சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
(இலங்கை)

WSWS : Tamil : நூலகம்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11
பகுதி 12
 

 

 
The New Course 1923
 

The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)—Part  7

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 7

By the the Socialist Equality Party (Sri Lanka)
31 March 2012

Use this version to print | Send feedback

16. இலங்கையில் மாபெரும் காட்டிக்கொடுப்பு

16-1. 1964 ஜூனில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் அரசாங்கத்துக்குள் லங்கா சம சமாஜ கட்சி நுழைந்துகொண்டமை, நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாகும். முதல் தடவையாக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என உரிமைகோரிய ஒரு கட்சி நேரடியாக முதலாளித்துவத்துக்கு சேவை செய்யச் சென்றது. இந்தக் காட்டிக்கொடுப்புக்கு ஐக்கிய செயலகமே முழுப் பொறுப்பாக இருந்ததோடு சற்றே ஒரு ஆண்டுக்கு முன்னர், பப்லோவாதிகளுடனான சோசலிச தொழிலாளர் கட்சியின் (அமெரிக்கா) கொள்கையற்ற மறு ஐக்கியம் பற்றி, பிரிட்டன் சோசலிச தொழிலாளர் கழகம் விடுத்த எல்லா எச்சரிக்கைகளையும் நிரூபித்தது. சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைவர் ஜெரி ஹீலி, லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பானது பப்லோ, மண்டேல் மற்றும் பியர் பிராங்கின் காட்டிக்கொடுப்புக்களுக்கு “முற்றுமுழுதுமான உதாரணமாகும்” என விளக்கினார். “கடந்த 18 ஆண்டுகளாக, இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சியுடன் இடைவிடாது தொடர்புகொண்டிருந்ததனால், அவர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான [லங்கா சமசமாஜ கட்சியின் சீரழிவுக்கான] பதில், இலங்கையில் அன்றி, பப்லோவாத திருத்தல்வாதத்துக்கு எதிரான போராட்டம் பற்றிய ஒரு சர்வதேசிய ஆய்வில் தான் இருக்கின்றது. இந்தக் கூட்டணியின் உண்மையான சிற்பிகள் பாரிசில் தான் வசிக்கின்றனர்.”[35]

16-2. சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்குள் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிலிப் குணவர்த்தனாவின் எம்..பீ., லங்கா சமசமாஜ கட்சி அடங்கிய ஐக்கிய இடது முன்னணி (ULF) ஊடாக லங்கா சமசமாஜ கட்சி நுழைவதற்கான பாதை  ஐக்கிய செயலகத்தினாலேயே ஊக்குவிக்கப்பட்டு ஒப்புதலளிக்கப்பட்டது. சர்வதேச செயலகம், 1960ல் “தொழிலாள வர்க்கக் கட்சிகளுடன்” ஒரு தேர்தல் கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததோடு, 1963 மறு ஐக்கிய மாநாடானது, “வலதுபக்கம் நோக்கிசெல்லும் இயக்கத்தை தடுக்கவும் மற்றும் வெகுஜனங்கள் ஒரு மாற்று இடதை நோக்கி நகருவதற்கு உதவவும், லங்கா சமசமாஜ கட்சி ஐக்கிய இடது முன்னணி பிரச்சினையை சரியாக எழுப்பியது” எனப் பிரகடனம் செய்தது. [36] எவ்வாறெனினும், இந்த ஐக்கிய இடது முன்னணி (..மு.), 1930களில் ட்ரொட்ஸ்கி எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் முன்னணியின் வடிவத்தை அப்படியே கொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அது வர்க்க கூட்டுழைப்பில் நிரூபணமான செயல்பாட்டு வரலாறுகளைக் கொண்ட கட்சிகளை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. இனவாத எம்..பீ. 1956 ஸ்ரீ..சு.. அரசாங்கத்தில் பங்குபற்றியது என்பதோடு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி யுத்தத்தின் போது இலங்கை தேசிய காங்கிரஸின் பகுதியாக இருந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சி  விரும்பியிருந்தால் முதலாவது ஐ.தே.க அரசாங்கத்திலும் இணைந்திருக்கும்.

16.3. தொழிலாள வர்க்கத்தின் பெரும் ஐக்கியத்தின் மத்தியில், ஹர்த்தால் நடந்து 10வது ஆண்டு நிறைவின் போதே, 1963 ஆகஸ்ட் 12 அன்று ஐக்கிய இடது முன்னணி கூட்டணி உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது. புரட்சிகரக் கட்சியின் அரசியல் சுயாதீனம், அரசியல் வேலைத் திட்டங்கள், பதாகைகள் மற்றும் சுலோகங்களில் கலப்பின்மையை வலியுறுத்தி ட்ரொட்ஸ்கி முன்வைத்த ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்துக்கும் இந்த சந்தர்ப்பவாத அமைப்புக்கும் இடையில் பொதுவான தன்மை எதுவும் கிடையாது. பப்லோவாதிகள் அறிவித்தது போல், இந்த ஐக்கிய இடது முன்னணி கூட்டு “ஒரு தூய்மையான சோசலிச வேலைத்திட்டம் அல்ல”, மாறாக, முதலாளித்துவ வரம்புக்குள் பாராளுமன்றத்தின் ஊடாக இட்டுநிரப்பப்படும் வரம்புக்குட்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பட்டியல் மட்டுமே. அதற்கும் மேலாக, ஐக்கிய செயலகம் அங்கீகரித்த வேலைத்திட்டம், எம்..பீ.யின் இனவாத அரசியலுக்கு பெரும் சலுகைகளை கொடுத்தது. 1960ல் சிங்களமும், தமிழும் சம அந்தஸ்தில் இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு லங்கா சமசமாஜ கட்சி, இப்போது நடப்பில் உள்ள சிங்களம் மட்டும் சட்டத்தை குறைந்த பாரபட்சம் கொண்டதாக ஆக்க வேண்டும் என போலித்தனமாக அழைப்புவிடுக்கும் ஒரு பொது கூட்டுக்கு உடன்பட்டது. லங்கா சமசமாஜ கட்சியின் மத்திய குழுவுக்குள், எட்மண்ட் சமரக்கொடி தலைமையிலான ஒரு சிறுபான்மைக் குழு ஐக்கிய இடது முன்னணியின் வேலைத்திட்டத்தை மக்கள் முன்னணிவாதம் என சரியான முறையில் கண்டனம் செய்த போதிலும், ஐக்கிய இடது முன்னணியில் இருந்து வெளியேறுமாறு லங்கா சமசமாஜ கட்சியைக் கோரவில்லை. சமரக்கொடியின் நிலைப்பாடு மத்தியவாத நழுவலுக்கு ஒரு சிறந்த உதாரணம். முன்மொழியப்பட்ட விடயத்தின் சந்தர்ப்பவாத பண்பை அடையாளங்கண்டுகொள்ள அவரால் முடிந்த போதிலும், அவசியமான அரசியல் முடிவுகளை எடுத்துக்கொள்ளவும் என்.எம். பெரேரா தலைமையில் இருந்து முறித்துக்கொள்ளவும் அவரால் முடியவில்லை. பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கழகத்தில் இருந்து மட்டுமே ட்ரொட்ஸ்கிச விமர்சனம் வந்தது. அது ஐக்கிய இடது முன்னணியை சந்தர்ப்பவாதிகள் எனக் கண்டனம் செய்ததோடு “நான்காம் அகிலத்தின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தை” மீண்டும் உறுதிசெய்து “கட்சியில் இருந்து திருத்தல்வாதத்தையும் திருத்தல்வாதத் தலைவர்களையும் அகற்றுமாறு” லங்கா சமசமாஜ கட்சியில் இருந்த ”நூற்றுக்கணக்கான அர்ப்பணிப்புக்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு” அழைப்பு விடுத்தது.[37]

16-4. 1960ல் அது ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, ஸ்ரீ..சு.. அரசாங்கம் நெருக்கடிக்குள் இருந்து வந்தது. சிங்களம் மட்டும் கொள்கை சம்பந்தமாக தமிழர்களின் பரந்தளவான எதிர்ப்புக்கு பதிலிறுப்பாக, தமிழரசுக் கட்சியை தடை செய்த சிறிமாவோ பண்டாரநாயக்கா, 1961ம் ஆண்டின் பெரும்பகுதிக்கு அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வந்த வேலைநிறுத்த இயக்கத்துக்கு மத்தியில், தொழிற்சங்க நடவடிக்கையைத் தடை செய்த அரசாங்கம், துறைமுகத்தில் இராணுவத்தை நிறுத்தியது. 1962 ஜனவரியில், மூத்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட தோல்விகண்ட ஒரு சதிப்புரட்சி முயற்சி, தொழிலாள வர்க்கத்தை அடக்குவதில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திறமை பற்றி ஆளும் வட்டாரத்தின் மத்தியில் நிலவிய பீதியை வெளிப்படுத்தியது. 1963 செப்டெம்பரில், 21 பொதுக் கோரிக்கைகளைச் சூழ, தோட்டத் தொழிலாளர் சங்கங்கள் உட்பட சகல தொழிற்சங்கங்களும் இணைந்து தொழிற்சங்க கூட்டுக் குழு அமைக்கப்பட்டமை, வேலை நிறுத்தங்களுக்கு மேலும் செயலூக்கத்தை கொடுத்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் இலங்கை வர்த்தக ஊழியர்கள் சங்கம் (சி.எம்.யூ.) மேற்கொண்ட 69 நாள் வேலை நிறுத்தம், வேலைக்குத் திரும்பும்படி அரசாங்கம் விடுத்த இறுதிக் கெடுவை புறக்கணித்ததோடு 1964 ஜனவரிக்குள்ளாக கணிசமான சலுகைகளையும் வழங்க நிர்ப்பந்தித்தது. தனது பாராளுமன்ற பெரும்பான்மை உறுதியற்றிருந்த காரணத்தினால் சிறிமாவோ பண்டாரநாயக்கா பெப்பிரவரியில் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார்.

16-5. பிரமாண்டமான தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கையாளுவது எப்படி என்பது சம்பந்தமாக அவரது அமைச்சரவை நெருக்கடியில் இருந்த நிலையில், சிறிமாவோ பண்டாரநாயக்கா ஐக்கிய இடது முன்னணியில் இருந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினர். மார்ச் 21 அன்று, காலிமுகத் திடலில் மிகப்பெருந்தொகையான தோட்டத் தொழிலாளர்களின் பங்கேற்றத்துடன் 21 அம்சக் கோரிக்கைகள் இயக்கத்தின் பெரும் கூட்டமொன்றில் லங்கா சமசமாஜ கட்சித் தலைவர்கள் உரையாற்றிக்கொண்டிருந்த நிலையில், என்.எம். பெரேரா ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது பற்றி சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் இரகசியக் கலந்துரையாடலை நடத்திக்கொண்டிருந்தார். பேச்சுவார்த்தைகள் அம்பலத்துக்கு வந்ததும் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்திய, முதலாளித்துவத்தின் வர்க்க நனவுகொண்ட பிரதிநிதியான சிறிமாவோ பண்டாரநாயக்கா, தனது பல்வேறு யோசனைகளைப் பற்றி வெளிப்படையாக விளக்கமளித்தார்: “ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய [வேலை நிறுத்த] பிரச்சினைகளை தீர்க்க முடியும் என சிலர் நினைக்கின்றனர். வேறு சிலர் தொழிலாளர்களை துப்பாக்கி முனையில் வேலைக்கு இழுத்துச் செல்ல வேண்டும் என்கின்றனர். இன்னும் பலர் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்கின்றனர். நான் இந்த கருத்துக்களை வெவ்வேறாகவும் மற்றும் உலக நிகழ்வுகளின் சூழ்நிலையிலும் வைத்து நோக்கினேன். இந்தத் தீர்வுகளில் எதுவும் நாங்கள் செல்லவேண்டிய இடத்துக்கு செல்ல உதவாது என்பதே எனது முடிவு... எனவே, கனவான்களே, நான் தொழிலாள வர்க்கத் தலைவர்களுடன், குறிப்பாக திரு. பிலிப் குணவர்த்தனா மற்றும் திரு என்.எம். பெரேரா உடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தீர்மானித்தேன்”.[38]

16-6. கொல்வின் ஆர். டி சில்வா மற்றும் லெஸ்லி குணவர்த்தனா தலைமையிலான “மத்திய” கன்னை என அழைக்கப்பட்டதன் ஆதரவுடன், என்.எம்.பெரேரா தலைமையிலான லங்கா சமசமாஜ கட்சியின் வலது கன்னை, ஸ்ரீ..சு.. உடனான ஒரு கூட்டணிக்கு ஒப்புதலளிப்பதற்காக ஜூன் 6-7ம் திகதிகளில் கட்சி மாநாடு ஒன்றை அவசரமாக கூட்டியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பில் இலண்டனில் இருந்து கொழும்புக்கு விரைந்த ஜெரி ஹீலி மாநாட்டுக்குள் நுழைவது தடை செய்யப்பட்ட போதிலும், அவர் மண்டபத்திற்கு வெளியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். உள்ளே என்.எம். பெரேரா முன்வைத்த தீர்மானம் காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தியது. ஸ்ரீ.ல.சு.க. ஒரு முதலாளித்துவக் கட்சி அல்ல, மாறாக “அது தீவிரவாத குட்டி-முதலாளித்துவத்தையும் நடுத்தர வர்க்கத்தின் கீழ்த்தட்டினரையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்சியாகும். அது மிகவும் பிற்போக்கான சக்திகளைக் கைவிட்டிருக்கிறது என்பதோடு பல்வேறு தேசியமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது” என வாதிட்டது. இந்தப் பிரகடனங்கள், சீனாவில் கோமிண்டாங் போன்ற அமைப்புகள் பற்றி ட்ரொட்ஸ்கி எழுதிய சகலதையும் முழுமையாக நிராகரித்த அதேவேளை, கியூபா மற்றும் அல்ஜீரியாவில் குட்டி முதலாளித்துவ தலைமைகள் பற்றிய பப்லோவாத புகழ்ச்சியின் பாதையில் முழுமையாக பயணித்தன. லங்கா சமசமாஜ கட்சியின் தலைமை ஸ்ரீ..சு.கட்சியின் இனவாதத்துக்கு முழுமையாக சரணடைந்ததை இந்தத் தீர்மானம் தெளிவாக்கியது. சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் உடன்பாடு கொண்ட 10 கொள்கைகளின் பட்டியலில் மொழி மற்றும் பிரஜா உரிமை பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. “மத்திய” கன்னை முன்வைத்த தீர்மானங்கள் டி சில்வா மற்றும் பிலிப் குணவர்த்தனா போன்ற முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் புரட்சியாளர்களின் அரசியல் மற்றும் நெறிமுறை பிறழ்வை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. ஸ்ரீ..சு.கட்சிக்கு சரணடைவது சம்பந்தமான நிபந்தனைகளில், வெறுமனே லங்கா சமசமாஜக் கட்சியை மட்டுமன்றி, ஏனைய ஐக்கிய இடது முன்னணி கட்சிகளையும் கூட்டணி அரசாங்கம் உள்ளடக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் மட்டுமே அவர்கள் என்.எம். பெரேராவுடன் “கருத்துவேறுபாடு” கொண்டிருந்தனர்.

16-7. புதிதாக அமைக்கப்பட்ட புரட்சிகர சிறுபான்மையினரின் தீர்மானம், கூட்டணி அரசாங்கத்திற்கான முன்மொழிவை “பாட்டாளி வர்க்கப் புரட்சியை காட்டிக்கொடுத்ததாக” ஐயத்திற்கிடமின்றி கண்டனம் செய்தது. அது அறிவித்ததாவது: “ஸ்ரீ..சு.. அரசாங்கத்துக்குள் லங்கா சமசமாஜ கட்சி தலைவர்கள் நுழைந்தமை, பகிரங்கமான வர்க்கக் கூட்டுழைப்புக்கும், வெகுஜனங்களை தவறாக நோக்குநிலைப்படுத்துவதற்கும், தொழிலாள வர்க்கத்தில் பிளவை ஏற்படுத்துவதற்கும் மற்றும் போராட்ட முன்னோக்கை கைவிடுவதற்கும் வழிவகுப்பதுடன், தொழிலாள வர்க்க இயக்கம் தகர்த்தெறியப்படுவதற்கும் இடதுகளின் சுயாதீன புரட்சிகர அச்சு அழிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும். இதன் விளைவாக, முதலாளித்துவ பிற்போக்கு சக்திகள், பலவீனமடைவதற்கு அல்லது தூக்கிவீசப்படுவதற்குப் பதிலாக, இறுதியில் பலமடையும்.” என்.எம்.பெரேராவின் தீர்மானத்துக்கு 501 வாக்குகளும், “மத்திய” உட்குழுவுக்கு 75 வாக்குகளும் மற்றும் எதிர் தரப்பினருக்கு 159 வாக்குகளுமாக வாக்களிப்பு முடிந்ததை அடுத்து, புரட்சிகர சிறுபான்மை மாநாட்டை விட்டு வெளியேறி, தனியாக கூடி லங்கா சமசமாஜக் கட்சி [புரட்சிகர] (LSSP (R))என உருவாகவிருந்த அமைப்பை ஸ்தாபித்தது.

16-8. இவை முழுவதிலும் ஐக்கிய செயலகம் முற்றிலும் சந்தர்ப்பவாதப் பாத்திரத்தை வகித்த்து. ஏப்பிரலில், அதாவது மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக அது, இலங்கையில் ஐக்கிய இடது முன்னணியால் “இன்னொரு கியூபாவை அல்லது அல்ஜீரியாவை உருவாக்கவும், மற்றும் உலகம் பூராவும் உள்ள புரட்சிகரச் சிந்தனை கொண்ட தொழிலாளர்களுக்கு மேலும் உயர்ந்த ஊக்கத்தை கொடுக்கவும் முடியும்” எனப் பிரகடனம் செய்தது.[39] சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் என்.எம். பெரேரா பேச்சுவார்த்தை நடத்தும் செய்தி பாரிசுக்குக் கிடைத்தபோது, ஐக்கிய செயலகம், தமது சொந்த அரசியல் பொறுப்பினை மூடிமறைக்கும் தடுமாற்றத்துடன் மீண்டும் ஐக்கிய இடது முன்னணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்தது. ஆனால், “கூட்டணியெனும் கசப்பான மாத்திரைக்கு இனிப்புச் சாயம் பூசுவது” என ஐக்கிய இடது முன்னணி பற்றி ஹீலி பொருத்தமாகக் கூறினார் – சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு என்.எம். பெரேரா பயன்படுத்திக்கொண்ட படிக்கல்லாக அது இருந்தது. ஐக்கிய இடது முன்னணியின் வேலைத்திட்டத்துக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்காவுடனான லங்கா சமசமாஜ கட்சியின் கொடுக்கல் வாங்கலுக்கும் இடையில் அடிப்படை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஐக்கிய செயலகம், ஸ்ரீ..சு.. அரசாங்கத்தில் அமைச்சர்களான என்.எம். பெரேராவையும் ஏனைய இரு உறுப்பினர்களையும் வெளியேற்றி, அவரது பிரேரணைகளுக்கு வாக்களித்த லங்கா சமசமாஜ கட்சி உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்தது. ஆனால், லங்கா சமசமாஜ கட்சிக்குள்ளேயே இருந்த “மத்திய” கன்னை என அழைக்கப்பட்டதற்கு எதிராக பல மாதங்களாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

16-9. லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு சம்பந்தமாக தனது உறுப்பினர்கள் மத்தியிலான விமர்சனத்தையும் ஐக்கிய செயலகம் நசுக்கியது. அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சிக்குள், உத்தியோகபூர்வமாக ஒரு சிறுபான்மைக் குழுவாக இருந்த ரிம் வோல்போர்த் தலைமையிலான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆதரவாளர்கள், நான்காம் அகிலத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத ஒரு நிகழ்வாய் லங்கா சமசமாஜ கட்சி சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்குள் நுழைந்ததைப் பற்றி கட்சிக்குள் கலந்துரையாட வேண்டும் என வலியுறுத்தியமைக்காக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி பப்லோவாதிகளுடன் மறுஐக்கியப்பட்டதற்கு எதிராக 1961ல் இருந்து பிரிட்டன் சோசலிச தொழிலாளர் கழகத்துடன் சேர்ந்து போராடி வந்த சிறுபான்மையினர், நான்காம் அகிலத்தின் அமெரிக்கக் குழுவொன்றை ஸ்தாபித்தனர். இதுவே 1966 நவம்பரில் தொழிலாளர் கழகமாக [Workers League] மாற்றம்பெற்றது.

16-10. 1964 ஜூலையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த தொலைநோக்குடைய முடிவை எடுத்தது: “லங்கா சமசமாஜ கட்சி உறுப்பினர்கள் சிறிமாவோ பண்டாரநாயக்கா கூட்டரசாங்கத்துக்குள் நுழைந்தமை, நான்காம் அகிலத்தின் பரிமாணத்தில் ஒரு முழு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கின்றது. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் இருந்த திருத்தல்வாதம் தொழிலாள வர்க்கத்திற்கு தோல்வியை அளிப்பதற்கான ஒரு தயாரிப்பில் ஏகாதிபத்தியத்துக்கு நேரடியான சேவை செய்வதில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.” [40]

17. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது

17-1. லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புடன், 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு...) அமைக்கப்பட்டமை, பப்லோவாதத்துக்கு எதிராக நான்காம் அகிலம் மேற்கொண்ட அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டங்களினதும், மற்றும் 1968 முதல் 1975 வரை உலகம் பூராவும் புரட்சிகர எழுச்சி காலகட்டத்தை முன்னறிவித்த, இலங்கையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிரமயமாதலினதும் வெளிப்பாடாகும்.

17-2. சர்வதேச பொருளாதார அரசியல் அதிர்வுகளால் பாதிக்கப்படக்கூடிய ஒரு சிறிய தீவாக, இலங்கை எப்போதும் பரந்த சர்வதேச நிகழ்வுப் போக்கின் முன்னறிவிப்பாளராக இருந்து வந்துள்ளது. 1960களின் முற்பகுதியில் தேயிலை விலை வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட கூர்மையான அந்நிய செலாவனி நெருக்கடியுடன் சர்வதேசப் பொருளாதார வீழ்ச்சியும் சேர்ந்துகொண்டதால், வேலையின்மை உயர்ந்த மட்டத்தை எட்டியது. பல்கலைக்கழக பட்டதாரிகள் உட்பட இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்கு எதிராக வளர்ச்சியடைந்து வந்த இயக்கத்தினால் மட்டுமன்றி, 1961ல் பற்றிஸ் லுமும்பா கொலை மற்றும் வியட்னாம் யுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்தமை உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களாலும் இளைஞர்களும் தொழிலாளர்களும் தீவிரமயமாகினர். லங்கா சமசமாஜ கட்சி அரசியல்ரீதியாக சீரழிந்திருந்த போதிலும், அதனுள் இணைந்திருந்த இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் ட்ரொட்ஸ்கிச பாரம்பரியங்கள் இன்னமும் ஈர்ப்புத்தன்மை கொண்டவை என்பது நிரூபணமானது. பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கணிசமான மாணவர் தட்டுக்கள் தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கருதினர். நாட்டின் பிரதானமான பேராதனைப் பல்கலைக்கழகத்தில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் செல்வாக்குச் செலுத்தினர்.

17-3. லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு இலங்கையிலும் உலகம் பூராவும் ஆழமான தாக்கத்தைக் கொண்டிருந்தது. பப்லோவாத தலைமையுடன் சேர்ந்து லங்கா சமசமாஜ கட்சி, ஸ்ராலினித்துக்கு அடிபணிந்ததன் ஊடாக, விசேடமாக மாவோவாதத்தை புகழ்வதன் ஊடாக, ஆசியா பூராவும் ஸ்ராலினிக் கட்சிகள் சவாலை எதிர்கொள்ளாமல் செல்வாக்குச் செலுத்த அனுமதித்தது. இப்போது தமது சொந்த அரசியல் குற்றங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்ப லங்கா சமசமாஜ கட்சியின் துரோகத்தை ஸ்ராலினிஸ்டுகளால் பயன்படுத்திக்கொள்ளகூடியதாக இருந்தது. குறிப்பாக இந்தியாவில் அதுவே நடந்தது. அங்கு பப்லோவாதம் நடைமுறையில் ட்ரொட்ஸ்கி இயக்கத்தை அழித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை (Communist Party of India -CPI) எதிர்ப்பின்றி வளர்ச்சியடைய அனுமதித்தது. 1961 சீனா-சோவியத் பிளவு மற்றும் 1962 இந்தியா-சீன எல்லை யுத்தத்தை அடுத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நெருக்கடி சூழ்ந்துகொண்டபோது எந்தவொரு தலையீடும் செய்யப்படவில்லை. இது 1964ல் “திருத்தல்வாத” இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளிவேடமான எதிர்ப்புக் காட்டி அதிலிருந்து பிரிந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [CPI (M)] என்ற ஒன்று அமைவத்றகு வழிவகுத்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் நக்சலைட்டுகள் அல்லது மாவோவாதிகள், இவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இருந்து 1968-69ல் பிரிந்தவர்கள், இவர்கள் அனைவரும், 1960களின் பிற்பகுதியில் தொடங்கிய தசாப்தத்தில் இந்தியாவை மூழ்கடித்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்ட அலைகளின்போது முதலாளித்துவத்துக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அடிபணியச் செய்ய சேவை செய்தனர். நக்சலைட்டுகள் விவசாயிகளைத் தளமாகக் கொண்ட தனது கெரில்லா யுத்த மூலோபாயத்தை முன்னெடுத்த அதேவேளை, வழமையான ட்ரொட்ஸ்கிசம் பற்றிய ஸ்ராலினி பொய்கள் மற்றும் அவதூறுகளுக்கு ஊக்கமளிக்கக்கூடிய வகையில், லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பை தமது வாயடிப்புகளுக்கு பயன்படுத்திக்கொண்டனர்.

17-4. இலங்கையில், லங்கா சமசமாஜ கட்சி பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தை வெளிப்படையாக கைவிட்டு ஸ்ரீ..சு..யின் சிங்கள மேலாதிக்கவாதத்தை தழுவிக்கொண்டமை, தீவில் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்திய இனவாத அரசியல் கட்டற்று வளர்ச்சியடைவதற்கு கதவுகளைத் திறந்து விட்டது. சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட 21 அம்சக் கோரிக்கை இயக்கமானது, லங்கா சமசமாஜ கட்சி சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டு தனது ஆதரவை விலக்கிக்கொண்டதை அடுத்து தகர்ந்து போனது. 1964 அக்டோபரில் அரை மில்லியன் தமிழ் தோட்டத் தொழிலாளர்களை பலவந்தமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப அனுமதித்து, சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இந்தியப் பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரிக்கும் இடையில் கையெழுத்தான உடன்படிக்கையை லங்கா சமசமாஜ கட்சி ஆதரித்தமை, அந்த பிரதான தொழிலாள வர்க்க தட்டினரின் மத்தியில் லங்கா சமசமாஜ கட்சிக்கு இருந்த ஆதரவை உடனடியாக வீழ்ச்சியடையச் செய்தது.

17-5. தீவிரமயமான இளைஞர்கள் மத்தியில், லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பின் காரணமாக உண்மையான மார்க்சிசத்தின் அழிவில் பல்வேறு வடிவிலான குட்டி முதலாளித்துவ வகுப்புவாத அரசியல் பலனடைந்தது. முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் மாவோவாதிகளைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி அல்லது ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.), தீவின் தெற்கில் வேலையற்றிருந்த சிங்கள கிராமப்புற இளைஞர் தட்டினர் மத்தியில் விரிவடையும் வாய்ப்பைப் பெற்றது. மாவோவாதம் மற்றும் காஸ்ட்ரோவாதத்தில் வேண்டியதை எடுத்துக் கொண்டு உள்ளூர் சிங்கள ஜனரஞ்சகவாதத்துடன் கலந்து அந்தக் கலவையில் நின்றுகொண்டுள்ள ஜே.வி.பீ., “ட்ரொட்ஸ்கிசத்தை” வாய்ச்சவடாலுடன் கண்டனம் செய்ய லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பை பயன்படுத்திக் கொண்டது. 1970களில், இரண்டாவது ஸ்ரீ..சு.. கூட்டணியின் சிங்கள பேரினவாதக் கொள்கைகள், தமிழ் இளைஞர்களை தீவிரமயமாக்கிய நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்கள், ட்ராட்ஸ்கிசத்துக்கும் மார்க்சிசத்துக்குமான தமது எதிர்ப்பை நியாயப்படுத்த லங்கா சமசமாஜக் கட்சி அமைச்சர்களின் நடவடிக்கைகளை மேற்கோள் காட்டின. லங்கா சமசமாஜக் கட்சி காட்டிக்கொடுத்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில், இலங்கை முதலாளித்துவத்தின் பிற்போக்கு இனவாத அரசியல் அடுத்த கால் நூற்றாண்டு பூராவும் தீவை நடுங்கச் செய்த உள்நாட்டு யுத்தமாக வெடித்தது.

17-6. இந்த அரசியல் அலைக்கு எதிராக, தீவிரமயமான இளைஞர்களின் திறமைபடைத்த ஒரு தட்டு, ட்ரொட்ஸ்கிசம் மற்றும் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் பாரம்பரியத்தில் ஈர்ப்புக்கொண்டு 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்தது. எவ்வாறெனினும், லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு வழிவகுத்ததும் மற்றும் அதில் இருந்து பிரிந்த புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சி மீது தொடர்ந்தும் மேலாதிக்கம் செய்வதுமான பப்லோவாத அரசியலை தெளிவுபடுத்துவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு செய்த தலையீட்டின் மூலம் மட்டுமே இது சாத்தியமானது. அந்த இளைஞர்களில் மிகவும் முன்னணியில் இருந்தவர்கள் தான் வெறும் 19 வயதில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1987ல் அவர் அகால மரணமாகும் வரை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவராக இருந்த கீர்த்தி பாலசூரியாவும், அந்த கடினமான சூழ்நிலைகளில் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று கடந்த கால் நூற்றாண்டு காலமாக கட்சியை வழிநடத்தி வந்துள்ள விஜே டயஸும். லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு மற்றும் தீவின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தால் உருவாக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தால் நிலைத்து நிற்க முடிந்ததானது, அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாக ஸ்தாபிக்கப்படுவதற்கு அடித்தளமாயிருந்த ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளின் உறுதிக்கான சான்றாகும்

17-7. பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் மூலமாக - முதலாவதாய் 1964ல் ஜெரி ஹீலி மூலமாகவும், பின்னர் 1964 டிசம்பரில் அதன் நியூஸ்லெட்டர் பத்திரிகையின் ஆசிரியர் மைக் பண்டா மூலமாகவும் - நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இலங்கையில் மேற்கொண்ட தலையீட்டின் விளைவாக புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியில் அனைத்துலகக் குழுவுக்கு சார்பான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. ஆயினும், புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சி ஒரு விரோதமான அரசியல் சூழ்நிலையைக் கொண்டிருந்தது. அந்தக் கட்சி லங்கா சமசமாஜ கட்சி உடனான பிளவில் இருந்து ஸ்தாபிக்கப்பட்டிருந்த போதிலும் கூட, அது பப்லோவாதத்தில் இருந்து முறித்துக் கொள்ளாததோடு பப்லோவாத ஐக்கிய செயலகத்தினுள்ளேயே தொடர்ந்தும் இருந்தது. 1963 உலக காங்கிரஸில் பங்கேற்ற அதன் செயலாளர் எட்மண்ட் சமரக்கொடி, அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியுடன் மறு ஐக்கியத்துக்கு வாக்களித்தார். புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியின் முதலாவது மாநாட்டில், “சர்வதேசப் பிரச்சினைகளை”, அதாவது, பப்லோவாத திருத்தல்வாதத்துக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தைப் பற்றி வாதிட வேண்டுமென அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர் ஒருவர் முன்வைத்த தீர்மானத்தை, அதன் முழுத் தலைமையும் ஒன்று சேர்ந்து தடுத்தது.

17-8. புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் நோக்குநிலை, ஐக்கிய இடது முன்னணிக்கு ஐக்கிய செயலகம் வக்காலத்து வாங்கியதில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. தொழிற்சங்க கூட்டுக் குழுக்களின் அமைப்பில் எஞ்சியிருந்தவற்றின் ஊடாக 21 அம்சக் கோரிக்கை இயக்கத்திற்கு தொடர்ந்து போராடுவது என்றவாறாக கட்சியின் பிரதான கடமை தொழிற்சங்கவாத கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது. பின்னர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விளக்கியது போல்: “புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி, ‘இடது தலைவர்களை’ தொழிலாள வர்க்கத்துக்கு முன்னால் துரோகிகள் எனக் கண்டனம் செய்கின்ற அதேவேளையில், அவர்களை போராட்டத்துக்குள் இழுப்பதற்கு மேல் மட்டத்தில் இருந்து சூழ்ச்சித்திட்டம் வகுக்கும் ஒரு அமைப்பாகவே மாறியிருந்தது. இந்தக் கொள்கையின் வழியில், தொழிலாள வர்க்கத்துக்குள் அவர்களுக்கு இருந்த சிறிய ஆதரவாளர்களை  [லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி] தலைவர்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் சுயாதீனமாக ஒழுங்கமைப்பதை நோக்கி திருப்பாமல், ‘தலைவர்களை இடது பக்கம் தள்ளுவதற்கு’ தொழிலாள வர்க்கத்தினுள் திட்டங்கள் தீட்டுவதை நோக்கி திருப்பினர்.[41]

17-9. கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களான சமரக்கொடியும் மெரில் பெர்னான்டோவும், அரசியல் குழுவின் கட்டளைகளை அலட்சியம் செய்து, 1964 டிசம்பரில் அரியாசன உரைக்கு கொண்டுவரப்பட்ட வலதுசாரி திருத்தத்துக்கு ஆதரவளித்ததை அடுத்து, புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சிக்கு ஆதரவாக இருந்த மாணவ இளைஞர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்களவு அதிருப்தி வளர்ச்சி கண்டது. வெற்றிபெற புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் தங்கியிருந்த அந்தத் திருத்தம், ஒரு நம்பிக்கையில்லாப் தீர்மானம் போலாகி ஸ்ரீ..சு..-லங்கா சமசமாஜ கட்சி அரசாங்கத்தை கவிழ்த்தது. சமரக்கொடியும் பெர்னான்டோவும் அளித்த வாக்குகள், 1965 மார்ச் தேர்தலில் புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சிக்கு ஆதரவு வீழ்ச்சியடையவும் அது தனது இரு ஆசனங்களையும் இழக்கவும் வழியமைத்தது. தேர்தலில் வென்ற யூ.என்.பீ., ஏழு கட்சி கூட்டணியொன்றை அமைத்தது. மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) மற்றும் தமிழரசுக் கட்சியும் இதில் அடங்கின. இந்தச் சூழ்நிலையில், புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமையின் நடவடிக்கையை எதிர்த்த ஒரு மாணவர் தட்டினர், பல்வேறு கூறுகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்தனர். பரந்தளவில் ட்ரொட்ஸ்கிஸத்தை ஆதரித்த அவர்கள், 1965 நவம்பரில் சக்தி செய்திப் பத்திரிகையை வெளியிட்டனர். அதன் தலைவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தனர் அல்லது முன்னர் இருந்திருந்தனர். இந்த சக்தி குழு, வியட்னாம் யுத்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கும், வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துமாறும் கோரி 1965 டிசம்பரில் ஒரு வாரமாக நீண்ட மாணவர்கள் பகிஷ்கரிப்புக்கும் தலைமை வகித்தது. இந்தப் போராட்டம் பொலிஸ் வன்முறையால் நசுக்கப்பட்டது. விஜே டயஸும் ஏனைய பலரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்; ஒரு முன்னாள் மாணவ தலைவர் அவர் பார்த்து வந்த வேலையில் இருந்து நீக்கப்பட்டார்; மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கொல்வதற்கு முயற்சித்தனர் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் நான்கு மாணவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை தொடர்ந்தது.

17-10. ஆயினும், அதன் தீவிரமயம் ஒரு புறம் இருக்க, சக்தி குழு இன்னமும் லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை இடதுபக்கம் செல்ல நெருக்கும் புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியின் அரசியலையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்த வில்பிரட் “ஸ்பைக்” பெரேரா, புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சி உள்ளே, சக்தி குழுவின் நோக்குநிலையை சவால் செய்தார். அரியாசன உரை வாக்கெடுப்பை நிராகரிக்குமாறு சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு அழைப்பு விடுத்து 1964 டிசம்பரில் நடத்தப்பட்ட ஸ்ரீ..சு.. - லங்கா சமசமாஜ கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தலையிடாமைக்கு புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியை விமர்சித்த, சக்தி தலைவர் , நிமல் (நந்த விக்கிரமசிங்க), 1965 செப்டெம்பரில் எழுதிய “டிசம்பர் படிப்பினைகள்” என்ற தலைப்பிலான ஆவணத்துக்கு வில்பிரட் பெரேரா ஒரு நீண்ட பதிலை எழுதினார். “டிசம்பரின் படிப்பினைகள் அல்ல, மாறாக, ஜூனின் படிப்பினைகளே” என்ற தனது பதிலில், ஆவணத்தில் இருந்த இத்தகைய “பாராளுமன்றத்துக்கு புறம்பான போராட்டங்களின்” புரட்சிகர சாத்தியங்கள் பற்றிய காட்சிவாத கூற்றை நிராகரித்த ஸ்பைக், அவர்களது கோரிக்கை முதலாளித்துவ அரசாங்கத்தைப் பேணுவதும் இனவாத சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையை அமுல்படுத்துவதுமே ஆகும் என்பதை சுட்டிக்காட்டினார். 1964 ஜூனில் லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பில் இருந்து தீர்க்கமான அரசியல் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எவ்வாறெனினும், அவர் ஒரு பாகமாய் இருந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக். குழுவிற்கு சார்பான குழுவின் பெரும்பகுதியினர் புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சி தலைமையுடனான குழுவின் உறவை முறித்துக் கொள்ள விரும்பாத நிலையில், ஸ்பைக்கின் ஆவணம் சுற்றறிக்கையாக விடப்பபடவில்லை.

17-11. இதன் விளைவாக, சக்தி குழு வி. காராளசிங்கத்தின் செல்வாக்கின் கீழ் வந்தது. முன்னாள் இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் தலைவரான காராளசிங்கம், புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சி அரசியல் குழு உறுப்பினருமாவார். ஒரு வழக்கறிஞரான அவர் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக வாதாடினார். புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி தலைமைக்கு எதிரானவராகவும் இருந்த காராளசிங்கம், பண்டாரநாயக்கா அரசாங்கத்தை கவிழ்க்க அளிக்கப்பட்ட சமரக்கொடியின் வாக்கை ஒரு “இமயமலையளவு பெரும் தவறு” என விமர்சித்தார். பாராளுமன்ற தந்திரோபாய தவறு பற்றிய இந்த மிகைப்படுத்தப்பட்ட விமர்சனம், காராளசிங்கத்தின் நோக்குநிலையையே காட்டிக்கொடுத்தது. அவரது நோக்குநிலை புரட்சிகர மார்க்சியத்தை நோக்கியதாக அன்றி, மீண்டும் லங்கா சமசமாஜ கட்சி நோக்கியதாக இருந்தது. சக்தியில் 1966 மே தினத்துக்கு பிரசுரிக்கப்பட்ட ஒரு பகிரங்க கடிதத்தில், தற்போதுள்ள ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு ஒரு முற்போக்கான மாற்றீடாக ஸ்ரீ..சு..-லங்கா சமசமாஜ கட்சிஅரசாங்கம் இருக்கும் எனவும், “ஒரு உண்மையான புரட்சிகர அராசாங்கத்திற்கான” பாதையில் ஒரு அடிவைப்பாக இருக்கும் எனவும் காரளசிங்கம் வாதிட்டார். புரட்சியாளர்கள் அத்தகைய அபிவிருத்திகளையிட்டு பீதியடையக் கூடாது, “மாறாக அத்தகைய [கூட்டணி] அரசாங்கத்தின் தோற்றத்துக்கு உதவ வேண்டும்” என அவர் எழுதினார். அந்தக் கட்டுரையை ஒரு பூரணமான விமர்சனத்துக்கு உட்படுத்திய ஸ்பைக், காராளசிங்கத்தின் “இடைப்பட்ட அரசாங்க வரிசை” முதலாளித்துவ அரசாங்கங்களின் வரிசையே அன்றி வேறொன்றுமல்ல மற்றும் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான மிகவும் பின்தங்கிய வெகுஜனத் தட்டுக்களின் தற்போதைய நனவு மட்டத்திற்கு சரணடைவதை” பிரதிநிதித்துவம் செய்கின்றது என விளக்கினார். 1966 ஜனவரியில், தமிழ் மொழியை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உத்தியோகபூர்வமாக பயன்படுத்தும் அரசாங்கத்தின் சட்டத்துக்கு எதிரான வெளிப்படையான இனவாத ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களில் ஸ்ரீ..சு.. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் லங்கா சமசமாஜக் கட்சியும் இணைந்துகொண்டது.

17-12. 1966 அக்டோபருக்குள்ளாக, லங்கா சமசமாஜக் கட்சியுடனான பிளவு ஒரு தவறு என சமரக்கொடிக்கு எதிராக ஒரு வாதத்தை முன்வைத்த காராளசிங்கம், லங்கா சமசமாஜக் கட்சிக்கு மீண்டும் திரும்புமாறு வெளிப்படையாக பரிந்துரைத்தார். விஜே டயஸும் இன்னுமொரு சக்தி குழு உறுப்பினரும் மட்டுமே அந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்தனர். லங்கா சமசமாஜ கட்சியினுள் “நுழைவதற்கு” என்பதாக காராளசிங்கத்தின் உருமறைக்கப்பட்ட சூழ்ச்சியினால் கவரப்பட்ட ஏனையவர்கள் ஆரம்பத்தில் ஆதரவாக வாக்களித்தனர். ஆயினும், அனுர ஏக்கநாயக்க, கீர்த்தி பாலசூரிய மற்றும் நந்த விக்கிரமசிங்க தலைமையிலான அதன் இடது பிரிவு, அப்போது இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு உறுப்பினர் ரொனி பண்டா உடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதை அடுத்து சக்தி குழு துரிதமாக பிளவுபட்டது. லங்கா சமசமாஜக் கட்சியில் சேர வேண்டாம் என ரொனி பண்டா கொடுத்த அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட அவர்கள், ஸ்பைக்குடன் தொடர்பில் வைக்கப்பட்டதோடு அவர்களுக்கு முதல் தடவையாக அவரது ஆவணங்களை வாசிக்கக் கிடைத்தது. டயஸ் உட்பட்ட ஒரு குழுவை பலப்படுத்திக்கொண்ட அவர்கள், 1953 மற்றும் 1961-63ல் பப்லோவாதத்துக்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக். குழுவின் போராட்ட ஆவணங்களை முறையாகக் கற்றனர்.

17-13. ஆரம்பத்தில் ரொனி பண்டாவின் வழிநடத்தலின் கீழ், இந்தக் குழு விரோதய (எதிர்ப்பு) என்ற பத்திரிகையை வெளியிடத்தொடங்கியதோடு தொழிலாள வர்க்கப் போராட்டங்களில் தலையீடு செய்தது. புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியில் ஸ்பைக்கின் தலையீடு, பப்லோவாதத்தின் பாத்திரத்தை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள உதவியது. 1967 பெப்பிரவரியில் ஐக்கிய செயலகத் தலைவரான ஏர்னெஸ்ட் மண்டேல் கொழும்புக்கு வருகை தந்திருந்தபோது, அவரை சவால் செய்வதற்கு ஒரு உறுப்பினர் கூட்டத்தை ஸ்பைக் பயன்படுத்திக்கொண்டார். “லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவுக்கும் இறுதி வீழ்ச்சிக்கும் நான்காம் அகிலமே நேரடிப் பொறுப்பு, மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சீரழிவு, லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய நான்காம் அகிலத்தில் இருந்தே ஊற்றெடுத்துள்ளது, என நான் குற்றஞ்சாட்டுகிறேன்.” சில வாரங்களில், மூன்று-கண்டங்களின் மாநாட்டில், காஸ்ட்ரோ நான்காம் அகிலத்தின் மீது தொடுத்த பித்துப்பிடித்த தாக்குதலை கண்டனம் செய்து, ஆறு மாதங்களுக்கு முன்னர் ஸ்பைக் எழுதிய யங் சோசலிஸ்ட் (இளம் சோசலிஸ்டுகள்) ஆசிரியர் தலையங்கம் பற்றிய ஒரு “விசாரணையை” நடத்த மண்டேலின் தூண்டுதலின் பேரில் புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி நடவடிக்கை எடுத்தது. “பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகரத் தூய்மை பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அவரை விமர்சித்து, அவருக்கு எதிராக புதுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக”க் கூறி, பாலா தம்புவும் மத்திய குழுவும் தன்னை கண்டனம் செய்கின்றன எனத் தெரிவித்த ஸ்பைக், தனது பாதுகாப்புக்காக உத்வேகமாக நடவடிக்கை எடுத்தார். பதிலளிக்கும் போது அவர் பிரகடனம் செய்ததாவது: “ஆயினும், ‘பெரும் கியூபத் தலைவருடன்’ ஒப்பிடுகையில், ஒரு சாதாரண வெறும் மனிதனானக இருந்து காஸ்ட்ரோவை நான் விமர்சிக்கவில்லை, மாறாக, லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட, சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் ஒரு உறுப்பினர் என்ற பெருமை கொண்ட மனிதனாக இருந்தே அதை செய்தேன் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றி தவறாக வழிநடத்தவும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை வேட்டையாட மறைமுகமாய் தூண்டிவிடுவதற்கும் முயற்சிப்பதனாலேயே நான் காஸ்ட்ரோவை விமர்சிக்கத் தள்ளப்பட்டேன்.” 1968ல் நடந்த புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி மாநாட்டில், ஸ்பைக் முன்வைத்த தீர்மானம் ஒன்று, ஐக்கிய செயலகத்தின் திருத்தல்வாத அரசியலில் இருந்து முழுமையாக பிரிந்து, மத்திய குழுவை கலைப்பதோடு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் உடனடியாக உறவுகளை ஸ்தாபித்துக்கொள்ளும் ஒரு அமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுத்தது. அவர் அதன் பின் குறுகிய காலத்துள், புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து பிரிந்து பப்லோவாத அரசியலை பகிரங்கமாக கண்டனம் செய்தார்.

17-14. 1966ல் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக். குழுவின் மூன்றாவது மாநாட்டின் படிப்பினைகள், விரோதய (Virodhaya) குழு உறுப்பினர்களுக்கு கல்வியூட்டுவதில் அதிமுக்கியமானதாக இருந்தது. பப்லோவாதம் நான்காம் அகிலத்தின் அநேக பகுதிகளை கலைத்துவிட்டிருந்த கடினமான நிலைமைகளில், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் மறு ஐக்கியத்தை அடுத்தே இந்த காங்கிரஸ் நடைபெற்றது. இந்த நிலைமையை ஏற்றுக்கொண்ட வரைவுத் தீர்மானம், நான்காம் அகிலமே உடைக்கப்பட்டிருந்தது என்றும் அதை “மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்” எனவும் பிரகடனம் செய்தது. மாநாட்டின் போது, பப்லோவாதத்துக்கு எதிரான அரசியல் தத்துவார்த்தப் போராட்டத்தின் ஊடாகவே நான்காம் அகிலத்தின் தொடர்ச்சி பேணப்பட்டுள்ளது என்பதை பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் வலியுறுத்தியது. திருத்தப்பட்ட ஆவணம் தெரிவித்ததாவது: “நான்காம் அகிலத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி அனைத்துலகக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டது, அதற்குக் காரணம் புரட்சிகர அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாத, திருத்தல்வாதத்துக்கு எதிரான தத்துவார்த்த நடைமுறைப் போராட்டத்தை முன்னெடுக்க அதனால் மட்டுமே சாத்தியமானது.” பிரான்சில் தொழிலாளர் குரல், (Voix Ouvriθre) அமெரிக்காவில் இருந்து ஜேம்ஸ் ரொபேட்சனின் ஸ்பார்டசிஸ்ட் போக்கு ஆகிய இரு குழுக்களுடன் அரசியல் கூட்டுழைப்பு சாத்தியமானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக அவை இரண்டும் அழைக்கப்பட்டிருந்தன. அவை பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தை சிறுமைப்படுத்தின. “தற்போதைய முதலாளித்துவ நெருக்கடி மிகவும் கூர்மையானதாகவும் ஆழமானதாகவும் உள்ளது, அதனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது அகிலங்களின் சீரழிவுடன் ஒப்பிடக்கூடிய அளவில், தொழிலாளர்களை கீழ்படியச் செய்வதற்கு ட்ரொட்ஸ்கிச திருத்தல்வாதம் தேவைப்படுகிறது என்ற கருத்தை” ரொபேட்சன் முழுமையாக நிராகரித்தார். இரண்டே ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த லங்கா சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பின் படிப்பினைகளை நிராகரித்த ரொபேட்சன், இது “தற்போதைய எமது முக்கியத்துவத்தை பெருமளவில் மிகைமதிப்பீடு செய்வதை” உள்ளடக்கியுள்ளது எனத் தெரிவித்தார். காங்கிரஸில் இருந்து வெளியேறி அவர் உருவாக்கிய ஸ்பார்டசிஸ்ட் போக்கு எப்போதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கான அதன் ஆழமான விரோதத்தினால் குணாதிசயப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

17-15. 1968 ஜூன் 16-17ம் திகதிகளில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக மாநாடு இடம்பெற்றது. மாநாட்டுக்கான பிரதான அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக். குழுவின் மூன்றாவது காங்கிரஸின் மிகவும் முக்கியமான படிப்பினைகளையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதத்துக்கு அவற்றின் முக்கியத்துவத்தையும் பாலசூரியா வெளிக்கொணர்ந்தார். கலந்துரையாடலின் போது தோன்றிய பிரதான விடயங்கள், ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தின் தொடர்ச்சியில் அக்கறை செலுத்துவனவாக இருந்தன. லங்கா சமசமாஜக் கட்சி, புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் சக்தி குழு ஊடாக அதன் வரலாற்றைக் காணும், இலங்கையின் ஒரு தேசிய புரட்சிகர சக்தியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் மறு ஐக்கியம் செய்யும் ஒன்றாக அந்த மாநாட்டை கண்ட ஒரு போக்குக்கு எதிராக, பாலசூரியா, பப்லோவாதத்துக்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்திலேயே ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சி தங்கியிருக்கின்றது என வலியுறுத்தினார். 1953 மற்றும் 1961-63 பிளவுகளின் படிப்பினைகளின் அடிப்படையிலும், லங்கா சமசமாஜக் கட்சி, புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் அதே போல் சக்தி குழுவினதும் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து அடிப்படையில் பிரிவதன் மூலமும் மட்டுமே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிக்க முடிந்தது.

17-16. மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரகடனம் செய்ததாவது: “1966 ஏப்பிரலில் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாவது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘நான்காம் அகிலத்தை மீண்டும் கட்டியெழுப்பும்’ தீர்மானத்துடன் முழு உடன்பாட்டை இந்த மாநாடு பிரகடனம் செய்கின்றது. மையப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்கத் தலைமையாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதின் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு, நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்துக்கும் வழிமுறைக்குமான அதன் இடைவிடாத போராட்டத்தின் ஊடாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஈட்டிக்கொண்டிருக்கிற அதன் செயல்திறனின் மீது இந்த மாநாடு முழு நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. சகல வடிவிலுமான திருத்தல்வாதத்துக்கும் எதிரான ஒரு தளர்ச்சியற்ற போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாக இலங்கையில் பாட்டாளி வர்க்க புரட்சியின் கட்சியை கட்டியெழுப்பும் பணிக்கு இந்த காங்கிரஸ் உறுதியுடன் அர்ப்பணித்துக்கொள்வதோடு, சகல சூழ்நிலைகளின் கீழும் சகல இடங்களிலும் சாத்தியமானளவு அதிகமாக வர்க்கப் போராட்டங்களில் செயலூக்கத்துடன் தலையிடுவதுடன் இந்தப் பணி பிரிக்கமுடியாமல் கட்டுண்டுள்ளது என்றும் அறிவிக்கிறது.”

[35] திருத்தல்வாதத்துக்கு எதிராக ட்ரொட்ஸ்கிஸம் [Trotskyism Versus Revisionism, Volume Four (London: New Park, 1974), p. 225.]

[36] இலங்கை, மாபெரும் காட்டிக்கொடுப்பு, ஜெரி ஹீலி, www.wsws.org, தமிழ், நூலகம்] Gerry Healy, “Ceylon, the Great Betrayal,” Trotskyism Versus Revisionism, Volume Four, pp. 233–4.

[37] [நியூஸ் லெட்டரில் இருந்து, வை. ரன்ஜித் அமரசிங்க எழுதிய புரட்சிகர கருத்தியல்வாதமும் பாராளுமன்ற அரசியலும் என்ற நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, பக்.261-262]

[38] [Trotskyism Versus Revisionism நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, பாகம் 4. பக். 241]

[39] [Trotskyism Versus Revisionism, பாகம் 4, பக். 235]

[40] [Trotskyism Versus Revisionism, பாகம் 4, பக். 255]

[41] [ஏப்பிரல் நெருக்கடியும் கட்சியின் வரலாறும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக (பு...) 1972 மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தரங்க தீர்மானம், பக்.20, அசலில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது]