சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
(இலங்கை)

WSWS : Tamil : நூலகம்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11
பகுதி 12
 

 

 
The New Course 1923
 

The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part 2

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 2

By the Socialist Equality Party (Sri Lanka)
27 March 2012

Use this version to print | Send feedback

4. லங்கா சமசமாஜக் கட்சி நான்காம் அகிலத்தின் பக்கம் திரும்பியது

4-1. நான்காம் அகிலமானது 11 நாடுகளைச் சேர்ந்த 30 பிரதிநிதிகளால் பாரிசில் நடந்த ஒரு இரகசிய கூட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. சீனா, பிரெஞ்சு-இந்தோசீனா, ஆஸ்திரேலியாவில் இருந்து மூன்று ஆசியக் கட்சிகள் பிரதிநிதிகளை அனுப்ப முடியாவிட்டாலும், அவை தம்மை நான்காம் அகிலத்தின் பகுதிகளாக இணைத்துக்கொண்டன. ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்டு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட “இடைமருவு வேலைத் திட்டம்: முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்”, என்ற அறிக்கை பிரகடனம் செய்ததாவது: “சோசலிசத்துக்கான வரலாற்று நிலைமைகள் இன்னமும் ‘பக்குவம்’ அடையவில்லை என்ற சகல கதையளப்புக்களும் அலட்சியம் அல்லது நனவான மோசடியின் வெளிப்பாடுகளாகும். தொழிலாள வர்க்கப் புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள் ‘பக்குவம்’ அடைந்தது மட்டுமன்றி; அவை கொஞ்சம் அழுகிப்போகவும் தொடங்கிவிட்டன. அடுத்த வரலாற்றுக் காலப் பகுதியில் ஒரு சோசலிசப் புரட்சி இல்லாது போகின், மனித இனத்தின் முழுக் கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. இது பாட்டாளி வர்க்கத்தின், பிரதானமாக அதன் புரட்சிகர முன்னணிப் படையின் முறையாகும். மனித குலத்தின் வரலாற்று நெருக்கடி, புரட்சிகரத் தலைமை நெருக்கடியாகக் குறைந்து விட்டுள்ளது.”[3] “தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டினரின் இன்றைய நிலைமைகள் மற்றும் இன்றைய நனவில் இருந்து தோன்றி, தொழிலாள வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு மாற்ற முடியாத இறுதித் தீர்மானத்துக்கு இட்டுச் செல்லும் இடைமருவு கோரிக்கைகளின் முறைமை ஒன்றை” இந்த வேலைத் திட்டம் வரைந்தது.[4] இந்த இடைமருவு கோரிக்கைகள், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னெடுப்புகளையும் நனவையும் அபிவிருத்தி செய்வதற்கே அன்றி, வேலைத் திட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய நனவுக்குள் கரைத்துவிடுவதற்கல்ல.

4-2. இந்த ஸ்தாபக ஆவணம் முதலாளித்துவத்தின் இணைந்த (combined) மற்றும் சமனற்ற (uneven) அபிவிருத்தியின் அடிப்படையில் நிரந்தரப் புரட்சி முன்னோக்கினை இரத்தினச் சுருக்கமாய் கூறியது: ”காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகள் அவற்றின் வெகு இயல்பிலேயே பின்தங்கிய நாடுகளாகும். ஆனாலும் பின்தங்கிய நாடுகள் ஏகாதிபத்தியத்தால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்ற உலகத்தின் ஒரு பகுதியே. எனவே அவற்றின் அபிவிருத்தி ஒரு இணைந்த (combined) பண்பினைக் கொண்டுள்ளது: மிக ஆதி காலத்தின் பொருளாதார வடிவங்கள் முதலாளித்துவ தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் மிக சமீபத்திய அம்சங்களுடன் இணைந்துள்ளன. இதேவகையிலேயே பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டங்களும் வரையறுக்கப்படுகின்றன: தேசிய சுதந்திரம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மிக ஆரம்பநிலை சாதனைகளுக்கான போராட்டம் உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சோசலிசப் போராட்டத்துடன் இணைந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் ஜனநாயக சுலோகங்கள், இடைமருவல் கோரிக்கைகள், மற்றும் சோசலிசப் புரட்சியின் பிரச்சினைகள் எல்லாம் தனித்தனி வரலாற்று சகாப்தங்களாய் பிரிக்கப்படுவதில்லை, மாறாக நேரடியாய் ஒன்றிலிருந்து மற்றொன்று எழுகிறது.” [5]

4-3. 1939 ஜூலையில் இந்திய தொழிலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், நெருங்கிக்கொண்டிருந்த யுத்தத்தில் அவர்கள் எதிர்கொண்ட அரசியல் பிரச்சினைகளை ட்ரொட்ஸ்கி மேலும் விளக்கினார். “பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முகவர்கள், ‘ஜனநாயகத்தின்’ அடிப்படைகளுக்காகவே யுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பாசிசத்திடம் இருந்து ‘ஜனநாயகத்தின்’ அடிப்படைகளை பாதுகாக்க வேண்டும் என்பது போலவும் சித்தரிக்கின்றனர். அதன்படி பாசிச ஆக்கிரமிப்பாளர்களை விரட்டுவதற்காக அனைத்து வர்க்கங்களும் மக்களும் ‘சமாதானமான’, ‘ஜனநாயகபூர்வமான’ அரசாங்கங்களை சூழ அணிதிரள வேண்டும். இவ்வாறாக நிரந்தரமாக ‘ஜனநாயகம்’ பாதுகாக்கப்படுவதோடு சமாதானம் நிலைநாட்டப்படும், எனக்கூறுகின்றனர். இந்த போதனை வேண்டுமென்றே கூறப்படும் பொய்யாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் ஜனநாயகம் பூத்துக்குலுங்குவதையிட்டு உண்மையில் அக்கறைகாட்டுமெனில், அதை வெளிப்படுத்துவதற்கு மிகவும் இலகுவான சந்தர்ப்பம் உள்ளது: அது பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கொடுப்பதாகும்.” [6] பாசிசத்தின் ஆபத்தை குறைத்து மதிப்பிடாத அதேவேளை, ட்ரொட்ஸ்கி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினதும் மக்களதும் பிரதான எதிரி உள்நாட்டிலேயே இருப்பதாக வலியுறுத்தினார். இந்தியாவில், அந்த எதிரி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே ஆகும். அதை தூக்கிவீசுவது பாசிச சர்வாதிகாரிகள் உட்பட சகல ஒடுக்குமுறையாளர்களுக்கும் ஒரு மிகப்பெரும் அடியாக இருக்கும்.

4-4. இந்திய முதலாளித்துவ வர்க்கம் பற்றிய தனது மதிப்பீட்டில் ட்ரொட்ஸ்கி மிகவும் கூர்மையுடன் இருந்தார்: “அவர்கள் பிரித்தானிய முதலாளித்துவத்துடன் நெருக்கமாக கட்டுண்டிருந்ததோடு அதில் தங்கியுமிருக்கிறார்கள். அவர்கள் தமது சொந்த சொத்துக்களை நினைத்து நடுக்கம் கொண்டுள்ளார்கள். அவர்கள் வெகுஜனங்களைப் பற்றி பீதியடைந்துள்ளார்கள். அவர்கள் என்ன விலை கொடுத்தாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமசரசம் செய்துகொள்ள முயற்சிப்பதோடு மேலிருந்து கிடைக்கும் சீர்திருத்தங்கள் பற்றிய எதிர்பார்ப்பை பயன்படுத்தி இந்திய வெகுஜனங்களை சாந்தப்படுத்த முயற்சிக்கின்றனர். காந்தி இந்த முதலாளித்துவத்தின் தலைவராகவும் போதகராகவும் இருக்கின்றார். அவர் ஒரு ஏமாற்றுத் தலைவரும் ஒரு போலி போதகருமாவார்! காந்தியும் அவரது கூட்டாளிகளும், இந்தியாவின் நிலைமை இடைவிடாது முன்னேறும், அதனது விடுதலை தொடர்ந்தும் விரிவடையும், மற்றும் இந்தியா சிறிது சிறிதாக அமைதியான சீர்திருத்தப் பாதையில் ஒரு டொமினியனாக (பிரித்தானியாவிற்குட்பட்ட தன்னாட்சிப் பிரதேசமாக) மாறும் என்ற கருத்தை அபிவிருத்தி செய்கின்றனர். இந்த முழு முன்னோக்கும் அதன் உட்கருவிலேயே தவறானதாகும்.” [7]

4-5. ஸ்ராலினிசம் வகிக்கும் பாத்திரத்தைப் பற்றி குறிப்பிடும் போது, ஏனைய நாடுகளில் போல், சோவியத் அதிகாரத்துவம் “ஜனநாயக சக்திகளுடனான” அதன் இராஜதந்திர சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்திய மக்களின் நலன்களை அடிபணியச் செய்தது என ட்ரொட்ஸ்கி விளக்கினார் – ஸ்ராலினிச அதிகாரத்துவம், பாசிஸ்டுகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக வாதாடிய போதிலும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் காலனிகளில் ஆக்கிரமிப்பைத் தொடர அனுமதித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் நெருங்கிவரும் யுத்தத்துக்கும் எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது என்பது, ஸ்ராலினிசத்திடம் இருந்து முழுமையாக பிரிந்துசெல்வதை அர்த்தப்படுத்துகிறது. மிகச் சரியாக இந்தப் பிரச்சினைகளையே நான்காம் அகிலத்தை நோக்கித் திரும்பிய லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் எதிர்கொண்டனர். பிரிட்டன் மற்றும் வட அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச தலைவர்களுடன் தொடர்புகொள்வதற்காக 1939ல் செலினா பெரேரா பிரிட்டனுக்கும் வட அமெரிக்காவுக்கும் அனுப்பப்பட்ட போதிலும், ட்ரொட்ஸ்கியை சந்திக்கும் முயற்சி தோல்விகண்டது.

4-6. 1939 டிசம்பரில், ட்ரொட்ஸ்கிச பிரிவு, லங்கா சமசமாஜக் கட்சியின் செயற் குழுவில் பின்வரும் பிரேரணையை முன்கொணர்ந்ததன் மூலம், லங்கா சமசமாஜக் கட்சிக்குள் இருந்த ஸ்ராலினிச ஆதரவாளர்களை சவாலுக்கு அழைத்தனர். “முதலாவது தொழிலாளர் அரசான சோவியத் ஒன்றியத்துடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் அதேவேளை, லங்கா சமசமாஜக் கட்சி, மூன்றாம் அகிலம் அனைத்துலக புரட்சிகர தொழிலாள வர்க்க இயக்கத்தின் நலன்களுக்காக செயற்படாதமையினால், அதன் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என அறிவிக்கின்றது.” 29 க்கு 5 என்ற எண்ணிக்கையில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. கட்சியில் இருந்து விலகிய ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களின் ஆதரவாளர்களும், 1940 நவம்பரில் ஐக்கிய சோசலிசக் கட்சியையும் மற்றும் பின்னர் 1943 ஜுலையில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியையும் ஸ்தாபித்தனர்.

4-7. “மூன்றாம் அகிலம் கண்டிக்கப்பட்டது” என்ற தலைப்பில் லெஸ்லி குணவர்த்தனா ஸ்ராலினிசம் பற்றி விமர்சனம் ஒன்றை எழுதினார். அதில், ஏகாதிபத்திய யுத்தத்தை ஆதரித்த பிரிட்டன் மற்றும் பிரான்சில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், 1939ல் யுத்தத்துக்கு எதிரானவையாக சந்தர்ப்பவாத மாற்றம் எடுத்ததை வெளிச்சம்போட்டு காட்டினார். “ஜனநாயக சக்திகளுடன்” –பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்- கொள்கையற்ற சூழ்ச்சி நடவடிக்கைகளில் தொடங்கி, 1939 ஆகஸ்ட்டில் ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது வரை, கிரெம்ளினின் தலைகீழ் மாற்றங்களே இந்த கட்டுபாடற்ற அரசியல் ஊசலாட்டங்களை தூண்டுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார். “1914-18 யுத்தத்தில் இரண்டாம் அகிலம் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுத்தது. இன்று மூன்றாம் அகிலம், சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைக்கு அனைத்துலக புரட்சிகர இயக்கத்தை அடிபணியச் செய்வதன் மூலம், இன்னுமொரு காட்டிக்கொடுப்பைச் செய்கின்றது. இந்த உண்மையை சுட்டிக்காட்ட வேண்டியது எமது கடமை,” என அவர் முடித்தார். [8]

4-8. ஸ்ராலினிஸ்டுகளின் வெளியேற்றமும் லங்கா சமசமாஜக் கட்சி நான்காம் அகிலத்தின் பக்கம் திரும்பியமையும், அதன் வர்க்க அச்சில் ஒரு தீர்க்கமான மாற்றத்தையும் கட்சி நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் மறுநோக்குநிலைப்படுத்தப்பட்டதையும் குறித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையில் சோசலிசத்துக்கான போராட்டம், இந்தியாவிலும் சர்வதேசரீதியாகவும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் பிரிக்கமுடியாதபடி பிணைந்துள்ளது என்பதை லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் அடையாளங்கண்டுகொண்டனர். தொலைநோக்குடன் அடியெடுத்து வைத்த லங்கா சமசமாஜக் கட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக துணைக்கண்டம் பூராவும் தொழிலாள வர்க்கம் நடத்தும் போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு, நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக அனைத்து இந்தியக் கட்சியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தது. இந்த மூலோபாய மாற்றத்தின்படி, 1942ல் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (Bolshevik Leninist Party of India -BLPI) ஸ்தாபிக்கப்பட்டது. கிடைக்கத்தக்க லங்கா சமசமாஜக் கட்சியின் வரலாறுகள், 1950களில் அடுத்துவந்த அதன் சீரழிவுகளை பிரதிபலிக்கின்ற முகமாக ஒன்று அது இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி அனுபவங்களை அலட்சியம் செய்துள்ளது, அல்லது புரட்சிகர கற்பனைமகிழ்வாதத்தின் ஒரு நம்பிக்கையற்ற சாகசமாக அதைக் கணித்தது. ஆனால், மிகவும் சரியாக, சமசமாஜவாதம் என்ற தீவிரவாத, தேசியவாத வரம்பில் இருந்து பிரிந்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் தன்னை திசையமைவுபடுத்திக் கொண்டதனாலேயே, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் மார்க்சிசத்துக்கான போராட்டத்துக்கு அழிக்கமுடியாத பங்களிப்பை செய்ய முடிந்தது. அவை இன்றைய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தீர்க்கமான அரசியல் மற்றும் தத்துவார்த்த படிப்பினைகளை தொடர்ந்து தம்மகத்தே கொண்டிருக்கின்றன.

4-9. யுத்தம் நெருங்கி வந்த நிலையில், ஸ்ராலின் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலத்தை அழிக்கவும், எல்லாவற்றுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கியையே ஒழித்துக் கட்டவும் முயற்சித்தார். யுத்தத்தினால் நிச்சயமாக ஏற்படக்கூடிய புரட்சிகர எழுச்சிகள், சோவியத் ஒன்றியம் உட்பட ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை பெருமளவில் பலப்படுத்தும், அது சோவியத் அதிகாரத்துவத்தை நேரடியாக சவால் செய்யும் என ஸ்ராலின் அச்சமடைந்தார். நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னதாக, ஜி.பீ.யூ., ட்ரொட்ஸ்கிச இயக்கத்துக்குள் ஊடுருவியிருந்த முகவர் வலையமைப்பின் உதவியுடன், ட்ரொட்ஸ்கியின் செயலாளர்களில் ஒருவரான எர்வின் வொல்ஃப், ஜி.பீ.யூ. வில் இருந்து பிரிந்து சென்று ட்ரொட்ஸ்கியை ஆதரிப்பதாக அறிவித்த இக்னாஸ் ரெய்ஸ், ட்ரொட்ஸ்கியுடன் நெருக்கமாக வேலை செய்து வந்த அவரது மகன் லியோன் செடொவ், நான்காம் அகிலத்தின் செயலாளர் ருடொல்ஃப் கிளெமென்ட் ஆகியோரைக் கொன்றது. 1940 மே மாதம் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, 1940 ஆகஸ்ட் 20 அன்று, மெக்சிக்கோ, கொயோகானில் அவரது வீட்டில் வைத்து ஜி.பீ.யூ. முகவரான ராமொன் மெர்க்காடர் ட்ரொட்ஸ்கியை தாக்கினார். மறுநாள் ட்ரொட்ஸ்கி உயிரிழந்தார். ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை, அந்த நூற்றாண்டின் அரசியல் குற்றமாக இருந்ததோடு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு கடும் அடியாக விழுந்தது. அவர், ரஷ்யப் புரட்சியில் லெனினுடன் இணைத் தலைவராகவும், ஸ்ராலினிசத்தின் சமரசமற்ற எதிரியாகவும், மற்றும் 19ம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பெரும் புரட்சிகர தொழிலாளர் இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட உன்னத மார்க்சிச பாரம்பரியங்களின் கடைசி மற்றும் மிக உயர்ந்த பிரதிநிதியாகவும் இருந்தார்.

5. இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் ஸ்தாபிதம்

5-1. 1939 செப்டெம்பரில், ஒரு பக்கம் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையிலும் மறுபக்கம் நாஜி ஜேர்மனிக்கும் அதன் பங்காளிகளுக்கும் இடையிலும் மோதல்கள் வெடித்ததில் இருந்தே, லங்கா சமசமாஜக் கட்சி யுத்தத்திற்கு எந்தவொரு ஆதரவும் கொடுப்பதை உறுதியாக எதிர்த்து வந்தது. இலங்கை தேசிய காங்கிரஸின் தலைவர் டி.எஸ். சேனாநாயக்க, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு “மனப்பூர்வமான முழு ஆதரவை” கொடுத்து அரச சபையில் தீர்மானமொன்றை கொண்டுவந்தபோது, இரு ஏகாதிபத்திய முகாங்களுக்கு இடையிலான யுத்தத்தை கண்டனம் செய்த பிலிப் குணவர்த்தனா, “எந்தவொரு ஏகாதிபத்திய யுத்தத்தினதும் பங்காளியாக இருக்க நாம் மறுக்கின்றோம். நாம் சகல ஏகாதிபத்திய யுத்தங்களையும் சுரண்டல்களையும் எதிர்க்கின்றோம். ஒரு நாடு யுத்தத்தினுள் இருப்பதனால் வர்க்கப் போராட்டம் நின்றுவிடாது,” எனப் பிரகடனம் செய்தார்.[9] 1939 டிசம்பரில் முல்லோயா தோட்டத்தில் தொடங்கிய பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலான வேலைநிறுத்த அலைகளில் லங்கா சமசமாஜக் கட்சி முன்னணிப் பாத்திரம் வகித்தது. அந்தத் தோட்டத்தில் தேயிலைத் தொழிற்சாலையில் வேலை செய்த ஒரு தொழிலாளியான கோவிந்தன் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வேலைநிறுத்தம் விரிவடைந்து, 1940 மே மாதம் வேவெஸ்ஸ தோட்டத்தில் தொழிலாளர் சபை ஒன்றை அமைத்ததுடன் அது உச்சகட்டத்தை அடைந்த நிலையில், முன்னணி தோட்ட உரிமையாளர்கள் லங்கா சமசமாஜக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரினர். “இலங்கையில் நிலைமை மோசமடைந்து வருவதானது, இந்தியாவில் சந்தேகத்துக்கிடமற்ற முறையில் மிகப்பெருமளவு எதிர்விளைவுகளையும் தரக்கூடியவாறு, இரத்தக்களரி மற்றும் வன்முறையை நோக்கி வழியமைக்கக் கூடும்” என அவர்கள் எச்சரித்தனர். பொலிசார் தேயிலைத் தோட்டங்கள் பூராவும் ஒரு அச்ச சூழ்நிலையை கட்டவிழ்த்துவிட்டனர். பாரிஸ் நகரம், நாஜி இராணுவத்திடம் தோல்வியடைந்து சில நாட்களே ஆகியிருந்த ஜூன் 18 அன்று, லங்கா சமசமாஜக் கட்சி தடை செய்யப்பட்டதோடு பிலிப் குணவர்த்தனா, என்.எம். பெரேரா, கொல்வின் ஆர். டி சில்வா, எட்மன்ட் சமரக்கொடி ஆகிய நான்கு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இராணுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த போதும், யுத்த காலம் பூராவும் இலங்கையில் சட்டவிரோதமாக தொடர்ந்தும் செயற்படுவதற்குரிய தயாரிப்புகளை கட்சி ஏற்கனவே மேற்கொண்டிருந்தது.

5-2. 1940 மே மாதத்தில், இந்தியாவில் ட்ரொட்ஸ்கிசக் குழுக்களை தொடர்புகொண்டு அனைத்து-இந்திய கட்சியொன்றுக்கான அடித்தள வேலைகளைத் தொடங்குவதற்காக லங்கா சமசமாஜக் கட்சி இந்தியாவுக்கு உறுப்பினர்களை அனுப்பத் தொடங்கியது. அஜித் குமார் முகர்ஜி ரோய் மற்றும் கமலேஷ் பனர்ஜி தலைமையில் கல்கத்தாவிலும், ஒன்கர்நாத் வர்ம சாஸ்திரி தலைமையில் கான்பூர் தொழிற்துறை நகரிலும் மற்றும் சந்திரவதன் ஷுக்லா தலைமையில் மும்பையிலுமாக மூன்று குழுக்களின் ஆதரவை லங்கா சமசமாஜக் கட்சி வென்றது. சாஸ்திரி, ஷுக்லா இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of India -CPI) உறுப்பினர்களாக இருந்த போதிலும், கட்சி மக்கள் முன்னணிவாதத்தின் பக்கம் திரும்பியதை எதிர்த்த அவர்கள், 1930களின் கடைப்பகுதியில் கட்சியில் இருந்து வெளியேறினர். தடை செய்யப்பட்டிருந்த நிலைமையின் கீழும் இந்தியா, பர்மா மற்றும் இலங்கைக்கும் ஒரே ட்ரொட்ஸ்கிசக் கட்சிக்கான அடித்தளத்தை இடுவதற்காக 1940 டிசம்பரிலும் 1941 மார்ச்சிலும் கண்டியில் இரு இரகசியக் கூட்டங்களை லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் நடத்தியிருந்தனர். சிறையில் இருந்த லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள் தமது சிறைக்காவலரை வென்றெடுத்திருந்த காரணத்தால் இரு கூட்டங்களிலும் அவர்களும் பங்குபற்றியிருந்தனர். இரண்டாவது கூட்டத்தில் இந்தியாவில் இருந்தும் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். இந்தியாவில் ஆழமான புரட்சிகர தாக்கங்களைக் கொண்ட வெடிப்பு நிலைமை அபிவிருத்தியடைவதை உணர்ந்த அநேக லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்கள், இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். 1942 ஏப்பிரல் 7 அன்று, தாமிருந்த கண்டி சிறைச்சாலையில் இருந்த தமது சிறைக் காவலருடன் வெளியேறிய நான்கு லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர்கள், பொலிஸ் சுற்றிவளைப்புக்களையும் கடந்து வெற்றிகரமாக இந்தியாவுக்குச் சென்றனர். 1942 மே மாதம், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இந்திய ட்ரொட்ஸ்கிசத் தலைவர்களுக்கு இடையிலான கூட்டமொன்றில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ..) உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு வேலைத் திட்டமொன்று நிறைவேற்றப்பட்டதோடு நான்காம் அகிலத்தில் இணைந்துகொள்ளவும் கோரப்பட்டது.

5-3. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டமை, இந்தியத் துணைக்கண்டத்தில் புரட்சிகர மார்க்சிசத்துக்கான போராட்டத்தில் ஒரு மைல் கல்லை பிரதிநிதித்துவம் செய்தது. இந்திய துணைக் கண்டத்தினுள் ட்ரொட்ஸ்கிசத்தை அறிமுகப்படுத்துவதில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தலைவர்கள் செய்த சாதனைகளில் இருந்து, அதைத் தொடர்ந்து அவர்கள் செய்த துவொன்றும் கூட, பிரித்து விட முடியாது. இலங்கையில் சோசலிசத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பு விடுத்து, 1935இல் லங்கா சமசமாஜக் கட்சி நிறைவேற்றிய மேலெழுந்தவாரியான அழைப்பிற்கு மாறாக இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் வேலைத் திட்டமானது பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தது. அது, இலங்கையில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டமும், இந்தியாவிலும் சர்வதேச அளவிலுமான சோசலிசப் புரட்சியுடன் முழுமையாகப் பிணைந்துள்ளது என்பதைக் கண்டுணர்ந்து அதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த வேலைத் திட்டமானது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, முதலாளித்துவத்தின் தோற்றம், பல்வேறு வர்க்கங்களதும் மற்றும் சகல அரசியல் கட்சிகளதும் பாத்திரம் பற்றி பூரணமான ஆய்வினைச் செய்ததோடு நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இடைமருவுக் கோரிக்கைகளின் ஒரு வரிசையை விரிவுபடுத்தியிருந்தது.

5-4. இந்திய தேசிய காங்கிரஸின் (.என்.சி.) சமரச அரசியலையும், நிலப் பிரபுக்களுடன் அது கொண்டுள்ள நெருங்கிய உறவையும் மற்றும் 1920களின் முற்பகுதியிலும் 1930களிலும் பெரும் வெகுஜன ஒத்துழையாமை இயக்கத்தை அது காட்டிக்கொடுத்ததையும் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. காந்தியின் “அகிம்சையின்” பக்கம் கவனத்தை திருப்பிய அது, இந்தக் கொள்கையின் ஊடாக “முதலாளித்துவமானது போராட்டத்தின் வடிவத்தையும் சீற்றத்தையும் கட்டுப்படுத்தி, அது புரட்சிகர நீரோட்டத்தில் கலந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம், தேசிய இயக்கங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றது” என விளக்கியது. இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு பல-வர்க்கக் கட்சியாக இருப்பதாக அறிவிப்பதன் மூலம், அதனுடன் தமக்குள்ள உறவை நியாயப்படுத்த ஸ்ராலினிஸ்டுகள் எடுத்த முயற்சிகளை “வெளிப்படையான மோசடி” என இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி கண்டனம் செய்தது. காங்கிரஸ், எல்லாவற்றுக்கும் மேலாக அதன் அரசியல் தலைமை, 1925-27 புரட்சியை நசுக்கிய சீனாவின் முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு எல்லா வகையிலும் ஒத்த இயல்பைக் கொண்டுள்ளது என அது எச்சரித்தது.

5-5. இந்திய முதலாளித்துவம் நிலப்பிரபுக்களுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு விவசாயிகளின் மிகவும் அடிப்படையான தேவைகளைக் கூட இட்டு நிரப்ப அது இயல்பிலேயே இலாயக்கற்றுள்ளதை வெளிப்படுத்தியது. “விவசாயிகள் தமக்குத்தாமே வழங்கிக்கொள்ள முடியாத புரட்சிகரத் தலைமை, நகர்ப்புற வர்க்கங்களில் இருந்தே தோன்ற முடியும். முதலாவதாக, இந்திய முதலாளித்துவம் அத்தகைய தலைமையை வழங்குவது சாத்தியமற்றது. ஏனென்றால் விவசாயிகளை ஒட்டுண்ணித்தனமாக சுரண்டுவதில் பெருமளவில் அதுவும் பங்கு பெறுகின்ற நிலையில், நிலப் பிரச்சினையிலேயே அது முற்றிலுமாக பிற்போக்கானதாக இருக்கிறது,. எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பலவீனத்தையும் ஏகாதிபத்தியத்திலேயே அது தங்கியிருப்பதையும் கணக்கிட்டுப் பார்க்கும் போது, அது ஆட்சிக்கான எதிர்வரும் போராட்டத்தில் ஒரு எதிர்ப் புரட்சி பாத்திரத்தை ஆற்றுவதற்கான விதியைக் கொண்டிருக்கிறது.”[10] அதிகாரத்துக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பின்னால் விவசாயிகளை, குறிப்பாக அதன் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டுக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு வழிமுறையாக, “இழப்பீடு தராமல் நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது” என்பதில் தொடங்கி “உழுபவருக்கே நிலம் சொந்தம்”, “விவசாயத்துக்காக பெற்றுள்ள கடன்களை இரத்து செய்தல்” போன்ற சுலோகங்கள் உட்பட்ட கோரிக்கைகளின் ஒரு வரிசையை இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி விரிவுபடுத்தியது.

5-6. 1920ல் ஸ்தாபிக்கப்பட்ட, ஸ்ராலினிசத்தால் முற்றிலுமாக சீரழிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றும் பாத்திரத்தை இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. சீனாவில் போல், இந்திய தேசியக் காங்கிரஸில் உருவாகியிருந்த முதலாளித்துவத்தின் “புரட்சிகர” பகுதி என்றழைக்கப்பட்டதுடன் ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கொமின்டேர்ன் (மூன்றாவது அகிலம்) 1920களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிவுறுத்தியது. காங்கிரஸை இடதுபக்கம் உந்தித்தள்ளும் நோக்குடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது சக்தியை ஒரு முதலாளித்துவ ஜனநாயக வேலைத்திட்டத்துடனான தொழிலாளர் மற்றும் விவசாயிகளைக் கொண்ட “இரு வர்க்க”க் கட்சிகளை கட்டியெழுப்புவதை நோக்கி மேலும் குவிமையப்படுத்தப்பட்டது. அதன் மூலம், அதன் வர்க்க சுயாதீனத்தை மேலும் அழித்துக்கொண்டதோடு தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்துக்காக காத்திரமாக நின்று போராட இலாயக்கற்றதாக குன்றிப் போனது. 1930களின் முற்பகுதியில், மூன்றாவது காலகட்ட வழியைப் பின்பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ராலினிச-மென்ஷிவிக்குகளின் இரண்டு-கட்ட புரட்சி தத்துவத்திற்கு தொடர்ந்து வக்காலத்துவாங்குவதுடன் சேர்த்து இந்திய தேசியக் காங்கிரஸ் மீதான வெற்று வாய்ச்சவடால் கண்டனங்களைச் சேர்த்துக் கொண்டது. இரண்டாவதாக நடந்த பெரும் வெகுஜன அடிபணியாமை இயக்கத்தில் இருந்து மிகவும் தொலைவில் நின்ற அது, காங்கிரஸ் தலைமைத்துவத்தை நேரடியாக சவால் செய்ய மறுத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1930களில் மக்கள் முன்னணி பக்கம் திரும்பிய நிலையில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாக மிகவும் பகிரங்கமாக பண்பற்ற முறையில் புகழ்பாடியது. காங்கிரஸ் 1935 அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும்பாலான மாகாணங்களில் அமைச்சரவைகளை ஸ்தாபித்ததன் மூலம் காலனித்துவ ஆட்சியின் ஒரு பங்காளியாக ஆனபிறகும் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு செய்தது. 1930களின் பிற்பகுதி, காங்கிரஸ் அமைச்சரவைகளுடன் நேரடியாக மோதலுக்கு வந்த தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணம் மிக்க எழுச்சியையும் மற்றும் விவசாயிகள் சபைகள் (கிஸான் சபா) வேகமாக வளர்ச்சியடைந்தது உட்பட விவசாயிகளின் போராட்ட அலைகளையும் சந்தித்தது. ஸ்ராலினிஸ்டுகள் இத்தகைய இயக்கங்களை இந்திய தேசிய காங்கிரசிற்கு பின்னால் பிணைத்துவிடுவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை பொருளாதார கோரிக்கைகளுடன் மட்டுப்படுத்துவதற்கும், காங்கிரஸ் தலைமையுடன் மோதலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சி ஜமீன்தார் நிலப்பிரபுத்துவ முறையைத் தூக்கிவீச அழைப்புவிடுப்பதைக் கைவிடவும் முனைந்தனர்.

5-7. 1939 ஆகஸ்ட்டில் ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கை கையெழுத்தானதை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாசிசத்துக்கு எதிராக “ஜனநாயக” சக்திகளை ஆதரிப்பதில் இருந்து, யுத்தத்தை எதிர்ப்பதற்கு மாறிக்கொண்டது. 1941 ஜூனில், சோவியத் ஒன்றியத்தின் மீது நாஜிக்கள் படையெடுத்ததை அடுத்து இன்னுமொரு முறை தலைகீழாக மாறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரிட்டனுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்ததோடு தொழிலாள வர்க்கத்தினுள் வேலை நிறுத்தங்களை கலைப்பதில் பிரதானமாக செயற்பட்டதுடன், ஏகாதிபத்திய யுத்தத்துக்காக வக்காலத்து வாங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகத்தை சாராம்சப்படுத்தி இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி பிரகடனம் செய்ததாவது: “இன்று இந்த நடத்தை, மிகவும் வெட்கக்கேடானதும், எல்லாவற்றையும் விட கொடூரமானதுமாகும். எதிர்ப்புரட்சிகர கிரேம்ளின் கும்பலுக்கு அடிமைத்தனமாக கீழ்ப்படிகின்ற காரணத்தால், அவர்கள் ஏகாதிபத்திய யுத்தத்துக்கு நிபந்தனையற்ற மற்றும் செயலூக்கமான ஆதரவைக் கொடுக்க பகிரங்கமாக வக்காலத்து வாங்குகிறார்கள். தேசிய முன்னணி என்ற தன் போலிக் கோட்பாட்டைக் கொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரப் போராட்டத்தின் தலைமையை துரோகத்தனமான முதலாளித்துவ வர்க்கத்திடம் கையளிப்பதன் மூலம் சீனப் புரட்சியின் காட்டிக்கொடுப்பை மீண்டும் அரங்கேற்றுவதற்கு தயாராக உள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அது ரஷ்ய புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்தான நன்மதிப்பை சுவீகரித்துக்  கொள்ள முயற்சிக்கின்ற நிலையில், இன்று இந்திய தொழிலாள வர்க்கத்தினுள் அது மிக மிக ஆபத்தான செல்வாக்கினைக் கொண்டுள்ளது.[11]

5-8. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் (Congress Socialist Party - CSP) பக்கம் திரும்பிய இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி அறிவித்ததாவது: “ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் முதலாளித்துவத்துக்கு முற்றுமுழுதாய் கீழ்ப்படிகின்ற ஒரு கொள்கையைப் பின்பற்றி வந்திருக்கின்ற இக்கட்சி இன்று தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அதற்கு எந்தவொரு அடித்தளமும் இல்லாத நிலையை எட்டியிருக்கிறது. சுயாதீனமாக இருப்பதாக கூறிக்கொண்டதையும் கைவிட்டிருக்கின்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, அதற்குள் செயற்பட்ட கம்யூனிஸ்டுகளால் பெரிதாக பிளவுபட்டு, இன்று அரசியல் சாரம் எதுவுமில்லாத ஒரு வெற்று கூடாக இருக்கிறது.” அது வலியுறுத்தியது “தான் திரட்டிக்கொண்டுள்ள வரலாற்று அனுபவங்களை, குறிப்பாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை, அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர மூலோபாயத்தைக் கொண்டு இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியால் மட்டுமே புரட்சிகர வெற்றியை நோக்கி தொழிலாள வர்க்கத்தை வழிநடத்த முடியும்.”[12]  

5-9. நான்காம் அகிலம், ஏகாதிபத்திய சதிக்கும் தாக்குதலுக்கும் எதிராக சோவியத் ஒன்றியத்தை பாதுகாத்தமைக்கு இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி உறுதியான ஆதரவைக் கொடுத்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்புடன், அமெரிக்க பகுதியான சோசலிசத் தொழிலாளர் கட்சியில் (Socialist Workers Party) மக்ஸ் ஷட்மான், ஜேம்ஸ் பேர்ன்ஹாம், மார்டின் எபெர்ன் ஆகியோர் தலைமையிலான ஒரு பகுதியினருக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை ட்ரொட்ஸ்கி முன்னெடுத்தார். அவர்கள், சோவியத் ஒன்றியம் யுத்தத்துக்குள் இழுபட்டுச் செல்லும் ஒரு நிகழ்வில் அதை தொடர்ந்தும் ஒரு தொழிலாளர்களின் அரசாக அதைக் கருத முடியாது, அதைப் பாதுகாப்பதற்காக நான்காம் அகிலம் அழைப்பு விடுக்கக் கூடாது என வாதிட்டனர். ஆயினும், சோவியத் ஒன்றியத்தின் மீது, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினதும் அதன் காட்டிக்கொடுப்புகளதும் தாக்கம் இருந்தபோதும், அது ரஷ்யப் புரட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயப்படுத்தப்பட்ட சொத்து உறவுகளிலேயே இன்னமும் தங்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் ஒரு “அதிகாரத்துவ கூட்டாண்மை” என்ற பேர்ன்ஹம்மின் மறுவரையறைக்குப் பின்னால், சோவியத் ஒன்றியம் மார்க்சிசத்தால் முன்கணிக்கப்படாத, ஒரு நிர்வாக உயர்தட்டினால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற மற்றும் இயக்கப்படுகின்ற ஒரு புதிய வடிவிலான சமுதாயத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்கிற அவநம்பிக்கையான முடிவு இருந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தொழிலாளர் அரசின் ஒரு தற்காலிகமான புற்றுநோய் போன்ற மிகைவளர்ச்சியாகக் கருதுவதற்குப் பதிலாக சமூகத்தின் ஒரு நிரந்தரமான அம்சம் போல இவ்வாறு ஏற்றுக் கொள்வதென்பது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும் ஏகாதிபத்திய சகாப்தத்தின் இயல்பு முதலாளித்துவத்தின் மரண ஓலமாக ஆகியிருப்பதை நிராகரிப்பதில் இருந்தும் தோன்றியிருந்தது. பேர்ன்ஹாம் மற்றும் ஷட்மன் அபிவிருத்தி செய்த வாதங்கள், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தோன்றிய மார்க்சிசத்துக்கு எதிரான நெடிய தாக்குதல்களுக்கு கட்டியம் கூறுவதாக இருந்தது. இவர்களது முடிவுகள் வேறுபட்டதாக இருந்தாலும் இந்த சகல திருத்தல்வாத குழுக்களும், அது “அரச முதலாளித்துவத்தின்” பல்வேறு தத்துவார்த்த வடிவங்கள் என்றாலும் சரி, அல்லது, மிஷேல் பப்லோவின் “அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு உருக்குலைந்த தொழிலாள அரசுகள்” என்ற தத்துவமென்றாலும் சரி, அவை ஸ்ராலினிச அரசுகள் வரலாற்று ஏற்புடைமையை கொண்டிருப்பதாகக் கருதியதோடு தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தி என்பதையும் நிராகரித்தன.

தொடரும்...

பின் குறிப்புகள்:

3. லியோன் ட்ரொட்ஸ்கி, இடைமருவு வேலைத் திட்டம்: முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும். பக்கம் 3.

4. நகலில் வலியுறுத்தப்பட்டுள்ளது; அதே நூல்.

5. நகலில் வலியுறுத்தப்பட்டுள்ளது; அதே நூல்.

6. லியோன் ட்ரொட்ஸ்கியின் கட்டுரைகள் Writings of Leon Trotsky- 1939-40), (நியூ யோர்க்: பாத்பைன்டர் அச்சகம், 2001) பக்கம் 29-30.

7. அதே நூல், பக்கம் 30-31

8. [Blows against the Empire; Trotskyism in Ceylon the Lanka Sama Samaja Party, 1935-1964 (ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அடி: இலங்கையில் ட்ரொட்ஸ்கிசம்; லங்கா சமசமாஜக் கட்சி, 1935-1964) :(London: Porcupine Press: Socialist Platform, 1997)  பக்கங்கள் 64-67]

9. [ஜோர்ஜ் ஜான் லெர்ஸ்கியின் இலங்கையில் ட்ரொட்ஸ்கிஸத்தின் தோற்றம்: லங்கா சமசமாஜக் கட்சி பற்றி ஒரு வரலாற்று ஆவணம்,1935-1942, என்ற நூலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, ஹூவர் நிறுவன வெளியீடு, பக்கம் 206]

10. சார்ல்ஸ் வெஸ்லி எர்வின் எழுதிய, Tomorrow is Ours: The Trotskyist Movement in India and Ceylon, 1935–48 (நாளை நமது: இலங்கையிலும் இந்தியாவிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கம்) பக்கம் 300.

11. அதே நூல், பிற்சேர்க்கை, பக்கம் 304.

12. அதே நூல், பக்கம் 305.