Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் கலைப்பு

11-1. யுத்தத்துக்குப் பிந்திய புரட்சிகர இயக்கங்களின் தேய்வும் பிரிட்டனின் தெற்காசிய காலனிகளுக்கு உத்தியோகபூர்வமாக சுதந்திரம் வழங்கப்பட்டமையும், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி மீது புதிய தேசிய கட்டுமானத்திற்கும் மற்றும் அரச கட்டமைப்புகளுக்கும் தகவமைத்துக் கொள்வதற்கான பிரம்மாண்டமான அரசியல் அழுத்தங்களை உருவாக்கி விட்டன. நடுத்தர வர்க்கத் தட்டுக்களைப் பொறுத்தவரை, “சுதந்திரம்” என்பது பாராளுமன்ற அரசியல் சூழலில் புதிய வாய்ப்புகளையும், விரிவடைந்து வந்த அரச அதிகாரத்துவத்திலும் மற்றும் அரசுக்குச் சொந்தமான கூட்டுத்தாபனங்களிலும் தொழில் பதவிகளையும் திறந்து விட்டிருந்தது. உலகளாவிய முதலாளித்துவம் ஸ்திரமடைந்ததும் யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதாரச் செழுமையும், ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்து முன்னாள் காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் தொழிலாள வர்க்கத்துக்கு சலுகைகளை வழங்க இயலுமையை ஏற்படுத்திக் கொடுத்தது. விசேடமாக, ஒரு போர்க்குணம் கொண்ட பாட்டாளி வர்க்கத்தையும் அவர்களில் ஒரு பகுதியினர் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் புரட்சிகரத் தலைமையின் கீழ் இருந்த நிலையையும் எதிர்கொண்ட, ஒரு பலவீனமான முதலாளித்துவ வர்க்கம் இருந்த இலங்கையில் இது உண்மையானதாக இருந்தது. ஒரு சோசலிசப் புரட்சி அவசியமானதல்ல மற்றும் பாராளுமன்றத் தந்திரோபாயங்கள் மற்றும் போர்க்குணம் மிக்க தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பின் ஊடாக பெருமளவு தொழிலாளர்களால் சிறிது சிறிதாக முன்னேற முடியும் என்கிற சீர்திருத்தவாத மாயைகள் தற்காலிகமான பொருளாதார வெற்றிகளால் ஊக்குவிக்கப்பட்டன.

11-2. 1948 மற்றும் 1950ம் ஆண்டுகளுக்கு இடையில், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தேசியவாதத்தின் பக்கம் பின்வாங்கியமையே, அது கலைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 1946ல் வெளியிடப்பட்ட இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.) யின் “இலங்கைக்கான வேலைத்திட்டத்தின்” ஆரம்ப பகுதி, இலங்கையிலும் இந்தியாவிலும் சோசலிசப் புரட்சியானது மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது என சக்திவாய்ந்த முறையில் வாதிட்டது. “புரட்சிக்காக உயர்ந்த மட்டத்தில் மக்கள் அணிதிரட்டப்பட்டிருந்தாலும் கூட, இலங்கையில் தமது பலத்தை காத்துக்கொள்வதற்காக ஏகாதிபத்தியவாதிகள் திரட்டும் சக்திகளை மீறி முன்செல்வதற்குத் தேவையான ஆற்றலை, இந்தத் தீவின் புரட்சிகர வெகுஜன இயக்கத்தினால் தனியாக வெளி உதவியின்றி உருவாக்க முடியாது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு இலங்கை வெறும் பொருளாதாரச் சுரண்டலுக்கான களம் மட்டுமல்ல, அது அவர்களது ஒட்டு மொத்த சாம்ராஜ்ஜியத்தினதும் பாதுகாப்புக்கான ஒரு மூலோபாய வெளிக்காவல் அரணாகும். மறுபக்கம், கிழக்கில் பிரிட்டிஷ் வல்லாதிக்கத்தின் ஒரு உறுதியான கோட்டையாக இலங்கை பேணப்பட்டு வரும் அதே வேளை, இந்தியாவில் முழுமையான விடுதலையை நினைத்துப் பார்க்க முடியாது. இந்த ஆய்வுப் புள்ளியில் இருந்து, இலங்கையிலான ஒரு புரட்சிகரப் போராட்டம், அதன் சகல மட்டத்திலும் கண்டத்தின் புரட்சிகரப் போராட்டத்துடன் பிணைந்துள்ளதுடன், ஒட்டுமொத்தமாக இந்தியப் புரட்சியைப் பொறுத்தளவில், ஒரு மாநிலத்திற்குரிய அம்சத்தைக் கொண்டிருக்கும் என நாம் சொல்லலாம்.” இந்தியப் பிரிவினை மற்றும் இலங்கை சுதந்திரம் சம்பந்தமாக பி.எல்.பி.ஐ. விமர்சனம் செய்த போதிலும், கட்சி அதன் சர்வதேசிய முன்நோக்கில் இருந்து பின்வாங்கி, புதிதாக அமைக்கப்பட்ட அரசுகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது. பி.எல்.பி.ஐ. இலங்கையிலும் இந்தியாவிலும் அமைப்பு ரீதியில் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிற பிரச்சினை இல்லை என்ற போதிலும், நான்காம் அகிலத்தின் புதிய பகுதியொன்றை ஸ்தாபிக்கும் விடயத்தில், ஐக்கியப்பட்ட புரட்சிகர முன்நோக்குக்காகப் போராட வேண்டிய முறை பற்றியும் மற்றும் அமைப்பு ரீதியில் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவதைப் பற்றியும் தீவிரமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக, அநேகமான இலங்கை ட்ரொட்ஸ்கிசவாதிகள் தீவுக்குத் திரும்பியிருந்த நிலையில், ஏறத்தாழ ஒரு பிளவே தோன்றியது. இந்தியாவில் இருந்த கட்சியை பலியிட்டு, அவர்களது அரசியல் நடவடிக்கைகளுக்கான குவியப்புள்ளியாக இலங்கை மாறியது. யுத்தத்துக்குப் பிந்திய முதலாளித்துவ மறுஸ்திரப்படலால் உருவாக்கப்பட்ட அரசியல் சிக்கல்கள் உச்சத்துக்கு வந்த நிலையில், நுழைவுவாதமும் “இடது ஐக்கியமும்” விரைவாக வளர்ச்சி காண்பதற்கான வழியை ஏற்படுத்தும், என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி, குட்டி முதலாளித்துவ தீவிரவாத கட்சிகளுக்குள் கலைத்துவிடப்பட்டது.

11-3. 1948ல் காங்கிரசில் இருந்து பிரிந்த காங்கிரஸ் சோசலிஸ்டுகளால் அமைக்கப்பட்ட இந்திய சோசலிஸ்ட் கட்சிக்குள் நுழையுமாறு இலங்கையில் இருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதிகள்தான் இந்தியாவில் பி.எல்.பீ.ஐ.க்கு அழுத்தம் கொடுத்தனர். 1930களில், அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி (Socialist Party of America) மற்றும் தொழிலாளர் அகிலத்தின் பிரான்ஸ் பகுதி (SFIO) ஆகியவற்றில் இருந்து முக்கியமான பகுதியினரை அரும்பிக் கொண்டிருந்த நான்காம் அகிலத்துக்குள் வென்றெடுப்பதற்காக, ட்ரொட்ஸ்கி பரிந்துரை செய்த வழிமுறையை சுட்டிக்காட்டியே, இந்திய பி.எல்.பீ.ஐ.யில் இருந்த லங்கா சம சமாஜக் கட்சி ஆதரவாளர்கள் அவர்களது “நுழைவுத் தந்திரோபாயத்துக்காக” வாதிட்டார்கள். பாசிசத்தின் எழுச்சி மற்றும் ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புக்கள் காரணமாக, இத்தகைய சமூக ஜனநாயக அமைப்புக்கள், புரட்சிகர அரசியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் புள்ளியாக ஆகியிருந்ததனாலேயே ஒரு சுருக்கமான தந்திரோபாய திட்டமாக 1930களில் அத்தகைய நுழைவு பரிந்துரைக்கப்பட்டது. இத்தகைய கட்சிகளுக்குள் தமது புரட்சிகர சர்வதேசிய முன்னோக்கிற்குப் போராடுவதற்கான கணிசமானளவு சுதந்திரத்தைத் தக்கவைத்துக்கொண்ட ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கியமான பகுதியினரை வென்றெடுத்தனர். இடதுபக்கமன்றி, வலது பக்கமாக மட்டும் பாராளுமன்ற தேசியவாத பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த இந்திய சோசலிஸ்ட் கட்சிக்கு அத்தகைய நிலைமைகளில் எதுவும் பொருந்தாது. 1947 இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி மாநாட்டில் இந்த நுழைவு சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த விடயத்திற்கு அழுத்தம் கொடுத்த அந்த தந்திரோபாயத்தின் ஆதரவாளர்கள், சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்காலத்தில் தீவிரமயமாவர் என்ற எதிர்பார்ப்பில், அதற்குள் நீண்ட காலத்துக்கு நுழைந்திருக்க வேண்டும் எனத் தொடர்ந்தும் வாதிட்டனர். எந்தவொரு திடீர் நகர்வுக்கும் எதிராக, பாரிஸில் இருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக செயலகம் விடுத்த எச்சரிக்கைகளை அலட்சியம் செய்த இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி, 1948 அக்டோபரில் கல்கத்தாவில் நடந்த ஒரு விசேட மாநாட்டில் இத்தகைய நுழைவுக்கு வாக்களித்தது.

11-4. சோசலிஸ்ட் கட்சிக்குள் நுழைந்தமை ஆரம்பத்தில் இருந்தே அழிவுகரமானதாக இருந்தது. இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தனிநபர்கள் என்ற அடிப்படையில் உறுப்புரிமைக்காக விண்ணப்பிக்கத் தள்ளப்பட்டார்கள். அவர்களால் ஒரு தனியான உட்குழுவை அமைக்க முடியாமல் போனதோடு கலந்துரையாடலுக்கான ஆவணங்களை சுற்றுக்கு விடவும் முடியாமல் போனது. அதே சமயம், சோசலிஸ்ட் கட்சி, குறிப்பாக முன்னர் ஒரு உறுப்பினரையுமே கொண்டிராத சென்னை (மெட்ராஸ்) போன்ற பெருநகரங்களில், தமது கட்சியின் அமைப்புக்களை கட்டியெழுப்புவதற்காக முன்னாள் பி.எல்.பீ.ஐ. உறுப்பினர்களின் திறமைகளை சுரண்டிக்கொண்டது. சோசலிஸ்ட் கட்சியின் தலைமை மேலும் வலதுபக்கம் திரும்பிய நிலையில், அது மேலும் மேலும் எந்தவொரு விமர்சனத்தையும் அல்லது விவாதத்தையும் தடுத்தது. 1952ல் நடந்த பொதுத் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி திறமை காட்டாததை அடுத்தும், அது முதலாளித்துவ கிசான் மஸூர் பிரஜா கட்சியுடன் (விவசாயிகள் தொழிலாளரகள் மக்கள் கட்சி) கூட்டுச் சேர்ந்த பின்னரும், முன்னாள் பி.எல்.பீ.ஐ. உறுப்பினர்கள் அதில் இருந்து பிரிந்தார்கள். ஆயினும், அந்தக் கட்டத்தில், பி.எல்.பீ.ஐ. அடிபணிந்து போன அதே அரசியல் அழுத்தங்களை பிரதிபலித்த மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரின் தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாத போக்கு நான்காம் அகிலத்தினுள் எழுந்திருந்தது. இந்தியாவில் பி.எல்.பீ.ஐ. இன் மிச்சங்களையும் பப்லோவாதம் துரிதமாக அழித்தது.

11-5. இலங்கையில், அதிலும் குறிப்பாக பிளவுபட்ட “இடது” வாக்கு, 1949 இடைத் தேர்தலில் யூ.என்.பீ.க்கு அத்தொகுதியில் வெல்வதற்கு வாய்ப்பளித்ததற்குப் பின், லங்கா சமசமாஜக் கட்சியுடன் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியை இணைப்பதற்கு அழுத்தங்கள் பெருகின. பாராளுமன்ற மற்றும் தொழிற்சங்க களங்களில் கட்சியைப் பலப்படுத்துவதன் பேரில் ஐக்கியப்படுவதற்கான வாதப் புள்ளியாக அந்த இடைத்தேர்தல் ஆனது. 1950 ஜூனில், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி இணைக்கப்பட்டமை, இரு ட்ரொட்ஸ்கிசக் கட்சிகளின் கூட்டிணைவாக லங்கா சமசமாஜக் கட்சியின் பல்வேறு வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அது, பாராளுமன்றவாதம் மற்றும் தொழிற்சங்க வாத்திற்கு துரிதமாக இடமளித்த ஒரு சந்தர்ப்பவாத ஏற்பாட்டுக்குள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி கலைத்துவிடப்படுவதாகவே இருந்தது. இந்த இணைப்பின் விளைவாக, எதிர்க்கட்சி ஆசனங்களில் மிகப்பெருங் குழுவின் தலைவர் என்ற முறையில், என்.எம்.பெரேரா பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். இணைக்கப்பட்ட லங்கா சம சமாஜக் கட்சியின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிலிப் குணவரத்தனா, மேலுமொரு அடி வலதுபக்கமாக வைத்து, லங்கா சம சமாஜக் கட்சியில் இருந்து முழுமையாக பிரிந்ததோடு தனது சொந்தக் கட்சியான புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி [ Viplavakari LSSP -VLSSP ] அமைத்துக்கொண்டார்.

11-6. ஐக்கியப்படுத்தப்பட்ட லங்கா சம சமாஜக் கட்சியின் வேலைத்திட்டம் இலங்கைக்குள் வரையறுக்கப்பட்டது. அது இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியும் நான்காம் அகிலமும் கடந்து வந்த தீர்க்கமான வரலாற்று அனுபவங்கள் சம்பந்தமாக எந்த ஆய்வு செய்வதையும் தவிர்ப்பதற்காக வரையப்பட்டபொதுவான நன்கு யாவருமறிந்த விடயங்களின் ஒரு தொகுப்பாக அது இருந்தது. அது ஆசியா அல்லது அனைத்துலகம் இல்லாவிட்டாலும் இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் யுத்தத்துக்குப் பிந்திய அரசியல் அனுபவங்கள் எதையும் பற்றிக் கூட குறிப்பிடவில்லை. சீனப் புரட்சி நடந்து ஒரு ஆண்டுகூட ஆகாதிருந்த போதும், அது பற்றிக்கூட குறிப்படப்படவில்லை. அந்த வேலைத்திட்டம் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தைப் பற்றி தெளிவாக எதையும் கூறவில்லை. முன்னைய ஐந்து ஆண்டுகளுள் தோன்றிய அரசியல் வேறுபாடுகள் பற்றி எதுவும் கலந்துரையாடப்படவில்லை. அந்த வேலைத் திட்டம், கட்சி “சகல வடிவிலுமான பேரினவாதத்தையும் சமரசமற்று எதிர்ப்பதாக” பிரகடனம் செய்த போதிலும், 1947ல் பண்டாரநாயக்கவின் இனவாத அரசியலுக்கு லங்கா சம சமாஜக் கட்சி அடிபணிந்ததைப் பற்றி அது ஆராயவில்லை. அதேபோல், “உண்மையான தேசிய சுதந்திரத்துக்கான” தேவையைப் பற்றி அது குறிப்பிட்ட போதிலும், 1948ல் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை லங்கா சம சமாஜக் கட்சி புறக்கணித்ததைப் பற்றி அதில் ஆராயப்படவில்லை. உண்மையில், இந்தக் “கூட்டிணைவானது” சமசமாஜவாதத்துக்கு, அதாவது இலங்கையில் தீவிரவாதத்தின் தேசிய பாரம்பரியத்துக்கு திரும்புவதற்கு சமமானதாக இருந்தது. இத்தகைய பிரச்சினைகளை கலந்துரையாடத் தவறியமை, புதிய கட்சியினுள்ளான உண்மையான உறவுகளை அம்பலப்படுத்தியது: வலதுசாரித் தட்டுக்களின் தலைமைப் பொறுப்பில் என்.எம். பெரேரா இருந்த அதேவேளை, முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள் அவரை “ட்ரொட்ஸ்கிசத்தால்” அலங்கரித்தனர். ஒரு அரசியல் விளக்கத்தைக் கோரவும் அந்த கொள்கையற்ற ஐக்கியத்தை எதிர்க்கவும் தலையிடுவதற்கு மாறாக, மிஷேல் பப்லோவின் தலைமையிலான அனைத்துலக செயலகம், அதை ஆசீர்வதித்ததோடு லங்கா சம சமாஜக் கட்சியை நான்காம் அகிலத்தின் இலங்கை பகுதியாக ஏற்றுக்கொண்டது.