Leon Trotsky
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி

குடும்பம், இளைஞர்கள் மற்றும் கலாச்சாரம்

குடும்பத்தில் தேர்மிடோர்

அக்டோபர் புரட்சி பெண்கள் விடயத்தில் தனது கடமைகளை நேர்மையாகப் பூர்த்தி செய்தது. அந்த இளம் அரசாங்கம் ஆணுக்கு சமமான அனைத்து அரசியல் மற்றும் சட்ட உரிமைகளையும் பெண்ணுக்கு வழங்கியிருந்தது. அதனை விட முக்கியமாய், உண்மையில் பொருளாதார மற்றும் கலாச்சார வேலைகள் அனைத்திலும் பெண்களுக்கு இடம் கிடைப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும், வேறெந்த அரசாங்கமும் அதுவரை செய்திருந்ததை விடவும் ஒப்பிடமுடியாத அளவுக்கு அதிகமாக செய்தது. ஆயினும் அந்த தீரமிக்க புரட்சியும் கூட, 'அனைத்து அதிகாரம் கொண்ட' பிரிட்டிஷ் பாராளுமன்றத்தைப் போலவே, ஒரு பெண்ணை ஆணாக மாற்றி விட முடியவில்லை, அல்லது வேறுவிதமாய் சொல்வதென்றால், கரு சுமப்பது, குழந்தை பெறுவது, குழந்தை வளர்ப்பது என்ற சுமையை அவர்களுக்கு இடையில் சமமாகப் பங்கிட்டு விட முடியவில்லை. உழைக்கும் வர்க்கப் பெண்கள் குழந்தைப் பருவம் தொடங்கி சாகும் வரைக்கும் அடுப்பு வேலைகள் பார்த்துத் தேயத் தள்ளும் அந்தப் பழைய, மூச்சுத்திணறும் மற்றும் சுமைமிக்க ‘குடும்ப அடுப்பங்கரை’ என்று அழைக்கப்படுவதை அழிப்பதற்கு, புரட்சி ஒரு தீரமான முயற்சியை மேற்கொண்டது. ஒரு மூடிய குட்டி நிறுவனமாக இருந்த குடும்பத்தின் இடத்தை, மகப்பேறுகால இல்லங்கள், குழந்தை காப்பகங்கள், மழலைப் பள்ளிகள், பள்ளிகள், சமுதாய உணவறைக் கூடங்கள், சமுக துணிச் சலவை நிலையங்கள், முதலுதவி மையங்கள், மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், விளையாட்டு அமைப்புகள், திரையரங்குகள் மற்றும் இன்னபிற சமூக பராமரிப்பு மற்றும் வீட்டுவசதிகள் கொண்ட ஒரு நிறைவான அமைப்பு மூலம் பிரதியிடுவதற்கு திட்டமிடப்பட்டது. அனைத்து தலைமுறைகளையும் ஐக்கியப்படுத்தி ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவி மூலமாக, குடும்பத்தின் வீட்டுப் பராமரிப்பு வேலைகளை முழுமையாக ஒரு சோசலிச சமூகத்தின் ஸ்தாபனங்களுக்குள் கலைத்து விடுவதானது, பெண்களையும் அதன்மூலம் நேசத் தம்பதிகளையும் ஆயிரமாயிரமாண்டு கால தளைகளில் இருந்து உண்மையாக விடுவிப்பதாக இருந்தது. பிரச்சினைகளின் பிரச்சினையான இது இப்போது வரையிலும் தீர்க்கப்பட்டவில்லை. நாற்பது மில்லியன் சோவியத் குடும்பங்களில் மிகப் பெரும்பான்மையானவை மத்தியகாலத்தனம், பெண்ணடிமைத்தனம் மற்றும் மூர்க்கத்தனம், குழந்தைகள் அன்றாடம் அவமதிப்பாய் நடத்தப்படுவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த மூடநம்பிக்கை ஆகியவற்றின் கூடுகளுக்குள் தான் இப்போதும் இருந்து வருகின்றன. இந்தக் கணக்கில் நமக்கு நாமே எந்த தவறான பிரமைகளையும் அனுமதித்து விடக்கூடாது. அந்தக் காரணத்தினால் தான், சோவியத் ஒன்றியத்தில் குடும்பம் எனும் பிரச்சினையை அணுகும் முறையில் தொடர்ச்சியாக நிகழ்ந்த மாற்றங்கள் சோவியத் சமூகத்தின் உண்மையான இயல்பையும், அதன் ஆளும் தட்டின் பரிணாமவளர்ச்சியையும் மிகச்சிறந்த வகையில் அதன் குணவியல்பையும் காட்டுவதாய் இருக்கின்றன.

பழைய குடும்ப அமைப்பை அதிரடியாக வெற்றிகாண்பதென்பது சாத்தியமற்றதாக நிரூபணமானது, காரணம் விருப்பமின்மையோ அல்லது ஆண்களின் மனதில் குடும்பம் ஆழமாய் வேரூன்றி இருந்தது என்பதோ அல்ல. மாறாக, ஆரம்பத்தில் சிறிதுகாலம் அரசாங்கத்தின் மீதும் மற்றும் அதன் குழந்தை காப்பகங்கள் மற்றும் மழலைப்பள்ளிகள் போன்ற அமைப்புகள் மீதும் நம்பிக்கையில்லாமல் இருந்ததற்குப் பின்னர், உழைக்கும் பெண்களும், அவர்களையடுத்து சற்று முன்னேறிய விவசாயிகளும் குழந்தைகள் கூட்டுப் பராமரிப்பு முறையின் மற்றும் குடும்பப் பொருளாதாரம் முழுமையும் சமூகமயமாக்கப்படுவதன் கணக்கிட முடியாத அனுகூலங்களுக்கு மதிப்பளிக்கத் தொடங்கினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சமூகம் மிகவும் வறியதாகவும் கலாச்சாரம் குறைந்ததாகவும் நிரூபணமானது. அரசின் உண்மையான ஆதாரவளங்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டங்களுக்கும் நோக்கங்களுக்கும் பொருத்தமான அளவில் இல்லை. நீங்கள் குடும்பத்தை 'ஒழிக்க' முடியாது; அதனை பிரதியிட்டாக வேண்டும். பெண்களின் உண்மையான விடுதலை 'பொதுப்படுத்தப்பட்ட அவசியத்தின்' அடிப்படையில் அடைய முடியாததாகும். எண்பது வருடங்களுக்கு முன் மார்க்ஸ் சூத்திரப்படுத்திய இந்த எளிய உண்மையை அனுபவம் விரைவில் நிரூபணம் செய்தது.

வறுமைக் காலங்களில், தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தில் ஒரு பகுதியினரும் சாத்தியப்படும் போதெல்லாம் தொழிற்சாலைகள் மற்றும் பிற சமூக உணவறைக் கூடங்களில் சாப்பிட்டனர், இந்த உண்மையானது சோசலிச வாழ்க்கை வடிவங்களை நோக்கிய உருமருவலாக உத்தியோகபூர்வமாக குறிப்பிடப்பட்டது. போர் கம்யூனிசம், புதிய பொருளாதார கொள்கை மற்றும் முதலாவது ஐந்தாண்டு திட்டம் ஆகிய வெவ்வேறான காலகட்டங்களது தனித்த அம்சங்கள் குறித்து மறுபடியும் நிறுத்தி விவாதிக்க அவசியமில்லை. உண்மை என்னவென்றால், 1935 ஆம் ஆண்டு உணவு அட்டை முறை ஒழிக்கப்பட்ட தருணத்தில் தொடங்கி, கொஞ்சம் வசதியான தொழிலாளர்கள் எல்லோரும் வீட்டு உணவறைக்கு திரும்பத் தொடங்கினர். இந்த பின்வாங்கலை சோசலிச அமைப்புமுறையின் மீதான கண்டனமாகக் கருதுவது தவறாகும். இம்முறையானது ஒருபோதும் முயற்சிசெய்து பார்க்கப்படாத ஒன்றாகவே இருந்தது. ஆனால், அதிகாரத்துவத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட 'சமூக உணவூட்ட முறை' மீது தொழிலாளர்களும் அவர்தம் மனைவியரினதும் தீர்ப்பு அதனினும் மிகவும் கடுமையானதாக இருந்தது. சமுக துணிச் சலவை நிலையங்கள் விடயத்திலும் இதே முடிவை நீட்சி செய்தாக வேண்டும்; அங்கே அவர்கள் துணியை துவைப்பதை விடவும் கிழிப்பதும் திருடுவதும் தான் அதிகமாயிருக்கிறது. இப்போது பிரசங்கிகளும் பத்திரிகையாளர்களும் பாதி வெட்கமுகத்துடன் கொண்டாடும் வீட்டு அடுப்பாங்கரைக்கு திரும்புவோம்! வீட்டுச் சாப்பாடு மற்றும் வீட்டு சலவை என்பதன் அர்த்தம், தொழிலாளர்களின் மனைவிகள் மீண்டும் சட்டி பானைகளுடன் உழல்வதற்கு, அதாவது பழைய அடிமைத்தனத்திற்கு திரும்புவது என்பதாகும். 'சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் முழுமையான மற்றும் திரும்பவியலாத வெற்றி' என்னும் கம்யூனிச அகிலத்தின் தீர்மானம் தொழிற்சாலைப் பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு மிகவும் உடன்பாடானதாக ஒலிக்குமா என்பது சந்தேகமே!

வீட்டுடன் மட்டுமல்லாது விவசாயத்துடனும் கட்டுண்டிருந்த கிராமக் குடும்பமானது நகரத்து குடும்பத்தை விடவும் அளவிட முடியாத அளவுக்கு கூடுதல் ஸ்திரமானதாகவும் பழைமைவாதமுடையதாகவும் இருந்தது. ஒரு சில, அதுவும் பொதுவிதியாக பலம்குன்றியதான, விவசாய கம்யூன்கள் மட்டுமே முதலாவது கட்டத்தில் சமூக உணவுக் கூடங்களையும் மழலைப் பள்ளிகளையும் அறிமுகம் செய்தன. கூட்டுற்பத்தி முறையானது, முதலாவது அறிவிப்புகளின் படி, குடும்ப வட்டத்தில் ஒரு தீர்மானகரமான மாற்றத்திற்கு ஆரம்பமளித்திருக்க வேண்டும். ஒன்றுமில்லாததற்காக அவர்கள் விவசாயியின் கோழிகளையும் பசுக்களையும் பறிமுதல் செய்தார்கள்? நாடு முழுவதும் சமூக உணவுக் கூடங்கள் வெற்றிநடை போடுவது குறித்த அறிவிப்புகளுக்கு எந்த விதத்திலும் பஞ்சமிருக்கவில்லை. ஆனால் பின்வாங்கல் ஆரம்பித்தவுடனேயே, இந்த தம்பட்டத்தின் நிழலில் இருந்து யதார்த்தம் திடீரென பிரவேசித்தது. கூட்டுற்பத்தி பண்ணையிலிருந்து ஒரு விவசாயி தனக்கான ரொட்டியையும் தனது கால்நடைகளுக்கான தீவனத்தையும் மட்டுமே பெறுவதுதான் பொதுவிதியாக இருக்கிறது. இறைச்சி, பால் பொருட்கள், காய்கறிகள் இவற்றையெல்லாம் ஏறக்குறைய முழுவதையுமே அவன் தனது சொந்த நிலத்திலிருந்தான முயற்சியிலிருந்தே பெறுகிறான். வாழ்க்கையின் மிகவும் முக்கியமான தேவைகள் குடும்பத்தின் தனிப்பட்ட முயற்சிகளால் பூர்த்தியாக நேரும்போது, அதற்குப் பின் சமூக உணவுக் கூடங்களைப் பற்றிய பெருமைபேச்சு இருக்க முடியாது. இவ்வாறாக சிறிய பண்ணைகள் வீட்டு அடுப்பாங்கரைக்கு ஒரு புதிய அடிப்படையை உருவாக்கி, பெண் மீது இரட்டைச் சுமையை சுமத்துகின்றன.

மழலையர் பள்ளிகளில் நிரந்தர இடங்களின் எண்ணிக்கை 1932 ஆம் ஆண்டு மொத்தம் 600,000 ஆக இருந்தது. விவசாயப் பருவங்களில் வயல் வேலைகளது சமயத்தில் மட்டும் உண்டாகும் தேவைகளுக்கான தற்காலிக இடங்களின் எண்ணிக்கை 4,000,000 ஆக இருந்தது. 1935 ஆம் ஆண்டில் கட்டில்கள் எண்ணிக்கை 5,600,000 ஆக இருந்தது, ஆனாலும் நிரந்தர எண்ணிக்கை இந்த மொத்த எண்ணிக்கையில் ஒரு சொற்ப பகுதியாகவே இருந்தது. இது தவிர, மழலையர் காப்பக பள்ளிகள், மாஸ்கோ, லெனின்கிராட் மற்றும் பிற மையங்களிலும் கூட, குறைந்தபட்ச அக்கறைக்கான கோரிக்கைகளைக் கூட திருப்தி செய்வனவாக இல்லை. 'ஒரு குழந்தை அதன் வீட்டில் இருப்பதை விடவும் மோசமாக ஒரு காப்பக பள்ளியில் உணர்கின்றதென்றால் அது காப்பகப் பள்ளியாக இருக்க முடியாது, ஒரு மோசமான பெற்றோர் இல்லாதோர் புகலிடமாகத்தான் கருதப்பட முடியும்' என்று ஒரு முன்னணி சோவியத் செய்தித்தாள் புகார் கூறுகிறது. ஆகவே கொஞ்சம் வசதியான தொழிலாளர் குடும்பங்கள் காப்பகப் பள்ளிகளை தவிர்க்கின்றனவென்றால் அதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் உழைக்கும் அடிப்படை வெகுஜனங்களைப் பொறுத்தவரை, இந்த 'மோசமான பெற்றோர் இல்லாதோரின் புகலிடங்கள்' கூட சொற்பமான எண்ணிக்கையில் தான் இருக்கின்றன. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் அனாதைகள் வளர்க்கப்படுவதற்கு தனியார் வசம் ஒப்படைக்கப்படலாம் என்று மிக சமீபத்தில் மத்திய நிறைவேற்றுக் குழு ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அதிகாரத்துவ அரசாங்கம் மிக முக்கிய சமூக செயல்பாட்டில், தான் திவாலாகிப் போனதை தனது மிக உயர்ந்த அங்கத்தின் மூலமாக ஒப்புக் கொண்டிருக்கிறது. 1930 முதல் 1935 வரையான ஐந்து ஆண்டுகளில் மழலையர் பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை 370,000 இல் இருந்து 1,181,000 ஆக அதிகரித்தது. 1930 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை எத்தனை குறைவாக இருந்திருக்கிறது என்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது, அதே சமயத்தில் 1935 ஆம் ஆண்டுக்கான எண்ணிக்கையும் கூட சோவியத் குடும்பங்களின் கடல் போன்ற எண்ணிக்கையில் ஒரு சிறுதுளியாகத் தான் தென்படுகிறது. மேலும் உட்சென்று விசாரணை செய்தால், இந்த மழலையர் பள்ளிகளின் பிரதான பகுதி அத்துடன் சிறந்த பகுதி, நிர்வாக அலுவலர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், ஸ்டக்னோவ்வாதிகள் (Stakhanovists) போன்றோரது குடும்பங்களுடன் தொடர்புபட்டு இருப்பது சந்தேகத்திற்கிடமின்றி தெரியவரும்.

இதே மத்திய நிறைவேற்றுக் குழு 'வீடற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவது குறித்து முடிவெடுப்பது பலவீனமாக முன்னெடுத்து செல்லப்படுகிறது' என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ள நேர்ந்து வெகு காலமாகி விடவில்லை. இந்த உணர்ச்சியற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் பின்னே மறைக்கப்படுவது என்ன? தற்செயலாக, செய்தித்தாள்களில் சிறிய எழுத்துக்களில் அச்சாகி வெளியான குறிப்புகளில் இருந்தே நாம் அறிகிறோம். அதில் மாஸ்கோவில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் 'அசாதாரண கடின குடும்ப சூழ்நிலைகளில்' வாழ்கிறார்கள் என்பதையும்; தலைநகரின் குழந்தைகள் இல்லத்தில் இடமின்றி சுமார் 1,500 குழந்தைகள் தெருக்களில் திரிய விடப்பட்டுள்ளார்கள் என்பதையும்; 1935 ஆம் ஆண்டின் இரண்டு இலையுதிர் மாதங்களில் மாஸ்கோவிலும் லெனின்கிராட்டிலும் '7500 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மேற்பார்வை இன்றி திரிய விட்டிருந்தமைக்காக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்' என்பதை அறிகின்றோம். அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தியதால் என்ன பயன் கிட்டியது? இன்னும் எத்தனை ஆயிரம் பெற்றோர்கள் நீதிமன்றத்திற்கு வராமல் தவிர்த்திருப்பார்கள்? 'அசாதாரண கடின சூழல்களில்' வாழும் இன்னும் எத்தனை குழந்தைகள் கணக்கில் கொண்டுவரப்படாமல் இருக்கிறார்கள்? இந்த அசாதாரண கடின சூழல்களுக்கும் வெறுமனே கடின சூழல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்தக் கேள்விகளெல்லாம் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே தொடர்பவை. வெளிப்படையான மற்றும் பகிரங்கமான அல்லது மறைமுகமான, குழந்தைகளது வீடற்றநிலையின் ஒரு பரந்த அளவானது, புதிய ஸ்தாபனங்களது பிரதியிடும் திறனின் வேகத்தை விட மிக துரித வேகத்தில் பழைய குடும்ப அமைப்பு கலைவதால் நேர்கின்ற மாபெரும் சமூக நெருக்கடியின் ஒரு நேரடி விளைவாக இருக்கிறது.

விபச்சாரம், அதாவது உடலுறவுக்கு பணம் கொடுக்க இயலுகின்ற ஆண்களது நலன்களின் பேரில் பெண்களை அதீதமாய் இழிவுபடுத்துகின்றதான செயல், சோவியத் ஒன்றியத்தில் இருக்கிறது என்பதையும் இதேபோன்ற தற்செயலான செய்தித்தாள் குறிப்புகளில் இருந்தும் குற்றவியல் பதிவேடுகளில் உள்ள அத்தியாயங்களில் இருந்தும் வாசகர்கள் கண்டுகொள்ள முடியும். உதாரணத்திற்கு, சென்ற ஆண்டின் இலையுதிர் கால சமயத்தில், “பாட்டாளி வர்க்கத் தலைநகரின் வீதிகளில் இரகசியமாக தங்கள் உடல்களை விற்றுக் கொண்டிருந்த கிட்டத்தட்ட ஆயிரம் பெண்கள்” கைது செய்யப்பட்டதைக் குறித்து Izvestia பத்திரிகை திடீரென தனது வாசகர்களுக்கு செய்தி தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்களில் உழைக்கும் பெண்கள் 177 பேர், குமாஸ்தாக்கள் 92 பேர், பல்கலைக்கழக மாணவிகள் 5 பேர் மற்றும் இன்னபிற பெண்கள் இருந்தார்கள். அவர்களை நடைபாதையோரங்களுக்குத் தள்ளியது எது? பற்றாக்குறை ஊதியங்கள், தேவை, “ஆடை வாங்க, காலணிகள் வாங்க கொஞ்சம் பணம் புரட்ட வேண்டிய” அவசியம். இந்த சமூகத் துயரத்தின் அண்ணளவான பரிமாணங்களை அறிந்துகொள்ள வீணான முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். கண்ணியம் பேணும் அதிகாரத்துவம் புள்ளிவிவரக் கணக்காளரை வாயை மூடிக்கொண்டு இருக்கும்படி உத்தரவிடுகிறது. ஆனால் அந்த வலுக்கட்டாயமான மவுனமே சோவியத் விபச்சாரிகள் “வர்க்கத்தின்” எண்ணிக்கைக்கு சந்தேகமற்ற சாட்சியம் வழங்கி விடுகிறது. இங்கே அடிப்படையாக “கடந்த காலத்தின் எச்சம்” குறித்த பிரச்சினையே எழ முடியாது; விபச்சாரிகள் இளம் தலைமுறையில் இருந்துதான் எடுக்கப்படுகிறார்கள். மனிதசமுதாயத்தின் நாகரிகத்தின் அளவுக்கு பழமையானதான இந்த காணச்சகியா நிலைக்கு சோவியத் ஆட்சி மேல் தனியாக பழி போடுவதற்கு எந்த நியாயமான மனிதனும் சிந்திக்க மாட்டான் என்பது உண்மையே. ஆனால் விபச்சாரம் இருக்கையில் சோசலிசத்தின் வெற்றி குறித்துப் பேசுவதென்பது மன்னிக்க முடியாததாகும். பத்திரிகைகள், இந்த விவகாரமான விடயத்தைப் பேச அவை அனுமதிக்கப்படுகின்ற மட்டத்திற்கு, “விபச்சாரம் குறைந்து வருகிறது” என்று நிச்சயமாகத் திட்டவட்டம் செய்கின்றன. பட்டினி மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆண்டுகளுடன் (1931-33) ஒப்பிடும்போது அது நிஜமாகவே உண்மையாக இருப்பதும் சாத்தியமே. ஆயினும் அதற்குப் பின்னால் நடைபெற்று வந்திருக்கக் கூடியதான பண உறவுகளது மீட்சியும், அரசாங்க நேரடிப் பொருள் வழங்கல்முறையின் ஒழிப்பும், தவிர்க்கவியலாமல் விபச்சாரத்திலும் வீடற்ற குழந்தைகள் எண்ணிக்கையிலும் ஒரு புதிய வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். தனிச்சலுகை பெற்றவர்கள் எங்கேயெல்லாம் இருக்கிறார்களோ அங்கேயெல்லாம் ஒதுக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்!

பாரிய எண்ணிக்கையிலான குழந்தைகளின் வீடற்றநிலையானது தாயின் சிரம நிலைக்கான மிகவும் ஐயமற்ற மற்றும் மிகவும் துயரகரமான அறிகுறி என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. எப்போதும் நம்பிக்கை தொனிக்க பேசும் பிராவ்தாவே கூட இந்த விடயத்தில் சில சமயங்களில் வாய்கசப்புடன் ஒப்புதலளிக்கும் நிர்ப்பந்தம் பெறுகிறது: “ஒரு குழந்தை பெறுவது என்பது பல பெண்களுக்கு அவர்களது சமூக நிலைக்கான தீவிர அச்சுறுத்தலாய் ஆகி விடுகிறது”. இந்த ஒரே காரணத்திற்காகத்தான் புரட்சிகர அதிகாரம் பெண்களுக்கு கருக்கலைப்பு அதிகாரத்தைக் கொடுத்தது. இருபாலின பழைய பணியாளர்களும் இந்த விடயத்தில் என்ன கூறுகின்றபோதிலும், தேவை மிகுந்த மற்றும் குடும்பத் துயர சூழல்களில் பெண்களுக்கு இது மிக முக்கியமான வாழ்க்கை, அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளில் ஒன்றாக இருப்பதாகும். எவ்வாறெனினும் ஏற்கனவே மனத்துயரம் தரக்கூடியதாக இருக்கும் பெண்களின் இந்த உரிமையும் கூட, தற்போதைய சமூக சமத்துவமற்ற சூழ்நிலையில், ஒரு தனிச்சலுகையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. கருக்கலைப்பு நடைமுறை குறித்து ஊடகங்களில் கசியும் தகவல்கள் உண்மையாகவே அதிர்ச்சி தருவதாய் இருக்கின்றன. ஊரல் மலைப்பகுதி மாவட்டத்தின் ஒரேயொரு கிராம மருத்துவமனையில் மட்டும், 1935 ஆம் ஆண்டில் '195 பெண்கள் செவிலியர் மூலமாக கருக்கலைப்பு செய்துகொண்டு சென்றுள்ளனர்” - இவர்களில் 33 உழைக்கும் பெண்கள், 28 அலுவலக தொழிலாளிகள், 65 கூட்டுற்பத்தி பண்ணை பெண் தொழிலாளர்கள், 58 இல்லத்தரசிகள் மற்றும் பிறரும் இருக்கின்றனர். இந்த மாவட்டத்திற்கும் பெரும்பான்மையான மற்ற மாவட்டங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இங்கு நடந்தது பத்திரிகைகளில் தப்பித்தவறி வெளியாகி விட்டது என்பது மட்டுமே. சோவியத் ஒன்றியம் மொத்தமும் எத்தனை பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் இது போன்று கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள்?

கருக்கலைப்பு செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகும் பெண்களுக்குதேவையான மருத்துவ உதவியும் சுகாதார வசதிகளும் செய்து கொடுக்க முடியாத தனது திறமின்மையை வெளிப்படுத்துகின்ற அரசு, கூர்மையாக பாதை மாறி, தடை என்னும் பாதையை எடுக்கிறது. மற்ற சந்தர்ப்பங்களில் போலவே இங்கும் அதிகாரத்துவம், நிர்ப்பந்தநிலையை விரும்பி அடைந்த ஒன்றைப் போல ஏற்றுகிறது. வேலையில்லாதவர்களே இல்லாத, இத்யாதி.. இத்யாதி... ஒரு சோசலிச சமூகத்தில், ஒரு பெண்ணுக்கு 'தாய்மையின் இன்பங்களை' மறுக்க எந்த உரிமையுமில்லை என்ற உண்மையை அடிப்படையாய்க் கொண்டே கருக்கலைப்பு மீதான தடை கொண்டு வரப்பட இருப்பதாக உயரிய சோவியத் நீதிமன்றத்தின் உறுப்பினர்களில் ஒருவரும், இல்லற கேள்விகளில் நிபுணருமான சோல்ட்ஸ் கூறுகிறார். ஒரு போதகரின் உபதேசத்துடன் ஒரு துணைக்காவற்படையின் அதிகாரம் கைகோர்த்திருக்கிறது. ஒரு குழந்தை பெறுவது என்பது பல பெண்களுக்கு, மிகப் பெருவாரியான பெண்களுக்கு என்று சொல்வதும் கூட உண்மையாகவே இருக்கும், “அவர்களது சமூகநிலைக்கான ஒரு அச்சுறுத்தலாக” ஆகிறது என்று ஆளும் கட்சியின் மைய அங்கம் சொல்ல இப்போதுதான் கேட்டோம். “வீடற்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லாதநிலையை ஏற்படுத்துவது என்பது மிகப் பலவீனமான விதத்தில் முன்னெடுக்கப்படுகிறது” ―வீடின்மையில் ஒரு புதிய அதிகரிப்பு என்பதே இதன் சந்தேகத்திற்கிடமில்லாத அர்த்தமாக இருக்க முடியும்― என்று உச்சமட்ட சோவியத் ஸ்தாபனம் கூற இப்போது தான் கேட்டோம். ஆனால் இங்கே மிக உயர்மட்ட சோவியத் நீதிபதி நமக்கு சொல்கிறார் “வாழ்க்கை இன்பமயமாக” இருக்கும் ஒரு நாட்டில் கருக்கலைப்பு சிறைவாசத்தைக் கொண்டு தண்டிக்கப்பட வேண்டுமாம். வாழ்க்கை துயரகரமாக இருக்கும் முதலாளித்துவ நாடுகளில் செய்யப்படுகின்ற அதேவிதத்தில், மேற்கில் போலவே சோவியத் ஒன்றியத்திலும், செய்யும் தப்புகளை மறைக்க சிரமப்படும் பிரதானமாக உழைக்கும் பெண்கள், வேலைக்காரப் பெண்கள், விவசாயிகளது மனைவிகள் மட்டுமே சிறைச்சாலை அதிகாரியின் பிடிகளுக்குள் சிக்குவார்கள் என்பது முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்த விடயமாக இருக்கிறது. மிகச் சிறந்த வாசனைத் திரவியங்களுக்கும் மற்ற இனிய விடயங்களுக்குமான தேவைகளைக் கொண்ட “நமது பெண்களை” பொறுத்தவரை, அவர்கள் முன்பு போலவே, கருணையுள்ள நீதித்துறையின் மூக்கின் கீழேயே தமக்குத் தேவையானதை செய்து கொள்வார்கள். “நமக்கு மனிதர்களின் தேவை இருக்கிறது” என்று சோல்ட்ஸ் முடிக்கிறார், வீடற்றவர்களுக்கு தமது கண்களை மூடியபடி. “அப்படியானால் பெருந்தன்மையுடன் நீங்களே அவர்களை வைத்து வளருங்களேன்” என்பதுதான் அதிகாரத்துவம் அவர்களது வாய்களுக்கு பலவந்தமாய் வாய்ப்பூட்டு போடாதிருந்திருக்குமாயின், இந்த உயர்மட்ட நீதிபதிக்கு மில்லியன் கணக்கான உழைக்கும் பெண்கள் அளிக்கக் கூடிய பதிலாக இருக்கும். சோசலிசம், பெண்ணை கருக்கலைப்புக்குத் தள்ளும் காரணத்தை அகற்ற வேண்டுமேயன்றி, ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையின் மிக அந்தரங்கமான பகுதியாக இருக்கக் கூடிய ஒன்றுக்குள் அசிங்கமாய் போலிஸ் தலையீட்டின் உதவியுடன் “தாய்மையின் இன்பங்களுக்குள்” பலவந்தமாக அவளை தள்ளக்கூடாது என்பதை இந்த கனவான்கள் முற்றிலுமாக மறந்து போனார்கள் என்றே தெரிகிறது.

கருக்கலைப்பை தடை செய்யும் சட்ட வரைவு நாடுதழுவிய பொதுமக்கள் விவாதம் என்று சொல்லப்படுகின்ற ஒன்றிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, சோவியத் ஊடகங்களின் நுண்ணிய வடிதட்டையும் தாண்டி, பல கடுமையான குற்றச்சாட்டுகளும் திமிறிவந்த எதிர்ப்புகளும் முன்னால் வந்தன. விவாதம் எப்படி திடீரென தொடக்கப்பட்டதோ அதைப்போலவே திடீரென நிறுத்தப்பட்டது. ஜூன் 27 இல் மத்திய நிறைவேற்றுக் குழு இந்த அவமானகரமான வரைவை மும்மடங்கு அவமானகரமான சட்டமாக மாற்றியது. அதிகாரத்துவத்தின் உத்தியோகபூர்வ வக்காலத்துவாதிகள் சிலரும் கூட சங்கடத்தில் நெளிந்தார்கள். ஒரு வருந்தத்தக்க தவறான புரிதலின் இயல்பில் வந்ததே இந்த சட்டம் என்று லூயிஸ் ஃபிஷ்சர் அறிவித்தார். உண்மையில் பெண்களுக்கு எதிரானதான சீமாட்டிகளுக்கு சாதகமான விதிவிலக்குகளுடனான இந்த புதிய சட்டம் தேர்மிடோரிய பிற்போக்குத்தனத்தின் இயல்பான மற்றும் தர்க்கரீதியான விளைபலனேயாகும்!

ரூபிளின் புனரமைப்புடன் சேர்ந்து ஏககாலத்தில் நடைபெற்று வருகின்ற குடும்பத்தின் வெற்றிகரமான புனரமைப்பும் -என்ன ஒரு தருணம்தப்பாத கால ஒற்றுமை!- அரசின் பொருள்ரீதியான மற்றும் கலாச்சாரரீதியான திவால்நிலையால் விளைந்திருக்கிறது. 'மனிதர்களிடையே சோசலிச உறவுகளை உருவாக்க முடியாத மட்டத்திற்கு மிகவும் ஏழ்மையுடனும் அறியாமையுடனும் இருப்பதை நாம் நிரூபித்துள்ளோம். அந்த இலட்சியத்தை நமது குழந்தைகளும் பேரப்பிள்ளைகளும் நனவாக்குவார்கள்' என்று வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக, தலைவர்கள், உடைந்த குடும்ப ஓட்டை திரும்பவும் ஒட்டவைப்பதற்கும் அத்துடன் நில்லாது, அதுதான் வெற்றிகரமான சோசலிசத்தின் புனிதமான மையக்கரு எனக் கருதும்படியும், கடுமையான அபராதங்களது அச்சுறுத்தல்களின் கீழ், மக்களை பலவந்தம் செய்கிறார்கள். இந்த பின்வாங்கலின் தொடுஎல்லையை வெற்றுகண்களால் அளவிடுவது கடினமானது.

சட்டவழங்குநர் மற்றும் எழுத்தாளர், நீதிமன்றம் மற்றும் போலிஸ், பத்திரிகை மற்றும் பள்ளிக்கூட அறை என எல்லோரும் எல்லாமும் புதிய பாதைக்குள் இழுக்கப்படுகின்றனர். அப்பாவியான மற்றும் நேர்மையான ஒரு கம்யூனிஸ்ட் இளைஞர் தனது பத்திரிகையில் 'இதனை விட ஒரு பெண் குடும்பத்தின் பிடிகளில் இருந்து எவ்வாறு விடுபட முடியும் என்பதான பிரச்சினையில் உங்களை நீங்கள் ஆட்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்' என்று துணிந்து எழுதுவாரேயானால், அவருக்கு அமைதியாக இருக்கும்படி நன்றாக நாலைந்து அடி பதிலாகக் கிடைக்கிறது. பின் அந்த இளைஞர் அமைதியாகி விடுகிறார். கம்யூனிச அரிச்சுவடிகள் 'அதிதீவிர இடது தத்துவங்கள்' என்பதாக அறிவிக்கப்படுகின்றன. கலாச்சார முதிர்ச்சியற்ற அற்பர்களின் முட்டாள்தனமான மற்றும் தேய்ந்து போன தப்பெண்ணங்கள், ஒரு புதிய அறநெறியின் பெயரில், மீண்டும் உயிர் கொடுக்கப்படுகின்றன. இந்த அளவிடமுடியாத பெரிய நாட்டின் மூலை முடுக்குகள் அத்தனையிலும் அன்றாட வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? குடும்ப வட்டத்தில் தேர்மிடோரிய பிற்போக்கின் ஆழத்தை ஊடகங்கள் மங்கலானதொரு அளவிலேயே பிரதிபலிக்கின்றன.

பாவங்களின் அதிகரிப்புடன் சேர்ந்து எவாங்கலிசத்தின் மீதான புனித பற்றுணர்ச்சியும் வளர்கிறது என்பதால், ஆளும் தட்டினரிடையே ஏழாவது கட்டளை பெரும் பிரபலமடைந்து வருகிறது. சோவியத் ஒழுக்கவாதிகளுக்கு வாக்கியங்களை மட்டும் தான் கொஞ்சமாய் மாற்ற வேண்டியிருக்கிறது. அடிக்கடியான எளிதான விவாகரத்துகளுக்கு எதிராக ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இந்த விடயத்தில் சட்டவழங்குநர்களின் படைப்புத்திறன் ஏற்கனவே ஒரு அற்புதமான 'சோசலிச' நடவடிக்கையை கண்டுபிடித்திருக்கிறது, விவாகரத்து பதிவு செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும், மறுபடியும் விவாகரத்து செய்ய வந்தால் தொகை அதிகமாகச் செலுத்த வேண்டும். ரூபிளின் பயிற்றுவிக்கும் பாத்திரத்தின் அதிகரிப்பதுடன் இணைந்து குடும்பத்தின் மீள்-எழுச்சி கைகோர்த்துச் செல்கிறது என்று நாம் மேலே குறிப்பிட்டதற்கு காரணமில்லாமல் இல்லை. ஒரு விதிக்கப்படும் வரியானது, பணம் செலுத்த முடியாதவர்களுக்கு, விவாகரத்து பதிவை கடினமாக்கி விடுகிறது என்பதில் சந்தேகமில்லை. மேல் தட்டினரைப் பொறுத்தவரை, இந்தத் தொகை அவர்களுக்கு பெரிய சிரமமாயிருக்காது என்று நாம் நம்பலாம். தவிரவும், அழகான வீடுகள், வாகனங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் இவற்றையெல்லாம் கொண்டிருப்பவர்கள் தங்களது சொந்த விவகாரங்களை அநாவசிய விளம்பரம் ஏதுமின்றி ஆகவே எந்த பதிவும் இன்றி ஏற்பாடு செய்து கொள்ள முடிகிறது. சமூகத்தின் அடித்தட்டில் மட்டும் தான் விபச்சாரம் என்பது ஒரு கனமான மற்றும் அவமதிப்பான தன்மையைக் கொண்டிருக்கிறது. அதிகாரமும் வசதியும் கைகோர்க்கின்ற சோவியத் சமூகத்தின் உயர்ந்த மட்டங்களிலோ, விபச்சாரம் என்பது சிறிய பரஸ்பர சேவைகளின் ஒரு நாசூக்கான வடிவத்தை எடுத்துக் கொள்கிறது, இன்னும் 'சோசலிச குடும்பத்தின்' அம்சத்தையும் கூட பெற்று விடுகிறது. ஆளும் தட்டின் சீரழிவில் 'வாகன, அந்தப்புரக் காரணி வகிக்கும் முக்கியத்துவம் குறித்து சோஸ்னோவ்ஸ்கி கூறியதை ஏற்கனவே நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா.

கவித்துவம் வாய்ந்த, கல்வித்தகைமை பெற்ற மற்றும் பிற 'சோவியத் ஒன்றிய நண்பர்கள்' எதையும் பார்க்கக் கூடாது என்பதற்காகத் தான் கண்களையே கொண்டிருக்கிறார்கள். அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்டு ஒரு சமயத்தில் அதன் நியாயமான பெருமிதப் பொருளாகத் திகழ்ந்த திருமண மற்றும் குடும்பச் சட்டங்கள், முதலாளித்துவ நாடுகளின் சட்டக் கருவூலங்களில் இருந்து பெறப்பட்ட பரவலான கடன்வாங்கல்களை கொண்டு ஒப்பனை செய்யப்பட்டு சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விவாகரத்து மற்றும் கருக்கலைப்பு விடயத்தில் முன்பு நிபந்தனையற்ற சுதந்திரத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட 'பெண் விடுதலை', 'தனிமனித உரிமைகள் பாதுகாப்பு', 'தாய்மையின் பாதுகாப்பு' ஆகிய அதே வாதங்கள் இப்போது அவற்றின் கட்டுப்பாடு அல்லது முழுமையான தடைக்கு ஆதரவாக திரும்பக் கூறப்படுகின்றன.

இந்த பின்வாங்கல் அருவெறுப்பூட்டும் கபடமான வடிவங்களை எடுப்பதுடன் மட்டுமல்ல, இறுக்கமான பொருளாதார தேவைகளினால் கோரப்படுவதைக் காட்டிலும் அளவில்லாத அதிகத்திற்கு முன்னேறிச் சென்றுகொண்டும் இருக்கிறது. ஜீவனாம்சம் கொடுப்பது போன்ற முதலாளித்துவ வடிவங்களுக்குத் திரும்பும் நிலையை உருவாக்கும் புறநிலையான காரணங்களுடன், முதலாளித்துவ சட்டத்தை ஆழப்படுத்துவதில் ஆளும் தட்டிற்கு இருக்கும் சமூக நலனும் சேர்ந்து கொள்கிறது. உறவுகளின் ஒரு ஸ்திரமான அடுக்குநிலைக்கும், பதவி மற்றும் அதிகாரத்துக்குக்கான 40,000,000 ஆதரவு புள்ளிகளின் மூலம் இளைஞர்களை கட்டுப்படுத்தி வைப்பதற்கும் அதிகாரத்துவம் கொண்டிருக்கும் தேவையானது குடும்பத்தின் தற்போதைய நடத்தைமுறைக்கான மிகவும் நிர்ப்பந்தமான செலுத்துநோக்கமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இருந்தபோதிலும் புதிய தலைமுறையினருக்கு கல்வியூட்டுவது அரசின் கரங்களில் குவிக்கப்படுவதன் மீதான நம்பிக்கை மிச்சமிருந்தது, அரசாங்கம் 'மூத்தவர்கள்' குறிப்பாக தாய் தந்தையின் அதிகாரத்தை ஆதரிப்பதற்கு அலட்டிக் கொள்ளாதிருந்தது மட்டுமன்றி, அதற்கு மாறாய் தேக்கமான வாழ்க்கைமுறை வழக்கங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அவர்களை குடும்பத்தில் இருந்து பிரித்தெடுப்பதற்கும் இயன்ற அளவு முயன்றது. சில காலம் முன்புதான் முதலாவது ஐந்தாண்டு திட்டத்தின் பாதையில், பள்ளிகளும் கம்யூனிச இளைஞர் அமைப்பும், குடிகாரத் தந்தைகள் அல்லது பக்திமயமான தாய்களை அம்பலப்படுத்த, வெட்கத்திற்குள்ளாக்க பொதுவாக சொல்வதானால் அவர்களுக்கு 'மறுகல்வி' புகட்ட அவர்களது குழந்தைகளை பயன்படுத்திக் கொண்டிருந்தன. அது எந்த அளவிற்கு வெற்றிகரமாக இருந்தது என்பது வேறு விடயம். எவ்வாறாயினும், இந்த வழிமுறை பெற்றோரின் அதிகாரத்தை அதன் அஸ்திவாரம் வரை உலுக்குகின்ற ஒன்றாக இருந்தது. முக்கியமல்லாதது என்று கூறிவிடமுடியாத இந்த வட்டத்திலும் கூட, இப்போது ஒரு தீவிரமான பாதைமாறல் செய்யப்பட்டுள்ளது. ஏழாவது கட்டளையுடன் சேர்த்து ஐந்தாவது கட்டளையும் திரும்பவும் உரிமை மீட்சி செய்யப்பட்டுள்ளது, இதுவரை நிச்சயமாய் கடவுளின் குறிப்பு காட்டப்படவில்லை தான். ஆனால், பிரெஞ்சு பள்ளிகளும் கூட இந்த துணையளிப்பு இல்லாமல் தான் நடைபெறுகின்றன. அவர்கள் பழமைவாதத்தையும் வழமையான முறைகளையும் வெற்றிகரமாக புகட்டுவதை அது தடுத்து விடவில்லை.

எவ்வாறெனினும் பழைய தலைமுறையின் அதிகாரத்திற்கான அக்கறை ஏற்கனவே மத விடயத்தில் கொள்கை மாற்றத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது. கடவுள், அவரது உதவி மற்றும் அவரது அற்புதங்கள் இவற்றின் மறுப்பு தான் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் புரட்சிகர சக்திகள் செலுத்திய ஆப்புகளில் மிகக் கூர்மையானதாக இருந்தது. கலாச்சார அபிவிருத்தி, தீவிர பிரச்சாரம் மற்றும் விஞ்ஞானக் கல்வி இவையெல்லாம் இன்றி, தேவாலயங்களுடனான போராட்டமானது யரோஸ்லேவ்ஸ்கி போன்றவர்களின் தலைமைகளின் கீழ் பல சமயங்களில் கோமாளித்தனமாகவும் சேட்டைத்தனமாகவும் சீரழிவுற்றது. சொர்க்கத்தை உலுக்குவது என்பதும், குடும்பத்தை உலுக்குவது போன்றே, இப்போது நின்றுபோன நிலைக்கு கொண்டுவரப்படுகிறது. மதித்து நடப்பது தொடர்பில் தங்களது மரியாதை குறித்து கவலைப்படும் அதிகாரத்துவம் நாத்திக இளம் பிள்ளைகளுக்கு போராடும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தங்களது புத்தகங்களை படிக்க உட்காரும்படி உத்தரவிட்டிருக்கிறது. மத விடயத்தைப் பொறுத்தவரை, ஒரு நகைமுரணான நடுநிலைத்தன ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாலும் அது முதல் கட்டம் மட்டுமே. அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொருத்து மட்டுமே நிகழ்வுகள் இருக்கும் என்றால் அதற்கடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்தை கணிப்பது சிரமமான விடயமல்ல.

தற்போது நிலவுகின்ற அபிப்பிராயம் பற்றிய கபடநாடகம் எல்லா இடத்திலும் எப்போதும் சமூக முரண்பாடுகளின் ஈரடுக்கு (square) அல்லது மூன்றடுக்கு (cube) அளவுக்கு வளர்கிறது. சித்தாந்தம் கணிதமொழிக்கு மாற்றப்படும் விடயத்தில் வரலாற்று விதியாக தோராயமாக இதுவே இருக்கிறது. சோசலிசம் அதன் பெயருக்குத் தகுந்த மதிப்பைக் கொண்டிருக்கவேண்டுமென்றால், பேராசையற்ற மனித உறவுகள், பொறாமை மற்றும் சூழ்ச்சியற்ற நட்பு, அடிப்படை கணிப்புகளற்ற காதல் என்றே அர்த்தமளிப்பதாக இருக்க வேண்டும். இந்த இலட்சிய நிர்ணயங்கள் எல்லாம் ஏற்கனவே அடையப்பட்டாகி விட்டதாக உத்தியோகபூர்வ சித்தாந்தம் அறிவிக்கிறது, அத்துடன் யதார்த்தமானது எந்த அளவுக்கு உரக்க இத்தகைய அறிவிப்புகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறதோ அந்த அளவுக்கு கூடுதலான வலியுறுத்தத்துடன் அதைச் செய்கிறது. உதாரணத்திற்கு 1936 ஆம் ஆண்டு ஏப்ரலில் கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய வேலைத்திட்டம் இவ்வாறு கூறுகிறது: 'ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உண்மையான சமத்துவத்தின் அடிப்படையில், ஒரு புதிய குடும்பம் உருவாகப் பெறுகிறது, அதனை வளமாக்குவது சோவியத் அரசாங்கத்தின் அக்கறைக்குரியதாக இருக்கும்'. இந்த வேலைத்திட்டத்திற்கு துணையளிப்பாக வரும் ஒரு உத்தியோகப்பூர்வ வர்ணனை கூறுகிறது: 'ஒரு வாழ்க்கைத் தோழரை ―மனைவி அல்லது கணவன்― தெரிவுசெய்கையில் நமது இளைஞர்கள் மனதில் ஒரேயொரு நோக்கம், ஒரேயொரு துடிப்பு தான் இருக்கும்: காதல். பண வசதியை மனதில் கொண்டு செய்யப்படும் முதலாளித்துவ திருமணம் நமது வளரும் தலைமுறைக்கு கிடையாது”. (பிராவ்தா, ஏப்ரல் 4, 1936). சாமானிய உழைக்கும் ஆண் அல்லது பெண்ணைப் பொறுத்தவரை, இது ஏறக்குறைய உண்மையாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒப்பீடு செய்துபார்த்தால் 'பணத்திற்காக கல்யாணம்' என்பது முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளர்களிடையேயும் கூட அதிகம் அறியப்படாததாய் தான் இருக்கிறது. நடுத்தர மற்றும் உயர் அடுக்குகளில் விடயங்கள் மிகவும் வேறுவிதமாய் இருக்கின்றன. புதிய சமூக குழுவாக்கங்கள் தனிமனித உறவுகள் விடயத்தில் தங்களது முத்திரையை தானாய் பதிக்கின்றன. பாலியல் உறவுகளில் அதிகாரமும் பணமும் உருவாக்கக் கூடிய தீங்குணங்கள் அதிகாரத்துவத்தின் பதவிகளில், ஏதோ இந்த விடயத்தில் மேற்கத்திய முதலாளித்துவத்தை விஞ்சி விட வேண்டும் என்று அது இலக்கு நிர்ணயித்துக் கொண்டுவிட்டதோ என்று கருதக்கூடிய அளவுக்கு, ஆடம்பரமான செழிப்புடன் திகழ்கின்றன.

சற்றுமுன் நாம் மேற்கோள்காட்டிய பிராவ்தாவின் திட்டவட்டத்திற்கு முழு முரண்பாடான விதத்தில் 'வசதிக்கான திருமணம்' என்பது, சோவியத் ஊடகங்களே தற்செயலான அல்லது தவிர்க்கவியலாத வெளிப்படைப் பேச்சில் ஒத்துகொள்வதைப் போல, இப்போது முழுமையாக மறுஎழுச்சி பெற்று விட்டது. கல்வித்தகுதிகள், சம்பளங்கள், வேலை, இராணுவ உடையில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை இவையெல்லாம் மேலும் மேலும் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன, ஏனென்றால் பாதணிகள், மேலாடைகள், வசதியான குடியிருப்புக்கள், குளியலறைகள் மற்றும் -இறுதிக் கனவாக இருக்கின்ற- வாகனங்கள் ஆகியவை குறித்த கேள்விகள் அவற்றோடு தான் பிணைந்திருக்கின்றன. வெறும் ஒரு அறைக்கான போராட்டம் மட்டுமே மாஸ்கோவில் ஒவ்வொரு ஆண்டும் இணைக்கும் அல்லது பிரிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமன்று. உறவினர்கள் குறித்த கேள்வியும் அசாதாரணமான முக்கியத்துவத்தை பெற்று விட்டிருக்கிறது. மாமனார் இராணுவ தளபதியாக அல்லது செல்வாக்குள்ள கம்யூனிஸ்டாக இருந்தாலோ, மாமியார் ஒரு பெரும் அதிகாரியின் சகோதரியாக இருந்தாலோ மிகுந்த பயனிருக்கிறது. இதில் நாம் ஆச்சரியப்பட முடிகிறதா? இவ்வாறில்லாமல் வேறுவகையாக இருந்திருக்க வழியுண்டா?

கணவன் ஒரு கட்சி உறுப்பினராக, தொழிற்சங்கவாதியாக, இராணுவ தளபதி அல்லது நிர்வாகியாக வளர்ந்து விருத்தி கண்டு வாழ்க்கையின் புதிய சுவைகளைப் பெறுகின்ற வேளையில், மனைவியோ குடும்ப சுமையில் நசுங்கி பழைய நிலையிலேயே தொடர்கின்ற நிலையினால் சிதையும் அல்லது உடையும் சோவியத் குடும்பங்களின் கதை மகத்தான சோவியத்துகளின் புத்தகத்தில் மிகவும் அதிரச்செய்கின்ற அத்தியாயங்களில் ஒன்றாக இருக்கும். சோவியத் அதிகாரத்துவத்தின் இரண்டு தலைமுறைகளது பாதையெங்கும் நிராகரிக்கப்பட்ட மற்றும் விட்டுச் செல்லப்பட்ட மனைவிமார்களது துயரங்கள் விரவிக் கிடக்கின்றன. அதே நிகழ்வுப்போக்கு இப்போது புதிய தலைமுறையிலும் காணக் கூடியதாய் இருக்கிறது. முரட்டுத்தனங்கள் மற்றும் கொடுமைகள் அனைத்திலும் மிகப் பெரியனவற்றை உண்மையில் அதிகாரத்துவத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் தான் சந்திக்கக்கூடியதாய் இருக்கிறது. அங்கு மிகப்பெரும் சதவீதத்தில் இருக்கின்ற கலாச்சார முதிர்ச்சியற்ற புதுப் பணக்காரர்கள், தங்களுக்கு எல்லாமே அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதிக் கொள்கின்றனர். குடும்ப ஒழுக்கங்களையும் பலவந்தமான 'தாய்மை இன்பத்தையும்' போதிக்கின்ற இந்த போதகர்களை (evangelists) பொறுத்தவரை, தங்கள் பதவியின் காரணத்தால் தண்டனை அச்சமின்றி உலவுகின்ற அவர்கள், மனைவியர் விடயத்தில் மற்றும் பொதுவாக பெண்கள் விடயத்தில், செய்துகொண்டிருக்கும் அப்பட்டமான குற்றங்களை காப்பக ஆவணங்களும் நினைவுப்பொருட்களும் ஒருநாள் அம்பலப்படுத்தும்.

இல்லை, சோவியத் பெண் இன்னும் விடுதலை பெற்று விடவில்லை. சட்டத்தின் முன் முழுமையான சமத்துவம் என்பது வேலை செய்யும் பெண்களையும் விவசாயப் பெண்களையும் காட்டிலும் உயர்ந்த அடுக்கில் இருக்கும் பெண்களுக்கு, அதிகாரத்துவத்தில் இருக்கும், தொழில்நுட்பத்துறை, கல்வித்துறையைச் சேர்ந்த மற்றும் பொதுவாக புத்திஜீவிரீதியான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்குத் தான் இதுவரை அளவின்றி வழங்கப்பட்டிருக்கிறது. குடும்பத்தின் பொருளியல் தேவைகளுக்கான கவலையை சமூகம் தன்வசம் எடுத்துக் கொள்ளத் திறனற்றதாக இருக்கும் வரையில், ஒரு தாயானவள், செவிலி, வேலைக்காரி மற்றும் சமையல்காரி இத்யாதியாக ஒரு வெள்ளை அடிமையை தன் சேவைக்கு கொண்டிருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒரு சமூக செயல்பாட்டை அவளால் வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும். சோவியத் ஒன்றிய மக்கள்தொகையைத் தாங்கியிருக்கும் 40,000,000 குடும்பங்களில், 5 சதவீதம், அல்லது 10 சதவீதம், குடும்பங்கள் தங்களது 'வீட்டு ‘அடுப்பாங்கரையையே’ நேரடியாக அல்லது மறைமுகமாக வீட்டுவேலை அடிமைகளின் உழைப்பைக் கொண்டுதான் கட்டுகிறார்கள். சோவியத் வீட்டுவேலைப் பெண்களின் துல்லியமான கணக்கெடுப்பு, சோவியத் ஒன்றியத்தில் பெண்களின் நிலையை சரியாக மதிப்பீடு செய்வதற்கு ஒட்டுமொத்த சோவியத் சட்டத்தின் அளவுக்கு ―அது எந்த அளவுக்கு முற்போக்கானதாக இருந்தபோதிலும்― முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் அந்தக் காரணத்துக்காகவே சோவியத் புள்ளிவிவரங்கள் வீட்டுவேலை செய்யும் பெண்களை 'வேலை செய்யும் பெண்கள்' அல்லது 'மற்ற பிறர்' என்பதாக மறைக்கிறது. சமையலுக்கு ஆள் வைத்திருக்கின்ற, பொருட்களை அனுப்பச் சொல்லி கடைகளுக்கு தகவல் சொல்லுவதற்கு தொலைபேசி கொண்டிருக்கின்ற, அவசர வேலைகளுக்கு ஒரு வாகனம் கொண்டிருக்கின்ற ஒரு மாண்புமிகு கம்யூனிஸ்டாக இருக்கக் கூடிய ஒரு குடும்பத்துத் தாயின் சூழ்நிலைக்கும், தானே கடைகளுக்கு ஓடுவதற்கும், தானே உணவு தயாரிப்பதற்கும், தானே நடந்து சென்று குழந்தைகளை மழலைப் பள்ளியில் இருந்து ―அப்படி ஒன்று அவருக்கு கிடைத்திருக்கும் பட்சத்தில்― அழைத்து வருவதற்கும் நிர்ப்பந்தமுற்றிருக்கும் உழைக்கும் பெண்களின் சூழ்நிலைக்கும் அதிகம் சம்பந்தம் இருப்பதில்லை. எந்த ஒரு மேற்கத்திய நாட்டிலும் ஒரு முதலாளித்துவ வர்க்கப் பெண்ணிற்கும் ஒரு பாட்டாளி வர்க்கப் பெண்ணிற்கும் இடையில் இருக்கும் பேதத்திற்கு சளைக்காததாக இருக்கும் இந்த சமூக முரண்பாட்டை எந்த சோசலிச பதாகைகளும் மறைக்க இயலாது.

தாங்கமுடியாத மற்றும் சிறுமைப்படுத்துவதாக இருக்கும் அன்றாட உளைச்சல்களை எல்லாம் சமூகம் அகற்றி விட்டிருக்கும் ஒரு உண்மையான சோசலிச குடும்பத்தில் எந்த பலவந்தமான ஒழுக்கத்திற்கும் அவசியமிருக்காது. கருக்கலைப்பு மற்றும் விவாகரத்து சட்டங்கள் குறித்த கருத்துகள் விபச்சார இல்லங்கள் அல்லது மனித தியாகங்களை நினைவு கூருவதை விட சிறப்பானதாக இருக்காது. க்டோபர் சட்டம் அத்தகைய ஒரு குடும்பத்திற்கான திசையில் ஒரு துணிச்சலான அடியை எடுத்து வைத்தது. பொருளாதார மற்றும் கலாச்சார பின்தங்கிய நிலையானது ஒரு குரூர எதிர்வினையை உருவாக்கியிருக்கிறது. தேர்மிடோரிய சட்டமானது முதலாளித்துவ மாதிரிகளுக்கு பின்வாங்குகிறது, தனது பின்வாங்கலை 'புதிய' குடும்பத்தின் புனிதம் குறித்த பொய்யான உரைகளால் பூசி மெழுகுகிறது. இந்தக் கேள்வியிலும் சோசலிச ரீதியான திவால்நிலையானது பாசாங்குத்தனமான மரியாதை நிலையைக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்கிறது.

உயர்ந்த கோட்பாடுகளுக்கும் அவலட்சணமான யதார்த்தத்திற்கும் இடையில், அதிலும் குறிப்பாக சிறுவர்கள் குறித்த பிரச்சினையில், இங்கிருக்கும் பேதத்தால் உலுக்கப்படுகின்ற உண்மையான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சோசலிச சட்டம் என்பது ஒட்டுமொத்தமான கபடநாடகம் என்பதை உணர்த்துவதற்கு வீடில்லாத சிறுவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதான சாதாரண உண்மையே போதுமானது. இன்னொரு வகையான பார்வையாளர்கள் இருக்கிறார்கள், இவர்கள் சட்டங்கள் மற்றும் நிர்வாக ஸ்தாபனங்களின் வடிவில் சுற்றிமூடப்பட்டிருக்கும் சிந்தனைகளின் பரந்த தன்மை மற்றும் பிரம்மாண்டத்தைக் கண்டு ஏமாறுபவர்களாய் உள்ளார்கள். ஆதரவற்ற தாய்மார்கள், விபச்சாரிகள் மற்றும் வீடற்ற குழந்தைகளை காணும்போதெல்லாம், கொஞ்சம் பொருளியல் செல்வம் கூடுகின்ற நிலை வருகையில் இந்த சோசலிச சட்டங்களை இரத்தமும் சதையுமாய் அது நிரப்பிவிடும் என்று இந்த நம்பிக்கைவாதிகள் தங்களுக்கு தாங்களே ஆறுதல்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இரண்டு வகை அணுகுமுறையில் எது அதிக தவறான அணுகுமுறை, எது கூடுதல் தீங்கிழைக்கக்கூடியது என்பதைத் தீர்மானிப்பது சுலபமில்லை. வரலாற்றுக் குருட்டுநிலை பாதிப்புடையவர்கள் மட்டும் தான் சோசலிசத் திட்டத்தின் அகன்ற தன்மையை மற்றும் துணிச்சலை, அதன் அபிவிருத்தியின் முதலாவது கட்டங்களின் முக்கியத்துவத்தை, அதனால் திறக்கப்படும் அளவிடமுடியாத சாத்தியங்களை காணவியலாதவர்களாய், இருக்க முடியும். அதேசமயத்தில் இன்னொரு பக்கத்தில், சமூக முரண்பாடுகளின் வளர்ச்சிக்கு தங்கள் கண்களை மூடிக் கொண்டு இருந்து விட்டு, வருங்காலக் கனவுகளைக் கொண்டு தங்களை ஆறுதல்படுத்திக் கொண்டு, அந்த வருங்காலத்திற்கான சாவியையும் மரியாதையுடன் அதிகாரத்துவத்தின் கரங்களில் விட்டுவிடத் தீர்மானிக்கிறவர்களின் செயலற்ற, உணர்வற்ற நம்பிக்கைவாதத்தை நாம் கண்ணியக்குறைவாக பேசக் கூடாது என்பது சாத்தியமல்ல. ஆண்கள் மற்றும் பெண்களிடையேயான சமத்துவம் என்பதை உரிமை பறிக்கப்படுவதிலான சமத்துவம் என்று இந்த அதிகாரத்துவம் ஏற்கனவே மாற்றி விட்டிருப்பதை பார்க்காதவர்கள் போலவும்! சோவியத் அதிகாரத்துவம் சுதந்திரத்தின் இடத்தில் இனி ஒருபோதும் ஒரு புதிய அடக்குமுறையை அறிமுகப்படுத்தாது என்று ஏதோ ஒரு ஞானப் புத்தகத்தில் உறுதியாக வாக்குறுதியளிக்கப்பட்டிருப்பதைப் போலவும்.

ஆண் எவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தினான், சுரண்டுபவன் இரண்டு பேரையுமே எவ்வாறு கீழ்ப்படுத்தினான், உழைப்பவர்கள் தங்களது இரத்தத்தை விலையாகக் கொடுத்து எவ்வாறு அடிமைத்தனத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் கடைசியில் ஒரு சங்கிலி விலங்கைக் கொடுத்து வேறொரு சங்கிலி விலங்கை வாங்கியதே அவர்களுக்கு மிஞ்சியிருக்கிறது. இவை எல்லாம் குறித்து வரலாறு நமக்கு நிறைய சொல்கிறது. சாரத்தில் பார்த்தால், இவற்றைத் தவிர வேறொன்றையும் அது சொல்வதில்லை. ஆனால் யதார்த்தத்தில் எவ்வாறு ஒரு குழந்தையை, பெண்ணை, மனிதனை விடுதலை செய்வது? அதற்கு இன்னும் நம்மிடம் நம்பகமான முன்மாதிரிகள் எதுவும் இல்லை. முழுக்க எதிர்மறையாகக் கிடைத்திருக்கும் அனைத்து கடந்தகால அனுபவமும், உழைக்கும் மக்களிடம் மற்ற அனைத்திற்கும் முன்னதாக, சலுகைமிக்க மற்றும் கட்டுப்பாடற்ற பாதுகாவலர்கள் அனைவரின் மீதும் சமரசமற்ற அவநம்பிக்கை கொள்ளக் கோருகிறது!

இளைஞர்களுடனான போராட்டம்

ஒவ்வொரு புரட்சிகரக் கட்சியும் தனக்கான பிரதான ஆதரவினை எழுச்சி கண்டுவரும் வர்க்கத்தின் இளைய தலைமுறையில் தான் காண்கிறது. இளைஞர்களை ஒரு பதாகையின் கீழ் ஈர்க்கத் திறமில்லாமையில் அரசியல் சிதைவு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக காட்சியில் இருந்து மறையத்தொடங்கும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்சிகளானவை, இளைஞர்களை புரட்சிக்கோ அல்லது பாசிசத்திற்கோ திருப்பும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றன. போல்ஷிவிசம் அதன் தலைமறைவு காலத்தில் எப்போதும் இளம் தொழிலாளர்களின் ஒரு கட்சியாக இருந்தது. மென்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்தில் மிகவும் மரியாதை பெற்றுத் திகழ்ந்த திறன்மிகு உயர் அடுக்கையே நம்பியிருந்தார்கள், அதில் பெருமிதமும் கொண்டிருந்தார்கள், போல்ஷிவிக்குகளை கீழ்நோக்கிய ஏளனப்பார்வை பார்த்தார்கள். அடுத்துவந்த நிகழ்வுகள் அவர்களது தவறுகளை கடுமையானவிதத்தில் எடுத்துக்காட்டின. தீர்மானமான தருணத்தில், இளைஞர்கள் தங்களுடன் கூடுதல் முதிர்ச்சியான அடுக்குகளையும் பழைய ஆட்களையும் கூட கொண்டுவந்தனர்.

புரட்சியானது புதிய சோவியத் தலைமுறைக்கு ஒரு வலிமையான வரலாற்று உந்துசக்தியளித்தது. பழமைவாத வாழ்க்கை வடிவங்களில் இருந்து ஒரே அடியில் அவர்களை விடுவித்து, அவர்களுக்கு இயங்கியலின் முதல் இரகசியமான உலகில் மாறாததென்று எதுவுமில்லை என்ற, மற்றும் சமூகம் என்பது பிளாஸ்டிக் பொருட்களால் ஆனது என்கிற மாபெரும் இரகசியத்தை அம்பலப்படுத்தியது. நமது சகாப்தத்தின் நிகழ்வுகளின் வெளிச்சத்தில் பார்க்கையில், மாறாத இன வகைகள் குறித்த தத்துவம் என்பது எவ்வளவு முட்டாள்தனமாய் காட்சியளிக்கிறது! சோவியத் ஒன்றியம் என்பது டஜன்கணக்கான தேசியங்களின் குணநலன்கள் ஒன்றுகலக்கப்படுகின்ற ஒரு அடர்த்தியான கொதிகலனாக இருக்கிறது. “ஸ்லேவிய ஆன்மா” எனும் உள்நம்பிக்கை ஒரு கறையைப் போல உரிந்து மறைகின்றது.

ஆயினும் இளம் தலைமுறைக்கு கொடுக்கப்பட்ட உந்துசக்தி இன்னும் அதற்குரிய ஒரு வரலாற்று ஸ்தாபனத்தில் வெளிப்பாட்டைக் காணாதிருக்கிறது. நிச்சயமாகச் சொல்லலாம், இளைஞர்கள் பொருளாதார வட்டத்தில் மிகவும் செயலூக்கத்துடன் இருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தில் 7,000,000 தொழிலாளர்கள் இருபத்தி மூன்று வயதிற்கு கீழானவர்கள் — 3,140,000 பேர் தொழிற்சாலைகளிலும், 700,000 பேர் இருப்புப்பாதைகளிலும், 700,000 பேர் கட்டுமானத் துறைகளிலும் இருக்கிறர்கள். புதிய பிரம்மாண்டமான தொழிற்சாலைகளில், கிட்டத்தட்ட பாதிப் பேர் இளைஞர்கள். கூட்டுற்பத்தி பண்ணைகளில் இப்போது 1,200,000 கம்யூனிச இளைஞர் அமைப்பினர் இருக்கிறார்கள். சமீப வருடங்களில் கட்டுமானப் பணிக்காகவும், மர வேலைகளுக்காகவும், சுரங்கம் தோண்டுவதற்காகவும், தங்க உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும், ஆர்க்டிக், சகலைன் அல்லது புதிய நகரமான கோம்ஸோமோல்ஸ்க் கட்டப்பட்டு வருகின்ற ஆமுரில் வேலை செய்வதற்காகவும் கம்யூனிச இளைஞர் அமைப்பின் நூறாயிரக்கணக்கான உறுப்பினர்கள் திரட்டப்பட்டார்கள். துரிதமாய் வேலைமுடிக்கும் தொழிலாளர் படையினர், சாம்பியன் தொழிலாளர்கள், ஸ்டக்னோவ்வாதிகள், மேற்பார்வையாளர்கள், மற்றும் கீழ்-நிலை நிர்வாகிகளை புதிய தலைமுறை எரிச்சல்படுத்துகிறது. இளைஞர்கள் படிக்கிறார்கள், அவர்களில் ஒரு கணிசமான பகுதியினர் மிகுந்த விடாமுயற்சியுடன் படிக்கிறார்கள். அதே போல் விளையாட்டுத் துறையிலும், பாராசூட்டில் பறப்பது மற்றும் துப்பாக்கி சுடுவது ஆகிய மிகவும் துணிச்சல் தேவைப்படுகின்ற அல்லது போர்மாதிரியான விளையாட்டு வடிவங்களிலும், அதேயளவு செயலூக்கத்துடன் திகழ்கிறார்கள். உத்வேகமும் துணிச்சலும் மிகுந்தவர்கள் அனைத்து வகையான ஆபத்தான ஆராய்ச்சிப் பயணங்களிலும் களமிறங்குகிறார்கள்.

'நமது இளைஞர்களின் ஒரு சிறந்த பகுதியினர் சவால்கள் வரவேற்கும் இடங்களில் பணிபுரிய ஆர்வமாய் இருக்கிறார்கள்' என்று சமீபத்தில் கூறினார் பிரபல பனித்துருவ ஆராய்ச்சியாளரான ஸ்கிமிட். இது சந்தேகத்திற்கிடமற்ற உண்மை. ஆயினும் அனைத்துத் தளங்களிலும் புரட்சிக்கு பிந்தைய தலைமுறைகள் இன்னும் மேற்பாதுகாவலர் முறையின் கீழ் செயல்படும் நிலையில் தான் இருக்கின்றன. என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கு மேலிருந்து கூறப்படும் நிலையே உள்ளது. அதிகாரத்தின் மிக உயர்ந்த வடிவமாகத் திகழும் அரசியல் மொத்தமாக “பழைய பாதுகாவலர்கள்” (Old Guard) எனப்படுபவர்களின் கரங்களில் தான் தொடர்ந்தும் இருக்கிறது, இளைஞர்கள் மத்தியில் தாங்கள் ஆற்றும் கடமை தவறாத மற்றும் பல சமயங்களில் பெருமையடிப்பதாக இருக்கும் உரைகளின் போது பழைய இளைஞர்கள் தங்களது சொந்த ஏகாதிக்கத்தை கவனமாய் பாதுகாக்கிறார்கள்.

அரசு உலர்ந்து உதிராமல், அதாவது அனைத்து வகையான காவல் அடக்குமுறைகளும் கற்றுணர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் சுய-மேலாண்மை மூலமாக பிரதியீடுசெய்யப்படாமல், ஒரு சோசலிச சமூகம் அபிவிருத்தி காண்பதை சிந்திக்காத ஏங்கெல்ஸ், இந்த பணியினை சாதிக்கும் பொறுப்பை, 'புதிய, சுதந்திரமான சமூக சூழ்நிலைகளில் வளர்கின்ற, அனைத்து வகை அரசுவாதத்தையும் தூக்கியெறியும் நிலையில் வாழப் போகின்ற' இளைய தலைமுறையின் மீது அமர்த்தினார். 'ஜனநாயகவாத வகை-குடியரசுவாத வகை உள்ளிட்ட அத்தனை வகையான அரசுவாதம்' என்று லெனின் தன் பங்காக அதில் சேர்த்தார். ஒரு சோசலிச சமூகத்தின் கட்டுமானத்திற்கான வாய்ப்புவளம், அச்சமயத்தில், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் சிந்தனையில், அண்ணளவாக இவ்வாறு இடம்பெற்று இருந்தது: அதிகாரத்தை கைப்பற்றிய 'பழைய பாதுகாவலர்கள்' (Old Guard) தலைமுறை அரசைக் கலைப்பதற்கான வேலையை ஆரம்பிக்கும்; அடுத்த தலைமுறை அதனை நிறைவு செய்யும்.

யதார்த்தத்தில் விடயங்கள் எப்படி இருக்கின்றன? சோவியத் ஒன்றிய மக்கள்தொகையில் நாற்பத்து மூன்று சதவீதம் பேர் அக்டோபர் புரட்சிக்குப் பின்னால் பிறந்தவர்கள். இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான எல்லையாக இருபத்திமூன்று வயது இடைவெளியை எடுத்துக் கொண்டால், சோவியத் மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த எல்லையை இன்னும் தொடவில்லை. ஆகவே, நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையினருக்கு சோவியத்துகளை தவிர்த்த வேறெந்த ஆட்சிமுறையையும் நேரடி அனுபவத்தில் தெரியாது. ஆனால் இந்த புதிய தலைமுறையோ ஏங்கெல்ஸ் எண்ணியது போல 'சுதந்திரமான சமூக நிலைமைகளில்' உருக்கொள்ளவில்லை, மாறாக மாபெரும் புரட்சியைச் சாதித்தவர்களாக உத்தியோகபூர்வ புனைவு கைகாட்டுகின்ற அதே மனிதர்களைக் கொண்ட ஆளும் தட்டிடம் இருந்து வருகின்ற சகிக்க முடியாத மற்றும் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் அடக்குமுறையின் கீழ் உருக்கொண்டு வருகிறது. தலைவருக்கு தனிநபர் விசுவாசமும் நிபந்தனையற்ற பணிவும் தான் மனிதனின் தலையாய பெருமையாக தொழிற்சாலையில், கூட்டுப் பண்ணையில், இராணுவ முகாம்களில், பல்கலைக்கழகத்தில், வகுப்பறையில், ஏன் குழந்தைகள் பள்ளியில் கூட -மழலையர் காப்பகத்தில் இல்லையென்று கொள்வதானால்- அறிவிக்கப்படுகிறது. சமீப காலத்தில் ஆசிரியர்களிடம் இருந்து உதிர்க்கப்படும் பல வாழ்க்கை தத்துவங்கள் மற்றும் கட்டளைகள் கோயபல்ஸிடம் இருந்து நகலெடுத்தது போல் தோன்றக் கூடும், அல்லது அவரே அவற்றின் பெரும் பகுதியை ஒருவேளை ஸ்ராலினின் கூட்டாளிகளிடம் இருந்து நகலெடுத்திருந்தாரோ என்னவோ.

மாணவரின் பள்ளி மற்றும் சமூக வாழ்க்கையானது சம்பிரதாயத்தனம் மற்றும் வேடதாரித்தனத்தால் நிரம்பியிருக்கிறது. தங்களால் தவிர்க்கவியலாத மாண்புமிகு நிர்வாகத் தலைமைக் குழுவினர், அவர்தம் அன்பான தலைவர்களுக்கு அவர்களிடும் மரியாதை முழக்கங்கள், அவர்களின் முன்ஜீரணிக்கப்பட்ட நேர்பட்ட விவாதங்கள் ―அதில், அவர்களின் மூத்தவர்கள் போலவே, அவர்களும் மனதில் ஒன்றை நினைப்பார்கள், பேசுவது வேறொன்றாக இருக்கும்― ஆகியவற்றுடனான எண்ணிலடங்காத கடுகளவும் சுரத்தில்லாத கூட்டங்களில் சுரத்தையற்றவர்கள் போல உட்கார்ந்து எழுந்து வர பிள்ளைகள் கற்றுக்கொண்டு விட்டிருக்கிறார்கள். சம்பிரதாயத்தனம் என்னும் இந்த பாலைவனத்தில் சோலைகளை உருவாக்க முயலும் பள்ளி மாணவர்களின் மிகவும் அப்பாவித்தனமான குழுக்கள் கடும் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றன. “சோசலிச பள்ளிகள்” என்று சொல்லப்படுவனவற்றுள் GPU அதன் முகவர்முறை மூலமாக வெறுப்பூட்டுகிறவிதமாய் துரோகங்கள் மற்றும் வெட்டிப்பேச்சுகளின் மோசடியை அறிமுகப்படுத்துகிறது. ஓரளவு சிந்திக்கும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்களும், அவர்கள் மீது நம்பிக்கைவாதம் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் கூட, பள்ளி வாழ்க்கையை கொல்வதாக இருக்கும் இத்தகைய அடக்குமுறை, போலித்தனம் மற்றும் அலுப்புநிலை நிலவுவது குறித்த தங்களது திகிலை அவர்களால் எல்லா சமயத்திலும் மறைக்க முடிவதில்லை.

புதிய தலைமுறையினர், வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சி குறித்து கடந்த கால அனுபவம் எதுவும் இல்லாத நிலையில், சோவியத் ஜனநாயகம் நிலவுகின்ற சூழ்நிலைகளின் கீழும், கடந்த கால அனுபவம் மற்றும் நிகழ்கால படிப்பினைகள் இவற்றில் தொடர்ந்து நனவுடன் செயலாற்றுவதன் கீழும் மட்டுமே நாட்டின் சமூக வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்கேற்பதற்கு பக்குவமடைந்திருக்க முடியும். சுதந்திரமான சிந்தனையைப் போலவே சுதந்திரமான குணநலனும் விமர்சனமின்றி வளர முடியாது. ஆனால், சோவியத் இளைஞர்களுக்கோ, கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், தவறுகள் செய்து முயன்று திருத்திக் கொள்வதற்குமான ―தங்கள் தவறாயினும் சரி, மற்றவருடையதாயினும் சரி― அடிப்படை வாய்ப்பு கூட முற்றிலும் மறுக்கப்படுகிறது. அவர்களது சொந்தக் கேள்விகள் உட்பட எல்லாக் கேள்விகளுமே அவர்களுக்காக தீர்மானிக்கப்படுபவையாக இருக்கின்றன. மூத்தவர்களின் முடிவுகளை நிறைவேற்றுவதற்கும் அவர்தம் புகழ் பாடுவதற்கும் மட்டுமே அவர்கள் (இளைஞர்கள்) அழைக்கப்படுகிறார்கள். விமர்சனத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும், கழுத்தைத் திருகுவதைத்தான் அதிகாரத்துவம் பதிலாய் கொடுக்கிறது. இளைஞர்களில் சிறந்தவர்களாகவும் பணியாதவர்களாகவும் இருப்பவர்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள், அடக்கப்படுகிறார்கள் அல்லது சரீரதியாக அழித்தொழிக்கப்படுகிறார்கள். கம்யூனிச இளைஞர் அமைப்பின் பல மில்லியன் கணக்கானோரில் இருந்து ஒரேயொரு முக்கிய பிரபலமான நபர் கூட எழுந்து வரவில்லை என்ற உண்மைக்கான விளக்கத்தை இது அளிக்கிறது.

பொறியியல், விஞ்ஞானம், இலக்கியம், விளையாட்டு அல்லது செஸ் ஆட்டம் ஆகியவற்றில் தங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது, இளைஞர்கள் வருங்கால பெரும் செயல்பாட்டிற்குரிய ஊக்கத்தை வெல்கின்றனர் என்றே சொல்லலாம். இந்த தளங்கள் அத்தனையிலும் அவர்கள், மோசமான தயாரிப்பு கொண்டிருந்த பழைய தலைமுறையுடன் போட்டி போட்டு, பெரும்பாலும் அவர்களுக்கு சமானமாய் நிற்கின்றனர் மற்றும் அவர்களை தோற்கடிக்கவும் செய்கின்றனர். ஆனால் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு அரசியல் தொடர்பிலும் தமது கையைச் சுட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறாய் அவர்களுக்கு மூன்று சாத்தியங்கள் மட்டுமே திறந்திருக்கிறது: அதிகாரத்துவத்தில் பங்குபற்றி பிழைப்பு பெற்றுக் கொள்வது; அடக்குமுறைக்கு அமைதியாகப் பணிந்து பொருளாதார பணி, விஞ்ஞான அல்லது அவர்களின் அற்பமான சொந்த வேலைகளுக்குள் ஓய்வுகண்டு விடுவது; அல்லது, இறுதித் தெரிவாக தலைமறைவாகச் சென்று போராடவும் வருங்காலத்திற்கான தங்கள் பாத்திரத்தை பட்டைதீட்டவும் கற்றுக் கொள்வது. அதிகாரத்துவ பிழைப்புக்கான பாதை என்பது ஒரு சொற்பமான சிறுபான்மை எண்ணிக்கையினருக்கு மட்டுமே அணுகக் கிடைப்பதாய் இருக்கிறது. மறு துருவத்தில் ஒரு மிகச்சிறிய எண்ணிக்கையிலானோர் மட்டுமே எதிர்ப்பாளர்களது வரிசையில் நுழைகிறார்கள். நடுவில் இருக்கும் பெருவாரி எண்ணிக்கையிலான வெகுஜனக் கூட்டம் ஆகவே மிகவும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆயினும் அதில், இரும்பு அழுத்தத்திற்கு கீழ், கண்ணில்படாத என்றபோதும் மிகவும் முக்கியமான, பெருமளவிற்கு சோவியத் ஒன்றியத்தின் வருங்காலத்தை தீர்மானிப்பவையாக இருக்கப் போகின்ற, நிகழ்ச்சிப்போக்குகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

உள்நாட்டுப் போர் சகாப்தத்தின் விருப்புகளை துறக்கும் வாழ்க்கைப் போக்குகள் புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) காலத்தில் ஒரு கூடுதலான அனுபவிக்கவிரும்பும், பேரார்வமிக்க என்பதை சொல்லவும் அவசியமில்லை, மனோநிலைக்கு வழிவிட்டது. முதலாவது ஐந்தாண்டு திட்டம் மீண்டும் சுயவிருப்பமில்லாத விருப்புகளை துறப்பதற்கான காலமானது. ஆனால் இப்போது வெகுஜனங்களுக்கும் இளைஞர்களுக்கும் மட்டுந்தான் அவ்வாறு. ஆளும் தட்டானது தங்களை தனிநபர் வளமைக்கான அந்தஸ்துகளில் ஆழமாக புதைத்துக் கொண்டு விட்டிருந்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் சந்தேகத்திற்கிடமில்லாமல் துறவுவாதத்திற்கு எதிரான ஒரு கூர்மையான எதிர்வினையுடன் உடன்வருவதாய் இருக்கிறது. தனிநபர் முன்னேற்றம் குறித்த கவலை மக்கள்தொகையின் பெரும் வட்டங்களை, குறிப்பாக இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கிறது. ஆயினும், புதிய சோவியத் தலைமுறையில் வசதியும் செழுமையும் வெகுஜன மக்களுக்கு மேலே தங்களை இருத்திக் கொள்ள முடிகின்ற, ஏதேனும் ஒரு வழியில் ஆளும் தட்டுக்கு தங்களை இணக்கப்படுத்திக் கொள்கின்ற ஒரு குறுகிய அடுக்கிற்கு மட்டுமே அணுகக் கூடியதாய் உள்ளது என்பதே உண்மையாகும். அதிகாரத்துவமும் தன் பங்கிற்கு எந்திரத்தனமான அரசியல்வாதிகளையும் பிழைப்புவாதிகளையும் நனவுடன் உருவாக்கிக் கொண்டும் வகைப்படுத்திக் கொண்டும் இருக்கிறது.

கம்யூனிச இளைஞர் அமைப்பின் ஒரு காங்கிரசில் (1936 ஏப்ரல்) முக்கிய பேச்சாளர் அறிவித்தார்: 'இலாபங்களுக்கான பேராசை, நாகரிகமுதிர்ச்சியற்ற அற்பத்தனம், மற்றும் அடிப்படை தற்புகழ்ச்சி (egotism) இவை எல்லாம் சோவியத் இளைஞர்களின் பண்புகளாய் இல்லாதவை'. இந்த வார்த்தைகள் எல்லாம், உழைப்புக்கேற்ற ஊதியம், சிறப்பு சலுகைகள் மற்றும் ஒதுக்கீடுகள் ஆகிய வழிமுறைகள் உடனான, 'செழுமையான மற்றும் அழகான வாழ்க்கை' என்ற கோலோச்சும் முழக்கங்களுக்கு கூர்மையாய் முரண்பட்டு ஒலிக்கின்றன. சோசலிசம் என்பது துறவு அல்ல; மாறாய் அது கிறிஸ்தவ துறவுக்கு ஆழமான குரோதமுடையதாகும். இவ்வுலகில் அது அனைத்து மதங்களுக்கும் ஆழமான குரோதமுடையது. ஆயினும் சோசலிசம் பூமியிலான விழுமியங்களது வெவ்வேறு அடுக்குநிலைகளைக் கொண்டுள்ளது. சோசலிசத்துக்கு, மனித ஆளுமை செழுமையான வாழ்க்கைக்கான கவலையில் இருந்து தொடங்குவதில்லை, மாறாக அந்தக் கவலை ஓய்ந்து போவதில் இருந்தே தொடங்குகிறது. ஆனாலும், எந்த தலைமுறையும் தனது தலையை தான் தாண்ட முடியாது. ஒட்டுமொத்த ஸ்டக்னோவ் இயக்கமும் இப்போதைக்கு 'அடிப்படை தற்புகழ்ச்சியின்' (base egotism) மீதுதான் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அதன் வெற்றிக்கான அளவீடுகளாய் இருப்பவை ―அவர்கள் சம்பாதிக்கும் கால்சட்டைகள் மற்றும் கழுத்துப்பட்டைகளின் எண்ணிக்கை―, 'நாகரிக முதிர்ச்சியற்ற அற்பத்தனத்தை' தவிர வேறெதனையும் சான்றளிப்பதாய் இல்லை. இந்த வரலாற்று கட்டமும் கூட தவிர்க்கமுடியாதது என்று வைத்துக் கொள்வோம். போகட்டும். அப்போதும் கூட விடயத்தை உள்ளதுஉள்ளபடி பார்க்க வேண்டியது அவசியப்படுகிறது அல்லவா. சந்தை உறவுகளின் மீட்சி தனிநபர் செழுமையின் கணிசமான அதிகரிப்புக்கு சந்தேகத்திற்கிடமற்ற ஒரு வாய்ப்பினை திறக்கிறது. பொறியியல் துறை நோக்கி சோவியத் இளைஞர்கள் படையெடுக்கும் பரந்த போக்கு, சோசலிசக் கட்டுமானம் அவர்களை ஈர்க்கிறது என்பதைக் காட்டிலும், மருத்துவர்கள் அல்லது ஆசிரியர்களை விடவும் ஒப்பிடமுடியாத அளவு அதிகமாக பொறியாளர்கள் சம்பாதிக்க முடிகிறது என்ற உண்மையால் தான் விளக்கக் கூடியதாய் இருக்கிறது. இத்தகைய போக்குகள் புத்திஜீவித்தனரீதி அடக்குமுறை மற்றும் சித்தாந்தரீதி எதிர்வினை ஆகிய சூழ்நிலைகளிலும், அத்துடன் பிழைப்புவாத உந்துதல்கள் மேலிருந்து நனவுடன் கட்டவிழ்த்து விடப்படுகின்ற நிலையிலும் எழும்போது, அப்போது, 'சோசலிச கலாச்சாரம்' என்று சொல்லப்படுவதான ஒன்றின் பிரச்சாரமானது பெரும்பாலும் அதிமோசமான சமூகவிரோத தற்புகழ்ச்சி உணர்வுடைய கல்வியாக மாறி விடுகிறது.

இப்போதும் இளைஞர்களை முழுக்க அல்லது பெருவாரியாக தனிமனித நலன்களால் கட்டுண்டவர்களாக சித்தரிப்பது அவர்களை கொச்சைப்படுத்தி களங்கம் கூறுவதாகத் தான் இருக்கும். அது கூடாது, பொதுவான வெகுஜனங்களில் அவர்கள் பெருந்தன்மையானவர்களாக, பொறுப்பானவர்களாக, சுறுசுறுப்பானவர்களாக இருக்கிறார்கள். பிழைப்புவாதம் மேலிருந்து அவர்களுக்கு நிறம் கொட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களது ஆழங்களில் சாகச உணர்வில் வேரூன்றியிருக்கின்ற, செயலுறுத்தலுக்காக மட்டுமே காத்துக் கொண்டிருக்கின்ற பல்வேறு சூத்திரப்படுத்தப்படாத போக்குகள் இருக்கின்றன. குறிப்பாக இந்த மனோநிலைகளின் மீதமர்ந்து தான் சோவியத் தேசப்பற்றின் புதிய வகையானது தன்னை ஊட்டப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது மிக ஆழமானதாய், கடமை தவறாததாய் மற்றும் இயங்குநிலையுடையதாய் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அந்த தேசப்பற்றிலும் கூட, இளைஞர்களை வயதானவர்களிடம் இருந்து பிரிக்கும் ஒரு பிளவுக்கோடு இருக்கவே செய்கிறது.

ஒரு தேர்மிடோரில் இருந்து, அதாவது இன்னமும் புரட்சியின் ஆடைகளைத் தொடர்ந்து அணிந்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் ஒரு பிற்போக்குத்தனத்தில் இருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்ற வேடதாரித்தனத்தின் சூழலில் சுவாசிப்பதை ஆரோக்கியமான இளம் நுரையீரல்கள் சகிக்க இயலாததாகக் காண்கின்றன. சோசலிச சுவரொட்டிகளுக்கும் வாழ்க்கையின் யதார்த்தத்திற்கும் இடையிலான கூக்குரலிடும் முரணானது உத்தியோகபூர்வ கோட்பாட்டுநிர்ணயங்களின் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறது. இளைஞர்களின் ஒரு கணிசமான அடுக்கு அரசியலை நோக்கிய அதன் அலட்சியம், அதன் முரட்டுத்தனம் மற்றும் ஊழலடைவு ஆகியவற்றில் பெருமிதம் கொள்கிறது. பல சந்தர்ப்பங்களில், அநேகமாய் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில், இந்த அலட்சியம் மற்றும் சிடுசிடுப்பு என்பது அதிருப்தியின் மற்றும் தனது சொந்தக் காலில் நிற்பதற்கான மறைமுக ஆசையின் ஆரம்ப வடிவமாகவே இருக்கிறது. கம்யூனிச இளைஞர் அமைப்பில் இருந்தும் கட்சியில் இருந்துமான வெளியேற்றம், இளம் 'வெண் காவலர்கள்' மற்றும் 'சந்தர்ப்பவாதிகள்” ஒரு பக்கத்திலும் 'போல்ஷிவிக்-லெனினிஸ்டுக்கள்' மறுபக்கத்திலும் நூறாயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்படுவது இவையெல்லாம், வலது மற்றும் இடது இரண்டுபக்கமுமே, நனவான அரசியல் எதிர்ப்பின் ஊற்றுகள் தீர்ந்து போய்விடவில்லை என்பதையே நிரூபணம் செய்கின்றன. இன்னும் சொல்லப் போனால், கடந்த சில ஆண்டுகளின் போது அவர்கள் புது வலிமையுடன் திகழ்ந்திருக்கின்றனர். இறுதியாய், மிகவும் பொறுமையற்ற, இரத்தம் கொப்பளிக்கின்ற, மனஸ்திரமற்ற, தங்களின் நலன்களிலும் உணர்வுகளிலும் காயப்பட்ட இளைஞர்கள் தமது சிந்தனைகளை பயங்கரவாதரீதி பழிவாங்கல் திசையில் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணளவாக, சோவியத் இளைஞர்களின் அரசியல் சிந்தனைகளின் கற்றை (spectrum) இத்தகையதானதாகவே இருக்கிறது

சோவியத் ஒன்றியத்தில் தனிநபர் பயங்கரவாதத்தின் வரலாறு நாட்டின் பொதுவான பரிணாம வளர்ச்சியின் கட்டங்களை தெளிவாக குறித்து நிற்கிறது. சோவியத் அதிகாரத்தின் விடியலில், உள்நாட்டுப் போர் இன்னும் முடிவுக்கு வந்திராத ஒரு சூழலில், பயங்கரவாதச் செயல்கள் வெண் காவலர்கள் (white guards) அல்லது சமூக புரட்சியாளர்களால் (Social Revolutionaries) மேற்கொள்ளப்பட்டன. முந்தைய ஆளும் வர்க்கங்கள் மீட்சி குறித்த நம்பிக்கையை இழந்த சமயத்தில், பயங்கரவாதமும் காணாமல் போனது. அதன் எதிரொலிகள் மிக சமீபம் வரையிலும் கண்டுணரப்பட்ட குலாக் பயங்கரவாதம் எப்போதும் ஒரு உள்ளூர் குணவியல்பையே கொண்டிருந்ததுடன், சோவியத் ஆட்சிக்கு எதிரான கெரில்லா யுத்தத்திற்கு துணையளிப்பாய் இருந்தது. பயங்கரவாதத்தின் சமீபத்திய வெடிப்பைப் பொறுத்தவரையில், அது பழைய ஆளும் வர்க்கங்களின் மீதோ அல்லது குலாக்குகள் மீதோ தங்கியிருக்கவில்லை. சமீபத்திய வகை பயங்கரவாதிகள் பிரத்தியேகமாக இளைஞர்களில் இருந்து, கம்யூனிச இளைஞர் அமைப்பு மற்றும் கட்சியில் இருந்து எடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதில் ஆளும் அடுக்கின் வாரிசுகளும் போதியளவு அணிதிரட்டப்படிருந்தனர். இந்த தனிமனித பயங்கரவாதம் என்பது, அது தனக்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் கூட முற்றிலும் இயலாததாய் இருக்கிறது என்றபோதும், ஒரு மிகவும் அறிகுறிரீதியான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. அதிகாரத்துவத்திற்கும் வெகுஜனங்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் இடையிலான கூர்மையான முரண்பாட்டை இது குணாம்சப்படுத்துகிறது.

பொருளாதார இடையூறுகள், பாராசூட் தாவும் சாகசங்கள், துருவ ஆராய்ச்சிப் பயணங்கள், பகட்டான அலட்சியம், 'ரவுடித்தனம் மீதான விருப்பு', பயங்கரவாத மனோநிலை, மற்றும் தனிநபர்-பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் மொத்தமாகச் சேர்ந்து, பழைய தலைமுறையின் சகிக்க முடியாத வழிகாட்டலுக்கு எதிராக இளைய தலைமுறையின் ஒரு வெடிப்புக்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. ஒரு போர் பெருகும் அதிருப்தி அலைகளுக்கு ஒரு வடிகாலாக சேவைசெய்யும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்காது. ஒரு போரில் இளைஞர்கள், அத்தியாவசியமான போரிடும் ஊக்கத்தையும் மற்றும் சோகத்திற்குரியவிதத்தில் அவர்களிடம் இப்போது இல்லாதிருக்கும் அதிகாரத்தையும் வெகு சீக்கிரம் பெற்று விடுவார்கள். அதே சமயத்தில் 'பழைய மனிதர்கள்' பெரும்பான்மையோரது மரியாதையோ திருத்த முடியாத சேதாரத்துக்கு ஆளாகும். அதிகப்பட்சம், ஒரு போரானது அதிகாரத்துவத்துக்கு ஒரு குறிப்பிட்ட உந்துதலை வழங்கலாம். உடன்வருகின்ற அரசியல் மோதலானது அதேயளவுக்கு கூடுதல் கூர்மைப்பட்டதாக இருக்கும்.

எவ்வாறாயினும், சோவியத் ஒன்றியத்தின் அடிப்படை அரசியல் பிரச்சினையை தலைமுறைகளது பிரச்சினையாகச் சுருக்குவதென்பது ஒருதலைப்பட்சமானதாக இருக்கும். எப்படி இளைஞர்களில் நூறாயிரக்கணக்கில் கடைந்தெடுத்த அனைத்தையும் ஏற்றுக்கொள்வோர் இருக்கிறார்களோ அதைப்போலவே வயதானவர்களிலும் அதிகாரத்துவத்திற்கான வெளிப்படையான மற்றும் மறைமுகமான எதிரிகள் பலர் இருக்கிறார்கள். எவ்வாறானபோதிலும், ஆளும் தட்டின் நிலைக்கு எதிரான தாக்குதல் இடது அல்லது வலது இரண்டில் எத்திசையில் இருந்து வந்தாலும் சரி, தாக்குதல்காரர்கள் தங்கள் தலைமைப் படைக்கு அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மற்றும் அதிருப்தியுற்ற இளைஞர்களில் இருந்து தான் அணிதிரட்டிக்கொள்வார்கள். அதிசயிக்கும் அளவுக்கு அதிகாரத்துவம் இதனைப் புரிந்து கொண்டிருக்கிறது. பொதுவாக அது தனது மேலாதிக்க நிலையை அச்சுறுத்தும் ஒவ்வொன்றுக்கும் மிக நேர்த்தியான உணர்திறனுடன் இருக்கிறது. இயல்பான விதத்தில், தனது நிலையை முன்னதாகவே பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில், அது இளைய தலைமுறைக்கு எதிராய் பிரதான அகழிகளையும் கான்கிரீட் கோட்டைகளையும் எழுப்பிக் கொள்கிறது.

நாம் ஏற்கனவே கூறியதைப் போல, 1936 ஏப்ரலில், கிரெம்ளினில் கம்யூனிச இளைஞர் அமைப்பின் பத்தாவது காங்கிரஸ் கூடியது. அதன் அமைப்புச் சட்டத்தை மீறி ஐந்து வருடங்களுக்கும் மேலானதொரு காலமாய் அந்த காங்கிரஸ் ஏன் கூட்டப்படாதிருந்தது என்பதை விளக்குவதற்கு யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. தவிரவும், கவனமாக வடித்தெடுத்து தேர்ந்து உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்த இந்த காங்கிரஸ், பிரத்யேகமாக இளைஞர்களின் அரசியல் உரிமைகளை பறிமுதல் செய்யும் நோக்கத்துடன் தான் இச்சமயத்தில் அழைக்கப்பட்டிருந்தது என்பதும் வெகு சீக்கிரமே தெளிவாயிற்று. அமைப்பின் புதிய அரசியல்சாசனத்தின் படி கம்யூனிச இளைஞர் அமைப்பானது நாட்டின் சமூக வாழ்க்கையில் பங்கேற்கும் உரிமையை சட்டபூர்வமாகவும் இப்போது இழந்து நிற்கிறது. ஆகவே கல்வி மற்றும் கலாச்சார பயிற்சி மட்டும் தான் இனி அதன் மொத்த இயங்குதளமாக இருக்க முடியும். கம்யூனிச இளைஞர் அமைப்பின் பொதுச் செயலாளர், மேலிருந்து அவருக்குக் கிட்டியிருந்த கட்டளைகளின் படி, தனது உரையில் அறிவித்தார்: 'தொழில்துறை மற்றும் நிதித் துறை திட்டமிடல் குறித்து, உற்பத்தி செலவுகளைக் குறைப்பதைக் குறித்து, பொருளாதார கணக்குவழக்குகள் குறித்து, பயிர் விதைப்பு குறித்து, மற்றும் அரசின் பிற முக்கிய பிரச்சினைகளைக் குறித்தெல்லாம், ஏதோ நாம் தான் அவற்றை தீர்மானிக்கப் போவது போல, விவாதித்துக் கொண்டிருப்பதை நாம் நிறுத்தியாக வேண்டும்'. 'ஏதோ, நாம் தான் அவற்றைத் தீர்மானிக்கப் போவது போல!' என்ற கடைசியாய் கூறப்பட்ட அந்த வார்த்தைகளை ஒட்டுமொத்த நாடும் மறுபடியும் கூற நேரிடலாம். சோவியத் சட்டம் அரசியல் முதிர்ச்சிக்கான வயதை 18 என வரையறை செய்து அவ்வயது ஆணுக்கும் பெண்ணுக்கும் வாக்குரிமைகள் அனைத்தையும் வழங்கியிருக்கிறது என்பதையும், அதேநேரத்தில் கம்யூனிச இளைஞர் அமைப்பின் உறுப்பினராவதற்கு அடிப்படை வயது பழைய அமைப்புச்சட்டத்தின் படி 23 வயதாகத் தான் உள்ளது என்பதையும், அதிலும் இந்த அமைப்பின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் யதார்த்தத்தில் அதனை விடவும் மிகவும் வயதுமூத்தவர்களாகவே உள்ளனர் என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த மகா அடிபணிவு காங்கிரசாலும் கூட உற்சாகமற்று எதிர்கொள்ளப்பட்ட இந்த 'விவாதப்பேச்சை நிறுத்துங்கள்!' என்னும் முரட்டுத்தனமான கண்டிப்பு, கூடுதல் திகைப்பூட்டுவதாக இருக்கிறது. இந்த கடைசி காங்கிரஸ் ஏககாலத்தில் இரண்டு சீர்திருத்தங்களை மேற்கொண்டது: கம்யூனிச இளைஞர் அமைப்பில் அதிக வயது கொண்டவர்களும் உறுப்பினர்களாவதை சட்டபூர்வமாக்கியது, அதன்மூலம் கம்யூனிச இளைஞர் அமைப்பின் தேர்வாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது, அதேசமயத்தில் அரசியல் தளத்தில் மட்டுமல்லாது -அதில் ஒருபோதும் கேள்விக்கே இடமில்லை!- பொருளாதாரத்தின் தற்போதைய பிரச்சினைகளிலும் கூட மூக்கை நுழைக்கும் உரிமையை ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பிடம் இருந்தே பறித்தது. முன்பிருந்த வயது வரம்பு ஒழிக்கப்பட்டமையானது, கம்யூனிச இளைஞர் அமைப்பில் இருந்து கட்சிக்குள் மாற்றப்படுவது என்பது முன்னர் தன்னியல்பாக நடந்தாக வேண்டியதாய் இருந்த நிலை மாறி, இப்போது ஆகக் கடினமான ஒன்றாக மாற்றப்பட்டு விட்டிருக்கிறது என்ற உண்மையினால் கட்டளையிடப்பட்டிருந்தது. அரசியல் உரிமைகளின் கடைசி எச்சசொச்சத்தை, இன்னும் அவை கண்ணில் படுவதையும் கூட, இவ்வாறு தடை செய்தமைக்கு, கம்யூனிச இளைஞர் அமைப்பை நன்கு களையெடுக்கப்பட்ட கட்சிக்கு முழுமையாகவும் இறுதியாகவும் அடிமைப்படுத்துவதற்கான ஒரு விருப்பமே காரணமாய் இருந்தது. வெளிப்படையாகவே ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதாய் இருக்கும் இந்த இரண்டு நடவடிக்கைகளுமே இளம் தலைமுறை மீதான அதிகாரத்துவத்தின் பயம் என்ற ஒரே மூலத்தில் இருந்து தான் தேற்றம் பெறுகின்றன.

ஸ்ராலின் வெளிப்படுத்திய வழிகாட்டல்களைத் தான் செய்கிறோம் என்று கூறிவிட்ட காங்கிரசில் உரையாற்றியவர்கள், ஒரு விவாதத்திற்கான சாத்தியம் எதனையும் முன்கூட்டித் தடுத்து விடும்பொருட்டாய் அவர்கள் இந்த எச்சரிக்கைகளை வழங்கினர். சீர்திருத்தத்தின் நோக்கத்தை திகைப்பூட்டும் வெளிப்படைத்தனத்துடன் விளக்கினர்: 'நமக்கு இரண்டாவதாய் எந்த கட்சியும் தேவையில்லை'. கம்யூனிச இளைஞர் அமைப்பு தீர்மானகரமாய் குரல்வளை நெரிக்கப்படாது போனால், அது ஒரு இரண்டாவது கட்சியாக ஆகும் அச்சுறுத்தல் இருப்பதாக ஆளும் வட்டாரங்களில் அபிப்பிராயம் நிலவுகிறது என்ற உண்மையை இந்த வாதம் வெளிக்கொணர்கிறது. அத்தகைய சாத்தியம் கொண்ட போக்குகளை வரையறை செய்ய நோக்கம் கொண்டு சொல்வதைப் போல, உரையாற்றிய இன்னொருவர் இவ்வாறு எச்சரித்தார்: 'ட்ரொட்ஸ்கியும் கூட, அவரது காலத்தில், ஒரு இரண்டாவது கட்சியை உருவாக்குவது என்பன போன்ற லெனினிச-விரோத, போல்ஷிவிக் விரோத சிந்தனைகளில் இளைஞர்களுக்கு ஆதர்சமளிக்க, அவரேயும் இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டும் ஒரு நாடகத்தைப் போடுவதற்கு முயன்றார்'. உரையாற்றியவரின் வரலாற்று ஒப்பீடு ஒரு காலவரிசைப் பிழையைக் கொண்டிருக்கிறது. உண்மையில், ட்ரொட்ஸ்கி 'அவரது காலத்தில்', ஆட்சி இதற்குமேலும் அதிகாரத்துவமயப்படுவது தவிர்க்கவியலாமல் இளைஞர்களுடன் ஒரு முறிவுக்கு இட்டுச் சென்று, ஒரு இரண்டாம் கட்சிக்கான அபாயத்தை உருவாக்கி விடும் என்ற எச்சரிக்கையைத் தான் அளித்தார். ஆயினும் கவலையில்லை: அந்த எச்சரிக்கையை ஊர்ஜிதம் செய்யும் விதமாக நிகழ்வுகளின் பாதையே அதனை இயல்பாக ஒரு வேலைத்திட்டமாக மாற்றி விட்டிருக்கிறது. சீரழிந்து செல்லும் கட்சி அதன் ஈர்க்கும் சக்தியை பிழைப்புவாதிகளுக்கு மட்டுமே தக்கவைத்துக் கொண்டுள்ளது. சாம்ராஜ்யத்திற்கான அடிமைத்தனம், சலுகைகளையும் மற்றும் மனம் போன போக்கிலான நடத்தையையும் மறைக்கும் விதமான போலியான வாய்ஜாலங்கள், அற்பமான அதிகாரத்துவத்தினர் ஒருவருக்கொருவர் புகழாரம் சூட்டிக் கொள்ளும் பெருமை பீற்றல் —எப்படியோ, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பிடிக்க முடியாது என்பதால் இந்த மார்ஷல்கள் அவற்றை தங்கள் உடம்பின் பல இடங்களிலும் ஒட்டி வைத்துக் கொள்கின்றனர்— இவை அனைத்துமே நேர்மையான மற்றும் சிந்திக்கக் கூடிய இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு குமட்டல் தராமல் இருக்க முடியாது. ஆக, இது பன்னிரண்டு பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல ஒரு இரண்டாவது கட்சிக்கான 'அபாயம்' குறித்த கேள்வியாக இனியும் இருக்கவில்லை, மாறாக அக்டோபர் புரட்சியின் நன்மையை மேலதிகமாய் முன்னெடுத்துச் செல்லும் திறம்படைத்த ஒரேயொரு சக்தியாக அதன் வரலாற்றுத் தேவை குறித்த கேள்வியாக இருக்கிறது. அந்த வகையில் கம்யூனிச இளைஞர் அமைப்பின் அமைப்புச்சட்டத்திலான மாற்றமானது, புதிய போலிஸ் அச்சுறுத்தல்களைக் கொண்டு அது வலுவூட்டப் பெறுகின்ற போதிலும், இளைஞர்கள் அரசியல் முதிர்ச்சிபெறுவதை அதைக் கொண்டு தடுத்து நிறுத்தி விடவும் முடியாது, அதிகாரத்துவத்துடன் அவர்கள் குரோதத்துடன் மோதுவதை அதைக் கொண்டு தவிர்த்து விடவும் முடியாது.

ஒரு பெரும் அரசியல் கொந்தளிப்பின் சமயத்தில் இளைஞர்கள் எந்த திசையில் திரும்புவார்கள்? எந்த பதாகையின் கீழ் அவர்கள் அணிதிரளுவார்கள்? இந்த கேள்விக்கு எவரொருவரும், மற்ற அனைவரையும் விடுங்கள் இளைஞர்களேயும் கூட, இப்போது உறுதியான பதிலை அளிக்க முடியாது. முரண்பட்ட போக்குகள் அவர்களது மூளைகளை அரித்துக் கொண்டிருக்கின்றன. இறுதி ஆய்வில், பிரதான வெகுஜனங்களின் அணிவரிசையமைவு என்பது ஒரு போர், பாசிசத்தின் புதிய வெற்றிகள், அல்லது அதற்கு மாறாக, மேற்கில் பாட்டாளி வர்க்க புரட்சியின் வெற்றி ஆகியன போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வுகளால் தான் தீர்மானிக்கப்படுவதாய் இருக்கும். எவ்வாறாயினும், உரிமைகள் பறிக்கப்பட்ட இந்த இளைஞர்கள் பலம்வாய்ந்த வெடிப்பு சக்தியுடனான ஒரு வரலாற்று சக்தியின் திரட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை அதிகாரத்துவம் விரைவில் காணும்.

1894 ஆம் ஆண்டில் அரசியல் வாழ்க்கையில் பங்கேற்பதற்கு கோழைத்தனமாய் கனவு கண்டு கொண்டிருந்த செம்ஸ்ட்வோக்களுக்கு (Zemstvo) ரஷ்ய எதேச்சாதிகாரம் இளம் ஜார் இரண்டாம் நிகோலஸ் வழியாக 'அர்த்தமற்ற கற்பனை சந்தோசங்கள்!' என்ற பிரபலமான வார்த்தைகள் கொண்டு பதிலளித்தது. 1936 ஆம் ஆண்டில் சோவியத் அதிகாரத்துவமானது, இன்னமும் வடிவம் பெறாதிருந்த இளைய தலைமுறையின் கோரிக்கைகளுக்கு 'விவாதப்பேச்சை நிறுத்துங்கள்!' என்று அதனை விடவும் முரட்டுத்தனமான குரலில் பதிலளித்திருக்கிறது. இந்த வார்த்தைகளும் வரலாற்றில் நிற்கும். அவற்றுக்காக இரண்டாம் நிகோலஸ் தலைமையிலான ஆட்சி கொடுத்த விலையை விட அதிகமான விலையை ஸ்ராலின் ஆட்சி கொடுக்க வேண்டி வரலாம்.

நாட்டுரிமையும் கலாச்சாரமும்

தேசியப் பிரச்சினையில் போல்ஷிவிசத்தின் கொள்கையானது அக்டோபர் புரட்சியின் வெற்றியை உறுதி செய்திருந்ததோடு அதற்குப் பின்னரும், உட்புறத்தில் மையவிலக்கு சக்திகளும் மற்றும் ஒரு குரோதமான சூழலும் இருந்தபோதிலும் சோவியத் ஒன்றியம் தாக்குப்பிடித்து நிலைக்கவும் உதவியது. அதிகாரத்துவ சீரழிவானது தேசியக் கொள்கை மீது ஒரு அரவைக்கல்லை போல அமர்ந்து விட்டிருக்கிறது. தேசியப் பிரச்சினையில்தான் லெனின், 1923 ஆம் ஆண்டின் இளவேனில் காலத்தில் நடந்த கட்சியின் இருபதாவது காங்கிரசில், அதிகாரத்துவத்துடன், குறிப்பாக ஸ்ராலினுடன், தனது முதல் யுத்தத்தை நடத்த எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் கூடும் முன்பே, லெனின் பொறுப்புகளில் இருந்து வெளியேறிவிட்டிருந்தார். அவர் அப்போது தயாரித்த ஆவணங்கள் இப்போதும் கூட தணிக்கைத் துறையால் ஒடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள நிலை தான் தொடர்கிறது.

புரட்சியால் தட்டியெழுப்பப்பட்ட தேசங்களின் கலாச்சாரத் தேவைகள், சாத்தியப்படும் மிகப் பரந்த சுதந்திரத்தை கோருவதாக இருக்கின்றன. அதே சமயத்தில், ஒன்றியத்தின் அனைத்து பகுதிகளையும் ஒரு பொதுவான மத்தியப்படுத்தப்பட்ட திட்டத்துக்கு உட்படுத்துவன் மூலந்தான் தொழில்துறை வெற்றிகரமாக அபிவிருத்தியடைய முடியும். ஆயினும், பொருளாதாரமும் கலாச்சாரமும் ஊடுருவமுடியாத தடுப்புகளால் பிரிக்கப்பட்டவை அல்ல. கலாச்சார சுதந்திரம் மற்றும் பொருளாதார மத்தியமயமாக்கல் போக்குகள் அவ்வப்போது மோதலுக்கு வருவது இயல்பானதே. ஆயினும் அவற்றுக்கிடையேயான முரண்பாடு சமரசப்படுத்தமுடியாததல்ல. இந்த பிரச்சினையை எப்போதைக்குமாய் ஒரேயடியாக தீர்த்து விடுகின்ற சூத்திரம் இருக்க முடியாது என்றாலும் கூட, ஆர்வமுள்ள வெகுஜனங்களின் தளர்ச்சியற்ற மனஉறுதி அங்கு இருக்கிறது. தங்களின் சொந்த தலைவிதிகளை நிர்வகிப்பதில் அவர்களின் உண்மையான பங்கேற்பு மட்டுமே ஒவ்வொரு கட்டத்திலும் பொருளாதார மத்தியவாதத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கும் தேசிய கலாச்சாரத்தின் வாழும் ஈர்ப்புவிசைகளுக்கும் இடையிலான அவசியமான கோடுகளை வரைய முடியும். ஆனால், சோவியத் ஒன்றியத்தின் அத்தனை தேசிய பிரிவுகளிலும் இருக்கும் அதன் மொத்த மக்கள்தொகையின் விருப்பமானது, பொருளாதாரத்தையும் கலாச்சாரத்தையும் நிர்வாக வசதி மற்றும் ஆளும் தட்டின் குறிப்பிட்ட நலன்கள் இவற்றின் பார்வையில் அணுகுகின்ற அதிகாரத்துவத்தின் விருப்பத்தைக் கொண்டு இப்போது மொத்தமாக இடம்பெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான் பிரச்சனையாகும்.

பொருளாதார வட்டத்தில் போலவே தேசியக் கொள்கையின் வட்டத்திலும், கொஞ்சம் அதிகப்படியான உபரிச் செலவுகளுடன் என்றபோதிலும் கூட, சோவியத் அதிகாரத்துவமானது முற்போக்கான பணிகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தொடர்ந்தும் முன்னெடுக்கிறது என்பது உண்மையே. குறிப்பாக, கடன் வாங்குவது, நகலாகப் பின்பற்றுவது, மற்றும் இருப்பதை உள்வாங்கிக்கொள்வது ஆகியவற்றின் கிட்டத்தட்ட சற்று நெடியதொரு காலத்தின் வழியே கடந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒன்றியத்தின் பின்தங்கிய தேசியங்களைப் பொறுத்தவரை இது உண்மையாக இருக்கிறது. அதிகாரத்துவமானது அவர்களுக்கு, முதலாளித்துவ கலாச்சாரத்தின், ஏன் ஓரளவிற்கு முதலாளித்துவத்திற்கு முந்தைய கலாச்சாரத்தினதும் அடிப்படை அனுகூலங்களை அணுகுவதற்கான ஒரு பாலத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. பல தளங்களிலும் பல மக்களிடையேயும், சோவியத் அதிகாரத்துவமானது குறிப்பிடத்தக்க மட்டத்துக்கு, பழைய மாஸ்கோவி (ரஷ்யாவிற்கு முன்பிருந்த பெயர்) விடயத்தில் முதலாம் பீட்டரும் அவரது சகாக்களும் செய்த வரலாற்று வேலையைத்தான் மிகப் பெரும் அளவிலும் துரிதமான வேகத்திலும் செய்து வருகிறது.

ஒன்றியத்தின் பள்ளிகளில், பாடங்கள் இப்போது எண்பதுக்கும் குறையாத மொழிகளில் கற்பிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையானவற்றுக்கு, புதிய எழுத்துக்களை உருவாக்க, அல்லது மிகவும் பிரபுத்துவ வடிவான ஆசியவகை எழுத்துக்களை கூடுதல் ஜனநாயகத்தன்மையுடைய இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டு இடம் பெயர்க்க அவசியமாய் இருந்தது. விவசாயிகளுக்கும் நாடோடி கால்நடை மேய்ப்பவர்களுக்கும் முதல்முறையாக மனித கலாச்சாரத்தின் அடிப்படை சிந்தனைகளை பரிச்சயப்படுத்துகின்ற செய்தித்தாள்களும் அதே எண்ணிக்கையிலான மொழிகளில் வெளியிடப்படுகின்றன. ஜார் சாம்ராஜ்யத்தின் விரிந்து பரந்த எல்லைகளுக்குள்ளாக, ஒரு உள்ளூர் தொழிற்துறை எழுந்து வருகிறது. பழைய பாதி இனக்குழுக் கலாச்சாரம் டிராக்டரால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எழுத்தறிவுடன் சேர்ந்து, அறிவியல்ரீதியான விவசாயம் மற்றும் மருத்துவமும் பிரசன்னத்திற்கு வந்திருக்கின்றன. புதிய மனித அடுக்கினை உயர்த்துகிற இந்த வேலையின் முக்கியத்துவத்தை மிகைமதிப்பீடு செய்வது கடினம். மார்க்ஸ் சரியாகக் குறிப்பிட்டது போல, புரட்சிதான் வரலாற்றின் உந்துசக்தியாக (locomotive) இருக்கிறது.

ஆனால் மிகவும் சக்திவாய்ந்த உந்துசக்தியும் கூட அற்புதங்களை நிகழ்த்திவிட முடியாது. வேகத்தை மட்டுமே அது துரிதப்படுத்த முடியுமே தவிர வெளியின் விதிகளை அதனால் மாற்றி விட முடியாது. பத்து மில்லியன்கணக்கான வளர்ந்த மனிதர்களுக்கு எழுத்துகள் மற்றும் செய்தித்தாள்களை, அல்லது எளிய சுகாதார விதிகளை, பரிச்சயப்படுத்துவது என்பது, ஒரு புதிய சோசலிச கலாச்சாரத்தின் கேள்வியை உண்மையாக முன்வைக்கும் முன்பாக எவ்வளவு நீண்டநெடிய பாதையில் நீங்கள் பயணித்தாக வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, மேற்கு சைபீரியாவில், குளிப்பதென்றால் என்னவென்றே அறிந்திராத ஓய்ராட்டுகள் “இப்போது பல கிராமங்களில் குளியலறைகளை கொண்டிருக்கிறார்கள். அந்த குளியலறைகளுக்கு சிலசமயங்களில் முப்பது கிலோமீட்டர்களுக்கும் அதிகமாகக் கூட பயணம் செய்து குளித்து வருகிறார்கள்” என்று ஊடகங்கள் நமக்குக் கூறுகின்றன. இந்த அதீத உதாரணமானது, கலாச்சாரத்தின் மிகக் குறைந்த மட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டதாய் இருந்தாலும் கூட, பின்தங்கிய பகுதிகளில் மட்டுமல்லாது இன்னும் பல பகுதிகளிலும் பிற பல சாதனைகளின் உயரத்தை உண்மையாக உணர்த்துவதாக இருக்கிறது. கலாச்சாரத்தின் வளர்ச்சியை விளங்கப்படுத்துவதற்காக ஒரு அரசாங்கத்தின் தலைவர், கூட்டுற்பத்திப் பண்ணைகளில் இரும்புக் கட்டில்கள், சுவர்க் கடிகாரங்கள், பின்னல் உள்ளாடைகள், கம்பளி மேலாடைகள், மிதிவண்டிகள் மற்றும் இதுபோன்றவற்றுக்கான ஒரு தேவை எழுந்துள்ளது என்ற உண்மையைக் குறிப்பிடுகிறபோது, வெகுகாலத்திற்கு முன்பே மேற்கின் விவசாய மக்களது சாதாரணப் புழக்கத்தில் இருந்து வந்திருந்த தயாரிப்புப் பொருட்களை சோவியத் கிராமங்களின் வசதியான உயர்வட்ட மக்கள் இப்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது மட்டுமே அது தரக்கூடிய அர்த்தமாகும். நாள்தோறும், உரைகளிலும் ஊடகங்களிலும், 'கலாச்சார முதிர்ச்சியுடனான சோசலிச வர்த்தகம்' என்கிற கருப்பொருள் மீது பாடங்கள் நடத்தப்படுகின்றன. சாரத்தில் இது, அரசாங்கக் கடைகளுக்கு ஒரு சுத்தமான ஈர்ப்பான தோற்றத்தைக் கொடுப்பது, அவசியமான தொழில்நுட்ப வசதிகளை மற்றும் பலதரப்பட்ட பொருட்களை தேவையான அளவில் அவற்றுக்கு அளிப்பது, ஆப்பிள்களை அழுக விடாமல் பாதுகாப்பது, பருத்திகளை ஆடைகளாக நெய்து வைப்பது, விற்பனை செய்யும் குமாஸ்தாவிற்கு பொருட்களை வாங்குபவரிடம் பணிவு காட்டவும் காதுகொடுத்துக் கேட்கவும் சொல்லிக் கொடுப்பது ஆகியவை குறித்த, வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், முதலாளித்துவ வர்த்தகத்தின் பொதுஇடங்களில் எந்த வழிமுறைகளை கைக்கொள்வது குறித்த கேள்வியாகும். சோசலிசத்தின் ஒரு துணுக்கும் கூட இல்லாதது என்றபோதிலும், இந்த மிக முக்கியமான பிரச்சினையை தீர்ப்பதில் இருந்து நாம் இப்போதும் வெகு தூரத்தில் இருக்கிறோம்.

சட்டங்களையும் ஸ்தாபனங்களையும் ஒருகணம் தள்ளி வைத்து விட்டு, அடிப்படை வெகுஜன மக்களின் அன்றாட வாழ்க்கையை எடுத்துப் பார்த்தோமென்றால், மற்றவர்களை அல்லது நம்மை நாமே நாம் ஏமாற்றிக் கொள்ளாத பட்சத்தில், வாழ்க்கைப் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தில், சோவியத் நாட்டில் ஜாரிச மற்றும் முதலாளித்துவ ரஷ்யாவின் பாரம்பரியம் சோசலிசத்தின் கருவளர்ச்சியின் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்பதை ஒப்புக்கொள்ள நாம் தள்ளப்படுகிறோம். இதுவிடயத்தில் மக்களேயும் மிகவும் திண்ணமாய் உள்ளனர். அவர்கள் தமது வாழ்க்கைத்தரம் மிகசிறிதாக உயரும்போதும் மேற்கின் ஆயத்தமான மாதிரிகளின் பின்னால் ஆர்வமாய் தம்மை நிறுத்திக் கொள்கின்றனர். இளம் சோவியத் குமாஸ்தாக்கள், பல சமயங்களில் தொழிலாளர்களும் கூட, ஆடைகளிலும் நாகரிகத்திலும், பணிநிமித்தம் தங்களது ஆலைகளில் தாங்கள் காணுகின்ற அமெரிக்க பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை நகலாய் பின்பற்ற முயற்சி செய்கிறார்கள். தொழிற்சாலை வேலைகள் மற்றும் குமாஸ்தா வேலைகள் செய்யும் உழைக்கும் பெண்கள் சுற்றுலா வருகின்ற வெளிநாட்டுப் பெண்களின் ஆடைகள் மற்றும் பழக்கவழக்கங்களை வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள். இதில் வெற்றிபெறும் அதிர்ஷ்டக்கார பெண் ஒட்டுமொத்தமாக நகலாய் பின்பற்றுவதற்குரிய ஒரு பெண்ணாக மாறிப் போகிறாள். நன்கு சம்பாதிக்கும் உழைக்கும் பெண் பழைய சடைகளுக்குப் பதிலாக 'நிரந்தர அலை' தலைமுடி நாகரிகத்தைப் பெறுகிறாள். இளைஞர்கள் 'மேற்கத்திய ஆடல் குழுக்களில்' ஆர்வமுடன் சேர்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பொருளில், இவை எல்லாமே முன்னேற்றத்தினைத் தான் அர்த்தப்படுத்துகின்றன. ஆயினும் இங்கு பிரதானமாக இந்த வெளிப்பாடு காட்டுவது முதலாளித்துவத்தின் மீதான சோசலிசத்தின் மேலாதிக்கம் அல்ல, மாறாக தந்தைவழி குடும்ப வாழ்க்கை மீது குட்டி முதலாளித்துவ கலாச்சாரத்தின் மேலாதிக்கமும், கிராமத்தின் மீது நகரத்தின் மேலாதிக்கமும், பின்தங்கிய பகுதிகள் மீது மையப்பகுதிகளின் மேலாதிக்கமும், கிழக்கின் மீது மேற்கின் மேலாதிக்கமும் தான்.

இதனிடையே சலுகை கொண்ட சோவியத் அடுக்கானது உயர்ந்த முதலாளித்துவ வட்டங்களில் இருந்து இரவல் பெறுகிறது. இந்தப் பிரிவில், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அடிக்கடி பயணம் செல்ல வேண்டியதிருக்கும் தூதரக அதிகாரிகள், அறக்கட்டளைகளின் இயக்குநர்கள், பொறியாளர்கள் ஆகியோர் தான் முன்னோடிகளாக இருக்கிறார்கள். மேல்மட்ட “பத்தாயிரம்” மீது கைவைப்பது கிட்டத்தட்ட தடைசெய்யப்பட்டதாக இருப்பதால், சோவியத் எள்ளிநகையாடல் இந்தப் பிரச்சினையில் அமைதி காக்கிறது. ஆயினும், உயர்த்திப் பிடிக்கப்படும் சோவியத் ஒன்றிய தூதர்கள் முதலாளித்துவ நாகரிகத்தின் முகத்தில் படும்படியாக தங்களது சொந்தமான ஏதேனும் ஒரு பாணியையோ அல்லது வேறேதேனும் சுதந்திரமான பண்பினையோ காட்ட முடியாதவர்களாய் போயிருக்கிறார்கள் என்பதை நம்மால் வருத்தத்துடன் குறிப்பிடாமல் இருக்க முடியாது. புற பளபளப்பை வெறுத்து அவசியமான தனிமையை கடைப்பிடிப்பதற்கு அவசியமான போதுமான அக ஸ்திரத்தன்மை அவர்களிடம் காணப்படவில்லை. மிக முழுமையான முதலாளித்துவ கனவான்களிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக வித்தியாசம் காட்டிக் கொள்ள வேண்டும் என்பது தான் அவர்களது பிரதான இலட்சியமாக இருக்கிறது. எளிமையாகச் சொல்வதென்றால், அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் புதிய உலகத்தின் பிரதிநிதிகளாக அல்ல, மாறாக அற்பமான புதுப் பணக்காரர்களாகத் தான் உணர்ந்து கொள்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள்!

ஆயினும், முன்னேறிய நாடுகள் முதலாளித்துவத்தின் அடிப்படையில் வெகுகாலத்திற்கு முன்பே செய்து முடித்து விட்ட கலாச்சார வேலைகளைத் தான் சோவியத் ஒன்றியம் இப்போது செய்து கொண்டிருக்கிறது என்று கூறுவதானது பாதி உண்மையாகத் தான் இருக்க முடியும். புதிய சமூக வடிவங்கள் எந்த விதத்திலும் பொருத்தமற்றவை என்று கூற முடியாது. அவை ஒரு பின்தங்கிய நாட்டிற்கு மிகவும் முன்னேறிய நாட்டின் மட்டத்தை எட்டுவதற்கான சாத்தியத்தை அளிப்பதோடு மட்டுமல்ல, அந்த வேலையை முன்னர் மேற்கில் அவசியப்பட்டதை விட குறைவான கால இடைவெளியில் சாதிப்பதற்கும் அதனை அனுமதிக்கின்றன. இந்த வேக முடுக்கத்துக்கான காரண விளக்கம் மிக எளிமையானது. முதலாளித்துவ முன்னோடிகள் தமது தொழில்நுட்பத்தை புதிதாகக் கண்டறியவும் அதனை பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகிய இரண்டு தளங்களிலும் செயலுறுத்த கற்றுக் கொள்ளவும் வேண்டியிருந்தது. சோவியத் ஒன்றியம் அதனை சமீபத்திய ஆயத்தமான வடிவங்களில் அப்படியே எடுத்துக்கொள்கிறது, அவ்வாறு இரவல் பெற்றதை, சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தி சாதனங்களின் காரணத்தால், பகுதியாகவும் சிற்சிறு அளவுகளிலுமாய் இல்லாமல் ஒரே சமயத்திலும் பிரம்மாண்டமான அளவிலும் பயன்படுத்துகின்றது.

கலாச்சாரத்தை, குறிப்பாக விவசாயிகளிடம், கொண்டுசெல்லும் வாகனமாக, இராணுவத்தின் பாத்திரத்தை கடந்த காலத்தின் இராணுவ அதிகாரிகள் பலமுறை கொண்டாடி இருக்கிறார்கள். முதலாளித்துவ இராணுவவாதம் மூளையில் ஏற்றுவதான குறிப்பிட்ட வகை 'கலாச்சாரத்தை' கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்கிற அதேவேளையில், பல முற்போக்கான பழக்கவழக்கங்கள் வெகுஜனங்களிடையே இராணுவம் மூலம் புகட்டப்பட்டிருப்பதை நம்மால் மறுக்க முடியாது. புரட்சிகர மற்றும் குறிப்பாக விவசாய இயக்கங்களில், பொதுவாக கிளர்ச்சியாளர்களின் தலைமையில், முன்னாள் சிப்பாய்களும் கீழ்நிலை அதிகாரிகளும் இருந்து வந்திருக்கிறார்கள் என்றால் காரணமில்லாமல் இல்லை. இராணுவம் மூலம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த அரசாங்க எந்திரம் மற்றும் அதனுடன் பின்னியதாக கட்சி எந்திரம், கம்யூனிச இளைஞர் அமைப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பை சோவியத் ஆட்சி கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம், சுகாதாரம், கலை, விளையாட்டு ஆகிய துறைகளிலான ஆயத்த மாதிரிகளை, அவற்றின் சொந்த நாட்டில் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தை விட அளவிடமுடியாத அளவுக்கு மிகக்குறைந்தவொரு காலத்தில், கைவசமாக்கிக் கொள்வதென்பது, சொத்துகளின் அரசு வடிவங்கள், அரசியல் சர்வாதிகாரம் மற்றும் நிர்வாகத்தின் திட்டமிட்ட வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் உத்திரவாதம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த துரிதப்பட்ட முன்நோக்கிய நகர்வை மட்டும்தான் அக்டோபர் புரட்சி கொடுத்திருந்தது என்று கூறப்படுமேயானால், அதற்கு வரலாற்றுரீதியான நியாயம் இருக்கிறது, ஏனென்றால் வீழ்ச்சி கண்டு வருகிற முதலாளித்துவ ஆட்சியானது கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் பூமிப்பந்தின் எந்தவொரு பகுதியிலும் எந்த ஒரு பின்தங்கிய நாட்டையும் தீவிரமாக முன்நோக்கி நகர்த்துவதற்கு திறனற்றதாக நிரூபணமாகியிருக்கிறது. ஆயினும், ரஷ்ய பாட்டாளி வர்க்கம் அதனை விட வெகு ஆழமான பணிகளின் நிமித்தம் புரட்சியைச் சாதித்தது. அரசியல் ரீதியாக இப்போது அது எவ்வளவு தான் ஒடுக்கப்பட்டு இருந்தாலும் கூட, அதன் சிறந்த பகுதிகளில் அது கம்யூனிச வேலைத்திட்டத்தையோ அல்லது அதனுடன் பிணைந்த வலிமையான நம்பிக்கையையோ துறந்து விடவில்லை. அதிகாரத்துவமானது பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்றவாறு -ஒருபாதி அதன் கொள்கையின் திசையில் என்றால் பெரும்பாதி அதற்குக் கொடுக்கப்படும் பொருள்விளக்கத்தின் திசையில்- வளைந்துகொடுக்க நிர்ப்பந்தம் பெற்றிருக்கிறது. ஆகவேதான், பொருளாதார அல்லது கலாச்சார வட்டத்திலான ஒவ்வொரு முன்நோக்கிய அடியும், அதன் உண்மையான வரலாற்று உள்ளடக்கம் எதுவாயிருந்த போதிலும் அல்லது வெகுஜனங்களின் வாழ்க்கையில் அதன் உண்மையான முக்கியத்துவம் எதுவாயிருந்த போதிலும், 'சோசலிச கலாச்சாரத்தின்' இதுவரை கண்டிராத மற்றும் கேட்டிராத வெற்றியாக அது பிரகடனப்படுத்தப்படுகிறது. நேற்று வரை சுகாதாரத்தின் மிகக் குறைந்தபட்ச தேவைகளையும் கூட கேட்டறிந்திராத மில்லியன் கணக்கான மக்கள் குளியல் சவர்க்காரங்களையும் பல்துலக்கும் தூரிகைகளையும் கொண்டிருக்க வழிசெய்வதென்பது ஒரு பெரும் கலாச்சார வேலை தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் சவர்க்காரங்கள் அல்லது தூரிகைகள் அல்லது 'நமது பெண்கள்' கோரும் வாசனை திரவியங்கள், இவை எல்லாம் ஒரு சோசலிச கலாச்சாரம் ஆகி விடுவதில்லை, அதிலும் நாகரிகத்தின் இந்த பரிதாபகர அளவுகோல்களும் கூட மக்கள்தொகையின் வெறும் சுமார் பதினைந்து சதவீதம் பேருக்கு மட்டுமே அணுகத்தக்கதாய் இருக்கின்ற சூழ்நிலையில்.

சோவியத் ஊடகங்களில் அவர்கள் நிறையப் பேசுகின்ற 'மனிதர்களின் மறுவடிவமைப்பு' முழு வீச்சில் நடக்கிறது. ஆனால் எந்த மட்டத்திற்கு இது சோசலிச மறுவடிவமைப்பாக இருக்கிறது? ரஷ்ய மக்கள் கடந்த காலத்தில் ஜேர்மனியர்களைப் போன்ற மாபெரும் மத சீர்திருத்தத்தையும் அறிந்ததில்லை, பிரெஞ்சு மக்களைப் போல மாபெரும் முதலாளித்துவப் புரட்சியையும் அறிந்ததில்லை. இந்த இரண்டு உலைகளில் இருந்தும்தான் பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் தீவினரின் சீர்திருத்தம் புரட்சியை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் முதலாளித்துவ தனிமனித தனித்தன்மை (individuality) என்ற பொதுவாக மனித ஆளுமையின் அபிவிருத்தியில் ஒரு மிக முக்கியமான படி வருகிறது. 1905 மற்றும் 1917 ஆம் ஆண்டுகளின் ரஷ்யப் புரட்சிகளானவை அவசியமாகவே வெகுஜனங்களின் தனிமனித தனித்தன்மையின் முதல் தட்டியெழுப்பலை, பழைமையான ஊடகங்களின் படிகமயமாக்கலாகவே இருந்தது -பண்படா இடைப்பொருளில் இருந்தான அதன் திண்மப்படலைக் குறிப்பதாக அமைந்தன-. அதாவது, அவையெல்லாம் மேற்கின் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் மற்றும் புரட்சிகளின் கல்வியூட்டல் வேலையை கைகோர்த்த வடிவத்தில் துரிதப்பட்ட வேகத்துடன் பூர்த்தி செய்வதாக இருந்தன என்று சொல்லலாம். ஆயினும், அந்த வேலை முடிவடைவதற்கு வெகு முன்பே கரடுமுரடான வடிவில் என்றாலும் கூட, முதலாளித்துவத்தின் அந்திமத்தில் இருந்து புறப்பட்ட ரஷ்யப் புரட்சியானது வர்க்கப் போராட்டத்தின் பாதையால் சோசலிசத்தின் சாலைக்கு பாய்ந்து செல்ல நிர்ப்பந்தமுற்றது. சோவியத் கலாச்சாரத்தின் தளத்தில் இருக்கும் முரண்பாடுகளானவை இந்த தாவலில் இருந்து வளர்ந்ததான பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளைத் தான் பிரதிபலிக்கவும் ஊடுருவிச் செல்லவும் செய்கின்றன. இந்த சூழ்நிலைகளின் கீழ் ஆளுமையின் விழிப்புறுதலானது அவசியப்பட்ட வகையில் பொருளாதாரத்தில் மட்டுமன்றி குடும்ப வாழ்க்கை மற்றும் பாட்டுவரிகளிலும் கூட ஏறக்குறைய குட்டி முதலாளித்துவ குணநலனைப் பெறுகிறது. அதிகாரத்துவமே கூட மிகத் தீவிரமான, சிலசமயங்களில் கடிவாளமற்ற முதலாளித்துவ தனிமனிதத் தனித்தன்மைக்கான தூதுவராக ஆகியிருக்கிறது. பொருளாதாரரீதியான தனிமனித தனித்தன்மைவாதத்தை (உழைப்புக்கேற்ற ஊதியம், தனியார் நில ஒதுக்கீடு, சிறப்பு சலுகைகள், அலங்காரப் பதக்கங்கள்) அனுமதித்து ஊக்கப்படுத்துகின்ற அதேநேரத்தில் இது ஆத்மார்த்த கலாச்சாரத் தளத்திலான தனிமனிதத் தனித்தன்மையின் முற்போக்கான விடயங்களை (விமர்சனப் பார்வைகள், தன்னைப் பற்றிய சொந்த கருத்தினை அபிவிருத்தி செய்வது, சுயமரியாதையை வளர்த்துக் கொள்வது ஆகியவை) இரக்கமின்றி ஒடுக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட தேசியக் குழுவின் அபிவிருத்தி எந்த மட்டத்திற்கு கணிசமாக இருக்கிறதோ, அல்லது அதன் கலாச்சார படைப்பு வட்டம் எந்த அளவுக்கு உயரியதாக இருக்கிறதோ, அல்லது, மீண்டும், எந்த அளவுக்கு நெருக்கமாக அது சமூகம் மற்றும் ஆளுமையின் பிரச்சினைகளுடன் மல்லுக்கட்டுகிறதோ, அந்த அளவுக்கு கனமானதாகவும் சகிக்க முடியாததாகவும் அதிகாரத்துவத்தின் அழுத்தம் ஆகிறது. சோவியத் ஒன்றியத்தின் அனைத்து மக்களின் புத்திஜீவித்தன நடவடிக்கைகளையும் ஒரே நடத்துனரின் குச்சியே, அல்லது இன்னும் சொல்வதானால் ஒரே போலிஸ் குண்டாந்தடியே கட்டுப்படுத்துகிறது என்றபோது தேசிய கலாச்சாரத்தின் தனித்தன்மை குறித்து உண்மையில் எந்தப் பேச்சும் இருக்க முடியாது. உக்ரேனிய, வெள்ளை ரஷ்ய, ஜோர்ஜிய, அல்லது துருக்கிய செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் எல்லாம் அதிகாரத்துவ உத்தரவுகளின் அந்தந்த தேசிய மொழிகளிலான மொழிபெயர்ப்புகளாகவே இருக்கின்றன. வெகுஜன படைப்பாக்க மாதிரிகள் என்கிற பெயரில், வெவ்வேறு தேசியங்களின் பரிசுப் புலவர்கள் தலைவர்களைப் புகழ்ந்து எழுதிய கவிதைவரிகளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை மாஸ்கோ ஊடகங்கள் அன்றாடம் வெளியிடுகின்றன; உண்மையில் அவை அவற்றின் அடிமைத்தனம் மற்றும் திறமைப் பற்றாக்குறையின் அளவில் மட்டுமே வித்தியாசம் கொண்ட பரிதாபத்திற்குரிய பாடல்வரிகளாகவே இருக்கின்றன.

மற்றவற்றுக்குச் சளைக்காத அளவில் முக்கிய இராணுவமய ஆட்சியால் பாதிப்புற்றிருக்கும் மாபெரும் ரஷ்ய கலாச்சாரமானது பிரதானமாக புரட்சிக்கு முன்னர் உண்டான பழைய தலைமுறையின் தயவில் தான் உயிர்வாழ்கிறது. இரும்புக் குச்சியைக் கையில்கொண்டு அடக்கி வைப்பதைப் போல இளைஞர்கள் ஒடுக்கி வைக்கப்படுகிறார்கள். ஆகவே இது சரியான பொருளில் பார்த்தால், ஒரு தேசியத்தை வளர்க்க மற்றொரு தேசியத்தினை அழுத்தி ஒடுக்குவது குறித்த பிரச்சினையாக இல்லை, மாறாக மாபெரும் ரஷ்ய தேசியம் தொடங்கி அத்தனை தேசியங்களின் கலாச்சார அபிவிருத்தியின் மீதும் மையப்படுத்தப்பட்ட போலிஸ் எந்திரத்தினால் நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை குறித்த பிரச்சினையாக உள்ளது. என்றாலும், சோவியத் ஒன்றியத்தின் வெளியீடுகளில் தொண்ணூறு சதவீதம் ரஷ்ய மொழியில்தான் அச்சிடப்படுகின்றன என்ற உண்மையையும் நாம் புறந்தள்ளி விட முடியாது. இந்த சதவீதமானது, நிச்சயமாக, மகா ரஷ்ய மக்கள்தொகையின் விகிதாச்சார எண்ணிக்கைக்கு அப்பட்டமாய் முரண்படுகிறதுதான் என்றபோதும் அதன் தனிவலிமை மற்றும் நாட்டின் பின்தங்கிய மக்களுக்கும் மேற்கிற்கும் இடையிலான மத்தியஸ்தராக அதன் பாத்திரம் ஆகிய இரண்டிலும், ரஷ்ய கலாச்சாரத்தின் பொதுவான செல்வாக்கிற்கு அது நன்றாகப் பொருந்தியே இருக்கிறது. எல்லாம் இருந்தாலும், பிரசுரப் பதிப்பகங்களில் மகா ரஷ்யர்களின் எண்ணிக்கை அதீதமான உயர் சதவீதத்தில் இருப்பது என்பது (அங்கு மட்டும் இல்லை என்பதும் உண்மை) உண்மையில் ஒன்றியத்தின் மற்ற தேசியங்களது நலன்களை விலைகொடுத்து எடுத்துக் கொள்ளப்பட்ட மகா ரஷ்யர்களின் எதேச்சாதிகார தனிச்சலுகையாக அர்த்தமளிக்கவில்லையா? நிறையவே சாத்தியம். இந்த பரந்துபட்ட முக்கிய கேள்விக்கு ஒருவர் விரும்புகிறவாறாய் திட்டவட்டமாக பதிலளிப்பது என்பது சாத்தியமில்லாமல் போய் விடுகிறது, ஏனென்றால் வாழ்க்கையில் அது அதிகாரத்துவத்தின் இறுதி மத்தியஸ்தத்தால் தீர்மானிக்கப்படும் அளவுக்கு ஒத்துழைப்பு, பகைமை மற்றும் கலாச்சாரத்தின் பரஸ்பர உரமூட்டலால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதில்லை. கிரெம்ளின் அதிகாரிகளின் இருப்பிடமாக இருப்பதாலும், சுற்றியிருக்கும் பகுதிகள் எல்லாம் மையத்துடன் அடியொற்றி நடக்க நிர்ப்பந்திக்கப்படுவதாலும், அதிகாரத்துவவாதமானது தவிர்க்கவியலாமல் எதேச்சாதிகார ரஷ்ய மயமாக்கத்தின் வண்ணத்தை எடுக்கிறது, மத்தியஸ்தரை தங்கள் சொந்த மொழிகளில் கொண்டாடும் கேள்விகளற்ற கலாச்சார உரிமையை மட்டுமே பிற தேசியங்களுக்கு விட்டுவைக்கிறது.

கலாச்சார விடயத்திலான உத்தியோகபூர்வ கொள்கையானது பொருளாதார ஊசலாட்டங்கள் மற்றும் நிர்வாக அவசரங்களுக்குத் தக்கவாறு மாற்றம் காண்கிறது. ஆனால் என்ன மாறினாலும், முற்றிலும் திட்டவட்டமாய் இருப்பது என்ற ஒரு அம்சத்தை மட்டும் அது விடாமல் தக்கவைத்துக் கொள்கிறது. 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்னும் தத்துவத்தின் ஏககாலத்தில் அதனுடன் சேர்த்து, முன்னர் முகச் சுளிப்புக்கு உள்ளான 'பாட்டாளி வர்க்க கலாச்சாரம்' குறித்த தத்துவமும் உத்தியோகபூர்வ அங்கீகரிப்பைப் பெற்றது. இந்த தத்துவத்தின் எதிர்ப்பாளர்கள் என்ன சுட்டிக்காட்டினார்கள் என்றால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஆட்சியானது ஒரு கண்டிப்பான இடைமருவல் குணநலனைக் கொண்டிருக்கிறது; முதலாளித்துவ வர்க்கம் போலன்றி பாட்டாளி வர்க்கம் வரிசையான எல்லா வரலாற்று சகாப்தங்கள் முழுவதும் மேலாதிக்கம் செய்ய நோக்கம் கொண்டிருக்கவில்லை; புதிய ஆளும் வர்க்கத்தின் தற்போதைய தலைமுறையின் பணியானது அடிப்படையாக முதலாளித்துவ கலாச்சாரத்தில் மதிப்புக்குரியதாக இருக்கும் அனைத்தையும் உட்கிரகித்துக் கொள்வதற்கு தன்னைக் குறைத்துக் கொள்கிறது; பாட்டாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கமாகவே இருக்கின்ற மட்டத்திற்கு, அதாவது அதன் மீதான முந்தைய ஒடுக்குமுறையின் அடையாளங்களை அது சுமந்து கொண்டிருக்கின்ற மட்டத்திற்கு, கடந்த காலத்தின் வரலாற்று பாரம்பரியத்திற்கு மேலாக உயரும் அதன் திறன் குறைந்துவிடுகிறது; பாட்டாளி வர்க்கம் தன்னை ஒரு சோசலிச சமூகத்திற்குள் கரைத்துக் கொள்ளும் மட்டத்திற்கு மட்டுமே புதிய படைப்புச் சாத்தியங்கள் தங்களை உண்மையாக வெளிப்படுத்திக் கொள்ளும். வேறுவார்த்தைகளில் சொல்வதானால், முதலாளித்துவக் கலாச்சாரம் ஒரு சோசலிசக் கலாச்சாரத்தால் பிரதியிடப்பட வேண்டுமேயன்றி, பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தால் அல்ல என்பதே இதன் அர்த்தமாகும்.

பரிசோதனைக்கூட முறைகள் மூலம் உருவாக்கப்படுகின்ற 'பாட்டாளி வர்க்க கலை' என்ற தத்துவத்திற்கு எதிரான ஒரு தர்க்கவியல் வாதத்தின்போது இந்த வரிகளின் ஆசிரியர் எழுதினார்: 'தொழில்துறையின் சாறுகளில் இருந்துதான் கலாச்சாரம் சாப்பிடுகிறது, கலாச்சாரம் வளரவேண்டும், கூடுதலாய் சிக்கலானவிதத்தில் அது தன்னைத் தானே செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு பொருளியல் உபரி அவசியம்'. அடிப்படையான பொருளாதார பிரச்சினைகளுக்கான மிக வெற்றிகரமான தீர்வாக இருந்தாலும் கூட அது “சோசலிசத்தின் புதிய வரலாற்றுக் கோட்பாட்டின் முழுமையானதொரு வெற்றியைக் குறிப்பதில் இருந்து வெகுதூரத்திலேயே இருப்பதாகும். அனைத்து-தேசிய அடிப்படையிலான விஞ்ஞான சிந்தனையின் ஒரு முன்நோக்கிய நகர்வும் ஒரு புதிய கலையின் அபிவிருத்தியும் மட்டுமே வரலாற்று விதையானது ஒரு மலரையும் தண்டையும் உருவாக்கியிருந்தது என பொருள்தரக் கூடியதாகும். இந்த அர்த்தத்தில் கலையின் அபிவிருத்தி தான் ஒவ்வொரு சகாப்தத்தின் செல்தகைமை மற்றும் முக்கியத்துவத்திற்கான மிகவுயர்ந்த பரீட்சையாக இருக்கிறது'. அந்த கணம் வரையில் நிலவி வந்திருந்த இந்த கண்ணோட்டமானது திடீரென்று ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பில் 'மண்டியிடும் தன்மையுடையதாக', பாட்டாளி வர்க்கத்தின் படைப்பாக்க சக்திகளின் மீதான 'அவநம்பிக்கையால்' உத்தரவிடப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்டது. அப்போதுதான் ஸ்ராலின் மற்றும் புக்காரின் காலகட்டம் திறந்தது, புக்காரின் 'பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தின்' தேவதூதராக வெகுகாலத்திற்கு முன்பே காட்சியளித்தவர், ஸ்ராலினோ இந்த கேள்விகளுக்கு ஒருபோதும் சிந்தனை அளித்தவர் இல்லை. ஆனபோதும் இருவருமே, சோசலிசத்தை நோக்கிய நகர்வு 'ஆமை நடையில்' அபிவிருத்தியடையும் என்றும், பாட்டாளி வர்க்கம் அதன் சொந்த கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு பல தசாப்தங்கள் அவகாசம் கொண்டிருக்கிறது என்றும் கருதினார்கள். அந்த கலாச்சாரத்தின் குணநலன் என்னவாயிருக்கும் என்பதைப் பொறுத்தவரை, இந்த தத்துவாசிரியர்களின் சிந்தனைகள் அவை மேலெழுந்தவாரியாக இருந்த அளவிற்கு உத்வேகமளிக்காதவையாகவும் இருந்தன.

முதலாவது ஐந்தாண்டு திட்டத்தின் புயல்மிகு வருடங்கள் ஆமைநடை முன்னோக்கினை ஆட்டம் காணச் செய்தன. 1931 ஆம் ஆண்டில் ஒரு படுபயங்கரமான பஞ்சம் நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில், நாடு ஏற்கனவே 'சோசலிசத்திற்குள் நுழைந்து விட்டிருந்தது'. இவ்வாறாக, உத்தியோகபூர்வ அரவணைப்பிலான எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தினை, அல்லது அதன் முதலாவது குறிப்பிடத்தக்க மாதிரிகளையேனும், உருவாக்கி முடிக்கும் முன்னதாகவே, பாட்டாளி வர்க்கம் வர்க்கமற்ற சமூகத்தில் கலைக்கப்பட்டு விட்டிருந்ததாக அரசாங்கம் அறிவித்தது. ஒரு பாட்டாளி வர்க்க கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு மிக அத்தியாவசிய நிபந்தனையான 'நேரம்' என்பது பாட்டாளி வர்க்கத்திடம் இல்லை என்ற உண்மையைக் கொண்டு கலைஞர்கள் தங்களை தேற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு அக்கலாச்சாரம் தொடர்ந்தும் இருந்தது. நேற்றைய கருத்தாக்கங்கள் எல்லாம் உடனடியாக மறக்கடிக்கப்பட்டன. 'சோசலிச கலாச்சாரம்' என்பது உடனடியாக அன்றாட ஒழுங்காக ஆக்கப்பட்டது. அதன் உள்ளடக்கத்துடன் நாம் ஏற்கனவே பகுதியாக பரிச்சயப்பட்டு விட்டிருக்கிறோம்.

ஆத்மார்த்த படைப்புத்திறன் சுதந்திரத்தைக் கோருகிறது. கம்யூனிசத்தின் அடிப்படையான நோக்கமே இயற்கையை தொழில்நுட்பத்திற்கு உட்படுத்தி தொழில்நுட்பத்தை திட்டமிடுவதற்கு உட்படுத்தி, கச்சாப் பொருட்களை மனிதனுக்கு அவசியமான அனைத்தையும் இடையூறின்றி வழங்கும்படி நிர்ப்பந்திப்பதேயாகும். அதற்கும் மிக உயரத்தில், அதன் உச்சகட்ட இலக்கு என்னவென்றால் மனிதகுலத்தின் அத்தனை படைப்பு சக்திகளையும் அனைத்து அழுத்தம், வரம்பு மற்றும் அவமதிப்பான சார்பு இவற்றில் இருந்து இறுதியாகவும் ஒரேயடியாகவும் விடுதலை செய்வதே ஆகும். அந்நிலையில் தனிநபர் உறவுகள், விஞ்ஞானம் மற்றும் கலை ஆகியவை வெளியிலிருந்து திணிக்கப்பட்ட எந்த 'திட்டத்தையும்' அல்லது நிர்ப்பந்தத்தின் எந்த நிழலையும் கூட அறியமாட்டா. ஆத்மார்த்த படைப்புத்திறன் எந்த மட்டத்திற்கு தனிநபருடையதாக அல்லது கூட்டுழைப்பாலானதாக அமையும் என்பது முழுக்கவும் அதன் படைப்பாளர்களைச் சார்ந்ததாக இருக்கும்.

ஒரு இடைமருவல் ஆட்சி என்பது இதற்கு வித்தியாசப்பட்டதொரு விடயம். சர்வாதிகாரம் என்பது கடந்தகால காட்டுமிராண்டித்தனத்தைத் தான் பிரதிபலிக்கிறதே அன்றி வருங்காலத்திற்கான கலாச்சாரத்தை அல்ல. ஆத்மார்த்த படைப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கை வடிவங்கள் மீதும் அது அவசியமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வெகு ஆரம்பத்தில் இருந்தே புரட்சியின் வேலைத்திட்டமானது இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் ஒரு தற்காலிக தீங்காகவே கருதியது என்பதுடன், புதிய ஆட்சி உறுதிப்படுகின்ற விகிதாச்சாரத்தில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக சுதந்திரத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் அகற்றுவதற்கான கடமைப்பாட்டையும் தனக்கு வரிந்து கொண்டது. எவ்வாறெனினும், அரசாங்கம் அரசியல் பரிசீலிப்புகளால் வழிநடத்தப்பட்டு படைப்பு சுதந்திரம் மீது வரம்புகளை சுமத்தலாம் என்றாலும் எந்த சமயத்திலும் விஞ்ஞானம், இலக்கியம் மற்றும் கலை ஆகிய தளங்களில் ஒரு படைத்தளபதியின் பாத்திரத்தை வகிப்பதாக பாவனை செய்யக் கூடாது என்பது, உள்நாட்டு யுத்தத்தின் நெருப்பான வருடங்களில், புரட்சியின் தலைவர்களுக்கு தெளிவாகப் புலப்பட்டது. லெனின், தனிப்பட்ட விதத்தில் கலையில் 'பழைமை' ருசி கொண்டவராக இருந்தபோதிலும் கூட, கலை சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசியல்ரீதியாக அதீத முன்னெச்சரிக்கையுடன் இருந்தார், தனக்கு அத்துறையில் அத்தனை ஞானமில்லை என்பதை மனமுவந்து ஒப்புக்கொண்டவராக இருந்தார். கலை மற்றும் கல்விக்கான மக்கள் ஆணையராக இருந்த லுனாசார்ஸ்கி அனைத்து வகை நவீனத்துவங்களுக்கும் ஆதரவளித்தது பல சமயங்களில் லெனினுக்கு சங்கடமூட்டுவதாக அமைந்தது. ஆயினும் கூட அவர் தனிப்பட்ட உரையாடல்களின் போது வருத்தத்துடன் குறிப்பிடுவதோடு தன்னை மட்டுப்படுத்திக் கொண்டார், தனது இலக்கிய சுவைகளை சட்டமாக மாற்றும் சிந்தனையில் இருந்து வெகுதொலைவில் தன்னை இருத்திக் கொண்டார். 1924 ஆம் ஆண்டில் புதிய காலகட்டத்தின் விளிம்புக்காலத்தில், இந்த புத்தகத்தின் ஆசிரியர் அரசிற்கும் பல்வேறு கலைக் குழுக்கள் மற்றும் போக்குகளுக்கும் இடையிலான உறவினை இவ்வாறு சூத்திரப்படுத்தினார்: 'இவை அனைத்தின் மீதும் புரட்சிக்கு ஆதரவானவை அல்லது புரட்சிக்கு எதிரானவை என தகுதிவகை முடிவுசெய்யப்படுகிற அதேவேளையில், கலைரீதியான சுய-நிர்ணய வட்டத்தில் அவற்றுக்கு முழுமையான சுதந்திரம் அளிப்பது'.

சர்வாதிகாரம் ஒரு கொந்தளிப்புமிக்க வெகுஜன அடிப்படையையும் ஒரு உலகப் புரட்சி முன்னோக்கையும் கொண்டிருந்தது என்ற அதேநேரத்தில், பரிசோதனைகள், தேடல்கள், பள்ளிகளின் சண்டைகள் ஆகியவை குறித்து அதற்கு எந்த அச்சமும் இருக்கவில்லை, ஏனென்றால் இந்த வழியில் மட்டும் தான் ஒரு புதிய கலாச்சார சகாப்தம் தயாரிப்பு செய்யப்பட முடியும் என்பதை அது புரிந்து வைத்திருந்தது. இருந்தும் வெகுஜன மக்களுக்கு நடுக்கம் ஒவ்வொரு நரம்பிலும் இருந்தது, ஆயிரம் ஆண்டுகளில் அவர்கள் முதன்முறையாக உரக்க சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். கலையின் ஆகச்சிறந்த இளம் சக்திகள் அனைத்தும் துரிதமாக தொடப்பட்டன. நம்பிக்கையும் துணிச்சலும் செழித்திருந்த அந்த ஆரம்ப ஆண்டுகளில், அங்கு, சோசலிச சட்டமுறைக்கான மிகப் பூரணமான மாதிரிகள் மட்டுமல்ல, புரட்சிகர இலக்கியத்தின் சிறந்த படைப்புகளும் கூட உருவாக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில்தான், தொழில்நுட்ப கருவிகளில் வறுமையிருந்தபோதும், யதார்த்தத்தை நோக்கிய அணுகுமுறையில் புதுமையையும் வீரியத்தையும் கொண்டு ஒட்டுமொத்த உலகின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த மிகச்சிறந்த சோவியத் திரைப்படங்கள் படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

கட்சி எதிரணிக்கு எதிரான போராட்டத்தின் நிகழ்ச்சிப்போக்கில், இலக்கிய பள்ளிகள் ஒன்றன்பின்ஒன்றாக கழுத்து நெரிக்கப்பட்டன. அது வெறுமனே இலக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் இல்லை. ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சிப்போக்கு என்பது அனைத்து சித்தாந்த வட்டங்களிலும் நிகழ்ந்தது, அத்துடன் அது பாதிக்கும் அதிகமாய் சுய-உணர்வற்ற நிலையில் நடந்தது என்பதால் கூடுதல் தீர்க்கமாக நடந்தது. ஆத்மார்த்தமான படைப்பாக்கத்தை அரசியல்ரீதியாக கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல, அதன் அபிவிருத்திக்கான பாதைகளை பரிந்துரைப்பதற்காகவும், தான் அழைக்கப்பட்டிருப்பதாக நடப்பு ஆளும் அடுக்கானது கருதிக் கொள்கிறது. கேட்காமலேயே கட்டளைகளிடும் வழிமுறையானது இதேபோல் ஒருமுகப்படுத்தும் முகாம்கள் தொடங்கி விஞ்ஞான விவசாயம் மற்றும் இசை என நீள்கிறது. கட்சியின் மைய அங்கமானது கட்டுமானக் கலை, இலக்கியம், நாடகக் கலை, பாலே ஆகிய துறைகளில் ―மெய்யியல், இயற்கை விஞ்ஞானம் மற்றும் வரலாறு ஆகியவற்றிலும் என்பதை சொல்லவும் தேவையில்லை― இராணுவ உத்தரவுகளின் குணாம்சம் கொண்ட, பெயர்கூறாத, கட்டளையிடுகிற தலையங்கங்களை அச்சிடுகிறது.

தனக்கு நேரடியாக சேவகம் செய்யாத அல்லது தன்னால் புரிந்து கொள்ள முடியாதிருக்கின்ற எதனையும் கண்டு அதிகாரத்துவம் மூடத்தனமாக அஞ்சுகிறது. இயற்கை விஞ்ஞானத்துக்கும் உற்பத்திக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும் என்று அது கேட்பது நீண்டகால அளவில் என்றால் சரிதான்; ஆனால் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் உடனடியான நடைமுறை பயன்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகளை மட்டும்தான் இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என்று அது உத்தரவிடும்போது, அது நடைமுறை கண்டுபிடிப்புகள் உள்ளிட புதுக் கண்டுபிடிப்புகளுக்கான மிக அரிய மூலாதாரங்களை மூடிவிட அச்சுறுத்துவதாக அமைகிறது, ஏனென்றால் அவை மிகப் பெரும்பாலும் எதிர்பார்த்திராத பாதைகளில் தான் தோன்றுபவையாக இருக்கின்றன. கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, இயற்கை விஞ்ஞானிகள், கணித மேதைகள், இலக்கிய அறிஞர்கள் மற்றும் இராணுவ தத்துவாசிரியர்கள் எல்லாம், ஏதேனும் ஒரு “சிவப்பு பேராசிரியர்” ―பொதுவாக அறியாமையுடனான பிழைப்புவாதியாக அவர் இருப்பார்― லெனின், அல்லது ஸ்ராலினிடம் இருந்தும் கூட ஏதேனும் மேற்கோளை, முடியைப் பிடித்து இழுத்துவந்து முன்நிறுத்தி மிரட்டும் தொனியில் தங்கள் சட்டையைப் பிடித்து இழுத்து கேள்வி கேட்பாரோ என்ற அச்சத்தில், விரிந்த பொதுமைப்படுத்தல்கள் அனைத்தையும் தவிர்த்து விடுகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் ஒருவர் தனது சொந்த சிந்தனையை அல்லது தனது விஞ்ஞான கண்ணியத்தை பாதுகாத்துப் பேசுவதென்பது, அநேகமாக, அடக்குமுறையை தனது தலையின் மேல் வாங்கிப் போட்டுக் கொள்வதாகத்தான் அர்த்தமளிப்பதாக இருக்கிறது.

எனினும் சமூக விஞ்ஞானங்களில் இது அளவிடமுடியாத அளவுக்கு படுமோசமானதாய் இருக்கிறது. பொருளாதார நிபுணர்கள், வரலாற்றாசிரியர்கள், ஏன் புள்ளிவிவர நிபுணர்களும் கூட -பத்திரிகையாளர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்- எல்லாருமே உத்தியோகபூர்வ பாதையின் அவ்வப்போதான ஊசலாட்டங்களுக்கு கொஞ்சமும் கூட முரண்பாடாய் அமைந்து விடக்கூடாது என்பதில்தான் எல்லாவற்றுக்கும் மேல் அக்கறை காட்டுகிறார்கள். ஒருவர் தன்னை ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள “தலைவரின்” உரைகளில் இருந்தான வார்த்தைக்குவியல்களைக் கொண்டு மூடிக் கொள்ளாமல், எல்லாமே மிகச்சரியாக அவை எவ்வாறு செல்ல வேண்டுமோ அவ்வாறே அல்லது இன்னும் மேம்பட்ட நிலையிலும் கூட சென்று கொண்டிருக்கின்றன என்று காட்டுகின்ற கடமையை முன்கூட்டி தனக்கு வரிந்து கொள்ளாமல், அவரால் சோவியத் பொருளாதாரம் குறித்தோ, அல்லது உள்நாட்டு அல்லது வெளிநாட்டுக் கொள்கை குறித்தோ எதுவும் எழுதி விட முடியாது. இந்த நூறு சதவீத இணங்கிநடத்தல்வாதமானது அன்றாட அசௌகரியங்களில் இருந்து ஒருவரை விடுதலை செய்கிற அதேநேரத்தில் மலட்டுத்தனம் என்ற மிகக் கடுமையான தண்டனையை அவர்மீது சுமத்துகிறது.

சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிசம் ஒரு உத்தியோகபூர்வ அரசுத் தத்துவமாக இருக்கிறது என்ற நிலையிலும் கூட, கடந்த பன்னிரண்டு வருட காலத்தில் ஒரு மார்க்சிச ஆய்வும் கூட ―பொருளாதாரத்தில், சமூகவியலில், வரலாற்றில் அல்லது மெய்யியலில்― கவனத்தை கவருவதாகவோ அந்நிய மொழிகளில் மொழிபெயர்க்கத்தக்கதாகவோ வந்திருக்கவில்லை. முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட்ட அதே பழைய சிந்தனைகளை திரும்ப ஒப்பிக்கின்ற, ஒரே பழைய மேற்கோள்களை நடப்பு நிர்வாக நிலவரத்தின் தேவைக்கேற்றாற்போல இடம்மாற்றி வைக்கும் பாடப்புத்தகத் தொகுதிகளின் எல்லையைத் தாண்டி மார்க்சிச வேலைகள் முன்செல்ல முடியாதிருக்கின்றன. யாருக்கும் எந்த பிரயோசனமும் தராத புத்தகங்களும் கையேடுகளும், பசை, முகஸ்துதி மற்றும் பல பிசுபிசுப்பான பொருட்களைக் கொண்டு ஒன்றாக ஒட்டப்பட்டு, பல மில்லியன் கணக்கில் அரசாங்க விநியோக வழிகளின் மூலமாக விநியோகிக்கப்படுகின்றன. கொஞ்சம் மதிப்பானதை மற்றும் சுயாதீனமானதை சொல்லக் கூடியவர்களாக இருக்கிற மார்க்சிஸ்டுகள் சிறையில் இருக்கிறார்கள், அல்லது வாய்ப்பூட்டு போடப்பட்டு இருக்கிறார்கள், சமூக வடிவங்களின் பரிணாமவளர்ச்சியானது ஒவ்வொரு அடியெடுப்பிலும் மிகப்பிரம்மாண்டமான விஞ்ஞானரீதியான பிரச்சினைகளை முன்நிறுத்திக் கொண்டிருக்கும் நேரத்திலும் இந்நிலை! இது இன்றி தத்துவார்த்த வேலை சாத்தியமில்லை என்று சொல்லத்தக்க ஒன்று அவமதிக்கப்பட்டு காலுக்கடியில் போட்டு நசுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது: நேர்மை. லெனினின் முழுப் படைப்புகளுக்கான விளக்க உரைகள் மீதும் கூட ஒவ்வொரு புதிய படைப்பிலும் ஆளும் அதிகாரிகளின் தனிநபர் நலன்களின் பேரில் தீவிர திருத்தங்கள் செய்யப்படுகின்றன: 'தலைவர்களின்' பெயர்கள் பெரிதுபடுத்தப்பட்டு, எதிர்ப்பாளர்களின் பெயர்கள் களங்கப்படுத்தப்படுகின்றன; விபரங்கள் மறைக்கப்படுகின்றன. கட்சி மற்றும் புரட்சியின் வரலாறு குறித்த பாடப் புத்தகங்களுக்கும் இதே கதிதான். உண்மைகள் சிதைக்கப்படுகின்றன, ஆவணங்கள் மறைக்கப்படுகின்றன அல்லது இட்டுக் கட்டப்படுகின்றன, மரியாதைகள் உருவாக்கப்படுகின்றன அல்லது சிதைக்கப்படுகின்றன. ஒரே புத்தகத்தின் பதிப்புகளே அடுத்தடுத்த பன்னிரண்டு வருட காலத்தில் எவ்வாறெல்லாம் மாறியிருக்கின்றன என்ற ஒரு எளிமையான ஒப்பீடே போதும், ஆளும் தட்டின் சிந்தனை மற்றும் மனச்சாட்சியின் சீரழிவுப் போக்கை தப்பாமல் கண்டுகொள்ள அது நம்மை அனுமதிக்கக் கூடியதாய் இருக்கிறது.

'சர்வாதிபத்திய ஆட்சி' கலை இலக்கியம் மீது ஏற்படுத்தியிருக்கின்ற நாசகரமான விளைவும் சளைத்ததல்ல. போக்குகள் மற்றும் பள்ளிகள் இடையிலான சண்டையானது தலைவர்களின் விருப்பத்தின் மீதான பொருள்விளக்கங்களைக் கொண்டு பிரதியிடப்பட்டிருக்கிறது. எல்லா குழுக்களுக்கும், கலை இலக்கியத்திற்கான ஒருவகை குவிப்பு முகாமாக, ஒரு பொதுவான கட்டாய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. செரபிமொவிச் அல்லது கிளாட்கோவ் போன்ற நடுத்தரமான ஆனால் நல்நோக்கமுடைய கதைசொல்லிகள் செவ்வியல் வகையினராய் போற்றப்பட தொடக்கமளிக்கப்படுகின்றனர். தமக்குத்தாமே வன்முறை இழைத்துக் கொள்ள இயலாதவர்களாய் இருக்கின்ற கொடைபெற்ற எழுத்தாளர்கள், வெட்கங்கெட்ட தனத்தையும் மற்றும் டஜன்கணக்கில் மேற்கோள்களையும் ஏந்தியபடி திரியும் அறிவுறுத்துநர்கள் கூட்டத்தால் பின்தொடரப்படுகிறார்கள். மிகவும் பேறுபெற்ற கலைஞர்கள் எல்லாம் ஒன்று தற்கொலை செய்து கொள்கிறார்கள், அல்லது தங்களது படைப்பு எங்கோ கடந்தகால மூலையில் கிடக்கக் காண்கிறார்கள், அல்லது ஊமையாகி விடுகிறார்கள். நேர்மையான மற்றும் அறிவுத்திறன்மிக்க புத்தகங்கள் ஏதோ விபத்து போல சமயங்களில் வெளிவந்துவிடுகின்றன, மேசையின் கீழே எங்கோ இரகசிய இடத்தில் இருந்து வருவதுபோல எடுத்துவைக்கப்படுகின்ற அவை, கடத்தல் கலைப் பொருட்களின் குணத்தைப் பெற்றுவிட்டிருக்கின்றன.

சோவியத் கலையின் வாழ்க்கை என்பது ஒருவிதத்தில் தியாக வரலாறுகளின் தொகுதியாகவே இருக்கிறது. பிராவ்தாவில் 'சம்பிரதாயவாதத்திற்கு' (formalism) எதிரான தலையங்க உத்தரவுகளுக்குப் பின்னர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மேடை இயக்குநர்கள் மற்றும் இசைநாடகப் பாடகர்களும் கூட சுய-அவமதிப்பான விதத்தில் பகிரங்க மன்னிப்பு கோருகின்ற ஒரு தொற்று தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராக தங்களது சொந்த கடந்த கால தவறுகளை கைதுறந்த அவர்கள், ஆயினும் ―மேலதிக அவசரநிலைகளுக்காக― இந்த 'சம்பிரதாயவாதத்தின்' தன்மை குறித்த எந்த திட்டவட்டமான வரையறையையும் அளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். கொஞ்ச காலம் போனதும், இந்த பகிரங்க மன்னிப்புகளின் எண்ணிக்கை மிகவும் பெருக்கெடுத்து விட்டதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் ஒரு புதிய உத்தரவு மூலமாக நிர்ப்பந்தம் பெற்றார்கள். கவிஞர் மையகோவ்ஸ்கி குறித்து ஸ்ராலின் புகழ்ந்து சில கருத்துக்கள் கூறியதன் ஒரு விளைவாக ஒரு சில வாரங்களுக்குள்ளாக இலக்கிய மதிப்பீடுகள் மாற்றப்படுகின்றன, பாடப்புத்தகங்கள் ஒப்பனை செய்யப்படுகின்றன, தெருக்கள் பெயர்மாற்றப்படுகின்றன, சிலைகள் நிறுவப்படுகின்றன. ஒரு புதிய இசை நாடகம் (opera) உயர்-நிலை தணிக்கையாளர்களின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் உடனேயே தொகுப்பாளர்களுக்கு ஒரு புதிய இசைக்குறிப்பு உத்தரவாக மாற்றப்பட்டு விடுகின்றன. கம்யூனிச இளைஞர் அமைப்பின் செயலாளர், எழுத்தாளர்களின் ஒரு மாநாட்டில் கூறினார்: 'தோழர் ஸ்ராலினின் ஆலோசனைகள் ஒவ்வொருவருக்கும் சட்டம் போன்றதாகும்', பார்வையாளர்களின் மொத்த கூட்டமும் கைதட்டியது, சிலர் அவமானத்தில் மனம் வெந்தனர் என்பதில் சந்தேகமில்லை என்றபோதிலும். இலக்கியத்தை கேலிக்கூத்தாக்குவதை பூரணப்படுத்துவதைப் போல, ஒரு ரஷ்ய சொல்லாடலையும் கூட சரியாக தொகுக்கத் தெரியாத ஸ்ராலின் நடை விடயத்தில் செவ்வியல் இலக்கிய அறிஞராக அறிவிக்கப்படுகிறார். வெளிப்பாடுகள் சிலவற்றில் தானறியாமல் அது நகைச்சுவை காட்டுகின்றபோதிலும், இந்த அடிமைப்படும்தன்மை (Byzantinism) மற்றும் போலிஸ் ஆட்சியில் ஒரு ஆழ்ந்த துன்பியலான ஒன்று அங்கே இருக்கிறது.

உத்தியோகபூர்வ சூத்திரம் இவ்வாறு கூறுகிறது: கலாச்சாரம் என்பது உள்ளடக்கத்தில் சோசலிசமயமாகவும், வடிவத்தில் தேசியமயமாகவும் இருக்க வேண்டும். ஆயினும் ஒரு சோசலிச கலாச்சாரத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, சில குறிப்பிட்ட கிட்டத்தட்ட மகிழ்ச்சியான அனுமானங்கள் மட்டும் தான் சாத்தியமாக இருக்கிறது. அந்தக் கலாச்சாரத்தை யாரும் ஒரு பற்றாக்குறையான பொருளாதார அஸ்திவாரத்தின் மீது வளர்த்து விட முடியாது. வருங்காலத்தை கணித்து வழிபார்த்திருப்பதில் விஞ்ஞானத்தைக் காட்டிலும் கலை மிகக் குறைவான திறன்படைத்ததேயாகும். எவ்வாறாயினும், “வருங்காலக் கட்டுமானத்தின் சித்திரத்தை படையுங்கள்', 'சோசலிசத்துக்கான பாதையைக் காட்டுங்கள்', 'மனிதகுலத்திற்கு புதிய முகமளியுங்கள்' என்பன போன்ற பரிந்துரைகள் எல்லாம் ஒரு படைப்புத்திறனுடைய கற்பனாசக்திக்கு ஒரு தட்டுமுட்டுச்சாமான்கள் கடையின் விலைப் பட்டியல், அல்லது ஒரு இரயில் அட்டவணை என்ன தர முடியுமோ அதற்கு சற்று மேலானதையே தர முடிகிறது.

ஒரு கலையின் தேசிய வடிவமானது அதன் உலகளாவிய அணுகல்நிலையுடன் ஒட்டி வருவதாகும். “மக்கள் எதை விரும்பவில்லையோ” பிராவ்தா கலைஞர்களுக்கு கட்டளையிடுகிறது, அது அழகியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்க இயலாது.' கலைரீதியாக வெகுஜன மக்களுக்கு கற்பிக்கும் பணியை நிராகரிப்பதாக இருக்கும் இந்த பழைய நரோத்னிக் சூத்திரம், மக்கள் எந்தக் கலையை விரும்புகிறார்கள் எதை விரும்புவதில்லை என்பதை தீர்மானிக்கும் உரிமையானது அதிகாரத்துவத்தின் கைகளில் தொடரும் போது இன்னும் அதிகமான பிற்போக்குத் தன்மையைப் பெறுகிறது. அது தனது தெரிவின்படி புத்தகங்களை அச்சிடுகிறது. அதன் விற்பனையும் நிர்ப்பந்தப்படியே நடக்கிறது, வாசகருக்கு எந்த தெரிவு வாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை. இறுதிப் பகுப்பாய்வில், கலையானது அதிகாரத்துவத்தின் நலன்களை உள்வாங்கிக் கொள்ளுமாறும் வெகுஜன மக்களுக்கு அதிகாரத்துவத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடிய விதத்திலான வடிவங்களை அது கண்டறியுமாறும் பார்த்துக் கொள்வது என்பதாகத் தான், மொத்த விவகாரமும் அதன் கண்களுக்குத் தெரிகிறது.

வீண் முயற்சி! எந்த இலக்கியமும் அந்த வேலையைச் செய்ய முடியாது. 'அக்டோபரில் பிறந்த முதலாவது அலைக்கு மேலாய் உயரக் கூடியதான ஒரு புதிய இலக்கிய அலையை முதலாவது ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டமோ இன்னும் நமக்கு அளித்திருக்கவில்லை' என்று தலைவர்களே ஒப்புக்கொள்ளத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அது மிக மென்மைப்படுத்தப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில், தனிநபர் விதிவிலக்குகள் இருந்தபோதிலும், இந்த தேர்மிடோரின் சகாப்தமானது கலைப் படைப்புகளின் வரலாற்றில் சராசரிகளின், விருதுஎழுத்தாளர்களின் மற்றும் துதிபாடிகளின் 'சகாப்தமாகவே' விஞ்சி நிற்கும்.