடந்து உற்பத்தியை ஒழுங்கமைக்கும் முறையால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மிச்சிகனில் உருவாக்கப்பட்ட ஒரு வாகனத்தில், டச்சு லித்தோகிராபி இயந்திரங்களில் தைவானில் தயாரிக்கப்பட்ட மின்குறைக்கடத்திகள், சியுடாட் ஜுவாரெஸிலிருந்து பெறப்பட்ட வயரிங் ஹார்னஸ்கள், சீனாவில் சுத்திகரிக்கப்பட்ட அரிய கனிமங்கள், பெங்களூரில் எழுதப்பட்ட மென்பொருள், மற்றும் பிரேசில், ஆஸ்திரேலிய தாதுக்களிலிருந்து பெறப்பட்ட எஃகு ஆகியவை அடங்கியுள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட இடத்தின் அடையாளம் ஒரு புனைவாகிவிட்டது. குவாங்டாங், ஸ்டுட்கார்ட், சாவோ பாலோ மற்றும் டெட்ராய்ட் ஆகிய இடங்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒரே செயல்முறையின் வெவ்வேறு வேலை நிலையங்களில்தான் உழைக்கிறார்கள்.
இதன் விளைவாக, மனித வரலாற்றிலேயே மிகப் பெரிய தொழிலாள வர்க்கம் உருவாகியுள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) மதிப்பீட்டின்படி, உலகத் தொழிலாளர் படை 1980க்குப் பிறகு ஏறத்தாழ இருமடங்காகி, சுமார் 3.7 பில்லியனை எட்டியுள்ளது. சீனா, இந்தியா, இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகியவற்றின் கிராமப்புறங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, உலகளாவிய உற்பத்தியின் சுழற்சிகளுக்குள் இழுக்கப்பட்டுள்ளனர். வரலாற்றிலேயே முதன்முறையாக, மனிதகுலத்தில் பெரும்பான்மையானோர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். ஒரு தலைமுறைக்கு முன்பு தொழிலாளர் வர்க்கத்திற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதப்பட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மென்பொருள் நிரலாளர்கள் போன்ற பணிப்பிரிவினரும், இன்று பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர்.
கடந்த நான்கு தசாப்தங்களாகத் தொழிலாள வர்க்கம் அடைந்துள்ள மகத்தான வளர்ச்சி, மார்க்சிய-எதிர்ப்பு சமூக மற்றும் அரசியல் கோட்பாடுகளின் மிக முக்கியமான வாதம் ஒன்றை உறுதியாக மறுக்கிறது. அதாவது, முதலாளித்துவச் சமூகத்தில் பாட்டாளி வர்க்கமே தீர்க்கமான புரட்சிகர சக்தியாகவும், இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பிற்கு “சவக்குழி தோண்டுபவர்களாகவும்” இருக்கிறார்கள் என்ற கருத்து, அரசியல் மூலோபாயத்தின் பார்வையில் தவறானது மற்றும் பொருத்தமற்றது என்று நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட வாதமே அது.
V. மார்க்சிச எதிர்ப்புக் கோட்பாட்டில் தொழிலாளி வர்க்கத்தை நிராகரித்தல்
பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்த மார்க்சிசக் கோட்பாட்டை நிராகரித்த முன்னாள் சோசலிஸ்டுகளில் மிகவும் முக்கியமானவர் பிரெஞ்சு அறிவுஜீவி ஆந்த்ரே கோர்ஸ் ஆவார். இவரது “பாட்டாளி வர்க்கத்துக்கு விடை” என்ற நூல் 1980இல் வெளிவந்ததுடன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பு புளூட்டோ பிரஸ் மூலம் “தொழிலாள வர்க்கத்துக்கு விடை” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. “முதலாளித்துவ வளர்ச்சியானது, ஒட்டுமொத்தத்தில் உற்பத்திச் சாதனங்களைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க முடியாததும், உடனடி நலன்கள் சோசலிசப் பகுத்தறிவுடன் ஒத்துப்போகாததுமான ஒரு தொழிலாளி வர்க்கத்தையே உருவாக்கியுள்ளது” என்று அந்நூல் பிரகடனப்படுத்தியது.
பின்னர் எர்னெஸ்டோ லாக்லாவ், ஷன்டால் மூஃப் ஆகியோர், சோசலிசமற்ற “இடது-மக்கள்வாதத்திற்கான” தத்துவார்த்த கட்டமைப்பை வழங்கினர். அது குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-எதிர்ப்பு அமைப்புகள் பலவற்றின் மீது செல்வாக்குச் செலுத்தியது. அவற்றுள், இவர்களின் வெளிப்படையான சீடர்களை நிறுவனர்களாகக் கொண்ட பொடேமோஸும் (Podemos) சிரிசாவும் (Syriza) அடங்கும். இவர்களது முதன்மைப் படைப்பான “மேலாதிக்கமும் சோசலிச மூலோபாயமும்” என்ற நூல், 1950களில் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக்கொண்ட பப்லோவாத இயக்கத்தின் பதிப்பகமான வெர்சோவால் 1985இல் வெளியிடப்பட்டது. நெருக்கடியில் இருப்பது “தொழிலாளி வர்க்கத்தின் இருப்புசார் மையத்தன்மையையும், ஒரு வகை சமூகத்திலிருந்து இன்னொரு வகை சமூகத்திற்கு மாறும் தொடக்கப் புள்ளியாக பெரிய ‘R’ எழுத்துடன் கூடிய புரட்சியின் பங்கையும் அடிப்படையாகக் கொண்ட ஒட்டுமொத்த சோசலிசக் கருத்தாக்கமே” என்பதை அவர்கள் தங்களது முன்னுரையில் அறிவித்தார்கள். தாங்கள் எவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகத்தையும் விட்டுவைக்காத அவர்கள், “இந்தக் கட்டத்தில், நாம் இப்போது மார்க்சிசத்திற்குப் பிந்தைய ஒரு களத்தில் நிலைபெற்றிருக்கிறோம் என்பதை மிகவும் தெளிவாகக் கூற வேண்டும். மார்க்சிசத்தால் வகுக்கப்பட்ட அகநிலை மற்றும் வர்க்கங்கள் குறித்த கருத்தாக்கத்தையோ, முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றுப் போக்கு பற்றிய அதன் பார்வையையோ இனிமேலும் நிலைநிறுத்துவது சாத்தியமில்லை” என்று குறிப்பிடுகின்றனர்.
தொழிலாள வர்க்கத்தின் மீதான இழிவை வெளிப்படுத்தும் இந்த அவநம்பிக்கைவாதப் பிரகடனத்தில்தான், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பு “வர்க்கக் குறுக்கல்வாதம்” என்று அழைப்பதை—அதாவது, சோசலிசத்தின் முன்னோக்கிலும் வேலைத்திட்டத்திலும் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள மையத்தன்மையை கண்டிப்பதற்கான தத்துவார்த்த வேர்கள் அடங்கியுள்ளன. இந்த நூல், மார்க்சிச எதிர்ப்பு வன்மமும் பகுத்தறிவற்ற உளறல்களும் நிறைந்த ஒரு பெட்டகமாகும். மார்க்சிசத்தால் தான் முற்றிலும் சோர்வடைந்துவிட்டதாகவும், இனி அதைச் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்றும், Network திரைப்படத்தில் வரும் மனநிலை பிறழ்ந்த செய்தி வாசிப்பாளரைப் போல, ஒரு விரக்தியான கல்வியாளர் மேடையில் நின்று கூச்சலிடுவதைப் போன்ற சித்திரத்தையே இந்நூலைப் படிப்பவர்கள் உணர்வார்கள்.
ஆனால், இந்நூலில் விதிவிலக்கான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாக்கியம் உள்ளது. அதுவே DSA -வின் அரசியலை வரையறுக்கும் அறிவுரீதியாகத் திவாலான நடைமுறைவாதத்திற்கான திறவுகோலை வழங்குகிறது. லாக்லாவும் மூஃபும்இவ்வாறு எழுதினார்கள்: “‘மூலங்களுக்கு’த் திரும்பிச் செல்லும் எந்தவொரு தூண்டுதலையும் நாம் தவிர்ப்போம்.” இதன் மூலம் அவர்கள் குறிப்பது என்னவென்றால்: வரலாற்றையும், மார்க்சிசம் உருவானதற்கு அடிப்படையாக இருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டங்களை, அதாவது தத்துவார்த்த கருத்துமுதல்வாதம், கற்பனவாத சோசலிசம், குட்டி-பூர்ஷ்வா தீவிரவாதம் மற்றும் அராஜகவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும், பூர்ஷ்வா ஜனநாயகத்தின் தந்திரங்கள் மற்றும் மயக்க மருந்துகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட போராட்டங்களை மறந்துவிடுங்கள் என்பதே ஆகும். மேலும், சீர்திருத்தவாதம் மற்றும் சந்தர்ப்பவாதம் குறித்த மார்க்சிச விமர்சனத்தை உள்வாங்க வேண்டிய அவசியமில்லை; அரசு என்பது ஆயுதமேந்திய மனிதர்களின் அமைப்பாகவும், வர்க்க ஆட்சியின் அடிப்படையான கருவியாகவும் உள்ளது என்ற மார்க்சியக் கோட்பாட்டையும் புறக்கணிக்கலாம் என்பதே அவர்களின் கருத்தாகும்.
VI. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) அரசியல்
2026 ஜூலையில் DSA, “தொழிலாளர்கள் அதிகம் பெறத் தகுதியானவர்கள்!” என்ற தலைப்பில் தனது திருத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தை வெளியிட்டது. இந்தத் தலைப்பே அதன் ஒட்டுமொத்த அரசியலாக உள்ளது. தொழிலாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்வதில் ஒரு பெரிய பங்கைப் பெற வேண்டும் என்று, குறிப்பாக யாரையும் நோக்கி இல்லாமல் வைக்கப்படும் ஒரு மன்றாட்டாகவே இது உள்ளது. 1865-ஆம் ஆண்டில், ஓவனிசவாதியான (Owenite) ஜேன் வெஸ்டனுக்குப் பதிலளிக்கும் விதமாக மார்க்ஸ் முதலாம் அகிலத்தின் பொதுக்குழுவிடம், தொழிலாள வர்க்கம் “நியாயமான ஒரு நாள் வேலைக்கு நியாயமான ஒரு நாள் கூலி” என்ற பழமைவாத முழக்கத்தைக் கைவிட்டு, “கூலி முறையை ஒழித்தல்” என்ற புரட்சிகர முழக்கத்தைத் தனது கொடியில் பொறிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அந்தப் பழமைவாதக் கொள்கையின் மீதே சாமுவேல் கொம்பர்ஸ் (Samuel Gompers) அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பைக் (American Federation of Labor) கட்டினார். ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு, DSA அதைத் தனது வேலைத்திட்டத்தின் பெயராகவே ஏற்றுக்கொண்டுள்ளது.
“தொழிலாளர்கள் அதிகம் பெறத் தகுதியானவர்கள்!” என்பது கூலி உறவின் தொடர்ச்சியான இருப்பை முன்கூட்டியே அனுமானித்து, அதன் நிபந்தனைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கோருகிறது. சுரண்டல் என்ற சொல்லும், இலாபம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் ஊதியமற்ற உழைப்பே என்ற உண்மையும், அதிலிருந்து உருவாகும் முடிவான கூலி அடிமைத்தனத்தை ஒழித்தல் என்பதும் இதில் காணாமல் போயுள்ளன. சோசலிசமானது, தகுதியானவர்களின் சார்பாக முன்வைக்கப்படும் ஒரு மனிதாபிமான முறையீடாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் ஓர் அழைப்புடன் தொடங்குகிறது: “முதலாளித்துவம் இல்லாத எதிர்காலத்தில் வேலையிலிருந்து ஒரு நாள் விடுமுறை எடுப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.” இதுவே இந்த ஆவணத்தின் வழிமுறையாக உள்ளது. இது முதலாளித்துவத்தைப் பகுப்பாய்வு செய்யவில்லை. மாறாக, அது இல்லாத நிலையைக் கற்பனை செய்து பார்க்கும்படி வாசகரிடம் கோருகிறது. அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி பற்றியோ, அமெரிக்க மேலாதிக்கத்தின் வீழ்ச்சி பற்றியோ, நிதி மூலதனம் மற்றும் இம்முறைமை எதன் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் கடன் மலை பற்றியோ, உலகச் சந்தைகளையும் வளங்களையும் பலப் பிரயோகத்தால் மறுபங்கீடு செய்வதற்கான உந்துதல் பற்றியோ இதில் எந்தவித விளக்கமும் இல்லை. ஒரு அமைப்புமுறையாக ஏகாதிபத்தியம் விளக்கப்படவில்லை; அந்தச் சொல்லே இதில் இடம்பெறவில்லை. வரைவுக் குழு தனது பணியைத் தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட போருக்கு இதில் எந்தவொரு கொள்கைப் பிரகடனமும் இடம்பெறவில்லை. 2026-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு சோசலிச வேலைத்திட்டம் அணு ஆயுதப் போரின் அபாயத்தைக் குறிப்பிடவில்லை என்றால், சமகால உலகின் நெருக்கடிக்கு எதிரான ஒரு எதிர்வினையாக அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
இதன் கட்டமைப்பு முழுவதுமாக தேசிய அளவிலேயே அமைந்துள்ளது. கோரிக்கைகள் அமெரிக்க அரசையே நோக்கியுள்ளன; அவற்றுக்கான நிதியாதாரங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளங்களே ஆகும்; அமெரிக்கத் தொழிலாளர்களின் உழைப்புடன் ஒரே உற்பத்திச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் சீனா, மெக்சிகோ, இந்தியா மற்றும் வியட்நாம் தொழிலாளர்கள் எங்குமே இடம்பெறவில்லை. இதில் சர்வதேசவாதம் குறித்த ஒரே ஒரு வாக்கியம் மட்டுமே இவ்வாறு கூறுகிறது: “உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் தங்கள் வாழ்க்கையை வாழத் தகுதியானவர்கள்.” போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரே சக்தியான சர்வதேசத் தொழிலாளி வர்க்கம் ஒரு அரசியல் சக்தியாக இதில் கருதப்படவில்லை.
“ஜனநாயகக் கட்சி சக்கரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது” (அதாவது, பொறுப்பற்றுச் செயலற்றுக் கிடக்கிறது) என்று இந்த வேலைத்திட்டம் குறை கூறுகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களைத் திட்டமிட்டு நடத்திய, 2008-இல் வங்கிகளைப் பிணையெடுத்துக் காப்பாற்றிய, உக்ரேன் போருக்கும் காஸாவின் அழிவிற்கும் ஆயுதங்களை வழங்கிய, மற்றும் 2022-இல் 1,15,000 இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்க (DSA உறுப்பினர்கள் உட்பட) தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த ஒரு கட்சி நிச்சயமாக உறங்கவில்லை. அது விழிப்புடன் இருந்து தனது வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அக்கட்சிக்குள் DSA தொடர்ந்து நீடித்திருப்பதை நியாயப்படுத்துவதற்காகவே இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. அங்குதான் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமர்ந்துள்ளனர், அங்குதான் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் நியூ யோர்க் மேயர் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தார். மேலும் 2028 ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான முதன்மைத் தேர்தலில் DSA ஆதரவு பெற்ற வேட்பாளருக்காக ஒரு ஆய்வுக் குழுவை அமைக்க அதன் 2025 மாநாடு வாக்களித்தது.
VII. DSA-வின் வர்க்க நிலை
போர் குறித்தோ, அதில் ஜனநாயகக் கட்சியின் பங்கு குறித்தோ, அல்லது அதிகாரத்தைப் பற்றிய கேள்வி குறித்தோ எந்தவொரு கொள்கைப் பிரகடனமும் இல்லாத ஒரு வேலைத்திட்டத்தை இதன் ஆசிரியர்கள் வரைந்துள்ளனர். இவ்வுரையை எழுதுவதற்குப் பெரிய அளவில் முயற்சி எடுக்கப்படவில்லை என்றும், ஏனெனில் இது “ஒரு தனித்த வேலைத்திட்டமாக இருப்பதை விட, பல அரசியல் பிரச்சாரங்களுடன் இணைந்து செல்லும் ஒரு துண்டுப் பிரசுரமாகவே உள்ளது” என்றும் இதன் ஆசிரியர்களில் ஒருவர் விளக்கமளித்துள்ளார். இவை, ஜனநாயகக் கட்சியின் இடதுசாரிப் பிரிவாகச் செயல்படுகின்ற மற்றும் புரட்சிகர சோசலிசத்திற்கு விரோதமான அனுபவமிக்க அரசியல் செயல்பாட்டாளர்களின் திட்டமிட்ட முடிவுகளாகும். இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே நிலவும் முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வுகளுக்கு ஒரு குறிப்பிட்ட சொல்லகராதியை வழங்குவதாகும். இதன் மூலம், அவர்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்சியான ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே தொடர்ந்து அவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஒரு சோசலிசத் வேலைத்திட்டம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியத்தைத் தடுப்பதே இதன் நோக்கம்—அதாவது, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பற்றியும், அந்த நெருக்கடியை எதிர்கொள்ள அவர்கள் மேற்கொள்ள வேண்டிய போராட்டத்தைப் பற்றியும் அவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்வதைத் தடுப்பதே அதன் நோக்கமாகும்.
DSA முன்வைக்கும் சோசலிசத்திற்கும், நடைமுறை அரசியல் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளிதான் மிகவும் கவனிக்கத்தக்கது. உலகின் மிகக் கொடூரமான ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாட்டில்—கடந்த மூன்று தசாப்தங்களில் மட்டும் இலட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த போர்களை நடத்திய, தற்போது 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் ஒரு நாட்டின் மின்சார மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகளை அழித்தொழிக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும், அமெரிக்காவிற்குள்ளேயே அமைதியான போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்கும் ஒரு ஆளும் வர்க்கத்தின் முன்னால்—முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எவ்வளவு ஆழமான மற்றும் விரிவான போராட்டம் தேவைப்படும் என்பது குறித்த சிறு குறிப்பைக் கூட DSA முன்வைப்பதில்லை. ஏகாதிபத்திய இராணுவவாதத்தையும் பாசிச காட்டுமிராண்டித்தனத்தையும், வெறும் சீர்திருத்தவாதக் குச்சியைக் கொண்டு தடுத்து நிறுத்திவிடலாம் என்று அது முன்மொழிகிறது.
இவற்றில் எதற்கும் மார்க்சிசத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. “புரட்சிகர வர்க்கப் போராட்டங்களின் அவசியங்களைச் சிறுசிறு தந்திரங்களாலோ பெரும் உணர்ச்சிப்பூர்வ வாய்ச் சவடால்களாலோ மறையச் செய்ய விரும்பும்” நடுத்தர வர்க்கப் போலி-தீவிரவாதத்தை கார்ல் மார்க்ஸ் வெகு காலத்திற்கு முன்பே ஏளனம் செய்தார். அரசியல் உள்ளடக்கமற்ற இந்தக் குழைவுக்கு எதிராக, புரட்சிகர சோசலிசம் என்பது “புரட்சியின் நிரந்தரத்தன்மை குறித்த பிரகடனமாகவும், வர்க்க வேறுபாடுகள் அனைத்தையும் பொதுவாக ஒழிப்பதற்கும், அவை சார்ந்துள்ள உற்பத்தி உறவுகள் அனைத்தையும் ஒழிப்பதற்கும், இந்த உற்பத்தி உறவுகளுக்குப் பொருந்தும் சமூக உறவுகள் அனைத்தையும் ஒழிப்பதற்கும், இந்தச் சமூக உறவுகளிலிருந்து எழும் அனைத்துக் கருத்துக்களையும் புரட்சிகரமாக்குவதற்கும் அவசியமான கடந்து செல்லும் புள்ளியாகப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க சர்வாதிகாரமாகவும் உள்ளது” என்று அவர் அறிவித்தார். [“பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள்” (The Class Struggles in France), தொகுப்பு நூல்கள், தொகுதி 10, பக்கங்கள் 126–27]
DSA-வின் கொள்கைகளை வழிநடத்தும் ஒரு திட்டவட்டமான சமூக முன்னோக்கு உள்ளது. ஜனநாயக நடுத்தர வர்க்கம் தொழிலாள வர்க்கத்திற்குச் செய்த காட்டிக்கொடுப்புக்குப் பின்னர், 1850இல் மார்க்ஸும் எங்கெல்ஸும் அதை அடையாளம் கண்டனர்:
புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தினருக்காக முழு சமூகத்தையும் மாற்றியமைக்க விரும்புவதற்கு மாறாக, ஜனநாயக குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினர், தற்போதுள்ள சமூகத்தைத் தங்களுக்கு இயன்றவரை சகித்துக் கொள்ளக்கூடியதாகவும் வசதியானதாகவும் மாற்றும் நோக்கில் சமூக நிலைமைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் பாடுபடுகின்றனர். [கம்யூனிஸ்ட் லீக்கிற்கான உரை (Address to the Communist League), 1850 மார்ச்]
இந்தப் பகுப்பாய்வை இன்றைய நிலைமைகளுக்குப் பொருத்தினால்: மார்க்ஸ் விவரித்த குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் அரசியல் வாரிசுகளான DSA, திருப்தியற்ற தங்கள் மேல்-நடுத்தர வர்க்க ஆதரவாளர் பிரிவுக்கு, சமூகத்தின் உச்சியிலுள்ள 10 சதவீதத்தினரின் செல்வத்தின் ஒரு சாதகமான பங்கீட்டைப் பெற்றுத் தருவதைத் தவிர வேறெதையும் விரும்பவில்லை. இதுவே சமத்துவத்திற்குப் பதிலாக, அடையாள அரசியலுக்கும், “நியாயப் பகிர்வு” என்பதைக் கோருவதற்கும் ஊக்கமளிக்கும் சமூக அபிலாஷையாகும். இதன் காரணமாகவே, 2011இல் போராடிய நடுத்தர வர்க்க வாய்ச் சவடாலாளர்கள் முன்வைத்த முழக்கம் “வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்” என்பதாக இருந்ததே தவிர, அதன் சொத்துக்களைக் கைப்பற்றுவது என்பதாக இருக்கவில்லை.
VIII. முடிவுரை
நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந்தாலும், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நெருக்கடி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உழைப்பு நிலைமைகளை மாற்றியமைத்து வரும் தொழில்நுட்பம் யாருடைய கைகளில் உள்ளது, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் முனைப்பு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் விடையிறுப்பு ஆகியவற்றால் இறுதி ஆய்வில் கொள்கை தீர்மானிக்கப்படும்.
சோசலிசத்திற்கான போராட்டம், உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவை குறித்த விஞ்ஞானபூர்வமான மதிப்பீட்டின் அடிப்படையில் அமைய வேண்டும். உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி, பாசிசம் மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் போர் புற்றுநோய் போலப் பரவுவதற்கும் அடிப்படையாக உள்ளது. அதே நெருக்கடிதான் தொழிலாள வர்க்கத்தைச் சர்வதேச அளவில் போராட்டத்திற்குள் உந்தித் தள்ளுகிறது; அந்தப் போராட்டம் உலகளவில் ஒன்றோடொன்று பிணைந்துள்ளது என்ற புரிதல் தொழிலாள வர்க்கத்திற்குள் வளர்ந்து வருகிறது; துறைமுகத் தொழிலாளர்கள் அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கை அதற்குச் சான்றாகும். ஆனால், இந்தப் பிணைப்பு பற்றிய பொதுவான விழிப்புணர்வு மட்டும் போதாது. வர்க்க நனவு, புறநிலை நிலைமைக்குப் பொருந்தும் வேலைத்திட்டத்தில் வெளிப்பாடு காணுமா என்பதே தீர்க்கமான கேள்வி.
இந்தக் கேள்விக்குப் போராட்டத்திற்கு அப்பால் நின்று விடையளிக்க முடியாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்கப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, வர்க்கப் போராட்டத்தில் தலையிடுகிறது. தேசிய எல்லைகளைக் கடந்த தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்காகவும், ஜனநாயகக் கட்சியிடமிருந்தும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து அரசியல் முகவர்களிடமிருந்தும் தொழிலாள வர்க்கம் முழுமையான அரசியல் சுயாதீனம் பெறுவதற்காகவும் போராடுகிறோம்.
அந்த நோக்கத்திற்காக, தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை ஒழுங்கமைக்குமாறு அழைப்பு விடுக்கிறோம்; அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் போராட்டங்களைச் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலம் ஒருங்கிணைப்பதே அந்தக் குழுக்களின் பணியாகும். போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டமாக முன்னெடுக்கிறோம். எமது இலக்கு, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும்; அதுவே உலகப் பொருளாதாரத்தைச் சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்கான இன்றியமையாத முன்நிபந்தனையாகும். சோசலிசத்திற்கான தேசியப் பாதை பற்றிய அனைத்து முன்மொழிவுகளையும் பிற்போக்கு மோசடிகள் என்று கண்டிக்கிறோம். அத்தகைய பாதை எதுவும் இல்லை.
சோசலிச சமத்துவக் கட்சி வரலாற்றின் கட்சியாகும். அதன் வேலைத்திட்டம் நடைமுறைவாதச் சமாளிப்புகளின் விளைவு அல்ல. ஒரு முழு நூற்றாண்டு காலப் புரட்சிகரப் போராட்டங்களின், வெற்றிகளும் தோல்விகளும் அடங்கிய பரந்த அனுபவத்தை அது ஆதாரமாகக் கொண்டுள்ளது. சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக லெனின் நடத்திய போராட்டத்தை எமது வேலைத்திட்டத்தின் அடித்தளமாகக் கொள்கிறோம்; அந்தப் போராட்டத்தின் அடிப்படையிலேயே போல்ஷிவிக் கட்சி கட்டியெழுப்பப்பட்டது; 1917 அக்டோபரில் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தை வெற்றிக்கு இட்டுச் சென்றதும் அந்தப் போராட்டமே. லியொன் ட்ரொட்ஸ்கி விரிவுபடுத்திய நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும் எமது வேலைத்திட்டத்தின் அடித்தளமாகக் கொள்கிறோம்; தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அதைத் தக்கவைத்துக்கொள்வதும் உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தின் வழியாக மட்டுமே சாத்தியம் என்பதை அந்தத் தத்துவம் நிறுவியது.
இறுதியாக, சோசலிச சமத்துவக் கட்சியினதும் அதன் சர்வதேசத் தோழர்களினதும் செயல்பாடுகள் ஓர் உறுதியான நம்பிக்கையால் உந்தப்படுகின்றன: சோசலிசத்தின் வெற்றியும் மனிதகுலத்தின் எதிர்காலமும் சார்ந்திருக்கும் நமது சகாப்தத்தின் மைய அரசியல் பணி, தொழிலாள வர்க்கத்தில் நிலவும் புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதே ஆகும். அந்த நெருக்கடியை, சோசலிச சமத்துவக் கட்சியையும் சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தையும் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும். இன்றிரவு இங்கு கூடியிருக்கும் மாணவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: சமூகச் சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பில் (IYSSE) இணைந்து, அதனைக் கட்டியெழுப்புங்கள்.
