ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

ஆசிரிய தலையங்கம்

ஒரு தசாப்தத்திற்கும் மேலான குறுக்கீடுக்குப் பின்னர் இந்த இதழோடு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு தத்துவார்த்த இதழ் என்ற வகையில் நான்காம்அகிலத்தின் தொடர்ச்சியான காலாண்டு வெளியீடானது புதுப்பிக்கப்படுகிறது. தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) முக்கிய பொறுப்பாய்க் கொண்டிருந்த நான்காம் அகிலம் இதழ் வெளியீடானது, 1975ல் அனைத்தும் கைவிடப்பட்டது. அந்த ஆண்டுக்குப் பின்னர் 1979 இலும் மற்றும் கடைசியாக 1982 இல் என இரு இதழ்கள் மட்டுமே வெளிவந்தன.

நான்காம் அகிலம் இதழுக்கு நேர்ந்த கதியானது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் சீரழிவு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுக்குள்ளே அதன்விளைவாய் எழுந்த நெருக்கடியின் ஒரு செறிவான வெளிப்பாடாகும். கடந்த ஆண்டு அனைத்துலகக் குழு நிலைநாட்டியவாறு, 1985-86ல் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பொறிவு ஹீலி-பண்டா-சுலோட்டர் தலைமையின் நீடித்த தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத சீரழிவின் விளைபொருளாகும். 1970களின் தொடக்கத்தில் இருந்து, நான்காம் அகிலத்தை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக கட்டுவது என்பது அதிகரித்தளவில் பிரித்தானிய பகுதியின் குறுகிய அரசியல் தேவைகளுக்கு கீழ்ப்படுத்தப்பட்டது. அது அதன் தேசியவாத நலன்களை முன்னெடுப்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்குள்ளே அதன் அரசியல் செல்வாக்கை திட்டமிட்டு துஷ்பிரயோகம் செய்தது.

பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் காரியாளர்களைப் பயிற்ற்றுவிப்பதிலும் 1960கள் முழுவதிலும் நான்காம் அகிலம் இதழ் முக்கிய பாத்திரம் ஆற்றியிருப்பினும், WRP தலைமையானது இதழின் வெளியீட்டை தொடர்வதற்கான அனைத்து ஆர்வத்தையும் இழந்தது. பிரிட்டிஷ் பகுதியின் ஒரு மாதாந்திர “தத்துவார்த்த ஏட்டை” வெளியிடுவதன் மூலம் WRP இன் தேவைகளுக்கு சிறப்பாக சேவைசெய்ய முடியும் என்ற முடிவுக்கு ஹீலி வந்தார். அதற்கு Labour Review என்று தலைப்பிடப்பட்டது.

அதன் வசம் அதிகமான தொழில்நுட்ப வசதிகள் இருந்த போதிலும், WRP நான்காம் அகிலம் இதழை அச்சிடும் பணி அமெரிக்க பிரிவான வேர்க்கர்ஸ் லீக்குக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று 1979 இல் வற்புறுத்தியது, அமெரிக்காவின் பிற்போக்கான வூரிஸ் சட்டத்தின் காரணமாக வேர்க்கர்ஸ் லீக் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் நேரடி உறுப்பினராவதற்கு தடைசெய்யப்பட்டாலும் கூட அது இந்தப் பணியை ஏற்றது. ஆயினும் WRP ஆனது சஞ்சிகையின் வெளியீடு, நிதி மற்றும் விநியோகம் ஆகியவற்றின் எந்தவொரு அம்சத்திற்கும் எந்தவொரு பொறுப்பையும் ஏற்கவில்லை.

நான்காம் அகிலம் வெளியீட்டுக்கு ஆதரவு தர எந்த வகையிலும் WRP மறுப்பதானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்ட அடித்தளங்களை ஹீலி மறுதலிப்பதோடு இணைந்திருந்தது. நான்காம் அகிலம் வெளிச்சத்திற்கு வருமுன்னர், அனைத்துலகக் குழுவானது, கடந்த தசாப்தம் முழுவதும் ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஒவ்வொன்றையும் காட்டிக்கொடுத்த தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பேரினவாத மற்றும் சந்தர்ப்பவாத அயோக்கியர்களிடம் இருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள வேண்டி இருந்தது.

அப்போது உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களையும் மேலாதிக்கம் செய்திருந்த ஸ்ராலினிச, சமூகஜனநாயக மற்றும் தேசியவாத இயக்கங்களுக்குள் நான்காம் அகிலத்தைக் கலைப்பதற்கான எதிர்ப்பில் 1953 இல் அனைத்துலகக் குழு நிறுவப்பட்டது. ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம், பப்லோவாத திருத்தல்வாதிகளுடனான அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) கோட்பாடற்ற மறு ஐக்கியத்திற்கும் இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சியின் வரலாற்றுக் காட்டிக்கொடுப்பிற்கும் எதிராக 1961-64 க்கு இடையில் நடந்த போராட்டத்தில் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது.

ஆனால் 1970களின் நடுப்பகுதியில் இருந்து, WRP பப்லோவாதத்திற்கு எதிரான நீண்ட போராட்டத்தின் படிப்பினைகள் அனைத்தையும் திட்டமிட்டு நிராகரித்தது. ஹீலி ட்ரொட்ஸ்கிசத்தின் அரசியல் மரபியத்தை கேலிக்கூத்தாக்கியதுடன் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் மிகவும் தடையேதுமற்ற நடைமுறைப்படுத்துபவரானார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உண்மையான தத்துவார்த்த ஏடாக நான்காம் அகிலம் புதுப்பிப்பானது, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பொறிவு மற்றும் உடைவிலிருந்து வெளிப்பட்ட அனைத்து கலைப்புவாத கன்னைகளுக்கும் எதிராக நடத்தப்பட்ட வெற்றிகரமான போராட்டத்தின் விளைவாகும்.

இந்த முதலாவது சஞ்சிகை WRP ஆல் ட்ரொட்ஸ்கிசம் காட்டிக்கொடுக்கப்பட்டது பற்றிய முழுமையான ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது, 1986 பிப்ரவரியில் WRP (சுலோட்டர்-பண்டா கன்னை) உடனான பிளவுக்குப் பின்னர் நடைபெற இருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முதலாவது நிறைபேரவையின் போது, மே18 மற்றும் ஜூன் 9, 1986 க்கு இடையில் எழுதப்பட்டது. இந்த ஆவணத்தோடு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, WRP ஐ பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் கன்னைகளில் ஒன்றுகூட முயற்சி செய்யாத — ட்ரொட்ஸ்கிசத்துடன் WRP முறித்துக்கொண்டதின் விளைபொருளை, அபிவிருத்தியை வரலாறு, அரசியல் மற்றும் தத்துவார்த்த மூலங்கள் பற்றிய புறநிலை ரீதியான மார்க்சிச பகுப்பாய்வு பணியை நிறைவேற்றி இருக்கிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் முற்றிலும் புதிய தலைமுறை ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கல்வியூட்டலுக்கு பங்களிப்புச்செய்யவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சோசலிசப் புரட்சியின் உலக கட்சியாக விரிவுபடுத்துலுக்கான சக்திமிக்க அடித்தளத்தை வழங்கவும், உலகம் முழுவதிலுமுள்ள புரட்சியாளர்களுக்கு WRP பொறிவின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துவதில் இந்த ஆவணமானது தீர்க்கமான பங்கை வகிக்கும் என்பதில் அனைத்துலகக் குழு உறுதியாக நம்பிக்கை கொள்கிறது.