Socialist Equality Party (Sri Lanka)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

சோசலிச தொழிலாளர் கட்சியின் மறு ஐக்கியம்

15-1. "மரபுவழி ட்ரொஸ்கிசத்திற்கும் பப்லோவின் திருத்தல்வாதத்திற்கும் இடையிலான வேறுபாடு அரசியல்ரீதியாகவோ அமைப்புரீதியாகவோ சமரசம் செய்ய முடியாதளவிற்கு ஆழமானது" எனப் பிரகடனப்படுத்தி 1953ல் சோசலிச தொழிலாளர் கட்சியின் ஜேம்ஸ் பி. கனன் தனது பகிரங்க கடிதத்தை முடித்தார்..[31] எப்படி இருப்பினும் மிகவிரைவில் சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாதத்திற்கெதிரான அதனது நிலைப்பாட்டில் பலமிழக்கத் தொடங்கியது. 1957ன் ஆரம்பத்திலேயே, சர்வதேசச் செயலகத்துடன் சோசலிச தொழிலாளர் கட்சி. மீண்டும் இணைவதற்கான இணக்கம் தொடர்பாய் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி லெஸ்லி குணவர்த்தனா எழுதிய கடிதத்திற்கு சாதகமாக கனன் பதிலளித்தார். இந்த மாற்றம், சோசலிச தொழிலாளர் கட்சி யுத்தத்தின் பின்னைய அழுத்தத்தின் கீழ் அமெரிக்க நடுத்தர வர்க்கத் தீவிரவாதப் பிரிவினருக்கு மேலும் மேலும் அடிபணிவதாக இருந்தது.

15.2. உண்மையில், மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் பப்லோவாதத்துக்கும் இடையிலான பிளவு ஆழமடைந்த போதிலும், சர்வதேசச் செயலகத்தின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டுக்கு அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி அடிபணிந்துகொண்டிருந்தது. இப்போது ஜோசப் ஹான்சன் தலைமையிலான சோசலிச தொழிலாளர் கட்சி, 1960 ஆண்டின் இறுதிப் பகுதியில், பிடல் காஸ்ட்ரோவாலும் அவரது குட்டி முதலாளித்துவ கெரில்லா இயக்கத்தினாலும் ஸ்தாபிக்கப்பட்ட கியூப அரசை ஒரு “தொழிலாளர் அரசாக” வர்ணித்துக்கொண்டிருந்தது. பண்படாத அனுபவவாதத்தின் அடிப்படையில், பெருமளவில் விவசாயப் பொருளாதாரத்தை தேசியமயமாக்கியதன் மூலம் காஸ்ட்ரோவால் கியூப அரசின் பாட்டாளி வர்க்கப் பண்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வலியுறுத்திய சோசலிச தொழிலாளர் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன நடவடிக்கையையும் கியூபா அரசு பகிரங்கமாக எதிர்ப்பதையும் அந்த அரசாங்கத்தில் தொழிலாளர் அரசுக்கான எந்தவொரு அமைப்பும் இல்லாததையும் அலட்சியம் செய்தது. மேலும், காஸ்ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் யூனியனின் உதவியை நாடியதோடு அவரது ஜூலை 26 இயக்கத்தை கியூபாவின் ஸ்ராலினிஸ்டுகளுடன் இணைத்துகொண்டதை, புரட்சியின் நிகழ்வுப் போக்கில் காஸ்ட்ரோவாதிகள் மார்க்சிசவாதிகளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று சோசலிச தொழிலாளர் கட்சி வலியுறுத்தியது. "அமெரிக்கக் கண்டத்தில் முதல் வெற்றிகரமான சோசலிசப் புரட்சி” என்றும் “இது ஒட்டுமொத்த காலனித்துவ புரட்சிகர நிகழ்வுப்போக்கினையும் ஒரு புதிய சாதனை மட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறது” என்றும் இது “நிரந்தரப் புரட்சியின் சரியான தன்மைக்கு சமீபத்திய உறுதிச்சான்று” என்றும் சோசலிச தொழிலாளர் கட்சி போற்றியதானது பப்லோவாதிகளுடன் அது மறுஐக்கியம் காண்பதற்கான உரைகல் ஆகியது.

15.3. 1961 மற்றும் 1963ம் ஆண்டுகளுக்கு இடையில், சோசலிச தொழிலாளர் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக, பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகத்தின் (Socialist Labour League - SLL) ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைத்துலகக் குழுவினுள் உறுதியான போராட்டத்தினை முன்னெடுத்தனர். “புரட்சியின் தர்க்கம் அதுவாகவே’ குட்டி முதலாளித்துவ தலைமைகளை தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் நிர்ப்பந்திக்கும் என்ற சோசலிச தொழிலாளர் கட்சியின் வாதத்தை பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகம் நிராகரித்ததோடு, போல்ஷிவிக் வகை கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் ஊடாக பாட்டாளி வர்க்க தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதே, நான்காம் அகிலத்தின் பிரதான கடமை என வலியுறுத்தியது. திருத்தல்வாதத்துக்கு எதிரான போராட்டத்தினை மீளாய்வு செய்த பின்னர், 1961ல் பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகம் “பப்லோவாத திரிபுவாதம் ட்ரொட்ஸ்கிசத்தினுள் உள்ள ஒரு போக்காக கருதப்பட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது" என்ற முடிவுக்கு வந்தது.

15-4. கியூபா தொடர்பாக அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோ மற்றும் மண்டேலின் புறநிலைவாத வழிமுறையைக் கடைப்பிடித்தது. 1962 ஜூலையில், “ட்ரொட்ஸ்கிசம் காட்டிகொடுக்கப்பட்டது: பப்லோவாத திருத்தல்வாதத்தின் அரசியல் வழிமுறையை சோசலிச தொழிலாளர் கட்சி ஏற்றுக்கொள்கிறது” என அது வெளியிட்ட ஆவணத்தில், பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகத்தின் தேசியக் குழு பிரகடனம் செய்ததாவது: சோசலிச தொழிலாளர் கட்சியுடனான எமது தொடர்பாடல்களில், புரட்சிகரக் கட்சிகள் இன்றி ‘நிரந்தரப் புரட்சியை உறுதிப்படுத்துவது’ பற்றி பேசுவது அபத்தமானது எனத் துணிவுடன் தெரிவித்ததன் மூலம், நாம் ஒரு பலமான எதிர் நடவடிக்கையை தூண்டிவிட்டோம். எவ்வாறாயினும், நடைமுறையில் பப்லோவாதிகளும் சோசலிச தொழிலாளர் கட்சியினரும் அல்ஜிரியாவிலும் கியூபாவிலும் உள்ள குட்டி முதலாளித்துவ தேசியவாதத் தலைவர்களின் முன்னால் தாம் சரண்டைந்து கிடப்பதையே காண்கின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பான எமது நோக்கு சோசலிச தொழிலாளர் கட்சியினுடைய நோக்குக்கு எதிராக இருப்பது வெறுமனே நிகழ்வுகளின் ஒரு வரிசையை யாரால் நன்கு விளக்க முடிகிறது என்பதில் மட்டுமல்ல. அதைவிட இது எங்களுக்கு பின்தங்கிய நாடுகளில் ட்ரொட்ஸ்கிசத் தலைமையின் உண்மையான கொள்கை மற்றும் வேலைத்திட்டம் சம்பந்தமான பிரச்சினையாகும். ஏனைய எல்லா மார்க்சிச தத்துவத்தைப் போலவே, நிரந்தரப் புரட்சி தத்துவமும், நடவடிக்கைக்கான ஒரு வழிகாட்டியாகும்; அதன் ஆய்வுகளின் இலக்கு, சுயாதீனமான மற்றும் தீர்க்ககரமான தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் விவசாயிகளுக்குள் உள்ள அதன் கூட்டினரையும் அவர்களது சொந்த சோவியத் அதிகாரத்துக்காக ஒழுங்கமைக்கும் தேவையை சுட்டிக் காட்டுகின்றது. ‘நிரந்தரப் புரட்சி தத்துவத்தை உறுதிப்படுத்துவது என்பது’ அங்கீகரிக்கப்பட்ட தேசியவாதத் தலைவர்களுக்கு மார்க்சிஸ்டுகள் அளிக்கும் பாராட்டு அல்ல, மாறாக மார்க்சிஸ்டுகள் தாமே பொறுப்பெடுத்துக் கொள்ளும் ஒரு கடமையாகும். [32]

15-5. எல்லாவற்றுக்கும் மேலாக, கியூபாவிலும் அல்ஜீரியாவிலுமான வெற்றிகள் என்பதாக சோசலிச தொழிலாளர் கட்சி சொல்பவை, பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளின் வெகுஜனப் போராட்டங்களில் ஸ்ராலினிசத்தினதும் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தினதும் ஒட்டுமொத்த ஐந்தொகை மதிப்பீட்டின் பாகமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். “கியூபா, அல்ஜீரியா இரண்டையும் பற்றி புரிந்துகொள்ள, அவற்றுடன் சேர்த்து ஈராக், ஈரான், எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, பொலிவியா, இந்தோ-சீனா, மற்றும் ஏனைய பல நாடுகளின் அனுபவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வில் இருந்து, ‘இரண்டு கட்ட’த் தத்துவத்தில் இருந்து செயற்பட்ட தொழிலாள வர்க்கத் தலைவர்கள் ஆற்றிய உண்மையான பாத்திரம் வெளியில் வரும். ஸ்ராலினிசம் ‘ஒரு முற்போக்கான பாத்திரத்தை ஆற்றுவதற்கு நெருக்கப்படுவதற்கு” எல்லாம் தொலைவில் உண்மையில் இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் அங்கிருந்த முன்னேறிய தொழிலாளர்களை நிராயுதபாணிகளாக்கி காட்டிக்கொடுத்ததுடன் இதன் மூலம் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துக்கு தற்காலிக ஸ்திரநிலையை ஸ்தாபித்துக்கொள்வதற்கு உதவியது. தற்போதைய கட்டத்தில் ஏகாதிபத்தியம் அதிகப்பட்ச நம்பிக்கை கொள்ள முடிந்திருந்ததும் அதில்தான். இந்த உள்ளடக்கத்திலேயே மற்றும் இந்த உள்ளடக்கத்தில் மட்டுமே ‘நிரந்தரப் புரட்சி தத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது’.”[33]

15-6. பிரெஞ்சு அரசாங்கத்துக்கும் தேசிய விடுதலை முன்னணி (FLN) தலைமைக்கும் இடையில் அல்ஜீரிய “சுதந்திரத்துக்காக” 1962ல் கையெழுத்தான எவியன் உடன்படிக்கை, (Evian agreement) “அல்ஜீரிய மக்களுக்கும், அரபிய மற்றும் காலனித்துவப் புரட்சிக்கும் ஒரு பெரும் வெற்றியாகும்” என்ற சோசலிச தொழிலாளர் கட்சியின் கூற்றையும் சோசலிச தொழிலாளர் கழகம் எதிர்த்தது. இந்தியா மற்றும் இலங்கை தொடர்பாக இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தெளிவாக விரிவுபடுத்திய மதிப்பீடு போல், இத்தகைய யுத்தத்துக்குப் பிந்திய சுதந்திர உடன்படிக்கைகள் சம்பந்தமான நான்காம் அகிலத்தின் மதிப்பீட்டை, அதாவது இத்தகைய உடன்படிக்கைகளின் கீழேயே ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்கும் பங்கினை தேசிய முதலாளித்துவம் எடுத்துக்கொண்டது,” என்பதை சோசலிச தொழிலாளர் கழகம் பாதுகாத்தது. அது விளக்கியதாவது: “அல்ஜீரிய குட்டி முதலாளித்துவம் பிரெஞ்சுக் காலனித்துவம் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்கு முயற்சித்த அதேவேளை, வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு மூலதனத்தின் அடிப்படை நலன்களை உத்தரவாதம் செய்யும் விசுவாசியாகவும் தொடர்ந்தும் இருந்தது. அத்தகைய ஒரு விருப்பத்தின் வெளிப்பாடாகவே எவியன் உடன்படிக்கைகளை நாம் காண்கின்றோம். தேசிய விடுதலை முன்னணி (FLN) தலைவர்கள் தமது இயல்புக்கு ஏற்றவாறு இத்தகைய விருப்பத்துக்கு உண்மையானவர்களாக இருக்கின்றனர்.”[34]

15-7. 1953 பிளவுக்கு வழிவகுத்த தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தாமல் இருந்த சோசலிச தொழிலாளர் கட்சியும் மற்றும் அதுவரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சார்ந்தவையாகவும் தலைமைத்துவத்துக்காக பாரம்பரியமாக அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளை நம்பியிருந்தவையாகவும் இருந்த பல இலத்தீன் அமெரிக்க குழுக்களும், 1963 ஜூனில் ரோமில் நடந்த ஏழாவது காங்கிரஸில் பப்லோவாதிகளுடன் உத்தியோகபூர்வமாக மறு ஐக்கியமடைந்தனர். நிரந்தரப் புரட்சி தத்துவத்தை முழுமையாக நிராகரிப்பதான வகையில், பப்லோவாத “உலக மாநாட்டின்” பிரதான தீர்மானம், கியூப புரட்சியில் இருந்து என்ன முடிவுக்கு வந்திருந்தது என்றால், “பின்தங்கிய நாடுகளில் எதிரியின் பலவீனம், ஒரு மழுங்கிய ஆயுதத்தைக் கொண்டே (தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு ஒரு லெனினிசக் கட்சி போராடாமல்) ஆட்சிக்கு வருவதற்கான சாத்தியத்தை திறந்துவிட்டுள்ளது” என முடிவடைந்தது. காஸ்ட்ரோ மற்றும் கெரில்லா “ஆயுதப் போராட்டத்தை” பப்லோவாதிகள் புகழ்ந்தமை சிலி, ஆர்ஜென்டினா, பொலிவியா மற்றும் லத்தீன் அமெரிக்கா பூராவும் தொழிலாள வர்க்கத்தில் இருந்து புரட்சிகர சக்திகளை தனிமைப்படுத்துவதற்கு சேவை செய்வதாகவும் வரலாற்றுத் தோல்விகளுக்குப் பங்களிப்பு செய்வதாகவும் அமைந்து ஒரு அழிவுகரமான முட்டுச் சந்தாக நிரூபணமாயின. இலங்கையில் “ஒரு மழுங்கிய ஆயுதத்தின்” செயற்பாடுகளை முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு கொடையளித்திருந்த லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் மறு ஐக்கியத்தையும் புதிய ஐக்கிய செயலகம் உருவாக்கப்படுவதையும் முழுமையாக ஆதரித்தனர். அதற்குப் பிரதியுபகாரமாக, லங்கா சம சமாஜக் கட்சியை ஒரு வெகுஜன ட்ரொட்ஸ்கிசக் கட்சியாக சோசலிச தொழிலாளர் கட்சி புகழ்ந்தது.


[31]

(Trotskyism Versus Revisionism (ட்ரொட்ஸ்கிசம் எதிர் திரிபுவாதம்) பாகம்-1 ப.312).

[32]

[Trotskyism Versus Revisionism, பாகம் 2. பக். 244]

[33]

[Trotskyism Versus Revisionism, பாகம் 2. பக். 250]

[34]

[Trotskyism Versus Revisionism, பாகம் 2. பக். 248]