தொழிற்சங்கங்கள் சோசலிசத்திற்கு ஏன் குரோதமாக இருக்கின்றன?

 பின்வரும் விரிவுரை 1998 ஜனவரி 3-10 வரை சிட்னியில் சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா) ஏற்பாடு செய்த மார்க்சிசம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் அடிப்படை பிரச்சினைகள் குறித்த சர்வதேச கோடைகால பள்ளியில் ஜனவரி, 10 அன்று டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்டது.

இரண்டு சிக்கலான பிரச்சினைகள்

மார்க்சிச இயக்க வரலாற்றில் இரண்டு அரசியல் பிரச்சினைகள் அல்லது ''கேள்விகள்'' ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீண்டு வந்திருக்கக்கூடிய அசாதாரணமான விடாப்பிடியான சர்ச்சையின் மூலவேராக இருந்து வந்துள்ளன. ஒன்று ''தேசிய பிரச்சனை'', மற்றொன்று ''தொழிற்சங்க பிரச்சனை''.

இந்தப் பிரச்சினைகள் இடைவிடாது இருந்துவந்ததற்கான காரணம் என்ன மற்றும் அவை இரண்டுக்குமிடையில் ஏதாவது உறவு இருக்குமாயின் அது என்ன? இதற்கான பதிலை நவீன தொழிலாளர் இயக்கம் தோன்றிய வரலாற்று நிலைமைகள் குறித்த ஒரு ஆய்வில்தான் கண்டு கொள்ளமுடியும் என நான் கருதுகின்றேன். முதலாளித்துவ தேசிய அரசு, 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் புரட்சிகர-ஜனநாயகப் போராட்டங்களிலிருந்து அது தோன்றிய பொழுது, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்திக்கான பொருளாதார உந்துசக்தியையும் அரசியல் கட்டமைப்பையும் வழங்கியது. தேசிய உறுதிப்படல் நிகழ்ச்சிப் போக்கானது, அது பல வேறுபட்ட வடிவங்களிலும் பல வேறுபட்ட அளவுமட்டங்களிலும் இருந்த பொழுதிலும், தொழிலாள வர்க்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுவான ஜனநாயக பிரச்சினைகளுடன் பிணைக்கப்பட்டதாய் இருந்தது.

தேசத்தை நோக்கிய தொழிலாள வர்க்கத்தின் மனப்போக்கு அதிகபட்ச சிக்கலானதாக, முரண்பாடானதாக மற்றும் இருவேறு போக்குடையதாக மட்டுமே இருக்க முடிந்தது. ஒருபுறம் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையும் பலத்திலான வளர்ச்சியும் மற்றும் அதன் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றமும், பொதுவாக தேசிய அரசு உறுதிப்படுவதுடனும் அதன் பொருளாதார மற்றும் தொழிற்துறை பலம் விரிவாக்கம் செய்யப்படுவதுடனும் பிணைக்கப்பட்டதாக இருந்தது. அதேசமயம் தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் போராட்டங்களின் வளர்ச்சியானது, இறுதி ஆய்வில் அதனை, முதலாளித்துவத்தின் வர்க்க நலன்களுக்கு பயன்படும் தேசிய அரசுக்கு குரோதமான ஒரு நிலைப்பாட்டில் நிறுத்தியது.

மார்க்சிச இயக்கத்திற்குள்ளே தேசியப் பிரச்சனையின் சிக்கலான தன்மை என்பது எங்கிருந்து எழுந்ததென்றால், திட்டவட்டமாக அது தொழிலாளர்களுக்கு முதலாளித்துவ தேசிய அரசுடன் உள்ள பெரும் சிக்கலான உறவில் இருந்து எழுந்ததே ஆகும். தேசிய நனவிலிருந்து சர்வதேச சோசலிச நனவுக்கு மக்கள் வேதனையின்றி மற்றும் இயல்பாக மாற்றமடைந்ததை உலகில் எங்குமே நாம் காணமுடியாது. ஒரு மனிதரின் வாழ்க்கையில் அவரது இளமைக்கால அனுபவங்கள் அவர்களின் எஞ்சிய வருடங்கள் முழுவதும் சக்தி வாய்ந்த செல்வாக்கு கொண்டதாக இருக்கிறது. அதற்கு ஒப்புமையான ஒரு இயல்நிகழ்வை வர்க்கங்களது சமூக நனவின் வரலாற்றுவழிப் பரிணாம வளர்ச்சியில் கண்டுகொள்ள முடியும். தொழிலாள வர்க்கம் தேசியவாதத்தின் மீது கொண்டிருக்கின்ற விசுவாசத்தை, அது தோன்றிய நிலைமைகள் மற்றும் அது உருப்பெற்ற கட்டங்களின் போராட்டங்கள் இவற்றால் மட்டுமே விளக்க இயலும். சமூக நனவானது சமூக இருப்பை விட மெதுவாகவே வளர்ச்சியுறுகிறது. அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், மிகச் சிக்கலான மற்றும் முரண்பாடான சமூக இருப்பை அது விஞ்ஞானபூர்வமான வடிவத்தில் நேரடியாகவும் மற்றும் உடனடியாகவும் பிரதிபலிப்பதில்லை. அதே போலத்தான், தொழிலாளர் இயக்கத்தின் மீதான தேசியவாதத்தின் செல்வாக்கும், தேசிய அரசின் மீதான உலகப் பொருளாதாரத்தின் மேலாதிக்கம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் அதிகரித்துச்செல்லும் சர்வதேசிய தன்மை இவற்றின் வளர்ச்சிக்கு எதிர் விகிதத்திலும், ஈடான வேகத்திலும் வீழ்ச்சியடையவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் தேசிய ஒடுக்குமுறை தொடர்ந்தமையானது --அதன் அடிப்படையான காரணம் சமூக-பொருளாதார தன்மை கொண்டதாக இருந்தாலும் கூட-- தேசிய நனவின் வடிவங்களை பலப்படுத்தியிருக்கிறது. ஆனால் தேசிய செல்வாக்குகளின் சக்தி இருந்தபொழுதிலும், தமது வேலைத்திட்டத்திற்கு பழைய தப்பெண்ணங்கள் மற்றும் காலாவதியான கருத்துக்களை நோக்கி விண்ணப்பம் செய்வதை அடித்தளமாகக் கொள்ளாமல், சமூக யதார்த்தத்தின் மீதான ஒரு விஞ்ஞானபூர்வமான ஆய்வின் மீது அடித்தளம் அமைப்பது மார்க்சிஸ்டுகளது பொறுப்பாகும். நிலவும் தப்பெண்ணங்களுக்கு ஏற்ப தன் அரசியல் வேலைத்திட்டத்தை குறுகியகால தந்திரோபாய நன்மைகளுக்காக தகவமைத்துக் கொள்வது என்பது சந்தர்ப்பவாதத்தின் மிகப் பொதுவான அம்சங்களில் ஒன்றாகும். அது ஒரு கொள்கைவழிப்பட்ட, வரலாற்று மற்றும் விஞ்ஞானபூர்வமான தன்மை கொண்ட பரிசீலிப்புகளிலிருந்து தொடங்குவதற்கு பதிலாக, நடைமுறைரீதியான மற்றும் அவ்வப்போது வந்துசேர்கின்ற மதிப்பீடுகளிலிருந்து தொடங்குகின்றது.

சந்தர்ப்பவாதிகள் பொதுவாக, தேசிய அரசின் மீதான பூகோளமயமான உற்பத்தியின் அரசியல் மற்றும் பொருளாதார தொடர்விளைவுகளை மறுத்து, இந்த வரலாற்று ரீதியாக காலாவதியான அரசியல் வடிவத்தில் ஒட்டுமொத்தத்திலும் இல்லாத ஒரு முற்போக்கு ஆக்கத்திறன் இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறாக, தேசிய சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை உலகில் ஒவ்வொரு பிற்போக்கு பேரினவாத இயக்கத்தின் அபாய வார்த்தையாக மாறிவிட்டிருக்கின்ற பொழுதிலும், அவர்கள் அந்த கோரிக்கையை புகழ்வதைத் தொடர்கின்றனர்.

மார்க்சிஸ்டுகள் தேசிய அரசை சம்பந்தமற்ற ஒன்று என கருதிக் கொள்வதில்லை. தேசிய அரசு வடிவமானது, உற்பத்தி சக்திகளின் பூகோள வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைவு என்ற கண்ணோட்டத்தில் மனித முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்த பொழுதிலும், அது, உலக அரசியலில் ஒரு சக்தி வாய்ந்த காரணியாக இருக்கின்றது. சோசலிச இயக்கம் அதன் தந்திரோபாயங்களை விரிவுபடுத்தும் பொழுது இந்த அரசியல் யதார்த்தத்தை புறக்கணிக்கவில்லை. முதலாளித்துவ சமுதாயத்தின் அரசியல், பொருளாதார ஒழுங்கமைப்பின் ஒரு அடிப்படை அலகாக தேசிய அரசானது நீடிக்கும் வரையில் தேசியப் பிரச்சனையானது நீடிக்கும். அது வரலாற்றின் இந்த கட்டத்தில் மிகவும் பொருத்தமாக தேசிய சிக்கல் என்று அழைக்கப்பட முடியும். ஆனால் தேசிய அரசின் வரலாற்றுவழி காலாவதியாகிப்போன தன்மை பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வமான விளக்கத்திலிருந்தே மார்க்சிச தந்திரோபாயம் ஊற்றெடுக்கின்றது. அதன் தந்திரோபாயங்கள் மூலமாக ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் வழிநடத்தும் மூலோபாயத்தை செயல்முறைப்படுத்த முயற்சிக்கின்றது. சர்வதேச மூலோபாயத்தின் மேலாதிக்கம் மீதான இந்த வலியுறுத்தல்தான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஒவ்வொரு தேசிய சீர்த்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாதக் குழுக்களிலிருந்தும் வேறுபடுத்துகிறது.

இந்த கோட்பாட்டுரீதியான பரிசீலிப்புகள் தொழிற்சங்க பிரச்சினை தொடர்பான கேள்வியிலும் முக்கியத்துவத்தில் குறைந்தவையல்ல. இது, சோசலிசத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களது அபிவிருத்தியில் பாட்டாளி வர்க்க ஒழுங்கமைப்பின் இந்த மிகப் பழைய வடிவம் ஆற்றுகின்ற பாத்திரம் குறித்ததாகும். நவீன பாட்டாளி வர்க்கத்தின் தோற்றமானது தேசிய அரசின் வரலாற்று வளர்ச்சியின் உள்ளடக்கத்தினுள் நிகழ்ந்தது. அதன் அமைப்புகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் தேசிய அரசின் கட்டமைப்பிற்குள்ளே உருப்பெற்று எழுந்தன. குறிப்பாக தொழிற்சங்கங்கள் விடயத்தில் இதுவே நடந்திருந்தது. அவற்றின் முன்னேற்றங்களும் செழிப்பும், பெருமளவு "அவற்றின்" தேசிய அரசின் தொழிற்துறை மற்றும் வர்த்தக வெற்றிகளில் தங்கியிருந்தது. எனவேதான் தேசிய அரசை நோக்கிய தொழிலாள வர்க்கத்தின் இருமுகப்போக்குடைய அணுகுமுறைக்கு வரலாற்றுவழியான காரணங்கள் இருப்பதைப் போலவே, சோசலிசத்தை நோக்கிய தொழிற்சங்கங்களின் இருமுகப்போக்கிற்கு, இன்னும் சொன்னால் குரோதத்திற்கு, ஆழமான வேருடைய புறநிலைக்காரணங்கள் இருக்கின்றன. இந்த ஒரு பிரச்சினை மீது சோசலிச இயக்கமானது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போதுமான அளவு கண்ணீர் விட்டுள்ளது.

நிச்சயமாக, புரட்சிகர மார்க்சிச கட்சிகளுக்கும், தொழிற்சங்களுக்கும் இடையிலான உறவுகளை பீடிக்கவிருந்த பிரச்சனைகளின் தீவிரம் குறித்து அவை தோன்றியிருந்த ஆரம்ப வருடங்களில் முழுமையாக எதிர்பார்த்திருக்க முடியாதுதான். தொழிற்சங்கங்கள் தொடர்பாக மார்க்சிஸ்டுகள் எடுத்துக் கொண்ட அணுகுமுறையானது தவிர்க்க முடியாதபடி அந்த சமயத்தின் நிலைமைகளையும், சூழ்நிலைகளையும் பிரதிபலித்தது. தொழிற்சங்க பிரச்சனையானது அது 1847ல் முன்வைக்கப்பட்டது போல 1998ல் முன்வைக்கப்படவில்லை. கடந்த 151 வருடங்களில் அங்கே ஒரு கணிசமான வரலாறு இருக்கிறது மற்றும் சோசலிச இயக்கத்திற்கு தொழிற்சங்கவாதத்துடன் பரிச்சயப்படுத்திக் கொள்வதற்கு போதுமான வாய்ப்பும் இருந்தது. தொழிற்சங்கங்களின் குணாம்சம் பற்றி பாரிய அளவில் அது கற்றுக் கொண்டது. ஆயினும் இந்த திரண்ட அறிவின் ஒரு சுவடும் கூட, ''இடது'' தீவிரப்போக்கு ஊடகங்களின் பக்கங்களில் தென்படுவதில்லை.

சோசலிச இயக்கமானது அதன் வரலாற்றின் பெரும்பகுதியில் தொழிற்சங்கங்களை ஆர்வத்துடன் பின்பற்றி வந்திருக்கிறது. நிறைய கெஞ்சல்கள், கொஞ்சல்கள் இருந்தபோதிலும் இந்தக் காதல் பெரும்பாலும் வெற்றிபெற்றிருக்கவில்லை. அளவிடமுடியாத பாசத்துடனும் அக்கறையுடனும் நடந்துகொண்ட போதிலும் சோசலிச நடவடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரியவர்களால் மீண்டும் மீண்டும் அநீதியாக நடத்தப்பட்டும், இன்னும் முதுகில் குத்தப்பட்டும் கூட வந்திருக்கின்றனர். சோசலிஸ்டுகள் அவர்களது சொந்த தொழிற்சங்கங்களை உருவாக்க முயற்சித்து, அவற்றிற்கு மாசற்ற மார்க்சிச கல்வியை வழங்க முயற்சித்தபோதிலும் கூட, அவற்றின் வழித்தோன்றல்கள் அவர்களுக்கு நன்றிகெட்டதனத்தையே திருப்பித் தந்தன. வாய்ப்பு கிடைத்தவுடனேயே அவை அவற்றின் சோசலிச மூத்தோர்களது உயர்ந்த இலட்சியங்களை தூக்கி எறிந்துவிட்டு முதலாளித்துவத்தின் களியாட்ட களங்களில் மகிழ்ச்சியை காணவே தலைப்பட்டன.

தொழிற்சங்கங்களின் அதிகாரத்திற்கு சோசலிஸ்டுகள் கட்டாயம் அடிபணிய வேண்டுமா

தோல்வியில் முடிவடைந்த பல்வேறு அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏதாவது கொஞ்சம் இருக்கும் என்று ஒருவர் எண்ணலாம். ஆனால் பொக்காசியோவின் கதைகளில் காணப்படும் வயதான முட்டாள்களைப்போல வயதாகிவரும் பல்லில்லாத தீவிரப்போக்கினர், இன்று மீண்டும் மீண்டும் நடத்தை கெட்ட பெண்ணின் கணவனாக இருக்கும் நாடகத்தை ஆடமட்டுமே மிக ஆவலாக இருக்கின்றனர். இவ்வாறாக, சோசலிச இயக்கமானது தொழிற்சங்கங்களின் தேவைகளுக்கும் இஷ்டங்களுக்கும் விசுவாசமாக இருக்க கடமைப்பட்டுள்ளதாக, இன்னும்கூட இன்றைய ''இடது'' அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. தொழிற்சங்கங்கள் ஆகச்சிறந்த தொழிலாளர் அமைப்புகள் என்றும், அவை தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களது மிகப் பிரதிநிதித்துவமான வடிவம் என்பதை சோசலிஸ்டுகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவை வலியுறுத்துகின்றன. தொழிலாள வர்க்கத்தின் முறைப்படியான மற்றும் சவாலுக்கப்பாற்பட்ட தலைமையையும், அதன் வரலாற்றுத் தலைவிதியின் பிரதானமான மற்றும் இறுதிமுடிவெடுக்கும் நடுவர்களையும் தொழிற்சங்கங்களே கொண்டிருப்பதாக அவை வாதிடுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் மீதான தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை சவால் செய்வதோ, தொழிலாள வர்க்கத்தின் சார்பாக பேசுவதற்கு தொழிற்சங்கங்களுக்கு இருக்கக்கூடிய “இயற்கையான” உரிமையை எந்தவகையிலும் கேள்விக்குட்படுத்துவதோ அரசியல் புனிதக்கேடான செயலுக்கு ஒப்பானதாம். தொழிற்சங்கங்களால் உத்தியோகபூர்வமாக தலைமைதாங்கப்படாது போனாலும் கூட அவற்றின் மேலாதிக்கம் இல்லாத எந்தவொரு உண்மையான தொழிலாளர் இயக்கத்தையும் சிந்தித்துப் பார்ப்பது சாத்தியமில்லாதது என்று தீவிரப்பிரிவினர் கூறிவருகின்றனர். தொழிற்சங்கங்களது அடிப்படையில் மட்டுமே வர்க்கப் போராட்டம் திறம்பட நடத்தப்பட முடியுமாம். இறுதியாய், ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு எஞ்சியிருக்கும் எந்தவொரு நம்பிக்கையும் தொழிற்சங்கங்களை, அல்லது குறைந்தபட்சம் அவற்றில் ஒரு கணிசமான பகுதியையேனும், ஒரு சோசலிச முன்னோக்குக்கு வென்றெடுப்பதிலேயே தங்கியிருக்கிறதாம்.

மிகத் திட்டவட்டமாகக் கூறுவதானால், அனைத்துலகக் குழு இந்த கூற்றுகள் அத்தனையையும் நிராகரிக்கிறது. இவை தத்துவார்த்த ஆய்வுகள் மற்றும் வரலாற்று அனுபவம் இரண்டினாலும் மறுதலிக்கப்பட்டிருப்பவை ஆகும். நமது எதிராளிகளின் பார்வையில், தொழிற்சங்கங்களின் அதிகாரத்தின் முன்பாக நாம் தலைவணங்க மறுப்பது மாபெரும் துரோகத்திற்கு சமமாக தெரிகிறது. இதற்கெல்லாம் நாங்கள் பெரிதாகக் கவலை கொள்வதில்லை, ஏனென்றால் இத்தனை தசாப்த காலங்களில், இந்த “இடது-சாரி”களுக்கு, இன்னும் துல்லியமாய் கூறுவதானால், இந்த குட்டி-முதலாளித்துவ பொதுக் கருத்துக்கு, எதிராய் இருப்பது நமக்குப் பழக்கமாகி விட்டது; இவர்களின் மிகக்கடும் வெறுப்புத்தான், அனைத்துலகக் குழு அரசியல்ரீதியாக சரியான பாதையில் செல்கிறது என்பதற்கான நிச்சயமான அறிகுறி என்று நாங்கள் கருதுகிறோம்.

தீவிரப்போக்கினரின் நிலைப்பாடு ஒரு முக்கியமான கருதுகோளில் தங்கியிருக்கிறது: தொழிற்சங்கங்கள் அவற்றின் பரந்த அளவிலான உறுப்பினர் எண்ணிக்கையின் காரணத்தால் "தொழிலாளர் அமைப்புகளாக" இருக்கின்றன. ஆக, தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை சவால்விடும் ஒருவர், வரைவிலக்கணப்படி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நிற்பதாக ஆகின்றார். இந்த கருதுகோளின் பிரச்சினை என்னவென்றால், அது தொழிற்சங்கங்களை வெறுமையான வரலாறற்ற அருவங்களாக குறைக்கின்றது. தொழிற்சங்கங்களுக்கு பெருமளவிலான தொழிலாள வர்க்க உறுப்பினர் எண்ணிக்கை இருப்பது சந்தேகமில்லாமல் உண்மையே. ஆனால் அதேபோல பல பிற அமைப்புகளிலும் கூடத்தான் இருக்கிறது, அமெரிக்காவில் எல்க்ஸ், மேஷன், வெளிநாட்டு யுத்தங்களில் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கத்தோலிக்க ஆலயம் போன்ற அமைப்புகளில் இருப்பதைப் போல.

தவிரவும், தொழிற்சங்கங்களில் பெருமளவு தொழிலாள வர்க்க உறுப்பினர்கள் இருப்பது பற்றிய குறிப்பு, இந்த அமைப்புகளின், இன்னும் குறிப்பாக அவற்றின் தலைமை அடுக்கின் அதாவது அவற்றின் ஆளும் அதிகாரத்துவங்களின் சமூக சேர்க்கை குறித்த ஒரு கூடுதல் கவனமான பகுப்பாய்வுக்கான போதுமான பிரதியீடாக இருக்க முடியாது. தொழிற்சங்கங்களில் பாரிய தொழிலாள வர்க்க அங்கத்துவம் இருக்கிறது என்பதால், இந்த அமைப்புகள் அதன் நலன்களின் பேரில் தானாகவே செயல்படுகின்றன என்று சொல்லிவிட முடியாது. சொல்லப் போனால், தொழிற் சங்கங்களின் பரந்த உறுப்பினர்களின் நலன்களுக்கும் அவற்றின் ஆளும் அதிகாரத்துவத்தின் நலன்களுக்கும் இடையில் ஒரு புறநிலையான மோதல் இருக்கிறதா என்பது பற்றியும் மற்றும் எந்த அளவிற்கு சங்கங்களின் கொள்கை முன்னையதன் [பரந்த உறுப்பினர்களின்] நலன்களை அல்லாமல் மாறாக பின்னையதன் [ஆளும் அதிகாரத்துவத்தின்] நலன்களை பிரதிபலிக்கின்றது என்பதையும் ஆய்வு செய்ய ஒருவர் நிர்ப்பந்திக்கப்படுகிறார்.

தொழிற்சங்கங்கள் "தொழிலாளர் அமைப்புகள்" தான் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வாராயின், இந்த வரைவிலக்கணத்தை பயன்படுத்துவதற்கு மிக குறைவாகத்தான் அரசியல் அறிவினை கொண்டிருக்கவேண்டும். வேண்டுமானால், ''மிகச்சரியாக தொழிலாளர் அமைப்பு என்பதன் அர்த்தம்தான் என்ன?'' என்று கேட்டு அந்த வரைவிலக்கண விளையாட்டை நாம் தொடர்ந்து ஆடலாம். அது ''தொழிலாளர்களின் ஒரு அமைப்பு!'' என்று பதிலளிப்பது பயனுள்ளதாக இருக்காது. தொழிற்சங்கங்களின் தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கையில், அங்கு உள்ள உண்மையான கேள்வி, ''இப்படியான அமைப்புகளுக்கு பொதுவாக வர்க்கப் போராட்டத்துடனும், குறிப்பாக முதலாளித்துவ சுரண்டலில் இருந்து தொழிலாளர்களை விடுவிப்பதுடனும் உள்ள தொடர்பு என்ன?” என்பதே ஆகும்.

இந்த புள்ளியில், நாம் வெற்று சொற்பதங்களுக்கு அப்பால் கடந்து சென்று, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் சோசலிச இயக்கத்தின் போராட்டங்களில் தொழிற்சங்கங்கள் வகித்த பாத்திரம் பற்றிய ஒரு கவனமான வரலாற்று ஆய்வின் அடிப்படையில் ஒரு மிகவும் ஆழமான வரைவிலக்கணத்தை அமைப்பதை நோக்கிச் சென்றாக வேண்டும். அவரவர் தேடலுக்கேற்ப குற்றங்களை அல்லது சாதனைகளை எடுத்துக்காட்டுவது மட்டுமே அத்தகையதொரு ஆய்வின் நோக்கமாக இருக்க முடியாது. பதிலாக, இந்த சமூக நிகழ்வுப்போக்கின் சாரத்தை, அதாவது தொழிற்சங்கங்களின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் நடைமுறை மற்றும் செயல்பாட்டு வெளிப்பாடாக கொண்டு இயங்குகின்ற அவற்றின் கீழமைந்த விதிகளை வெளிக்கொண்டுவருவதாக அது இருக்க வேண்டும்.

தொழிற்சங்கங்கள் ஏன் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுக்கின்றன?

நமது தீவிரப்போக்கு எதிராளிகள், ஒருபொழுதுமே அவ்வாறான ஆய்விற்கு முயற்சிகூடசெய்வது கிடையாது என்பதால் ''தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவது இருக்கட்டும், அவற்றைப் பாதுகாப்பதில் கூட மிகப் பரிதாபகரமான தோல்வியைக் கண்டது ஏன்?' என்ற மிகவும் அடிப்படையான மற்றும் வெளிப்படையான கேள்விக்கு ஒரு பொறுப்பான பதிலைக் கொடுக்க அவர்கள் ஆரம்பிக்கவும் கூட முடிவதில்லை. அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடந்த கால்நூற்றாண்டானது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையில் ஒரு தொடர்ச்சியான வீழ்ச்சியை எடுத்துக் காட்டியது. மூலதனத்தின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்கும் திறனற்றனவாக தொழிற்சங்கங்கள் இருந்தன. இந்தத் தோல்வியானது சர்வதேச அளவில் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து எடுத்துக் காட்டப்பட்டு வந்திருக்கும் நிலையில், அதற்கான புறநிலைக் காரணங்களை -தொழிற்சங்கங்கள் இப்போது இருக்கின்ற சமூகப்பொருளாதாரச் சூழல், மற்றும் இன்னும் மிக அடிப்படையாக அவற்றின் இயல்பான தன்மை இவை இரண்டுக்குள்ளாகவும்- தேட இட்டுச்செல்லப்படுவதில் இருந்து ஒருவர் தப்பிக்கமுடியாது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், 1973 இன் பின்னர் அவை திடீரென குரோதமாக திரும்பிவிட்டதாக அனுமானிக்கப்படுமானால், எவை தொழிற்சங்கங்களை இந்த மாற்றங்களால் எளிதில் பாதிப்புக்கு இலக்காகின்ற வகையிலும், புதிய நிலைமைகளுக்கேற்ப மாற்றிக் கொள்வதை மிகவும் இயலாததாகவும் ஆக்கியிருந்தன?

இந்தப் பிரச்சினைக்கு ஸ்பார்ட்டசிஸ்ட் லீக்கின் பதிலை நாம் பரிசீலிப்போம். சோசலிச சமத்துவக் கட்சியை ஆவேசத்துடன் கண்டனம் செய்யும்போது —அவர்கள் செய்தித்தாளில் நான்குநாள் பதிப்புகளையும் ஆயிரக்கணக்கணக்கான சொற்களையும் எடுத்திருந்த இந்த கண்டனத்தில் அசாதாரணமான அளவுக்கான பெரும் சதவீதம் தூற்றுகின்ற பெயரடைகள் மற்றும் வினையடைகளைக் கொண்டதாய் இருந்தது— ஸ்பார்ட்டசிஸ்டுகள், தொழிற்சங்கங்களின் தோல்விக்கான ஒரு புறநிலையான தன்மைக்கு காரணங்கள் எதுவும் கிடையாது என்று கடுமையாக மறுக்கின்றனர். பதிலாக ஒவ்வொன்றும் "AFL-CIO இன் தவறான தலைவர்களின் தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளினால்" விளக்கப்பட வேண்டும் என்கின்றனர். இதனைவிட ஒரு உதவாத விளக்கத்தை கற்பனை செய்வதும் கடினம். டைனோசர்கள் மறைந்துவிட்டதற்கு காரணம் அவை இனிமேலும் வாழ விரும்பாததுதான் என்று ஒரு தொல்லுயிர் வல்லுநர் பிரகடனம் செய்துவிடமுடியும் போலிருக்கிறது! AFL-CIO தலைமையில் இருக்கின்ற டைனோசர்கள் "தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளை" பின்பற்ற ஏன் தீர்மானித்தனர் என்பதை விளக்க ஸ்பார்ட்டசிஸ்டுகள் தவறுகின்றனர். அவர்கள் கெட்ட மனிதர்கள் என்ற சாதாரண காரணத்தினாலா? அப்படி அவர்கள் கெட்ட மனிதர்களாக இருந்திருப்பார்களாயின் ஏன் அப்படிப்பட்டவர்களில் அநேகம் பேர் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே உள்ள தொழிற்சங்கங்களின் தலைமையில் காணக்கூடியதாக உள்ளனர்? நிறைய கெட்ட மனிதர்களைக் கவரக்கூடியவாறு தொழிற்சங்கங்களின் தன்மையில் ஏதாவது இருக்கின்றதா, அதன்பின்னர் அவர்கள் "தோல்விவாத மற்றும் துரோகத்தனமான கொள்கைகளை" பின்பற்றுகின்றார்களா? நாம் இன்னுமோர் கேள்வியைக் கூடக் கேட்கலாம். "தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்கின்ற தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பதற்கும், அவர்களை தோல்விபெறச் செய்வதற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்ற மோசமான மனிதர்களை பெரும் எண்ணிக்கையில் ஈர்க்கின்ற அமைப்புகளை மிக உற்சாகத்துடன் ஆதரிக்க ஸ்பார்ட்டசிஸ்ட் லீக்கை தூண்டுவது எது?”

ஒரு அகநிலையான அணுகுமுறையின் பிரச்சினை, அது அனைத்து உண்மையான கடினமான பிரச்சினைகளையும் கையாள்வதை தவிர்க்கிறது என்பது மட்டுமன்று; ஸ்பார்ட்டசிஸ்ட் லீக் மற்றும் இதர தீவிரப் போக்குடைய குழுக்கள் "மோசமான தலைவர்கள்" மீது உதட்டளவில் தாக்குதல் நடத்துகின்றபோதும், அவர்களுக்கு இறுதியான பாவவிமோசனம் வழங்குவதற்கான சாத்தியத்தை திறந்துவைப்பதையும், மற்றும் அந்த அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்கங்களுக்கு மற்றும் இறுதியாக அதே மோசமான தலைவர்களுக்கு தொடர்ந்து கீழ்ப்படியச் செய்வதை அங்கீரிப்பதையும் அது அனுமதிக்கிறது.

மிலிடண்ட் போக்காக [2] முன்பு அறியப்பட்ட, பிரிட்டிஷ் சோசலிஸ்ட் கட்சியின் பிரதான தலைவரான பீட்டர் ராஃப் [Peter Taaffe] எழுதிய ஒரு கட்டுரையில் இந்த முன்னோக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமான தனது கீழ்ப்படிவை தீவிரவாத சொற்றொடர்களினால் மூடிமறைக்கும் திருவாளர் ராஃபின் முயற்சிகள் நம்பிக்கையுணர்வைக் காட்டிலும் நகைப்புணர்வையே விளைவிக்கத்தக்கதாய் இருக்கின்றன. தொழிற்சங்க நிர்வாகிகள் குறிப்பாக மிகக்கேவலமான முறையில் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதில் ஈடுபட்டு வந்திருக்கக் கூடிய நாடுகளின் ஒரு சிறிய பட்டியலைக் கொடுப்பதுடன் அவர் தொடங்குகிறார். காசபிளாங்காவில் உள்ள போலீஸ் தலைவர் லூயிசைப்போல, ராஃப் உம் அவரைப்பற்றி அவர் அறிகின்ற ஊழலைக் கொண்டு, அதிகாரத்துவத்திடமிருந்தான அரசியல் பிரதிபலன்கள் தனது பைக்குள் நழுவி விழுந்து கொண்டிருந்த போதிலும், ஆழமாக அதிர்ச்சி அடைந்தார். சுவீடன் தொழிற்சங்க நிர்வாகிகளின் பாத்திரம் "மானக்கேடானதாக" இருந்துள்ளது என்று ராஃப் நமக்கு சொல்கின்றார். பெல்ஜிய அதிகாரத்துவத்தின் நடத்தை "வெட்கமற்றதாய் பகிரங்கமானதாய்" இருக்கிறது. ஐரிஷ் தலைவர்களும்கூட காட்டிக்கொடுப்பில் "மானக்கேடான அதிர்ச்சிகரமான" செயலில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனில் தொழிலாளர்கள் "வலதுசாரித் தலைவர்களின் இயலாமைக்காக பெரும்விலை கொடுத்தனர்" என்று ராஃபே கூறுகின்றார். அவர் பிரேசில், கிரீஸ் மற்றும் அமெரிக்காவில் தொழிற் சங்க தலைவர்களின் சரணாகதியையும்கூட கவலையுடன் குறிப்பிடுகின்றார்.

ஆனால் ராஃபை பொறுத்தவரையில், தொழிற்சங்கங்களின் பிரச்சினையானது, முதலாளித்துவ சந்தையை ஏற்றுக்கொள்வது என்ற ஒரு தவறான சித்தாந்தத்தினால் அல்லல்படும் தகுதிக்குறைவான தலைவர்கள் பற்றிய ஒன்றாகும். அமைப்புகள் தன்னளவில் அடிப்படை ஆரோக்கியத்துடன் இருக்கின்றன என்கிறார். இந்த அகநிலை மதிப்பீட்டின் அடிப்படையில் ராஃப், ட்ரொட்ஸ்கியை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகள் ஒரு அடிப்படையான அபிவிருத்திப் போக்கின் வெளிப்பாடு என்று வலியுறுத்துகின்ற “சிறு இடது குழுக்களை” —இங்கே அவர் குறித்துக்காட்டுவது அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை— விமர்சிக்கின்றார். ராஃபை பொறுத்தவரையில் இந்த "ஒருதலைப்பட்சமான" அணுகுமுறையானது, "அடிமட்டத்தில் இருந்து ஒரு விழிப்பூட்டப்பட்ட மற்றும் போராடும் தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்தின் கீழ்", வலதுசாரி தொழிற்சங்க தலைவர்கள் “அரசிலிருந்து அவர்களாகவே பிரிந்துசெல்ல நிர்பந்திக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமைதாங்க" நிர்பந்திக்கப்படுவதற்கான வாய்ப்பை அங்கீகரிக்க தவறுகின்றது. [3]

ஆகவே தொழிலாளர்கள் ”தொழிற்சங்கங்களை அவர்களது சார்பில் போராடும்படி நிர்ப்பந்திப்பதே” பிரிட்டன் மற்றும் வேறெங்கிலும் ”எதிர்வரும் காலப்பகுதியிலான பிரதானமான போக்காக இருக்கும்” என ராஃப் எழுதுகிறார். தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியானது "தொழிற்சங்கங்களின் மறுஉருவாக்கத்தில்" தங்கியுள்ளதாம். [4]

இதேமாதிரியான ஒருவாதம், தற்போது செயலற்று இருக்கும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஒரு பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக புதிய தொழிலாளர் அமைப்பு வடிவங்களை அபிவிருத்தி செய்வதற்கான எந்த ஒரு போராட்டத்தையும் என்னவிலை கொடுத்தேனும் தவிர்க்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. ''தொழிற்சங்கத் தலைவர்கள் அரசுடன் படுக்கையில் இருக்கின்றனர், எனவே மாற்றீட்டு அமைப்புகள் கட்டப்பட்டு இணைக்கப்பட வேண்டும் என்ற அருவமான முன்மொழிதலில் தொடங்கும் எந்த எளிமையான அடிமட்டத் தொழிலாளிவாதமும் புதிய நிலைமையை கிரகித்துக்கொள்ள முற்றிலும் போதாமை கொண்டதாக இருக்கின்றது.” [5]

பிரிட்டனில் அல்லது வேறெங்கிலும் தொழிற்சங்க நிர்வாகிகளின் இரவு சந்திப்புகள் தொடர்பான குறிப்பான தகவல் எதுவும் என்னிடம் இல்லை என்றாலும் அவர்களது சந்தர்ப்பவாதம் "அருவமான முன்மொழிவாக" நிச்சயமாக இல்லை. சரியாகச் சொன்னால் தொழிற்சங்க நிர்வாகிகளின் துரோகத்தனமான சேவைகள் நாளாந்திர அடிப்படையில் முதலாளிகள் மற்றும் அரசினால் ஆலோசனையளிக்கப்படுபவையாக இருக்கின்றன, அத்துடன் இந்த ஆலோசனையளிப்போர் அதிருப்தி அடைவதும் மிகஅரிதாகவே உள்ளது.

ஆளும் அதிகாரத்துவங்களின் குணாதிசயங்களும், தன்மைகளும் புறநிலையான சமூகப்பண்புகள் மற்றும் நிகழ்ச்சிப் போக்குகளின் அகநிலையான வெளிப்பாடுகளே என்பதைப் புரிந்து கொண்டு பார்க்கையில், தொழிற்சங்கங்கள் இறுதியாக மீண்டெழுவதற்கான வாய்ப்புவளங்கள் மிகவும் சாத்தியமற்றதாகவே தோன்றக் காணலாம். தொழிற்சங்கத் தலைவர்கள் பற்றிய கண்டனங்கள் அனுமதிக்கக்கூடியவையே, இன்னும் சொன்னால் அவசியமானதும்கூட, ஆனால் அவை தொழிற்சங்கவாதத்தின் தன்மை பற்றிய ஓர் பகுப்பாய்விற்கு பிரதியீடாக அது சேவைசெய்யாது இருக்கும்வரையில் மட்டும்தான்.

தொழிலாளர் இயக்கத்தின் இந்தக் குறிப்பிட்ட வடிவத்தின் அபிவிருத்தியிலான அதிமுக்கிய கட்டங்கள் குறித்த ஒரு வரலாற்றுரீதியான திறனாய்வின் அடிப்படையில், தொழிற்சங்கவாதத்தின் மீதான ஒரு பகுப்பாய்வைத் தொடங்கி வைப்பதே நமது நோக்கமாகும். நான் ஏற்கனவே கூறியதுபோல சோசலிச இயக்கமானது 150 வருடங்களுக்கு குறைவில்லாத காலப்பகுதியில் ஒரு மிகப் பெருமளவிலான வரலாற்று அனுபவத்தை ஒட்டுமொத்தமாகத் திரட்டியுள்ளது. இந்த அனுபவமானது, தொழிற்சங்கவாதம் என்ற விடயத்தில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் துன்பமுற்ற தனித்திறன் கொண்டதாக தன்னைக் கூறிக்கொள்வதற்கு காரணம் கற்பிக்கின்றது.

தொழிற்சங்கவாதம் என்பது என்றுமே ஏற்பட்டிருக்கக்கூடாத ஏதோ ஒருவகையான வரலாற்று தவறினை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதாக நாங்கள் கூறவில்லை. தொழிற்சங்கவாதம் போன்ற ஒரு சர்வவியாபகமான போக்கானது, முதலாளித்துவ சமுதாயத்தின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கவில்லை என்று மறுப்பது ஒருவகையில் முட்டாள்தனமானதாகும். நிச்சயமாக தொழிற்சங்கவாதத்திற்கும், வர்க்கப் போராட்டத்திற்கும் இடையில் ஒரு திட்டவட்டமான இணைப்பு உள்ளது. ஆனால் அது தொழிற்சங்கங்களுக்குள் தொழிலாளர்கள் ஒழுங்கமைப்பட்டுள்ளமையானது அதன் உந்துசக்தியை, முதலாளிகளது சடரீதியான நலன்களுக்கும் தொழிலாளர்களின் சடரீதியான நலன்களுக்கும் இடையிலான ஒரு திட்டவட்டமான மோதலிலிருந்து பெற்றுக்கொள்கிறது என்ற அர்த்தத்தில் மட்டும்தான் பொருந்தக் கூடியதாகும். இந்த புறநிலையான உண்மையிலிருந்து, தொழிற்சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகரீதியாக-நிர்ணயிக்கப்பட்ட அமைப்பு வடிவமாக அவற்றினை வர்க்கப் போராட்டத்துடன் (ஒரு வரலாற்று அர்த்தத்தில் அவை தமது இருப்புக்கே இதற்கு கடமைப்பட்டுள்ளன) அடையாளம் காண்பதாகவோ அல்லது வர்க்கப் போராட்டத்தை அவை நடத்த முயற்சிப்பதாகவோ எந்தவகையிலும் அர்த்தமாகி விடாது. பதிலாக அவை அதனை ஒடுக்குவதற்கே மிக அதிகமாய் அர்ப்பணிதிருந்தன என்பதற்கு எண்ணிலடங்கா ஆதாரங்களை வரலாறு வழங்குகிறது.

வர்க்கப் போராட்டத்தை நசுக்கும் தொழிற்சங்கங்களின் போக்கானது, அதன் மிகவும் ஆழமான வளர்ச்சிகண்ட வெளிப்பாட்டை சோசலிச இயக்கத்தை நோக்கிய அவற்றின் அணுகுமுறையில் கண்டிருக்கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சங்கங்களை, தவிர்க்கமுடியாததாக என்பதைக் கூட விட்டுவிடுவோம், சார்ந்திருக்கத்தக்கதாக கற்பனை செய்வதை விடவும் துயரகரமான பிரமை, குறிப்பாக சோசலிஸ்டுகளுக்கு, இருக்கவே முடியாது. தொழிற்சங்கவாதத்தின் உள்ளார்ந்த வளர்ச்சி முன்செல்வது சோசலிசத்தின் திசையில் அல்ல, மாறாக அதற்கு எதிர்த்திசையிலாகும்.

அவற்றின் தோற்றகால நிலைமைகள் இருந்தபோதிலும், அதாவது தொழிற்சங்கங்கள் ஒரு நாட்டிலோ அல்லது இன்னொரு நாட்டிலோ தமது இருப்பிற்கு நேரடியாக புரட்சிகரமான சோசலிஸ்டுகளால் வழங்கப்பட்ட உந்துசக்திக்கும், தலைமைக்கும் நன்றிக்கடன்பட்டவர்களாக இருந்தபோதிலும்கூட, தொழிற்சங்கங்களின் அபிவிருத்தியும் வலுப்பெறலும் பரவலாய் சோசலிச அரவணைப்பு மீதான ஒரு மனக்கசப்புக்கும் அதிலிருந்து முறித்துக்கொண்டு சுதந்திரமாக செல்வதற்கான உறுதியான முயற்சிகளுக்குமே இட்டுச்சென்றிருக்கிறது. இந்தப் போக்கு பற்றிய ஒரு விளக்கத்தின் மூலமாக மட்டுமே தொழிற்சங்கவாதம் குறித்த விஞ்ஞானபூர்வ புரிதலுக்கு வந்தடைவது சாத்தியமானதாகும்.

சமூக வடிவமாக தொழிற்சங்கங்கள்

நாம் தொழிற்சங்க வாதத்தை ஆய்வு செய்யத் தொடங்கும்பொழுது, நாம் ஒரு திட்டவட்டமான சமூக வடிவத்தினை கையாளுகின்றோம் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். இதில் நாம் கணக்கிலெடுப்பது ஏதோவகையான திட்டமிடப்படாத, தற்செயலான இனம் காணமுடியாத தனிநபர்களின் கூட்டினை அல்ல, மாறாக, வர்க்கங்களாக ஒழுங்கமைப்பட்டு குறிப்பிட்ட தனித்துவமான உற்பத்தி உறவுகளில் வேரூன்றியிருக்கும் மக்களிடையே வரலாற்றுவழியாக பரிணாம வளர்ச்சி பெற்ற ஒரு தொடர்பினையே ஆகும். வடிவத்தின் தன்மை மீது பிரதிபலிப்பதும் கூட முக்கியமானதாகும். வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இடையே ஒரு உறவு இருக்கின்றதென நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் வடிவம் என்பது உள்ளடக்கத்தின் வெளிப்பாடு என்பது போலவே இந்த உறவுமுறை பொதுவாக கருதப்படுகின்றது. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், சமூக வடிவமானது அதன் உள்ளமைந்த உறவுகளின் வெளிநோக்கிய, எளிதில் மாறும்தன்மை கொண்ட மற்றும் முடிவற்ற நெகிழ்வான வெளிப்பாடாக கருத்தாக்கம் செய்யப்படலாம். ஆனால் சமூக வடிவங்கள் வரலாற்று நிகழ்வுப்போக்கில் இயங்குநிலையிலிருக்கும் கூறுகளாகவே மிகவும் ஆழமாக புரிந்துகொள்ளப்படுகின்றன. “உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறுவதில் அர்த்தப்படுவது என்னவெனில், வடிவமானது அது எதன் வெளிப்பாடாக அமைந்திருக்கிறதோ அந்த உள்ளடக்கத்திற்கு குறிப்பிட்ட குணாம்சங்களையும் தன்மைகளையும் கொண்டுசேர்க்கிறது. வடிவத்தின் ஊடாகத்தான் உள்ளடக்கமானது இருப்பு கொள்கிறது, அபிவிருத்தியடைகிறது.

மூலதனத்தின் முதல் தொகுதியின் பிரபலமானதொரு பகுதியில் இருந்து எடுத்துக்காட்டுவதன் மூலமாக மெய்யியல்வாத வகையினங்கள் மற்றும் அருவங்களுக்குள்ளான இந்த பயணத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்துவது சாத்தியமாகக் கூடும். அதில் மார்க்ஸ் கேட்கிறார்: " அப்படியானால், உழைப்பின் விளைபொருளுக்கு, அது பண்டங்களின் வடிவத்தை எடுத்த உடனேயே, ஒரு புரிந்து கொள்ளக் கடினமான தன்மை எங்கேயிருந்து உதயமாகிறது? நிச்சயமாக இந்த வடிவத்தில் இருந்தே தான்" எழுகின்றது. [6] அதாவது உழைப்பின் ஒரு உற்பத்திப்பொருள் பண்டத்தின் வடிவைப் பெறுகின்றபொழுது —அந்த மாற்றம் சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும்தான் நிகழ்கின்றது— அது அதற்கு முன் கொண்டிராத ஒரு தனித்துவமான மற்றும் மோகம்கொள்ளச் செய்யும் பண்பினைப் பெறுகின்றது. சந்தையில் உற்பத்திப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றபொழுது மனிதரிடையிலான உண்மையான சமூக உறவுகள் —பண்டங்களே கூட இவற்றின் விளைபொருள் தான்— அத்தியாவசியமாய் பொருட்களுக்கிடையிலான உறவின் தோற்றத்தை எடுக்கின்றன. உழைப்பின் ஒரு உற்பத்திப் பொருள் உழைப்பின் ஒரு உற்பத்திப் பொருள் தான். என்றபோதும், அது புதிய உற்பத்தி உறவுகளின் கட்டமைப்பினுள், ஒரு பண்டத்தின் வடிவத்தை எடுக்கின்றபொழுது, அது புதிய சமூகப் பண்புகளை பெற்று விடுகின்றது.

அதேபோல் தொழிலாளர்களின் ஒரு குழு, தொழிலாளர்களின் ஒரு குழுதான். இருப்பினும் அந்தக் குழு, ஒரு தொழிற்சங்க வடிவத்தைப் பெறுகின்றபொழுது, அது அந்த வடிவத்தின் மூலமாக புதிய மற்றும் மிகவும் வேறுபட்ட சமூகப் பண்புகளை பெற்று விடுகிறது. அவற்றுக்கு தொழிலாளர்கள் தவிர்க்க முடியாதபடி கீழ்ப்படுத்தப்படுகின்றனர். இது திட்டவட்டமாக அர்த்தப்படுத்துவது என்ன? தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை மிகவும் தனித்துவமானதொரு சமூகப் பொருளாதார பாத்திரத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்றன: அதாவது உழைப்புசக்தி என்ற பண்டத்தின் விற்பனையாளராக. முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் மற்றும் சொத்து வடிவங்களின் அடிப்படையில் எழுகின்ற தொழிற்சங்கங்களானவை, நிலவுகின்ற சந்தை நிலைமைகளின் கீழ் இந்தப் பண்டத்திற்கு மிகச் சிறந்த விலையை பெற்றுக் கொடுக்க முனைகின்றன.

உண்மையிலேயே தொழிற்சங்கங்களின் "அத்தியாவசியமான நோக்கம்" என்று தத்துவார்த்த பதங்களில் நான் விவரித்ததற்கும், அவற்றின் உண்மை-வாழ்க்கையிலான நடவடிக்கைகளுக்கும் இடையில் உலகளவு வித்தியாசம் இருக்கின்றது. நடைமுறை யதார்த்தமானது, —தொழிலாள வர்க்கத்தின் மிகவும் உடனடியான நலன்களை ஒவ்வொரு நாளும் விலைபேசிக் கொண்டிருப்பது— தத்துவார்த்த ரீதியாகக் கருத்தில் கொள்ளப்படும் “நிர்ணயத்துடன்” மிகச்சிறிய அளவில்தான் பொருந்துவதாக இருக்கிறது. இந்த வேறுபாடானது தத்துவார்த்த கருத்துருவுடன் முரண்படவில்லை, மாறாக அதுவே கூட தொழிற்சங்கத்தின் சமூகப் பொருளாதார செயற்பாட்டின் விளைபொருளாகவே இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படையின் மீது நிற்கும் தொழிற்சங்கங்கள், அவற்றின் இயல்பிலேயே வர்க்கப் போராட்டத்தை நோக்கி ஒரு குரோதமான அணுகுமுறையை கைக்கொள்ள நிர்ப்பந்தம் பெறுகின்றன. உழைப்பு சக்தியின் விலையை நிர்ணயம் செய்வதற்கும் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து உபரிமதிப்பு உறிஞ்சி எடுக்கப்படுகின்றதை சுற்றிய நிலைமைகளை நிர்ணயம் செய்வதற்கும் முதலாளிகளுடன் உடன்பாடுகளை எட்டுவதை நோக்கி தமது முயற்சிகளைச் செலுத்தும் தொழிற்சங்கங்கள், பேச்சுவார்த்தையில் முடிவான ஒப்பந்தங்களின் நிபந்தனைகளின்படி அவற்றின் உறுப்பினர்கள் உழைப்பு சக்தியை விநியோகம் செய்வதை உத்தரவாதம் செய்யக் கடமைப்பட்டுள்ளன. கிராம்ஷி குறிப்பிட்டதுபோல, "தொழிற்சங்கம் சட்டபூர்வநிலையை பிரதிநிதித்துவம் செய்கின்றது, அத்துடன் தன் உறுப்பினர்கள் அந்த சட்டபூர்வநிலைக்கு மரியாதை அளிக்கும்படி செய்வதை அது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்."

சட்டபூர்வநிலையை பாதுகாப்பது என்பதன் அர்த்தம், வர்க்கப் போராட்டத்தை நசுக்குவவது என்பதாகும். அதனால் தான் தொழிற்சங்கங்கள் இறுதியாக, அவை உத்தியோகபூர்வமாக அர்ப்பணித்துக் கொண்ட வரம்புக்குட்பட்ட குறிக்கோள்களைக்கூட சாதிப்பதற்கான தமது திறனையும் கூட பலவீனப்படுத்திக் கொள்கின்றன. இங்கேதான் தொழிற்சங்கவாதம் தடுமாற்றம் காண்கின்ற முரண்பாடு அமைந்திருக்கின்றது. தொழிற்சங்கங்களுக்கும் புரட்சிகர இயக்கத்திற்கும் இடையிலான மோதல் என்பது, எந்த ஒரு அடிப்படையான அர்த்தத்திலும், தொழிற்சங்கத் தலைவர்களின் பிழைகள் மற்றும் தவறுதல்களில் இருந்து எழுவதில்லை –—இந்த இரண்டுமே அங்கே நிறைந்து காணக் கிடைக்கின்றது என்றபோதிலும்—- மாறாக தொழிற்சங்கங்களின் இயல்பிலிருந்தே அது எழுகின்றது. இந்த மோதலின் இருதயத்தானத்தில் தான் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கும் விஸ்தரிப்பிற்கும் தொழிற்சங்கங்கள் காட்டுகின்ற துடிப்புடனான எதிர்ப்பு இருக்கின்றது. வர்க்கப் போராட்டமானது, முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகளை, அதாவது தொழிற்சங்கவாதத்தின் சமூகப் பொருளாதார அடித்தளங்களையே, அச்சுறுத்துவதாகத் தோன்றும் அந்த மிகமுக்கியமானதொரு கட்டத்தில் இந்த எதிர்ப்பானது கூடுதல் தீர்மானகரமானதாக, கடுமையானதாக மற்றும் மரணகரமானதாக மாறுகிறது.

மேலும் அந்த எதிர்ப்பானது, தொழிலாள வர்க்கத்தை உழைப்புச் சக்தியை விற்பவர் என்ற அதன் வரம்புக்குட்பட்ட பாத்திரத்தில் அல்லாமல் மாறாக முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகளின் புரட்சிகர எதிரிடையாக செயலாற்றத்தக்க அதன் வரலாற்றுத் திறனில் பிரதிநிதித்துவம் செய்கின்ற சோசலிச இயக்கத்தின் மீது கவனக்குவியம் கொள்கிறது.

வர்க்கப் போராட்டத்தை நசுக்க முயற்சிக்கும் அதன் போக்கு மற்றும் சோசலிச இயக்கத்திற்கு அது காட்டும் விரோதம் ஆகிய தொழிற்சங்கவாதத்தின் இந்த இரண்டு அதிமுக்கியமான அம்சங்களும் வரலாற்றுப் பதிவுகளால் தீர்மானகரமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய இரு நாடுகளின் தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறானது முக்கியமான படிப்பினைகளையும் உள்ளார்ந்த பார்வைகளையும் தருகின்றது.

இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கவாதம்

பொதுவாக இங்கிலாந்து நவீன தொழிற்சங்கவாதத்தின் மாபெரும் தாயகம் என்று கருதப்படுகிறது. அங்கே இந்த அமைப்பு வடிவத்தின் மூலமாக தொழிலாள வர்க்கம் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்திருக்கின்றது. உண்மையில் இதுதான் எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் 1880களின் பிற்பகுதியிலும் 1890களிலும் இங்கிலாந்தில் சிறிது காலம் தங்கியிருந்தபோது தொழிற்சங்கங்கள் அவரின் மீது ஏற்படுத்திய எண்ணப்பதிவாகும். பிரிட்டிஷ் தொழிற்சங்கவாதத்தின் வெற்றிகள் எனக் கூறப்பட்டவை தான், இந்த அமைப்புகளின் பொருளாதாரப் போராட்டங்களே தொழிலாள வர்க்கத்தின் முன்னேற்றத்திலும் மற்றும் சோசலிச வழிகளில் சமுதாயத்தை படிப்படியாக மாற்றுவதிலும் தீர்மானகரமான காரணியாக இருக்குமே தவிர புரட்சிகர இயக்கத்தின் அரசியல் முயற்சிகள் அல்ல என்று பேர்ன்ஸ்டைனை நம்பவைத்தன.

இன்று குட்டி முதலாளித்துவத்தின் தீவிரப்பட்ட பிரிவினரால் சொல்லப்படும் ஒவ்வொன்றுமே, ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக நவீன திருத்தல்வாதத்தின் ஸ்தாபகரினால் (பேர்ன்ஸ்டைன்) முன்னுணரப்பட்டவையே ஆகும். அவர்களின் வாதங்கள் நூறு வருடங்கள் பழையது என்ற காரணத்தால் மட்டும் அவை செல்லுபடியாகாதவை என்று கூறமுடியாது. அப்படிப் பார்த்தால் நான் பயன்படுத்தும் சில வாதங்கள் கூட, உதாரணமாக பேர்ன்ஸ்டைனுக்கு எதிராக ரோசாலுக்செம்பேர்க் பயன்படுத்திய வாதங்களைச் சொல்லலாம், நூறு வருடங்கள் பழையதாகும் என்பதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இவை கடந்த நூற்றாண்டின் போது ஊர்ஜிதப்பட்ட அனுகூலத்தைக் கொண்டவை என்ற அதேநேரத்தில் புதிய-பேர்ன்ஸ்டைன்வாதிகளின் வாதங்கள் முழுமையாக மறுதலிக்கப்பட்டிருந்தன. உண்மை என்னவென்றால் பேர்ன்ஸ்டைனின் சமகாலத்திய விமர்சகர்கள், பிரிட்டிஷ் தொழிற்சங்கவாதத்தின் பொருளாதார சாதனைகள் மீதான அவரது மதிப்பீடு பெருமளவில் மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தது என்பதைக் குறித்துக் காட்டியிருக்கின்றனர். சொல்லப் போனால், தொழிற்சங்கவாதத்தின் மேலெழுச்சி என்பதே, – தொழிலாளர் இயக்கத்தில் அது ஒரு மேலாதிக்கமான பாத்திரத்திற்கு உயர்ந்தமை 1850 இல் தொடங்கியிருந்தது – சார்ட்டிசம் என்ற பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் புரட்சிகர அரசியல் இயக்கத்தின் தோல்வியை பின்தொடர்ந்து வந்த அரசியல் சீரழிவு மற்றும் புத்திஜீவிதத் தேக்கத்தின் ஒரு வெளிப்பாடாக இருந்தது.

சார்ட்டிஸ்ட் (Chartist) இயக்கமானது பிரெஞ்சு புரட்சியைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினரைப் பாதித்த ஒரு அரசியல், கலாச்சார மற்றும் புத்திஜீவித்தன கிளர்ச்சி நிலையின் உச்சத்தை பிரதிநிதித்துவம் செய்தது. 1848-49ல் சார்ட்டிசத்தின் இறுதி தோல்விக்குப் பின் பல வருடங்கள் கழித்து அதன் மிகவும் மதிப்புமிகுந்த தலைவர்களில் ஒருவரான தோமஸ் கூப்பர், இந்தப் பழைய இயக்கத்தின் புரட்சிகரமான உணர்வினை தொழிற் சங்கங்களால் விருத்திசெய்யப்பட்ட மந்தமான குட்டி முதலாளித்துவ பார்வையுடன் பேதப்படுத்திக் காட்டினார். அவரது சுயசரிதையில் அவர் எழுதியதாவது:

"எங்களது பழைய சார்ட்டிஸ்ட் காலத்தில், லங்கஷர் (Lancashire) தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கந்தல் துணிகளில் இருந்தார்கள் என்பதும் அவர்களில் பலருக்கும் பல சமயங்களில் உணவும் கூடக் கிடைக்கவில்லை என்பதும் உண்மை தான். ஆனால் நீங்கள் எங்குசென்று பார்த்தாலும் அவர்களது அறிவுஜீவித்தனம் எடுத்துக் காட்டப்பட்டதைக் காணலாம். நீங்கள் அவர்களை குழுக்களாக, ’ஒவ்வொரு வளர்ந்த பகுத்தறிவு உள்ள மனிதனுக்கும் அவனை ஆளவிருக்கும் சட்டங்களை இயற்றப் போகின்ற மனிதர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிச்சயம் ஒரு வாக்கு இருந்தாக வேண்டும்’ என்ற அரசியல் நீதியின் மகத்தான கோட்பாட்டை விவாதித்துக் கொண்டோ, அல்லது சோசலிச கல்வி தொடர்பான ஆர்வம்மிக்க சச்சரவிலோ இருக்கக் காண்பீர்கள். இப்பொழுது லங்கஷரில் அப்படிப்பட்ட குழுக்களைப் பார்க்க முடியாது. நன்கு உடையணிந்த ஊழியர்கள் தமது பாக்கெட்டுகளில் கைகளை விட்ட வண்ணம் கூட்டுறவுகளைப் பற்றியும், அவற்றிலுள்ள தமது பங்குகளைப் பற்றியும், அல்லது சொசைட்டிகளை கட்டுவதைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.7

தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து ஒரு புதிய வகையிலான தொழிலாளர் தலைவர் தோன்றினார். பழைய புரட்சிகர சார்ட்டிஸ்டுகளின் இடத்தை நடுத்தர வர்க்க மரியாதையை விரும்புகிற மற்றும் வர்க்க சமரசம் என்ற புதிய வேதவாக்கைப் போதித்த பயந்தாங்கொள்ளி கனவான்கள் எடுத்துக்கொண்டனர். சார்டிஸத்தின் ஒரு சோசலிச வரலாற்று ஆசிரியரான தியோடர் ரொத்ஸ்ரைன் (Theodore Rothstein) இவ்வாறு எழுதினார்:

மகத்தான திறமை, மகத்தான மனப்பக்குவம், மற்றும் மகத்தான மற்றும் ஆழமான அறிவுமேன்மையுடன், சில வருடங்களுக்கு முன்பு வரை முதலாளித்துவத்தின் மிக அடித்தளங்களையே உலுக்கியவர்களாகவும், நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களால் பின்பற்றப்படுபவர்களாகவும் இருந்திருந்த மனிதர்கள், இப்போதோ, எங்கோ ஒரு மூலையில் நடமாடிக் கொண்டிருக்கும் தனிமையான மனிதர்களாக, பெரும்பான்மையானவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்களாக, தெரிந்தெடுத்த மிகச் சிலர் கொண்ட சிறுகுழுக்களால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டவர்களாக ஆகியிருந்தனர். அவர்களின் இடத்தைப் பிடித்திருந்த புதிய மனிதர்களுக்கு அவர்கள் கொண்டிருந்த புத்திஜீவித்தனம், திறன் மற்றும் குணத்தில் கடுகளவும் கூட இல்லை, “பைசாக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்ற வெற்று கோஷத்திலும் அதுவிடயத்தில் வர்க்க சுயாதீனத்தை விலையாகக் கொடுத்தேனும் முதலாளிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு வருகின்ற தேவையினாலும் அவர்களது பின்னாலும் இதேபோல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈர்க்க முடிந்திருந்தது. 8

தொழிற்சங்கவாதத்தை பொறுத்தவரை ரொத்ஸ்ரைன் பின்வரும் மதிப்பீட்டினை வழங்கினார்:

முதலாளித்துவ சமூகத்தின் மீதான ஏற்பு என்பது இந்த மனோபாவத்தின் தனித்துவமான அம்சமாக இருந்தது. அந்த ஏற்பு தனது வெளிப்பாட்டை அரசியல் நடவடிக்கையை நிராகரிப்பதிலும், முதலாளி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களது ஒத்திசைவுக்கான கொச்சை அரசியல் பொருளாதாரத்தின் போதனைகளை அங்கீகரிப்பதிலும் கண்டது. [9]

பொருளாதாரப் போராட்டம் வழங்கிய மிகவும் நம்பிக்கை அளிக்கும் வாய்ப்புகளின் மீது, தன் சக்தியை ஒருமுனைப்படுத்த வர்க்கத்தை அனுமதிக்கும்பொருட்டு பிரிட்டிஷ் தொழிலாளர்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து பின்வாங்கியது அவசியமானது என தொழிற்சங்கவாதத்துக்கு வக்காலத்து வாங்கியோர் வாதிட்டார்கள். தொழிற்சங்கவாதத்தின் எழுச்சியுடன் கரம்கோர்த்து பொருளாதாரப் போராட்டங்கள் தீவிரமுறுவது நடக்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைவர்களால் அவை பொதுவாக மறுதலிக்கப்படுவதுதான் நடந்தது என்ற உண்மையின் மூலம், இந்தத் தத்துவம் தவறென நிரூபணமானது. இங்கிலாந்தில் தொழிற்சங்கவாதம் உச்சத்தில் இருந்த 1870 களின் ஆரம்பத்திற்கும் 1890களின் மத்திக்கும் இடையிலான காலத்தில் தொழிலாளர்களின் சம்பளங்கள் தேக்க நிலையை அடைந்தன. இந்தக் காலத்தின்போது தொழிற்சங்கவாதம் மதிப்பிழந்து விடவில்லை என்றால் அச்சமயத்தில் மாவு, உருளைக்கிழங்கு, ரொட்டி, இறைச்சி, தேயிலை, சர்க்கரை மற்றும் வெண்ணெய் போன்ற முக்கியமான அடிப்படைப் பொருட்களின் விலைகளில் ஒரு மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது என்ற உண்மையிலேயே அதன் விளக்கத்தைக் காண முடியும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில், தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர உணர்வுகள் பரந்த அளவில் இருந்தசமயத்தில், ஆங்கிலேய முதலாளித்துவ வர்க்கம் ஒன்றிணைவை நோக்கிய அனைத்து போக்குகளையும் கடுமையாக எதிர்த்தது. ஆனால் அந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே, முதலாளித்துவ ஸ்திரத்தன்மைக்கு குறிப்பாக தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச போக்குகள் மீண்டும் தோன்றுவதற்கு ஒரு தடையாக இருந்ததன் மூலம் தொழிற்சங்கம் வழங்கிய பெரும் சேவையை முதலாளித்துவ வர்க்கம் மனதார ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. ஜேர்மன் முதலாளித்துவ பொருளியல் நிபுணர் பிரின்டானோ (Brentano) எழுதியவாறு: “இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் தோல்வி அடைய நேர்ந்திருக்குமாயின், அது எவ்வகையிலும் தொழில் வழங்குனரின் வெற்றியைக் குறித்ததாய் இருந்திருக்காது. அது உலகம் முழுவதும் புரட்சிகரமான போக்கு பலப்படுத்தப்படுவதையே அர்த்தப்படுத்தியிருக்கும். கவனத்திற்குரிய முக்கியத்துவம் எதனையும் கொண்ட ஒரு புரட்சிகரமான தொழிலாளர் கட்சி இல்லாதது பற்றி இது வரையில் தற்பெருமை கூறிவந்திருக்கக் கூடிய இங்கிலாந்து, அதன்பின் இந்த விடயத்தில் ஐரோப்பிய கண்டத்துடன் போட்டியிட நேர்ந்திருக்கும்.” [10]

தொழிற்சங்கவாதம் எழுச்சியுற்ற காலகட்டத்தில் மார்க்சும் ஏங்கெல்சும் இங்கிலாந்தில் நாடுகடத்தப்பட்ட புரட்சியாளர்களாக வாழ்ந்தனர். அவர்கள் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்னதாகவே, தொழில் வழங்குனர்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் பதிலிறுப்பு என்ற வகையில் தொழிற்சங்கவாதத்தின் முக்கியத்துவத்தை கண்டுகொண்டு விட்டிருந்தனர். தொழிற்சங்கங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் இவை இரண்டின் பிரயோகத்தையும் —அதாவது அவர்களின் முயற்சிகளின் மூலமாக அடையப்பெற்ற சம்பள உயர்வுகள் விலை உயர்வுகளுக்கு மட்டும்தான் வழிவகுத்தது என்ற அடிப்படையில்— நிராகரித்த குட்டி முதலாளித்துவ தத்துவாசிரியரான பியர்-ஜோசப் புருடோனுக்கு (Pierre-Joseph Proudhon) எதிராக மார்க்ஸ், தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் அவையிரண்டுமே அவசியமான பாகங்களாய் அமைந்தன என வலியுறுத்தினார்.

புருடோனின் கருத்துக்கள் பற்றிய அவரது விமர்சனத்தில் மார்க்ஸ் நிச்சயமாக சரியாகவே இருந்தார். ஆயினும் இந்த ஆரம்பகால எழுத்துக்கள் தொழிற்சங்கங்கள் பச்சிளங்குழந்தைகளாக இருந்த காலத்தில் படைக்கப்பட்டவை என்பதை இங்கு மனதில் கொள்வது அவசியமாகும். இந்தப் புதிய அமைப்பு வடிவங்களுடனான தொழிலாள வர்க்க அனுபவம், மிகக் குறைவானதாய் இருந்தது. அந்த சமயத்தில் தொழிற்சங்கங்கள் புரட்சிகரமான போராட்டத்தின் ஆற்றல் வாய்ந்த கருவிகளாக அல்லது குறைந்தபட்சம் அப்படியான கருவிகளின் நேரடி முன்னோடிகளாகவேனும் பரிணமிப்பதற்கான சாத்தியத்தை அத்தனை ஆரம்பத்தில் முன்கூட்டி நிராகரித்து விட முடியவில்லை. "அமைப்பின் மையங்களாக” “நடுத்தர வர்க்கத்துக்கு மத்திய காலத்து நகராட்சிகள் மற்றும் கம்யூன்கள்”[11] ஆற்றிய அதே பாத்திரத்தினை, தொழிலாள வர்க்கத்துக்கு தொழிற்சங்கங்கள் ஆற்றின” என்ற 1866 ஆம் ஆண்டின் மார்க்சின் அவதானத்தில் இந்த நம்பிக்கையே வெளிப்படுத்தப்பட்டது.

ஆயினும் அப்போதும் கூட “தொழிற்சங்கங்கள், கூலி அடிமைத்தனம் என்ற அமைப்பிற்கு எதிராக செயலாற்றும் அவற்றின் சக்தியை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று மார்க்ஸ் கவலை கொண்டிருந்தார். மாறாக அவை பரிணமிக்க வேண்டிய திசை என்னவாக இருந்ததென்றால்:

அவற்றினுடைய ஆரம்ப இலக்குகள் தவிர, அவை இப்போது தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைப்பு மையங்களாக அதன் முழுமையான விடுதலையின் பரந்த நலனில் திட்டமிட்டு செயற்பட கற்றுக் கொள்ள வேண்டும். அந்த திசையில் செல்லும் ஒவ்வொரு சமூக மற்றும் அரசியல் இயக்கத்திற்கும் அவை உதவி செய்யவேண்டும். ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் தங்களைக் கருதிக் கொண்டும் செயற்பட வேண்டிய அவை, தங்களின் அணிகளில் அமைப்புக்கு வெளியிலான மனிதர்களையும் சேர்த்துக் கொள்ளத் தவறக்கூடாது. விதிவிலக்கான நிலைமைகளினால் சக்தியற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கக் கூடிய விவசாயத்துறை தொழிலாளர்கள் போன்ற மோசமான கூலி கொடுக்கப்படும் தொழிற்பிரிவுகளின் நலன்களையும் அவை கவனமாக அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவை குறுகிய மனத்துடன் சுயநலமாக இருக்காமல், மிகவும் ஒடுக்கப்படும் மில்லியன் கணக்கானவர்களின் விடுதலையையே குறிக்கோளாக கொண்டிருப்பதோடு, தமது முயற்சிகளின் மூலம் உலகத்திற்கு பெருமளவு நம்பிக்கையூட்டவும் வேண்டும்.12

மார்க்ஸ், தொழிற்சங்கங்களுக்கு ஒரு சோசலிச நோக்கு நிலையை வழங்க முயற்சித்தார். தொழிற்சங்கங்களின் மூலமாக ஈடுபட்டிருக்கும் போராட்டங்களின் முக்கியத்துவத்தில் தொழிலாளர்கள் “தமக்குத்தாமே மிகைப்படுத்திக்கொள்ளக் கூடாது” என்று அவர் எச்சரித்தார். அதிகப்பட்சமாக தொழிற்சங்கங்கள் விளைவுகளுக்கு எதிராகப் போராடுகின்றன, அந்த விளைவுகளுக்கான காரணிகளுடன் அல்ல. அதாவது அவை கீழ் நோக்கிய நகர்வை தாமதப்படுத்துகின்றன; அதாவது அவை வலிநிவாரணிகளைப் பிரயோகிக்கின்றன, நோயைக் குணப்படுத்தவில்லை.” ஆக தொழிலாளர்களின் துயரங்களுக்கு காரணமாக இருக்கும் அமைப்பிற்கு எதிரான ஒரு போராட்டத்தை தொழிற்சங்கங்கள் மேற்கொள்வது அவசியமானதாக இருந்தது; ஆகவே தான் மார்க்ஸ், தொழிற்சங்கங்கள் அவற்றின் பழமைவாத சுலோகமான “ஒரு நியாயமான நாள் வேலைக்கு ஒரு நியாயமான நாட்கூலி” என்பதைக் கைவிட்டு “கூலி அமைப்பை ஒழித்தல்” என்ற புரட்சிகரமான கோரிக்கையைக் கொண்டு அதனைப் பிரதியீடு செய்ய வேண்டும் என்று முன்மொழிந்தார். [13]

ஆனால் மார்க்சின் அறிவுரை குறைந்த தாக்கத்தைத்தான் ஏற்படுத்தியது, 1870களின் பிற்பகுதிக்குள்ளாகவே தொழிற்சங்கவாதம் என்ற விடயத்தின் மீதான மார்க்ஸ், ஏங்கெல்சின் அவதானிப்புகள் மிகக் கூடுதலான விமர்சனத்தன்மை படைத்தவையாக ஆகியிருந்தன. இப்போது முதலாளித்துவ பொருளியல் நிபுணர்கள் தொழிற்சங்கங்களை நோக்கி பெரும் அனுதாபம் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில் மார்க்சும் ஏங்கெல்சும் அவர்களின் முன்னைய ஆதரவுக் கருத்துக்களை தகுதிப்படுத்த மிகவும் உழைக்க வேண்டியதானது. தங்களது கண்ணோட்டங்களை லூகோ பிரன்டானோ போன்ற —தொழிற்சங்கங்களின் மீதான இவரது ஆர்வம் “கூலி அடிமைகளை திருப்திகொண்ட கூலி-அடிமைகளாக மாற்றுகின்ற” அவரது விருப்பத்தினால் கட்டளையிடப்பட்டதாய் இருந்தது என்று மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் வருணித்தனர்— முதலாளித்துவ சிந்தனையாளர்களின் கண்ணோட்டங்களில் இருந்து பேதப்படுத்திக் காட்டினர். [14]

1879 முடிவதற்குள்ளாக எல்லாம் தொழிற்சங்கவாதம் பற்றிய ஏங்கெல்ஸின் எழுத்துகளில் சந்தேகத்திற்கிடமில்லாமல் வெறுப்பின் தொனியொன்று இருந்ததை காண்பது சாத்தியமாகி இருந்தது. தொழிற்சங்கங்கள் அரசியல் நடவடிக்கையை தடைசெய்யும் அமைப்புரீதியான விதிமுறைகளை அறிமுகப்படுத்தி அதன்மூலமாக “தொழிலாள வர்க்கம் ஒரு வர்க்கமாக எந்தவொரு பொது நடவடிக்கையிலும் பங்குபெறுவதை” முடக்கி விட்டதை அவர் கவனித்தார். தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை ஒரு முட்டுச்சந்திற்கு இட்டுச் சென்று விட்டிருந்ததாக பேர்ன்ஸ்டைனுக்கு அனுப்பிய ஜூன் 17,1879 தேதியிட்ட கடிதத்தில் ஏங்கெல்ஸ் குற்றம்சாட்டினார்:

இந்தக் கணத்தில், கண்டரீதியான அர்த்தத்தில், ஒரு உண்மையான தொழிலாளர் இயக்கம் இங்கே இல்லாமல் இருக்கின்றது என்ற உண்மையை மறைக்க எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படக் கூடாது, ஆகவே இங்கே தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் குறித்த எந்த தகவல்களையும் இப்போதைக்கு நீங்கள் பெறவில்லை என்றால், நீங்கள் நிறையத் தவறவிடுவீர்கள் என்று நான் நம்பவில்லை. [15]

ஆறு வருடங்கள் கழித்து 1885 இங்கிலாந்தை 1845 உடன் ஒப்பிட்டு அவர் எழுதிய ஒரு கட்டுரையில் தொழிற்சங்கங்கள் வகித்த பழமைவாத பாத்திரம் தொடர்பான அவரது இகழ்ச்சியை மூடிமறைக்க அவர் முயலவில்லை. தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு மேல்தட்டினை உருவாக்கிய தொழிற்சங்கங்கள் தமக்கு ஒரு சௌகரியமான நிலையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக முதலாளிகளுடன் நட்புறவுகளை விருத்திசெய்தன. தொழிற்சங்கத்தினர் “இப்போதெல்லாம் பொதுவாக ஒட்டுமொத்த முதலாளி வர்க்கத்திற்கும் குறிப்பாக எந்தவொரு விவேகமான முதலாளிக்கும் கையாளுவதற்கு ரொம்பவும் இனியவர்களாக இருக்கிறார்கள்” என்று சுட்டெரிக்கும் பரிகாசத்துடன் ஏங்கெல்ஸ் எழுதினார். [16]

தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெருந்திரளினரது துயரமும் பாதுகாப்பற்றதுமான வாழ்க்கை நிலை முன்பினும் கீழாக இல்லாத பட்சத்தில், எப்போதும் போல மிகக்கீழ்நிலையில், இருக்கின்றதான நிலையில் தொழிற்சங்கங்கள் அவர்களை ஏறக்குறைய உதாசீனம் செய்து விட்டிருந்தன. இலண்டனின் ஈஸ்ட்என்ட் பகுதியானது வேலையில்லாத சமயத்தில் பட்டினி, வேலையிருந்தால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவமதிப்பு என தேங்கிய துயரம் மற்றும் நிராதரவின் பெருகிச் செல்லும் திரட்டாகிக் கொண்டிருக்கிறது. [17]

1880களின் இறுதியில் மிகவும் சுரண்டப்படுகின்ற தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளின் மத்தியில் ஒரு புதிய மற்றும் போர்க்குணம் மிக்க இயக்கம் அபிவிருத்தி கண்டதையடுத்து ஏங்கெல்சின் நம்பிக்கைகள் தட்டியெழுப்பப்பட்டன. இந்தப் புதிய இயக்கத்தில் எலினர் மார்க்ஸ் உள்ளிட்ட சோசலிஸ்ட்டுகள் செயலூக்கத்துடன் இருந்தனர். ஏங்கெல்ஸ் இப்படியான அபிவிருத்திகளுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தார், பெரும் திருப்தியுடன் பின்வருமாறு குறிப்பிட்டார்:

திறன்தேர்ச்சியற்ற ஆண்களையும், பெண்களையும் கொண்ட இப்படியான தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பிரபுத்துவ தட்டை கொண்ட முன்னைய அமைப்புகளிலிருந்து முழுமையாக வேறுபட்டதாக இருக்கின்றன, இவை அதே பழமைவாத வழிகளில் விழத் தகாதவை ஆகும்... அவை முற்றிலும் வேறுபட்ட நிலைமைகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன, முன்னிலை கொடுக்கும் அனைவருமே சோசலிஸ்டுகளும் மற்றும் சோசலிச கிளர்ச்சியாளர்களுமாய் உள்ளனர். இயக்கத்தின் உண்மையான ஆரம்பத்தை அவர்களிடமே நான் காண்கிறேன். [18]

இந்த “புதிய” சங்கங்கள் பழையனவற்றைப் போலவே, அதே பழமைவாத போக்குகளை வெளிப்படுத்த தொடங்குவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. இந்த அமைப்புகளின் குணநலன், அவற்றின் சமூக நிலையாலோ அல்லது அவற்றில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் குறிப்பிட்ட பிரிவுகளின் அந்தஸ்தினாலோ தீர்மானிக்கப்படுவதில்லை என்ற தொழிற்சங்கங்கள் குறித்த பகுப்பாய்வில் அதிமுக்கியமானதாக நாம் கருதுகின்ற கருத்தாக்கத்தின் ஆரம்பகட்ட நிரூபணமாக இது அமைந்தது. இப்படியான காரணிகள் அதிகபட்சமாக தொழிற்சங்க கொள்கையின் குறிப்பிட்ட இரண்டாந்தர அம்சங்களை மட்டுமே பாதிக்கக்கூடியவை, இவை சில சங்கங்களை சராசரியானவற்றை விட சற்று போர்க்குணம் அதிகமானதாகவோ அல்லது குறைவானதாகவோ வேண்டுமானால் ஆக்க முடியும். ஆயினும், இறுதிப் பகுப்பாய்வில், தொழிற்சங்க வடிவமானது — இதன் கட்டமைப்பு முதலாளித்துவத்தின் சமூக மற்றும் உற்பத்தி உறவுகளில், அத்துடன் தேசிய-அரசு கட்டமைப்பில் என்பதையும் நாம் சேர்த்துக் கொண்டாக வேண்டும், இருந்து பெறப்படுகிறது, அவற்றில் பொதிந்திருக்கிறது— அதன் தொழிலாள வர்க்க அங்கத்துவம் என்ற “உள்ளடக்கத்தின்” நோக்குநிலையை தீர்மானிக்கக்கூடிய தீர்க்கமான செல்வாக்கை செலுத்துகிறது.

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியும் தொழிற்சங்கங்களும்

இக்கண்டத்திலே, குறிப்பாக ஜேர்மனியில், தொழிற்சங்கவாதத்துடனான இந்த தொடக்க அனுபவங்களிலிருந்து தத்துவார்த்த படிப்பினைகள் எடுக்கப்பட்டன. ஜேர்மன் சோசலிஸ்டுகள் ஆங்கிலேய தொழிற்சங்கங்களை சோசலிசத்தின் முன்னோடிகள் என்று அல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவம் செலுத்திய அரசியல் மற்றும் சித்தாந்த ஆதிக்கத்தின் அமைப்புரீதியான வெளிப்பாடாக பார்த்தனர். இந்த விமர்சனரீதியான அணுகுமுறை தத்துவார்த்த உட்பார்வைகளின் அடிப்படையில் இருந்து எழுந்தது என்பது மட்டுமல்ல, மாறாக தொழிலாளர் இயக்கத்தினுள் இருந்த சக்திகளிடையிலான, அதாவது மார்க்சிச அரசியல் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான, ஒரு மிகவும் மாறுபட்ட உறவையும் பிரதிபலித்ததாக இருந்தது. ஜேர்மனியில் ஒரு பரந்த தொழிலாளர் இயக்கத்தின் அபிவிருத்திக்கான உந்துசக்தியை தொழிற்சங்கங்கள் வழங்கவில்லை, மாறாக பிஸ்மார்க்கின் சோசலிச எதிர்ப்பு சட்டங்களின் காலமான 1878க்கும் 1890க்கு இடையிலான காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக தனது அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிப்பதில் வெற்றி கண்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சியினாலேயே அது வழங்கப்பட்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியின் [SPD] முன்முயற்சியினால் தான் பிரதானமாக சோசலிச இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் முகமைகளாக செயல்படத்தக்க “சுதந்திர” தொழிற்சங்கங்கள் என்பதானவை உருவாக்கப்பட்டன.

தொழிற்சங்கங்களின் செல்வாக்கு SPDயின் உதவியுடன் —இங்கிருந்தே அவற்றின் தலைமைக் காரியாளர்களும் அரசியல் ஆழ்நோக்குகளும் பெறப்பட்டன— 1890களில் விரிவடையத் தொடங்கியது. ஆயினும் நெடிய தொழிற்துறை மந்தநிலையின் நீடித்த விளைவுகள் அவற்றின் உறுப்பினர் தொகையை கீழேயே வைத்திருந்தது. 1893 வரைக்குமே கூட சமூக ஜனநாயக வாக்காளர்களுக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான விகிதாசாரமானது 8க்கு 1ஆக இருந்தது. இருப்பினும் கூட தொழிலாள வர்க்கத்தினுள் செல்வாக்கு செலுத்துவதில், தொழிற்சங்கங்கள் கட்சியுடன் போட்டிபோட முனையலாம் என்ற கவலை SPD யினுள் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் இதனை தொழிற்சங்கங்கள் கடுமையாக மறுத்தன. அவற்றின் தலைவரான கார்ல் லெகியன் அவற்றை ''கட்சியின் ஆள் சேர்க்கும் பள்ளிகள்'' என்று 1893ல் கொலோன் [Cologne] கட்சி மாநாட்டில் விவரித்தார்.

எவ்வாறாயினும் 1895ல் தொழிற்துறை மந்தநிலை முடிவுக்கு வந்ததும் ஜேர்மன் தொழிற்சங்கங்கள் வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கின; சக்திகளுக்கிடையிலான உறவுமாற்றங்கள் தொழிற்சங்கங்களுக்கும் கட்சிக்கும் இடையிலான பதட்டங்களை அதிகப்படுத்தின. 1900க்குள்ளாக தொழிற்சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை 600,000 வரை வளர்ச்சியடைந்திருந்தது. 4 வருடங்களுக்கு பின்னர் அந்த எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயர்ந்துவிட்டிருந்தது. SPD வாக்காளர்களுக்கும், தொழிற்சங்க உறுப்பினர்களுக்குமிடையிலான விகிதாசாரம் வீழ்ச்சியடைந்த பொழுது SPD ஆனது தொழிற்சங்கவாதிகளின் வாக்குகளின் மீது சார்ந்திருப்பது கணிசமான அளவு அதிகரித்தது.

பேர்ன்ஸ்டைன் முதல் முறையாக திருத்தல்வாத பதாகையை விரித்த பொழுது, தொழிற்சங்கத் தலைவர்களும் கூட அதற்கு எந்த அரசியல் ஆதரவும் வழங்க தயக்கம் காட்டினர் என்றபோதிலும், தொழிலாளர் இயக்கத்தின் அச்சாணியாக புரட்சிகர அரசியல் கட்சியின் இடத்தை, சீர்திருத்தவாத தொழிற்சங்கங்கள் பிரதியீடு செய்வதான இங்கிலாந்து வகைவரிசையில் ஜேர்மன் சோசலிச இயக்கம் நோக்குநிலைமாற்றியமைக்கப்படுவதற்கே அவரது தத்துவங்கள் இட்டுச் செல்லும் என்பது கட்சி வட்டாரங்களில் பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது.

பேர்ன்ஸ்டைனை எதிர்த்து நிற்கையில், சமூக ஜனநாயகத்தின் பிரதான தத்துவவாதிகள், தொழிற்சங்கங்களை சோசலிச இயக்கத்தின் இன்றியமையாத அரணாகக் காண்பிக்கும் பேர்ன்ஸ்டைனின் முயற்சி தொடர்பாக குறிப்பாக கவனம் செலுத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் உண்மையிலேயே ரோசாலுக்சம்பேர்க் தான் முன்னிலை வகித்தார். இந்த விடயத்தில் அவரது சீர்திருத்தமா அல்லது புரட்சியாமிகப் பிரதான படைப்பு ஆகும். தொழிற்சங்சங்களின் முயற்சிகள் முதலாளித்துவத்தின் சுரண்டும் பொறிமுறைகளுக்கு திறம்பட்ட எதிர்வினையாற்றுகின்றன என்றும், எத்தனை கொஞ்சம் கொஞ்சமாய் என்றாலும் அவை படிப்படியாக சமூகத்தை சோசலிசமயப்படுத்த இட்டுச்செல்வன என்றும் கூறும் பேர்ன்ஸ்டைனின் கூற்றுகளை அதில் அவர் தூள்தூளாக்கினார். இது கொஞ்சமும் உண்மையில்லாதது, தொழிற்சங்கவாதம் வர்க்க சுரண்டலை ஒழிக்க இட்டுச் செல்லவில்லை, மாறாக, முதலாளித்துவத்தின் சுரண்டும் கட்டமைப்பிற்குள்ளாக பாட்டாளி வர்க்கமானது கூலியின் வடிவத்தில் சந்தை அனுமதிக்கக் கூடிய சிறந்த விலையை பெற்றுக் கொள்வதை உறுதி செய்யவே அது முனைந்தது என்பதை ரோசா லுக்சம்பேர்க் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் தொழிலாளர்களின் கூலி அதிகரிப்பை பொறுத்தவரை தொழிற்சங்கங்களின் முயற்சியினால் சாதிக்கக் கூடியதானது சந்தை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முதலாளித்துவ விரிவாக்கத்தின் பொதுவான இயக்கவியலின் வரம்புக்குட்பட்டதாய் இருந்தது. முதலாளித்துவ சமுதாயமானது “தொழிற்சங்களின் வெற்றிகரமான வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு சகாப்தத்தை நோக்கி அல்ல, மாறாக தொழிற்சங்கங்களின் கஷ்டங்கள் அதிகரிக்கும் ஒரு காலத்தை நோக்கி” நகர்ந்து கொண்டிருந்தன [19] என்று அவர் எச்சரித்தார். இவ்வாறாக சங்கங்கள் மூலம் எட்டப்பட்ட தற்காலிக பலாபலன்கள் என்னவாக இருந்தபோதும், அவற்றின் வேலை முதலாளித்துவ அமைப்புமுறை நிர்ணயித்த எல்லைகளினுள் வேரூன்றி இருக்கின்ற வரையில் அவை "சிசிபஸின் (சாபக்கேடான வேலை) உழைப்பில்” தான் ஈடுபட்டுள்ளன என்றார். தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் பற்றிய இத்தகையதொரு உலுக்கியெடுக்கத்தக்க பொருத்தமான மற்றும் முன்னறிவதான மதிப்பீட்டை வழங்கிய இந்த உருவகத்தைப் பயன்படுத்தியமைக்காக தொழிற்சங்கத் தலைவர்கள் லுக்சம்பேர்க்கை ஒருபோதும் மன்னிக்கவில்லை.

முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாள வர்க்கம் சுரண்டப்படுவதை குறைப்பதற்கு மேல், அதுவுமே கூடத் தற்காலிகமாகத் தான், தொழிற்சங்கங்களால் வேறெதுவும் செய்யவியலாது என்பதற்கான காரணங்கள் குறித்து லுக்சம்பேர்க் செய்திருக்கும் ஆய்வுக்கு இந்த சுருக்கமான மேற்கோள்கள் முழு நீதி வழங்கவில்லை. தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் வழிவழியாகவோ அல்லது உள்முகமாகவோ சோசலிசமயமானது எதுவொன்றுமில்லை அல்லது அவற்றின் வேலை சோசலிச நோக்கத்தின் வெற்றிக்கு அத்தியாவசியமாக பங்களிப்பதும் இல்லை என்ற அவரது மறுப்பு, பேர்ன்ஸ்டைன்வாதத்தின் மீதான அவரது விமர்சனத்தில் குறிப்பாகப் பொருத்தமாக அமைந்திருக்கக் கூடிய இன்னொரு அம்சமாகும். தொழிற்சங்கங்கள் சோசலிஸ்டுகளினால் தலைமைகொடுக்கப்படும் வரை, அவை புரட்சிகர இயக்கத்திற்கு முக்கியமான சேவையாற்ற முடியும் என்பதை லுக்சம்பேர்க் மறுக்கவில்லை. தனது விமர்சனத்தின் மூலமாக, அப்படியானதொரு அபிவிருத்திக்காக பணியாற்றுவதற்கே அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். (அது நடக்க சாத்தியமானதாய் இருந்ததா என்பது வேறொரு விடயம், அதைப் பற்றி நாம் பின்னர் பார்ப்போம்.) ஆனால் தொழிற்சங்கவாதம் என்பதனுள் இயல்பாகவே சோசலிச போக்குகள் இருக்கின்றது என்பதான எந்த ஒரு பிரமைக்கும் எதிராக அவர் எச்சரிக்கை செய்தார்.

லுக்சம்சம்பேர்க் எழுதியதாவது: "திட்டவட்டமாக ஆங்கிலேய தொழிற்சங்கங்கள்தான் மெத்தனம் மற்றும் குறுகிய மனப்பான்மையின் செவ்வியல் பிரதிநிதிகளாக இருப்பதுடன், தொழிற்சங்க இயக்கமானது தனக்கும் தன்னளவிலும் முழுக்கவும் சோசலிசமற்றதாக இருக்கின்றது என்ற உண்மைக்கு சாட்சியமாக உள்ளது. உண்மையில் அது குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் சோசலிச நனவின் விரிவாக்கத்திற்கு ஒரு நேரிடையான முட்டுக்கட்டையாக இருக்கமுடியும், அதேபோல எதிர்திசையில் இருந்து பார்த்தாலும் சோசலிச நனவானது தூய்மையான தொழிற்சங்க வெற்றிகளை சாதிப்பதற்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக்க முடியும்.” [20]

தொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் அதிகாரத்துவங்களுக்கும் அடிமைத்தனமாக தங்களை தகவமைத்துக் கொள்பவர்களுக்கும் தொழிலாளர் இயக்கத்தை ஒரு தொழிற்சங்கவாத வடிவத்தில் அல்லாது வேறு எந்த விதமாகவும் பார்க்க முடியாதவர்களுக்கும் ஒரு திகைக்க வைக்கும் மறுப்பாக இந்தப் பத்தி திகழ்கிறது. அது மிகவும் தெளிவாக்குவதைப் போல, தொழிற்சங்கவாதத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையே உயிர்ப்பான மற்றும் உடைக்க முடியாத இணைப்புகள் எதுவும் கிடையாது. அவை அவசியமாக ஒரே பொதுவான இறுதி இலக்கை நோக்கிய இணையான பயணப்பாதைகளில் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக இயல்பிலேயே லுக்சம்பேர்க் கூறியதுபோல் ”அறவே சோசலிசத்தன்மையற்றதான” தொழிற்சங்கவாதமானது சோசலிச நனவின் அபிவிருத்தியினை கீழறுக்கின்றது. மேலும், தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களின் மீது தமது நடவடிக்கைகளுக்கு அடித்தளம் அமைப்பதை அவசியமாகக் கொண்டிருக்கும் சோசலிஸ்டுகளின் அரசியல் கோட்பாடுகள் தொழிற்சங்கங்களின் நடைமுறை நோக்கங்களுக்கு எதிர்திசையிலானவையாக இருக்கின்றன.

இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் சோசலிச இயக்கத்திலிருந்து சுயாதீனமாக சார்ட்டிசத்தின் சிதைவுகளில் இருந்து வளர்ச்சி அடைந்தன. மறுபுறம் ஜேர்மனியிலோ தொழிற்சங்கங்கள் நேரிடையாக சோசலிச இயக்கத்தின் அரவணைப்பின் கீழ் தோன்றின. அதன் தலைவர்கள் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகளில் ஊக்கம் தளராது கல்வியூட்டப்பட்டனர். இருந்தும் கூட, சாராம்சத்தில், ஜேர்மன் தொழிற்சங்கங்கள் இங்கிலாந்தின் தொழிற்சங்கங்களை விட சோசலிசத்திற்கு சிறிதும் அர்ப்பணிப்பு கொண்டவையாய் இருக்கவில்லை. அந்த நூற்றாண்டின் முடிவில் நூறாயிரக்கணக்கான புதிய உறுப்பினர்களின் வருகையினால் மேலும் தன்னம்பிக்கை அடைந்த தொழிற்சங்கங்கள், கட்சி செலுத்துகின்ற அரசியல் செல்வாக்கிற்கும், அதன் அரசியல் குறிக்கோள்களுக்கு தாங்கள் கீழ்ப்படியுமாறு இருப்பதற்குமான தமது அசவுகரியத்தை வெளிப்படுத்தின. இந்த மன உளைச்சல் அரசியல் நடுநிலைமை என்ற ஒரு புதிய மேடையில் அதன் வெளிப்பாட்டினைக் கண்டது. தமது அமைப்புகள் SPD இன் பிரச்சாரங்களுக்கு சிறப்பான விசுவாசம் எதையும் கொண்டிருப்பதற்கான காரணங்கள் எதுவும் அங்கில்லை என தொழிற்சங்கத் தலைவர்களின் ஒரு அதிகரிக்கும் எண்ணிக்கையிலான பிரிவினர் வாதிடத் தொடங்கினர். உண்மையில் SPDயின் ஆளுமை, சோசலிச அரசியலில் ஆர்வம் இல்லாத அல்லது அதற்கு எதிராக இருக்கின்ற தொழிலாளர்கள் மத்தியில் உறுப்பினர்களை வென்றெடுக்கும் சாத்தியத்தை தொழிற்சங்கங்களுக்கு இல்லாது செய்கிறது என்று அவர்கள் வாதிட்டனர். இந்தப் போக்கின் மிக முன்னணி பிரதிநிதிகளில் ஒருவர் ஒட்டோ ஹ்யூஏ (Otto Hué) ஆவார். தொழிற்சங்கங்கள் அரசியல் நடுநிலை என்ற நிலைப்பாட்டினை எடுத்துக் கொண்டால் தான் அவற்றின் உறுப்பினர்களின் "தொழில்ரீதியான நலன்களுக்கு (வர்க்க நலன்களுக்கு அல்ல)” சேவைசெய்ய முடியும் என்று அவர் வலியுறுத்தினார். “தொழிற்சங்கத்தின் நடுநிலைமையான நிலைமைகளின் கீழ் தொழிலாளர்கள் எங்கே அரசியல் ரீதியாக அணிதிரண்டாலும் அது தொழிற்சங்கத் தலைவர்களது அலட்சியத்திற்குரியதாக இருந்தாக வேண்டும்” என்று ஹ்யூஏ எழுதினார்.

தொழிற்சங்கங்களும் “வெகுஜன வேலைநிறுத்தமும்”

1900க்கும் 1905க்கும் இடையில் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் பதட்டம் அதிகரித்தது. SPDயின் மாநாடுகளுக்கான பிரதிநிதிகள் என்ற அவர்களின் தகுதியில் தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்ந்தும் சோசலிச மரபுவழி ஒழுங்கிற்கே வாக்களித்து வந்தனர். ஒரு புரட்சிகர இயக்கம் என்ற வகையில் சோசலிசத்திற்கு அவர்கள் காட்டிய இயல்பான குரோதம், அரசு அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு சமூக ஜனநாயகக் கட்சி கொண்டிருந்த அரசியல் உறுதிப்பாட்டை நேரடியாக சவால் செய்ய தயாராக இருக்கக்கூடியதான புள்ளிக்கு இன்னும் வந்தடைந்திருக்கவில்லை. 1905 இன் சம்பவங்களினால் இது ஜேர்மனியினுள்ளும் மற்றும் அதன் எல்லைகளைக் கடந்தும் மாற்றமடைந்தது.

ரஷ்யா முழுவதும் புரட்சி வெடித்ததானது, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோசலிச பத்திரிகைகளில் வந்த புரட்சிகர போராட்டங்கள் பற்றிய விரிவான செய்திகளை தொழிலாளர்கள் தீவிர ஆர்வத்துடன் படித்து வந்தனர். மேலும், ரஷ்ய நிகழ்வுகளானவை ஜேர்மனி முழுவதுமான கடுமையான வேலைநிறுத்த அலை ஒன்றின் எழுச்சியுடன், குறிப்பாக றூஹர் (Ruhr) சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் தோன்றியவற்றுடன், ஏகசமயத்தில் நடந்தன என்பதுடன் அதற்கான முன்னுதாரணமாகவும் விளங்கின. தொழிலாளர்களின் போர்க்குணம் இருந்தபோதிலும் இந்த வேலைநிறுத்தங்கள் சுரங்க முதலாளிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டன. முதலாளிகளின் விட்டுக் கொடுக்காத போக்கினால் தொழிற்சங்கங்கள் திகைத்துப் போயின, அதற்கு அவற்றிடம் திறம்பட்ட பதிலிறுப்பு இல்லை. வேலை நிறுத்தங்கள் வாபஸ்வாங்கப்பட்டன. பாரம்பரிய தொழிற்சங்க தந்திரோபாயங்களின் திறனில் தொழிலாளர்களுக்கு இருந்த நம்பிக்கையை உலுக்குவதாக இது இருந்தது.

இந்தப் புதிய நிலைமையில் காவுட்ஸ்கியின் ஆதரவுடன் லுக்சம்பேர்க், ரஷ்யாவில் ஏற்பட்ட நிகழ்வுகள் ஐரோப்பிய முழுமைக்கான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் அவை ஜேர்மன் தொழிலாளர்களுக்கு அரசியல் வேலைநிறுத்தம் என்ற வெகுஜனப் போராட்டத்தின் ஒரு புதிய வடிவத்தின் சாத்தியத்திறனை எடுத்துக்காட்டியிருந்தன என்றும் வாதிட்டார். அரசியல் வெகுஜன வேலைநிறுத்தம் ஒன்றின் சிந்தனையானது, தொழிலாள வர்க்கத்தினுள் பரந்தளவிலான ஆதரவினைக் கண்டது. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் லுக்சம்பேர்க்கின் வாதங்களின் பிரதிவிளைவுகள் பற்றி பீதி கொண்டனர். தொழிலாளர்கள் லுக்சம்பேர்க்கின் தத்துவங்களின்படி செயற்படுவார்களாயின், நிர்வாகிகள் தம்முடைய அக்கறைக்குரியவையல்ல என்று கருதியிருந்த "புரட்சிகர சாகசங்களில்" சிக்கிக் கொள்கின்ற நிலையில் தொழிற்சங்கங்கள் தம்மைக் காண நேரும். வெகுஜன வேலை நிறுத்தங்கள் சங்கங்களுக்கு மிகப் பெருமளவிலான பணத்தை செலவிடச் செய்யும், அந்தத் தலைவர்கள் மிகப் பெருமையாகக் கருதும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணக் கையிருப்பைக் காலிசெய்து விடும்.

இப்படியான ஒரு அழிவைத் தடுப்பதற்கு சங்கத் தலைவர்கள் லுக்சம்பேர்க் மற்றும் இதர SPD தீவிரப் போக்கினருக்கு எதிராய் ஒரு முன்கூட்டிய-தாக்குதல் தொடுக்க தீர்மானித்தனர். 1905 மே மாதத்தில் கொலோனில் நடந்த தொழிற்சங்க மாநாட்டில் வெகுஜன வேலைநிறுத்தம் பற்றிய தொழிற்சங்கங்களின் அணுகுமுறையை நிர்ணயம் செய்கின்ற ஒரு தீர்மானத்திற்கு தயார்படுத்துவதற்காக ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் பேச்சாளரான தியோடோர் பூமல்பேர்க் பிரகடனம் செய்ததாவது:

"நமது அமைப்புகளை மேலும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்றால் தொழிலாளர் இயக்கத்தில் நமக்கு அமைதி தேவை. வெகுஜன வேலைநிறுத்தம் பற்றிய விவாதம் மறைந்து, எதிர்கால [பிரச்சனைகளுக்கான] தீர்வுகள் பொருத்தமான தருணம் வரும் வரையில் திறந்த நிலையில் விடப்படுமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்." [21]

SPDயின் இடது கன்னை மீதான ஒரு யுத்தப் பிரகடனத்திற்கு ஒப்பான வகையில் தொழிற்சங்க மாநாடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொழிற்சங்கங்களினுள் ஒரு அரசியல் வெகுஜன வேலைநிறுத்தம் தொடர்பான விவாதம் அனுமதிக்க முடியாதது என்று அத்தீர்மானம் பிரகடனம் செய்தது. ''அப்படியான கருத்துக்களின் வருகையினாலும் பிரச்சாரத்தினாலும் தொழிலாளர் அமைப்புக்களைக் கட்டும் தமது சிறிய அன்றாட பணிகளில் இருந்து திசை திருப்பப்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ள” அது தொழிலாளர்களை எச்சரித்தது. [22]

கட்சிக்கு எதிரான தொழிற்சங்கத் தலைவர்களின் கிளர்ச்சி, SPD ஐ உலுக்கிவிட்டது. தொழிற்சங்கங்கள் கட்சியிலிருந்து எத்தனை ஆழமாய் அந்நியப்பட்டு விட்டிருந்தன என்பதை அந்த காங்கிரஸ் வெளிப்படுத்தியிருந்ததாக காவுட்ஸ்கி அறிவித்தார், அத்துடன் “மனித வரலாறு அனைத்திலும் மிகவும் புரட்சிகரமானதாய் இருந்த” ஒரு ஆண்டில் “அமைதிக்கும் ஓசையின்மைக்குமான தொழிற்சங்கங்களின் விருப்பம்” பிரகடனம் செய்யப்பட்டிருப்பது தனக்கு அபத்தமாய் பட்டதாக ஒரு முரண்நகை உணர்வுடன் குறிப்பிட்டார். "வெகுஜனங்களின் தார்மீகப் பண்புநலனை" விட அமைப்புகளின் வங்கிக் கணக்குகளின் எதிர்காலத்தில்தான் தொழிற்சங்க தலைவர்கள் அதிக அக்கறை கொண்டிருந்தனர் என்பது காவுட்ஸ்கிக்கு தெளிவாகப் புலப்பட்டது.

தொழிற்சங்க தலைவர்களை பொறுத்தவரையில் SPDயின் இடது பிரிவின் மீதான அவர்களது வெறுப்பு நோய்போன்றதொரு பரிமாணங்களை எடுத்தது. குறிப்பாக ரோசாலுக்சம்பேர்க் இந்தக் கடுமையான கண்டனங்களுக்கு ஆண்டுமுழுமைக்குமான இலக்காக ஆனார். சுரங்கத் தொழிலாளர்களின் பத்திரிகையின் ஆசிரியரான ஒட்டோ ஹ்யூஏ, இந்தளவுக்கு அளவுகடந்த புரட்சிகர ஆற்றல் கொண்டவர்கள் “தங்களின் கோடை வாசஸ்தலங்களில் இருந்த வண்ணம் பொது வேலைநிறுத்தம் பற்றிய விவாதத்தை பிரச்சாரம் செய்வதற்கு பதிலாக” ரஷ்யாவிற்கு செல்லட்டும் என்று வலியுறுத்தினார்.[23] லுக்சம்பேர்க் அவரது புரட்சிகரமான நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு போலந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோதிலும், அவருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகப்படுத்தப்பட்டன. அந்தச் சமயத்தில் இன்னும் நண்பராகவும் சகாவாவும் இருந்த காவுட்ஸ்கி, லுக்சம்பேர்க்கு எதிரான விஷமத்தனமான தனிப்பட்ட தாக்குதல்களினால் வருத்தம் அடைந்து, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஒரு தலைவரை இடைவிடாது துன்புறுத்துவதைக் கண்டனம் செய்தார். கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான உறவுகளுக்கு அபாயமுண்டாக்கியது லுக்சம்பேர்க் அல்ல, மாறாக தொழிற்சங்க நிர்வாகிகள் தான் என்று அவர் எழுதினார். இவர்களே "மணிக்கு ஐந்து பென்னிகளுக்கும் அதிகமாய் என்பதற்கு மேலான எந்த ஒரு உயர்ந்த இலக்கையும் தனக்கு நிர்ணயித்துக் கொள்கின்ற எந்த தொழிலாளர் இயக்கத்திற்கும் எதிராக, குறுகிய மனத்துடனான வஞ்சத்தைக் கொண்டிருந்தனர்"[24] என்று அவர் எழுதினார்.

குறிப்பிட்ட காலத்திற்கு சமூக ஜனநாயகக் கட்சித் தலைமை தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு எதிராக திருப்பிப் போராடியது. ஆனால் அதனை சாத்தியமான அளவு முன்ஜாக்கிரதையுடன் செய்தது. ஜேனாவில் 1905 செப்டம்பரில் நடந்த கட்சி மாநாட்டில், ஒகுஸ்ட் பேபல், அரசியல் வெகுஜன வேலைநிறுத்தத்தின் செல்தகைமையை பகுதியாக, தற்காப்பு ஆயுதமாக மட்டுமே, ஒப்புக் கொள்கிறதான ஒரு கவனமாய் எழுதப்பட்ட தீர்மானத்தை அறிமுகம் செய்தார். பதிலுக்கு தொழிற்சங்கங்களும் பேபலின் சூத்திரத்திற்கு எதிர்ப்பின்றி இணங்கினார்கள், ஆனால் சிறிதுகாலம் தான். 1906 செப்டம்பரில் மான்ஹைமில் நடந்த கட்சி மாநாட்டில் தொழிற்சங்க தலைவர்கள், தொழிற்சங்கங்களுக்கும் கட்சிக்கும் இடையில் ''சமத்துவம்” என்ற கோட்பாட்டை நிலைநாட்டும் ஓரு தீர்மானத்திற்கான பத்தியை SPDயிடம் கோரிப் பெற்றுக்கொண்டனர். இதன் அர்த்தம் என்னவென்றால், தொழிற்சங்கங்களுக்கு நேரடி அக்கறை உடைய பிரச்சனைகளை தொடும் அனைத்து விடயங்களிலும், கட்சியானது அவற்றிற்கு ஏற்புடைய ஒரு நிலைப்பாட்டினை வகுக்கத் தள்ளப்பட்டது. விடாப்பிடியான ஆட்சேபனைகள் இருந்தால், கட்சித் தலைவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஒத்துழைத்து அதிகாரத்துவ முறையில் விவாதத்தை முடித்துவைத்து தீர்மானத்தை வலுக்கட்டாயமாக நிறைவேற்றினார்கள்.

இந்த கட்டத்தில் இருந்து, SPD ஆனது உண்மையில் தொழிற்சங்களின் பொதுவான ஆணைக்குழுவினால் சக்திமிக்க வகையில் ஆளுகை செய்யப்பட்டது. கட்சியுடனான தொழிற்சங்கங்களின் உறவு, லுக்சம்பேர்க் குறிப்பிட்டதைப் போல, “நமக்கிடையில் பிரச்சனைகள் தோன்றும்போதெல்லாம் நாம் பின்வரும் நடைமுறையினை பயன்படுத்துவோம். நாம் உடன்படும்போது நீ தீர்மானிப்பாய். நாம் முரண்படும்போது நான் தீர்மானிப்பேன்” என்று கணவனிடம் சொன்ன விவசாயியின் அகங்காரம் பிடித்த மனைவியின் பேச்சுப் போல் இருந்தது.

லுக்சம்பேர்க் உடனும் SPD க்குள் உள்ள மற்ற புரட்சிகர சக்திகளுடனும் மோதல் எழும்போதெல்லாம், சராசரி தொழிலாளிக்கு என்ன வேண்டும் என்பது, புரட்சிகர தத்துவவியலாளர்களை விடவும் தங்களுக்கு நன்றாய் தெரியும் என்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறிக் கொண்டனர். அதாவது தொழிற்சங்கவாதிகளின்படி, லுக்சம்பேர்க் மற்றும் அவர் வகைப்பட்ட புரட்சியாளர்கள் தங்களது அருவங்கள் மற்றும் கற்பனாவாதக் காட்சிகளையே சிந்தித்துக் கொண்டு இருப்பதால் தொழிலாளர்கள் சுரங்கங்களில் மற்றும் ஆலைத்தளங்களில் எதிர் கொண்ட பிரச்சனைகளுக்கு உண்மையில் எந்த நடைமுறைரீதியான பதில்களையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. வருங்காலத்திலான ஒரு புரட்சிகர அரசியல் கொந்தளிப்பு மற்றும் அதிலிருந்து தோன்றும் சோசலிச கற்பனா உலகம் பற்றி கனவுகாண்பது தத்துவவாதிகளுக்கு சிறந்தது மற்றும் நல்லது. ஆனால் இங்கே இப்போது தொழிலாளர்கள் அவர்களது வாரக் கூலியில் ஒரு சில அதிகமான மார்க்குகளை (ஜேர்மன் நாணயம்) பெறுவது பற்றித்தான் மிக அதிகமான அக்கறை கொண்டுள்ளனர்.

வெகுஜன வேலை நிறுத்தம் பற்றிய விவாதம் முதலில் வெடித்த வருடங்களின்போது தொழிலாளர்களின் கணிசமான பகுதியினரின் பார்வையை அநேகமாக தொழிற்சங்க நிர்வாகிகளின் வாதங்கள் பிரதிபலித்தது என்பது அநேகமாய் உண்மைதான். 1905 இல் அல்லது 1906ல் இந்த விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்குமாயின் அதிகமான தொழிலாளர்கள் லுக்சம்பேர்க்கை விட லேகியனின் நிலைப்பாட்டிற்கு அவர்களது வாக்குகளை அளித்திருப்பார்கள் என்பதும் கூட சாத்தியமானதாகும். எவ்வாறாயினும், மார்க்சிஸ்டுகளுக்கும் சீர்த்திருத்தவாத தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான மோதலின் விடயத்தில் தொழிலாளர்களின் மனோபாவம் குறித்துப் பரிசீலிக்கையில் பின்வருவதை மனதில் கொள்வது முக்கியமானதாகும். முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறை இவற்றின் மீது தொழிற்சங்கங்கள் உயிர்ப்புடன் சார்ந்து இருப்பதிலிருந்து பிறக்கும் கொள்கைகளுக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் அமைப்புரீதியாகவும், சட்டவிதிமுறை ரீதியாகவும் "உறுதிப்பாடு" கொண்டவர்களாக இருக்கின்றனர். புரட்சிகரமான ஒரு சமூக சக்தியாக தொழிலாள வர்க்கம் இந்த படிப்படியான சீர்த்திருத்தவாத தகவமைப்பு வேலைத்திட்டத்திற்கு அதேபோன்ற உறுதிப்பாடு எதுவும் கொண்டதில்லை.

முதலாளித்துவ அமைப்பின் கீழமைந்த முரண்பாடுகளின் வளர்ச்சியானது ஜேர்மனியில் சமூக சமரசத்தின் இழையை இற்றுப்போகச் செய்தது. வர்க்கப் பதட்டங்கள் அதிகரிக்கையில் தொழிலாளர்கள் முதலாளிகளையும் அரசையும் நோக்கி ஒரு மேலும் மூர்க்கமான மற்றும் விரோதமான அணுகுமுறையை கைக்கொண்டனர். 1910-11க்குள்ளாக லுக்சம்பேர்க்கின் வாதங்கள் தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட பிரிவினர் மத்தியில் அதிர்ந்து முழங்கத் தொடங்கியதன் தெளிவான அறிகுறிகள் இருந்தன. குறிப்பாக முதலாளிகளின் கடுமையான எதிர்ப்புக்கு முகம்கொடுத்து, 1912-1913 காலத்தின் வேலைநிறுத்தங்கள் தோல்வியடைந்ததன் பின்னர், உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் மீதான தொழிலாளர்களின் அதிருப்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.

1914 ஆகஸ்டில் உலகப் போரின் வெடிப்பானது தீவிரப்படல் நிகழ்ச்சிப்போக்கை தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால் 1915-16க்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் சமூக அதிருப்தியானது யுத்தத்தினால் மேலும் அதிகமடைந்து உத்தியோகபூர்வ சங்கங்களினால் எழுப்பப்பட்டிருந்த தடைகளுக்கும் உயரே எழும்பி அதனைக் கடந்து சென்றது. அரசியல் வெகுஜன வேலைநிறுத்தத்திற்கு எதிரான பழைய அதிகாரத்துவ வாதங்கள் எல்லாம் இறுதியில் அவற்றிற்கான தீர்க்கமான பதிலை 1918 அக்டோபர்-நவம்பரில் ஜேர்மன் புரட்சியின் வெடிப்பில் பெற்றன. வெகுஜன இயக்கத்தின் புரட்சிகர தன்மையானது, லுக்சம்பேர்க்கினால் தத்துவார்த்தரீதியாக முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது போலவும் நடைமுறைரீதியாக ரஷ்ய புரட்சியில் கட்டியம் கூறப்பட்டது போலவும், உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களுக்கு எதிராய் எழுந்திருந்த புதிய இயக்க வடிவங்களில் —சாமானியத் தொழிலாளர் குழுக்கள் மற்றும் விஷேடமாக தொழிலாளர் கவுன்சில்கள்— தன்னை வெளிப்படுத்தியது.

ஜேர்மன் மற்றும் ஆங்கிலேயத் தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்கள் தொழிற்சங்க வாதத்திற்கான மாபெரும் வரலாற்று சோதனையை குறித்தது. நமக்குப் போதுமான நேரம் இருந்திருக்குமாயின், சோசலிசத்திற்கும் தொழிற்சங்கவாதத்திற்கும் இடையிலான அடிப்படையான மோதல் பற்றிய நமது ஆய்விற்கு, மேலும் பல நாடுகளிலிருந்தும் இந்த நூற்றாண்டின் அனைத்து பத்தாண்டு காலங்கள் பரவி இன்றைய நமது சொந்தக் காலம் வரையிலான எண்ணற்ற உதாரணங்களைச் சேர்த்து, இன்னும் வளமூட்ட முடியும், வலுக்கூட்ட முடியும்.

சோசலிச நனவின் அவசியம்

இந்தச் சொற்பொழிவின் குறிக்கோள் தொழிற்சங்கங்களின் துரோகத்தைப் பற்றி சாத்தியமான அளவு அநேக உதாரணங்களை வழங்குவது அல்ல. மாறாக, சோசலிச நனவின் அவசியத்தையும் தொழிலாள வர்க்கத்திற்குள் அதனை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டத்தின் அவசியத்தையும் முக்கியப்படுத்துவதே ஆகும். இங்கேதான் புரட்சிகர மார்க்சிச கட்சியின் முக்கியத்துவம் தங்கியிருக்கின்றது. தொழிற்சங்க கூட்டாட்சிவாத தன்மையுடைய தன்னியல்பான போர்க்குணத்தின் ஒரு மறுமலர்ச்சி ஏற்படினும் கூட —அப்படியான ஒரு அபிவிருத்தியும் கூட பழைய அதிகாரத்துவ அமைப்புகளுக்கு எதிராய் வெடிப்பான சாமானிய உறுப்பினர்களின் கிளர்ச்சிகள் இன்றி சிந்திக்க முடியாததாகும்— அப்படியான ஒரு நம்பிக்கையளிக்க கூடிய இயக்கமானது புரட்சிகரமான வழிகளில் அபிவிருத்தி காண்பதென்பது, தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச நனவை கொண்டு வருவதற்காகப் போராடும் மார்க்சிச கட்சியின் சுயாதீனமான வேலையை சார்ந்ததாகவே இருக்கும்.

தொழிற்சங்கங்களின் சவாலற்ற அதிகாரத்திற்கு வலியுறுத்தும் அனைவரும், தொழிலாள வர்க்கத்தினுள் மார்க்சிசத்திற்கான போராட்டத்தை எதிர்க்கின்றனர். உதாரணமாக, ஒரு தொழிலாள வர்க்கத்தினுள் தன்னியல்பாக எழும் போராட்டங்களினுள் ‘நனவை உயர்த்துவது’, ‘அரசியல்ரீதியாக தலையீடு செய்வது’ மற்றும் ‘அரசியல்மயப்படுத்துவது’ போன்றவற்றையே தங்களின் இலட்சியமாக விடாப்பிடியாகக் கருதிக் கொண்டு செயல்படும் [அனைத்துலகக் குழுவைச் சேர்ந்த] மார்க்சிஸ்டுகளை கிளிவ் சுலோட்டர் [25] கண்டனம் செய்கின்றார். [26]

இந்த கூற்றானது, சுலோட்டர் மார்க்சிசத்தை மறுப்பதற்கும், நடுத்தர வர்க்க அராஜகவாதத்தை அரவணைப்பதற்கும் ஆதாரமளிக்கிறது. மிகவும் பயங்கரமான வரலாற்றுத் துன்பியல்களை கண்ட ஒரு நூற்றாண்டின் முடிவை நாம் இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டின் பல புரட்சிகரமான போராட்டங்களின் தோல்விகள் மற்றும் காட்டிக் கொடுப்புகளுக்காக இரத்தத்தினால் கொடுக்கப்பட்டிருக்கும் விலை கணக்கிட முடியாதது. காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சிகளின் அரசியல் பின்விளைவுகளினால் ஏற்பட்ட பலிகளின் எண்ணிக்கை நூறுமில்லியன் கணக்கிலானவை. இந்த தசாப்தத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் தொழிலாள வர்க்கம் நோக்குநிலை பிறழ்த்தப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளை கண்டிருக்கிறோம். இத்தனைக்கு பின்னரும் கூட, இந்த உலகளவிலான அரசியல் நோக்குநிலைபிறழ்தலுக்கு மத்தியிலும், சோசலிச விஞ்ஞானத்தின் அடிப்படையில், இந்நோக்குநிலைபிறழ்வை வெல்ல முயற்சிப்போரை சுலோட்டர் கண்டனம் செய்கிறார்.

தொழிலாள வர்க்கத்தின் தன்னெழுச்சியை, அதாவது நிலவுகின்ற அதன் நனவின் மட்டத்தையும் கொடுக்கப்பட்டுள்ள அமைப்பு வடிவங்களையும், போற்றுவதால் அதனுடைய நலன்களுக்கு எந்த பிரயோசனமும் இருக்கப்போவதில்லை. சுலோட்டரையும் அவரைப்போன்ற முன்னாள் மார்க்சிஸ்டுகளையும் பொறுத்தவரை தன்னெழுச்சிக்கான அவர்களுடைய இந்த நற்சான்றிதழ்கள் எல்லாம் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான அவர்களது ஒத்துழைப்பை மூடிமறைப்பதற்கான ஒரு மறைப்பாக மட்டுமே சேவை செய்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் எதிர்காலமானது, எமது அரசியல் தலையீடுகளின் பலத்தையும் அதன் நனவை உயர்த்துவதற்கான எங்களது முயற்சிகளின் வெற்றியையும் சார்ந்ததாகும் என்ற எமது வலியுறுத்தலின் பொருட்டு எங்களுக்கு எந்த வருத்தங்களும் இல்லை.

நாங்கள் விஞ்ஞான சோசலிசத்தின் மாபெரும் ஸ்தாபகர்கள் மற்றும் பிரதிநிதிகளினால் போடப்பட்ட அத்திவாரங்களின் மீது நிற்கின்றோம். மார்க்சிச இயக்கத்தின் ஆரம்ப நாட்கள் தொடங்கி அதன் இருப்புக்கான வரலாற்று நியாயங்களைக் கொண்டதாக இருக்கும் அடிப்படையான கோட்பாடுகளை மறுதலிக்கின்ற சுலோட்டரின் கூற்றை நாங்கள் நிராகரிக்கின்றோம். பாட்டாளி வர்க்கம்தான் சோசலிச செயற்திட்டத்தின் செயலூக்கமுடைய வரலாற்றுக் குடிமகன். ஆனால் சோசலிசம் தொழிலாள வர்க்கத்திடமிருந்து நேரடியாக எழவில்லை மற்றும் எழவும் முடியாது. அதற்கென்று ஒரு சொந்த புத்திஜீவித வரலாறு உள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமைகள் குறித்த தனது கருத்தாக்கம், அந்த வர்க்கத்தின் அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தொழிலாளர்களது பரந்த பெரும்பான்மையின் பொதுவான “பொதுக்கருத்தாக” இருக்கக்கூடிய எதற்கும் இணங்கியது என்று மார்க்ஸ் ஒருபோதும் கூறியதில்லை. சாராசரி தொழிலாளி சொந்தமாக என்ன சிந்திக்கக் கூடும் என்பதை, வெறுமனே மறுஉற்பத்தி செய்கின்ற யோசனைகளை சூத்திரப்படுத்தவே மார்க்ஸ் அவரது முழுவாழ்வையும் அர்ப்பணித்தார் என்ற தொனியில் பேசுவதே அபத்தமானதாகும்.

சோசலிச நனவானது வர்க்கப் போராட்டத்தின் தன்னியல்பான அபிவிருத்தியினால் உருவாக்கப்படுமாயின் இந்த சர்வதேசப் பள்ளியை ஏற்பாடு செய்வதற்கு எந்தக் காரணமும் இருந்திருக்க முடியாது. தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் அபிவிருத்தியினால் அதற்குமுன் வைக்கப்பட்டுள்ள பணிகளின் மட்டத்திற்கு, தனது தற்போதுள்ள வெகுஜன அமைப்புகளைக் கொண்டும், தற்போது நிலவும் அரசியல் மற்றும் வரலாற்று நனவின் மட்டத்தைக் கொண்டும் தானாகவே எழுந்துவிட முடியுமாயின் அங்கே வரலாறு, மெய்யியல், அரசியல் பொருளாதாரம், புரட்சிகர மூலோபாயம் மற்றும் கலாச்சாரம் பற்றிய சொற்பொழிவுகளுக்கான அவசியம் என்னதான் இருக்க முடியும்?

எத்தகையதொரு அரசியல் பின்புலத்தின் மத்தியில் இந்தப் பள்ளி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். நாம் இங்கு சந்தித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரங்கள் கொந்தளிப்புக்குள் சிக்கி இருக்கின்றன. ஏறக்குறைய இரவோடு இரவாக நூறுமில்லியன் கணக்கான மக்களின் இருப்பு அபாயத்தில் நிற்கிறது. இந்தோனேசியாவில் நாணயத்தின் மதிப்பு நேற்றைக்கு முந்திய நாளில் 22% வீழ்ச்சி கண்டது. ஆறு மாத காலத்தில் இந்தோனேசிய ரூபாய் அதன் மதிப்பில் 80 சதவீதத்தை இழந்திருக்கிறது. ஒரு மிருகத்தனமான சிக்கன நடவடிக்கை ஆட்சியை சர்வதேச நாணய நிதியம் கோருகிறது, இப்படியான நிலைமைகளின் கீழ் பாரிய சமூகப் போராட்டங்களின் வெடிப்பு தவிர்க்க முடியாததாகும்.

எவ்வாறாயினும் இப்படியான போராட்டங்களின் முடிவு, இந்தோனேசிய தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வரலாற்றின் துயரமான படிப்பினைகளை —அது இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் இன்னுமொரு பயங்கரமான அத்தியாயத்தை கொண்டதாக இருக்கின்றது— உள்ளீர்த்துக்கொள்வதில் தங்கியிருக்கவில்லையா? 1965-1966 நிகழ்வுகள் பற்றி, அதாவது சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவிற்கு வெளியே பத்து இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே பெரிய கம்யூனிஸ்ட் கட்சியானது, சுகார்ட்டோவின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னால் சக்தியற்றதாக ஆனது எப்படி என்பதை, இந்தோனேசிய தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் அமர்ந்து மீளாய்வு செய்யவேண்டியது அவசியமில்லையா? அந்த எதிர்ப் புரட்சியில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டார்கள். சுமத்ரா மற்றும் பாலி நதிகள் கொலைசெய்யப்பட்ட பிணங்களினால் ஓட்டம் தடைப்பட்டன. சுகார்ட்டோவின் ஆட்சிக்கவிழ்ப்பின் பின் கைது செய்யப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை விதிப்பது 1990கள் வரையும் கூட தொடர்ந்தது. ஆனால் எத்தனை கேள்விகளும் பிரச்சனைகளும் பதிலளிக்கப்படாமலும் தெளிவுப்படுத்தப்படாமலும் இருக்கின்றன! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தையும் நான் சேர்த்துக் கொள்ளலாம், உடந்தையுடன் இந்தோனேசிய முதலாளி வர்க்கம் இழைத்த குற்றங்களுக்கு இந்தோனேசிய தொழிலாளர்கள் நடத்த வேண்டியிருக்கும் வரலாற்றுப் பழிவாங்கலுக்கான அடிப்படையை இந்த காலகட்டத்தின் மூலோபாய படிப்பினைகள் உள்ளடக்கியிருக்கின்றன.

இங்கேயான சிக்கல், இந்தோனேசிய பிரச்சினை அல்ல, மாறாக ஒரு உலக வரலாற்றுப் பணி பற்றியதாகும். இவ்வாறாக இந்த வகுப்புகளை தொடங்கிய சமயத்தில் போலவே, 21ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் எதிர்காலமானது 20ம் நூற்றாண்டின் மூலோபாய வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளை அது கிரகித்துக் கொள்வதில் தான் தங்கியிருக்கின்றது என்பதை வலியுறுத்திக்கூறி நாம் முடிக்கின்றோம். உளைச்சலான இந்த நூற்றாண்டை ஆய்வுசெய்ததன் முடிவில் நாங்கள் வந்தடைந்திருக்கக் கூடிய பிரதான முடிவை ஒருசில வார்த்தைகளில் கூறுவதற்கு நான் நிர்ப்பந்திக்கப்படுவதாக இருந்தால், நான் சொல்லக் கூடியது இதுதான்: மனிதகுலத்தின் தலைவிதியானது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக சோசலிச நனவு மற்றும் கலாச்சாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டத்துடன் தப்பிக்கவியலாதவாறு பின்னிப்பிணைந்திருக்கிறது. இந்தப் போராட்டம் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் தனது அரசியல் வெளிப்பாட்டைக் காண்கிறது.

1. Lecture delivered on january 10, 1998, at the International School on Marxism and the Fundamental Problems of the Twentieth Century, held in Sydney Australia.

2.Peter Taaffe, “Trade Unions in the Epoch of Neo-Liberalism" Socialism Today.

3.Ibid.

4. Ibid.

5 Workers International Press, Number 1, February 1997, p. 21.

6 Karl Marx, Capital, Volume 1 (New York: International Publishers, 1967), p. 76.

7. quoted in Theodore Rothstein, From Chartism to Labourísm (London: Lawrence and Wishart, 1983), pp. 183-184.

8. Ibid., p. 195.

9. Ibid., p. 197.

10. Ibid., p. 273.

11. Karl Marx and Frederick Engels, Callected Works, Volume 20 (New York: International Publishers, 1985), p. 191.

12 1bid.,p. 192.

13. Ibid., p. 149.

14. Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 27 (New York: International Publishers, 1992), p. 98.

15. Karl Marx and Frederick Engels: Callected Works, Volume 45 (Moscow: Progress Publishers, 991), P. 361.

16 Ibid., Volume 26 (Moscow: Progress Publishers, 1990), p. 299.

17 Ibid.

18 Quoted in Hal Draper, Karl Marx's Theory of Revolution, Volume 2: “The Politics of Social Classes” (New York: Monthly Review Press, 1978), p. 111.

19 Rosa Luxemburg, Reform ar Revolution (New York: Pathfinder Press, 1976), p. 36.

20. "Die englische Brille,” in Rosa Luxemburg Gesammelte werke, Volume 1/ 1 (Berlin: Dietz Verlag, 1990), p. 481, (translation by D. North).

21. Carl E. Schorske, German Serial Democracy: 190S—l917; the Development of the Great Schism (Cambridge, MA: Harvard University Press, 1983), pp. 39-40.

22 lbid., p. 40.

23 Ibid., p.41.

24 Quoted in Richard B. Day and Daniel Guido, ed. and trans, witnesses to permanent Revolution (Leiden, The Netherlands: Brill Academic Publishers, 2009), p.45.

25. Cliff Slaughter is a former leader of the British Workers Revolutionary Party Who broke politically with the International Committee of the Fourth International in 1986.

26. Clifir Slaughter, “Review of Istvan Mezsaros’ ‘Beyond Capital,” Workers International Press, Number 3, (London, June 1997).

Loading