World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The tasks facing the anti-war movement

போர் எதிர்ப்பு இயக்கம் எதிர்கொள்ளும் பணிகள்

Statement of the World Socialist Web Site Editorial Board
12 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளத்தினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் பின்வரும் அறிக்கையானது பெப்ரவரி 15 சனிக்கிழமை மற்றும் பெப்ரவரி 16 ஞாயிற்றுக் கிழமைகளில், ஐரோப்பா முழுவதிலும் அதேபோல ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் நியூயோர்க்கிலும் ஏனைய அமெரிக்க மாநகர்களிலும் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் விநியோகம் செய்யப்படும். அறிக்கையானது ஏற்கனவே எமது ஜேர்மன் பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது, மற்றும் அடுத்த சில நாட்களில் பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, டொச் மொழிபெயர்ப்புக்கள் வெளியிடப்படும்.

அறிக்கையானது உலக சோசலிச வலை தளத்தில் ஆங்கிலம் மற்றும் ஜேர்மனில் பிடிஎப் கோப்பில் துண்டறிக்கை வடிவத்திலும் கூட இருக்கின்றது. ஏனைய மொழிகளில் கூட பிடிஎப் பதிப்புக்கள் வெளியிடப்படும். நாம் எமது வாசகர்களையும் ஆதரவாளர்களையும் துண்டறிக்கையை இறக்கம் செய்து அதனை பல்வேறு ஊர்வலங்களிலும், அதேபோல வேலைத் தளங்கள், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களிலும் விநியோகிக்குமாறு வேண்டுகிறோம்.

ஈராக்கிற்கு எதிராக அண்மையில் நிகழவிருக்கும் போரைப் போல், முழு உலகின் கண்களின் முன்னே வெளிப்படையாக ஒரு போர்க்குற்றம் வைக்கப்படல் அபூர்வமானதாகும். இந்த ஏழ்மை பீடித்த நாட்டை ஆக்கிரமித்து அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும், மற்றும் அதன் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவதற்கான அதன் உறுதியை அமெரிக்க அரசாங்கமானது பலமாதங்களாகவே எடுத்துக்காட்டி வந்திருக்கிறது. திட்டமிட்டபடி கறாராக இராணுவ தயாரிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சதாம் ஹூசைனின் பேரழிவுகரமான ஆயுதங்கள் என்று கூறப்படுபவற்றிற்கு நம்பத் தகுந்த ஆதாரம் எதுவுமில்லாதுதடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானங்கள் மற்றும் விவாதங்கள், ஐ.நா சோதனைகள் அனைத்துமே பொதுக் கருத்தை சூழ்ச்சியுடன் கையாளுவதற்கும் ஏமாற்றுவதற்குமான வெறும் பிரச்சார உத்தியேயாகும்.

ஈராக்கிற்கு எதிரான போர் மனிதகுலம் அனைத்தையும் அழிவுக்குள்ளாக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றது. அதன் ஈவிரக்கமற்ற நடவடிக்கைப் போக்குடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பதட்டங்களை மேலும் கூட்டிக் கொண்டிருக்கிறது. ஈராக்கை வென்று கைப்பற்றல் வாஷிங்டனின் வேட்கையைத் தணிக்காது. அது மேலும் அதனை அவா பெருக்கச்செய்யும்.

ஈராக்கிற்கு எதிரான போர் உலகில் ஊழித்தீயால் முடிவு கட்ட அச்சுறுத்தும் இராணுவவாத வெடிப்பின் தொடக்க சுடுதலாக இருக்கிறது.

பெப்ரவரி 15 மற்றும் 16 அன்று பத்துலட்சக் கணக்கான மக்கள் தங்களின் கவலைகளையும் எதிர்ப்பினையும் வெளிப்படுத்துவர். ஐரோப்பாவானது அதன் வரலாற்றில் மிகப் பெரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காணவிருக்கிறது. நாம் இந்த ஆர்ப்பாட்டங்களை வரவேற்கின்றோம். அவை பெரும்பான்மையான உலக மக்கள், போரை எதிர்க்கின்றதைக் காட்டுகின்றது.

ஆயினும், இந்த எதிர்ப்புக்கள் வாஷிங்டன் நீண்ட காலத்திற்கு முன்னரே போரைத் தீர்மானித்தது என்ற உண்மையை மாற்றாது. முன்னர் எதிர்பார்த்திரா அளவில் வீதிகளில் மக்கள் கலந்துரையாடல் இடம்பெறும் அதேவேளை, போருக்கான ஆரம்பம் மாற்றமுடியாதபடி முன்சென்று கொண்டிருக்கிறது. புஷ், செனி, ரம்ஸ்பெல்ட் மற்றும் வாஷிங்டனில் உள்ள ஏனைய போருக்கான சதிக் கூட்டம் அமெரிக்காவில் அல்லது உலகெங்கிலும் உள்ள பொதுக் கருத்தைப் பொருட்படுத்தப் போவதில்லை.

இந்த மூளையில் ஏற்றுக்கொள்ளாத் தன்மையானது, புஷ் நிர்வாகத்தின் எந்தவிதமான உள்ளார்ந்த பலத்தின் காரணமாக அல்ல. அமெரிக்க ஜனாதிபதி அவரது பதவியை உரித்தாக்கிக் கொண்டது ஜனநாயகபூர்வமான பெரும்பான்மையில் அல்ல, மாறாக கள்ள வாக்குகள் மற்றும் அரசியல் நோக்கங்கொண்ட நீதிமன்ற முடிவில் ஆகும். ஓய்வொழிச்சலில்லாத செய்தி ஊடகப் பிரச்சாரம் இருந்தபோதிலும் அமெரிக்க மக்களிடையே போருக்கு ஆர்வம் இல்லை.

கடந்த வாரம் நியூயோர்க் டைம்ஸ்-ல் வெளியிடப்பட்ட ஒரு பத்தியில், போருக்கு மூர்க்கமான ஆதரவாளரான தோமஸ் பிரைட்மன் தாமே, "இந்த விடாப்பிடியான செயல்திட்டத்திற்கு இன்று அமெரிக்காவில் நம்பமுடியாத அளவு குறுகிய ஆதரவு அடித்தளம் நிலவுகிறது" என்று உறுதிப்படுத்தினார். அவர்: "செப்டம்பரிலிருந்து நாடு முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன், ஈராக்கில் போருக்கு ஆதரவாக பெரும்பான்மை இருக்கும் என்று நான் உணர்ந்து பேசிய இடத்தில் தனி ஒரு பார்வையாளர் கூட அங்கு இல்லை என்பதை தயக்கம் எதுவுமின்றி நான் கூற முடியும்." என எழுதினார்.

ஆயினும், போருக்கான இந்த பரந்த எதிர்ப்பு, ஒழுங்கு செய்யப்பட்ட அரசியல் வெளிப்படுத்தலைக் காணவில்லை. புஷ் நிர்வாகமானது பெரும்பான்மையினரது கருத்தை அலட்சியப்படுத்த முடியும் ஏனென்றால் தொழிலாளர் இயக்கத்தின் செயலிழந்த தன்மையினால் அது ஒரு பாரதூரமான அரசியல் எதிர்ப்புடன் மோதாது என்று உறுதியளிக்கின்றது.

அமெரிக்காவில், குடியரசுக் கட்சியினர் மட்டுமல்ல, முன்னணி ஜனநாயகக் கட்சியினரும் கூட போரை ஆதரிக்கும் மனிதராவார். ஐரோப்பாவில், இந்தக் கட்டத்தில் இராணுவத் தாக்குதலை நிராகரிக்கும் கட்சிகள் மற்றும் அரசாங்கங்கள் கூட அமெரிக்கப் போர் நோக்கங்களை வாதவகையில் நேர்மையானதாய் மற்றும் சட்டபூர்வமானதாய் ஏற்கின்றன. இந்தப் போர் உண்மையில் என்ன நோக்கத்தை கொண்டது என்பது பற்றி அவர்களுள் ஒருவரும் அறிவிக்கவில்லை. இராணுவத் தாக்குதலுக்கு அதன் எதிர்ப்பை அழுத்தம் திருத்தமாய் இவ்வாறு கூறிவரும் ஜேர்மன் அரசாங்கம் கூட, பேரழிவுகரமான ஈராக்கிய ஆயுதங்கள் எனும் புனைகதையை உயர்த்திப் பிடிக்கிறது, இவ்வாறு வாஷிங்டனின் போர் நோக்கங்களை சட்டபூர்வமானதாக்குகின்றது.

போர் நெருங்கி வருகையில், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள அரசாங்கங்கள் மிகவும் நேரடியாக போர்ப் பாதையில் ஒரு முகப்படுகின்றன. ஐ.நா பாதுகாப்பு சபையில் போர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க இன்னும் மறுத்துவரும் ஜேர்மனி, ஜேர்மன் வான்வெளியைக் கடக்கவும் ஜேர்மனியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களைப் பயன்படுத்தவுமான உரிமையை அமெரிக்காவிற்கு உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. பிரான்ஸ் "போர் இறுதியான தீர்வு" என்பதை பொருத்தமற்றதென விலக்காததுடன், அதன் தனியொரு விமானந்தாங்கிக் கப்பலையும் மத்திய கிழக்கிற்கு அனுப்பி உள்ளது. துருக்கி, நீண்ட தயக்கத்திற்குப் பின்னர், அதன் இராணுவத் தளங்களை அமெரிக்காவிற்குத் திறந்து விட்டிருக்கிறது.

இந்தப் பின்புலத்தில், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மட்டும் போதுமானதாகாது. போருக்கு எதிரான போராட்டத்திற்கு நனவுபூர்வமாக விரிவாக்கப்பட்ட மற்றும் தொடர்ச்சியான அரசியல் மூலோபாயம் ஒன்று தேவைப்படுகிறது.

போருக்கு எதிரான இயக்கம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்தி மிக்க அரசியல் இயக்கமாக மாற்றப்பட்டாக வேண்டும். இதற்கு இந்தப் போருக்குப் பின்னால் உள்ள இயக்கு சக்திகள் மற்றும் காரணிகள் பற்றிய ஒரு புரிதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேலைத்திட்டம் தேவைப்படுகிறது. என்ன விலை கொடுத்தும் ஐக்கியம் என்பது அல்ல, மாறாக தெளிவுபடலே இப்போதைய தேவையாக இருக்கிறது.

போருக்கான காரணங்கள் யாவை?

பெரும்பான்மையான விமர்சகர்கள் இந்தப் போர் எண்ணெய் பற்றியது என்பதை அறிவார்கள். உலகின் இரண்டாவது பெரிய, ஈராக்கிய எண்ணெய் சேர்ம இருப்பின் முக்கியத்துவம் பரந்த அளவில் ஆதார மூலம் காட்டப்பட்டது. இந்த அளிப்புக்கள் மீதான கட்டுப்பாடு அமெரிக்காவின் சக்தி தேவைகளை நீண்ட காலத்திற்கு பூர்த்தியாக்கும் மற்றும் வரவர நிலையற்றதாகி வரும் செளதி அரேபியாவின் மீதான அதன் சார்தலைக் குறைக்கும். ஜனாதிபதி புஷ்-ம் அவரது நிர்வாகத்தின் பெரும் பகுதியும் அவர்களின் மூலத்தை எண்ணெய் தொழிற்துறையில் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மை, அமெரிக்க போர் உந்துதலில் எண்ணெய் வகிக்கும் முக்கிய பாத்திரத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.

இருப்பினும், எண்ணெய் போருக்கான அம்சங்களுள் ஒன்றாகவே இருக்கிறது. அமெரிக்காவானது இன்னும் அதிக தொலைநோக்கு மற்றும் பேராவல் கொண்ட இலக்கைப் பின்பற்றி வருகிறது. அது உலக மேலாதிக்கத்திற்காக முயற்சித்து வருகிறது, அதாவது, அமெரிக்க மூலதனத்தின் நலன்களின் பேரில் உலகை அரசியல் மற்றும் பொருளாதார மறு ஒழுங்கமைப்பு செய்தலாகும்.

இதற்கு ஈராக் போன்ற பலவீனமான குறை வளர்ச்சி உடைய நாடுகள் மட்டுமல்லாமல், மேற்கு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியப் போட்டியாளர்கள் மற்றும் ஜப்பான் ஆகியன கூட அதன் விருப்பத்திற்கு கட்டுப்படுமாறு நிர்ப்பந்திக்கப்படுவது தேவையாக இருக்கிறது. ஈராக்கை வென்று கைப்பற்றல், இஸ்ரேலின் உதவியுடன் அமெரிக்கா முழு மத்திய கிழக்கிலும் மேலாதிக்கம் செய்வதற்கு வகைசெய்யும். உலகின் பிரதான சக்தி வளங்களின் மீதான கட்டுப்பாடு, அமெரிக்காவிற்கு ஐரோப்பாவில் உள்ள அதன் போட்டியாளர்கள், ஜப்பான் மற்றும் சீனாவிற்கு எதிரான சக்திமிக்க நெம்புகோலை வழங்கும்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால மார்க்சிஸ்டுகள் விளக்கிக்காட்டியதுபோல, ஏகாதிபத்தியம் வெறுமனே ஒரு அல்லது மற்றொரு அரசாங்கத்தின் அல்லது முதலாளித்துவக் கும்பலின் பேராசையிலிருந்து எழுவதல்ல, மாறாக முதலாளித்துவ சமுதாயத்தில் உள்ள உள்ளார்ந்த அடிப்படை முரண்பாடுகளில் இருந்தே எழுகிறது. பூகோளம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஒரு வரை ஒருவர் சார்திருக்குமாறு ஒன்றிணைக்கும், நவீன உற்பத்தி வடிவமானது, தேசிய அரசுகள் அமைப்பு முறையுடனும் முதலாளித்துவம் அடிப்படையாகக் கொண்டிருக்கும் தனிச்சொத்துடைமையில் நங்கூரமிடப்பட்டிருக்கும் பொருளாதார உறவுகளுடனும் ஒத்திசைந்து போகமுடியாது. உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசுக்கும் இடையிலான ஒத்திசையாமை பலாத்காரத்தின் மூலம் உலகை பங்கீடு செய்ய மற்றும் மறுபங்கீடு செய்ய ஏகாதிபத்திய அரசுகளை நிர்ப்பந்திக்கிறது.

கடந்த நூற்றாண்டில் பூகோளத்தின் பெரும் பகுதிகளை பேரழிவுக்குள்ளாக்கிய இரு உலக யுத்தங்களுக்கும் இதுதான் அடிப்படைக் காரணமாக இருந்தது. தனது ஆற்றல் மிக்க உற்பத்தி சக்திகள் ஐரோப்பிய தேசிய அரசு அமைப்பு முறையால் திணறடிக்கப்பட்ட ஜேர்மனி, ஐரோப்பாவை மறுஒழுங்கு செய்ய இரு முயற்சிகளை மேற்கொண்டது. இன்று, அமெரிக்காவானது இன்னும் பெரிய சவாலில் முயற்சி எடுக்கின்றது: அமெரிக்கா உலகை மறுஒழுங்கு செய்ய நாடுகிறது.

ஐரோப்பிய இக்கட்டானநிலை

போர் பற்றிய பிரச்சினையில் ஐரோப்பா பிளவுபட்டுள்ளது. மிகவும் வாடிக்கையாக்கப்பட்ட "பொதுவான வெளியுறவுக் கொள்கை" கந்தல் கந்தலாகிக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ், ஸ்பானிஷ் மற்றும் இத்தாலி அரசாங்கங்கள், அதேபோல பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள், புஷ் உடன் தம்மை ஓரணி சேர்த்துக் கொண்டுள்ளன. ஜேர்மனிக்கு எதிரெதிராக தங்களின் நிலைகளை பலப்படுத்துவதற்கான ஆவல் இந்த முடிவில் சிறிய காரணியாக இல்லை. மறுபுறம், பிரான்சு மற்றும் ஜேர்மனி அமெரிக்காவை ராஜதந்திர வழிமுறைகள் மூலம் கடிவாளமிட முயற்சித்து வருகின்றன.

இந்த நிலைப்பாடு போருக்கு கொள்கை ரீதியான எதிர்ப்புடன் பொதுவில் எதனையும் கொண்டிருக்கவில்லை. பிரெஞ்சு அரசாங்கமும் சரி ஜேர்மன் அரசாங்கமும் சரி பெரும் வல்லரசுகள் ஈராக்கிற்கு எதிராகப் போகும் உரிமையை கேள்விக்குள்ளாக்கவில்லை. ஈராக்கிற்கு இறுதிக் கெடுவை முன்வைக்கும், "கடும் விளைவுகளை" அச்சுறுத்தும் ஐ.நா தீர்மானம் 1441க்கு இரண்டுமே உடன்பட்டிருக்கின்றன.

மிகவும் பலமான அமெரிக்க மேலாதிக்கம் இப்பிராந்தியத்தில் உள்ள தங்களின் சொந்த நலன்களை தடுத்து நிறுத்தும் என்று மட்டுமே அவை அஞ்சுகின்றன. இந்த நலன்களைப் பாதுகாப்பதில், அவை இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் வாழ்வோடு எரிச்சலுடன் விளையாடுகின்றன. அமெரிக்கா தடுத்து நிறுத்தப்படாவிட்டால், எனவே கொள்ளையடித்த பொருளில் பங்கிடுவதில் தவறவிடாதிருக்க வேண்டி, அவை போரை அங்கீகரிக்கும் ஐ.நா வின் இரண்டாவது தீர்மானத்திற்கு உடன்பட தயாராய் இருக்கின்றன. பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் மற்றும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் பிஷ்சர் அந்த விதமாய் குறிப்புக்களை செய்திருக்கிறார்கள்.

ஐவரி கோஸ்ட்டில் அண்மைய பிரெஞ்சு இராணுவத் தலையீட்டால் விளக்கிக் காட்டப்படுகிறவாறு -- தங்களின் சொந்த பூகோள குறிக்கோள்களைப் பின்பற்றும் ஜேர்மனியும் பிரான்சும் பழைய ஏகாதிபத்திய வல்லரசுகள் ஆகும். அமெரிக்காவின் வலுச்சண்டைக்குப் போதல் அவர்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளி இருக்கின்றது. அவை அமெரிக்காவின் ஆணைகளுக்கு தலைவணங்கினால், வரவிருக்கும் நீண்ட காலத்திற்கான சர்வதேசிய அரசியலில் எந்தவிதமான சுதந்திரமான பாத்திரத்தையும் அவை கைதுறந்துவிட வேண்டி இருக்கும். இருப்பினும், அவை சில எதிர்ப்பினை முன்வைத்தால், கணக்கிட முடியா பொருளாதார மற்றும் இராணுவ விளைபயன்களுடன், மரண ஆபத்தான மோதல்களின் ஆபத்து போக்கை அவை இயக்கும்.

அமெரிக்கப் போர்த்திட்டங்கள் தொடர்பாக அவை கூக்குரலிடும் விமர்சனத்தின் மறுபுறம் அவர்களின் சொந்த மறு ஆயுதமயப்படுத்தலை உக்கிரப்படுத்தலாக இருக்கிறது. வாஷிங்டனை எதிர்த்து நிற்க, ஐரோப்பாவானது அதன் சொந்த இயல்பின் பேரில் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான திறனைப் பெற்றிருக்க வேண்டும். ஈராக்கின் நிலை மீதான உடன்பாடின்மைகள் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையிலான நேரடி மற்றும் வெளிப்படையான மோதலின் முன்னோடி மட்டுமே ஆகும்.

இதனால்தான், அமைதி இயக்கத்தின் சில பகுதிகள் செய்வதைப் போல, ஜேர்மன் அல்லது பிரெஞ்சு அரசாங்கத்தில் நம்பிக்கைகளை வைப்பது தவறானதாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு எதிராக ஷ்ரோடர், பிஷ்சர் அல்லது சிராக்கிற்கு "தார்மீக ஆதரவை வழங்குவதற்கு" ஆன அவர்களின் அழைப்பு பயனற்றதாகும். ஒரு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இன்னொரு ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதன் மூலம் நீங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட முடியாது.

போர் அல்லது அமைதிக்கான முடிவை ஐ. நா விடம் விடுவதும் அதற்குச் சமமாகவே தவறானதாகும். அது ஈராக்கைத் தாக்கும்பொழுது அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் அவையினது அதிகாரபூர்வ அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதா இல்லையா என்பது இந்தப் போரின் ஏகாதிபத்திய இயல்பை மாற்றப் போவதில்லை. "உலக சமுதாயத்தை" பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அப்பால், ஐ.நா வானது --உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களைப் போல-- ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஒரு கருவியைக் கொண்டிருக்கிறது. உலக மக்களின் மீது தங்களின் விருப்பினைத் திணிப்பதற்காக அவைகளால் அது பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்க சமுதாயத்தின் நெருக்கடி

1914ல் மற்றும் 1939ல் ஜேர்மனி போருக்கு சென்ற பொழுது, அது அவ்வாறு செய்தது கச்சாப் பொருட்களின் புதிய வளங்களை, புதிய சந்தைகளை மற்றும் அதிகமான "வாழ்விடங்களை" க் கைப்பற்றுவதற்கு மட்டுமல்ல. போர் என்பது அதன் உள்நாட்டு நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் கூட இருந்தது. 1939ல் ஹிட்லருக்கு போரைத் தவிர மாற்றுத் தேர்வு விடப்பட்டிருக்கவில்லை. ஜேர்மன் நாணயமும் பொருளாதாரமும் பொறியும் நிலையில் இருந்தன, அவை இந்த ஆட்சி உயிர் பிழைப்பது கடினமாக இருக்கும் என்ற அதிர்ச்சியை உருவாக்கியிருந்தன.

ஐக்கிய அமெரிக்க அரசுகள் இன்று அதேமாதிரியான நிலையில் இருக்கின்றது. புஷ்-ன் பின்னே ஐக்கியப்படுவதில் முன்னணி ஜனநாயகக் கட்சியினர் உட்பட, ஆளும் செல்வந்தத் தட்டால் காட்டப்படும் ஒருமுகப் போக்கானது, அவர்களின் அரசியல் நம்பிக்கை இழந்த நிலையின் வெளிப்பாடாக இருக்கிறது. அவர்களுக்கு போர் தேவை ஏனென்றால் அமெரிக்க சமுதாயத்தை இரண்டாகக் கிழித்துக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் விடை கிடையாது.

ஊகவாணிக வோல்ஸ்ட்ரீட் நிதிக்குமிழியின் பொறிவானது, 1990களின் பொருளாதார வளர்ச்சி அடிப்படையாகக் கொண்டிருந்த மோசமான அடித்தளங்களை திரைவிலக்கிக் காட்டியது. பெருமளவிலான நிதிச் சொத்துக்கள் வீணாய் செலவுசய்யப்பட்டன. கோடிக்கணக்கான டாலர்கள் உற்பத்தி இல்லாத மற்றும் வீணான ஊகவாணிப நடவடிக்கைகளுக்குள் பாய்ச்சப்பட்டன. மதிப்பானது (பெறுமதியானது) உற்பத்தி நிகழ்வுப் போக்கிலிருந்து தனியாக மற்றும் அதிலிருந்து சுதந்திரமாக உண்டு பண்ணப்படும் என்ற பாசாங்கானது சமூகக் கட்டமைப்பின் மீதும் ஆளும் செல்வந்தத் தட்டின் இயல்பின் மீதும் ஆழமான பாதிப்பைக் கொண்டிருந்தது.

கார்ப்பொரேஷன்களின் நடத்தையானது அதிகரித்த அளவில் குற்றத்தன்மையை எடுத்தன. பெரும்பாலும், பிரத்தியேகமாக உயர் செயலாட்சித் துறையினர் (executives) மற்றும் கார்ப்பொரேட் உள்ளாட்களின் தனிப்பட்ட செல்வம் பெருக்குதலால் இயக்கப்படும் அவற்றின் நடவடிக்கைகள், சமுதாயத்தை என்றும் அதிகரித்திராத அளவில் அப்பட்டமாகக் கொள்ளையிடுவதைக் கூட்டியுள்ளது. சிறு மேல் தட்டினர் நம்ப முடியாத அளவு செல்வத்தை பெரும் திரளாகக் குவித்துள்ள அதேவேளை, உழைக்கும் மக்களின் பரந்த பகுதியினர் தங்களின் நிலை தேக்கமடைவதை அல்லது மோசமாகி வருவதைப் பார்த்தனர்.

அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மையானது உயர் அபிவிருத்தி அடைந்த வேறெந்த நாடுகளிலும் உள்ளதைவிட அதிகமாக அழுத்தம் திருத்தமாகப் பறைசாற்றுகிறது. 13,000 செல்வம்மிக்க குடும்பங்களின் இணைந்த ஆண்டு வருவாய் மிக ஏழ்மையான 20 மில்லியன் குடும்பங்களின் மொத்த வருமானத்தை விடவும் அதிகமானதாக இருக்கிறது.

மேற்பரப்புக்குக் கீழே, அமெரிக்க சமுதாயமானது கடும் வர்க்கப் போரால் சூறையாடப்பட்டு வருகிறது, அது வெளிப்படையான அரசியல் வெளிப்பாட்டைக் காண்பதில்லை, ஏனெனில் இரு பாரம்பரிய கட்சிகளும் --ஜனநாயகக் கட்சியினர் அதேபோல குடியரசுக்கட்சியினர்-- ஆளும் ஒருசிலரின் குழு ஆட்சியின் நலன்களை மட்டுமழுப்பலின்றிப் பேணுகின்றனர்.

வாஷிங்டனின் போர் தொடர்பான சூடுபிடித்த நிலைக்கும் அமெரிக்க சமுதாயத்தின் நெருக்கடிக்கும் இடையிலான தொடர்பானது அமைதி இயக்கத்தின் பெரும் பகுதியினரால் கவனிக்காது விடப்படுகின்றது. ஆனால் போர் அபாயத்தின் பின்னால் உள்ள இயக்கு சக்தியை துல்லியமாய் இதுதான் கொண்டிருக்கிறது, மற்றும் அதனை வெற்றிகொள்வதற்கான முக்கிய திறப்பையும் கூட கொண்டிருக்கிறது. போரை நாடுபவர்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரேவழி தொழிலாள வர்க்கத்தை அணி திரட்டுவதுதான்.

போருக்கு எதிரான அரசியல் மூலோபாயம்

போரின் இயக்கு சக்தி மற்றும் காரணங்கள் பற்றிய வரலாற்று ரீதியான மற்றும் வர்க்க ஆய்வானது பல அடிப்படை முடிவுகளுக்கு இட்டுச்செல்கின்றது, அவை இல்லாமல் போர் எதிர்ப்பு இயக்கமானது தோல்வி அடையக் கூடியது.

* போரின் எதிர்ப்பாளர்கள், முதலாளித்துவ சுரண்டலின் முழு அமைப்பிற்கும் மற்றும் ஏகாதிபத்திய கொள்ளையிடலுக்கும் அடிப்படை ரீதியான எதிர்ப்பில் நிற்கும், வேலையின்மை, சமூக செலவின வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் வடிவத்தில், நாளாந்த அடிப்படையில் வீழ்ச்சி அடைந்து வரும் இந்த அமைப்புமுறையை அனுபவித்து வருகின்ற, உழைக்கும் மக்களை நோக்கித் திரும்பியாக வேண்டும். போருக்கு எதிரான எதிர்ப்பானது எரியும் சமூகப் பிரச்சினைகளான வேலைகள், வருமானம், கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை செவிமடுக்கும் வேலைத் திட்டத்துடன் கட்டாயம் கட்டுண்டிருக்க வேண்டும்.

* போரின் ஐரோப்பிய எதிர்ப்பாளர்களின் கூட்டாளிகள், புஷ் நிர்வாகத்துடன் சண்டை சச்சரவிடும் ஐரோப்பிய அரசாங்கங்கள் அல்ல, மாறாக அமெரிக்காவின் உழைக்கும் மக்கள்தான். ஐரோப்பிய அரசாங்கங்களுடனான எந்தவித கூட்டும் போர் எதிர்ப்பு இயக்கத்தை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் இரண்டிலிருந்தும் துண்டித்துவிடும். அது அரசாங்கங்களுடனான ஒரு கூட்டு -- எடுத்துக் காட்டாக, பிரான்சு மற்றும் ஜேர்மனி-- ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது அவைதாமே கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

* போருக்கு எதிரான இயக்கம் கட்டாயம் சர்வதேச ரீதியானதாக இருக்க வேண்டும். அது அனைத்து நாடுகளையும், நிறங்களையும் மற்றும் மதங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை பொது எதிரிக்கு எதிராக கட்டாயம் ஐக்கியப்படுத்த வேண்டும் மற்றும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும்.

* இயக்கமானது கட்டாயம் அரசியல் ரீதியாக சுயாதீமானதாக இருக்கவேண்டும். அது முதலாளித்துவ ஒழுங்கின் முகாமில் ஒரு காலையோ அல்லது இரண்டு காலையுமோ வைத்திருக்கும் கட்சிகளுக்கு --இது அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மட்டுமல்லாமல், சமூக ஜனநாயகக் கட்சியினர், பசுமைக் கட்சியினர், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினர், பிரான்சில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இத்தாலியில் உள்ள கம்யூனிச மறு அஸ்திவாரம் (Communist Refoundation) ஆகியவற்றையும் கூட உள்ளடக்கும்-- கட்டாயம் தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்ளக் கூடாது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது அத்தகைய ஒரு கட்சியை வளர்த்தெடுப்பதற்கான கருவியாக உலக சோசலிச வலை தளத்தை உருவாக்கி இருக்கிறது. நாளாந்த அடிப்படையில், உலக சோசலிச வலைதளமானது பிரதான அரசியல் நிகழ்வுகளை ஆய்வு செய்து அதன் வாசகர்களுக்கு அரசியல் நோக்குநிலையை வழங்குகிறது. நான்கு கண்டங்களிலும் உள்ள அதன் ஆசிரிய அலுவலகங்கள் மற்றும் கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள அதன் வாசகர்களுடன், உலக சோசலிச வலைத் தளமானது ஒரு புதிய, சர்வதேச தொழிலாளர் கட்சிக்கான ஆரம்ப கட்டமைப்பை வழங்குகிறது.

இந்த வார இறுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொள்ளும் அனைவரையும் உலக சோசலிச வலைத் தளத்தை நாளாந்தம் வாசிக்குமாறும், எங்களது ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ளுமாறும், எங்களது அறிக்கைகளை விநியோகிக்குமாறும் மற்றும் உங்களது கட்டுரைகளை அனுப்புமாறும் வேண்டுகிறோம். உங்களது பிராந்தியத்தில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்பு கொள்ளுங்கள். எமது சர்வதேச இயக்கத்தில் இணைந்து, தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமையாக அதன் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யுங்கள்.

See Also :

அமெரிக்காவை எப்படி சமாளிப்பது? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page