சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
(இலங்கை)

WSWS : Tamil : நூலகம்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11
பகுதி 12
 

 

 
The New Course 1923
 

The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part  10

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 10

By the the Socialist Equality Party (Sri Lanka)
5 April 2012

Use this version to print | Send feedback

23. 1985-1986 தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவு

23-1. 1985 ஜனவரியில் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பத்தாவது மாநாட்டில் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட இரு விடயங்கள் செல்வாக்கு செலுத்தின: முதலாவது, பிரிட்டனின் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் நிலவிய ஒரு அழிவுகரமான அரசியல் நெருக்கடி, மற்றும் இரண்டாவது, அதற்கு முந்தைய மூன்று வருடங்களில் அமெரிக்காவின் வேர்க்கர்ஸ் லீக்கினால் (Workers League) எழுப்பப்பட்டிருந்த அடிப்படையான அரசியல் வேறுபாடுகளை ஒடுக்குவது பற்றியதாகும். இவை இரண்டில் எதுவுமே கலந்துரையாடப்படவில்லை. பப்லோவாதத்திற்கு எதிரான தனது முந்தைய கொள்கைரீதியான போராட்டத்தை தொழிலாளர் புரட்சிக் கட்சி கைவிட்டுக்கொண்டிருந்த போது, வேர்க்கர்ஸ் லீக் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. 1974ல் தேசியச் செயலாளரான ரிம் வோல்ஃபோர்த் வெளியேறியதை அடுத்து, வேர்க்கர்ஸ் லீக் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திடமாகத் திரும்பியதோடு பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தை கட்சி வேலையின் மத்தியில் இருத்தியது. அனைத்து பப்லோவாதக் குழுக்களாலும் கடுமையாக எதிர்க்கப்பட்ட “பாதுகாப்பும் நான்காம் அகிலமும்” என்ற விசாரணையில் வேர்க்கர்ஸ் லீக் தலைமை பாத்திரம் வகித்தது. இந்த விசாரணை, ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பொறுப்பான ஸ்ராலினிச முகவர்கள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் கொண்டிருந்த வலையமைப்பை அம்பலப்படுத்தியது. சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜோசப் ஹான்சன் ஒரு ஸ்ராலினிஸ்டாக இருந்து, பின்னர் எஃப்.பி.ஐ.யின் (FBI -அமெரிக்க புலனாய்வுத் துறை) முகவராகி இருந்தார் என்பதற்கான முடிவான ஆதாரத்தை அது வழங்கியிருந்தது.

23-2. 1982ல், வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலரான டேவிட் நோர்த், ஜெரி ஹீலியின் “இயங்கியல் சடவாதத்திலான கற்கைகள்” குறித்து விரிவான விமர்சனங்களை முன்வைத்து, அது மார்க்சின் இயங்கியல் மற்றும் வரலாற்று சடவாதத்தை கைவிடுவதை பிரதிநிதித்துவம் செய்கின்றது என வெளிப்படுத்தினார். “இயங்கியல் சடவாதத்திற்கானதும் மற்றும் பிரச்சாரவாதத்திற்கு எதிரானதுமான போராட்டம் என்ற பெயரில்” ட்ரொட்ஸ்கிசத்திற்கான, குறிப்பாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கான போராட்டத்தில் இருந்து ஒரு தொடர்ச்சியான விலகல் இருந்து வந்தது என்பதை நோர்த் சுட்டிக் காட்டினார்.  நோர்த் தனது விமர்சனங்களைத் திரும்பப் பெறாவிட்டால் வேர்க்கர்ஸ் லீக் உடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவிருப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைமைத்துவம் இதற்குப் பதிலிறுத்தது. 1984 ஜனவரியில் தொழிலாளர் புரட்சிக் கட்சி பொதுச் செயலரான மைக் பண்டாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து, குறிப்பாக மத்திய கிழக்கு விடயத்தில், மேலும் பகுப்பாய்வை செய்திருந்த நோர்த், “முடிவுகளிலும் சரி வழிமுறைகளிலும் சரி, வரலாற்றுரீதியாக நாம் எவற்றையெல்லாம் பப்லோவாதத்துடன் தொடர்புபடுத்தியிருந்தோமோ அவற்றை ஒத்த நிலைகளை நோக்கிய ஒரு அரசியல் சரிவின் பெருகிவரும் அறிகுறிகளால்” வேர்க்கர்ஸ் லீக் ஆழமாக கவலையுற்றுள்ளது என தெரிவித்திருந்தார். 1984 பெப்பிரவரியில், நோர்த் அனைத்துலகக் குழுவுக்கு வழங்கிய அரசியல் அறிக்கை, 1982 டிசம்பரில் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை சந்தேகத்திற்கிடமின்றி கைவிட்டதன் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்வதுடன் தொடங்கியது. மத்திய கிழக்கின் முதலாளித்துவ ஆட்சிகளுக்கு மட்டுமன்றி பிரிட்டனின் தொழிற்கட்சி இடதுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் கூட தொழிலாளர் புரட்சிக் கட்சி அடிபணிந்துள்ளதை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். மீண்டும் வேர்க்கர்ஸ் லீக் உடன் முறித்துக் கொள்வதற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி அச்சுறுத்தியதோடு எந்தவொரு கலந்துரையாடலையும் தடைசெய்தது. கூட்டத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பிரதிநிதித்துவம் செய்யாததோடு அந்த கலந்துரையாடல் குறித்தும் அதற்கு அறிவிக்கப்படவில்லை.  

23-3. 1985ல் பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்களின் நீண்டகால வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் வெடித்த நெருக்கடி, அது அனைத்துலகக் குழுவிடமிருந்து முறித்துக் கொள்வதற்கும் அதன் அரசியல் சீரழிவுக்கும் துரிதமாக வழிவகுத்தது. 1985 அக்டோபரில் கீர்த்தி பாலசூரியா லண்டன் சென்றதோடு தொழிலாளர் புரட்சிக் கட்சி மீதான டேவிட் நோர்த்தின் விமர்சனங்களைப் பற்றி அப்போதே அவர் முதல் முறையாக தெரிந்துகொண்டார். ஆஸ்திரேலியாவின் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) மற்றும் ஜேர்மன் சோசலிச தொழிலாளர் கழக (BSA) பிரதிநிதிகளுடன் சேர்ந்து, நோர்த்தின் ஆய்வுக்கு தமது உடன்பாட்டை அவர் வெளிப்படுத்தினர். 1985 அக்டோபர் 25 அன்று, ஜெரி ஹீலியின் வெளியேற்றம் பற்றியும் பிரிட்டிஷ் பகுதியின் நெருக்கடி பற்றியும் அனைத்துலகக் குழு இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. இந்த அரசியல் நெருக்கடியின் தோற்றுவாய், “தொழிலாளர் புரட்சிக் கட்சித் தலைமை, நீண்டநாட்களாக சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்பும் மூலோபாயக் கடமையிலிருந்து விலகி, தேசியவாத முன்னோக்கு மற்றும் நடைமுறை வேலைகளை நோக்கி அதிகளவு முன்நகர்ந்தமையே” ஆகும் என இரண்டாவது அறிக்கை அடையாளம் கண்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தை வெளிப்படையாக அங்கீகரிப்பதுடன் அதன் முடிவுகளுக்கும் பிரிட்டிஷ் பகுதி கீழ்ப்படிகின்ற அடிப்படையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி தனது உறுப்பினர்களை பதிவு செய்ய வேண்டும் என அனைத்துலகக் குழு தீர்மானித்தது.

23-4. 1985 டிசம்பர் 16 அன்று, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நிதி கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக அனைத்துலகக் குழு தனது கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கையை பெற்றது. அது கண்டுபிடித்தவற்றுக்கு பதிலிறுத்த அனைத்துலகக் குழு, தொழிலாளர் புரட்சிக் கட்சியானது அனைத்துலகக் குழுவையும் அனைத்துலக தொழிலாள வர்க்கத்தையும் வரலாற்று ரீதியில் காட்டிக்கொடுத்துவிட்டதாக பிரகடனம் செய்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தக் காட்டிக்கொடுப்பு, “பணத்துக்குப் பிரதியுபகாரமாக காலனித்துவ முதலாளித்துவ தட்டுக்களுடன் கொள்கையற்ற உறவுகளை கொண்டிருந்ததன் விளைவாக, நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை முழுமையாகக் கைவிட்டதை உள்ளடக்கியுள்ளது” என அது தெரிவித்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் 8வது காங்கிரசை தொடர்ந்து நடக்கவிருந்த அனைத்துலகக் குழுவின் அவசர மாநாடு வரை, தொழிலாளர் புரட்சிக் கட்சியை இடைநீக்கம் செய்வதற்கு அனைத்துலகக் குழு தீர்மானித்து. மறு நாள், அனைத்துலகக் குழுவின் இன்றியமையாத வேலைத்திட்ட அடித்தளங்களையும் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று ரீதியான சரியான தன்மையையும் மறு உறுதி செய்து, இன்னுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்ட கோட்பாடுகளின் மத்திய முக்கியத்துவத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இடைநீக்கம் தீர்க்கமானதாக இருந்தது. இந்த அடிப்படைப் பிரச்சினைகளில் எந்த சமரசமும் இருக்க முடியாதென்பதை இந்தத் தீர்மானம் தெளிவாக்கியதோடு தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள்ளான நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரு கொள்கைரீதியான அடித்தளத்தையும் அது ஸ்தாபித்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சி பிரதிநிதிகளில், டேவிட் ஹைலன்ட் மட்டுமே தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியினுள் ஹைலன்டின் தலமையிலான சிறுபான்மைக் குழுவே பின்னர் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியை அமைத்தது. பண்டா-சுலோட்டர் கன்னை ஹீலியுடன் மோதிக்கொண்டாலும், அவர்களும் அதே சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத முன்னோக்கினையே அடிப்படையில் பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பதை அந்தக் கன்னையின் எதிர்ப்பு வெளிப்படுத்தியது.

23-5. டேவிட் நோர்த்துக்கு சுலோட்டர் எழுதிய கடிதத்தில், அனைத்துலகக் குழுவின் ஆளுமையை தொழிலாளர் புரட்சிக் கட்சி ஏற்கவேண்டுமென்பதை எதிர்த்தார். சர்வதேசியவாதம் என்பது “வர்க்க நிலைப்பாட்டை வரைவதும் அதற்காக போராடுவதுமாகும்” என அவர் வலியுறுத்தினார். வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு எழுதிய பதிலில் பின்வரும் கேள்விகள் எழுப்பப்பட்டன: “ஆனால் இந்த ‘வர்க்க நிலைப்பாட்டை’ தீர்மானிக்கும் நிகழ்முறை எது? அதற்கு நான்காம் அகிலத்தின் இருப்பு அவசியமாயுள்ளதா?... நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு என்பது ‘ட்ரொட்ஸ்கிசத்தின், மார்க்ஸ் மற்றும் லெனினது மார்க்சிசத்தின் ஒட்டுமொத்த வேலைத்திட்ட அடித்தளத்தின்’ வரலாற்று வடிவமாகும். தேசியப் பிரிவுகள் அனைத்துலகக் குழுவின் ஆளுமைக்குட்படுவது அந்த வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் கொண்டுள்ள உடன்பாட்டின் ஒழுங்கமைந்த வெளிப்பாடே ஆகும். மார்க்சிசக் கோட்பாடுகளின் மற்றும் வேலைத்திட்டத்தின் சமகால அபிவிருத்தியாக ட்ரொட்ஸ்கிசத்தை உறுதியாக கடைப்பிடிக்கும் கட்சிகள், நான்காம் அகிலத்தில் ஒழுங்கமைந்துள்ளதோடு அவை அனைத்துலகக் குழுவின் ஆளுமையை ஏற்றுக் கொள்கின்றன. ஒருவர் அமைப்புரீதியான வெளிப்பாட்டில் இருந்து வேலைத்திட்டத்தை பிரிப்பதையே சர்வதேசியவாதத்தின் வரையறையாகக் கொள்வார் எனில், அது தங்களது நடவடிக்கைகளுக்கான அரங்கில் செயற்படும் சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, அனைத்துலகக் குழுவில் பொதிந்துள்ள மார்க்சிசத்தின் தொடர்ச்சியை மறுக்கின்ற, ட்ரொட்ஸ்கிசத்தின் திருத்தல்வாத மற்றும் மத்தியவாத எதிரிகள் அனைவரதும் நிலைப்பாட்டுக்கு அடிபணிவதாகும்”.[54]

23-6. “அனைத்துலகக் குழு இத்தோடு புதைக்கப்பட்டு நான்காம் அகிலம் கட்டியெழுப்பப்பட வேண்டியது ஏன் என்பதற்கான 27 காரணங்கள்”, என்ற தலைப்பிலான பண்டாவின் ஆவணத்தின் அடிப்படையில், 1986 பிப்ரவரி 8 அன்று நடந்த அதன் பிரதிநிதித்துவம் அற்ற மாநாட்டில் அனைத்துலகக் குழுவில் இருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சி பிரிந்தது, அந்த ஆவணம் ப்லோவாதத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் கைவிட்டிருந்தது. அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் அனைவரும் மாநாட்டில் இருந்து விலக்கப்பட்டனர். சில மாதங்களிலேயே, பண்டா ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்து, சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சி என்பது சாத்தியமற்றது என்று பிரகடனப்படுத்தியதோடு ஸ்ராலினை அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைப் பாதுகாத்த அவசியமான பொனபார்ட்டிசத் தலைவர் என்று புகழ்ந்தார். 1985-86ல் அனைத்துலகக் குழுவில் இருந்து பிரிந்த அனைவரையும் பற்றி தெளிவாக ஆய்வு செய்த பின், ஒரு வருடம் கழித்து அனைத்துலகக் குழு பின்வரும் முடிவுக்கு வந்தது: “அனைத்துலகக் குழுவுக்கு விரோதமான போக்குகள் அனைத்தினதும் பிரதான நோக்குநிலை முழுக்க முழுக்க ஸ்ராலினிசத்துக்கும் சமூக ஜனநாயகத்துக்கும் அடிபணிவதும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிராகரிப்பதும் மற்றும் முதலாளித்துவத் தட்டுக்களுடன் மக்கள் முன்னணிக் கூட்டணிகளில் பங்கேற்பதை நோக்கி முன்னெப்போதையும் விட திடமாக நோக்குநிலை வகுப்பதுமாகும்.” [55]

23-7. அனைத்துலகக் குழுவிலான பிளவானது உலக முதலாளித்துவத்தின் பொருளாதார அடித்தளத்திலும் அதன் அரசியல் மேற்கட்டுமானத்திலும் ஏற்பட்டிருந்த ஆழமான மாற்றங்களின் ஒரு பிரதிபலிப்பு ஆகும். 1970களின் பிற்பகுதியில் ஆரம்பித்த, உற்பத்தி நடவடிக்கைகளிலான பூகோளரீதியான ஒருங்கிணைப்பு மற்றும் ஆசியாவில் மலிவு உழைப்புக் களங்களிலான சுரண்டலும், போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாதத் தலைமைகள் தங்கியிருந்த தேசியப் பொருளாதார ஒழுங்கு வேலைத்திட்டங்களை கீழறுத்திருந்தன. தொழிலாள வர்க்கத்தின் மீதான இத்தகைய அதிகாரத்துவ எந்திரங்களின் மேலாதிக்கத்திற்கு சந்தர்ப்பவாத முறையிலான அடிபணிவின் விளைவாகவே நான்காம் அகிலத்திற்குள் பப்லோவாதம் எழுந்தது. பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைப் பாதுகாத்தது ஆனால் குறிப்பாக 1963ல் பப்லோவாதிகளுடன் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி மீண்டும் இணைந்ததாலும், 1971ல் பிரான்சின் சர்வதேச கம்யூனிச அமைப்புடன் (OCI) பிளவடைந்ததாலும் அதிகளவு தனிமைப்படலை எதிர்கொண்டது. தேசியவாத நோக்குநிலையை சோசலிச தொழிலாளர் கழகம் மேலும் மேலும் எடுத்ததனால் அது, 1953 மற்றும் 1961-63 பிளவுகளின் படிப்பினைகளை அடித்தளமாகக் கொண்டு 1960கள் மற்றும் 1970களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டிருந்த அனைத்துலகக் குழுவின் புதிய பகுதிகளில் இருந்து விலகிச் செல்லத் தொடங்கியது. இந்த நிகழ்வுப் போக்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி அமைக்கப்பட்டதுடன் துரிதமடைந்தது. பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தினாலேயே அனைத்துலகக் குழுவிற்குள் தனது அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்திருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சி, அந்தப் போராட்டத்தையே கைவிட்ட நிலையில், சர்வதேசிய இயக்கத்திற்குள் அரசியல் கலந்துரையாடல்களை தடுத்ததோடு அமைப்புரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல் ஆத்திரமூட்டல்களை கொண்டே விமர்சனங்களுக்கு பதிலிறுப்பு செய்தது. அனைத்துலகக் குழுவிற்குள் ட்ரொட்ஸ்கிசவாதிகளின் வெற்றியும் அதன் வேலையின் மையத்தில் ட்ரொட்ஸ்கிசம் மீள்ஸ்தாபிதம் செய்யப்பட்டதும் வர்க்க உறவுகளில் ஒரு ஆழமான மாற்றத்தைக் குறித்தது. அது தொழிலாள வர்க்கத்தின் சகல பழைய அதிகாரத்துவ அமைப்புகளதும் சீரழிவு மற்றும் சிதறல்களிலும் மற்றும் பப்லோவாதக் குழுக்கள் அனைத்தும் துரிதமாக வலதுபக்கம் நகர்ந்ததாலும் மேலும் வெளிப்படையானது.

24. தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்குப் பின்னர்

24-1. அனைத்துலகக் குழு விளக்கியதைப் போன்று: “1985-86 பிளவானது நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு வரலாற்று மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1953ல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது முதல், பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நீண்ட போராட்டத்தின் உச்சகட்டமே இதுவாகும். பப்லோவாத சந்தர்ப்பவாதத்தால் உருவாக்கப்பட்ட ஐக்கியமின்மை மற்றும் குழப்பத்தின் நீண்ட காலகட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள உண்மையான ட்ரொட்ஸ்கிசவாதிகள், அதாவது புரட்சிகர மார்க்சிஸ்டுகள், அனைவரும் அனைத்துலகக் குழுவின் பதாகையின் கீழ் பலப்படுத்தப்படுவதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன.”[56]

24-2. தொழிலாளர் புரட்சிக் கட்சி உடனான பிளவு, அனைத்துலகக் குழுவின் பகுதிகளுக்கு இடையில் முன்னெப்போதுமில்லாதளவு சர்வதேச ஒத்துழைப்பின் அபிவிருத்திக்கும், அனைத்துலக இயக்கத்திற்குள் மார்க்சிசத்தின் மறுமலர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது. “தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்தது எப்படி 1973-1985” என்ற தலைப்பில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவு குறித்த ஒரு நீளமான பகுப்பாய்வை அனைத்துலகக் குழு முன்வைத்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஓடுகாலிகளில் எவரும் அதை நிராகரிக்காதது ஒரு புறம் இருக்க, சவால் செய்யக்கூட வரவில்லை. பண்டாவின் ட்ரொட்ஸ்கிச விரோத வசைமாரிகளுக்கு டேவிட் நோர்த் தனது “நாம் காக்கும் மரபியம்” (”The Heritage We defend) புத்தகத்தில் பதிலளித்தார். அது நான்காம் அகிலத்தின் வரலாறு மற்றும் வேலைத்திட்டம் குறித்த மிகமுக்கியமான அம்சங்களை தெளிவுபடுத்தியது. அந்த வேலைகளும், அதனுடன் எண்ணற்ற ஏனைய கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளுமே இயக்கத்தின் காரியாளர்களுக்குக் கற்பிப்பதற்கும், அத்துடன் அனைத்துலகக் குழுவின் பகுதிகள் மீது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் சீரழிவு கொண்டிருந்த தாக்கத்தில் இருந்து மீள்வதற்கும் அடிப்படையாக இருந்தன.

24-3. இந்த பிளவு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலைகளை உருமாற்றியது. கட்சியின் தலைமையும் உறுப்பினர்களும் அனைத்துலகக் குழுவை முழுமையாக ஆதரித்ததோடு அனைத்துலகக் குழுவின் ஆவணங்கள் மற்றும் மையப் பிரச்சினைகளும் முழுமையாக கலந்துரையாடப்பட்டன. அடுத்த இரண்டு ஆண்டு காலங்களின் போது, கீர்த்தி பாலசூரியா அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டப் பணிகளில், குறிப்பாக நிரந்தரப் புரட்சித் தத்துவம் தொடர்பாக, கவனத்தைச் செலுத்தினார். 1987 மார்ச்சில் வெளியான நான்காம் அகிலம் (தொகுதி 14, எண் 1) இதழுக்கு பாலசூரியாவும் டேவிட் நோர்த்தும் எழுதிய தலையங்கக் கட்டுரை, பண்டா 1960களின் பிற்பகுதியில் மாவோவையும் ஹோ சி மின்னையும் புகழ்ந்து தள்ளியது வரை பின்சென்று, அவர் நிரந்தரப் புரட்சியைக் கைவிட்டது குறித்த ஒரு தெளிவான அம்பலப்படுத்தலை செய்தது. அதே இதழில், பாலசூரியாவுக்கும் (பிரிட்டிஷ்) சோசலிச தொழிலாளர் கழக தலைவர்களுக்கும் இடையில் பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடர்பாக நடந்த கருத்துப் பரிமாற்றங்களும் வெளியாகியிருந்தன. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அனைத்துலகக் குழுவுடன் இணைந்து, இந்தியாவில் தனது  அரசியல் வேலையை புதுப்பித்து விரிவாக்கியது.

24-4. இந்தப் பிளவு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அதிகரித்து வந்த உள்நாட்டுப் போரின் வடிவத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் நேரடியாக முகங்கொடுத்த, தேசியப் பிரச்சினை சம்பந்தமான ஒரு முக்கியமான கலந்துரையாடலுக்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டது. 1986ல் கீர்த்தி பாலசூரியா, “தமிழர் போராட்டமும் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரின் துரோகமும்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். 1970களின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் போராட்டத்தை முழுமையாக அலட்சியம் செய்து, இலங்கை தேசிய அரசுக்கு ஆதரவு கொடுத்த நிலைப்பாட்டில் இருந்து, 1979 ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விமர்சனமற்ற ஆதரவு வழங்கும் நிலைப்பாடு வரையான தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத திருப்பங்களை அக்கட்டுரை அம்பலப்படுத்தியது. “தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட விடயத்தில் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரின் வரலாற்றுப் பதிவுகளை இந்த ஆய்வு தெளிவாக்குவதைப் போல், ட்ரொட்ஸ்கிசவாதிகளாக வேடம்தரித்த இந்த கயவர் கூட்டம், தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களை திட்டமிட்டுக் காட்டிக் கொடுத்தது. எல்லாவற்றுக்கும் மேல், இலங்கையில் நிரந்தரப் புரட்சித் தத்துவ முன்னோக்கிற்காகப் போராடிய ஒரே கட்சியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அழிப்பதற்கு அவர்கள் தோல்விகண்டும் கூட நனவுடன் வேலை செய்துள்ளனர் என்று அக்கட்டுரையை அவர் முடித்திருந்தார். 

24-5. இந்த பிளவுக்குப் பிந்தைய காலகட்டம், இலங்கை முதலாளித்துவத்தின் கூர்மையான அரசியல் நெருக்கடியான காலகட்டத்துடன் சமாந்தரமானதாக இருந்தது. ஐ.தே.க. அரசாங்கம் வடக்கில் மோசமான இராணுவப் பின்னடைவுகளையும், தெற்கில் பொருளாதாரச் சரிவினாலும் அரசாங்கத்தின் சந்தை-சார்புக் கொள்கைகளின் தாக்கத்தாலும் எரியூட்டப்பட்ட சமூக அமைதியின்மையின் வளர்ச்சியையும் எதிர்கொண்டது. பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளுக்கு உடன்பட்டதன் மூலம், கால அவகாசத்தைப் பெறுவதற்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன முனைந்தார். 1985ல் பூட்டான் தலைநகரான திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, “அமைதிக்கான ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக” எதிர்க்கட்சிகளின் அரசியல் உதவியை சேர்த்துக் கொள்வதன் பேரில், ஜெயவர்த்தனா 1986ல் கொழும்பில் சகல கட்சி வட்ட மேசை மாநாட்டுப் பேச்சுவார்த்தைகளை தொடக்கி வைத்தார். ஐ.தே.க. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில், குட்டி முதலாளித்துவ தீவிரவாத நவசமசமாஜக் கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான, முன்னாள் ஸ்ரீ.ல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு இடதுசாரிக் குழுவான ஸ்ரீலங்கா மஹஜனக் கட்சி உடன் சேர்ந்து கொண்டது. அதன் விளைவுக்கு அவர்கள் அனைவரும் அரசியல் பொறுப்பாளிகளாவர். அந்த மாநாட்டின் விளைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்தியத் துருப்புகளை அனுப்புவதற்கு ஜெயவர்த்தனாவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் 1987 ஜூலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஒரு அமைதி உடன்படிக்கையை அமுல்படுத்தும் சாக்குப் போக்கில், இந்த இராணுவ நடவடிக்கையின் உண்மையான நோக்கம், தமிழ் கெரில்லாக்களை நிராயுதபாணியாக்குவதும் ஒப்பந்தத்தின் விதிகளுக்கு எதிராக எழும் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்குவதுமே ஆகும். அரசாங்கத்தின் வட்ட மேசை மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.க. பங்கேற்க மறுத்ததோடு, ஜே.வி.பீ.யுடன் சேர்ந்து, எந்தவொரு சமாதான ஒப்பந்தத்திற்கும் எதிராக இனவாத பிரச்சாரமொன்றை முன்னெடுத்தது.

24-6. பாட்டாளிவர்க்க சர்வதேசியவாத நிலைப்பாட்டில் இருந்து, வட்டமேசைப் பேச்சுவார்த்தைகளையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் எதிர்த்து, இராணுவத் தலையீட்டிற்கு எதிராக இலங்கையிலும் இந்தியாவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக அழைப்பு விடுத்த ஒரே கட்சி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே. ஜெயவர்த்தனாவினதும் ராஜீவ் காந்தியினதும் அரசாங்கங்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளில் இருந்து எழுந்துள்ள, துருப்புகளை அனுப்புவதற்கான முடிவு, தொழிலாள வர்க்கத்திற்கும் கிராமப்புற வெகுஜனங்களுக்கும் எதிராக குறிவைக்கப்பட்ட ஒன்றாகும், மற்றும் அது தமிழ் மக்களுக்கு ஒரு பொறியாகும் என்று கட்சி எச்சரித்தது. 1986 ஜூனில் வட்ட மேசை மாநாட்டின் மத்தியில், இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டத்திற்காகப் பிரச்சாரம் செய்ததற்காக விஜே டயஸ், புரூட்டன் பெரெரா, ரூமன் பெரெரா ஆகிய மூன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்களை பொலிஸ் கைது செய்து, ஆறு வாரங்களுக்கு தடுத்து வைத்திருந்தமை தற்செயலான ஒன்றல்ல. விடுவிக்கப்பட்ட சிறிது காலத்தில், புரூட்டன் பெரெரா புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக இளைஞர் பிரிவுத் தலைவரான விரான் பீரிசுடன் மீண்டும் கைது செய்யப்பட்டார். அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பகுதிகளும் முன்னெடுத்த பரவலான சர்வதேசப் பிரச்சாரத்தின் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தனது “அமைதி” சூழ்ச்சி மீதான எந்தவொரு விமர்சனத்தையும் பற்றிய ஐ.தே.க.யின் கூர்ந்து அறியும் திறனால்தான் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அச்சுறுத்தி அமைதியாக்க செய்வதற்காக இந்த முயற்சி தூண்டிவிடப்பட்டது என்பது தெளிவு.

24-7. இந்திய இலங்கை உடன்படிக்கையானது, தமிழர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்க இந்திய அரசாங்கத்தின் மீதும் அதன் இராணுவத்தின் மீதும் நம்பிக்கை வைத்த விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அத்தனை தமிழ் ஆயுதக் குழுக்களையும் பற்றிய ஒரு அழிவுகரமான அம்பலப்படுத்தலாகும். ஒரு தனியான முதலாளித்துவ ஈழத்தை உருவாக்குவதற்கு இந்திய முதலாளித்துவத்தின் ஆதரவை பெறுவதே அவர்களது முன்னோக்காக எப்போதும் இருந்து வந்துள்ளது. ஆயினும், இந்திராவினதும் ராஜீவ் காந்தியினதும் அரசாங்கங்களுக்கு, தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை; அவர்கள்  பிராந்தியத்தில் மேலாதிக்கச் சக்தியாக ஆவதற்கான புது டில்லியின் குறிக்கோளை முன்நகர்த்தவே தமிழர் போராட்டத்தை சிடுமூஞ்சித்தனமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். 1987ல், கொழும்பை நெருக்குவதற்காக அதுவே ஊக்குவித்த தமிழர் கிளர்ச்சியை நசுக்குவதற்கு இந்தியாவின் இராணுவரீதியிலான தலையீடு, இந்தியாவில் அமைதியின்மையைத் தூண்டியதுடன் தெற்காசியாவில் யுத்தத்துக்குப் பிந்திய பிற்போக்கு அரச முறைமையை கீழறுப்பதற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. ஈ.பீ.ஆர்.எல்.எஃப்., டெலோ, மற்றும் புளொட் உட்பட புது டில்லிக்கு மிக நெருக்கமான கருவிகள், இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு துணை அமைப்புகளாக செயல்பட்டதுடன், ஈ.பீ.ஆர்.எல்.எஃப். தலைவரான வரதராஜப் பெருமாள் இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குக்கான மாகாண முதலமைச்சரானார். இந்திய இராணுவம் தனது சவாலற்ற கட்டுப்பாட்டை ஸ்தாபிக்க முனைந்த நிலையில், பரவலான கைதுகள், கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் கொலை நடவடிக்கைகளையும் அது நாடியதால், தமிழ் மக்களை அந்நியப்படுத்தியதோடு விடுதலைப் புலிகளுடன் மோதலுக்கும் இட்டுச் சென்றது. ஆயினும், தனது போராளிகள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் கூட, விடுதலைப் புலிகள் இந்தியா மீதும் ராஜீவ் காந்தி மீதும் தமது விசுவாசத்தைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தி வந்தனர்.

24-8. இந்திய-இலங்கை ஒப்பந்தம், இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்களிடையேயும் சர்வதேச புலம்பெயர் சமூகத்திடையேயும் ஒரு பரந்த அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. ஐரோப்பாவில், தங்களது அமைப்புகள் சோரம் போனதற்கான பதில்களைத் தேடிக் கொண்டிருந்த இளம் தமிழ் போராளிகள் ஏராளமாக கலந்து கொண்ட பல கூட்டங்களில் கீர்த்தி பாலசூரியா உரையாற்றினார். மிகத் தொலைநோக்குடைய பிரிவினர், அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் தொழிலாள வர்க்க நோக்குநிலையின் அடிப்படையில் மட்டுமே தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) இணைந்துகொண்டதோடு ஐரோப்பாவிலும் தெற்காசியாவிலும் அதன் வேலைகளில் பலம்வாய்ந்த பங்களிப்பை செய்தனர்.

25. ஸ்ரீலங்கா- தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகள்

25-1. 1987 நவம்பரில், “இலங்கையின் நிலைமையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் பணிகளும்” என்ற தலைப்பில், அனைத்துலகக் குழு பிரசுரித்த ஒரு விரிவான அறிக்கை, முதன்முறையாக ஸ்ரீலங்கா- தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற சுலோகத்தை எழுப்பியது. நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருந்த அந்த அறிக்கை, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் ஊடாக மட்டுமே அடையப்பட முடியும் என்று ஒரேகுரலில் வலியுறுத்தியது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ இயக்கங்கள் எவ்வளவு உத்வேகமானதாக அல்லது போர்க்குணமிக்கதாக இருந்தாலும், அவற்றால் ஏனைய ஜனநாயகக் கடமைகளைப் போலவே, தேசிய சுய-நிர்ணய பிரச்சினையையும் தீர்க்க முடியாது. இந்த சுலோகம், சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலமாக அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகப் போராடும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் நோக்குநிலையை தெளிவாக வேறுபடுத்திக் காட்டியது, அது பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) செய்திருந்ததைப் போல், தமிழ் தேசிய இயக்கத்தின் ஊக்குவிப்பாளனாக மற்றும் அரசியல் ஆலோசகராக பாத்திரம் ஆற்றுமளவுக்கு கட்சியை தரம் குறைக்கும் எந்தவொரு போக்கிலிருந்தும் வேறுபட்டிருந்தது.

25-2. அனைத்துலகக் குழுவின் அறிக்கை விளக்கியதைப் போல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர அரசுகள் என்றழைக்கப்படுபவற்றில் எதுவும் வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளையோ அல்லது அடிப்படையான சடத்துவ தேவைகளையோ பூர்த்தி செய்திருக்கவில்லை. “மாற்றமின்றி, ஏகாதிபத்திய ஒப்புதலுடனான ‘சுதந்திரம்’ என்பது, முறைதவறிப் பிறந்த அரசுகளை அமைப்பதையே அர்த்தப்படுத்துகிறது. ஜனநாயகக் கோட்பாடுகளை தவிர்க்க முடியாதவாறு சமரசம் செய்வதன் மீதே இந்த அரசுகளின் அத்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுப்போக்கில், தேசிய முதலாளித்துவம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாளனாக செயற்படாமல், ஏகாதிபத்திய சூறையாடலின் பிரதான பங்காளியாகவே செயல்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வுப்போக்கில் உருவாக்கப்பட்ட அரசின் வகையானது, உற்பத்தி சக்திகளின் முற்போக்கான அபிவிருத்திக்கு, சாத்தியமற்றதாகியுள்ள, அழுகிப் போய்க்கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கான ஒரு சிறைக்கூடமே தவிர வேறொன்றுமில்லை.... இத்தகைய நிலைமைகளில் இருந்தே, முதலாளித்துவத்தின் மகிழ்ச்சியான ஒப்புதலுடன் இனவாத யுத்தப் பயங்கரங்கள் எழுகின்றன. முதலாளித்துவ ஆட்சி நீடிக்கும் வரை இத்தகைய நிலவரம் மாற்றப்பட முடியாதது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், பர்மா ஆகிய நாடுகளின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாறு மற்றும் உண்மையில் உலகின் ஒவ்வொரு முன்னாள் காலனித்துவ நாட்டினதும் வரலாறு, முதலாளித்துவத்தால் உண்மையான தேசிய ஐக்கியத்தையும் அரசியல் சுயாதீனத்தையும் ஸ்தாபிக்க முடியாது என்பதையே தீர்க்கமாக நிரூபித்துள்ளன.”[57]

25-3. இதனையடுத்து, இந்த முதலாளித்துவ ஜனநாயகக் கடமைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. சுய-நிர்ணய உரிமையை உயர்த்திப் பிடித்த அதேசமயம், சோசலிசப் புரட்சி மூலோபாயத்தின் மூலம் மட்டுமே தேசிய சுயநிர்ணயத்தை அடைய முடியும், அதனால் அது அந்த மூலோபாயத்துக்குக் கீழ்ப்பட்டதே என அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை யதார்த்தமாக்கக் கூடிய ஒரே சமூக சக்தி இது [தொழிலாள வர்க்கம்] மட்டுமே. ஆயினும், அதனை தேசிய முதலாளித்துவத்தின் துணையுறுப்பாக இருந்து கொண்டு செய்ய முடியாது, மாறாக அதன் சமரசமற்ற எதிரியாக இருந்தே இதனைச் செய்ய முடியும். தனது சொந்த ஆயுதங்களின் மூலமும், தனது சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும், கிராமங்கள் மற்றும் நாட்டுப்புறங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டிக்கொண்டே அது சுய-நிர்ணயத்திற்காகப் போராடுகிறது. தனது சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக்கொண்டு, சகல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களது நியாயமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதம் செய்யும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில், சோசலிசப் புரட்சியின் ஒரு துணை விளைவாகவே சுயநிர்ணயம் சாதிக்கப்படுகிறது. தேசிய இனங்களின் உண்மையான சமத்துவத்துக்கான ஒரு திட்ட வரம்பாக, அது சுயவிருப்பின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஒரு ஐக்கிய சோசலிச ஒன்றியத்தை முன்மொழிகிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அனைத்தும் தானாகவே ஒன்று சேர்வதானது பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று நம்பும் அதே சமயம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமானது பிரிந்து செல்ல விரும்பும் இனங்களுக்கு அவ்வாறு செய்வதற்கான உரிமை உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இது தான் ஸ்ரீலங்கா-தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அபிவிருத்தி செய்த வேலைத்திட்டத்தின் இன்றியமையாத உள்ளடக்கமாகும்.”[58]

 25-4. இந்திய முதலாளித்துவத்திடம் புலிகள் அரசியல்ரீதியாக மண்டியிட்டதின் வெளிச்சத்தில், பல்வேறு தேசிய விடுதலை இயக்கங்களின் பண்பை மறுமதிப்பீடு செய்யும் நிகழ்வுப்போக்கையும் அனைத்துலகக் குழுவின் அறிக்கை தொடக்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் தோன்றிய, இனம், கைமொழி, மதம் மற்றும் சாதியைக் கடந்து வெகுஜனங்களை ஈர்த்த பரந்த காலனித்துவ-எதிர்ப்பு இயக்கங்களுக்கு நேர் மாறான வகையில், விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் தேசிய தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இது, லெனின் எச்சரித்திருந்ததைப் போல், தேசிய முதலாளித்துவம் தனது சொந்த “சுதந்திர” அரசுக்குள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சுரண்டுவதற்காக, தனது சொந்த தேசிய அந்தஸ்துகளையும் நிலைமைகளையும் ஸ்தாபிப்பதான விடயமாக மட்டுமே சுய நிர்ணயப் பிரச்சினையை நோக்குகிறது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை, தீவின் மையத்தில் இருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கோ அல்லது பாக்கு நீரிணையைக் கடந்து தென்னிந்தியாவில் இருக்கும் பரந்த தமிழ் மக்களுக்கோ எந்த முன்னோக்கையும் கொண்டிராத, இலங்கையிலுள்ள தமிழ் முதலாளித்துவத்தின் அற்பமான இலட்சியங்களையே பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியிடம் இருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதே ஒரு தனி ஈழத்திற்கான அதன் வேலைத்திட்டமாகும்.

 25-5. ஆவணத்தில் மேற்கோளிடப்பட்டுள்ள புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அறிக்கை ஒன்று விளக்கியதாவது: “தேசிய பிரத்தியேகவாத அடிப்படையைக் கொண்ட, மற்றும் தனது சொந்த உரிமைகளை மட்டும் வெல்லும் நோக்கம் கொண்ட ஒரு இயக்கத்தின் மூலம் தேசிய விடுதலையை சாதிக்க முடியாது. நமது சகாப்தத்தில், அத்தகையதொரு இயக்கத்தால் உருவாக்கக் கூடிய மக்கள் இயக்கத்தின் வலிமை என்னவாக இருந்தாலும், அது முதலாளித்துவ தேசங்களிடையே தான் தனிமைப்படுவதைக் காணும். ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலை இயக்கமானது ஜனநாயகத்திற்காக முழுமையாகவும் நிபந்தனைகளின்றியும் போராடுகின்ற ஒரு இயக்கத்தின் பகுதியாக மட்டுமே முன்செல்ல முடியும். அத்தகைய ஒரு இயக்கத்தின் பாகமாக ஆகவிடாமல் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தடுப்பது இந்த தேசிய பிரத்தியேகவாதமே ஆகும். இறுதி ஆய்வில், தேசிய பிரத்தியேகவாதமானது தனது சொந்த நாட்டில் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சுரண்டுவதற்கு தேசிய முதலாளித்துவம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் தொடர்புபட்டதாக இருப்பதே இதற்குக் காரணம். இங்கே தான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியல்ரீதியான வலுவற்ற நிலை வெளிப்படுகின்ற தோற்றுவாய் அமைந்திருக்கிறது[59] தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு மார்க்சிச இயக்கம் அளிக்கக் கூடிய ஆதரவு பற்றிய ஒரு பரந்த ஆய்வுக்கான அடித்தளத்தை அனைத்துலகக் குழுவின் அறிக்கை அமைத்தது.

25-6. இந்த அறிக்கை வெளியான சிறிது காலத்தில், கீர்த்தி பாலசூரியா 1987 டிசம்பர் 18 அன்று மாரடைப்பால் திடீரென துன்பகரமாக மரணமடைந்தார். அப்போது வெறும் 39 வயதையே அடைந்திருந்த அவர், தனது ஒட்டுமொத்த இளமை வாழ்க்கையையும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்திற்கு அர்ப்பணித்திருந்தார். லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பால் உருவாகியிருந்த அரசியல் குழப்பத்தின் மத்தியில், 19 வயதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு தலைமை வகிக்கும் பிரமாண்டமான பொறுப்பை ஏற்ற பாலசூரியா, அதன் மூலம் இலங்கைத் தொழிலாள வர்க்கம் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் கொண்டிருந்த உறவுகளை மறுபடிம் புத்துயிர்பெறச் செய்தார். 1960களின் பிற்பகுதியிலும் 1970களிலும் மத்தியதர வர்க்க தீவிரவாத அலைக்கும், விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பீ. போன்ற இயக்கங்களுக்கு உயிர்கொடுத்த ”ஆயுதப் போராட்ட” கொள்கைக்கும் எதிராக பாலசூரியாவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் எழுந்து நின்றனர். ஸ்ராலினிசக் கட்சிகள் மற்றும் அவற்றின் பல்வேறு பப்லோவாத பரிந்துரையாளர்களிடம் இருந்து மட்டுமன்றி, அனைத்துலகக் குழுவுக்குள்ளேயே தொழிலாளர் புரட்சிக் கட்சி மூலமும் நிரந்தரப் புரட்சித் தத்துவம் உலகளாவிய தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சமயத்தில் அவர் அதைப் பாதுகாத்தார். அவ்வாறு செய்கையில், ஆசியாவிலும் சர்வதேசரீதியாகவும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்திற்கு பாலசூரியா அழியாதவொரு பங்களிப்பைச் செய்தார்.

 25-7. அவரது மரணச்சடங்கில் பேசுகையில், டேவிட் நோர்த் விளக்கியதாவது: “ட்ரொட்ஸ்கி போராடிய முன்னோக்கின் விஞ்ஞானபூர்வமான செல்லுபடியான தகைமையில் தோழர் கீர்த்தி ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் மா சே துங், ஹோ சி மின் மற்றும் பிடல் காஸ்ட்ரோவின் ‘வெற்றிகளால்’ ஈர்க்கப்பட்டிருந்த சமயத்தில், இந்த கிரகத்தில்  எப்போதுமே புரட்சிகரமாக இருக்கும் ஒரே சக்தியா தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாகவே மார்க்சிஸ்டுகளின் அரசியல் நோக்குநிலை இருக்க முடியும் என கீர்த்தி வலியுறுத்தினார்... இனிவரும் உடனடிக் காலகட்டத்தில், தொழிலாளர்கள், ஆசியாவில் மட்டுமன்றி உலகெங்கிலும், தோழர் கீர்த்தியின் எழுத்துக்களை வாசித்துக் கற்றுக்கொள்வர். அப்போது இளைஞர்களின் ஆசிரியர்களாக மா சேதுங்குகளோ, ஹோ சின் மின்களோ, காஸ்ட்ரோக்களோ இருக்கப் போவதில்லை என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மாறாக, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையேயான முன்னேறிய பகுதியினர், கீர்த்தி பாலசூரியாவிடம் இருந்தும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திடம் இருந்தும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிடமும் இருந்தே தங்களது புரட்சிகரப் பாடங்களை கற்கவுள்ளனர்.”[60]

25-8. பாலசூரியாவின் அகால மரணம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கும் அனைத்துலகக் குழுவுக்கும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கும் ஒரு பெரும் அரசியல் அடியாக விழுந்தது. பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஓடுகாலிகளுடனான பிளவுக்குப் பிந்தைய உடனடிக் காலத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை தெளிவுபடுத்தும் மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த தீர்க்கமான நேரத்திலேயே அந்த மரணம் நிகழ்ந்தது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட காரியாளர்கள் அவரது இழப்பைத் தாங்கிக்கொண்டு, விஜே டயஸின் தலைமையின் கீழ் மீண்டும் வலுப்பெற்று, விரிவடைந்து வந்த உள்நாட்டுப் போரின் சிக்கலான நிலைமைகளின் கீழ் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்தமை, பாலசூரியாவுக்கும் அவர் போராடிய கோட்பாட்டுக்கும் சான்றாக அமைந்தது.

54. நான்காம் அகிலம், [Fourth International, Volume 13, No. 2, p. 77]

55. நான்காம் அகிலம், [Fourth International, Volume, 14 No. 1, p. 4.]

56. உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் [The World Capitalist Crisis and the Tasks of the Fourth International, (Detroit: Labor Publications, 1988), p. 45.]

57. நான்காம் அகிலம், [Fourth International, Volume 15, No. 1, January–March 1988, pp. 20–21.]

58. அதே இதழ், பக்கம் 21

59. அதே இதழ், பக்கம் 20

60. அதே இதழ், பக்கம் 9-10