டெங் ஜியாவோபிங்கும் சீனப் புரட்சியின் கதியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டெங் ஜியாவோபிங்கின் மரணமானது ஏராளமான இறப்புச் செய்திகளை வெள்ளமெனத் திறந்துவிட்டுள்ளது. ஆயினும், சீனாவில் முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்த அதே சமயத்தில் அரசியல் எதிர்ப்பை ஆவேசத்துடன் ஒடுக்குவது என்கின்ற டெங்கின் “கலவையான மாண்பு” என்று கூறப்படுவதன் மீதான கிளிப்பிள்ளைத்தனமான கூற்றுக்களுக்கு மேல் ஊடக வருணனைகள் எதுவும் மேலே சென்றிருக்கவில்லை. ஊடக விவாதங்களில் பெரும்பகுதி ''டெங் போனபின் எனது பணம் சீனாவில் பாதுகாப்பாக இருக்குமா?" என்று கவலையுடன் கேட்கும் முதலீட்டாளர்களைக் குறிவைத்தே இருக்கின்றன.

ஆனால் டெங் ஜியாவோபிங்கின் அரசியல் வாழ்க்கை மற்றும் செயல்வரலாறு அசட்டை செய்துவிட முடியாத பிரச்சனைகளை எழுப்பியுள்ளதில் சந்தேகமில்லை. உலகின் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள ஒரு நாட்டை எறக்குறைய ஒரு தலைமுறை காலத்திற்கு ஆட்சி செய்த, மற்றும் நவீன காலங்களில் ஏற்பட்ட மிகப் பெரும் சமூகப் புரட்சிகளில் ஒன்றின் எழுச்சியுடனும் வீழ்ச்சியுடனும் பின்னிப் பினைக்கப்பட்ட அரசியல் வாழ்க்கையைக் கொண்டுள்ள ஒரு மனிதர் சம்பந்தமாக வேறு எவ்வாறு கூற முடியும்?

டெங் ஜியாவோபிங்கைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்யவேண்டுமாயின் சீனப் புரட்சியின் பாதையையும் 20 ம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான போராட்டத்தின் மூலோபாயப் பிரச்சனைகளுடன் அதன் உறவுகளைப் பற்றியும் ஆராய்வது இன்றியமையாதது: முதலாளித்துவம் உண்டாக்கிய முட்டுச்சந்திலிருந்து வெளியேற ரஷ்யப் புரட்சியானது ஒரு பாதையைக் காட்டியதா? எந்த வர்க்கம் புதியதொரு சமுதாயத்தை நிறுவத் திறம்படைத்த சமூக சக்தியாக இருக்கிறது, தொழிலாள வர்க்கமா அல்லது விவசாயிகளா? சோசலிசத்தை அடைவதற்கு தேசியப் பாதை ஒன்று உள்ளதா? இந்த உருமாற்றத்தில் புரட்சிகரத் தலைமையின் பாத்திரம் என்ன?

சிச்சுவான் (Sichuan) மாகாணத்தில் செழுமையான ஒரு நிலச்சுவான்தாரின் மூத்த மகனாக 1904 ம் ஆண்டில் பிறந்த டெங் ஜியாவோபிங், 1911 ம் ஆண்டில் சீனாவில் மஞ்சு வம்சத்தின் வீழ்ச்சியை ஒட்டி முதிர்ச்சிக்கு வந்த புரட்சிகரப் புத்திஜீவிகளின் ஒரு அசாதாரணமான தலைமுறையின் பகுதியாக இருந்தார். அந்த சீன சாம்ராஜ்ஜியம் 1839-1842 ல் நடந்த அபின் யுத்தத்தில் பிரித்தானியாவினால் தோற்கடிக்கப்பட்டது முதல் பொருளாதாரத் தேக்கம், உள்நாட்டு யுத்தம் மற்றும் போட்டிபோடும் ஏகாதிபத்திய வல்லரசுகளின் கோரிக்கைகளின் முன் மண்டியிடுதல் ஆகிய குணாம்சங்களுடனான மரண வீழ்ச்சிக்குச் சென்றிருந்தது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கு அளிக்கப்பட்ட “சலுகைகளாக” தனது சொந்தப் பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்தது சீனாவின் பலவீனத்தின் மிக அவமானகரமான அடையாளமாக இருந்தது. ஷங்காய், டியன்சின், டாலியன் போன்ற நகரங்களின் பகுதிகளும் ஹாங்காங் போன்ற முழு நிலப்பரப்புகளும் வெளிநாட்டு சக்திகளிடம் அளிக்கப்பட்டிருந்தன, அச்சக்திகளின் காவல் படைகளும் நீதி அமைப்புகளும் தான் இங்கெல்லாம் கோலோச்சிக் கொண்டிருந்தன.

1911 ஆம் ஆண்டு மஞ்சு வம்சம் தூக்கியெறியப்பட்டபோது சீனா ஏறக்குறைய சின்னாபின்னமானது. போட்டி இராணுவத் தலைவர்கள் தங்களை பிராந்திய யுத்தபிரபுக்களாக நிறுவிக் கொண்டனர். தேசியவாத கோமின்டாங் கட்சியின் நிறுவனரான சன் யாட்-சென் (Sun Yat-sen), சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியை அடுத்து, பெய்ஜிங்கில் (Beijing) ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசைப் பிரகடனம் செய்தார். ஆனால் பிராந்தியத்தின் யுத்தபிரபுவான யுவான் ஷி-காய் (Yuan Shi-kai) யினால் விரைவில் அவர் அப்பிராந்தியத்தை விட்டோட நிர்ப்பந்தமுற்றார், தென் சீனாவிலுள்ள குவாங்டோங் (Guangdong) மாகாணத்தில் தஞ்சமடைந்தார்.

சீனாவில் அரை பிரபுத்துவ நிலச்சுவான்தார்-கனவான் வர்க்கத்திடமிருந்து விவசாயிகளை விடுதலை செய்வது, யுத்தபிரபுக்களது ஆட்சிக்கு எதிராக நாட்டை ஒன்றிணைப்பது மற்றும் சீனாவை ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்து விடுவிப்பது ஆகிய முதலாளித்துவப் புரட்சியின் கடமைகளை சீன முதலாளிகளின் வர்க்கமானது நிறைவேற்ற இலாயக்கில்லாதாக இருந்தது. சீன முதலாளித்துவமானது சீன நிலப்பிரபுத்துவ வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் (ஏகாதிபத்திய சக்திகளுக்கு அது தரகரைப் போல் செயற்பட்டது) ஆகிய இரண்டுடனும் பொருளாதார ரீதியாகக் கட்டுண்டிருந்தது. அதற்கு ஒரு சுயாதீனமான புரட்சிகரப் பங்கை வகிக்கும் ஆற்றல் இருக்கவில்லை.

மார்க்சிசமும் சீனப் புரட்சியும்

1919 ம் ஆண்டில் சீனாவில் வெகுஜனப் புரட்சிகர இயக்கம் ஒன்று வெடித்தது. முதலாம் உலகப் போரின் முடிவில் ஏகாதிபத்திய வல்லரசுகள் வேர்சாய் (Versailles) நகரில் கூடி சீன சாம்ராஜ்யம், ஒட்டுமொத்த சான்டோங் தீபகற்பப் பகுதியின் மீதான ஆதிக்கம் உட்பட, ஜேர்மனிக்கு வழங்கியிருந்த சலுகைகளை வெற்றியீட்டிய நேச நாடுகளில் ஒன்றான ஜப்பானுக்குக் கையளிக்க வேண்டும் என ஆணையிட்டன. 1919 மே 4 ம் தேதி தியானமென் சதுக்கத்தில் (Tiananmen Square) பத்தாயிரக்கணக்கான மாணவர்கள் ஜப்பானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதன் மூலம் ஆர்ப்பாட்டங்களும் ஜப்பானியப் பொருட்களின் பகிஷ்கரிப்பும் நாடு முழுவதையும் அலையென ஆட்கொண்டன.

இந்த இளைஞர்களின் மிகவும் சிந்திக்கின்றவர்களும் விமர்சனக் கண்ணோட்டம் உள்ளவர்களும் 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி முன்னுதாரணத்தினால் எழுச்சியூட்டப்பட்டார்கள்.சீனாவைப் போலவே ரஷ்யாவின் முதலாளித்துவ வர்க்கமும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை - ஜாரிசத்தை அழிப்பது மற்றும் விவசாயிகளை பாதி-நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையில் இருந்து விடுவிப்பது ஆகியவை - நிறைவேற்றத் தான் இலாயக்கில்லை என்பதை நிரூபித்தது. பதிலாக இந்தக் கடமைகள் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் விழுந்தது. அது ஜாரிச எதேச்சதிகாரத்தை 1917ம் ஆண்டு பெப்ரவரி புரட்சியில் தூக்கி வீசியது. அதன்பின் அது லெனினும் ட்ரொட்ஸ்கியும் தலைமை தாங்கிய போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் ஆட்சி அதிகாரத்தை அக்டோபர் 1917ல் கைப்பற்றியது.

சீனாவில் புரட்சிகர இளைஞர்களின் புதிய தலைமுறையானது அப்போது ஜப்பானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பிரதானப் பாத்திரம் வகித்துக் கொண்டிருந்த வளர்ந்து வந்த தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்பியது. சீனத் தொழிற்துறை வளர்ச்சியின் ஆரம்பம் முதலாம் உலகப் போர் காலப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின்றது. அப்பொழுது போர்த் தேவை கொள்முதல் ஆணைகள் அளித்த ஊக்கத்தின் கீழும் அயல்நாட்டுப் போட்டி இல்லாத நிலையிலும் தொழிற்சாலைகள் செழித்தோங்கின. 1920 ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்னாளில் இடது எதிர்ப்பாளர்கள் அணிக்குத் தலைமை கொடுத்தவரும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சீனப் பிரிவை நிறுவியவருமான சென்-துஹ்ஷியூவின்(Chen Duxiu) தலைமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விரைவாக வளர்ச்சிபெற்று சீனப் பாட்டாளி வர்க்கத்தின் பிரதான பெருங்கட்சியாக மாறியது.

இப்படியான நிலைமைகளின் கீழ்தான் 17 வயது இளைஞரான டெங் ஜியாவோபிங் 1921 ல் பிரான்சுக்கு வந்து சேர்ந்தார். மேற்கத்திய நாடுகளின் மிகவும் முன்னேறிய வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு அந்த நாடுகளின் வளர்ச்சியை சீனாவும் எட்டிப்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்கின்ற பரந்த உத்வேகத்தின் பகுதியாக பிரெஞ்சு தொழிற்சாலைகளுக்குச் சென்று வேலை செய்து அங்கிருந்து தொழில்நுட்ப பயிற்சியைப் பெற்றுவர அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான சீனர்களில் அவரும் ஒருவராய் இருந்தார்.

ஆனால் ஆரம்பகால கம்யூனிச அகிலத்தின் மார்க்சிசம் தான் டெங் ஜியாவோபிங்கைக் கவர்ந்த முன்னேறிய தத்துவமாகியது. அவர் விரைவாக பிரான்சில் இருந்த சீனக் கம்யூனிச மாணவர் அமைப்பினில் சேர்ந்தார். அங்கு அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர்களில் ஒருவர் சூ-என்-லாய் ஆவார். டெங் ஆற்றல்மிக்க ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 1925 ஆம் ஆண்டு பிரான்சில் இருந்து செல்கின்ற வரையிலும் போலிஸ் கண்காணிப்பில் இருந்தும் கைதில் இருந்தும் தப்பித்திருக்கும் திறம் அவரிடம் இருந்தது. மாஸ்கோவுக்கு பயணம் செய்த அவர் அங்கு கம்யூனிச அகிலத்தின் அரவணைப்பின் கீழ் சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தில் ஒன்றரை வருடங்கள் கல்வி கற்றார்.

அப்பொழுது கம்யூனிச அகிலத்தினுள் சீனாவைப்பற்றிய விவாதம் புயலாக வீசிக் கொண்டிருந்தது. ஸ்ராலின் தலைமையின் கீழான கன்னை 1917 இன் மிக அடிப்படையான படிப்பினைகளை நிராகரித்து மென்ஷவிக்குகளின் இரண்டு கட்டப் புரட்சித் தத்துவத்தை தழுவியிருந்தது. சீனத் தொழிலாள வர்க்கமானது சுதந்திரமான சீன முதலாளித்துவத்துக்கான போராட்டத்தில் சீன முதலாளித்துவ வர்க்கத்துக்கு முதலில் ஆதரவு அளித்ததன் பின்னரே அதனது சொந்த உரிமையின் அடிப்படையில் ஆட்சியை அமைக்க இலட்சியம் கொள்ள முடியும் என அது வலியுறுத்தியது. இந்த மூலோபாயத்திலிருந்து ஊற்றெடுத்தது தான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை அப்போது சியாங்கே ஷேக்கின் தலைமையின் கீழ் இருந்த முதலாளித்துவ கோமிண்டாங் கட்சிக்கு கீழ்ப்படிய வைப்பதென்கின்ற தந்திரோபாயம்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது கோமின்டாங்கினுள் ஒன்றாக்கப்பட்டு அந்த முதலாளித்துவக் கட்சியின் ஒழுங்கை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அதே நேரத்தில் சியாங் கேய்-ஷேக் கம்யூனிச அகிலத்தின் செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ட்ரொட்ஸ்கியின் வாக்கு மட்டுமே எதிர்த்துப் பதிவாகியிருந்தது. ஸ்ராலின் “முற்போக்கு” தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்று அழைத்த ஒன்றுடனான கூட்டணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்கின்ற காரணத்தால் நில மறுவிநியோகம் மற்றும் தொழிற்சாலைகளை தொழிலாளர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது போன்ற தீவிரமயப்பட்ட சமூகக் கொள்கைகளை முன்னெடுப்பதில் இருந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

சீனாவில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும் என்று ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்ப்பாளர்கள் அணியினரும் போராடினார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகோமின்டாங்குக்கு வால் பிடிப்பதல்ல, மாறாக சீனப் பாட்டாளி வர்க்கம் தன் பின்னால் கோடான கோடி விவசாயிகளை அணிதிரட்டி முதலாளித்துவத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் தூக்கிவீசி ஆட்சியைக் கைப்பற்றுகின்ற வண்ணம் அதனை வழிநடத்திச் செல்வதாகும் என்று அவர் வாதிட்டார். சீனா ஒரு ஒடுக்கப்பட்ட நாடு என்பதால் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான வர்க்கப் பகைமை தணியப்படுத்தப்பட்டுள்ளது என்ற வாதத்தை அவர் நிராகரித்தார்.

''ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சிகரப் போராட்டமானது வர்க்கங்களுக்கு இடையிலான அரசியல் வேறுபாட்டை பலவீனப்படுத்தவில்லை மாறாக அதை வலுப்படுத்தவே செய்கிறது''என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். ''சீனாவின் உள் உறவுகளில் ஏகாதிபத்தியமானது மிகவும் வலிமை வாய்ந்த ஒரு சக்தியாகும். இந்த சக்தியின் பிரதான ஊற்றுக்கால் யாங்சிக் கியாங் நீர்ப்பரப்பின் யுத்தக் கப்பல்கள் அல்ல. அவை வெறும் துணைச் சக்திகளே. மாறாக அந்நிய மூலதனத்துக்கும் சுதேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் பிணைப்பே பிரதான ஊற்றுக்கால் ஆகும்'' (சீனப் புரட்சியின் பிரச்சனைகள் பக்கம்-5)

நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் முன்னோக்கு

தாமதப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்தி கொண்ட நாடுகளில் நிலப் பிரச்சனை, தேசிய ஒன்றிணைப்பு மற்றும் ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் என்பன உட்பட்ட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை சாதிக்கும் திறன் இனியும் முதலாளித்துவ வர்க்கத்திடம் கிடையாது என்று ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் ஸ்தாபித்திருந்தார்.இப்பணிகள் சம்பந்தமான முதலாளித்துவ வர்க்கத்தின் மனோபாவம், ஒரு புறம் ஏகாதிபத்தியம் மற்றும் நில உடமையாளர்கள் ஆகிய இரு தரப்புடனும் அது கொண்டுள்ள நெருக்கமான பிணைப்பினாலும், மறுபுறம் பாட்டாளி வர்க்கம் சம்பந்தமாக அது கொண்டுள்ள பயத்தினாலும் நிர்ணயம் செய்யப்படுவதாய் இருந்தது. ரஷ்யாவில் இருந்ததைப் போலவே சீனாவிலும் மக்கள்தொகையில் அறுதிப் பெரும்பான்மையை அடக்கியிருந்த விவசாயிகள் உயிரமைப்புரீதியாக (organically) சுயாதீனமான பாத்திரமொன்றை வகிக்க இயலாததாய் இருந்தது. சிறு உடைமையில் வேரூன்றியிருக்கிறதும் மற்றும் வசதியான மற்றும் ஒடுக்கப்பட்ட அடுக்குகளாக உள்ளார்ந்து பிளவுபட்டதாயிருக்கிறதுமான இடையிலிருக்கும் சமூகத் தட்டான இந்த விவசாயி வர்க்கம் மற்ற இரண்டு வர்க்கங்களில் ஒன்றின் தலைமையைத் தான் பின்தொடர முடியும்.

ஆக, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் தலைமைப் பாத்திரம் தொழிலாள வர்க்கத்தின் தோளில் விழுந்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ தனக்குப் பின்னால் அது விவசாயிகளை அணிதிரட்ட வேண்டும். இப்போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் இறங்கியதும் அது ஜனநாயகப் பணிகளுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்வதென்பது முடியாது, மாறாக முதலாளித்துவ உடைமைக்கு சவால் விட உந்தப்பட்டு அதன் மூலம் ஜனநாயகப் புரட்சிக்கு பட்டவர்த்தனமான சோசலிசக் குணாம்சத்தை அளிக்க உந்தப்படுகின்றது.

புரட்சியின் ''நிரந்தரத் தன்மை'' இன்னுமொரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கப் புரட்சி, சீனாவில் போலவே, உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு கூடுதல் சாதகமான நிலைமைகளை உருவாக்கும். ட்ரொட்ஸ்கி, லெனினைப் போலவே, ஒரு தனிமைப்பட்ட தேசிய அரசின் வரையறைகளினுள் சோசலிசத்தை நிர்மாணிப்பது முடியாது என்றும், அதிலும் பின்தங்கிய ரஷ்யாவினில் இது இன்னும் உறுதிபடக் கூறத்தக்க ஒன்று என்றும் வலியுறுத்தினார். சோசலிசப் புரட்சியை சர்வதேச ரீதியில் விஸ்தரிப்பதன் மூலம்தான் இதனை அடைய முடியும் என்றார்.

உலக சோசலிசப் புரட்சியின் இந்த முன்னோக்கை ஸ்ராலின் நிராகரித்தார். சோவியத் ஒன்றியத்தில் வளர்ந்துவந்த அதிகாரத்துவத் தட்டின் நலன்களுக்கு அவர் தனது பழமைவாத மற்றும் மார்க்சிச விரோதத் தத்துவமான ''தனியொரு நாட்டில் சோசலிசம்'' என்ற தத்துவத்தின் மூலம் குரல் கொடுத்தார். இந்தத் தத்துவத்தின்படி சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தை நிர்மாணிப்பது முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கம் ஆட்சிக்கு வருவதின் மீது இனியும் தங்கியிருக்கவில்லை. இதற்குப் பதிலாக சோவியத் ஒன்றியத்தின் சொந்த உள் வளங்களை அணிதிரட்டுவதன் மூலமே அதை அடைந்து விட முடியும் என்பதாகும்.

இந்த பின்னோக்கிப் பயணிக்கின்ற முன்னோக்கின் பாதிப்பின் கீழ் கம்யூனிச அகிலத்தின் பாத்திரமானது ஒரு அடிப்படை உருமாற்றத்துக்கு சென்றது. அது சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்துக்கு மாபெரும் அழிவுகரமான விளைபயன்களைக் கொண்டிருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தை நிர்மாணிப்பது சாத்தியம் தான் ஆனால் ஏகாதிபத்தியங்கள் இராணுவரீதியாக தலையிடாது இருந்தால் மட்டுமே என்று ஸ்ராலினின் கன்னையினர் கூறி வந்தனர். இவ்வாறாக, இளம் கம்யூனிஸ்ட் கட்சிகள் சோசலிசத்துக்கான புரட்சிகரப் போராட்டத்தை நடத்தும் திசையில் செலுத்தப்படாமல், அதற்குப் பதிலாக “முற்போக்கு” என்பதான முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஆட்சிகளுடன் கூட்டணிகளை வளர்த்தெடுப்பதற்கும் மற்ற அரசாங்கங்கள் சோவியத் ஒன்றியத்துடன் தங்களை இணக்கப்படுத்திக் கொள்கின்ற வகையில் அவற்றுக்கு அழுத்தம் அளிக்கவுமான திசையை நோக்கிச் செலுத்தப்பட்டன.

ஸ்ராலினது தலைமையின் கீழ் கம்யூனிச அகிலமானது சீனாவில் முதலாளித்துவ கோமின்டோங்கிற்குப் பின்னால் தன்னை நிறுத்திக் கொண்ட அதே காலகட்டத்தின் போது பிரிட்டனிலும் இதேபோன்றதொரு கொள்கை செதுக்கப்பட்டது. அங்கு அது தொழிற்சங்க காங்கிரஸ் அதிகாரத்துவத்துடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி 1926 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் பொது வேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்படுவதற்குப் பாதை திறந்தது. யூகோஸ்லேவியாவில், கம்யூனிஸ்ட் கட்சியை பல்வேறு வலதுசாரி தேசியவாத சக்திகளிடம் கைகட்டி நிற்கும்படி செய்ய கிரெம்ளின் முனைந்தது.

1925-27 காலப்பகுதியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கோமின்டாங்குடன் கொண்டிருந்த கூட்டானது வெற்றியை ஈட்டித் தருவதாக தோற்றமளித்தது. சியாங் கேஷேக் தென் சீனாவிலுள்ள தனது தளங்களை முதலில் பலப்படுத்திக்கொண்டு நாட்டின் எஞ்சிய பகுதியை யுத்தபிரபுக்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்காக வடக்கு நோக்கிய தனது படையெடுப்பை தயாரிப்பு செய்து தொடக்கினார். ஆனால், ஸ்ராலின் சீனாவில் கடைப்பிடிக்கும் கொள்கையானது சீனப் பாட்டாளி வர்க்கத்தை ஒரு மரணப் படுகுழிக்கு இட்டுச் செல்கிறது என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கைகள் 1927 ஏப்ரலில் துயரமான முறையில் உறுதிப்படுத்தப்பட்டன. சியாங் கேஷேக்கின் துருப்புக்கள் ஷாங்காயில் 20 ஆயிரம் தொழிலாளர்களைக் கொன்று குவித்து வரலாற்றின் குருதி பாயும் மாபெரும் படுகொலைகளில் ஒன்றை நடத்தின. இதைத் தொடர்ந்து ஊகான் அதைப் போன்று மற்ற நகரங்களிலும் அடுத்தும் படுகொலைகள் தொடர்ந்தன,அதன்பின் குவாங்ஷு (கன்டோன்)வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தோல்விகண்ட கிளர்ச்சி நடந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்ப்புற அடித்தளம் தகர்க்கப்பட்டது. சீனப் பாட்டாளி வர்க்கமானது இதன் மூலம் பல பத்தாண்டுகள் பின்நோக்கி வீசப்பட்டது.

சீனாவின் தொழிலாள வர்க்கம் மட்டுமல்ல. 1927 ஆம் ஆண்டின் பெருந்துயரமானது உண்மையில் சர்வதேசப் புரட்சியின் கோணத்தில் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் நம்பிக்கையின் மீது விழுந்த மிக முக்கியமான தனிப்பெரும் அடியாக இருந்தது. இச்சமயம் தொடங்கி, ஸ்ராலினிச அதிகாரத்துவமானது தனது தேசியவாத வேலைத்திட்டத்தை முன்னினும் அதிகமான அகம்பாவத்துடன் முன்வைத்தது, இடது எதிர்ப்பாளர்கள் அணி பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு முடிவதற்கு முன்பாகவே, ட்ரொட்ஸ்கி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு சீன எல்லையில் இருந்து ஒரு சில மைல்கள் தொலைவில் இருக்கும் சோவியத் மத்திய ஆசியாவின் அல்மா அடாவிற்குக் கடத்தப்பட்டார். சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினின் அதிகாரம் திண்ணமடைந்ததானது அதன் எதிர்விளைவாக சீனாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அடுத்துவந்த நிகழ்வுகளில் கொஞ்சம் கொஞ்சமாய் அரிக்கின்ற மற்றும் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை பெருகியமுறையில் வகித்தது.

தொழிலாள வர்க்கத்திலிருந்து விவசாயிகளுக்கு

1927 ன் தோல்விகளைத் தொடர்ந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் காரியாளர்கள் நாட்டுப் புறப் பகுதிக்கு தப்பி ஓடினார்கள். அங்கு அவர்கள் விவசாயிகளிடமிருந்தும் வர்க்கப்பகுப்பிடாத (declassed) கூறுகளிலிருந்தும் ஆதரவாளர்களைத் திரட்டி ஏராளமான தனித்தனி கிராமப்புற பகுதிகளில் "செம்படை”களை உருவாக்கினார்கள்.

இவற்றில் மிகவும் பிரபல்யமானது மாசேதுங்கின் தலைமையின் கீழ் ஜியாங்சி மாகாணத்தில் இருந்தது. ஷங்காய் படுகொலைக்குக் கொஞ்ச சற்று காலத்திற்குப் பின் மாஸ்கோவிலிருந்து சீனா திரும்பியிருந்த டெங் ஜியாவோபிங் தொலைதூரத் தென்மேற்குப் பகுதியில் உள்ள கோயிஷூ மாகாணத்திற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் பல ஆண்டுகளுக்கு மிகவும் சிறிய விடுதலை அடைந்த பகுதியைப் பராமரிக்க முனைந்து வந்தார். 1931 ல் மிகவும் தீவிரமான இராணுவ நெருக்குதலின் கீழ், டெங் தனது இராணுவத்தின் எஞ்சிய பகுதியினரை சுற்று வழிகளில் அழைத்துக் கொண்டு ஜியாங்ஷியை அடைந்து மாவோவின் படைகளுடன் தனது படைகளை இணைத்தார். 1934 அக்டோபரில் இதே மாதிரியான நிலைமைகளின் கீழ் மாவோ புகழ்பெற்ற தன் நீண்ட பயணத்தை ஆரம்பிக்க நிர்ப்பந்தமுற்றார். இப்பயணத்தில் அவரது இராணுவம் போராட்டத்துடன் 6000 மைல்கள் தூரத்தைக் கடந்து ஒதுக்கமாய் உள்ள வடமேற்கு மாகாணமான ஷங்ஷி மாகாணத்தை அடைந்தது. அங்கிருந்த யானான் என்னும் விவசாய நகரத்தில் மாவோ தனது தலைமையகத்தை அமைத்தார்.

நகர்ப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு மற்றும் கிளர்ச்சிகளிலிருந்து விலகி நாட்டுப்புறப் பகுதிகளிலான அரை-சுதந்திரமான விடுதலை செய்யப்பட்ட பகுதிகளைக் கட்டுவதற்கு மாறுவதென்பது வெறுமனே தந்திரோபாயத்திலான ஒரு மாற்றம் மட்டுமல்ல. மாறாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதற்கு அடிப்படையான அதன் வர்க்க நோக்குநிலை மற்றும் வேலைத்திட்டத்திலிருந்து விலகிச் செல்வதாகும். ரஷ்ய புரட்சியினால் எழுச்சியூட்டப்பட்ட அரை காலனித்துவ நாடுகளின் தொழிலாள வர்க்கத்தினதும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் சர்வதேச எழுச்சியின் விளைபொருளாக ஆரம்பத்திலிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நகரங்களிலிருந்தும் மற்றும் தொழிலாள வர்க்கத்திடமிருந்தும் விலகி முற்றுமுழுதாக தனது நோக்குநிலையை விவசாயிகளை நோக்கித் திருப்பியிருந்தது.

பல்வேறு பகுதிகளிலும் ''செம்படைகளில்'' சேர்ந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் விவசாயிகளிலிருந்து வந்தவர்களாவர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த சமூக வேலைத்திட்டம் கடன்களைக் குறைப்பது, கிராமங்களில் நேர்மையான நிர்வாகம், நிலப்பிரபுக்களின், கந்து வட்டிக்காரர்களின் மற்றும் யுத்தபிரபுக்களின் ஒடுக்குதலுக்கு எதிர்ப்பு, அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு அதிலும் குறிப்பாக 1931 ல் மஞ்சூரியாவை ஜப்பான் ஆக்கிரமித்ததன் பின் என பரந்த எண்ணிக்கையிலான நடுத்தர விவசாயிகளின் நலன்களைக் காப்பதாக அமைந்திருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நகர்ப்புறத் தொழிலாளர்கள் மத்தியில் எந்தவொரு ஒழுங்குமுறையான வேலையையும் கைவிட்டது.

1925-26 களில் கட்சி உறுப்பினர்களில் 5 சதவீதத்தினர்தான் விவசாயிகளாக இருந்தனர். 1928 இன் இறுதியில் அவர்கள் 70 சத வீதத்திலிருந்து 80 சதவீதம் வரை ஆயினர். 1930 ஆம் ஆண்டளவில் மொத்தக் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையான 120,000 இல் ''தொழிற்துறை தொழிலாளி உறுப்பினர்களின் எண்ணிக்கை 2000 க்கும் சற்று அதிகமான எண்ணிக்கையில் தான் இருந்தது” என சூ என்-லாய் தெரிவித்தார்.

ட்ரொட்ஸ்கி சீன இடது எதிர்ப்பாளர்கள் அணிக்கு எழுதிய கடிதத்தில் - ''சீனாவில் விவசாய யுத்தமும் பாட்டாளி வர்க்கமும்'' என்ற தலைப்பின் கீழ் அது வெளியிடப்பட்டது - எச்சரித்ததுபோல சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க அடித்தளத்தில் ஏற்பட்ட இந்த நகர்வு மிகவும் ஆழமான வரலாற்றுப் பாதிப்புகளைக் கொண்டிருந்தது. 1932 ல், மாவோ அப்போது யாங்ஷி மாகாணத்தில் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான கெரில்லா நடவடிக்கைகளுக்குத் தான் தலைமை நடத்திக் கொண்டிருந்ததான அச்சமயத்திலேயே, ட்ரொஸ்ட்கி எழுதுகையில்,கோமின்டாங்குடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இராணுவப் போராட்டத்தில் அதன் இறுதி வெற்றி உண்டாக்கக் கூடிய முரண்பாடுகளை முன்கணித்தார். நிலப்பண்ணைகளின் மற்றும் முதலாளித்துவத்தின் படைகளை தோற்கடித்ததன் பின் நகரங்களில் நுழையும் ஒரு விவசாயிகள் இராணுவமானது தொழிலாள வர்க்கத்தை இன்றியமையாது அரவணைத்துக் கொள்ள கட்டாயமில்லை. இதற்கு நேர்மாறாக சிறிய விவசாய உடமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வர்க்கக் கண்ணோட்டங்களில் இருக்கும் வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டால், ஒரு நேரடியான மற்றும் வன்முறைமிக்க மோதலுக்குச் சாத்தியம் இருந்தது.

1920களின் ஆரம்பத்தில் தொழிலாள வர்க்க எழுச்சியில் தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமூலங்கள் இருந்தன என்பதானது அக்கட்சி ஆட்சிக்கு வருகின்ற போது அப்போதும் அது தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்கின்ற உத்தரவாதம் எதனையும் வழங்கி விடவில்லை என ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். ''கடந்த சில ஆண்டுகளாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் முயற்சிகளை நகரங்களில், தொழிற்துறையில், இரயில் பாதைகளின் மேல் ஒருமுகபபடுத்தியிருக்குமாயின்; அது தொழிற் சங்கங்களை, கல்வி மன்றங்களை மற்றும் கல்வி வட்டங்களை பேணி வந்திருக்குமாயின்; அது தொழிலாளர்களிடமிருந்து தன்னை முறித்துக் கொள்ளாமல் கிராமங்களில் என்ன நடக்கிறது என்பது சம்பந்தமாக அவர்களுக்குக் கல்வியூட்டிப் புரிய வைத்திருக்குமாயின் அந்நிலையில் சக்திகளுக்கு இடையிலான பொதுவான இடையுறவில் பாட்டாளி வர்க்கத்தின் பங்கு ஒப்பிட முடியாத அளவுக்கு அதற்குச் சாதகமானதாய் இன்று இருந்திருக்கும்.''

''கட்சி உண்மையில் தன் வர்க்கத்திடமிருந்து தன்னை பிரித்தெடுத்துக் கொண்டது. இதன்மூலம் அது இறுதி ஆய்வில் விவசாயிகளுக்கும் கூட சேதத்தையே ஏற்படுத்தலாம். ஏனென்றால் பாட்டாளி வர்க்கம் அமைப்பு ஒழுங்கு இல்லாமல் தலைமை இல்லாமல் ஓரத்தில் ஒதுங்கி நிற்கும் நிலையே தொடருமாயின் விவசாயிகளின் போர் அது முற்றுமுழுதாக வெற்றி பெற்றாலும் கூட ஒரு முட்டுச் சந்துக்குத்தான் வந்தடையும்.” (சீனா குறித்து ட்ரொட்ஸ்கி, பக். 527)

மக்கள் குடியரசை நிறுவுதல்

மார்க்சிச முன்னறிதிறனுக்கான உதாரணமாய் அமைந்த இந்தக் கணிப்பு

ஜப்பான் சீனாவை 1937 ல் ஆக்கிரமித்ததில் தொடங்கி மாவோ சேதுங் 1949 ல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் சிகரமுற்ற நிகழ்வுகளில் துல்லியமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.ஜப்பானிய இராணுவத்தின் நெருக்குதல், பண வீக்கம் மற்றும் புரையோடிய ஊழலின் பாதிப்பின் கீழ் கோமிண்டாங் ஆட்சி நொருங்கிப்போன சமயத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழான விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டிருந்த படைகள் ஜப்பானியர்களை நோக்கிய தேசிய எதிர்ப்பின் ஈட்டிமுனையாக மாறின.

எட்டு வருட யுத்தத்தின் பொழுது மக்கள் விடுதலைப் படையின் வலிமை 90 ஆயிரத்திலிருந்து பத்து இலட்சத்தையும் தாண்டி வளர்ந்தது. அதில் மிகத் துரிதமான வளர்ச்சி டெங் ஜியாவோபிங் தலைமை தாங்கிய படைகளில் இருந்தது. அவர் மாவோவின் மிக்க ஆற்றல் படைத்த தளபதிகளில் ஒருவராகவும் ஜப்பான் மற்றும் கோமின்டாங் இரண்டுக்கும் எதிரான இராணுவப் போராட்டத்தின் ஒரு உண்மையான நாயகனாகவும் எழுந்திருந்தார்.

1945 ல் ஜப்பான் சரணடைந்தபின் சீனாவில் உள்நாட்டுப் போர் முன்வந்து நின்றது. மாவோ மற்றும் ஸ்ராலின் இருவருமே இந்த உள்நாட்டுப் போரைத் தவிர்க்க கோமின்டாங் உடன் ஒரு இணக்கத்தை ஸ்தாபிக்க ஏதேனும் வழி கிடைக்குமா எனத் தேடினர். இருந்தபோதும் 1946 கோடைகாலத்தில் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி ஏற்படுத்திய யுத்தநிறுத்த உடன்படிக்கையை சியாங் கேய்-ஷேக் முறித்துக் கொண்டு ஒரு தாக்குதலைத் தொடுத்தார் அது உருப்பெறாததாக விரைவிலேயே நிரூபணமானது. மக்கள் விடுதலைப் படையின் படைப்பிரிவுகள் லின் பியோவின் தலைமையின் கீழ் மஞ்சூரியாவையும் டெங் ஜியாவோபிங்கின் தலைமையின் கீழ் யாங்ட்சி நதியின் வடக்கே இருக்கும் மத்திய சீனாவையும் கைப்பற்றின.

1948ல் அன்ஸ்டாஸ் மிக்கோயன் ஊடாக அனுப்பப்பட்ட ஸ்ராலினின் வேண்டுகோளை - யாங்ட்சி நதியுடன் நிறுத்திவிட்டு சியாங்கே ஷேக்குடன் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும்படி விடுத்த வேண்டுகோளை - உதாசீனம் செய்துவிட்டு மாவோ மும்முனைத் தாக்குதலுக்குக் கட்டளையிட்டார். இத்தாக்குதல் நாட்டின் தென் பாதியைக் கைப்பற்றியதோடு கோமின்டாங்கை தாய்வானுக்கு நாடுகடத்தப்படும் நிலைக்குச் செய்தது.

மாவோ மக்கள் சீனக் குடியரசை அக்டோபர் 1, 1949 ல் தியானென்மென் சதுக்கத்தில் பிரகடனப்படுத்தியபோது அவர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதாகக் கூறவில்லை. அவர் முதலாளித்துவத்தை பேணுவதற்கு அழைக்கும் ஸ்ராலினுடைய இரண்டு கட்ட புரட்சித் தத்துவம் மற்றும் விவசாயிகள், நகர்ப்புற குட்டி முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ''தேசிய''முதலாளித்துவ வர்க்கம் என்பனவற்றை தொழிலாள வர்க்கம் வழி நடத்துவதாகக் கூறும் ''நான்கு வர்க்கங்களின்'' கூட்டை அமைத்தல் ஆகியவற்றுக்கு இணங்கச் செயல்பட்டார். நிஜமான நிலைமை என்னவென்றால் உள்நாட்டு யுத்தத்தில் தொழிலாள வர்க்கமானது ஓரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கச் செய்யப்பட்டிருந்ததோடு, அது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கத்தில் எவ்வித செல்வாக்கும் கொண்டிராத நிலையே இருந்தது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கம் சம்பந்தமாகக் கொண்டிருந்த மனப்பான்மையை 1948 ல் அது லோயங் நகரத்தைக் கைப்பற்றியதன் பின் லோயங் முனை இராணுவத் தலைமையகத்துக்கு மாவோ சே-துங் அனுப்பிய தந்தி எடுத்துக் காட்டுகின்றது. கோமின்டாங் அதிகாரிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளுக்கு எதிரான பதில்தாக்குதலின் அளவை மட்டுப்படுத்துவது சம்பந்தமாக ''மிகவும் விவேகத்துடன்'' நடந்து கொள்ள மாவோ கட்சி நிர்வாகிகளுக்கு அதில் கட்டளையிட்டிருந்தார்.

''நகரத்தினுள் புகுந்ததும் விளையாட்டுத்தனமாக, சம்பளங்களை உயர்த்துவது மற்றும் வேலை நேரங்களைக் குறைப்பது ஆகிய முழக்கங்களை முன் வைக்காதீர்கள்'' என்று மாவோ கட்டளையிட்டார். ''ஜனநாயகச் சீர்திருத்தங்கள் மற்றும் வாழ்க்கைத்தர முன்னேற்றங்களுக்காக நகரத்து மக்களை போராடுவதற்காக அணி திரட்ட அவசரப்படாதீர்கள்'' என்றார். நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு ஊட்ட தானியக் களஞ்சியங்களை திற என்ற கோரிக்கைகளை வைக்க வேண்டாம் என்றும் அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கட்டளையிட்டார். ஏனென்றால்''இது நிவாரணத்திற்கு அரசாங்கத்தின் மீது தங்கியிருக்கும் மனோநிலையை அவர்கள் மத்தியில் வளர்த்து விடும்'' என்று அவர் எச்சரித்தார்.

ஸ்ராலினிசத்தில் இருந்தும் விவசாய தீவிரவாதத்தில் இருந்தும் தேவையானதை எடுத்துக் கொண்ட ஒரு திரட்டுவாதக் கலவையை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு முன்னோக்கின் கீழ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. தன் தோற்றக் காலத்து தொழிலாள வர்க்க அடித்தளத்திலிருந்து தன்னை அது நீண்ட காலத்துக்கு முன்னரே விவாகரத்து செய்து விட்டிருந்தது. அது தொழிலாள வர்க்கக் கட்சியல்ல என்பதைப் போலவே உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் விவசாயிகளாக இருந்தனர் என்கின்ற அர்த்தத்தில் தவிர அதனை விவசாயிகளின் கட்சி என்றும் கூற முடியாது. மாவோ நிறுவிய புதிய அரசு தொழிலாள வர்க்கத்துக்கோ அல்லது விவசாயிகளுக்கோ அதன்மேல் ஜனநாயக ரீதியில் கட்டுப்பாடு செலுத்த எந்த ஒரு வழியையும் அமைத்துக் கொடுக்கவில்லை. அந்த அரசு செம்படை மற்றும் அதன் முன்னணி அதிகாரிகளையும் மற்றும் அரசியல் கமிசார்களையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு அதிகாரத்துவ எந்திரமாக இருந்தது.

தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுதந்திரமான நடவடிக்கைக்கும் மாவோயிஸ்டுகள் கொண்டிருந்த குரோதம் சீன ட்ரொட்ஸ்கிசவாதிகளை அவர்கள் நடத்தியதில் அதன் மிகவும் மிருகத்தனமான வெளிப்பாட்டைக் கண்டது. ஸ்ராலினிஸ்டுகள், கோமின்டாங் மற்றும் ஜப்பானியர்களின் கூட்டு அடக்குமுறையின் மத்தியிலும் நான்காம் அகிலத்தின் ஆதரவாளர்கள் தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகரக் கட்சியை தொடர்ந்தும் கட்டி வந்தார்கள். அவர்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலம் முழுவதும் நகரங்களை குறிப்பாக ஷங்காய் நகரை மையமாகக் கொண்டு தலைமறைவாய் அரசியல் வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். 1952ல், மாவோவின் இரகசியப் போலிசார் இந்த மார்க்சிச புரட்சிகரவாதிகள் நூற்றுக்கணக்கானோரை சுற்றிவளைத்தனர். அவர்கள் கைதுவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அல்லது நீண்ட கால சிறைத் தண்டனைகள் அளிக்கப் பெற்றனர். நாட்டைவிட்டுத் தப்பி வெளியேற முடியாதவர்கள் 1949 ஆம் ஆண்டிலிருந்து 1978 ஆம் ஆண்டில் டெங் ஜியாவோபிங் நீண்டகாலம் சிறைத்தண்டனை அனுபவித்த சுமார் 100,000 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கும் காலம் வரை சிறைவாசத்தில் இருந்து வந்தார்கள்.

மாவோயிசத்தின் முரண்பாடுகள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் கட்டுப்படுத்த ஒரு போலிஸ் அரச எந்திரத்தை நிறுவிய அதே வேளையில் முதலாளித்துவ தன்மையுடனான புரட்சிகர நடவடிக்கைகளையும் செயற்படுத்தியது. சீனப்புரட்சியின் முதலாவது, எனினும் மிகப்பெரிய, சாதனை என்னவென்றால் 2000 ஆண்டுகளாக சீனாவை ஆட்சி புரிந்துவந்த நிலப்பிரபுத்துவ கனவான் வர்க்கத்தைக் கலைத்ததாகும். அவர்களுடைய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன்பின் விவசாயிகளுக்கு அவர்களுடைய தனிப்பட்ட உடைமையாக விநியோகம் செய்யப்பட்டன.

வெளியிலிருந்தான நெருக்குதல்களுக்குப் பதிலிறுப்பாக கூடுதல் தீவிரமய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதலாளிகள் தாய்வானுக்குப் பறந்ததால் ஆட்சியானது பெரும்பான்மையான தொழிற்துறை வசதிகளை தேசியமயமாக்க நிர்ப்பந்தம் பெற்றது. விவசாயம் கூட்டுப் பண்ணைமயமாக்கப்பட்டது, பின் கிராமப்புற மக்கள் தொகையின் மிகப்பெரும் பகுதி பெரும் விவசாயகம்யூன்களாக ஒழுங்கமைக்கப்பட்டது. அமெரிக்காவின் இராணுவத் தலையீடு கொரிய யுத்தத்தில் சீனாவையும் இறங்கச் செய்ததோடு சீன அயல் நாட்டுக் கொள்கையில் பெருமளவுவாய்வீச்சைக் கொண்ட ஏகாதிபத்திய-விரோதக் காட்சியளிப்புக்கும் இட்டுச் சென்றது.

வேண்டிய தொழில்நுட்பப் பயிற்சியோ அல்லது உள்கட்டமைப்போ இல்லாமல் விவசாயிகளை அணிதிரட்டி புறக்கடைத் தொழிற்துறைகளை நிறுவுவதன் மூலம் சீனாவின் தொழிற்துறைமயத்தை மாவோ முறுக்கிவிட எடுத்த முயற்சிதான் முன்நோக்கிய மாபெரும் பாய்ச்சல் (The Great Leap Forward) ஆகும். அதன் அழிவுகரமான தோல்வி அன்றிலிருந்து சீனப்புரட்சியின் முத்திரையாக இருந்து வந்திருக்கும் மாவோயிசத்தின் முரண்பாடுகளை அம்பலப்படுத்தியது.

தொழிற்துறையிலும் மற்றும் விவசாயத்திலும் திட்டமிட்ட அபிவிருத்திக்குக்குக் கிட்டிய ஆரம்ப வெற்றிகளே புதிய பிரச்சனைகளுக்கும் மற்றும் நெருக்கடிகளுக்கும் காரணமாக மாறின.ஏனென்றால் உலகப் பொருளாதார த்திலிருந்து தனிமைப்பட்டும் அத்தோடு பரந்த உழைக்கும் மக்களின் நனவான மற்றும் உற்சாகமான பங்கு கொள்ளல் இல்லாமலும் சீனாவில் ஒரு முன்னேறிய தொழிற்துறைமய பொருளாதாரம் ஒன்றை உருவாக்குவது சாத்தியமற்றதாய் இருந்தது.

அப்படியான ஒரு அபிவிருத்தி மாவோ மற்றும் டெங் உட்பட்ட அவரது சகாக்களினது ஸ்ராலினிச முன்னோக்கினால் தடுக்கப்பட்டது. இவர்கள் சீன தேசியவாதத்திற்கு ஆதரவாக உலக சோசலிசப் புரட்சியை நிராகரித்து பரந்த மக்களின் சுயாதீனமான பாத்திரம் எதனையும் அதிகாரத்துவ எந்திரத்திற்குள் அமுக்கி வைத்தனர்.

இந்தப் பிரச்சனைகள் மாவோ வகித்த பங்கினால் மேலும் உக்கிரப்படுத்தப்பட்டன. ஸ்ராலினையும்விட குறைந்த கல்வியும் குறைந்த கலாச்சாரமும் கொண்டிருந்த மாவோ சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாகக் கொண்டிருந்த காலப்பகுதியில் அதன் வலதுசாரிப் பக்கம்தான் எப்போதும் நின்று வந்திருந்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பைசாந்திய (Byzantine) அரசியலில் மாவோ, கன்னைகளுக்கு இடையில் சூழ்ச்சித் திறம் செய்வது, ''இடதை'' ''வலது'' க்கு எதிராகவும், இராணுவத்தை பொதுமக்களுக்கு எதிராகவும்,தொழிற்துறையை விவசாயத்திற்கு எதிராகவும் மோதவிட்டு எப்பொழுதும் தனது தனிப்பட்ட பாத்திரத்தைப் பராமரித்துக் கொள்வதற்கு முனைவது என ஒரு போனபார்டிசப் பாத்திரத்தை வகித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் எதேச்சாதிகார கட்டமைப்பைக் கொண்டு பார்த்தால், இந்த தனிப்பட்ட குணாம்சங்கள் பிரம்மாண்ட அழிவுகரமான தாக்கங்களைக் கொண்டிருந்திருக்க வேண்டும். முன்னோக்கிய மாபெரும் பாய்ச்சலின் தோல்வி டெங்கிற்கும் மற்றைய நிர்வாகிகளுக்கும் ஒரு சில மாதங்களினுள் தெளிவாய் புரிந்து விட்டது. இருந்த பொழுதிலும் அதனைக் கைவிடுவதென்பது அதன் பிரதான கர்த்தாவான மாவோவிற்கு அபகீர்த்தியைக் கொண்டுவந்து விடும் என்பதால் அது மேலும் இரு வருடங்கள் தொடர அனுமதிக்கப்பட்டு அதன்மூலம் 20ஆம் நூற்றாண்டின் மிகக் கோரமான பஞ்சங்களில் ஒன்றுக்கு அது காரணமானது. அதில் சுமார் 30 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது. முழுப் பிரதேசங்களும் பட்டினி போடப்பட்டன, தேசிய உணவுக் கையிருப்பு முழுவதும் காலியானதால் அல்ல, மாறாக கட்சியின் பிராந்திய மற்றும் பிரதேசத் தலைவர்கள் எங்கே தமது “மாபெரும் செங்கோலரை”காயப்படுத்தி விடுவோமோ என்ற அச்சத்தில் அவசர விநியோகத்திற்கு கோரிக்கை விடுக்கும் துணிச்சல் இல்லாதிருந்ததால்.

இதைப்போலவே மாவோவின் பிரதான எதிரி லியு ஷா-சி, அத்துடன் மாவோவின் செம்படையினரால் “முதலாளித்துவப் பாதையமைப்பவரில் இரண்டாமிடத்தவர்” எனப் பட்டம் பெற்ற லியு ஷா-சியின் தளபதி டெங் ஜியாவோபிங் ஆகியோரை ஒடுக்குவதின் மூலமாக மாபெரும் பாய்ச்சலின் தோல்விக்குப் பின்னர் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான மாவோவின் முயற்சியில் தோன்றியது தான் கலாச்சாரப் புரட்சி. மாபெரும் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியானது அதன் பகட்டான தலைப்பு வார்த்தைகளில் எதற்கும் தகுதி உடையதாக இருக்கவில்லை: இது மிகவும் ஆழமான வகையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானதாக இருந்ததோடு கல்வி, கலாச்சாரம், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு எதிராகச் செலுத்தப்பட்டதாய் இருந்தது.

செங்காவலர் இயக்கம், சமூக ஏற்றத்தாழ்வும் மற்றும் அதிகாரத்துவ தனிச்சலுகைகளும் வளர்ச்சி பெற்றுச் செல்வது குறித்து இளைஞர்களிடம் வளர்ந்து வந்த குழப்பமான என்றாலும் உண்மையான குரோதத்தை வெளிப்படுத்தவே செய்தது. ஆயினும், மாவோவும் அவரது மனைவி ஜியாங் குவிங் மற்றும் அவரது நியமன வாரிசான லின் பியோ உள்ளிட்ட அவரது நெருங்கிய சகாக்களும் ஆளும் உயரடுக்கிற்குள்ளாக கன்னை மோதல்களில் கணக்குத் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை திரைக்குப் பிந்தைய சூழ்ச்சித் திறனுடன் கையாண்டனர்.

இறுதியில் மாவோவின் சந்தர்ப்பவாதப் புரட்டுவேலைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு வெளிப்படையான கூட்டணியை அமைப்பதை நோக்கிய வகையில் சீன வெளியுறவுக் கொள்கை நோக்குநிலை மாற்றி அமைக்கப்படுவதற்குப் பாதை அமைத்துக் கொடுத்ததோடு, அது ஹென்றி கிஸ்ஸிங்கரும் ரிச்சார்ட் நிக்சனும் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்வதிலும் வியட்நாம் புரட்சி காட்டிக் கொடுக்கப்படுவதிலுமாய் உச்சமடைந்தது.

மாவோயிசத்தின் சர்வதேசப் பாத்திரம்

உலக சோசலிசப் புரட்சியுடன் சீனாவுக்குள்ள உறவு என்கின்ற மிகவும் அடிப்படையான பிரச்சனை சம்பந்தமாக மாவே சேதுங், 1927 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்வியைத் தொடர்ந்து சீன தேசியவாதத்தின் அடிப்படையிலான ஒரு பாதையை வரைந்தார். மாவோ, உள்நாட்டுப் போரில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்படி ஸ்ராலின் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தார்,அத்துடன் கொரியப் போரில் இராணுவரீதியாகத் தலையீடு செய்வதில் தனது சொந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்கின்ற அதே சமயத்தில் இவை பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக அவை சீன அதிகாரத்துவத்தின் தேசியவாத நலன்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

தனது சொந்த தேசிய அக்கறைகளுக்காக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களைத் தியாகம் செய்வதற்கான விருப்பத்தில் மாஸ்கோவுக்கு பெய்ஜிங் சற்றும் இளைத்ததாக இருக்கவில்லை. 1954 ஆம் ஆண்டில் சூ என்-லாய் மற்றும் மோலோடோவ் (Molotov) கூட்டாகத் தரகு செய்து பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்தியத்துடன் ஜெனீவா ஒப்பந்தத்தை செய்து வியட்நாம் போரின் முதல் கட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த போது இது தெளிவுற விளங்கப்பட்டு விட்டது. ஸ்ராலினிச இராஜதந்திரிகள் டியன் பியன் பூவில் வியட் மின் (Viet Minh) போர்க்களத்தில் பெற்ற வெற்றியை அதற்கு இல்லாமல் செய்ததோடு, வியட்நாம் துண்டாடப்படுவதை ஹோ சி மின் ஏற்றுக் கொள்ள நெருக்குதலளித்து, அமெரிக்கத் தலையீட்டிற்கும் அடுத்த 20 ஆண்டுகளின் இரத்த வெள்ளத்திற்கும் மேடையமைத்துக் கொடுத்தார்கள்.

சீன ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நலன்களை சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கு எதிராக தொடர்ந்து நிலைநாட்டுவதில் மாவோ உறுதிகாட்டி வந்தார். இது 1960 ல் சீன சோவியத் பிளவில் முடிவுற்றது. ஆயினும் இது எவ்வகையிலும் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர கண்ணோட்டத்துடனான முறிவு எதனையும் குறிக்கவில்லை.

இதற்கான நிருபணம் இந்தோனேஷியாவில் ஏற்பட்டது. இங்கிருந்த சீனாவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் வெளியிலான மிகப் பெரும் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக இருந்தது என்பதோடு அது பெய்ஜிங்கிலிருந்து தனது அரசியல் குறிப்பைப் பெற்றுக் கொண்டு வந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் 1925-27 ல் ஸ்ராலின் திணித்த அதே கொள்கையையே இந்தோனேஷியக் கம்யூனிஸ்ட் கட்சி பின்பற்றியது - சுகர்னோவின் முதலாளித்துவ தேசியவாதக் கட்சியுடன் ஒரு கூட்டை உருவாக்கிக் கொண்ட அது இந்தோனேஷிய பாட்டாளி வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான புரட்சிகர நடவடிக்கையும் ஒடுக்கியது.

இதன் விளைவாய் நிகழ்ந்தது 1927 ஆம் ஆண்டின் சீனப் புரட்சியின் தோல்வியிலும் பார்க்க அதிக இரத்தம் பாய்ந்த பெருந்துயரமாகும். இந்தோனேஷிய இராணுவம் 1965 ல் ஆட்சியைக் கைப்பற்றியது. அது இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. ஒரு மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைப் படுகொலை செய்தது. இப்படுகொலை, வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணியின் பலம் வளர்ந்துகொண்டு வந்திருந்த போதிலும் தென்கிழக்கு ஆசியாவில் ஏகாதிபத்தியத்தின் நிலையைப் தாங்கிப் பிடித்தது.

வியட்நாமுக்கு பெய்ஜிங் அளித்த உதவி புரட்சிகர அனுதாபத்தின் அடிப்படையில் அமைந்ததல்ல, மாறாக சீனாவிற்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான மோதலில் இருந்து எழுந்த அக்கறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மாஸ்கோவிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவை நாட மாவோ முடிவெடுத்தபோது, வியட்நாமில் இன அழிப்பு குண்டு விழுந்த வண்ணம் இருந்தபொழுதும் கிஸ்ஸிங்கரையும் நிக்சனையும் பெய்ஜிங்கிற்கு அவர் வரவேற்றார். மாவோ மரணமடைந்து மூன்று வருடங்களுக்குப் பின் டெங் ஜியாவோபிங் வியட்நாமுக்கு எதிராக இருவார எல்லைப் போரைத் தொடுத்தார். இதில் பத்தாயிரக் கணக்கில் சீன மற்றும் வியட்நாமிய சிப்பாய்கள் இறந்தார்கள்.

மார்ச் 3ம் திகதி நியூஸ் வீக் இதழில் கிஸ்ஸிங்கர் நினைவுகூர்வது போல மாவோ உலகப் புரட்சி முன்னோக்கு பற்றி முற்றுமுழுதாய் சிடு மூஞ்சித்தனமாக இருந்தார். அவர் நிக்சனிடம் கூறினார், ''என்னைப் போன்ற ஆட்கள் பெரும் பீரங்கிகளைப் போல நிறைய சத்தம் போடுகிறார்கள். உதாரணமாக, ’முழு உலகமும் ஒன்றுபட்டு ஏகாதிபத்தியத்தை, திருத்தல்வாதத்தை மற்றும் அனைத்து பிற்போக்குத்தனவாதிகளையும் தோற்கடித்து சோசலிசத்தை நிலைநாட்ட வேண்டும்’ என்பன போன்றெல்லாம்''. அதன் பின் கிஸ்ஸிங்கர் கூறினார் ''சீனாவில் பல பத்தாண்டுகளாக பொதுவிடத் தட்டி ஒவ்வொன்றிலும் கிறுக்கப்பட்டு வந்திருக்கிற ஒரு முழக்கத்தை தீவிரமாய் மனதிலேற்றிக் கொண்டிருக்கக் கூடிய ஒருவருக்கு ஏற்படக் கூடிய தாக்கம் பற்றிக் கேட்டபோது அவர் உரக்கச் சிரித்தார்.”

மாவோயிசத்தின் அழிவுகரமான சித்தாந்த பாதிப்பின் ஒரு முக்கியமான அம்சம்தான் ''மக்களின் யுத்தம்'' என்னும் தத்துவமாகும். ஏகாதிபத்தியத்தைத் தூக்கி வீசுவதற்கான பாதை தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக புரட்சிகரரீதியில் அணிதிரட்டுவது அல்ல, மாறாக விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட படைகள் நகரங்களைச் சுற்றிவளைத்து நீண்டதொரு யுத்தத்தை மேற்கொள்வதன் மூலம் தான் என்று அது அறிவுறுத்தியது.

இப்படியான யுத்தமுறை மாவோவின் வெற்றியில் ஒரு அம்சமாக இருந்தது - ஜப்பானிய ஆக்கிரமிப்பு இதிலும் பார்க்கத் தீர்மானகரமான அம்சமாய் இருந்தது. பாதி நாடு ஏற்கனவே வியட் மின் ஆட்சியின் கீழ் இருந்த வியட்நாமிலும் இதேபோன்றதொரு பங்கை இந்த யுத்தமுறை வகித்தது. இந்த இராணுவ வெற்றிகள் தனித்தன்மை வாய்ந்தவை என்று நிரூபித்தன என்ற போதிலும் இவை இரண்டுமே இறுதியில் ஏகாதிபத்தியத்துடன் இணங்கிப் போவதற்கும் முதலாளித்துவ சந்தை உறவுகளை மீண்டும் மீட்சி செய்வதற்குமே இட்டுச் சென்றன. பிறவெங்கிலும்''மக்கள் யுத்தம்'' தொடுக்க எடுத்த முயற்சிகள் எல்லாம், பொலிவியாவில் சேகுவாராவின் சிறிய கெரில்லா குழு வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டதில் தொடங்கி இந்தியாவில் நக்சலைட்டுகளின் இடைவிடாத பலனற்ற இராணுவ நடவடிக்கைகள் வரையிலும், இரத்தம் தோய்ந்த தவறான சாகசங்களுக்கே இட்டுச் சென்றன.

1960 ம் ஆண்டுகளில் கெரில்லாவாதம் குட்டி முதலாளித்துவ புத்திஜீவித் தட்டுகளிடையே ஏறக்குறைய வழிபட்டுப் போற்றும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. ''துப்பாக்கிக் குழலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கின்றது'' என்ற மாவோயிச கைமருந்துச் சரக்குகளை அவர்கள் போற்றிப் புகழ்ந்தனர். இந்தத் தட்டுக்களின் அதற்குப் பிந்திய பரிணாமம் வலது நோக்கி இருந்தது.சேகுவாராவுக்கு தலைமைப் பரப்புரையாளராக இருந்த ரெஜிஸ் டெப்ரே போன்ற புள்ளிகள் பிரெஞ்சு அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக மாறினார்கள்.

தியானென்மென் சதுக்கத்துக்கான பாதை

கலாச்சாரப் புரட்சியின் பொழுது டெங் ஜியாவோபிங் இரு தடவை அவமானப்படுத்தப்பட்டு தலைநகரைவிட்டு தப்பித்து ஓடத் தள்ளப்பட்டார். தான் சரீரரீதியாய் உயிர்பிழைத்திருந்ததற்கு மாசேதுங்கின் அரவணைப்புக்கு கடமைப்பட்டுள்ளதாய் டெங்கே வாய்படக் கூறியிருந்தார். டெங்கை சிறைப்படுத்தவும் அல்லது சிரச்சேதம் செய்யவும் நடந்த முயற்சிகளை மாவோ தடுத்து நிறுத்தியதோடு 1973 ல் அவரை பெய்ஜிங்கிற்கு அழைத்து மீண்டும் பதவியில் அமர்த்தினார்.

நால்வர் கும்பலின் (ஜியாங் குயிங் மற்றும் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் மூவர்) கோரிக்கையின்படி மே 1976 ல் மறுபடியும் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் டெங்,மாகாணங்களிலும் இராணுவத்திலும் ஆதரவைப் பெற முனைந்து, மாவோ அவ்வாண்டு செப்டம்பர் மாதம் இறக்கும் வரையும் அதற்கடுத்த ஒரு மாதத்திற்குப்பின் அந்த நால்வர் கும்பல் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படும் வரையும் திரைக்குப் பின்னால் மறைமுகமாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்னுமொரு இரு வருட கால கன்னை சூழ்ச்சிகளுக்குப் பின்னர்,மாவோவுக்குப் பின் கொஞ்சகாலம் அதிகாரத்தில் இருந்த ஹுவா குவாஃபெங்கை இடம்பெயர்த்து டெங் ஸ்ராலினிச எந்திரத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றினார்.

ஆட்சிப் பீடத்தில் வலுவாகக் காலூன்றியதும் டெங் கூட்டுப் பண்ணைகளைக் கலைத்தல், சீனாவின் கதவுகளை அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிடல், மற்றும் அரசால் நடத்தப்பட்டுவந்த பொருளாதாரத்தின் பெரும் பகுதியை தனியார்மயமாக்கல் என உலக முதலாளித்துவ வர்க்கத்தால் போற்றப்பட்டு வந்திருக்கின்ற கொள்கைகளை செயல்படுத்துவதில் இறங்கினார். பொதுவாக டெங்கின் கொள்கைகள் மாவோயிசத்திலிருந்து தீவிரமாக முறித்துக்கொண்ட கொள்கைகள் என்பதாக பெரு வணிக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றன. இந்தச் சித்தரிப்பு முழுக்க முழுக்க பொய்யானதாகும். டெங், மாவோவின் கொள்கைகளுக்கு வாரிசாக இருந்து தொடர்ந்து நடத்தி அவற்றின் தர்க்கரீதியான முடிவு வரை கொண்டுசேர்த்தார். அதேசமயத்தில் மாவோ அவரது ஆட்சியின் அடித்தளமாகக் கொண்டிருந்த தனிச்சலுகை படைத்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் என்கின்ற அதே சமூகத்தட்டைத் தான் இவரும் பாதுகாத்தார்.

டெங்கின் கீழ், அதிகாரத்துவம் உடைமைக்கு சொந்தக்காரர்களாய் இருக்கும் முதலாளித்துவ ஆளும் வர்க்கமாக தன் உருமாற்றத்தை பெருமளவில் நிறைவு செய்து விட்டிருக்கிறது.அரசின் மற்றும் கூட்டுப் பண்ணைகளின் உடைமைகளை (ஊழல் மூலமும் மற்றும் அப்பட்டமான திருட்டு மூலமும்) நேரடியாக அபகரித்ததன் மூலமும் மற்றும் அந்நிய மூலதனம் மற்றும் கடல் கடந்த சீன மூலதனத்துடன் கூட்டு நிறுவனங்கள் அமைத்ததன் மூலமும் இதனை அது செய்து முடித்தது. ஒரு பார்வையாளர் பின்வருமாறு குறிப்பிட்டார்: ''மாவோவிற்குப் பிந்தைய காலத்தில் சீன முதலாளித்துவத்தின் தன்மையின் அடையாளமாக இருப்பது என்னவென்றால் புதிய 'முதலாளித்துவ வர்க்கத்தின்' மிகப் பிரதானமான ஆரம்ப உறுப்பினர்கள் உயர் கம்யூனிஸ்ட் அதிகாரிகளின் மகன்களும் மகள்களுமாய் இருந்தனர், இவர்கள் விரைவிலேயே ''பட்டத்து இளவரசர்கள் மற்றும் இளவரசிகள்” என்று அறியப்பட்டனர். (மோரிஸ் மேஷினர்,டெங்ஜியாவோபிங் சகாப்தம் பக்கம் 319).

1978 லிருந்து 1980 ம் ஆண்டு வரையிலான தன் ஆரம்ப ஆட்சிக் காலத்தில் டெங் சீன புத்திஜீவிகள் மத்தியில் ஆதரவை நாடினார். அப்பொழுது அவர் பின்னாளில் கோர்ப்பசேவ் சோவியத் ஒன்றியத்தில் தழுவிய பாதைகளை ஒட்டிய கலாச்சார மற்றும் அரசியல் தாராளமயமாக்கத்திற்கு குறிப்பு காட்டினார். இந்தக் காலகட்டப் பகுதியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாவோவின் அரசியல் பாரம்பரியத்தை உத்தியோகபூர்வமாய் மறு மதிப்பீடு செய்ய முயன்றது. சென்-துஹ்ஷியுவுக்கு மரணத்திற்குப் பிந்தைய புத்துயிர் அளிக்கப்பட்டது என்றாலும் 1927 படு தோல்வியைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்கள் எதனையும் ஒப்புக் கொள்வதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மிகவும் கவனமாக தவிர்த்தது.

இரு நிகழ்வுகள் பாதையில் ஒரு துரிதமான மாற்றத்தைக் கொண்டுவந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாள வர்க்கக் காரியாளர்களின் ஒரு பகுதியினர் – இவர்களில் அநேகமானோர் கலாச்சாரப் புரட்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் - ஜனநாயகச் சுவர் இயக்கத்தை ஆரம்பித்தார்கள், ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகளின் தனிச்சலுகைகள் பற்றியும் வருவாய் பற்றியுமான வெளிப்படையான விமர்சனம் இதில் இடம்பெற்றிருந்தது. அடுத்து போலிஷ் தொழிலாள வர்க்கம் ஒற்றுமை (சொலிடாரிட்டி) இயக்கம் என்கிற பரந்துபட்ட ஸ்ராலினிச எதிர்ப்பு இயக்கத்தில் வெடித்தெழுந்தது. சீன ஸ்ராலினிஸ்டுகளை ''போலிஷ் அச்சம்'' பிடித்து ஆட்டியது. பரந்தளவிலான கைதுகளுக்கு உத்தரவிடப்பட்டது. உத்தியோகபூர்வ வறட்டுப்பிடிவாதத்தின் கனத்த கரம் மறுபடியும் நாட்டின் கலாச்சார வாழ்வின் மீது பதிந்து கொண்டது.

டெங் ஜியாவோபிங்குடைய 20 ஆண்டு ஆட்சியைப் பற்றிய வழக்கமான வியாக்கியானங்கள் அவர் முதலாளித்துவத்தை ஊக்குவித்ததற்கும் அரசியல் எதிர்ப்பை தயவு தாட்சண்யமின்றி ஒடுக்கியதற்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளதாக கூறுகின்றன. இதன் மூலம் ''பொருளாதார சீர்திருத்தத்திற்கும் '' மற்றும்'' அரசியல் சீர்திருத்தத்திற்கும்'' இடையில் உள்ளார்ந்த பிணைப்பு இருப்பதாகக் கூற அவை முயலுகின்றன. ஆனால் முதலாளித்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் அப்படியான எந்தவொரு உறவுகளும் இல்லை.

டெங்கினுடைய பொருளாதார நடவடிக்கைகள், தனிச்சலுகை படைத்த ஒரு சிலரின் நலன்களுக்காக அரசின் உடைமைகளை தனியார்மயமாக்க சேவை செய்தன; மிகவும் தொழிற்துறைமயப்பட்ட முதலாளித்துவ நாடுகளைக் காட்டிலும் அதிகமாக பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் பிளவை உருவாக்கின; புரட்சிக்கு முந்தைய சகாப்தத்தின் அவப்பெயர் பெற்ற “சலுகைகளை” சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் புதுப்பித்து ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு சீனாவைத் திறந்து விட்டன. இந்தக் கொள்கைகள்பரந்துபட்ட சீனத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளினது ஜனநாயக உரிமைகளுடனும் மற்றும் அபிலாசைகளுடனும் இணக்கமற்றவை. இவற்றை சர்வாதிகார வழிகள் மூலம்தான் செயற்படுத்த முடியும்.

முதலாளித்துவப் பொருளாதார உறவுகளின் வளர்ச்சியால் உருவாக்கப்படும் சமூகப் பதட்டங்கள் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தனது ஆட்சிக்கு ஒரு நேரடியான அரசியல் சவாலைத் தூண்டக் கூடும் என்பதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்துவம் துல்லியமாய் அறிந்திருந்தது. 1983ல் டெங் ஜியாவோபிங் தனியார்மயமாக்கலை விவசாயத்திலிருந்து தொழிற்துறைக்கு விஸ்தரிக்க தயாரித்துக் கொண்டிருந்த பொழுது, 4 இலட்சம் பேர் கொண்ட கனரக ஆயுதம் தரித்து கலவரங்களை அடக்கும் மக்கள் ஆயுதப் பொலீஸ் படையை நிறுவுவதற்கு முன்மொழிந்தார். இப்படைப் பிரிவுகள் ஜாருஸெல்ஸ்கியின் போலந்துக்கும் பினோசேயின் சிலிக்கும் பயிற்சிக்கு அனுப்பப்பட்டன.

1989 ல் ஜனநாயக எதிர்ப்புக்களை ஆரம்பித்து வைத்த மாணவர்களும் புத்திஜீவிகளும் பலதரப்பட்ட அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களை கொண்டிருந்தார்கள், அவற்றுள் முதலாளித்துவத்தைப் பற்றிய பிரமைகளை அடிப்படையாகக் கொண்ட சிலவும் இருந்தன என்கின்ற அதேநேரத்தில் மே மாதத்தின் மத்தியில் பெய்ஜிங் நகரத் தொழிலாளர்கள் பரந்தளவில் இப்போராட்டத்தில் நுழைந்ததும் இந்த எழுச்சியின் சமூக மற்றும் அரசியல் அச்சு அதிரடியாக இடது நோக்கி நகர்ந்தது. பெருகி வந்த சமூக ஏற்றத் தாழ்வு மற்றும் ஆளும் உயரடுக்கின் தனிச் சலுகைகள் மற்றும் அப்பட்டமான ஊழல் ஆகியவற்றின் மீதான வெறுப்பு தான் எல்லாவற்றுக்கும் மேலாக தியானன்மென் சதுக்கத்தில் நூறாயிரக்கணக்கில் திரண்ட இளம் தொழிலாளர்களை உந்தித் தள்ளியிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் பெய்ஜிங் தொழிலாளர் சங்கத்தால் மே 17, 1989ல் விநியோகிக்கப்பட்ட ஒரு ஆவணம் சீனப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் பகைமையை இவ்வாறு எடுத்துரைக்கின்றது: ''மார்க்சினுடைய மூலதனத்தில் கொடுக்கப்பட்ட ஆய்வு வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு... தொழிலாளர்கள் மீதான சுரண்டலை நாங்கள் மனச்சாட்சிக்கு நேர்மையாக ஆவணமாக்கியுள்ளோம்...மக்களின் இரத்தத்தினாலும் வியர்வையினாலும் உருவாக்கப்பட்ட உபரி மதிப்பை ''மக்களின் பொதுச் சேவகர்கள்'' ஒட்டு மொத்தமாக விழுங்கி விட்டார்கள் என்பதை அறிந்து திகைத்துப் போனோம்.''

சுதந்திரமான தொழிலாளர் அமைப்புகள் முன்னேறி பின்வரும் கோரிக்கையை வைத்தன: ''சுகபோக நுகர்வுகள் மற்றும் ஓய்வெடுக்கும் மாட மாளிகைகள் விடயத்தில் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டிய முதற்பட்டியலில் பின்வருவோர் இருக்க வேண்டும்: டெங் ஜியாவோபிங், ஷாவோ ஷியங், லீ பெங், சென் யூன், லீ ஷீயானின், யாங் ஷன்குன், பெங் ஷின், வான் லி, ஜியாங் செமின், யெ சுவான்பிங் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள். அவர்களது சொத்துக்கள் உடனடியாக முடக்கப்பட்டு தேசிய மக்கள் விசாரணைக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். (ஹான் மின்ஷூ, ஜனநாயகத்திற்கான கதறல்கள் பக்கங்கள் 274-77)

அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான ஆட்சியின் ஒடுக்குமுறையின் முழு சக்தியும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் செலுத்தப்பட்டது. 1989, ஜூன் 3-4 தேதி படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையினர், தியானென்மென் சதுக்கத்தின் மேற்கே உள்ள பகுதிகளில் குடியிருந்த இளம் தொழிலாளர்களாவர். இவர்கள்தான் நகருக்குள் மக்கள் விடுதலை இராணுவம் நுழைவதைத் தடுக்கத் தடை அரண்களை எழுப்பியவர்களாவர். தியானென்மென்னுக்குப் பின் நடந்த களையெடுப்புக்களில் மரண தண்டைனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுள் ஏறக்குறைய அனைவருமே இளம் தொழிலாளர்கள், குறிப்பாக சுயாதீனமான வேலையிட மற்றும் தொழிற்சங்க அமைப்புகளை நிறுவ முயன்றவர்களாவர்.

அந்நிய முதலீட்டைக் கவர்வதற்கு கதவுகளை அகலத் திறந்துவிடும் தனது அணுகுமுறையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவில் நுழையும் முதலாளிகளின் மேல் ஒரேயொரு அரசியல் நிபந்தனையை மட்டும் திணித்தது. அதாவது அந்நிய நிறுவனங்கள் அவற்றின் தொழிற்சாலைகளில் உத்தியோகபூர்வமான அகில-சீன தொழிற் சங்க கூட்டமைப்பின் கிளைகளை நிறுவ அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தத் தொழிற்சங்கங்கள் ஆட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை கூடுதல் திறம்படக் கண்காணிக்க முடியும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவத்திடம் இருந்தும், ஏகாதிபத்தியத்திலிருந்தும் தொழிலாள வர்க்கத்தை விடுதலை செய்வதற்காகப் போராடும் ஒரு அமைப்பாக இருந்ததிலிருந்து, சீனாவில் முதலாளித்துவத்தை அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்குமான பிரதானக் கருவியாக உருமாற்றம் கண்டதை டெங் ஜியாவோபிங்கின் அரசியல் வாழ்க்கை விளங்கப்படுத்துகிறது. தீவிரப்பட்ட சீன இளைஞர்களின் 1919 இன் மே 4 இயக்கத்துடன் எந்த டெங் ஜியாவோபிங்கின் அரசியல் விழிப்பு ஒன்றாக நிகழ்ந்ததோ, அதே டெங் ஜியாவோபிங், வரலாற்றில், தியானென்மென் சதுக்கத்தில் பாட்டாளி வர்க்க ''சர்வதேச கீதத்தை”ப் பாடிக் கொண்டு சிலிர்த்து நின்ற சீன இளைஞர்களையும், தொழிலாளர்களையும் இயந்திரத் துப்பாக்கிகளில் இருந்து சீறிப் பாய்ந்த குண்டுகளால் சுட்டுச் சாய்த்த பாதகர் என்றுதான் இடம் பெறுவார்.

டெங் விட்டுச் சென்ற சீனா, சமூக முரண்பாடுகள் புரையோடிய சீனாவாகும். சுமார் 200 மில்லியன் தொழிலாளர்களும், விவசாயிகளும் உட்பகுதிகளிலுள்ள மாகாணங்களை விட்டுவிட்டு வேலை தேடியும் நல்ல வாழ்க்கைத் தரங்களை நாடியும் செழிப்பான கரையோரப் பகுதிகளுக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள்; நகரங்களுக்கும் கிராமப் பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி முன்னொருபோதும் இல்லாத அளவு இன்று மிகப் பெரிதாக விரிசல் அடைந்துள்ளது; பொருளாதாரம் ஏறுவது பின் சரிவது என்கிற சுழற்சியின் பிடியில் இருக்கின்றது,பணவீக்கம் கட்டுப்பாடில்லாமல் செல்லும் அதனையடுத்து கடன்கள் இறுக்கப்பட்டு பெரும் வேலைவாய்ப்பின்மை வரும்; உத்தியோகப்பூர்வ ஊழல், குண்டர் கலாச்சாரம், போதைப் பழக்கங்கள், விபச்சாரம் மற்றும் பிற சமூக இழிவுகளும் சியாங் கேஷேக் ஆட்சியின் அதிமோசமான நாட்களுக்குப் பின் என்றுமே கண்டிராத மட்டத்தில் செழித்தோங்குகின்றன.

20ம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டு முடியவிருக்கின்ற வேளையில் இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் சீனா எதிர்கொண்ட பிரச்சனைகளில் எதுவும் கூட இன்னும் வெல்லப்பட்டிருக்கவில்லை. மாவோயிசம் அது முதலாளித்துவத்திற்கான ஒரு புரட்சிகர மாற்று அல்ல, மாறாக ஒரு வரலாற்று முட்டுச் சந்துதான் என்பதை நிரூபித்துள்ளது.

சீன வரலாற்றின் கடந்த ஐந்து பத்தாண்டுகளில் ஏற்பட்ட திருப்பங்கள் அனைத்தின் தோற்றுவாயும் இறுதியில், ஒரு தேசிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாட்டாளி வர்க்க அடிப்படையில்லாத அஸ்திவாரத்தின் மீது சீனப் புரட்சியின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க சாத்தியம் கிடையாது என்பதில் தான் காணக்கூடியதாக இருக்கின்றன. தீர்க்கமான பிரச்சனை என்னவென்றால் தேசிய சோசலிசம் குறித்த ஸ்ராலினிச முன்னோக்கின் (அது ''தீவிரவாத'' மாவோயிச வேடத்தைக் கொண்டிருந்தாலும் சரி அல்லது டெங் ஜியாவோபிங் தழுவிக் கொண்ட அதனினும் பழமைவாத பதிப்பாக இருந்தாலும் சரி) தோல்வி தான். உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கினை நிராகரித்த நிலையில் சீனாவை உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்பினுள் ஒன்றிணைப்பதற்கு மாற்று வேறு எதுவும் இல்லை.

சீனத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் விடுதலைக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களின் மற்றும் ஆரம்பகால கம்யூனிச அகிலத்தின் மார்க்சிச மரபுகளுக்குப் புத்துயிர் அளிப்பது அவசியமாய் இருக்கிறது. இடது எதிர்ப்பாளர்கள் அணி தாங்கி வாழ்ந்த அந்த மரபுகளை இன்று முன்னெடுத்துச் செல்வது நான்காம் அகிலமும் அனைத்துலகக் குழுவும் ஆகும்.இந்த முயற்சியில் 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கி எழுதியவற்றைப் படிப்பதும் ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசம் நடத்திய போராட்டங்களின் மொத்த வரலாற்றினையும் படிப்பதும் இன்றியமையாததாக இருக்கும்.

Loading