இளைஞர் போராட்டங்களை ஆதரியுங்கள்! சோசலிசத்திற்காகவும் ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தத்திற்காகவும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்துங்கள்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நவம்பர் 20 வெள்ளிக்கிழமை, போர் வெறிக்கும், கட்டாய இராணுவச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கும், சமூகச் சீரழிவுக்கும் எதிராக ஐரோப்பா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் முறையாக, 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையாக இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தொழிலாளர்களும் இளைஞர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) அழைப்பு விடுக்கிறது. நனவுபூர்வமான முதலாளித்துவ-எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் இந்த இயக்கத்தை ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தமாக வளர்த்தெடுக்க நாங்கள் போராடுகிறோம்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்தும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் பெரும்பாலும் சுயாதீனமாக, சமீபத்திய வாரங்களில் பல டஜன் ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து வரும் ஓர் இயக்கத்தின் பகுதியாகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் உள்ளன. போர்வெறி கொண்ட நிதியியல் தன்னலக்குழுவுக்கும் பரந்த வெகுஜனங்களின் தேவைகளுக்கும் இடையிலான சமரசத்துக்கு இடமற்ற மோதலால் இவை உந்தப்பட்டுள்ளன; முதலாளித்துவத்துடன் நேர்முக மோதலை நோக்கி நகர்கின்றன. இந்த இயக்கம் தனது சொந்த சர்வதேச மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்புத் தன்மையை நனவுபூர்வமாக உணர்ந்துகொள்ள வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள இளைஞர்களும் தொழிலாளர்களும் பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்

எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் ஒன்றாகவே இருப்பதால், பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுவது தற்செயலானது அல்ல. சமூக வாழ்வின் ஒவ்வொரு துறையும் அதிபணக்கார உயரடுக்கின் இலாப நலன்களுக்கு அடிபணியச் செய்யப்படுகிறது. வீட்டு வாடகைகள் உயர்ந்து வருகின்றன; பள்ளிகள் சீரழிந்து வருகின்றன; வேலையின்மை அதிகரித்து வருகிறது.

இதன் மிகக் கூர்மையான வெளிப்பாடு, வெறித்தனமான போர்க் கொள்கையில் காணப்படுகிறது. உக்ரேனில், ரஷ்யாவுக்கு எதிரான பினாமிப் போரை நடத்துவதற்காகவே புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை நேட்டோ சக்திகள் வேண்டுமென்றே தூண்டிவிட்டன. இரு நாடுகளின் பிரம்மாண்டமான இயற்கை வளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதும், கிழக்கு ஐரோப்பா மீது முழுமையான ஆதிக்கத்தை நிறுவுவதுமே இதன் நோக்கமாகும். இதற்காக, ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தையும் அணு ஆயுதப் பேரழிவுக்கு உள்ளாக்கும் அபாயத்தை அவை மேற்கொள்கின்றன. அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவை மூன்று ஆண்டுகளுக்குள் இராணுவரீதியாகத் தோற்கடிக்கும் ஆற்றலைப் பெற விரும்புவதாக ஐரோப்பிய அரசாங்கங்கள் நீண்ட காலத்துக்கு முன்பே அறிவித்துவிட்டன. காஸாவில் நடைபெறும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு அவை அளிக்கும் ஆதரவு, ஆளும் உயரடுக்குகள் மீண்டும் மிக மோசமான குற்றங்களைச் செய்யத் தயாராக உள்ளன என்பதை அன்றாடம் நிரூபிக்கிறது.

முதலாளித்துவம் நமக்காக வைத்திருக்கும் எதிர்காலம் இதுதான்: மீள் ஆயுதமயமாக்கலுக்கு நிதியளிப்பதற்கும் நிதிச் சந்தைகளுக்கு ஊட்டமளிப்பதற்கும் நாம் முழுமையாகச் சுரண்டப்படுவோம்; இறுதியில், செல்வந்தர்களின் போர்க்களங்களில் நம் உயிர்களைப் பலிகொடுக்க வேண்டும்.

இந்த நிலைமைகளின் கீழ், வெவ்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் நடைபெறும் போராட்டங்கள், ஒன்றிணைந்து கலந்தாலோசித்து, முடிவெடுத்து, செயல்படும் உண்மையான சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான தொடக்கப் புள்ளியாக மாற வேண்டும். வளர்ந்து வரும் தேசியவாதத்தையும் போர் முனைப்பையும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் சர்வதேச ஒற்றுமையாலும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தாலும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

முதலாளித்துவம் என்பது காட்டுமிராண்டித்தனம், பாசிசம், போர் ஆகியவற்றையே குறிக்கிறது

தனிப்பட்ட அரசியல்வாதிகளின் மோசமான கொள்கைகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையின் திவால்நிலையையே நாம் எதிர்கொள்கிறோம். இருபதாம் நூற்றாண்டில் நடந்ததைப் போலவே, முதலாளித்துவம் மீண்டும் பாசிசம், காட்டுமிராண்டித்தனம், போர் ஆகியவற்றை நோக்கி இட்டுச் செல்கிறது.

இத்தாலியில் பாசிச மெலோனியின் அரசாங்கமாக இருந்தாலும் சரி, ஜேர்மனியில் பெரும் கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் சரி, பிரித்தானியாவில் தொழிற்கட்சி அரசாங்கமாக இருந்தாலும் சரி, ஸ்பெயினில் இடது எனப்படும் ஸ்பானிய சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE)-சுமார் (Sumar) அரசாங்கமாக இருந்தாலும் சரி, ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்களால் போர்க் கொள்கைகளும் சமூகத் தாக்குதல்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

பேரழிவைத் தடுப்பதற்கான ஒரே வழி முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதே. பெரிய வங்கிகளும் பெருநிறுவனங்களும் கைப்பற்றப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அதிபணக்காரர்களின் பிரம்மாண்டமான செல்வங்கள், சமூகத்தின் தேவைகளான கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மகத்தான மார்க்சியவாதியான ரோசா லுக்சம்பர்க், முதல் உலகப் போரின் போது “சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா” என்று பிரகடனம் செய்தார். போரில் நிகழ்ந்த பெருமளவிலான படுகொலைகள் இந்த எச்சரிக்கையின் உண்மையை உறுதிப்படுத்தின. ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியும் ஜேர்மனியில் நடைபெற்ற புரட்சியுமே அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன. இன்று, அதே கேள்வி புதிதாக எழுந்துள்ளது. ஒன்று, முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டு, அதற்குப் பதிலாக ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமூகம் நிறுவப்பட வேண்டும்; இல்லையேல், மனிதகுலம் அணு ஆயுத அழிவை எதிர்நோக்கியிருக்கிறது.

தொழிலாள வர்க்கமே தீர்மானகரமான சக்தி

இவற்றில் எதுவும் தலைமுறைகள் தொடர்பான கேள்வி அல்ல. இவை வர்க்கம் தொடர்பான கேள்விகள். முதலாளித்துவத்தைத் தூக்கியெறியவும் உலகப் போரைத் தடுக்கவும் ஆற்றல் கொண்ட ஒரே சமூக சக்தி சர்வதேசத் தொழிலாள வர்க்கமே. சமூகத்தின் பெரும்பான்மையாக உள்ள அது, தனது அன்றாட உழைப்பால் சமூகத்தின் செல்வம் அனைத்தையும் உற்பத்தி செய்கிறது; முதலாளித்துவப் போர்வெறியர்களை மண்டியிடச் செய்யவும் அதனால் முடியும்.

எனவே, பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் போராட்டங்கள் பணியிடங்களில் நடைபெறும் போராட்டங்களுடன் நனவுபூர்வமாக இணைக்கப்பட வேண்டும். இளைஞர் போராட்டங்கள் நடைபெறும் அதே நேரத்தில், இத்தாலியில் மெலோனி அரசாங்கத்துக்கு எதிராக ஒரு பெரும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. ஐரோப்பா முழுவதும் தொழில்துறை, சுகாதாரம், பொதுத்துறை, போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் ஆட்குறைப்புகளையும் ஊதிய வெட்டுக்களையும் சமூக வெட்டுக்களையும் எதிர்கொள்கின்றனர். மீள் ஆயுதமயமாக்கலுக்கும் போருக்கும் பில்லியன் கணக்கில் நிதி திரட்டப்படும் அதே கொள்கைகளுக்கு எதிராகவே தொழிலாளர்கள் போராடுகின்றனர்.

பணியிடங்கள், தொழில்துறைகள், தேசிய எல்லைகள் ஆகியவற்றைக் கடந்து இந்தப் போராட்டங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இதன் மூலம், சர்வதேச இளைஞர் போராட்டங்கள், கூட்டு வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்து, ஐரோப்பியப் பொது வேலைநிறுத்தம் என்ற கேள்வியை நடைமுறை ரீதியில் முன்வைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் சக்திவாய்ந்த இயக்கமாக வளர முடியும். அத்தகைய பொது வேலைநிறுத்தம் ஒட்டுமொத்தக் கண்டத்தையும் முடக்குவதோடு, அதிகாரம் யாருடைய கையில் இருக்க வேண்டும் என்ற கேள்வியையும் முன்வைக்கும்: எந்த வர்க்கம் தீர்மானிக்கும்? சமூகம் நிதியியல் தன்னலக்குழுவின் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்படுமா, அல்லது தொழிலாளர் வர்க்கத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்படுமா?

தொழிலாளர்களதும் இளைஞர்களதும் சுயாதீன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக

ஆனால், தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு சுயாதீனமான சமூக சக்தியாகச் செயல்பட வேண்டுமானால், முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் முடக்குகின்ற செல்வாக்கிலிருந்து தம்மை அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் விடுவித்துக்கொண்டு, சோசலிச முன்னோக்கின் பக்கம் திரும்ப வேண்டும். “இடது” எனப்படுகின்ற கட்சிகளும் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதால் போர்க் கொள்கையை ஆதரிக்கின்றன. ஜேர்மனியில் இடது கட்சி (Die Linke), அரசாங்கத்தின் ஒரு டிரில்லியன் யூரோ மீள் ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், இனப்படுகொலை எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அரசியல் வேட்டையையும் ஆதரிக்கிறது. சுமார், ஸ்பானிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு, அதன் இராணுவவாதப் போக்குக்குத் துணைநிற்கிறது.

ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் உள்ள முக்கியத் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போர்க் கொள்கைக்குப் பின்னால் அணிவகுத்து நின்று, தொழிலாளர்களுக்கு எதிராக வெட்டுக்களையும் பெருமளவிலான ஆட்குறைப்புகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளன. வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவை அழைப்பு விடுக்கும்போது, அது தொழிலாளர்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் தமது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மட்டுமே.

தொழிலாளர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், சமூக வெட்டுக்களையும் போர்க் கொள்கையையும் எதிர்க்க விரும்பினால், அவர்கள் தம்மைச் சுயாதீனமாக ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்தும் முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமான, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கைக் குழுக்களைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பணியிடங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் கட்டியெழுப்புமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்தக் குழுக்கள் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) கட்டமைப்புக்குள் தேசிய எல்லைகளைக் கடந்து ஒன்றிணைய வேண்டும்.

இளைஞர் போராட்டங்கள் ஒப்பீட்டளவில் தன்னெழுச்சியாகவும் சுயாதீனமாகவும் வளர்ந்துள்ளன என்ற உண்மை, அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்தும் நனவுபூர்வமான அரசியல் சுயாதீனத்தைப் பெறுவதற்கான தொடக்கப் புள்ளியாக மாற வேண்டும். நாம் அரசாங்கங்களிடம் கோரிக்கை வைப்பவர்களாக அணுகக் கூடாது. அவற்றுக்கு எதிராகப் போராடி, அதிகாரம் யாருடைய கையில் இருக்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்க வேண்டும்.

போராட்ட ஏற்பாட்டாளர்கள் இயக்கத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட வரம்புகளுக்குள் வைத்திருக்க முயல்கின்றனர்

வெள்ளிக்கிழமைக்கான போராட்டங்களின் சுயநியமன ஏற்பாட்டாளர்கள் இந்த முன்னோக்குக்கு விரோதமாக உள்ளனர். அவர்கள் இந்த இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து, அதை முதலாளித்துவக் கட்சிகளுக்குக் கீழ்ப்படியச் செய்ய விரும்புகின்றனர். ஜேர்மனி போன்ற சில நாடுகளில், போர்க் கொள்கைக்கும் சமூகச் சீரழிவுக்கும் பொறுப்பான கட்சிகளின் இளைஞர் அமைப்புகளான பசுமை இளைஞர் அமைப்பு (Green Youth) மற்றும் இடது கட்சியின் இளைஞர் அமைப்பான லிங்க்ஸ்யுகென்ட் சாலிட் (Linksjugend Solid) ஆகியவை கூட ஏற்பாட்டாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பசுமைக் கட்சியினர் மிகத் தீவிரமான போர்வெறியர்களில் அடங்குவர். ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு ஆதரவு திரட்டும் அவர்கள், தங்களுக்குப் பதிலாக தொழிலாளர் வர்க்க இளைஞர்களே போர் அகழிகளில் தள்ளப்பட வேண்டும் என்று விரும்புவதால் மட்டுமே கட்டாய இராணுவச் சேவையை எதிர்க்கின்றனர்.

இந்த அமைப்புகளில் சில இன்னும் தீவிரமான சொல்லாடல்களைக் கையாண்டு, போராட்டங்களுக்கு முன்னதாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அது முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நேட்டோ ஆகியவற்றின் மீது கூர்மையான விமர்சனங்களை முன்வைப்பதுடன், அவற்றைக் கலைக்க வேண்டும் என்றும்கூடக் கோருகிறது. ஆனால், அதிலிருந்து பெற வேண்டிய தீர்மானகரமான அரசியல் முடிவுகள் என்று வரும்போது, அந்த அறிக்கை தெளிவற்றதாகவே உள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் தீவிரமடைந்து வருவது குறித்து அது வேண்டுமென்றே மௌனம் சாதிக்கிறது; முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைப்பதையும் திட்டமிட்டே தவிர்க்கிறது.

தீவிரமான சொல்லாடல்களுக்குப் பின்னால், ஜேர்மனியில் இடது கட்சியின் அல்லது ஐக்கிய இராச்சியத்தில் தொழிற்கட்சியின் இடது பிரிவின் முதலாளித்துவ-ஆதரவுக் கொள்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் முயற்சிகள் மறைந்துள்ளன. இராணுவவாதத்தை ஆதரிக்கும் தொழிற்சங்கங்கள், மீள் ஆயுதமயமாக்கலையும் சமூகத் தாக்குதல்களையும் திணிப்பதில் அவை ஆற்றும் பங்கைக் குறிப்பிடக்கூட இல்லாமல், கூட்டாளிகளாகப் போற்றப்படுகின்றன.

சோசலிச முன்னோக்குக்காகப் போராடுங்கள்; சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணையுங்கள்!

இந்த இயக்கத்தைச் சர்வதேச, சுயாதீன மற்றும் சோசலிச அடிப்படையில் நனவுபூர்வமாக வளர்த்தெடுக்க நாங்கள் போராடுகிறோம். பள்ளி மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் எங்களுடன் இணைந்து தொழிற்சாலை வாயில்களுக்குச் சென்று, தொழிலாளர்களிடையே இந்த முன்னோக்குக்காகப் போராடுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் (IYSSE) இணையுங்கள்! IYSSE என்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இளைஞர் அமைப்பாகும். ஸ்ராலினிசத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் எதிராகச் சோசலிசக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்காக, 1938ஆம் ஆண்டில் லியொன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் நான்காம் அகிலம் நிறுவப்பட்டது.

சர்வதேசியவாதம், தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனம், சோசலிசம் ஆகிய இந்தக் கோட்பாடுகளே இன்று மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இந்த வரலாற்றையும், எமது வேலைத்திட்டத்தையும், எமது முன்னோக்குகளையும் கற்றறிந்து, முதலாளித்துவச் சுரண்டலுக்கும் உலகப் போருக்கும் எதிரான போராட்டத்தில் பங்கேற்குங்கள்!

Loading