World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Chinese capitalism: industrial powerhouse or sweatshop of the world?

சீன முதலாளித்துவம்: உலகின் செயலாக்க சக்தியா அல்லது கடும் உழைப்பை வாங்கும் தொழிற்கூடமா?

By John Chan
31 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

2001 டிசம்பர், உலக வர்த்தக அமைப்பில் (WTO) பெய்ஜிங் உறுப்பினராக சேர்ந்ததின் பின்னர், சீனாவிற்குள் 2006 ம் ஆண்டில் வெளிநாட்டு கூட்டுத்தாபனங்கள் செயல்படுவதற்கு வசதியாக மீதியுள்ள தடைகளையும் நீக்கிவிட பெய்ஜிங் உறுதியளித்துள்ளது. இதன் விளைவாக, கடல் மடை திறந்ததைப்போல் சீனாவிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்துகொண்டுள்ளன. எனவே, சர்வதேச நிதி வட்டாரங்களில் சீனாவானது புதிய உலக முதலாளித்துவ தொழிற்துறை சக்தியாக உருவாகி வருவதாக மிகவும் மகிழ்வோடு கணிப்புகள் வெளியிடப்படுகின்றன.

பிரிட்டனின் எக்கானமிஸ்ட் என்ற முன்னணி பத்திரிகையின் அக்டோபர் பதிப்பானது சீனாவின் தென்பகுதியிலுள்ள குவான்டான் மாகாணத்தை வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த மாகாணம் ஹொங்காங் பகுதியை ஒட்டியிருப்பதுடன், நாட்டின் பாரிய ஏற்றுமதி பிராந்தியமாகவும் உள்ளது. ''உலகின் தொழிற் பட்டறை என்று 19 ம் நூற்றாண்டில் பாராட்டப்பட்ட மான்செஸ்டருக்கு'' இணையாக இந்த மாகாணம் கருதப்படுவதாக இப் பத்திரிகை பாராட்டியுள்ளது.

இதே அடிப்படையில் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் என்ற பத்திரிகை மிகுந்த உற்சாகத்தோடு சீனாவை பாராட்டியுள்ளது. ''முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஏழை நாடு என்று புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சீனா, உலக தொழிற்கூட பட்டறையாக உருமாறி வந்துகொண்டிருக்கிறது. நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் 100 மில்லியன் பேருக்கு மேல் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களது எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்துகொண்டு வருகின்றது. தற்போதுகூட எந்த நாட்டையும் விட சீனா அதிக அளவிற்கு கைத் தொலைபேசிகளை வாங்குகிறது. அதன் வளர்ந்து வரும் தொழிற்துறை மூலப் பொருட்கள், இயந்திரச் சாதனங்கள், உயர் தொழில்நுட்பக் கருவிகளை பெருமளவிற்கு வாங்குகின்ற பிரிவாக உருவாகி வருகிறது'' என்று இப் பத்திரிகை எழுதியிருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து செயல்படும் புரூகிங்ஸ் நிறுவனத்திலுள்ள பேராசிரியரான நிக்கோலஸ் லார்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''சீனாவின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக பெருக்கம் என்பது நவீன பொருளாதார வரலாற்றில் இதுவரையில்லாத சாதனையாகும். இதன் விளைவாக, சீன மக்களது வருமானமும், வாழ்க்கைத்தரமும், வரலாறு காணாத அளவிற்கு வளர்ந்துகொண்டு வருகிறது. அத்துடன் பிற நாடுகளுக்கு அது ஒரு சவாலாகவும் அமைந்திருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

வோல் ஸ்ரீட் ஜெர்னல் பத்திரிகையானது, தனது செய்தியில் உலகில் உற்பத்தியாகும் புகைப்படக் கருவிகளில் (cameras) 50 வீதமும், குளிரூட்டும் கருவிகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளில் 50 வீதமும், சலவை இயந்திரங்களில் 25 வீதமும், குளர் சாதனப் பெட்டிகளில் 20 வீதமும் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. அல்லது பொருத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறது. மோர்கன் ஸ்டான்லி முதலீட்டு நிறுவனத்தில் ஹொங்காங் பகுதியின் பொருளாதார ஆய்வாளராக பணியாற்றிவரும் ஆன்ட்டி லீ, இந்தப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ''அமெரிக்கா தொழில் மயமான நேரத்தில் எத்தகைய தாக்கம் உலகில் ஏற்பட்டதோ, அதே அளவிற்கு சீனா தொழில் உற்பத்தி அடித்தளமாக வளர்ந்து உருவாகும். சில சமயம் அதைவிட பெரிய தாக்கமே ஏற்படும்'' என்று கூறினார்.

ஆனால் சீனா, பிரிட்டன் 19 வது நூற்றாண்டில் அல்லது அமெரிக்கா 20 வது நூற்றாண்டில் ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்களை சீனாவும் சந்திக்கிறது என்று சொல்பவர்கள் சில அடிப்படை உண்மைகளை புறக்கணித்துவிட்டார்கள். தொழிற்துறை வளர்ச்சி மற்றும் தொழிற்துறை உற்பத்தி மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்துகொண்டு செல்வது என்பது நேரடியான வெளிநாட்டு முதலீடுகள் சீனாவிற்குள் வருவதை சார்ந்துள்ளதாகும். மேலும், மலிவான விலையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன. உலகின் புதிய தொழிற்சாலை என்பதைவிட, மிகப்பெரிய உலக கூட்டுத்தாபனங்களுக்கு வியர்வையையும், கண்ணீரையும் தருகின்ற பெரிய தொழிற்சாலையாகவும், கசாப்புக் கடையாகவும் சீனா விளங்குகிறது.

1990 களில் சீனாவில் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இந்த வளர்ச்சியானது உள்நாட்டில் நுகர்வோர் சந்தை விரிவானதாலோ அல்லது உள்நாட்டு தொழில் வளர்ச்சியாலோ கிடைத்தது அல்ல. மாறாக ஏராளமான தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் பணிகளுக்கு கிடைத்தார்கள். வரி விதிப்பு மிகக் குறைவாக இருந்ததுடன், கடுமையான போலீஸ் அரசாங்க ஒழுங்குமுறைகள் சீனாவில் கடைபிடிக்கப்பட்டன. இதனால் சீனா, நாடுகடந்த கூட்டுத்தாபனங்களால் தலை சிறந்த கவர்ச்சிகரமான முதலீட்டு மையம் என்று வரவேற்கப்பட்டது.

1990 களின் தொடக்கத்திலிருந்து 800 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் சீனாவில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் மிகப்பெரும்பாலானவை சீனாவின் கடற்கரைப் பகுதியில் சங்கிலித் தொடர்போல் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் சில்லரை விற்பனையில் மிகப்பெரும் நிறுவனமாக விளங்குகின்ற வால்-மார்ட் அங்காடிகள் (Wal-Mart Stores) சென்ற ஆண்டு தனது சீன துணை நிறுவனங்களிடமிருந்து 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு பொருட்களை வாங்கியிருக்கின்றன. இது சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் மொத்த பொருட்களில் 13 வீதமாகும். பிலிப்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சீனாவில் 23 தெழிற்சாலைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மேற்கு நாடுகளின் சந்தைகளுக்கு 5 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட அளவிற்கான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சீனாவின் தொழிற்நுட்ப ஏற்றுமதிகளில் 81 வீதம் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகிறது. பூகோள சந்தையில், இத்தகைய சீன தொழில்நுட்ப ஏற்றுமதிகளின் பங்கு DVD பிளேயர்களில் 54 வீதமாகவும், கைத்தொலைபேசிகளில் 28 வீதமாகவும், டிஜிட்டல் காமராக்களில் 13 வீதமாகவும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் 30 வீதமாகவும், கம்ப்யூட்டர் நோட்டுப் புத்தகங்களில் 12 வீதமாகவும், வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளில் 28 வீதமாகவும் அமைந்துள்ளன. நாடுகடந்த நிறுவனங்களும் அவர்களது உள்ளூர் தரகர்களும் எந்திரச் சாதனங்கள், புடவைகள் போன்ற இதர சீன ஏற்றுமதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

டிசம்பர் வரை சீனாவின் வெளி வர்த்தகம் 2001 ம் ஆண்டிலிருந்து 21 வீதம் அதிகரித்து 620 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொட்டதால், சீனா உலகின் ஐந்தாவது பெரிய வர்த்தக நாடு என்ற நிலைக்கு வந்தது. சீனாவின் ஏற்றுமதிகள் இந்த ஆண்டு டிசம்பர் வரை, 266.2 பில்லியன் டொலர்களாக இருந்தது. இறக்குமதிகள் 212.6 பில்லியன் டொலர்களாக இருந்தது. இறக்குமதிகள் 17.2 வீதம் அதிகரித்த போதிலும், சீனாவின் இறக்குமதிகள் தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. ஏனெனில், இறக்குமதிகளில் பாதிக்கு மேற்பட்டவை ஏற்றுமதிக்கான பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுபவை ஆகும். இதை வேறு வார்த்தைகளில் கூறினால், சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்குத் தேவைப்படும் ஆயத்த உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களே இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதாகும்.

அமெரிக்காவில் செயல்படும் பொருளாதார நிபுணர் குழுவான ஹாலி ஆலோசகர்களின் LLC மற்றும் சீனா ஆன்லைன் என்பன ஜனவரி 15 ந்தேதி பிரசுரித்துள்ள அறிக்கையில் ''15 ஆண்டுகளுக்கு முன்னர், ஆசிய நாடுகளுக்கிடையில் வர்த்தகம் மிக எளிதாக நடைபெற்றது. முதலீட்டுப் பொருட்களும், உபகரணங்களும், ஜப்பானிலிருந்து புதிதாக தொழில் வளர்ச்சியடைந்து கொண்டுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அவை அங்கு பக்குவப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட பொருட்களாக, தொழில் வளர்ச்சி கண்ட நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்பட்டன. சீனாவில் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், இந்த வகையில் புதிய தொடர்பு இணைப்புகள் கிடைத்தது. தற்போது முதலீட்டுப் பொருட்கள், தாய்வானுக்கும், கொரியாவிற்கும் அனுப்பப்படுகின்றன. இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் முதலீடு அதிகம் தேவைப்படும் தொழிற்துறை இடுபொருட்கள் சீனாவிற்கும், கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஊழியர்கள் அதிகம் தேவைப்படும், தயாரிப்பு மற்றும் பொருத்தும் பணிகளுக்காக அனுப்பப்பட்டு, கடைசியில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், வளர்ந்துவிட்ட சந்தைகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்படுகின்றன'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சமூகம் தரும் விலை என்ன?

உலகின் கவர்ச்சிமிக்க, குறைந்த ஊதியத்தில் கடும் உழைப்பை வாங்கும் தொழிற்சாலைதான் சீனா என்ற நிலையை உருவாக்குவது, பெய்ஜிங்கில் செயல்பட்டு வரும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தலையாய பணியாக அமைந்திருக்கிறது. பல நாடுகடந்த கூட்டுத்தாபனங்கள் லத்தீன் அமெரிக்கா அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து தொழிலாளர் அதிகம் தேவைப்படும் தங்கள் தொழிற்சாலைகளை சீனாவிற்கு மாற்றிவிட்டன. ஏனெனில், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் பிற நாடுகளைவிட இங்கு மிகக் குறைவாக இருப்பதுடன், இதர நிதிச் சலுகைகளும் இங்கு கிடைக்கின்றன. இதனால் பல நாடுகளில் சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மெக்சிக்கோவில் 2001 முதல், 230.000 தொழிலாளர்கள் தமது வேலைகளை இழந்துவிட்டனர். இவர்கள் பணியாற்றிய தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை சீனாவிற்கு மாற்றப்பட்டுவிட்டன.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கக் கூட்டம் (Association of South East Asian Nations- ASEAN) நவம்பரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல அரசாங்கங்களும், வர்த்தகத் தலைவர்களும் சீனாவில் முதலீடுகளைக் கவருவதற்காகவும், எற்றுமதி மாக்கெட்டுகளைப் பிடிப்பதற்காகவும், கழுத்தறுப்பு போட்டிகளில் ஈடுபட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சீன மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைந்த வருவாயில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். சராசரி தொழிற்சாலை ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 40 அமெரிக்க சதங்களாக (40 US cents) இருக்கின்றன. இது மெக்சிக்கோவில் வழங்கப்படும் ஊதியத்தில் ஆறில் ஒரு பங்காகவும், அமெரிக்க தொழிலாளர் ஊதியத்தில் 40 ல் ஒரு பங்காகவும் இருக்கின்றது.

பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், ''சிங்கப்பூர், மலேசியா, மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொழில்துறைக்குத் தேவைப்படுகிற அளவிற்கு தொழிலாளர்கள் கிடைக்காத காரணத்தினால், ஊழியர் ஊதிய வீதங்கள் ஏறுமுகப்போக்கில் சென்றன. ஆனால் சீனாவில், தொழிலாளர் கிடைப்பது ''அள்ள, அள்ளக் குறையாத வளமாக உள்ளது'' என்று குறிப்பிட்டிருந்தது. இந்த அள்ளக் குறையாத தொழிலாளர் வளமானது மிகப்பெரும் சமுகப் பாதிப்புகளால் உருவானவை. அரசிற்குச் சொந்தமான தொழிற்சாலைகளில், ஒரு காலத்தில் பணியாற்றிய 40 மில்லியனுக்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் சீரமைப்பு மற்றும் ஆலை மூடல்கள் காரணமாக தமது வேலைகளை இழந்துவிட்டனர். உள்நாட்டுச் சந்தையில் ஒவ்வொரு பிரிவிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் புகுந்து போட்டியை ஏற்படுத்துவதால், மேலும் கோடிக்கணக்கான மக்கள் தமது வேலைகளை இழந்து வருகின்றனர்.

சீனாவின், கிராமப்புறங்களில் வேளாண்மைப் பொருட்களின் விலை நிர்ணயம் ரத்துச் செய்யப்பட்டு விவசாய உற்பத்தியும் சுதந்திரமாக நடைபெறும் நிலை ஏற்பட்டதால், 1980 களின் மத்தியிலிருந்து, கோடிக்கணக்கான சீன விவசாயிகள் இடம்பெயர்ந்துள்ளனர். மனித இன வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத அளவிற்கு 150 மில்லியன் சீன விவசாய, கிராமத்து மக்கள் ஏதாவதொரு வேலை தேடி நகரப் பகுதிகளில் குடியேறிவிட்டனர். இவர்கள் நகரங்களில் எவ்வளவு கூலி கிடைத்தாலும் பணியாற்றத் தயாராக உள்ளனர். அதே நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகளிலிருந்து படித்து முடித்து வரும் 5 லிருந்து 10 மில்லியன் இளைஞர்கள் வேலை தேடும் தொழிலாளர் வரிசையில் புதிதாகச் சேர்ந்தும் வருகின்றனர்.

சீனா மிகப்பெரும் மக்கள் தொைைகயைக் கொண்ட நாடாக இருந்தாலும், இதன் உள்நாட்டுச் சந்தை மிகச் சிறியது. சீனாவில் தயாராகும் பொருட்களை வாங்கும் வசதி மிகப்பெரும்பாலான மக்களுக்கு இல்லை. உலகிலேயே மிக மலிவாகக் கிடைக்கும் சீனாவின் தொழிலாளர் உழைப்பை, சமூகத்தின் ஒரு சிறிய குழுவினர்தான் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். சென்ற நவம்பரில், வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்களின்படி தற்போது, சீனாவில் 2 மில்லியனுக்கும் சற்று அதிகமான தனியார் நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இந்தத் தொழில் நிறுவனங்களில் 70 மில்லியன் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் மொத்த உற்பத்தி 232 பில்லியன் டொலர்கள் ஆகும். ஆனால், 1988 ஆம் ஆண்டில் இங்கு 8 லட்சம் தனியார் கம்பெனிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன.

நகரப் பகுதிகளில் சராசரி ஆண்டு வருமானம் 1.200 டொலர்களாக இருக்கின்றன. சீன மக்களில் 5 முதல் 7 வீதம் பேர் - பிரதானமாக, சிறு வர்த்தக உரிமையாளர்கள், வசதியான விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் - ஆண்டிற்கு 3,000 முதல் 12,000 டொலர்கள் வரை சம்பாதிக்கின்றனர். 1 வீதமான, கிட்டத்தட்ட 12 மில்லியன் பேர்கள் 20.000 டொலர்கள் வருமானத்தைக் கொண்டிருக்கின்றனர். எண்ணிக்கையில் சிறு தொகையாக உள்ள முதலாளித்துவ தொழில் உரிமையானர்கள், பூகோள நிறுவனங்களோடு நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்போர் மற்றும் பெய்ஜிங் அதிகாரத்துவ தலைமையோடு நெருக்கமாக உள்ளவர்கள் மிகப்பெரும் அளவிற்கு செல்வத்தை குவித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது, சீனாவில் பத்து மில்லியன் டொலர்களுக்குமேல் சொத்துக்களை வைத்திருக்கும் தனி நபர்கள் 10,000 பேர்களாகும்.

நகரப் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்துகொண்டு வருகின்றன. 88 வீதமான வெளிநாட்டு முதலீடுகள் சீனாவின் தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரை நகரங்களுக்கு வந்துகொண்டிருக்கின்றன. வெளிநாட்டு முதலீடுகளில், 9 வீதம் வளர்ச்சி குன்றிய மத்திய பிராந்தியத்திற்கும் மேலும் 4.6 வீதம் மேற்குப் பிராந்தியத்திற்கும் செல்கின்றன. சீனாவின் மொத்த பொருள் உற்பத்தியில் 57 வீதம் கிழக்குப் பகுதியில் தயாராகின்றது. இது மத்திய பிராந்தியத்தில் 26 வீதமாகவும், மேற்குப் பிராந்தியத்தில் 17 வீதமாகவும் உள்ளன.

வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப, சீனாவின் பொருளாதார வளர்ச்சி முழுமையாக முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், 19 வது நூற்றாண்டுக் கடைசியிலும், 20 வது நூற்றாண்டின் தொடக்கத்திலும் சீனா உலகின் பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு ஓரளவு காலனியாக விளங்கிய காலத்தைவிட தற்போது வெளிநாட்டு முதலீடுகளின் ஆதிக்கம் சீனாவின் பொருளாதார வாழ்வில் அதிகமாக இருக்கின்றது.

சீனா, பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறித்து மூத்த பொருளாதார அதிகாரி ஒருவர் செப்டம்பர் 3 ந் தேதி, பீப்பில்ஸ் டெய்லி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''முதலாவதாக, தொழில் வள நாடுகள் அவற்றின் பெரும் தொழில் நுடபங்களை சார்ந்திருக்கின்றது. இரண்டாவதாக, சீனாவின் பொருட்கள் உற்பத்தி இன்னும் மிக குறைந்த அளவிலேயே உள்ளன. மூன்றாவதாக, தொழில்வள ஆதாரங்கள் குறைவாக இருப்பதால் வெளிநாடுகளைச் சேர்ந்த மூலப்பொருட்களுக்கு சீனாவில் பெரிய கிராக்கி உள்ளது. இவற்றில் முக்கியமானது, 100 வீதமான நாரிழைக் கண்ணாடி (fibre optics), 80 வீதமான எண்ணெய், 57 வீதமான இயந்திர சாதனப் பொருட்கள் ஆகியவற்றை சீனா இறக்குமதி செய்து வருகிறது. நான்காவதாக, சீனாவை தலையிடமாகக் கொண்ட சர்வதேச தொழிற்சாலைகள் எதுவும் இல்லை'' என்று குறிப்பிட்டார்

சர்வதேச வர்த்தக அமைப்புடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உள்நாட்டு சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்துவிட்டதற்கு முக்கியமான காரணம் சர்வதேச முதலீட்டை சீனா சார்ந்திருப்பதுதான் என்பதாகும். வெளிநாட்டு முதலீடுகளின் அளவு குறைந்துவிடக்கூடாது என்பதில் சீனா மிகவும் தீவிரமாக உள்ளது. சென்ற ஆண்டு முதல் ஒன்பது மாதங்களில் சீன அரசாங்கம் 24.771 வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இது முந்திய 2001 ல் இதே காலத்தில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளைவிட 33.4 வீதம் அதிகமாகும். வெளி வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தயாரித்துள்ள புள்ளி விபரங்களின்படி கடந்த 10 மாதங்களில், 55 பில்லியன் டொலர் அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகள் புதிதாக வந்திருக்கின்றன.

சீனாவில் வெளிநாட்டு நிதி உதவி பெற்று நடைபெற்றுவரும் கம்பெனி உதவியாளர்கள் பெருமளவிற்கு லாபம் சம்பாதித்து வருகின்றனர். அத்தகைய கம்பெனிகளின் உரிமையாளர்களுக்கு 2002 ம் ஆண்டில் லாப பங்கீட்டுத் தொகையாக 27 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டன. 1996 ல் இது 6 பில்லியன் டொலர்களாகவே இருந்தது. கார்கள், தொலைபேசிகள் போன்ற சாதனங்கள் முதல் சில்லரை வர்த்தகம் வரை தற்போது சீனச் சந்தையில் நாடுகடந்த கூட்டுத்தாபனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சீனா, சர்வதேச வர்த்தக அமைப்பில் உறுப்பினராக சேர்ந்துகொண்டதன் விளைவாக வெளிநாட்டு நிறுவனங்கள், இதன் பங்கு மற்றும் நிதிச் சந்தைகளில் பெரும் அளவிற்கு பங்குபெறுவதற்கு திடீர் என்று வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இதற்கு முன்னர் ஏ-இன்டெக்ஸ் (A-index) பங்குகளில் சீனாவின் உள்நாட்டு கம்பெனிகள் மற்றும் பெரும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு இருந்து வந்தது. தற்போது இந்த நிறுவனங்களிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சக்தி மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பான ''கேந்திர'' தொழில் கூட்டுத்தாபனங்களில் இப்போது வெளிநாட்டவரும் முதலீடு செய்யலாம். சீனாவின் அரச வெளிநாட்டு நாணயமாற்று நிறுவனம், பங்குச் சந்தைக்கான முதலீடுகளின் குறைந்தபட்ச வரம்பு 50 மில்லியன் டொலர்கள் என்று நவம்பரில் அறிவித்தது. இந்த நடவடிக்கையானது பெரிய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

சர்வதேச அளவில் ஏற்படுகின்ற பொருளாதார இறங்கு முகபோக்கு, சீன பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். ஏற்கெனவே பொருளாதார ஆய்வாளர்கள் இது சம்மந்தமாக புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். சீனாவில் ஏற்றுமதிகள், 2000 ல் 27.8 வீதமாகயிருந்தது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, 2001 ல் ஏற்றுமதிகள் 6.8 சதவிகிதமாக குறைந்தது. தற்போது அமெரிக்க, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் வளர்ந்து வருகின்றன. அதன் விளைவாக பொருள்கள் விற்பனை குறைந்து சீனாவில் ஏற்றுமதிகள் கடுமையாக குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சீனாவின் அரசாங்க புள்ளி விபரக்குழுவைச் சார்ந்த கொங் லீயான் என்பவர் சென்ற மாதம் Dow Jones Business News பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சென்ற ஆண்டு 7.9 வீதமாகயிருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு, 7.5 வீதமாக குறைந்துவிடும். ''ஈராக்குடன் அமெரிக்கா போருக்குச் செல்வதாலும், வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்துகொண்டு வருவதாலும், கிராம மக்களது வாங்கும் சக்தி பலவீனமாகயிருப்பதாலும், பொருளாதார வளர்ச்சி குறையும்'' என்று விளக்கியிருந்தார்.

சீனா உலகின் புதிய தொழிற்துறை உந்து சக்தி என்பது வெறும் கற்பனை என்பதை அதன் பொருளாதார மந்தநிலை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தநிலையானது சமூக, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியே தீரும். இவற்றிற்கு எல்லாம் மேலாக வறுமையில் வாடிக்கொண்டுள்ள மிகப்பெரும்பாலான மக்களுக்கும், ஆட்சியின் அரவணைப்பை பெற்றுள்ள, சர்வதேச முதலீடுகளால் பயன் அடைந்து வரும் சிறிய குழுவினருக்கும் இடையே புகைந்துகொண்டுள்ள சமூகக் கொந்தளிப்புகள் வெடித்துச் சிதறி வெளியில் வந்துவிடும்.

See Also :

புதிய சீனத்தலைமையின் விவரக்குறிப்புகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ செல்வந்தத் தட்டுக்கு கதவு திறக்க தானே அறிவிப்பு

Top of page