Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

போல்ஷிவிசத்தின் மூலங்கள்

10. ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சிக்குள் திருத்தல்வாத மற்றும் சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிராக போல்ஷிவிசப் போக்கு, அரசியல்ரீதியாக லெனின் வழிநடத்திய போராட்டத்தில் இருந்து (மெய்யியல் பிளெக்கானோவ் வழிநடத்தியதில் இருந்து) வெளிப்பட்டது. (ஆரம்பத்தில் SPD யின் முக்கிய முதன்மை தத்துவார்த்தவாதியான காவுட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிலைப்பாட்டை அடித்தளமாகக் கொண்டிருந்த) லெனின், தொழிலாள வர்க்கத்தினுள் தன்னிச்சையாக சோசலிச நனவு வளர்ந்துவிடுவதில்லை, மாறாக இது என்றும் தொழிலாளர் இயக்கத்திற்குள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னுடைய மிக முக்கியமான நூலான என்ன செய்ய வேண்டும் (What Is To Be Done) இல் ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சியின் வேலைத்திட்டத்தில் இருந்து பின்வரும் அதிமுக்கிய பத்தியை லெனின் மேற்கோளிட்டார்:

... நவீனகால சோசலிச நனவானது ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையில் மட்டுமே எழ முடியும். உண்மையில், நவீன பொருளாதார விஞ்ஞானமானது நவீன தொழில்நுட்பத்தை போன்ற அளவிற்கு சோசலிச உற்பத்திக்கான ஒரு நிபந்தனையாக இருக்கிறது; பாட்டாளி வர்க்கம் எவ்வளவு விரும்பினாலும் இரண்டில் எந்த ஒன்றையும் தோற்றுவிக்க இயலாது; இரண்டுமே நவீன சமூக நிகழ்வுபோக்குகளில் இருந்து தான் தோன்றுகின்றன. விஞ்ஞானத்தின் வாகனம் பாட்டாளி வர்க்கம் அல்ல; மாறாக முதலாளித்துவ புத்திஜீவிகள் ஆவர்; இந்த அடுக்கின் தனி நபர்களுடைய சிந்தனைகளில்தான் நவீன சோசலிசம் உற்பத்தியானது; அவர்கள்தான் அதை மிகவும் அறிவார்ந்த முறையில் முன்னேறியிருந்த தொழிலாள வர்க்கத்திற்கு கொண்டுசென்றனர்; அவர்கள் (பிந்தையவர்கள்) தங்கள் பங்கிற்கு அதனை இதை அனுமதிக்கக்கூடிய நிலைமைகள் இருந்த தொழிலாள வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தில் அறிமுகப்படுத்தினர். இவ்விதத்தில் சோசலிச நனவு என்பது வெளியில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கு அதன் வர்க்கப் போராட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவது ஆகும்; அதற்குள்ளேயே, தன்னெழுச்சியாக வெளிவரவில்லை தன்னெழுச்சியாக எழுகின்ற ஒன்றும் அல்ல. [2]

11. இவ்விதத்தில் புரட்சிகர கட்சியின் மையப்பணி தொழிலாளர் இயக்கத்திற்குள் மார்க்சிச தத்துவத்தை முழுவதும் நிரப்புவதாக இருந்தது. லெனின் எழுதினார், "உழைக்கும் வர்க்கத்தினர் தங்களது இயக்கத்தின் பாதையில் தாங்களே சுயாதீனமாக ஒரு கருத்தியலை வடிவமைத்துக் கொள்வதை பற்றி பேச்சே இருக்க முடியாது என்பதால், ஒரே விருப்பத்தேர்வு - பூர்சுவா அல்லது சோசலிச கருத்தியல். இடைப்பட்ட பாதை என்ற ஒன்று கிடையாது (ஏனெனில் மனித குலம் ஒரு 'மூன்றாவது' கருத்தியலை உருவாக்கியிருக்கவில்லை, தவிரவும், வர்க்க முரண்பாடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒரு போதும் ஒரு வர்க்கமல்லாத அல்லது வர்க்கத்திற்கு மேற்பட்டதொரு கருத்தியல் இருக்க முடியாது. எனவே எவ்விதத்திலும் சோசலிச கருத்தியலை தாழ்த்தினாலும், அதில் இருந்து சிறிதளவு மாறுபடுவதும் முதலாளித்துவ கருத்தியலை வலுப்படுத்துவது என்ற பொருள் ஆயிற்று."[3] தங்களது வேலையை தன்னிச்சையாக அபிவிருத்தியுறும் தொழிலாள வர்க்க நடவடிக்கை வடிவங்களுக்கு ஏற்ப வெறுமனே மாற்றிக் கொள்கின்ற, இவ்வாறு சமூகப் புரட்சியின் அகன்ற வரலாற்று இலக்கில் இருந்து அன்றாட நடைமுறை போராட்டங்களை பிரித்தகற்றுகின்ற அனைத்து போக்குகளையும் லெனின் தொடர்ந்து எதிர்த்தார். தொழிலாள வர்க்கத்துக்குள்ளான மார்க்சிச அபிவிருத்திக்கு முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க போக்குகளால் அளிக்கப்படும் அரசியல் மற்றும் தத்துவார்த்த நெருக்குதலுக்கு எதிரான ஒரு தொடர்ந்த போராட்டம் அவசியமானதாக இருக்கிறது என்பதை தனது சகாப்தத்தின் வேறு எந்தவொரு சோசலிஸ்டை விடவும் லெனின் மிகத் தெளிவாக அறிந்திருந்தார். இங்கு தான் தத்துவம், அரசியல் மூலோபாயம் மற்றும் கட்சி கட்டமைப்பு ஆகிய விஷயங்களில் திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் பல்வேறு வடிவங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் -இது முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க போக்குகளால் அளிக்கப்பட்ட அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான நெருக்குதலுக்கு எதிரான ஒரு தொடர்ந்த போராட்டம்- அத்தியாவசியமான முக்கியத்துவம் இருக்கிறது.

12. 1903ம் ஆண்டு நடந்த ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் இரண்டாவது அகல் பேரவை போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் போக்குகள் தோன்றுவதற்கு வழிவகுத்த பிளவில் முடிவுற்றது. ஆரம்பத்தில் கட்சி விதிகள் மற்றும் கட்டமைப்பு தொடர்பான இரண்டாந்தர பிரச்சினைகள் போன்று தோற்றமளித்த விஷயங்கள் காரணமாக இந்த பிளவு எதிர்பாராமல் நிகழ்ந்தது என்றாலும், இந்த மோதல் RSDLP இல் இருந்த அரசியல் சந்தர்ப்பவாதம் என்னும் பெரும் பிரச்சினையோடும், அதற்கும் அப்பால், அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படை விஷயங்களோடும் பிரிக்கமுடியாமல் பிணைப்பு கொண்டிருந்தமை கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவானது. கட்சி அமைப்பு பிரச்சினையை பொறுத்தவரையில், கட்சி அமைப்பு குறித்த கேள்வி சம்பந்தமாக, லெனின் ஓரடி முன்னால் , ஈரடி பின்னால் (One Step Forward, Two Steps Back) என்ற நூலில் விளக்கியவாறு, "வேலைத்திட்டத்தில் சந்தர்ப்பவாதம் என்பது தந்திரோபாயங்களில் சந்தர்ப்பவாதம் மற்றும் கட்சி அமைப்பில் சந்தர்ப்பவாதத்துடன் இயல்பாக இணைக்கப்பட்டுள்ளது"[4] அவர் மேலும் கூறினார்: "எந்தக் கட்சியின் சந்தர்ப்பவாதப் பிரிவும் எப்பொழுதும் அனைத்து பிற்போக்குத்தனத்திற்கும் ஆதரவு கொடுத்து நியாயப்படுத்தும்; அது கட்சி வேலைத்திட்டமாயினும், தந்திரோபாயமாயினும் மற்றும் அமைப்பு பற்றி என்றாலும்கூட அவ்வாறே இருக்கும்."[5] தன்னுடைய பகுப்பாய்வை ஒரு குறிப்பிடத்தக்க நினைவுகூரத்தக்க கருத்தை கூறியதின் மூலம் லெனின் முடிக்கிறார்:

அதிகாரத்திற்கான அதன் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கு நல்ல அமைப்பை தவிர வேறு எந்த ஆயுதமும் கிடையாது. முதலாளித்துவ உலகில் இருக்கும் பெரும் குழப்பம் நிறைந்த போட்டியினால் சிதறுண்டு, மூலதனத்திற்காக கட்டாய உழைப்பு கொடுக்க வேண்டியதால் தாழ்ந்த நிலையில், மிக வறிய நிலை ஆதரவற்ற நிலை, கிட்டத்தட்ட காட்டுமிராண்டித்தனம் மற்றும் இழிசரிவு ஆகியவற்றின் "மட்டமான நிலைகளுக்கு" எப்பொழுதும் மீண்டும் மீண்டும் தள்ளப்பட்ட நிலையில், பாட்டாளி வர்க்கமானது, மில்லியன் கணக்கான உழைப்பாளிகளை தொழிலாள வர்க்கத்தின் ஒரு படையாக இணைத்திருக்கும் அமைப்பின் சடரீதியான ஐக்கியத்தால் வலிமையூட்டப்படும் மார்க்சிச கோட்பாடுகளின் மீதான கருத்தியல் ரீதியான ஒருமைப்பாட்டின் வழியாக தான் ஒரு வெல்லமுடியாத படையாக தவிர்க்கப்படமுடியாமல் மாறும்.[6]

13. இரண்டாம் அகல் பேரவைக்கு பின்னர், சமரசத்திற்கு இடமில்லாத லெனினுடைய நிலைப்பாடு RSDLP யின் பல பிரிவுகளிலும் கடுமையான குறைகூறலைக் கண்டது; இவர்தான் பிளவிற்கு காரணம் என்று அவை பொறுப்புக் கூறின. உள்கட்சிப் போராட்டத்தில் அவருடைய அணுகுமுறை கடுமையான முறையில் இளம் ட்ரொட்ஸ்கியினால் குறைகூறலுக்கு உட்பட்டது (அகல் பேரவை நடைபெற்றபோது அவர் 23 வயதானவராகத்தான் இருந்தார்); அதேபோல் ரோசா லுக்செம்பேர்க்கும் கடுமையாக சாடினார். மிகச்சிறந்த புரட்சியாளர்களும் புரிந்து கொண்டிராததாக இருந்தது என்னவென்றால், கட்சிக்குள்ளான தத்துவார்த்த, அரசியல், மற்றும் அமைப்பு மோதல்களில் இருந்த சடரீதியான உறவுமுறை மீதும் கட்சிக்கு வெளியே மிகப்பெரும் அளவில் அபிவிருத்தியுறும் வர்க்க மறுசீரமைவுகள் மற்றும் வர்க்க மோதல் குறித்த புறநிலை சமூக நிகழ்வுபோக்கு மீதும் லெனினுக்கு இருந்த ஊடுருவும் தேர்ந்த உட்பார்வை தான். அன்றைய நாளின் அநேக சோசலிஸ்டுகள் RSDLP க்கு உள்ளேயும் மற்றும் அதன் கோஷ்டிகளுக்கு இடையிலுமான மோதலை, ஒரு அகநிலைவாத நோக்கில், அரசியல் ரீதியாக உறுதிப்பாடற்றதொரு தொழிலாள வர்க்கத்தின் மீது செல்வாக்கு பெறும் பொருட்டு போட்டியிடும் போக்குகளின் மோதல் என்பதாக விளக்க முற்பட்டனர்; லெனின் இந்த மோதலை வர்க்க உறவுகளில் - தொழிலாள வர்க்கம் மற்றும் முதலாளி வர்க்கம், மற்றும் தொழிலாள வர்க்கத்துக்குள்ளேயே பல்வேறு அடுக்குகளுக்கு இடையே என இரண்டு வகைகளிலும் - ஏற்பட்ட உண்மையான மாற்றங்களில் ஒரு புறநிலையான, வரலாற்று ரீதியாக தீர்மானிக்கப்பட்ட வெளிப்பாடாக விளக்கினார். இவ்விதத்தில் கட்சிக்குள் இருக்கும் போக்குகளின் போராட்டத்தையும் புரட்சிகர சகாப்த வளர்ச்சி பற்றிய "முக்கிய குறியீடு" என்ற வகையில் லெனின் ஆராய்ந்தார். இரண்டாவது அகல் பேரவையில் எழுந்த கடும் பூசல் விவகாரத்தில், அரசியலமைப்பு கேள்விக்குள் மறைந்திருந்த அத்தியாவசிய பிரச்சினையானது ரஷ்ய தொழிலாள வர்க்கம் மற்றும் RSDLP க்கு தாராள முதலாளித்துவம் மற்றும் அதன் அரசியல் கட்சிகளுடனான உறவுமுறை குறித்ததாகும். கட்சி உறுப்பினர்களின் பொறுப்புகளை வரையறுப்பது போன்ற கட்சி அமைப்பு பிரச்சினைகளில் மென்ஷிவிக்குகள் கொண்டிருந்த சந்தர்ப்பவாத அணுகுமுறையின் மையத்தானத்தில், ரஷ்ய தாராளவாதத்தின்பால் சமரசம் மற்றும் ஏற்கும் தன்மையுடைய போக்கு காணப்பட்டது. நாளடைவில், ரஷ்யாவில் அரசியல் நிலைமை கனிந்தவுடன் அமைப்புப் பிரச்சினைகளின் பாரிய தாக்கங்கள் இன்னும் வெளிப்படையாக வந்தன. ட்ரொட்ஸ்கியே பின்னர் ஒப்புக் கொண்டதைப் போல, பாரிய மாற்றங்கள் நடைபெறும் பல நிகழ்வுகளின் பின்னணியில் லெனினின் அரசியல் வழிமுறைகள் குறித்த அவரது சொந்த புரிதல் ஆழமுற்றது. "வர்க்கம் மற்றும் கட்சிக்கு இடையில், தத்துவம் மற்றும் அரசியலுக்கு இடையில், மற்றும் அரசியல் மற்றும் அமைப்புக்கு இடையிலான கூடுதல் துல்லியமான கருதுகோள், அதாவது போல்ஷிவிக் கருதுகோளை அவர் செதுக்கினார்.... எனக்கு 'பிளவுவாதம்', 'இடையூறு' எனத் தோன்றியதெல்லாம் இப்போது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர விடுதலைக்கான ஒரு வணங்கத்தக்க, ஒப்பிடமுடியாத வகையில் தொலைநோக்கானதொரு போராட்டமாக தோன்றுகிறது".[7]


[2]

V.I. Lenin Collected Works, Volume 5, (Moscow: Foreign Languages Publishing House, 1961), pp. 383-84.

[3]

Ibid, p. 384.

[4]

Lenin Collected Works, Volume 7 (Moscow: Progress Publishers, 1965), p. 398.

[5]

Ibid, p. 395.

[6]

Ibid, p. 415.

[7]

“Our Differences,” in The Challenge of the Left Opposition (1923-25) [New York: Pathfinder Press, 2002), p. 299.