Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

சடவாதத்தை லெனின் காத்தல்

17. பிந்தைய ஆண்டுகளில், லெனினுடைய படைப்பு மிக உயர்ந்த தத்துவார்த்த நனவால் தனித்துவம் பெற்றுள்ளதாக ட்ரொட்ஸ்கி கூறினார். சோசலிச இயக்கத்தை பாதை விலக்கும் அச்சுறுத்தலை கொண்டிருந்த மெய்யியல் கருத்துவாதம் மற்றும் அகநிலைவாதத்தின் பல்வேறு வடிவங்களுக்கும் எதிராக தளர்ச்சியின்றி மார்க்சிசத்தை அவர் பாதுகாக்க முற்பட்டதில் இது குறிப்பான வெளிப்பாட்டைக் கண்டது. சோசலிசத்தை அறநெறிக் கோட்பாடுகளை அடித்தளமாகக் கொள்வதுடன் பெரும்பாலும் தொடர்புபடுத்தப்படுவதான நவீன கான்ரியன்வாதத்தில் மட்டுமன்றி, சோசலிச புரட்சியை அளப்பரிய துணிவு கொண்ட விருப்பத்தின் உற்பத்தி விளைவாக சித்தரிக்கும் ஷோபனர் மற்றும் நீட்ஷேயின் செல்வாக்கை வெளிப்படுத்தும் வெளிப்படையான பகுத்தறிவற்ற கருத்தாக்கங்களிலும் கூடவும், சோசலிச இயக்கத்துக்குள்ளாக மெய்யியல் கருத்துவாதத்தின் (Philosophical Idealism) பரவலான தாக்கத்தால் ஏற்படக் கூடிய தீவிரமான அபாயம் குறித்து லெனின் அறிந்து வைத்திருந்தார் என்பது சடவாதமும் அனுபவவாத விமர்சனமும் (Materialism and Empirio-Criticism) (1908-09) என்ற நூலை எழுதுவதற்கு அவர் ஒரு முழு வருடத்தை அர்ப்பணிக்க முடிவு செய்ததில் பிரதிபலித்தது. இத்தகைய கருத்துவாத பகுத்தறிவின்மையானது முதலாளித்துவ சமூகம் மற்றும் புரட்சிகர போராட்டத்தின் புறநிலை அடித்தளங்களை ஆளும் விதிகளை விஞ்ஞானபூர்வமாக புரிந்து கொள்வதுடன் இணக்கமற்றதாக இருக்கும் என்று லெனின் கருதினார்.

18. "மார்க்சிச மெய்யியல் சடவாதம்தான்" என்று லெனின் வலியுறுத்தினார். சடவாதம் மட்டுமே "தொடர்ச்சியான உறுதி கொண்டிருப்பதாகவும், இயற்கை விஞ்ஞானத்தின் அனைத்து படிப்பினைகளுக்கும் உண்மையானதானதாகவும், மூடநம்பிக்கை, போலித்தனம் மற்றும் இவை போன்றவற்றுக்கு விரோதமானதாகவும் நிரூபணம் செய்யப்பட்டிருக்கும் ஒரே மெய்யியல்" என்று அவர் கூறினார். "ஜேர்மன் தொல்சீர் மெய்யியலின், குறிப்பாக ஹெகல் அமைப்பின், -இது தனது பங்குக்கு ஃபயர்பாக்கின் சடவாதத்திற்கு இட்டுச் சென்றது- சாதனைகளைக் கொண்டு வளப்படுத்தியதன் மூலம் மார்க்சிசமானது சடவாதத்தை அது 18ம் நூற்றாண்டில் இருந்த வடிவத்தை விட உயர்ந்த நிலைக்கு அபிவிருத்தி செய்திருந்ததை அவர் விளக்கினார். ஜேர்மனிய தொல்சீர் மெய்யியலின் மிகப் பெரிய கொடை இயங்கியலை விரிவாக்கம் செய்தது ஆகும்; இதனை லெனின் "தனது முழுமையான, ஆழமான மற்றும் மிகவும் திறம்பட்டதொரு வடிவத்தில் இருக்கும் அபிவிருத்தியின் கோட்பாடு என்றும், இது முடிவின்றி அபிவிருத்தியடையும் பொருள்களின் ஒரு பிரதிபலிப்பை நமக்கு அளிக்கும் மனித அறிவின் ஒப்பீட்டுத்தன்மையான கொள்கைவழி என்றும்" வரையறுத்தார்.[9] முதலாம் உலகப் போரின் தறுவாயில் எழுதும்போது, லெனின் மார்க்சிசத்தின் மெய்யியல் நிலைப்பாட்டிலிருந்து இந்த சுருக்கமான விளக்கத்தை வழங்கினார்:

மார்க்ஸ் மெய்யியல் சடவாதத்தை அதன் முழு ஆழத்திற்கு ஆழப்படுத்தி அபிவிருத்தி செய்து, இயற்கையை அறிந்துகொள்ளல் மனித சமூகத்தை அறிந்துகொள்ளல் போன்றவற்றை விரிவுபடுத்தினார். அவருடைய வரலாற்று சடவாதம் விஞ்ஞானரீதியான சிந்தனைப் போக்கில் மிகப் பெரிய சாதனை ஆகும். வரலாறு மற்றும் அரசியல் மீதான பார்வைகளில் முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்த குழப்பங்களும் தன்னிச்சை செயல்பாட்டுத்தனங்களும், ஆச்சரியமூட்டும் வகையில் ஒருங்கிணைந்த மற்றும் இயைந்ததொரு விஞ்ஞான தத்துவத்தின் மூலம் மாற்றப்பட்டன. இத்தத்துவம், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக, எவ்வாறு சமூக வாழ்க்கையின் ஒரு அமைப்பில் இருந்து மற்றொரு உயர்ந்த அமைப்பு அபிவிருத்தியடைகிறது என்பதை - உதாரணமாக, நிலப் பிரபுத்துவத்தில் இருந்து எவ்வாறு முதலாளித்துவம் வளர்ச்சியுறுகிறது என்பதை- காட்டுகிறது.

மனிதனின் அறிவு அவனிடம் இருந்து சுதந்திரமாயுள்ள இயற்கையை (அதாவது அபிவிருத்தியுறும் சடம்) பிரதிபலிப்பது போல் மனிதனுடைய சமூக அறிவும் (அதாவது, அவனது பல்வேறு பார்வைகள் மற்றும் கொள்கைவழிகள் - மெய்யியல்வாத, மத, அரசியல், மற்றும் இன்ன பிற) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை பிரதிபலிக்கிறது. அரசியல் அமைப்புக்கள் பொருளாதார அடிப்படையின் மீதான ஒரு மேல்கட்டுமானம் ஆகும். உதாரணமாக தற்கால ஐரோப்பிய நாடுகளின் பல அரசியல் வடிவங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவம் கொண்டுள்ள மேலாதிக்கத்தை வலுப்படுத்தத்தான் உதவுகின்றன என்பதை நாம் காண்கிறோம்.

மார்க்சிச மெய்யியலானது மனிதகுலத்துக்கு, குறிப்பாக தொழிலாள வர்க்கத்துக்கு, அறிவின் சக்திமிகு ஆயுதங்களை அளித்திருக்கும் மிக அரிய முறையில் நிறைவுற்றிருக்கும் ஒரு மெய்யியல் சடவாதம் ஆகும்.[10]

19. 1922ல் Georg Lukács இன் வரலாறும் வர்க்க நனவும் (History and Class Consciousness) என்னும் புத்தகம் வெளியிடப்பட்டதில் தொடங்கி, சடவாதத்திற்கு எதிராக இயங்கியலை முன்நிறுத்துவதற்கும், சடவாதம் மற்றும் அனுபவவாத விமர்சனம் (Materialism and Empirio-Criticism) போன்ற பணிகளைக் கூட "கொச்சையான சடவாதத்திற்கு" உதாரணங்களாக காட்டி -1914-15ல் ஹெகலின் தர்க்கவியலின் விஞ்ஞானம் (Science of Logic) மீது ஒரு முறையான ஆய்வினை மேற்கொண்டபின் இவற்றை லெனின் நிராகரித்து விளக்கியதாகக் கூறப்படுகிறது- மதிப்புக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கும் சோசலிச இயக்கத்திற்குள்ளாகவும் அதன் சுற்றுப்புறத்திலும் கருத்துவாத மெய்யியலில் கல்விபெற்ற, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அறிவுஜீவிகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய கூற்றுகள் லெனினின் மெய்யியல் குறிப்புகள் (Philosophical Notebooks) என்ற புத்தகத்தில் மட்டுமன்றி அவரது ஒட்டுமொத்த அறிவுஜீவி வாழ்க்கைப் புத்தகத்தின் மீதான ஒட்டுமொத்த திரித்தல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன; சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் வெற்றி, ஜேர்மனியில் பாசிசத்தின் எழுச்சி, மற்றும் ஐரோப்பாவில் தத்துவார்த்த ரீதியாக -கல்வியூட்டப்பட்ட புரட்சிகர காரியாளர்களின் பெரும் பிரிவினரின் அழிப்பின் பின்னணியில் வலிமை திரட்டிய தொல்சீர் மார்க்சிசத்தின் அஸ்திவாரங்கள் மற்றும் மரபியம் மீதான முதலாளித்துவத்தின் தாக்குதலில் இது ஒரு பெரும் பங்கினை ஆற்றியது. உயர் சிந்தனையாளர்கள் முற்றிலும் வனப்புரைப் புகழ் சூட்டிய "இயங்கியல்" லெனின் கூறிப்பிட்ட "வளர்ச்சிக் கோட்பாட்டுடன்" எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை; "பொருட்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதித்துவங்கள், எண்ணங்களை, அவற்றின் அத்தியாவசியமான இணைப்பு, தொடரிணைவு, நகர்வு, மூலம், மற்றும் முடிவில் புரிந்து கொள்கின்ற" ஏங்கெல்சால் விவரிக்கப்படும் முழுமையான விஞ்ஞான முறையுடன் ஒப்பிட அவசியமே இல்லை.[11] இன்னும் கூறினால், மனிதனுக்கு முன்னரே இருந்து வருவதும் அவனிடமிருந்து சுதந்திரமானதுமான இயற்கையை விலக்கி வைக்கப்பட்டதொரு "இயங்கியலாக" இது இருந்தது. ஒரு திருப்தியுறாத அறிவுஜீவிக்கும், அந்த தனிநபர் இயற்கை, சமூகம் மற்றும் நனவின் அபிவிருத்தியை ஆளும் புறநிலை விதிகளால் தளைப்படாமல் தான் பொருத்தமானதென கருதும் வகையில் உலகைப் "படைக்கும்" சுதந்திரம் கொண்டிருக்கக்கூடிய, ஒரு சூழலுக்கும் இடையிலான அகநிலையாக-கற்பனை செய்யப்பட்ட ஒரு பரிவர்த்தனை குறித்த போலி-இயங்கியலாக அது இருந்தது.


[9]

“Three Sources and Three Component Parts of Marxism,” in Collected Works, Volume 19 (Moscow: Progress Publishers, 1968),

[10]

Ibid, p. 25.

[11]

(Marx-Engels Collected Works, Volume 25, p. 23.)