சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
(இலங்கை)

WSWS : Tamil : நூலகம்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11
பகுதி 12
 

 

 
The New Course 1923
 

The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part 1

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 3

By the Socialist Equality Party (Sri Lanka)
27 March 2012

Use this version to print | Send feedback

6. இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கம்

6-1. இந்தியாவில் ஒரு அரசியல் எழுச்சி பற்றிய இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் முன்னறிவிப்பு சரியானது என நிரூபணமானது. கொந்தளிப்பு மிகுந்த இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கமானது அது உருவாக்கப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள்ளேயே 1942 ஆகஸ்டில் வெடித்தது. காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக யுத்தத்தை எதிர்த்ததோடு, 1939 இலையுதிர் காலத்தில் அதன் அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகினர். ஆனால் அதன் எதிர்ப்பு, குடிமக்களின் தனிநபர் அடையாள ஒத்துழையாமையாக மட்டுப்படுத்தப்பட்டது. பசுபிக்கில் யுத்தம் வெடித்ததை அடுத்து, இந்தியா மீது ஜப்பான் உடனடியாக படையெடுக்கக் கூடிய ஆபத்தானது பிரிட்டனை நெருக்குவதற்கு தங்களுக்கு ஒரு பெரும் நெம்புகோலைக் கொடுத்திருக்கின்றது என காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் கணக்கிட்டனர். பிரிட்டனின் யுத்த முயற்சிகளுக்கு இந்தியா அடிபணிந்தமையால் உருவான சமூக-பொருளாதாரக் குழப்பம் பெருகி வந்த நிலைமையின் கீழ், காங்கிரஸ் வெகுஜன அமைதியின்மை தோன்றுவதை முன்கூட்டியே கட்டுப்பாட்டில் கொள்ள முயற்சித்தது. ஆகஸ்ட் 7 அன்று, காங்கிரஸ் செயற் குழு, மத்திய பம்பாயின் ஒரு மிகப்பெரும் திறந்தவெளிப் பிரதேசமான கொவாலியா டேங்க் மைதானத்தில் பிரமாண்டமான கூட்டத்தின் முன்னிலையில், “பிரிட்டனை முறையாக வெளியேறக்” கோரும் ஒரு வெகுஜன அஹிம்சைப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானமொன்றை பற்றி ஆராய்ந்தது. அந்த செயற்குழுவில் இருந்த ஸ்ராலினிச உறுப்பினர்கள் தீர்மானத்தை பகிரங்கமாக எதிர்த்தமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பெரும் அரசியல் அடியாக விழுந்தது.

6-2. காங்கிரசால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து பம்பாய் கூட்டத்தில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி விநியோகித்த அதன் துண்டுப் பிரசுரம், விவசாயிகள் குழுக்கள் மூலம் நிலங்களைக் கைப்பற்ற வழிவகுக்கும் கிராமப்புற வரி-செலுத்தாமை மற்றும் வாடகை-செலுத்தாமை என்ற பிரச்சாரத்தின் ஆதரவுடன், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு பிரமாண்டமான பொது அரசியல் தாக்குதலுக்கு” அழைப்பு விடுத்தது. அவ்வாறு செய்ததன் மூலம், இந்தியத் தொழிலாளர்களுக்கு ட்ரொட்ஸ்கி எழுதிய கடிதத்தில் உள்ளடங்கியிருந்த ஆலோசனையை இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி பின்பற்றியது: பெரிய பிரித்தானியாவின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டப் பாதையில், ஒரு சிறிய அடியையாவது முன் எடுத்து வைப்பதற்கு இந்திய முதலாளித்துவம் நெருக்கப்படும் நிலையில், அத்தகைய ஒரு நடவடிக்கைக்கு தொழிலாளர்கள் இயற்கையாகவே ஆதரவளிப்பர். ஆனால், அவர்கள் தமது சொந்த வழிமுறையிலேயே அதை ஆதரிப்பர்: பெரும் கூட்டங்கள், துணிவான சுலோகங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் ஒழுங்கு செய்வதோடு, சக்திகளின் உறவு மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அவர்கள் மேலும் தீர்க்கமான போராட்ட நடவடிக்கைகளுக்கு செல்வர். இதைச் சரியாக செய்வதற்கு பாட்டாளிகளின் கைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய ஜனத்தொகையில் ஆதிக்கம் செலுத்தும் விவசாயிகளை தம்பின்னால் அணிதிரட்டிக்கொள்வதற்கு, தொழிலாளர்கள் முதலாளித்துவத்திடமிருந்து முற்றிலும் சுயாதீனமாக இருப்பது இன்றியமையாததாகும் [13]

6-3. ஆகஸ்ட் 8 அன்று, “செய் அல்லது செத்து மடி என்று கிளர்ச்சியூட்டும் வகையில் உரையாற்றிய போதும், அந்தத் தீர்மானம் வைஸ்ராயை பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவரும்  என்பதே காந்தியின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆயினும், பிரிட்டிஷ் அரசு முழு காங்கிரஸ் தலைமையையும் கைது செய்து பதிலளித்தது. இந்த நடவடிக்கை நாட்டின் பல பாகங்களிலும் சீற்றம் கொண்ட எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த அலைகளை கட்டவிழ்த்துவிட்டது. இந்த எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு ஆதரவளிப்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் முஸ்லிம் லீக்கும் இந்து மஹா சபையும் இணைந்துகொண்டன. காந்தி உட்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருக்க, இயக்கத்தின் தலைமையை காங்கிரஸ் சோசலிஸ்டுகள் பெற்றனர். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அவர்களிடம் எந்தவொரு முன்னோக்கும் இருக்கவில்லை. அவர்கள் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு நிலைநோக்கை வகுக்காததோடு, அதற்கு மாறாக நாசவேலை மற்றும் விவசாய கெரில்லாவாதம் போன்ற நடவடிக்கைகளால் அதைப் பயனற்றதாக்கினர். ஆர்ப்பாட்டங்களுக்குள் தன்னை செலுத்திக் கொண்ட இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி தொழிலாளர் மற்றும் மாணவர்களின் பக்கம் திரும்பியதோடு மும்பை, கல்கத்தா, சென்னை மற்றும் ஏனைய பெருநகரங்களிலான ஆர்ப்பாட்டங்களிலும் அல்லது அவற்றை ஏற்பாடு செய்வதிலும் பங்கெடுத்தது. அதனால் அது பெரும் விலைகொடுக்க நேரிட்டது. “பாசிஸ்டுகளுக்கு உதவி செய்யும் கிரிமினல்கள் மற்றும் ரவுடிகள்” என்று இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சிக்கு முத்திரை குத்திய ஸ்ராலினிஸ்டுகளின் உதவியுடன், பொலிசார் பல இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி உறுப்பினர்களையும் மூத்த தலைவர்களையும் கைது செய்தனர். கொடூரமான பொலிஸ் அடக்குமுறைக்கு மத்தியிலும் இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தில் பல மில்லியன் மக்கள் ஈடுபட்டதோடு இப்போராட்டம் பல மாதங்கள் தொடர்ந்தது. உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி, 1942 ஆகஸ்ட் முதல் 1943 மார்ச் வரையான காலப்பகுதியினுள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு 60,000 பேர் சிறை வைக்கப்பட்டனர். இந்த இயக்கம் பின்னடைவு கண்டதோடு, பிரிட்டன் ஜப்பானிய இராணுவத்தை தோற்கடித்த பின்னர், காங்கிரஸ் எஞ்சிய யுத்தகாலம்வரை தனது இந்தியாவை விட்டு வெளியேறு கோரிக்கையை கிட்டத்தட்ட முற்றாக கைவிட்டுவிட்டது.

6-4. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி முன்னெடுத்த இடைவிடாத போராட்டம் பிராந்தியம் முழுக்க ட்ரொட்ஸ்கிசத்தின் சிறப்பை பரவச் செய்தது. தடை செய்யப்பட்ட நிலைமை, பொலிஸ் சட்ட நடவடிக்கை மற்றும் யுத்த காலத்தில் நான்காம் அகிலத்தில் இருந்து தனிமைப்பட்டிருந்தமை போன்ற கடினமான நிலைமைகளின் கீழும், காங்கிரசுக்கோ அல்லது காங்கிரஸ் சோசலிஸ்டுகளுக்கோ இம்மியளவும் அரசியல் சலுகை வழங்காமல், அது தனது கவனத்தை இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தில், எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் பக்கம் குவியச்செய்திருந்தது. எவ்வாறெனினும், புரட்சிகர அலை பின்னடைவைக் கண்ட நிலையில், இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே கூர்மையான அரசியல் வேறுபாடுகள் தோன்றின. லங்கா சமசமாஜக் கட்சியை இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியாக மாற்றுவதிலேயே இந்த வேறுபாடுகளின் மூலத் தோற்றம் காணப்பட்டது. இந்த மாற்றமானது ஒரு புதிய பாட்டாளி வர்க்க சர்வதேசியவாத அச்சை நோக்கிய ஒரு அடிப்படை நகர்வைக் குறித்ததோடு தவிர்க்க முடியாமல் உட்கட்சி பதட்டங்களை உருவாக்கியது. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியை ஒரு லெனினிசக் கட்சியாக மீள்வடிவமைக்கும் டொரிக் டி சொய்ஸாவின் முயற்சிகளை பிலிப் குணவர்த்தனா எதிர்த்ததைச் சூழவே ஆரம்ப முரண்பாடுகள் தோன்றின. கொழும்பில் உள்ள “குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகள்” “வெகுஜனங்களில் இருந்து முழுமையாக துண்டித்துக்கொள்ளும் ஒரு குறுகிய சதிகாரக் கும்பலுக்குள்” கட்சியைத் திருப்பிவிட்டதாக பம்பாயில் இருந்த பிலிப் குணவர்த்தனா கண்டனம் செய்தார். 1942ல், அவரும் என்.எம். பெரேராவும் ஸ்தாபித்த தொழிலாளரது எதிர்ப்புப் பிரிவு, தொழிற்சங்கவாதிகளின் ஒரு தட்டை ஒன்றுதிரட்டியது. யுத்தத்தின் போது இலங்கையில், இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் தலைமறைவு வேலைகளுக்கு தலைமை வகித்த டி சொய்ஸா, போல்ஷிவிக் லெனினிச பிரிவொன்றை அமைப்பதன் மூலம் பதிலிறுத்தார்.

6-5. இத்தகைய குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகள் முதலில் தெளிவற்றதாக இருந்த அதே வேளை, இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தின் முடிவு மிகவும் அடிப்படையான முரண்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் அளவு மற்றும் அபிவிருத்தியையிட்டு பொறுமையிழந்த பிலிப் குணவர்த்தனாவும் என்.எம். பெரேராவும், 1943ல் சிறையில் இருந்தவாறே ஆவணம் ஒன்றை வெளியிட்டனர். “இந்தியப் போராட்டம் – அடுத்த கட்டம்” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த ஆவணம், தெளிவின்றி வரையறுக்கப்பட்ட ஒரு “ஐக்கிய புரட்சிகர முன்னணியில்” காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு குட்டி முதலாளித்துவ அமைப்புக்களுடன் ஒரு கொள்கையற்ற கூட்டிணைவுக்காக வாதிட்டது. இந்தத் திட்டமானது இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி கைவிட்ட சமசமாஜவாதத்தை நோக்கி மீண்டும் குறிப்பிடத்தக்க வகையில் பின்வாங்குவதாய் இருந்தது. சென்னையில் 1944ல் நடந்த மாநாட்டில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி, பிலிப் குணவர்த்தனா- என்.எம். பெரேரா ஆவணத்தை திட்டவட்டமாக நிராகரித்தது. “இந்தப் பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு தெளிவான புரட்சிகர வேலைத்திட்டத்துடன் இன்று இந்தியாவில் இருக்கின்ற ஒரே கட்சியை (அது சிறியதாக இருந்தாலும்) கலைத்துவிடுவதையும், மற்றும் அதன் இடத்தில் ஒரு பரந்த மத்தியவாதக் கட்சியை உருவாக்குவதையுமே விளைவாக்கும் என நாம் நம்புகிறோம்” என அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரகடனப்படுத்தியது.[14] எவ்வாறெனினும், இந்த முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருந்ததோடு, யுத்தம் முடிந்த பின்னர் பெரும் பலத்துடன் வெளிப்படவிருந்த அரசியல் பிரச்சினைகளின் முன்னோடியாகவும் இருந்தன.

7. யுத்தத்துக்குப் பிந்திய புரட்சிகர எழுச்சிகளை ஸ்ராலினிம் காட்டிக்கொடுத்தது

7-1. யுத்தத்தின் இரத்தக்களரி பயங்கரங்கள் யுத்தத்துக்குப் பிந்திய புரட்சிகர எழுச்சிகளை ஏற்படுத்தும் என்ற ட்ரொட்ஸ்கியின் முன்கணிப்பு, ஆசியா பூராவும் நிரூபிக்கப்பட்டது. ஜப்பானிய ஏகாதிபத்தியமானது சீனா, கொரியா மற்றும் அதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஏனைய நாடுகளில் முன்னெடுத்த படுகொலைகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த குற்றவியல் வழிமுறையுடன் சமாந்தரமாக இருந்தது. அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழப்புக்களை அதிகப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தீ பரவச்செய்யும் குண்டுகளை அதிகளவில் பயன்படுத்துவது உட்பட, ஜப்பானிய நகரங்கள் மீதான அமெரிக்காவின் உக்கிரமான குண்டுத் தாக்குதல்கள், 1945 ஆகஸ்ட்டில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகளை வீசுவதுடன் உச்சகட்டத்தை அடைந்தது. இந்தக் கடைசி இரு அட்டூழியங்களதும் பிரதான குறிக்கோள், புதிய ஆயுதத்தின் அழிவுகரமான பலத்தை சோவியத் ஒன்றியத்துக்கு எடுத்துக்காட்டுவதுடன், சோவியத் இராணுவங்கள் சீனா மற்றும் கொரியாவுக்குள் துரிதமாக முன்னேறிக்கொண்டிருந்த நிலையில், பசுபிக்கில் இடம்பெற்ற யுத்தத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவருவதுமாகும். பெருமந்தநிலையின் தீவிரமான சுமைகளைத் தொடர்ந்து, ஆறு வருடகால ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம், மனித குலத்தின் கண்களின் எதிரில் முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தியது. மதிப்பிழந்த ஆளும் வர்க்கங்கள் மீண்டும் தமது கட்டுப்பாட்டைத் தக்கவைக்க எடுத்த முயற்சிகள், தொழிலாள வர்க்கத்திடமிருந்து உறுதியான எதிர்ப்பையும் உலகம் பூராவும் புரட்சிகர எழுச்சிகளையும் தூண்டிவிட்டன. 

7-2. இடைமருவு வேலைத்திட்டம் விளக்கியது போன்று, புரட்சிகரத் தலைமையே மையப் பிரச்சினையாக இருந்தது. யுத்தத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் உத்வேகத்துடன் போராடிய அதேவேளை, ஜனநாயக சக்திகள் என சொல்லப்படுபவர்கள், பாசிஸ்டுகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளாலும் நான்காம் அகிலத்தின் பகுதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சளைக்காத ஒடுக்குமுறைகளால் நான்காம் அகிலம் கடுமையாக பலவீனமடைந்திருந்தது. மேலும், நாஜிக்கள் மீதான செஞ்சேனையின் வெற்றிகளால் யுத்தத்தில் இருந்து சோவியத் அதிகாரத்துவம் பெருமிதம் பொங்க வெளிவந்தது. ஆயினும், மேற்கில் வெற்றிகரமான புரட்சிகள், தனது ஆட்சிக்கு எதிராக சோவியத் தொழிலாள வர்க்கத்தின் இயக்கங்களுக்கு செயலூக்கம் கொடுக்கும் என ஸ்ராலின் அச்சம் கொண்டார். கிழக்கு ஐரோப்பாவில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சோவியத் செல்வாக்கை அனுமதிப்பதற்கு பிரதியுபகாரமாக முதலாளித்துவத்தை பேணிக்காப்பதற்கு உதவுவதன் பேரில், ஸ்ராலின் தெஹ்ரானிலும் (1943) யால்டாவிலும் (1945 பெப்பிரவரி) மற்றும் போஸ்ட்டாமிலும் (ஜூலை 1945) வைத்து, ரூஸ்வெல்ட் மற்றும் சேர்ச்சிலுடனும் ஒரு தொகை உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டார். பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் முதலாளித்துவக் கட்சிகள் பாசிசத்துக்கு மறைமுக ஆதரவு கொடுத்தும் வெளிப்படையாக ஒத்துழைத்தும் முழு சமரசம் செய்து கொண்டதோடு, இந்த நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், மொஸ்கோவின் கட்டளைகளைப் பின்பற்றி, எதிர்ப்புப் போராளிகளை நிராயுதபாணிகளாக்கி, முதலாளித்துவ அரசாங்கங்களில் அமைச்சுப் பொறுப்புகளோடு இணைந்துகொண்டதோடு தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன நடவடிக்கையையும் ஒடுக்கின. பிரான்சில் முதலாளித்துவ அரசாங்கத்தின் பாகமாக இருந்த பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி, அல்ஜீரியா மற்றும் இந்தோசீனா உட்பட பிரான்சின் காலனிகளின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்தது. ஜப்பானில், இதற்குச் சளைக்காத துரோகத்தனத்தை தொழிலாள வர்க்கத்தின் பிரமாண்டமான எழுச்சியைத் தணிப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றியது. ஸ்ராலினி இரண்டு-கட்ட தத்துவத்தின் விபரீதமான வடிவத்தின் அடிப்படையில், ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி, அமெரிக்க ஆக்கிரமிப்பானது “ஜனநாயகப் புரட்சியை” முன்னெடுக்கின்றது எனக் கூறிக்கொண்டதோடு, இந்த அடிப்படையில், ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தரின் கட்டளைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் வேலை நிறுத்த இயக்கத்தை அடிபணியச் செய்தது. இதன் விளைவாக, முதலாளித்துவ ஆட்சி காப்பாற்றப்பட்டதோடு ஜப்பான் ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கியமான பங்காளியாக மாறியது.

7-3. ஆசியாவில் காலனித்துவ-எதிர்ப்பு இயக்கங்களை காட்டிக்கொடுப்பதில் ஸ்ராலினித்தின் பாத்திரம் முதலாளித்துவத்தை பூகோள ரீதியில் மீண்டும் ஸ்திரப்படுத்துவதற்கு இன்றியமையாததாக இருந்தது. யுத்தத்தின் முடிவானது பிராந்தியம் பூராவும் வெகுஜனங்களின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கங்களை நிகரற்ற அளவில் உக்கிரமாக தூண்டிவிட்டது. இந்த மோதல்களில் பழைய ஐரோப்பிய சக்திகள் ஜப்பானால் நசுக்கித் தோற்கடிக்கப்பட்டமை, அவர்களது ஆசிய பேரரசுக்கான அடித்தளத்தை நொருக்கி விட்டிருந்தது. ஒவ்வொரு விடயத்திலும், அது இந்தோசீனாவில் பிரான்ஸ் என்றாலும் சரி, இந்தோனேஷியாவில் டச்சு என்றாலும் சரி, அல்லது மலேசியாவில் மற்றும் இந்திய உபகண்டத்தில் பிரிட்டன் என்றாலும் சரி, தமது நிலைகளில் கட்டுப்பாட்டை புதுப்பிக்க முன்னாள் காலனித்துவ ஆட்சிகள் எடுத்த முயற்சிகள், வெகுஜன எதிர்ப்பைச் சந்தித்தன. சீனா மற்றும் கொரியாவில் ஜப்பானிய ஆட்சியின் வீழ்ச்சியானது அமெரிக்க ஏகாதிபத்தியம் பதவியிருத்த முயன்ற சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான பரந்த இயக்கங்களுக்கு எழுச்சியூட்டியது.

7-4. 1934ல் எழுதப்பட்ட யுத்தமும் நான்காம் அகிலமும் என்ற நூலில், கிழக்கில் காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்திய ட்ரொட்ஸ்கி விளக்கியதாவது: “அவர்களது போராட்டம் இரு மடங்கு முற்போக்கானது: பின்தங்கிய மக்களை ஆசியவாதம், பிரிவுவாதம் மற்றும் வெளிநாட்டு அடிமைத்தனத்தில் இருந்து பிரிக்கிறது, அவர்கள் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராக சக்திவாய்ந்த அடிகளைக் கொடுக்கிறார்கள். ஆனால், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் காலதாமதமான புரட்சிகள், தேசிய அரசுகள் புத்துயிர்பெறும் ஒரு புதிய சகாப்தத்தைத் திறந்துவிட இலாயக்கற்றவை என்பதை முன்கூட்டியே தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு அரைக் காலனித்துவ நாடாகவும் இருந்த ரஷ்யாவில், காலங்கடந்து வந்த ஜனநாயகத் திருப்பம், சோசலிசப் புரட்சிக்கான அறிமுகமாக மட்டுமே இருந்தது போல், காலனிகளின் விடுதலையும் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு மிகப்பெரிய அத்தியாயமாக மட்டுமே இருக்கும் அந்த வகையில், யுத்தத்துக்குப் பிந்திய காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் ஜனநாயகக் கடமைகள், அனைத்துலக சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே அடையப்பட முடியும். ஆனால், அந்தப் பாதை ஸ்ராலினித்தால் தடுக்கப்பட்டுவிட்டது.

7-5. தென்கிழக்கு ஆசியா பூராவும், யுத்தத்துக்குப் பிந்திய காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களை தடம்புரளச் செய்வதில் ஸ்ராலினிக் கட்சிகள் கருவிகளாக பயன்பட்டுள்ளன. இதன் நீண்ட விளைவுகளுக்கு தொழிலாள வர்க்கம் இன்னமும் விலை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பிராந்தியத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அரசுகளில் எதுவும், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத்தரத்துக்கான உழைக்கும் மக்களின் அபிலாசைகளை இட்டு நிரப்ப முடியாதவையாக இருக்கின்றன. இந்தோனேஷியாவில், இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி (Indonesian Communist Party -PKI), சுகார்னோ முதலில் டச்சுக்காரர்களுடனும் பின்னர் அமெரிக்காவுடனும் சூழ்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டிருந்த போதிலும், அவர் தலைமையிலான தேசிய இயக்கத்துக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்தது. சுதந்திரத்துக்கு அமெரிக்கா கொடுத்த ஆதரவுக்கு பிரதியுபகாரமாக, சுகார்னோ 1948ல் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சியை இரத்தத்தில் மூழ்கடித்தார். இதில் ஆயிரக்கணக்கான இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஆயினும் கூட இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி சுகார்னோவுடன் கூட்டணியை புதுப்பித்துக்கொள்வதை நிறுத்தவில்லை. அது 1965-66ல் சி... ஆதரவிலான இராணுவ சதிக் கவிழ்ப்புக்கும் பாதை அமைத்தது. இந்த சதிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுமாக குறைந்தபட்சம் 500,000 பேர் உயிரிழந்ததோடு மூன்று தசாப்த கால சர்வாதிகாரம் நிலவியது. மலாயாவில், மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் (Malayan Communist Party - MCP) ஜப்பான்-விரோத மலாயன் மக்கள் இராணுவமும் பிரிட்டிஷ் படைகள் மீண்டும் வருவதை பகிரங்கமாக வரவேற்றதோடு, புதிய பிரிட்டிஷ் நிர்வாகம் தன்னை மீண்டும் ஸ்தாபித்துக்கொள்ள முயற்சித்த போது அதனுடன் ஒத்துழைத்தன. 1948ல் தனது கட்டுப்பாட்டை மீண்டும் பலப்படுத்திக்கொண்ட பிரிட்டன், மலாயா கம்யூனிஸ்ட் கட்சி மீது திரும்பியதோடு அடுத்த தசாப்தம் பூராவும் அதன் கெரில்லாப் படைகளை ஈவிரக்கமின்றி நசுக்கியது. அதன் பின்னரே பழமைவாத மலாய் இனவாதக் கட்சியான ஐக்கிய மலாயா தேசிய அமைப்பிடம் ஆட்சியை கையளித்தது. அதிலிருந்து இக்கட்சியே மலேசியாவை மேலாதிக்கம் செய்துவந்தது. லீ குவன் யூவுக்கும் மற்றும் அவரது மக்கள் நடவடிக்கைக் கட்சிக்கும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்தமையே, சிங்கப்பூரில் இன்றைய ஒரே-கட்சி பொலிஸ் அரசுக்கு அடித்தளம் அமைத்தது.

7-6. பிரான்ஸ் அதன் காலனிகள் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட செய்துகொள்வதற்கு ஹோ சி மின் தலைமையிலான இந்தோசீனா கம்யூனிஸ்ட் கட்சி (Indochinese Communist Party -ICP), குறிப்பா ஒரு குற்றவியல் பாத்திரத்தை ஆற்றியது. 1945 ஆகஸ்டில் ஜப்பான் சரணடைந்ததற்குப் பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு தற்காலிக அரசாங்கத்தை அமைத்ததோடு பிரிட்டன் மற்றும் பிரெஞ்சுப் படைகள் வந்திறங்கிய நிலையில் அந்த நாடுகளுடன் பேரம் பேசலுக்கு முயற்சித்தனர். தேசிய சுதந்திர இயக்கத்தின் வளர்ச்சியின் மத்தியில், லா லூட் குழு (La Lutte) மற்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் கழகத்தில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தொழிலாள வர்க்கத்தையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களையும் சுயாதீனமாக அணிதிரட்டப் போராடினர். சைகோனில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன ; மக்கள் குழுக்கள் பெருகத் தொடங்கின; ஒரு தற்காலிக மத்திய குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது. 1945 செப்டெம்பரில் பதட்ட நிலைமைகள் கூர்மையடைந்த நிலையில், மக்கள் குழுக்களை கலைத்த ஸ்ராலினிஸ்டுகள், தற்காலிக மத்திய குழுவையும் நசுக்கியதோடு லா லூட் தலைவர் டா து தௌ (Ta Thu Thau) உட்பட பெருந்தொகையான ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும் கொன்றனர். சுதந்திரத்தைப் பாதுகாப்பதென்பதற்கு வெகுதூரத்தில், பிரான்சுடனான இந்தோசீனா கம்யூனிஸ்ட் கட்சியின் ஒத்துழைப்பு, தெற்கில் காலனித்துவ ஆட்சியை மீண்டும் ஸ்தாபிப்பதற்கு மட்டுமே உதவியது. யுத்தத்துக்குப் பிந்திய புரட்சிகர எழுச்சி காட்டிக்கொடுக்கப்பட்டதற்கும் அதைத் தொடர்ந்து பிரெஞ்சு மற்றும் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் ஸ்ராலினிஸ்டுகள் செய்த சூழ்ச்சித்திட்டங்களுக்கும், வியட்னாம் மக்கள் துன்பகரமாக விலைகொடுக்கத் தள்ளப்பட்டனர். முப்பது ஆண்டுகால யுத்தம் நாட்டை அழித்ததோடு மில்லியன்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

7-7. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஸ்ராலினிஸ்டுகளின் காட்டிக்கொடுப்பு, மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக யுத்தத்தில் இருந்து எழுந்த அமெரிக்காவுக்கு, உலக முதலாளித்துவ பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஒரு தொடர் நடவடிக்கைகளை அமுல்படுத்த இயலுமையைக் கொடுத்தது. பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம், டாலரை தங்கத்துக்கு நிகராக ஒரு நிலையான வீதத்தில் நிறுத்துவதன் மூலம், டாலரை ஒரு உறுதியான பூகோள நாணயமாக ஸ்தாபித்தது; காப்புவரி மற்றும் வாணிபம் சம்பந்தமான பொது உடன்படிக்கை வர்த்தகத்தை விரிவாக்குவதையும் 1930களின் உள்நாட்டுத் தொழிலுக்கு பாதுகாப்பளிக்கும் அழிவுகரமான கொள்கைகள் மீண்டும் திரும்பிவருவதைத் தடுப்பதையும் இலக்காகக் கொண்டிருந்தது; அத்துடன் மேற்கு ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சேதமடைந்திருந்த பொருளாதாரங்களை மீளக் கட்டியெழுப்ப அமெரிக்கா கணிசமானளவு நிதியுதவி செய்தது. ஓரளவு முதலாளித்துவ ஸ்திரத்தன்மையை பெற்றுக்கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், “கம்யூனிசத்துக்கு” எதிராக அதன் “பனிப் போர்” எதிர்த் தாக்குதலை முன்னெடுத்தது. கிரேக்க மற்றும் துருக்கியின் வலதுசாரி ஆட்சிகளுக்கான அமெரிக்க ஆதரவு, மற்றும் மேற்கு ஐரோப்பாவை சோவியத்-எதிர்ப்பு கூட்டாக மாற்றிய மார்ஷல் திட்டத்தை முன்னெடுப்பது போன்றவை ஆரம்ப தாக்குதல்களாக இருந்தபோதிலும், அவை விரைவில் உலகமோதலாக விரிவடைந்தன. 1949 சீனப் புரட்சிக்கு பதிலிறுத்த அமெரிக்கா, சியோலில் அதன் வலதுசாரி எதேச்சதிகார ஆட்சியை தூக்கி நிறுத்த கொரியாவில் பிரம்மாண்டமாக இராணுவத் தலையீடு செய்தது. 1950-53ல் கொரிய யுத்தத்தில் மில்லியன் கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டதோடு தீவு நிரந்தரமாக பிளவுபட்டதாகவும் தழும்புபட்டதாகவும் ஆக்கப்பட்டது.

8. சீனப் புரட்சி

8-1. சீனாவில், யுத்தத்துக்குப் பிந்திய உடனடி காலகட்டத்தில் தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்த அரசியல் சிக்கல்கள் மிக அப்பட்டமானவையாக இருந்தன. 1925-27 புரட்சி தோல்வியடைந்தவுடன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புற உட்பகுதிகளுக்குள் பின்வாங்கியதோடு மேலும் மேலும் விவசாயிகளை தனது அடித்தளமாகக் கொண்டது. மூன்றாம் அகிலம் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடனுமான தனது தொடர்புகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்தும் பேணி வந்த அதேவேளை, அது விவசாயிகள் பக்கம் திரும்பியமையானது கட்சியின் வர்க்க அச்சை தொழிலாள வர்க்கத்தில் இருந்து விலகச் செய்தது. இரண்டு கட்டத் தத்துவம் மற்றும் தேசிய முதலாளித்துவத்துடனான வர்க்க ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிசக் கருத்தியலானது, விவசாய ஜனரஞ்சகவாதம் மற்றும் கெரில்லா யுத்த தந்திரோபாயங்கள் மற்றும் மூலோபாயத்தாலும் ஊக்குவிக்கப்பட்டது. கட்சியினுள் எப்பொழுதும் வலதுபக்கத்துக்கே சென்றுகொண்டிருந்த மாவோ சேதுங், 1935ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைப் பெற்றதோடு கட்சியின் நோக்குநிலையை விவசாயிகள் பக்கம் நகர்த்தினார். 1927ன் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட சீன இடது எதிர்ப்பு இயக்கத்தின் மீது ஸ்ராலினிஸ்டுகளின் உதவியுடன் கோமின்டாங்கால் பரந்தளவு ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது நகர்ப்புற மையங்களில் எஞ்சியிருந்ததோடு தொழிலாள வர்க்கத்தின் பக்கம் நோக்குநிலைப்படுத்தி இருந்தது.

8-2. 1932ல் சீன ஆதரவாளர்களுக்கு ட்ரொட்ஸ்கி எழுதிய தொலைபார்வை கொண்ட கடிதமொன்றில், மாவோ சேதுங்கின் விவசாய இராணுவத்திடமிருந்து தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி எச்சரித்தார். விவசாயிகளின் வர்க்க நிலைநோக்கின் அடிப்படை வேறுபாட்டை விளக்கிய ட்ரொட்ஸ்கி எழுதியதாவது: விவசாயிகள் இயக்கமானது பிரமாண்டமான நில உரிமையாளர்கள், இராணுவவாதிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் அதிக வட்டிக்காரர்களுக்கு எதிரானதாக செலுத்தப்படுகின்ற வரை அது ஒரு வல்லமை மிக்க புரட்சிகரக் காரணியாக இருக்கின்றது. ஆனால், விவசாயிகள் இயக்கத்தினுள்ளேயே மிகவும் சக்திவாய்ந்த சொத்துரிமை மற்றும் பிற்போக்கு நிலைப்பாடுகள் இருப்பதோடு, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது தொழிலாளர்களுக்கு விரோதமானதாக ஆகி அந்தப் பகைமையை தனது கைகளில் கிடைத்துள்ள ஆயுதங்கள் மூலம் அதை வெளிப்படுத்தக் கூடும். விவசாயிகளின் இரட்டைப் பண்பை  மறப்பவர் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல. முன்னேறிய தொழிலாளர்களுக்கு ‘கம்யூனிச’ முத்திரைகள் மற்றும் பதாகைகளில் இருந்து உண்மையான சமூக நிகழ்வுப்போக்கை பிரித்தறிவதற்கு கற்பிக்கப்பட வேண்டும்.”[15]

8-3. ட்ரொட்ஸ்கி மேலும் விளக்கியதாவது: “உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி என்பது, பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் அமைப்பாகும். ஆனால், சீனத் தொழிலாள வர்க்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு ஒடுக்குமுறை மற்றும் ஒழுங்கற்ற நிலைமையில் வைக்கப்பட்டிருந்ததோடு அண்மையிலேயே அது தனது மறுமலர்ச்சிக்கான அறிகுறியை புலப்படுத்தியது என்பதை மறந்துவிடக்கூடாது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நகர்ப்புற தொழிலாளர்களின் மலர்ச்சியில் உறுதியாகத் தங்கியிருக்கின்றபோது, அது தொழிலாளர்கள் ஊடாக விவசாயிகளின் யுத்தமொன்றுக்கு தலைமை வகிக்க முயற்சிப்பது ஒரு விடயம். உண்மையான கம்யூனிஸ்டுகளாக அல்லது பெயரை மட்டுமே கொண்டுள்ளவர்களாக இருக்கும், சில ஆயிரம் அல்லது பத்தாயிரக்கணக்கான புரட்சியாளர்கள், பாட்டாளிகளிடமிருந்து எந்தவொரு அக்கறைமிக்க ஆதரவையும் பெறாமல் விவசாயிகளின் யுத்தமொன்றில் தலைமையேற்பது என்பது முற்றிலும் மற்றொரு விடயமாகும். இதுதான் சீனாவின் உண்மையான நிலைமையாகும். இது தொழிலாளர்களுக்கும் மற்றும் ஆயுதபாணிகளான விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளின் ஆபத்துக்களை அதிதீவிர மட்டத்துக்கு கூர்மைப்படுத்த செயற்படுகின்றது. [16]

8-4. மாஸ்கோவின் கட்டளைகளைப் பின்பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1937ல் சீனா மீது படையெடுத்த ஜப்பானிய இராணுவங்களுக்கு எதிராக, சியாங் கேய் ஷேக்கின் ஆட்சியுடன் ஒரு மக்கள் முன்னணி கூட்டை அமைத்துக்கொண்டது. ஒரு ஒடுக்கப்பட்ட நாடான சீனா, ஜப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் செய்யும் யுத்தம், ஒரு முற்போக்கு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது என வலியுறுத்திய ட்ரொட்ஸ்கி, தனது நிலைப்பாட்டை “சமூக தேசபக்தி” மற்றும் “சியாங் கேய் சேக்கிடம் சரணடைதல்” என வகைப்படுத்திய உட்குழு போக்குகளை எதிர்த்தார். எவ்வாறெனினும், தொழிலாள வர்க்கம் யுத்தத்துக்கு ஆதரவளிப்பதில் அதனது அரசியல் சுயாதீனத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மாறாக, கோமின்டாங்குடனான ஒரு கூட்டணியை ஸ்தாபித்துக்கொண்டதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெகுஜனங்களின் நலன்களை முதலாளித்துவத்துக்கு அடிபணியச் செய்தது – அது தனது சொந்த நிலச் சீர்திருத்த வேலைத் திட்டத்தை கைவிட்டதோடு கோமின்டாங் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று தொழிலாளர்களின் நலன்களை வெளிப்படையாகக் கைவிட்டது. ஜப்பானிய தோல்விக்குப் பின்னர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களுடன் ஒத்துழைக்கும் ஸ்ராலினின் கொள்கையின் வழியில், கோமின்டாங் உடனான அதன் யுத்தகால கூட்டணியை தொடர்ந்தும் பேணுவதற்கு முயற்சித்தது.

8-5. சியாங் கேய் சேக், அமெரிக்காவின் உதவியுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான யுத்தத்துக்கு தயாரானதற்கு தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும், பனிப் போர் எழுந்து கொண்டிருந்த 1947 அக்டோபர் வரை கோமின்டாங் ஆட்சியை தூக்கி வீசுவதற்கு மாவோ இறுதி அழைப்பு விடுக்கவில்லை. மஞ்சூரியாவில் கோமின்டாங் எதிர்த்தாக்குதலில் இராணுவ ரீதியில் நிர்மூலமாக்கப்படும் நிலைமையை எதிர்கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் மத்தியிலான பரந்தளவு கொந்தளிப்பை சுரண்டிக்கொள்ளும் நோக்கில் தனது நிலச்சீர்திருத்தக் கொள்கையை புதுப்பித்தது. சியாங் கேய் ஷேக்கின் தோல்வியில், மாவோவின் மூலோபாய மேதமை என்று சொல்லப்படுவதைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க எந்தவொரு அரசியல் அடித்தளமும் இல்லாத, நிதிய நெருக்கடியால் முற்றுகைக்குள்ளாகியிருந்த, தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளதும் பிரமாண்டமான புரட்சிகர எழுச்சிகளுக்கு முகங்கொடுத்திருந்த, முற்றிலும் ஊழலால் நிறைந்த மற்றும் ஒடுக்குமுறையான கோமின்டாங்கின் உள்ளார்ந்த பலவீனம் தான், அதிகமான பங்களிப்பு செய்தது. சோவியத் இராணுவம் வழங்கிய கைப்பற்றப்பட்ட ஜப்பான் ஆயுதங்களின் உதவியுடன் மஞ்சூரியாவில் கோமின்டாங் படைகளை தோற்கடித்த மாவோவின் இராணுவங்கள், தெற்கைக் கைப்பற்றும் போது பெரும் எதிர்த்தாக்குதல்களை சந்திக்கவே இல்லை. 1949 அக்டோபரில் சீன மக்கள் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது.

8-6. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் புதிய ஆட்சியை, தாய்வானுக்கு தப்பிச் செல்லாத முதலாளித்துவ தட்டுக்களும் உள்ளடங்கிய “நான்கு வர்க்கங்களின் கூட்டை” அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்ததுடன், ஆரம்பத்தில் அது நிலச் சீர்திருத்தம் மற்றும் தொழிற்துறை தேசியமயமாக்கலின் அளவை மட்டுப்படுத்தியது. எவ்வாறெனினும் புரட்சிகர இயக்கத்தின் மற்றும் பலர் ரஷ்யப் புரட்சியின் பாரம்பரியத்துடன் தவறாக அடையாளம் கண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான வெகுஜன எதிர்பார்ப்புகளின் அத்தகைய நீடித்த தாக்கத்தினால் ஸ்ராலினிஸ்டுகளை அவர்கள் எண்ணியதை விட அதிகமாய் முன்செல்லத் தள்ளப்பட்டனர். கொரிய யுத்தத்தின் விளைவாக, ஏகாதிபத்தியத் தலையீட்டின் ஆபத்தை எதிர்கொண்ட ஆட்சி, யுத்தத்துக்காக மக்களை அணிதிரட்டிய நிலையில், தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்கத் தள்ளப்பட்டது. கிராமப்புறப் பிரதேசங்களில் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திடம் இருந்து நிலங்களைப் பறிமுதல் செய்வது பூர்த்தி செய்யப்பட்டது. 1951-52ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் “மூவிரோத” மற்றும் “ஐவிரோத” (Three anti and five anti) பிரச்சாரத்தின் பாகமாக, கட்சி மற்றும் அரசு மீதான தொழிற்துறையாளர்களதும் வணிகர்களதும் “மோசடி அழுத்தங்களுக்கு” எதிராக அவர்களை இலக்கு வைத்தது. 1953ல் முதலாவது ஐந்தாண்டு திட்டம் வரையப்பட்டதோடு அதையடுத்து அநேகமாக எஞ்சியிருந்த தனியார் வர்த்தகங்களும் தேசியமயமாக்கப்பட்டன. ஆயினும், அரசாங்கம் எதிர்கொண்டிருந்த சிக்கலான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் எவற்றையும், “தனிநாட்டில் சோசலிசம்” என்ற பிற்போக்கு ஸ்ராலினிச தத்துவத்தின் அடிப்படையில் தீர்க்க முடியாமல் போனது. ஒரு நடைமுறைவாத தேசியவாதக் கொள்கையில் இருந்து இன்னொன்றுக்கு என மாறி மாறித் தத்தளித்ததன் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1950களின் கடைப் பகுதியில் ‘முன்நோக்கிய பெருந்தாவல்’ (Great Leap Forward) வேலைத்திட்டத்தால் ஏற்பட்ட அழிவுகரமான பஞ்சம் உட்பட ஒரு தொடர்ச்சியான அழிவுகளை உருவாக்கியது.

8-7. அதிகாரத்துவ சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, ஒவ்வொரு சமயத்திலும் வெகுஜன புரட்சிகர இயக்கத்துக்கு, குறிப்பாக தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு தடையாகவே செயற்பட்டு வந்தது. 1949ல் மாவோவின் துருப்புக்கள் மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்குள் நுழைந்த நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் எந்தவொரு நடவடிக்கைக்கும் கடும் கட்டுப்பாடுகளைத் திணித்தது. தொழிலாளர்கள், துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை அல்லது கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்களுடன் வேலை நிறுத்தங்கள் பலாத்காரமாக நசுக்கப்பட்டன. தொழிலாளர்களை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்கு எதிரான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இயல்பான விரோதம், அதன் உச்சகட்ட வெளிப்பாட்டை சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீதான ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் கண்டது, அது 1949ல் தொடங்கி 1952 வரையிலான பாரிய கைதுகள் வரை தொடர்ந்தது.

8-8 அனைத்துலக அரங்கில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் ஒன்றியத்துடனான தனது கூட்டைத் தொடர்ந்ததோடு 1950களில் பொருளாதாரத்தை விரிவாக்குவதற்காக, குறிப்பாக கனரக தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்காக, சோவியத் நிபுணர்களிலும் உதவியிலும் பெருமளவில் தங்கியிருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறையின் பொருளாதார மேலாண்மை, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவ திட்டமிடலுடன் நெருக்கமாக ஒத்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1962ல் சீன-சோவியத் பிளவு, இரு ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் தேசிய நலன்கள் போட்டியிடுவதை பிரதிபலித்தது. 1962ல் சீன-இந்திய எல்லை யுத்தத்தில் சோவியத் ஒன்றியம் இந்தியாவை ஆதரித்தது. குருஷ்சேவ், 1956ல் தனது இரகசிய உரையில் ஸ்ராலினின் குற்றங்களை அம்பலப்படுத்தியதை விமர்சித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிசத்தின் அடிப்படைக் கருத்துக்களில் இருந்து வேறுபடாததோடு அதன் காட்டிக்கொடுப்புக்கள் அனைத்தையும் தொடர்ந்தும் நியாயப்படுத்தியது. இரண்டு-கட்ட தத்துவத்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்ததும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் முதலாளித்துவத்துடன் அது கூட்டணி வைத்திருந்ததும், 1965-66ன் இரத்தகளரி மிக்க இந்தோனேஷிய சதிக் கவிழ்ப்பு உட்பட, ஆசியாவில் வெகுஜனங்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தியது.

13. [(லியோன் ட்ரொட்ஸ்கியின் கட்டுரைகள்) Writings of Leon Trotsky (1939-40) பாத்பைன்டர், பக்கம் 33]

14. [Tomorrow is Ours நூலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. பக்கங்கள் 170-171]

15. [Leon Trotsky on China (சீனாவைப் பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி), மொனாட், பக்கம் 528]

16. [Leon Trotsky on China, மொனாட், பக்கம் 525]