1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆகஸ்ட் 2007இல் மிச்சிகன், அன் ஆர்பரில் சோசலிச சமத்துவக் கட்சியின் கோடை பயிலகத்தில் அளிக்கப்பட்ட உரை

1925-1927 இரண்டாம் சீனப் புரட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் 20ம் நூற்றாண்டின் மிக முக்கிய அரசியல் வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்த தோல்வியுற்ற புரட்சி பல்லாயிரக்கணக்கான கம்யூனிச தொழிலாளர்களின் இறப்பிலும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஓர் பாரிய இயக்கமான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒட்டுமொத்த அழிவோடும் முடிவுற்றது. 1925-27இன் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளாமல் நவீன சீன வரலாற்றின் அடிப்படை பிரச்சினைகளை, குறிப்பாக 1949இல் ஸ்தாபிக்கப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மையை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது.

1930இல் ட்ரொட்ஸ்கி பின்வரும் முறையீட்டை வெளியிட்டார்: "சீனப் புரட்சியைப் பற்றிய ஆய்வு, ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டுக்கும் மற்றும் ஒவ்வொரு முன்னேறிய தொழிலாளிக்கும் மிக முக்கியமானதும், உடனடி தேவையானதுமாக உள்ளது. சீனப் புரட்சியின் அடிப்படை நிகழ்வுகளில் இருந்த பாட்டாளி வர்க்க முன்னணிப் படையை, உந்துசக்திகளை மற்றும் மூலோபாய வழிவகைகளை ஆராய்ந்து அறியாமல் அதிகாரத்திற்கான எந்தவொரு நாட்டின் தொழிலாள வர்க்கத்தினுடைய போராட்டத்தையும் தீவிரமாக ஆராய முடியாது. இரவைத் தெரிந்துகொள்ளாமல் பகலைப் புரிந்துகொள்வது சாத்தியமல்ல; குளிரை அனுபவிக்காமல் வெயிலைப் புரிந்துகொள்வதென்பது சாத்தியமில்லை. அதேபோல தான், சீனப் பேரழிவு குறித்த ஓர் ஆய்வில்லாமல் அக்டோபர் எழுச்சி முறைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதும் சாத்தியமில்லை.” (Leon Trotsky on China, Monad Press, New York, 1978, p. 475).

சீனப் புரட்சியின் முன்னோக்கு, ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் இதயத்தானத்தில் இருந்தது. இப்போராட்டத்தில் அவருடைய நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு ஒரு மகத்தான சோதனைக்கு—இரண்டாம் தடவையாக உட்படுத்தப்பட்டது. சோவியத் அதிகாரத்துவ இயந்திரத்தின் உதவியோடு ஸ்ராலின், 1917க்கு பின்னர், மிகவும் உறுதியான புரட்சிகர சந்தர்ப்பங்களில் ஒன்றைக் காட்டிக்கொடுக்க இட்டுச் செல்வதில் வெற்றி பெற்றார். சீனத் தோல்வி இடது எதிர்ப்பிற்கு ஒரு தீர்க்கமான அடியாக இருந்தது. 1927இன் முடிவில், ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் (Communist Party of the Soviet Union - CPSU), பின்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

இந்த உரை, சோவியத்திற்கு-பிந்தைய காலத்திய தவறான பார்வைக்கு முற்றிலும் எதிராக புரட்சிகரத் தலைமையின் முக்கிய பாத்திரத்தை உயர்த்திக் காட்டும். அந்த போக்கின் இரண்டு உறுப்பினர்களான பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் இயன் தாட்சர் (Ian Thatcher) மற்றும் ஜெப்ரி ஸ்வைனால் (Geoffrey Swain) முன்னெடுக்கப்பட்ட வழிமுறைகளும் வாதங்களும், ஏற்கனவே முற்றிலுமாக அம்பலப்படுத்தப்பட்டு, டேவிட் நோர்த்தின் அவருடைய சமீபத்திய நூலான Leon Trotsky & the Post-Soviet School of Historical Falsification இல்(Mehring Books, Detroit, 2007) நிராகரிக்கப்பட்டன.

1925-27 நிகழ்வுகளையொட்டி, தாட்சரைப் பொறுத்தவரையில், “ஒரு சோசலிச சீனாவின் அவசியம்” குறித்து ஸ்ராலினும், ட்ரொட்ஸ்கியும் ஒரே பார்வையைத் தான் கொண்டிருந்தனர். இது முற்றிலும் எதிரெதிர் திசைகளில் நிற்கும் இரண்டு முன்னோக்குகளைக் குழப்புவதாகும். பின்தங்கிய ரஷ்யாவில், முதன்மையாக தேசிய நிலைமைகளால் அல்லாமல், மாறாக முதலாளித்துவத்தின் உலகளாவிய முரண்பாடுகளின் காரணமாக, முதல் சோசலிச புரட்சியை ஏற்படுத்திக்காட்டிய சர்வதேச போக்கை ட்ரொட்ஸ்கி பிரதிநிதித்துவப்படுத்தினார். அக்டோபர் புரட்சியானது அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், அவற்றோடு ஒடுக்கப்பட்ட காலனித்துவ நாடுகளிலும் ஏற்படவிருந்த சர்வதேச சோசலிச புரட்சியின் ஆரம்பமாக மட்டுமே இருந்தது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், தேசிய முதலாளித்துவத்தால் வரலாற்றுரீதியில் ஒரு முற்போக்கான பாத்திரம் வகிக்க முடியாது என்பதால், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தைப் போலவே, சீனப் பாட்டாளி வர்க்கமும் அதிகாரத்தைப் பிடிக்கும் ஒருநிலையில் இருந்ததை ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டினார்.

ஆனால் இதற்கு முற்றிலும் முரணாக, ஏகாதிபத்திய சகாப்தத்தில் உற்பத்தி சக்திகள் காலவதியான தேசிய அரசுகளைக் கடந்து வளர்ச்சியடைந்துவிட்டிருந்தது என்ற உண்மையை ஸ்ராலின் புறக்கணித்தார். அவர், மேற்கு ஐரோப்பாவிலும் மற்றும் வடமெரிக்காவிலும் நிகழ்ந்த தொல்சீர் முதலாளித்துவ புரட்சிகளின் பாதையை அப்போதும் பின்தொடரக்கூடியதாய் இருந்த, சீன “தேசிய” முதலாளித்துவத்தின் எழுச்சிக்கு ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை ஒரு வெளித்தடையாக (an external obstacle) மட்டுமே பார்த்தார். சீன முதலாளித்துவம் அதன் தேசிய-ஜனநாயக பணிகளை முடிப்பதற்கு அனுமதிக்க, தொழிலாள வர்க்கம் முதலில் தன்னைத்தானே முதலாளித்துவ கோமின்டாங் (KMT) ஆட்சிக்கு அடிபணிய வேண்டுமென ஸ்ராலின் வலியுறுத்தினார். இவ்வாறு பல தசாப்தங்கள் இல்லையென்றாலும், பல ஆண்டுகளாவது பாட்டாளி வர்க்க புரட்சிக்கு இருந்த சாத்தியக்கூறு ஒத்திப் போடப்பட்டது.

இந்த இரண்டு எதிரெதிர் கருத்துருக்களும் மிகவும் மாறுபட்ட கோட்பாடுகளைத் தோற்றுவித்தன. ட்ரொட்ஸ்கி தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தைக் கோரினார்; ஸ்ராலின் சீனக் கம்யூனிஸ்டுகளை கோமின்டாங்கின் “கூலிகளாக” வேலை செய்ய நிர்பந்தித்தார். சோவியத்துக்களை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அதிகாரத்திற்கான அங்கங்களாக கட்டியமைக்க ட்ரொட்ஸ்கி அழைப்புவிடுத்தார்; ஸ்ராலின் KMTஐ ஏற்கனவே இருக்கும் ஏதோவொருவித புரட்சிகர ஜனநாயக ஆட்சியாக மதித்தார். KMTஇன் வலது மற்றும் இடதுசாரிகள் இரண்டினதின் தவிர்க்கமுடியாத அபாயங்கள் குறித்து ட்ரொட்ஸ்கி சீன தொழிலாளர்களை எச்சரித்தார். ஸ்ராலின் முதலில் ஒட்டுமொத்தமாக KMTயிடம் சரணடைந்துவிட்டு, ஏப்ரல் 1927இல் ஷாங்காய் தொழிலாளர்களை சியாங் கே-ஷேக் படுகொலை செய்த பின்னர், வூஹானில் (Wuhan) இருந்த வாங் சிங்-வெ (Wang Ching-wei) தலைமையின்கீழ் இருந்த “இடது" KMT தலைமைக்குத் திரும்புமாறு கம்யூனிஸ்டுகளுக்கு உத்தரவிட்டார். வெறும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர்களும் இரத்தத்தில் குளிப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது.

1927இன் இரண்டாம் பாதியில் புரட்சி ஒரு வீழ்ச்சியின் காலகட்டத்திற்கு திரும்பியதும், ட்ரொட்ஸ்கி கட்சியைப் பாதுகாப்பதற்காக அதை திட்டமிட்டு பின்வாங்க அழைப்புவிடுத்தார்; ஸ்ராலின் குற்றத்தனமாக கிளர்ச்சிகளை (putsches) நடத்துமாறு CCPக்கு உத்தரவிட்டார். அது பிரதான மையங்களில் சிதைந்திருந்த கம்யூனிஸ்ட் தொழிலாளர்களின் அமைப்புகளை முற்றிலும் அழிக்கவும், ஆயிரக்கணக்கான தோழர்களின் படுகொலைக்கும் மட்டுமே இட்டுச் சென்றது.

இத்தகைய அடிப்படை வேறுபாடுகளுக்கு இடையில், இரண்டாம் சீனப் புரட்சியின் துன்பியலான முடிவிற்கு அவை முற்றிலும் பொருத்தமற்றிருந்ததாக தாட்சர் வாதிட்டார். 1926இல் ட்ரொட்ஸ்கி கோரியபடி கம்யூனிஸ்ட் கட்சி கோமின்டாங்கை கைவிட்டிருந்தாலும் கூட, "1927இல் அது வேறு பெரிய வெற்றியை அனுபவித்திருக்கும் என்று கூறுவதற்கு அங்கே வேறெந்த ஆதாரமும் இல்லை,” என்று அவர் கூறுகிறார். (Trotsky, Ian D. Thatcher, Routledge, 2003, p. 156).

தாட்சரைப் பொறுத்தவரையில், புரட்சிகர வேலைத்திட்டம், முன்னோக்கு, தலைமை மற்றும் தந்திரோபாயங்கள் மனித வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் எந்த பாத்திரமும் வகிப்பதில்லை.

சீனப் புரட்சியின் மூலங்கள்

அக்டோபர் 1917ல் முதல் சோசலிசப் புரட்சியாகிய ரஷ்யப் புரட்சி நடந்த போதினும், மார்க்சிச இயக்கத்திற்குள் அதன் தத்துவார்த்த தயாரிப்பு பல தசாப்தங்கள் நடந்திருந்தன. ஆனால் சீனாவில் அத்தகைய நீடித்த வளர்ச்சி ஏதும் இருந்திருக்கவில்லை. சீன தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியானது வெறுமனே, ஒரு பின்தங்கிய அரை-காலனித்துவ நாட்டிற்குள் வெளிநாட்டு மூலதனமும், தொழில்துறை இயந்திரங்களும் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டதன் நேரடி விளைவாக இருந்ததைப் போலவே, சீன மார்க்சிச போராட்டத்தின் அபிவிருத்தியானது பல நூற்றாண்டு கால மேற்கத்திய சமூக சிந்தனையையும், சமூக ஜனநாயகத்தின் பாரம்பரியத்தையும் விட்டுவிட்டு, ரஷ்ய புரட்சியின் ஒரு நேரடி நீட்சியாக இருந்தது. இரு நாடுகளிலும் இருந்த சமூக மற்றும் வரலாற்று அபிவிருத்தி ஒரேமாதிரியான குணாம்சத்தைக் கொண்டிருந்த நிலையில், அக்டோபர் புரட்சியின் அனுபவம் சீனாவிற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. இரண்டுமே தீர்க்கப்படாத ஜனநாயக பணிகளோடு, ஒரு சிறிய ஆனால் வேகமாக வளர்ந்துவந்து கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தோடு, பெரும் விவசாய சமூகங்களைக் கொண்டிருந்தன.

மென்ஷ்விக்குகளின் “இரண்டு-கட்ட” தத்துவத்தின் (“two-stage" theory) அடிப்படையில், ஸ்ராலின் தலைமையின்கீழ், ஒரு சந்தர்ப்பவாத கொள்கையை காப்பாற்றுவதற்காக ரஷ்ய புரட்சியின் மகத்தான அதிகாரம் பயன்படுத்தப்பட்டது என்பதே சீனப்புரட்சியின் பெரும் துன்பியலாகும்.

“இரண்டு-கட்ட” தத்துவம், பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம்” குறித்த லெனினின் சூத்திரம், மற்றும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம்” என ரஷ்ய புரட்சியின் இந்த மூன்று கருத்துருக்களையும் குறித்த ஓர் மிகவும் விரிவான ஆய்விற்கு, 2001இல் டேவிட் நோர்த் அளித்த, "ட்ரொட்ஸ்கியின் மரபுரிமையையும் இருபத்தோராம் நூற்றாண்டின் வரலாற்றில் அவரது இடத்தையும் மறுபரிசீலனை செய்வதை நோக்கி" எனும் உரை குறிப்பாக மிகவும் முக்கியமானதாகும்.

ரஷ்ய புரட்சியில் நேர்மறையாக நிரூபணமான ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடு, சீனாவில் புரட்சிகர தோல்விகளில் எதிர்மறையாக துன்பியல்ரீதியில் நிரூபணமானது.

சீனப்புரட்சியில் எழுந்த முக்கிய பிரச்சினையும், ரஷ்யாவில் எழுந்ததைப் போலவே ஒரேமாதிரியாக இருந்தது. முதலாவதாக, யுத்தப்பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளால் தோற்றுவிக்கப்பட்ட பிளவுகளில் இருந்து, சீனா, தேசிய ஐக்கியத்தின் மற்றும் சுதந்திரத்தின் உடனடிப் பணிகளையும் மற்றும் இரண்டாவதாக, நிலம் மற்றும் அரை-நிலப்பிரபுத்துவ சுரண்டல்களின் காட்டுமிராண்டித்தனங்களுக்கு ஒரு முடிவை எதிர்பார்த்த நூறு மில்லியன் கணக்கான ஏழை விவசாயிகளுக்கு விவசாய சீர்திருத்தத்தையும் முகங்கொடுத்தது. ஆனால் சீன முதலாளித்துவம் அதன் எதிர்பலத்திலிருந்த ரஷ்யாவையும்விட மிகவும் நேர்மையற்றிருந்தமை, அதாவது ஏகாதிபத்தியத்தை சார்ந்திருந்தமை, தேசத்தை ஒருங்கிணைக்க முடியாமை, நிலபிரபுக்கள் மற்றும் கிராமப்புற கந்துவட்டிக்காரர்களோடு ஒன்றிப் பிணைந்திருந்தமை ஆகியவற்றால் நிலச்சீர்திருத்தம் செய்யவியலாமல் இருந்ததை நிரூபித்தது. அனைத்திற்கும் மேலாக, அது போர்குணம்மிக்க இளம் சீன தொழிலாள வர்க்கத்தைக் குறித்து பெரிதும் அஞ்சியது.

ரஷ்யாவில் இருந்ததைப் போலவே, சீனத் தொழில்துறையின் வளர்ச்சியும் சர்வதேச மூலதனத்தைச் சார்ந்திருந்தது. 1902க்கும் 1914க்கும் இடையே சீனாவில் வெளிநாட்டு முதலீடு இருமடங்காகியது. இதற்கடுத்த 15 ஆண்டுகளில், மீண்டும் இருமடங்காகி மொத்தமாக 3.3 பில்லியன் டாலரை எட்டிய வெளிநாட்டு மூலதனம், குறிப்பாக ஜவுளித்துறை, இரயில்வே மற்றும் கப்பல்துறை போன்ற சீனாவின் முக்கிய தொழில்துறையில் ஆதிக்கம் கொண்டிருந்தது. 1916இல் சீனாவில் ஒரு மில்லியன் தொழில்துறை தொழிலாளர்கள் இருந்தனர்; இதுவே 1922இல் இதைப்போல் இரண்டுமடங்கு தொழிலாளர்கள் இருந்தனர். இந்த தொழிலாளர்கள் ஷாங்காய் மற்றும் ஊஹன் போன்ற ஒருசில தொழில்துறை மையங்களில் குவிந்திருந்தனர். கைவினைஞர்கள், கடைக்காரர்கள், எழுத்தர்கள், நகர்ப்புற ஏழைகள் என பல மில்லியன் அரை-பாட்டாளி வர்க்கத்தினரும் அவர்களின் சமூக விருப்பங்களை தொழிலாள வர்க்கத்தோடு பகிர்ந்து கொண்டனர்.

400 மில்லியன் மக்கள் தொகையில் வெகுசில மில்லியனாக எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் கூட, ஒட்டுமொத்த இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர போராட்டங்களில் ஒரு முன்னணி பாத்திரத்தை எடுக்க, சீனப் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தின் உலகளாவிய முரண்பாடுகளால் நிர்பந்திக்கப்பட்டு வந்தது. 1911இல் சன் யாட்-சென் தலைமையின்கீழ் நடந்த முதல் சீன புரட்சியின் தோல்வியானது, சீன முதலாளித்துவம் அதன் சொந்த வரலாற்று பணிகளைப் பூர்த்தி செய்ய முற்றிலும் இலாயக்கற்று போயிருந்ததை எடுத்துக்காட்டியது.

1890களில் மஞ்சு (Manchu) வம்சத்தினர், ஓர் அரசியலமைப்பிற்குட்பட்ட முடியாட்சியை ஸ்தாபிப்பதற்கான முறையீடுகளை நிராகரித்ததைத் தொடர்ந்து, சன் யாட்-சென் (Sun Yat-sen) அப்போது ஆதரவைப் பெற தொடங்கினார். அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் நடந்த தொல்சீர் முதலாளித்துவ புரட்சிகளால் உத்வேகம் பெற்றிருந்த சன், பேரரசு முறையைத் தூக்கியெறிதல், ஒரு ஜனநாயக குடியரசு மற்றும் நிலங்களை தேசியமயமாக்குதல் என "மூன்று மக்கள் கோட்பாடுகளை" முன்வைத்தார். எவ்வாறிருந்த போதினும், ஒரு பாரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப எந்த முயற்சியும் செய்யாத அவர், தனிநபர் மஞ்சு நிர்வாகிகளுக்கு எதிராக சிறிய ஆயுதமேந்திய கலகங்கள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளின் சதி நடவடிக்கைகளில் மட்டும் தம்மைத்தாமே சுருக்கிக் கொண்டார்.

1911இல் "புரட்சி" என்றழைக்கப்பட்டது, முற்றிலும் அழுகிப்போன ஒரு கட்டமைப்பை ஒரு தட்டு தட்டுவதில் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தது. நிதியியல்ரீதியாக, மேற்கத்திய சக்திகளால் பல தசாப்தங்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் பேரரசு அரசாங்கம் திவாலாகும் விளிம்பில் இருந்தது. அரசியல்ரீதியாக, ஒன்று ஹாங்காங் அல்லது தாய்வான் போன்ற காலனித்துவ நாடுகளின் வடிவத்திலோ அல்லது வெளிநாட்டு துருப்புகள், பொலிஸ் மற்றும் சட்ட முறைகள் அதிகாரத்தைக் கொண்டிருந்த துறைமுக நகரங்களில் பெற்ற “விட்டுக்கொடுப்புகள்” மூலமாகவோ ஏகாதிபத்திய சக்திகள் சீன பிராந்தியங்களை இணைத்து கொண்ட பின்னர், மஞ்சு அரசவை முற்றிலும் மதிப்பிழந்து போயிருந்தது. 1900இல், விவசாயிகள் மற்றும் நகர்புற ஏழைகள் மத்தியில் எழுந்த ஒரு பரந்த காலனித்துவ-எதிர்ப்பு எழுச்சியான பாக்சர் கிளர்ச்சியை (Boxer Rebellion) அடக்க, மக்கிப்போயிருந்த மஞ்சு வம்சத்தினர் வெளிநாட்டு துருப்புகளை சார்ந்திருக்க வேண்டியதிருந்தது.

மஞ்சு வம்சத்தினர் இறுதியாக அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு உறுதியளித்த போது, அது மிகவும் தாமதமாகி விட்டிருந்தது. சீன முதலாளித்துவத்தின், அதிகாரத்துவத்தின் மற்றும் இராணுவத்தின் முக்கிய பிரிவுகள் சன் யாட்-சென் பக்கம் திரும்பியிருந்தன. 1911, அக்டோபர் 10இல் ஹூபேய் மாகாணத்தின் ஊசாங்கில் ஓர் கிளர்ச்சியை நடத்திய ஆயிரக்கணக்கான துருப்புக்கள், குடியரசை பிரகடனப்படுத்தின. அந்த கலகம் வேகமாக பல சீன மாகாணங்கள் முழுவதிலும் பரவின. ஆனால் எந்தவித வடிவிலான மக்கள் இயக்கமும் இல்லாததால், முக்கிய நலன்கள் தொடப்படாமலேயே கைவிடப்பட்டன. சன்னை இடைக்கால ஜனாதிபதியாக கொண்ட ஒரு தளர்ந்த “சீனக் குடியரசு” கூட்டமைக்கப்பாக்கப்பட்டதே அதன் விளைவாக இருந்தது.

எவ்வாறிருந்த போதினும், இந்த புதிய குடியரசு உண்மையில், விவசாயிகளுக்கு நிலத்தை அளிக்கும் எவ்வித முயற்சியையும் எதிர்த்த பழைய இராணுவ-அதிகாரத்துவ இயந்திரங்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. சீன குடியரசிற்கு சர்வதேச அங்கீகாரத்தை மட்டுமே விரும்பிய சன் விரைவிலேயே இத்தகைய பிற்போக்கு சக்திகளோடு சமரசப்பட்டார். ஆனால் ஏகாதிபத்திய சக்திகளோ சன் ஜனாதிபதி பதவியை கடைசி மஞ்சு வம்சத்தில் வந்த பிரதம மந்திரி யுவான் ஷிகாயிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரின. பெரிய சக்திகள் யுவான் ஷிகாயை மிகவும் நம்பகமான, அதாவது சீனாவை ஒரு அரை-காலனித்துவ நாடாக பராமரிப்பதற்கு நம்பகமான ஒருவராக மதித்தன. யுவான் ஜனாதிபதி ஆன பின்னர், சன்னிற்கும் மற்றும் அவரது KMTக்கும் அல்லது அந்த தேசியவாத கட்சிக்கும் எதிராக திரும்பிய அவர், அரசியலமைப்பை தகர்த்துவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்தார். 1915இல், ஜப்பான் ஆதரவுடன் யுவான் தம்மைத்தாமே பேரரசராக அறிவித்தார். பேரரசு முறையை மீட்டெடுக்க முயன்ற அவருடைய குறுகிய-கால முயற்சியும், குடியரசை ஆதரித்த தென்சீன தளபதிகளால் நடத்தப்பட்ட கலகங்களால் முடிவுற்றது. இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்ட யுவான், பின்னர் விரைவிலேயே இறந்து போனார்.

அப்போதும் பெயரளவிற்கு இருந்த சீனக் குடியரசு, வெவ்வேறு ஏகாதிபத்திய சக்திகளால் ஆதரிக்கப்பட்டிருந்த எதிரெதிர் யுத்தபிரபுக்களால் செதுக்கப்பட்டது. தென்சீன நகரமான கௌங்ஜியோ அல்லது கான்டோனில் அங்கிருந்த உள்நாட்டு தளபதிகளின் ஆதரவுடன் KMT பிழைத்திருந்தது. சிறிய யுத்தபிரபுக்களை பெரிய பிரபுக்களுக்கு சவால் விடுமாறும், நாட்டை ஒன்றுபடுத்துமாறும் சன் முறையீட்டார்; ஆனால் அவருடைய அழைப்பிற்கு யாரும் செவிசாய்க்கவில்லை.

மே நான்கு இயக்கமும், ரஷ்ய புரட்சியும்

சென்-துஹ்ஷியூ

1911 தோல்வி சீன அறிவுஜீவிகள் அடுக்குகளில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகரான சென்-துஹ்ஷியூ (Chen Duxiu), புதிய அறிவெல்லைகளை தேடும் முயற்சிகளில் முன்னோடியாக இருந்தார். அதுவொரு அசாதாரண சகாப்தமாக இருந்தது; வரலாற்றின் போக்கை மாற்ற உயர்ந்த சித்தாந்தம், கலாச்சாரம் மற்றும் அரசியல் போராட்டங்களில் ஆர்வத்தோடு பங்குபெற தொடங்கிய பல இளைஞர்கள் வேகமாக அரசியலில் ஈடுபட்டதை அந்த சகாப்தம் கண்டது. ஷென்னின் New Youth இதழ், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ கருவியாயிற்று. ஷென் ஏராளமான மாணவர்களை ஈர்த்தார்; அவர்கள் கன்ப்யூஷியஸின் பிற்போக்குத்தனமான செல்வாக்கிற்கு எதிராக போராடும் சமரசமற்ற போராளியாக அவரைக் கண்டனர். மேற்கத்திய இலக்கியம், மெய்யியல் மற்றும் சமூக மற்றும் இயற்கை விஞ்ஞானங்களை அந்த சீன இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அவர் தீவிர நடவடிக்கை எடுத்தார்.

தீர்க்கமான அரசியல் தூண்டுதல்கள் சர்வதேச நிகழ்வுகளில் இருந்து வந்தன. முக்கியமாக ஐரோப்பாவில் என்றாலும் கூட, 1914இல் வெடித்த முதலாம் உலக யுத்தம் சீனாவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது; அதைத்தொடர்ந்து 1917இல் ரஷ்ய புரட்சியின் வெற்றியின் மகத்தான தாக்கங்களும் நிகழ்ந்தன. CCPஇன் இணை-ஸ்தாபகரான லீ டாஷாவோவால் முதன்முதலில் சீனாவில் மார்க்சிசம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1918இல் எழுதப்பட்ட “போல்ஷ்விசத்தின் வெற்றி” (The Victory of Bolshevism) என்ற அவரின் கட்டுரை, சீனாவில் முதன்முதலில் வந்த மார்க்சிச கட்டுரைகளில் ஒன்றாகும். அது ட்ரொட்ஸ்கியின் எழுத்தான, போரும் அகிலமும்என்பதில் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தது.

லீ டாஷாவோ

முதலாம் உலகயுத்தமானது, "உலக பாட்டாளி வர்க்கத்தினருக்கும், உலக முதலாளிகளுக்கும் இடையிலான... வர்க்க யுத்தத்தின்” தொடக்கத்தைக் குறிக்கிறது என்று லி வாதிட்டார். போல்ஷ்விக் புரட்சியானது, “சோசலிசத்திற்குத் தடையாக இப்போதிருக்கும் தேசிய எல்லைகளை அழிப்பது மற்றும் உற்பத்தியின் முதலாளித்துவ ஏகபோக-இலாப முறையை அழிப்பதை நோக்கிய முதல் படி மட்டுமே ஆகும்.” லி அக்டோபர் புரட்சியை “இருபதாம் நூற்றாண்டின் ஒரு புதிய அலையாக” பாராட்டினார். அது விரைவிலேயே சீன சம்பவங்களால் உறுதிப்படுத்தப்பட்டது. (Li Ta-chao and the Origins of Chinese Marxism, Maurice Meisner, Harvard University Press, 1967, p 68)

நேச நாடுகளின் அழுத்தத்தையொட்டி, சீனாவும் ஜேர்மனியின் மீது போரை அறிவித்து, உத்தியோகபூர்வமாக வெற்றிபெறும் முகாமின் பாகமாக இருந்தது. ஆனால் மே 1919இல் வேர்சை மாநாட்டின் பேரம்பேசலில், ஏகாதிபத்திய சக்திகள் ஷான்டோங்கிலிருந்து ஜப்பான் வரையில் ஜேர்மனியின் காலனித்துவ விட்டுக்கொடுப்புகளைக் கையாண்டதன் மூலமாக, அவை மீண்டும் சீனாவின் இறையாண்மையை மிதித்தன. பாரிஸிலிருந்து வந்த செய்திகள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நாடு முழுவதிலும் பெய்ஜிங் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களின் கோபமான ஒரு அலையைத் தூண்டிவிட்டன.

ஆங்கிலோ-அமெரிக்க "ஜனநாயகம்" பற்றிய மக்களின் பிரமைகள் முற்றிலும் சிதைந்திருந்தன. முதலாம் உலகப் போரின் எதிர் முகாம்கள் உலக ஆதிக்கத்திற்காகவும், தங்களின் சொந்த முதலாளித்துவ வர்க்கங்களின் நலன்களுக்காகவும் போராடி வந்தன என்பதும், யார் வென்றாலுமே, சீனாவையும் ஏனைய காலனித்துவ நாடுகளையும் ஏகாதிபத்தியம் சுரண்டுவது நிற்கப்போவதில்லை என்பதும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பரந்தளவில் உணரப்பட்டிருந்தது. ஆனால் மறுபுறம் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் வெற்றியோ, சீன வெகுஜனங்களிடைய ஒரு புதிய முன்னோக்கை திறந்துவிட்டது.

சென்-துஹ்ஷியூவின் (Chen Duxiu) மற்றும் லி டாஷாவோவின் (Li Dazhao) தலைமையில் ஜூலை 1921இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகமானது, சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. எண்ணிக்கை குறைவாக இருந்தபோதினும், CCP அதன் வேலைத்திட்டம் மற்றும் அக்டோபர் புரட்சியின் நன்மதிப்பிலிருந்து அதன் பலத்தைப் பெற்று, வேகமாக வளர்ந்தது. எழுந்துவந்த தேசிய விடுதலைப் போராட்டங்களின் தலைமைக்காக போராட, CCP, புதிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் அல்லது கொமின்டேர்னின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காங்கிரஸ்களில் விவரிக்கப்பட்ட தந்திரோபாயங்களை உடனடியாக ஏற்றுக்கொண்டது.

காலனித்துவ நாடுகளிலுள்ள இளம் கம்யூனிஸ்ட் கட்சிகள், எழுச்சிபெற்றுவந்த தேசிய விடுதலை இயக்கங்களில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்க வேண்டுமென்று, லெனின் இரண்டாம் காங்கிரஸ் விவாதத்தில் வாதிட்டார். ஆனால் பின்தங்கிய நாடுகளில் கம்யூனிச வர்ணம் பூசிக்கொண்டு முதலாளித்துவ-ஜனநாயக விடுதலைப் போக்கின் வர்ணங்களைப் பூசும் முயற்சிகளுக்கு எதிராக தீர்க்கமான போராட்டங்கள் தேவைப்படுகிறது என்பதையும் அவர் குறிப்பாக எழுப்பினார்; அனைத்து பின்தங்கிய நாடுகளிலும் பெயரளவிற்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமின்றி எதிர்கால பாட்டாளி வர்க்க கட்சிகளின் உட்கூறுகள் அனைத்தும் ஒரே அணியில் ஒன்றுதிரட்டப்பட்டு, அவற்றின் சொந்த தேசங்களுக்குள் முதலாளித்துவ-ஜனநாயக இயக்கங்களுக்கு எதிராக போராடுவதன் மூலமாக அவற்றின் சிறப்பு பணிகளை ஏற்றுக்கொள்ள பயிற்றுவிக்கப்படும் நிலைமைகளின்கீழ் மட்டுமே காலனித்துவ மற்றும் பின்தங்கிய நாடுகளில் கம்யூனிச அகிலம் முதலாளித்துவ-ஜனநாயக தேசிய போராட்டங்களுக்கு ஆதரவு காட்ட வேண்டும்; காலனித்துவ மற்றும் பின்தங்கிய நாடுகளில் கம்யூனிச அகிலம் முதலாளித்துவ ஜனநாயகத்துடன் ஒரு தற்காலிக கூட்டணிக்குள் நுழைய வேண்டும், ஆனால் அதனோடு இணைந்துவிடக்கூடாது என்பதோடு எந்தமாதிரியான சூழலிலும், பாட்டாளி வர்க்க போராட்டத்தின் மிகவும் ஆரம்பமான வடிவத்திலும் கூட அதன் சுயாதீனத்தைத் தூக்கிப்பிடிக்க வேண்டும்...” என்றார். (Lenin On the National and Colonial Questions: Three Articles, Foreign Language Press, Peking, 1975, p. 27).

1923இல் ஜேர்மனிய புரட்சியின் தோல்வி மற்றும் 1924இல் லெனினின் மரணம் ஆகியவற்றோடு, லெனின் கோடிட்டுக் காட்டிய அரசியல் அச்சின் சாராம்சம் கைவிடப்பட்டது. "ட்ரொட்ஸ்கிசத்தை" எதிர்த்தல் என்ற பெயரில், ஸ்ராலின் தலைமையிலான போல்ஷ்விக் தலைமையின் பிற்போக்குதனமான ஒரு பிரிவு 1917இன் அடிப்படைப் படிப்பினைகளை நிராகரித்தது. சீனாவில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஊக்கப்படுத்துவதற்கு மாறாக, தூரகிழக்கின் பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியங்களிடமிருந்து வந்த அழுத்தங்களைச் சரிக்கட்ட, அந்த தலைமை சீன முதலாளித்துவத்தின் “ஜனநாயக” கன்னை என்றழைக்கப்பட்டதோடு உறவுகளை நிறுவ முற்பட்டிருந்தது.

KMT இல் இணைதல்

கோமின்டாங்குடன் ஒரு தற்காலிக கூட்டணியை ஸ்தாபிப்பதென்ற CCPஇன் ஆரம்பகால கொள்கை, ஒவ்வொன்றும் தங்களுக்கென அவற்றின் சொந்த அமைப்புகளைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளின் தொடர்ச்சியான சுயாதீனத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் ஆகஸ்ட் 1922இல், மூன்றாம் அகிலத்தின் தலைமை தனித்தனி கட்சி உறுப்பினர்களாக கோமின்டாங்கில் சேர CCPக்கு உத்தரவிட்டது.

CCP இந்த முடிவை எதிர்த்தது; ஆனால் அதன் எதிர்ப்புக்கள் சினோவியேவின் கீழ் (Zinoviev) மூன்றாம் அகிலத்தின் தலைமையால் ஒடுக்கப்பட்டது. தாராளவாத-ஜனநாயக KMT மட்டுமே சீனாவில் “ஒரேயொரு தீவிர தேசிய-புரட்சிகர குழுவாக” இருந்தது என்ற அடித்தளத்தில் சினோவியேவ் அந்த முடிவை நியாயப்படுத்தினார். அப்போது சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கம் பலவீனமாக இருந்ததால், சிறிய CCP அதன் செல்வாக்கை விரிவாக்கிக் கொள்வதற்காக KMTக்குள் நுழைய வேண்டியதாக இருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், நவம்பர் 1937இல் ட்ரொட்ஸ்கி ஹரோல்ட் ஐசக்கிற்கு பின்வருமாறு எழுதினார்: "கோமின்டாங் இவ்முறை நிறைய தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது, மேலும் இளம் கம்யூனிஸ்ட் கட்சியும் பலவீனமாக இருக்கிறது என்பதோடு ஏறத்தாழ முற்றிலும் அறிவுஜீவிகளால் நிரம்பியுள்ளது என்ற, அதுவும் குறிப்பாக தெற்கில் இருந்த அனுமானங்களின்கீழ், 1922இல் [அவர்] நுழைந்தமை, ஒரு குற்றம் அல்ல, ஒருவேளை அதுவொரு தவறும் கூட அல்ல... இந்த விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஒரு சோசலிஸ்ட் கட்சிக்குள் நீங்கள் நுழைவதற்கு ஒத்த, சுயாதீனமான அத்தியாயத்தின் ஒரு படியாக அந்த நுழைவு இருந்திருக்கக்கூடும். நுழைவதில் அவர்களின் நோக்கமென்ன மற்றும் அதன்பின்னர் அவர்களின் கொள்கை என்ன? என்பதே பிரச்சினையாக உள்ளது” (The Bolsheviks and the Chinese Revolution 1919-1927, Alexander Pantrov, Curzon Press 2000, p. 106)

மூன்றாம் அகிலத்தின் கட்டுப்பாடு ஸ்ராலினிடம் இருந்த நிலையில், அவர் KMTக்குள் CCP நுழைவது ஒரு சுயாதீனமான வெகுஜன கட்சியை கட்டியெழுப்புவதை நோக்கிய ஒரு படியல்ல, மாறாக அதிகளவில் சீனாவில் ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை எட்டும் ஒரு நீண்டகால கொள்கையாக இருந்ததாக கண்டார். ஸ்ராலினின் பார்வையில், KMTஇன் முக்கியத்துவமானது மூன்றாம் அகிலத்தின் சீனப் பிரிவை குறைமதிப்பீடு செய்யச் செய்தது. 1917இல், அத்தகைய ஒரு கண்ணோட்டம் அரசியல்ரீதியாக முதலாளித்துவத்திடம் சரணடைவதாகுமென போல்ஷ்விக்குகளால் கண்டிக்கப்பட்டது. ஆனால் அது லெனினிசத்தின் மற்றும் அக்டோபர் புரட்சியின் மரபுத் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதாவும் முறையிட்டு, ஸ்ராலின் அப்போது இந்த கொள்கையை சீனாவில் நடைமுறைப்படுத்தினார்.

மூன்றாம் அகிலத்தின் மூன்றாம் காங்கிரஸைத் தொடர்ந்து, CCP தோற்றப்பாட்டளவில் அதன் சுயாதீனமான நடவடிக்கையையும் கைவிட்டுவிட்டு, அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் KMTஇல் சேருமாறு உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்தது. மூன்றாம் அகிலம் மிக்கெல் போரோடினை (Mikhail Borodin) சீனாவிற்கான அதன் புதிய பிரதிநிதியாக அனுப்பிய போது, அவர் அடிமுதல் முடி வரையில் போல்ஷ்விக் அமைப்பு முறைகளின்படி மறுகட்டமைப்பு செய்ய KMTக்கு ஓர் ஆலோசகராக செயல்பட்டார். CCP அங்கத்தவர்களில் முன்னணி 10 உறுப்பினர்கள், அதாவது மொத்த நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களில் சுமார் கால் பங்கினர், KMT இன் மத்திய நிறைவேற்றுக் குழுவில் இருத்தப்பட்டனர். கம்யூனிஸ்ட் காரியாளர்கள் பெரும்பாலும் நேரடியாக KMTஇன் வேலை விஷயங்களைச் செய்து வந்தனர்.

KMTஇன் இராணுவ கருவி மூன்றாம் அகில கொள்கையின் ஒரு நேரடியான விளைபொருளாக இருந்தது. 1924இல் சன் யாட்-சென் அவருடைய “தேசிய புரட்சிகர இராணுவத்தை” ஸ்தாபிக்கும் வரையில், அவர் வடக்கிலிருந்த ஒவ்வொரு யுத்தபிரபுகளின் கட்டுப்பாட்டிலிருந்த 200,000-300,000 துருப்புகளோடு ஒப்பிடுகையில், விசுவாசமான 150-200 சிப்பாய்களை மட்டுமே கொண்டிருந்தார். 1922இல், ஓர் உள்நாட்டு ஆட்சிகவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர் சன் ஷாங்காயிலிருந்து தப்பிக்க நிர்பந்திக்கப்பட்ட போது, அவர் தெற்கிலிருந்த தளபதிகளை சார்ந்திருந்தமை வெளிப்படையாக ஆனது. அதன்பின்னர் தான் சன் உதவி நாடி மாஸ்கோவின் பக்கம் திரும்பினார்.

சியாங் கேய்-ஷேக் பின்னர் ஆட்சிக்கு வர அடித்தளமாக இருந்த கௌங்ஜியோவிலிருந்த வாம்போ இராணுவ பயிலகம் (Whampoa Military Academy) சோவியத் ஆலோசகர்களின் உதவியோடு ஸ்தாபிக்கப்பட்டது. சோவியத் இராணுவ உதவியும் மற்றும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஒன்றுதிரட்டுவதற்கான CCPஇன் திறமையும் இல்லாமலேயே, சக்திவாய்ந்த யுத்தப்பிரபுக்களை தோற்கடிக்கும் அளவிற்கு ஒரு KMT இராணுவத்தைக் கட்டியமைப்பதென்பது முற்றிலும் நினைத்து பார்க்க முடியாததாக இருந்தது.

புரட்சிகர எழுச்சி

1924இல் மாஸ்கோவிலிருந்து திரும்பியிருந்த ஓர் இளம் CCP அங்கத்தவரும், பின்னர் சீன ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் தலைவரானவருமான பென்ங் ஷூஜி, KMT நோக்கிய இன்னும் கூடுதலான விமர்சனரீதியிலான கொள்கை வேண்டுமென பலமாக முறையிட்ட கட்சியின் இடதுசாரிகளில் ஒருவராக இருந்தார். யுத்தபிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுடன் அது கொண்டிருந்த நெருங்கிய உறவுகளோடு, தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமாக இருந்ததும், தேசிய-ஜனநாயக புரட்சியைத் தலைமையேற்று நடத்துவதற்கு திறனற்று இருந்ததுமான தேசிய முதலாளித்துவத்தை ஆதரிக்கும் உத்தியோகபூர்வ போக்கை அவர் நேரடியாக எதிர்த்தார். காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களில் பாட்டாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டுமென பென்ங் வாதிட்டார்.

இந்த எதிர்விவாத போராட்டம் ஒரு முக்கிய தாக்கத்தைக் கொண்டிருந்தது. KMTஇல் அதன் நடவடிக்கைகள் குறித்து மறு-ஒருமுனைப்பு செய்வதற்கு மாறாக, CCP தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்துவந்த பாரிய போராட்டங்களுக்குத் தலைமை கொடுப்பதன்மீது கட்சியின் வேலைகளை மறு-ஒருமுனைப்பு செய்தது. 1925 தொழிலாளர் தினத்தில் CCP அதன் இரண்டாவது தேசிய தொழிலாளர் காங்கிரஸை நடத்திய போது, அதன் அமைப்புகளில் 570,000 தொழிலாளர்கள் அங்கத்தவர்களாக இருந்தனர். அதிகரித்துவந்த அதன் செல்வாக்கு, தொழிலாள வர்க்கத்தின் போர்குணம் மிக்க போராட்டங்களின் ஓர் அலையை ஏற்படுத்தியது.

ஷங்காயில் உள்ள ஜப்பானிய ஜவுளித்துறை ஆலைகளில் நடந்த ஒரு வேலைநிறுத்த போராட்டத்தில், ஒரு கம்யூனிச தொழிலாளி சுடப்பட்டதால், அது அந்நகரத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களைத் தூண்டிவிட்டது. மே 30இல், ஆயிரக்கணக்கான மாணவர்களும், தொழிலாளர்களும் கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை விடுதலை செய்யக்கோரி ஷங்காயிலுள்ள ஒரு பொலிஸ் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். பிரிட்டிஷ் பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில், 12 பேர் கொல்லப்பட்டனர்; டஜன் கணக்கானவர்கள் காயமுற்றனர்.

1925 கன்டோன்-ஹாங்காங் வேலைநிறுத்தம்

இந்த “மே 30 நிகழ்வு” முன்னொருபோதும் இல்லாதளவிற்கு தொழிலாள வர்க்கத்திடையே ஒரு எழுச்சியைத் தூண்டிவிட்டது; அது இரண்டாம் சீனப் புரட்சியின் தொடக்கத்தைக் குறித்தது. நாடு முழுவதும் நடந்த பாரிய போராட்டங்கள் மற்றும் கலகங்களோடு, 400,000 தொழிலாளர்கள் பங்குபெற்ற சுமார் 125 வேலைநிறுத்தங்கள் நடந்தன. மூன்று வாரங்களுக்கு பின்னர், 1925 ஜூன் 23இல், கௌன்ங்ஹோவில் தொழிலாளர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, ஆங்கிலோ-பிரெஞ்சு இராணுவ பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி 52 பேரைச் சுட்டுக் கொன்றது. அந்த படுகொலை குறித்து கேள்விப்பட்டதும், ஹாங்காங் தொழிலாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தோடு அதற்கு விடையிறுப்புக் காட்டினர். ஹாங்காங்கிலிருந்து 100,000 தொழிலாளர்கள் வெளியேறியதுடன், ஒரு கான்டன்-ஹாங்காங் வேலைநிறுத்த குழுவின் வழிகாட்டலின்பேரில், பிரிட்டிஷ் பொருட்களின் புறக்கணிப்பும் அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமைப்பு, அதன் ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய மறியல் போராட்டங்களோடு, அதன் கருவில் ஒரு சோவியத்தைப் போல் விளங்கியது.

தொடக்கத்தில் ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டமானது மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமின்றி சீன முதலாளிமார்கள் உட்பட “ஒட்டுமொத்த மக்களையும்” உள்ளடக்கி இருந்தது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் வீரத்தையும், தீவிரத்தையும் கண்டு சீன முதலாளித்துவம் மிக விரைவிலேயே அதிர்ந்து போனது. தங்களின் நிலைப்பாட்டை முதலில் மாற்றிக் கொண்டரவர்கள் ஷங்காயின் சீன வியாபாரிகள், அத்தோடு வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளோடு ஒத்துழைக்கவும் தொடங்கினர்.

சியாங் கேய்-ஷேக்

மார்ச் 1925இல் சன் யாட்-சென் மரணமடைந்த பின்னர், தொழிலாள வர்க்கத்தின் மீது சீன முதலாளித்துவத்திற்கு இருந்த வெறுப்பு, சியாங் கேய்-ஷேக்கின் அரசியல் வளர்ச்சியில் மிக தெளிவாக வெளிப்பட்டது. ஒரு செல்வசெழிப்பான வியாபாரியின் மகனான சியாங், ஷாங்காயிலிருந்த வங்கியாளர்கள் மற்றும் தரகர்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். சன்னைப் போல், சியாங் கேய்-ஷேக் அறிவுஜீவி அல்லர். அவர் அவருடைய ஆரம்பகால ஆண்டுகளை ஷாங்காயின் குண்டர்கள், கொலைகாரர்கள் மற்றும் கடத்தல்காரர்களோடு கழித்திருந்தார்; பின்னர் இவர்களே நகர்புற தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான அவரின் அதிரடி துருப்புகளாக ஆனவர்கள்.

தொழிலாள வர்க்கத்தின் தீவிரம், CCPஇன் தலைமையை KMT உடனான அதன் உறவுகளை மறுபரிசீலனை செய்ய நிர்பந்தித்தது. KMTஇல் இருந்து CCP வெளியேறி, வெளியிலிருந்து மட்டும் ஒத்துழைக்க வேண்டுமென்று மீண்டும், அக்டோபர் 1925இல், சென்-துஹ்ஷியூ அறிவுறுத்தினார். ஆனால் மூன்றாம் அகிலம் அந்த முறையீட்டை நிராகரித்தது. சன் யாட்-சென்னின் மறைவைப் பயன்படுத்தி, வாங் ஷிங்-வேய் மற்றும் அத்தோடு சியாங் போன்ற “இடதுசாரி” மற்றும் மாஸ்கோ-ஆதரவு தலைவர்களை KMTஇன் மத்திய தலைமையில் இருத்தும் முயற்சிக்கு ஸ்ராலின் குழு ஆதரவு காட்டியது.

ஸ்ராலினின் மென்ஷிவிக் கொள்கை

சீனப் புரட்சியின் உடனடி கடமைகள் “தேசிய-ஜனநாயக”அல்லது முதலாளித்துவ குணாம்சத்தில் இருந்தன என்பதை ஒருவரும் மறுக்கவில்லை. புரட்சியை எந்த வர்க்கம் (முதலாளித்துவ வர்க்கமா அல்லது பாட்டாளி வர்க்கமா), எந்த திசையில் (ஒரு முதலாளித்துவ ஜனநாயக குடியரசின் திசையிலா அல்லது ஒரு தொழிலாளர் அரசு என்கின்ற திசையிலா) தலைமையேற்கும்? என்பதே பிரச்சினையாக இருந்தது.

1925இல் தொழிலாள வர்க்க எழுச்சியின் பின்னர், ஸ்ராலின் இடதிற்குத் திரும்பவில்லை; மாறாக அவர் திட்டமிட்டு தம்மைத்தாமே ஓர் இற்றுப்போன மென்ஷ்விக் கோட்பாட்டின் அடித்தளத்தில் இருத்தினார். 1917 ரஷ்ய படிப்பினைகளுக்கு எதிராக, அவர், KMT ஒரு “தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கட்சியென்றும்”, புரட்சிகர போராட்டத்தைத் தலைமையேற்கும் தகுதியை அது பெற்றிருப்பதாகவும் ஒரு பிம்பத்தை ஊக்கப்படுத்தினார். பின்னர் அவர், சீனா போன்ற நாடுகளில் தேசிய முதலாளித்துவம், குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகள், விவசாயிகள் மற்றும் தொழிலாள வர்க்கம் ஆகிய அனைத்து “முற்போக்கு” சக்திகளும் “நான்கு வர்க்கங்களின் ஓரணிக்குள்”ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒன்றுசேர்ந்திருப்பதாக வாதிட்டு, அதற்கும் ஒருபடி மேலாக சென்றார்.

ரஷ்ய மென்ஷ்விக்குகளை போலவே, ஸ்ராலினும் “ஏகாதிபத்திய-எதிர்ப்பு” புரட்சியின் தலைமை இயல்பாகவே சீன தேசிய முதலாளித்துவத்தின் வசமுள்ளதாக முறையிட்டார். புரட்சியின் இரண்டாவது கட்டமாக—பாட்டாளி வர்க்கப் புரட்சி காலவரையற்ற எதிர்காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டியுள்ளது என்ற அர்த்தத்தில், சோசலிசத்தை கட்டியமைப்பதில் சீனா மிகவும் பின்தங்கியுள்ளதாக அவர் வாதிட்டார். KMTஐ “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரத்திற்குள்”மாற்றும் விதத்தில், அதை இடதிற்கு தள்ளுவதே சீன கம்யூனிஸ்டுகளின் முதல் கட்ட வேலையாகும். ஆட்சியை பிடிப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை ஒடுக்கவும், அதிகாரத்தை பிடிக்கவும் KMTக்கு சீன கம்யூனிஸ்டுகள் உதவ வேண்டுமென்பதையே நடைமுறையில் ஸ்ராலினின் முன்னோக்கு குறித்தது.

CCP உடன் KMT கூட்டு வைக்க நிர்பந்திக்கப்பட்டிருந்தது என்ற அடிப்படை உண்மையே முதலாளித்துவத்தின் இயல்பான பலவீனத்தை பிரதிபலித்தது. ஸ்ராலினின் சந்தர்ப்பவாதம், சவாலுக்கு இடமின்றி KMT தலைவர்கள் மக்களின் முன்னால் “புரட்சியாளர்களாகவும்” “சோசலிஸ்டுகளாகவும்” வலம்வர அனுமதித்தது. அதை அவர்களும் இருகரம் நீட்டி கைப்பற்றிக் கொண்டார்கள். பெப்ரவரி-மார்ச் 1926இல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவின் ஆறாவது உச்சிமாநாட்டில், ஸ்ராலின் உத்தியோகபூர்வமாக கோமின்டாங்கை மூன்றாம் அகிலத்தின் ஓர் “அனுதாப” பிரிவாக சேர்த்தார்; அத்தோடு சியாங் கேய்-ஷேக்கை மூன்றாம் அகிலத்தின் மத்திய அவையில் (presidium) “கௌரவ” தலைவராக அமரவைத்தார்.

CCPஇன் வேண்டுகோளால் பலம் பெற்றதால், KMT தலைவர்கள் துல்லியமாக ஒரு புரட்சிகர தோற்றத்தை எடுத்தனர். 1920இல் CCP முக்கியமாக ஒரு சிறிய அறிவுஜீவிகள் வட்டத்தைக் கொண்டிருந்தது; 1927இல், அந்த கட்சி தொழில்துறை, சுரங்கத்துறை மற்றும் இரயில்வேதுறையைச் சேர்ந்த ஏறத்தாழ மூன்று மில்லியன் தொழிலாளர்களின் ஒரு இயக்கதிற்கு (ஒப்பீட்டளவில் பெரும் எண்ணிக்கையிலான சீனாவின் பாட்டாளி வர்க்கத்தில் சிறிய ஆனால் செறிவார்ந்த பாட்டாளி வர்க்கத்திற்கு) தலைமை ஏற்றிருந்தது. 1922இல் CCPஇல் 130 அங்கத்தவர்கள் மட்டுமே இருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், அதன் இளைஞர் அமைப்பு, கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் உட்பட, அந்த கட்சி அங்கத்தவர்களின் எண்ணிக்கை 100,000ஆக பெருவிட்டிருந்தது. 1923இல், CCP விவசாயிகள் சங்கங்களைக் கட்டியமைக்கத் தொடங்கிய போது, 100,000 கான்ரோனிய விவசாயிகள் மட்டுமே அதில் இருந்தனர்; ஜூன் 1927இல், ஹூனன் மற்றும் ஹூபெய் ஆகிய இரண்டு மாகாணங்களில் அந்த எண்ணிக்கை 13 மில்லியனை எட்டியது. அனைத்திற்கும் மேலாக, பத்து ஆயிரக்கணக்கான சிப்பாய்களின் முக்கிய பிரிவுகள், புரட்சிகர இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் அந்த கட்சி தாராளவாத முதலாளித்துவத்துடனான அதன் கூட்டணியைத் தக்க வைக்க, இத்தகைய தீவிரமயப்பட்ட வெகுஜனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், அது ஒரு பிற்போக்குத்தனமான கொள்கையை கொண்டிருந்தது.

ஹாங்காங் மாலுமிகள் மற்றும் தொழிலாளர்களின் 1922 வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்

KMT புரட்சிகர இயக்கத்திற்கு எதிரான அதன் தவிர்க்கவியலாத திருப்பத்தை எடுத்ததால், ஸ்ராலின் CCPஐ KMTஇன் ஒரு பிற்சேர்க்கையாக மாற்றியமையானது அந்த கட்சியை பெரிய அபாயத்திற்கு பரந்தளவில் திறந்துவிட்டது. 1926 மார்ச் 20இல், சியாங் KMT மீதான அவருடைய பிடியை இறுக்க திடீரென ஓர் ஆட்சிகவிழ்ப்பை நடத்தினார். அவர் “இடதுசாரி" KMT தலைமை என்றழைக்கப்பட்டதை மட்டும் திருப்பி போடவில்லை, 50 முக்கிய கம்யூனிஸ்டுகளை கைது செய்தார்; அனைத்து சோவியத் ஆலோசகர்களையும் வீட்டுக்காவலில் வைத்தார். கான்ரோன்-ஹாங்காங் வேலைநிறுத்த குழுவை நிராயுதபாணியாக்கிய அவர், கௌங்ஜிஹோவில் துல்லியமாக தம்மைத்தாமே ஓர் இராணுவ சர்வாதிகாரியாகவும் ஸ்தாபித்துக் கொண்டார்.

தொடக்கத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் குழப்பத்தின் எதிர்வினைக்குப் பின்னர், ஸ்ராலின் விரைவிலேயே பழைய கொள்கையையே தொடர்வதென்று முடிவெடுத்தார். KMTஐ விட்டுவிலக வேண்டுமென்ற CCP தலைமையின் ஒரு புதிய முனைவை அவர் மீண்டும் எதிர்த்தார். சியாங் ஆட்சிகவிழ்ப்பின் அனைத்து செய்திகளும் சோவியத் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் அனைத்து பத்திரிகைகளிலும் மூடி மறைக்கப்பட்டன அல்லது ஏகாதிபத்திய பிரச்சாரமென்று உதறித்தள்ளப்பட்டன. CCP அங்கத்தவர்கள் எந்தவொரு KMT குழுவிலும் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கக்கூடாதென தடை செய்த சியாங்கின் விரோத முறைமைகளை ஸ்ராலின் ஏற்றார்.

சியாங் வெளிப்படையாகவே அவருடைய எதிர்-புரட்சி நோக்கங்களை காட்டிய போதினும், ஸ்ராலின் யுத்தப்பிரபுகளுக்கு எதிரான ஒரு வடக்கு படையெடுப்பிற்கான அவருடைய இராணுவ திட்டத்திற்கு உற்சாகத்தோடு ஆதரவளித்தார். KMTஇன் யுத்த முயற்சிகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை உலுக்கிய 16 மாதகால கான்ரோன்-ஹாங்காங் வேலைநிறுத்தத்தையும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்திற்கும் தடை விதித்தார்.

ஸ்ராலினின் சீனக் கொள்கைக்கு எதிராக ட்ரொட்ஸ்கி ஒரு முறையான அரசியல் போராட்டத்தை தொடுத்தார். செப்டம்பர் 1926இல், CCP உடனடியாக KMTஇல் இருந்து வெளியேற வேண்டுமென தீர்மானமாக அறிவித்தார். அவர் எழுதியது: “சீனத் தொழிலாளர்களின் இடப்புற போராட்டமானது சீன முதலாளித்துவத்தின் வலப்புற போராட்டத்தைப் போன்றே ஓர் உறுதியான உண்மையாகும். அரசியல்ரீதியிலான மற்றும் அமைப்புரீதியிலான தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் அடிப்படையில் கோமின்டாங் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் வரையில், வர்க்க போராட்டங்களின் ஈர்ப்பு போக்குகளால் இப்போது அது தூர விலக்கி வைக்கப்பட வேண்டும். இத்தகைய போக்குகளை எதிர்கொள்ள அங்கே எந்த மாயமந்திர அரசியல் சூத்திரங்களோ அல்லது புத்திசாலித்தனமான தந்திரோபய கருவிகளோ இல்லை அல்லது அவ்வாறு ஏற்படவும் முடியாது.

“சுயாதீனமான எதிர்கால அரசியல் நடவடிக்கைக்காக CCP தன்னைத்தானே தயார்படுத்திக் கொண்டிருந்த போது, ஆனால் அதேசமயம், நடந்துகொண்டிருந்த தேசிய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற விரும்பிய CCP, அதுவொரு பிரச்சார சங்கமாக இருந்த அந்த காலக்கட்டத்தில் அது கோமின்டாங்கில் பங்கு பெற்றமை மிகச் சரியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகள், சீன தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பலமான வேலைநிறுத்த அலையின் எழுச்சியைக் கண்டுள்ளன... இந்த சரியான உண்மையானது, CCP தற்போது அதனைஅதுவே காணும் தயாரிப்பு நிலையிலிருந்து ஓர் உயர்ந்த மட்டத்திற்கு படிபடியாக உயர்த்தும் வேலையை முகங்கொடுக்கிறது. விழிப்புணர்ச்சி பெற்றுள்ள தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நேரடியான தலைமைக்காக போராடுவதே அதன் உடனடி அரசியல் பணியாக உள்ளது—நிச்சயமாக, புரட்சிகர தேசிய போராட்டத்தின் கட்டமைப்பிலிருந்து தொழிலாள வர்க்கத்தை நீக்குவதற்காக அல்ல, மாறாக மிகத்தீவிர போராளியின் பாத்திரத்தை மட்டுமின்றி, சீன வெகுஜனங்களின் போராட்டத்தில் ஐக்கியப்பட்ட அரசியல் தலைவர்களின் பாத்திரத்தையும் அது உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.”(Leon Trotsky on China, Monad Press, New York, 1978, p. 114)

ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுகள் பின்னர் நடந்த நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டன. ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க முன்னோக்கை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக, தேசிய புரட்சிகர இராணுவத்துக்கு (National Revolutionary Army) ஆதரவளிக்க தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அழைப்புவிடுத்ததன் மூலமாக, யுத்தப்பிரபுகளுக்கு எதிராக சியாங்கின் வடக்கு படையெடுப்பிற்கு ஆதரவாக CCP அதன் சக்தியை அர்பணித்தது. அந்த மக்கள் அவர்களின் அறிவுழைப்பை அளித்து, போக்குவரத்துகளை வெட்டவும், எதிரிகளின் போக்கிற்குப் பின்னால் வினியோகங்களுக்கு அடிபணியவும் கொரில்லா பிரிவுகளை ஸ்தாபித்தனர். இந்த பிரமாண்ட ஆதரவும், இராணுவத்திலிருந்த கம்யூனிச தளபதிகளின் பிரத்யேக வீரதீரமும் இல்லாதிருந்திருந்தால், சியாங் கேய்-ஷேக் நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் அவர் எட்டிய யான்ங்ட்ஜி ஆற்றை (Yangtze River) எட்ட முடியாமலேயே போயிருக்கும். (வடக்கு படையெடுப்பின் வரைப்படத்தைப் பார்க்கவும்)

1927 இல் தேசிய புரட்சிப்படை வூஹானில் நுழைகிறது

எவ்வாறிருந்த போதினும், யுத்த பிரபுக்கள் மீதான KMTஇன் இராணுவ வெற்றிகளை சீன வெகுஜனங்கள் வெறுமனே புரட்சியின் தொடக்கமாக மட்டுமே பார்த்த நிலையில் வர்க்க பதட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. சான்றாக, படைத் துருப்புகள் ஹூனனை விடுவித்தபோது, நான்கு மில்லியன் விவசாயிகள் ஐந்தே மாதங்களில் விவசாய சங்கங்களுக்குள் வெள்ளமென சேர்ந்தனர். மேலும் ஓர் அரை மில்லியன் தொழிலாளர்கள் CCP தலைமையிலான பொது தொழிற்சங்கத்தில் (General Labour Union) இணைந்தனர். யான்ங்ட்ஜி பள்ளத்தாக்கிலிருந்த ஒரு பிரதான தொழில்துறை மையமான வூஹானில், 300,000 தொழிலாளர்கள் CCPஇன் வழிகாட்டுதலின்பேரில் ஹூபேய் பொது தொழிற்சங்கத்தை ஸ்தாபித்தனர். அனைத்திற்கும் மேலாக, அந்த பாரிய இயக்கம் வேகமாக தீவிரப்படத் தொடங்கியது. தொழிலாளர்கள் ஹன்கோவில் தன்னியல்பாக பிரிட்டிஷ் விட்டுக்கொடுப்புகளைக் கையிலெடுத்தனர். யுத்தபிரபுக்களை விரட்டியடிக்கும் நோக்கில் விவசாயிகள் போராட்டம் குறைந்த வாடகை கோரிக்கைகளில் இருந்து ஆயுதமேந்திய போராட்டங்களுக்குச் சென்றது.

ஏப்ரல் 1927: ஷங்காய் ஆட்சிக்கவிழ்ப்பு

மக்கள் எழுச்சி பெற்றதும், புரட்சியை ஒடுக்க சியாங் கேய்-ஷேக் வேகவேகமாக கிழக்கு சீனாவின் பெருவியாபாரங்கள், தரகர்கள் மற்றும் ஏகாதிபத்திய பிரதிநிதிகளின் முகாமிற்குள் நுழைந்தார். அப்போது வூஹானில் இருந்த KMT மத்திய தலைமையில் வாங் ஷிங்-வேயைச் சுற்றி “இடதை” கட்டியெழுப்புவதன் மூலமாக, சியாங்கின் வலதுசாரி போக்கை எதிர்க்க முடியுமென மாஸ்கோ முறையிட்டது. எவ்வாறிருந்தபோதினும், KMTஇன் இடது மற்றும் வலதிற்கு இடையிலிருந்த பிளவு முற்றிலும் தந்திரோபாயம் சார்ந்திருந்தது. இரண்டுமே ஒரு முதலாளித்துவ “தேசிய” அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் உடன்பட்டிருந்தன. அவற்றின் கருத்துவேறுபாடுகள் பெரிதும் இராணுவ மூலோபாயங்கள், அதிகார பகிர்வு மற்றும், மிக முக்கியமாக, கம்யூனிஸ்ட் கட்சியுடனான KMTஇன் கூட்டை எப்போது, எவ்வாறு உடைப்பது என்பதில் மையம் கொண்டிருந்தது.

சீனாவில் தாம் முதலாளித்துவ ஆதிக்கத்தை ஸ்தாபிக்கப் போவதில்லையென ஸ்ராலினுக்கு சியாங்கின் வெற்று எதிர்ப்புகள் இருந்தபோதினும், ஒரு பெரும் தீவிரங்கொண்ட தொழிலாள வர்க்கத்தோடு அந்நாட்டின் பொருளாதார மையமாக விளங்கிய ஷங்காயை KMTஇன் இராணுவங்கள் நெருங்கிய போது, அந்த நாடகம் வெட்ட வெளிச்சமானது.

KMT துருப்புகளுக்கு முன்னதாகவே அந்நகரத்தை CCP கைப்பற்ற விரும்பியது, ஆனால் சியாங் கேய்-ஷேக் உடனான ஒரு “முதிர்த்தியடையாத” முரண்பாட்டை தவிர்க்கும் மற்றும் “நான்கு வர்க்கங்களின் அணியை”தக்க வைக்கும் ஸ்ராலினின் கொள்கை அந்த முனைவிற்கு குழிபறித்ததோடு, இறுதியில் நெரித்துவிட்டது. முதலாளித்துவத்திடம் மீண்டும் ஒப்படைக்கவும், பின்னர் சியாங்கின் கொலைகார கூலிப்படையின் சீற்றத்தை முகங்கொடுக்கவும் மட்டுமே ஷங்காய் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

அதிகரித்துவந்த பாரிய போராட்டங்களிலிருந்து எழுந்த அழுத்தங்களின்கீழ், CCP தலைமை தேசிய ஜனநாயக பணிகளுக்கும் சோசலிச புரட்சிக்கும் இடையிலிருந்த தடைகளை முறிப்பதற்கு அழைப்புவிடுத்தது. இரயில்வே, கப்பல்துறை, சுரங்கத்துறை மற்றும் பெரிய தொழில்துறைகளை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர ஒருமுனைப்படவும், மற்றும் சோசலிசத்தை நோக்கிய மாற்றத்தைச் செய்யவும் தொழிலாள வர்க்கம் “உடனடியாக”சீனப் புரட்சியில் இணைய வேண்டுமென அந்த கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடுத்தது. (History of Sino-Soviet Relations 1917-1991, Shen Zhihua, Xinhua Press, p31)

அவருடைய “இரண்டு கட்ட” தத்துவத்தை மீறும் CCPஇன் எவ்வித முயற்சிக்கும் விரோதம் காட்டிய ஸ்ராலின், பின்வரும் கட்டளைகளைப் பிறப்பித்து, மார்ச் 1927இன் இரண்டாம் பாதியில் CCPஇன் புரட்சிகர முனைவுகளைப் பின்வாங்க செய்தார்:

1) ஷங்காயில் வெளிநாட்டு சலுகைகளுக்காக ஆயுதமேந்தக் கூடாது, இதன் மூலமாகவே ஏகாதிபத்திய தலையீட்டை தடுக்க முடியும்;

2) KMTஇன் இடது மற்றும் வலதுசாரிகளுக்கு இடையில் தந்திர உத்திகளைக் கையாளுதல், இராணுவ மோதலைத் தவிர்த்தல், மற்றும் CCPஇன் துருப்புகளைப் பாதுகாத்தல்;

3) CCP ஆயுதமேந்திய போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும், ஆனால் எஞ்சியுள்ள துருப்புகள் தொழிலாள வர்க்கத்திற்கு ஆதரவின்றி இருந்ததால் அப்போதைக்கு CCP அதன் ஆயுதங்களை மறைத்து வைக்க வேண்டும்.

ஆயுதமேந்திய கிளர்ச்சிக்குப் பின்னர் ஷங்காய் தொழிலாளர்களின் வெற்றி அணிவகுப்பு

இந்த உத்தரவுகள், ஓர் அசாதாரணமான புரட்சிக்கு சாதகமான நிலைமையை ஒரு மரணப் பேரழிவுக்குள் திருப்ப உதவின. 1927 மார்ச் 21இல், 800,000 ஷங்காய் தொழிலாளர்களின் ஒரு பொது வேலைநிறுத்தத்தின் ஆதரவுடன், CCP ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. யுத்தபிரபுக்களின் துருப்புகளை நசுக்கிய தொழிலாள வர்க்கம், வெளிநாட்டு பெருநிறுவனங்களைத் தவிர, அந்நகரின் கட்டுப்பாட்டை எடுத்தன. எவ்வாறிருந்தபோதினும், ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதிலிருந்து ஸ்ராலினின் கோட்பாடு CCPஐ தடுத்தது. அதற்கு மாறாக பிரதான முதலாளித்துவ பிரதிநிதிகளை உட்கொண்ட ஓர் “இடைக்கால” அரசாங்கத்தை ஸ்தாபித்தது. தொழிலாளர்களின் நலன்களை முன்னெடுப்பதற்கு மாறாக சியாங்க கேய்-ஷேக் மற்றும் அவரின் துருப்புகளை வரவேற்பதே அதன் பிரதான பணியாக இருந்தது.

யுத்தபிரபுக்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் தாங்களே களைத்து போகும்படிக்கு, சியாங் கேய்-ஷேக் திட்டமிட்டு பல வாரங்கள் ஷங்காயிற்கு வெளியில் தங்கியிருந்தார். அதேவேளையில் அவர் ஷங்காயின் பெரிய வியாபாரங்கள் மற்றும் குண்டர்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளோடு சேர்ந்து அவருடைய ஆட்சிகவிழ்ப்பை திட்டமிட்டார். சியாங்கின் சதித்திட்டம் CCPஇன் தலைமைக்குத் தெரியாத இரகசியமல்ல. ஷங்காய் தொழிலாள வர்க்கம் அதுவே ஆயுதமேந்தி, KMTஇன் இரண்டாவது மற்றும் ஆறாவது இராணுவ படை சிப்பாய்களிடையே இருந்த அனுதாபிகளின் பக்கம் திரும்ப வேண்டுமெனவும் CCPஇன் தலைமை தீர்மானித்திருந்தது.

ஆனால் மார்ச் 31இல், “முதிர்ச்சியற்ற” மோதலைத் தவிர்ப்பதற்கான ஸ்ராலினின் ஆணையையொட்டி, மூன்றாம் அகிலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் ஆயுதங்களை மறைத்து வைக்குமாறு CCP க்கு உத்தரவிட ஷங்காயிற்கு ஒரு தந்தியை அனுப்பியது. ஒரு CCP தலைவர் லூ யெனாங், அந்த உத்தரவை ஒரு “கொள்கையின் தற்கொலை” என கோபமாக கண்டித்தார். ஆயினும்கூட CCP ஒருபோதும் கீழ்படிய நிர்பந்திக்கப்படவில்லை.

அபாயங்களைக் குறித்து கடுமையாக எச்சரித்த ட்ரொட்ஸ்கியும், இடது எதிர்ப்பும் புரட்சிகர மக்களின் அதிகாரத்திற்கு அவசியமான சுயாதீனமான அங்கங்களாக சோவியத்துக்களை கட்டியெழுப்ப அழைப்புவிடுத்தார். ஆனால் ஏப்ரல் 5இல், மாஸ்கோவின் Hall of Columnsஇல் ஆயிரக்கணக்கான கட்சி தோழர்களுக்கு முன் ஆற்றிய மதிப்பிழந்த உரையில் ஸ்ராலின், CCP சியாங் உடனான அதன் அணியை தக்கவைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

“சியாங் கேய்-ஷேக் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார். கோமின்டாங்கானது வலது, இடது, கம்யூனிஸ்டுகளைக் கொண்ட ஒருவித புரட்சிகர நாடாளுமன்ற வகையிலான ஓர் அமைப்பாகும். எதற்காக ஓர் ஆட்சி மாற்றம் வேண்டும்? நமக்கு பெரும்பான்மை இருக்கும்போது, மேலும் நாம் சொல்வதை வலது கேட்கும் போது அதை ஏன் விரட்ட வேண்டும்? ... தற்போது நமக்கு வலது தான் தேவை. இப்போதும் இராணுவத்தை வழிநடத்தும் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக அதை தலைமையேற்று நடத்தும் திறமையானவர்களை அது கொண்டிருக்கிறது. ஒருவேளை புரட்சியின்மீது சியாங் கேய்-ஷேக்கிற்கு வேண்டுமானால் அனுதாபம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் இராணுவத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார், மேலும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக அதை இட்டுச் செல்வதற்கு மாறாக வேறொன்றையும் அவரால் செய்ய முடியாது. இதற்கும் அப்பாற்பட்டு, வலது தரப்பினர் ஜெனரல் சாங் டிசோ-லின் [மன்ச்சூரிய யுத்தபிரபு] உடனும் உறவுகளைக் கொண்டுள்ளனர் என்பதோடு அவர்களை எவ்வாறு நிலைகுலைப்பதென்றும், மேலும் ஒரு தாக்குதலும் இல்லாமல், மூட்டை முடுச்சுக்களோடு, அவர்களை புரட்சியின் பக்கம் கொண்டு வரவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் அவர்கள் பணக்கார வியாபாரிகளோடு தொடர்புகளைக் கொண்டுள்ளனர், அத்துடன் அவர்களிடமிருந்து அவர்களால் பண்தையும் வசூலிக்க முடியும். ஆகவே இறுதிவரையில் அவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும், ஓர் எலுமிச்சை பழத்தைப் போல பிழிந்து, பின்னர் தான் தூக்கியெறியப்பட வேண்டும்.” (The Tragedy of the Chinese Revolution, Harold R. Isaacs, Stanford University Press, 1961, p. 162).

சியாங்கின் கொலைப்படை ஒரு கம்யூனிச தொழிலாளியின் தலையை வெட்டுகிறது

ஸ்ராலினின் உரைக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், ஏப்ரல் 12இல், அந்நகரின் பொது தொழிற்சங்கத்தை அழிக்க குண்டர்களை ஏவி, சியாங் தாக்குதல் நடத்தினார். மறுநாள், CCP 100,000 தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தது. ஆனால் சியாங் கேய்-ஷேக் நூற்றுக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து, துருப்புகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளோடு விடையிறுப்பு காட்டினார். அதற்கடுத்துவந்த சில மாதங்களில் “வெள்ளை பயங்கரத்தின்” ஆட்சியில், ஷங்காயில் மட்டுமின்றி சியாங்கின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த ஏனைய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் கொல்லப்பட்டனர்.

“இடது" KMT நோக்கி திரும்புதல்

சியாங்கின் காட்டுமிராண்டித்தனமான களையெடுப்புகளுக்கு இடையில், CCP அப்போதும், ஒரு பிரதான தொழில்துறை மையமாக விளங்கிய ஊஹனிலும், அத்தோடு யாங்ட்ஜியை (Yangtze) ஒட்டிய பகுதியில் நடந்த பல மில்லியன் விவசாயிகளின் இயக்கத்திலும் கணிசமான செல்வாக்கை கொண்டிருந்தது. ஒரு சரியான கொள்கை, சியாங்கின் எதிர்-புரட்சியைத் தோற்கடித்திருக்கக் கூடும். ஆனால் ஸ்ராலின், ஷாங்காயின் இரத்தந்தோய்ந்த படிப்பினைகளிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. 1927 ஏப்ரல் 21இல் பிரசுரிக்கப்பட்ட அவரின் “சீனப் புரட்சி குறித்த பிரச்சினை” (Question of the Chinese Revolution) என்பதில், அவருடைய கொள்கை “மட்டுமே சரியான போக்கில்” இருப்பதாகவும், அவ்வாறே தொடர்ந்தும் இருக்க முடியுமென்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். சியாங் நடத்திய படுகொலைகள் வெறுமனே, பெரும் பூர்சுவாக்கள் புரட்சியை கைவிட்டிருந்தனர் என்பதையே எடுத்துக்காட்டின என்று அவர் அறிவித்தார்.

“இடது” KMT அப்போதும் புரட்சிகர குட்டி முதலாளித்துவத்தைப் பிரதிபலிப்பதாகவும், அவர்களால் புரட்சியின் “இரண்டாவது கட்டத்தில்” வழிநடத்த முடியுமென்றும் ஸ்ராலின் வாதிட்டார். “இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓர் உறுதியான போராட்டத்தை நடத்துவதன் மூலமாக, ஊஹனில் உள்ள புரட்சிகர கோமின்டாங், உண்மையில் பாட்டாளி வர்க்க மற்றும் விவசாயிகளின் ஒரு புரட்சிகர-ஜனநாயக சர்வாதிகாரத்தின் அங்கமாக மாறிவிடும் என்பதையே அது குறிக்கிறது...” ஆகவே CCP அதன் நெருக்கமான ஒத்துழைப்பை “இடது” KMT உடன் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, அவர் சோவியத்துக்களை மற்றும் CCP இன் அரசியல் சுயாதீனத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பின் முறையீடுகளை எதிர்த்தார். (On the Opposition, J. V. Stalin, Foreign Language Press, Peking, 1974, pp. 663-664)

ஸ்ராலினின் கருத்தாய்வுகளுக்கு விடையிறுக்கையில், “நான்கு வர்க்கக் கூட்டு” ("bloc of four classes") குறித்த அவரின் தத்துவத்தை ட்ரொட்ஸ்கி கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தினார். “ஏகாதிபத்தியம் இயந்திரகதியில் சீனாவின் அனைத்து வர்க்கங்களையும் வெளியிலிருந்து பிணைக்கிறதென்று சிந்திப்பது ஓர் அடிப்படை பிழையாகும். ... ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டம் வர்க்கங்களின் அரசியல் வேறுபாடுகளை பலவீனப்படுத்துவதில்லை, மாறாக பலப்படுத்துகிறது,” என்றவர் விளக்கினார். ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட உழைக்கும் வெகுஜனங்களை அவர்களின் காலடிக்கு கொண்டு வரும் [ஒ]வ்வொன்றும் தவிர்க்கவியலாமல் தேசிய முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியங்களுடன் ஒரு வெளிப்படையான முகாமிற்குள் தள்ளுகிறது. இரத்தந்தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் ஒவ்வொரு தீவிர முரண்பாட்டிலும், முதலாளித்துவத்திற்கும் மற்றும் தொழிலாளர்கள்-விவசாய வெகுஜனங்களுக்கும் இடையிலான வர்க்க போராட்டமானது பலவீனப்படுவதில்லை, ஆனால், அதற்கு நேர்மாறாக, ஏகாதிபத்திய எதிர்ப்பால் கூர்மைப்படுகிறது.” (Problems of the Chinese Revolution, Leon Trotsky, New Park Publications, London, 1969, p. 5).

“இடது” KMTலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்க வேண்டியதே மிகவும் அவசர பணியாகுமென்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். “துல்லியமாக, சுயாதீனமற்று இருப்பதே அனைத்து கொடுமைகளுக்கும் மற்றும் அனைத்து தவறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த அடிப்படை பிரச்சினையில், கருத்தாய்வுகள் ஒரே தடவையாகவும், நேற்றைய பழக்கவழக்கங்கள் அனைத்திற்கும், முற்றுப்புள்ளி வைப்பதற்கு மாறாக, 'முன்னையும் விட அதிகமாக’ அதை தக்க வைக்க முயலுகின்றன. ஆனால் தவிர்க்கவியலாமல் பெரும் பூர்சுவாக்களின் ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ள ஒரு குட்டி-முதலாளித்துவ கட்சியின் மீது பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான சார்பைத் தக்கவைக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையே இது குறிக்கிறது.” (மேற்குறிப்பிட்டுள்ள அதே புத்தகத்தில் பக்கம் 18)

மாஸ்கோவை சேர்ந்த சன் யாட்-சென் (Sun Yat-sen) பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில், 1927 மே 13ல், எது மார்க்சிசத்தின் ஓர் ஏளனமாக மட்டுமே வர்ணிக்கப்படக் கூடியதோ அதைக்கொண்டு, ஸ்ராலின் அவரின் “நான்கு வர்க்கங்கக் கூட்டு” தத்துவத்தை ("bloc of four classes") நியாயப்படுத்தினார். “கோமின்டாங் ஒரு ‘சாதாரண’ குட்டி-முதலாளித்துவ கட்சியல்ல. குட்டி-முதலாளித்துவ கட்சிகளில் பல வகைகள் உள்ளன. ரஷ்யாவிலுள்ள மென்ஷ்விக்குகளும், சோசலிச புரட்சியாளர்களும் கூட குட்டி-முதலாளித்துவ கட்சிகளே; ஆனால் அதேநேரத்தில் அவைகள் ஏகாதிபத்திய கட்சிகளாக இருந்தன, ஏனென்றால் அவை பிரெஞ் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களோடு ஒரு தீவிர கூட்டைக் கொண்டிருந்தன... கோமின்டாங்கை ஓர் ஏகாதிபத்திய கட்சியென்று கூற முடியுமா? நிச்சயமாக முடியாது. சீனப் புரட்சி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது என்பதைப் போலவே, கோமின்டாங்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கட்சியாகும். இந்த வேறுபாடு அடிப்படையானது.” (On the Opposition, J. V. Stalin, Foreign Language Press, Peking, 1974, p. 671).

1942இல் ஜப்பானிய யுத்தகால தலைவர் ஹிடேகி டோஜோவும் (இடது), வாங் சின்ங்-வேய்யும்

சீனப் புரட்சி ஏகாதிபத்திய-எதிர்ப்பு என்பதால், சியாங் கேய்-ஷேக்கும் “ஏகாதிபத்திய-எதிர்ப்பாளரே” என்ற அபத்தமான கருத்து, ட்ரொட்ஸ்கியால் மட்டுமல்ல, வரலாற்றிலேயே மறுக்கப்பட்டது. ஏதேனுமொரு பிரதான சக்திகளுக்கு எதிரான KMTஇன் எதிர்ப்பானது, உள்ளபடியே ஏகாதிபத்தியத்திற்கான அதன் எதிர்ப்பை அர்த்தப்படுத்தவில்லை. KMT தலைவர்கள் வெறுமனே ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே தந்திரோபாய உத்திகளைக் (manoeuvring) கையாண்டு கொண்டிருந்தனர், அதேவேளை மக்களைக் குழப்புவதற்கு “ஏகாதிபத்திய-எதிர்ப்பு” கோஷங்களையும் உதட்டளவில் உச்சரித்து வந்தனர். சான்றாக, 1930கள் மற்றும் 1940களில் ஜப்பானிய தாக்குதலை எதிர்கொண்டிருந்த நிலையில், சியாங் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் பக்கம் திரும்புவதற்கு தயங்கவேயில்லை. “இடது” KMTஇன் தலைவர்களைப் பொறுத்த வரையில், வாங் சின்ங்-வேய் (Wang Ching-wei) ஒருபடி மேலே சென்று, ஜப்பானின் கைப்பாவை சீன ஆட்சியின் தலைவரானார். தாய்வானில் கம்யூனிஸ்ட்-விரோத சர்வாதிகாரத்தின் தலைவராக அவரின் இறுதி நாட்களை முடித்த சியாங், ஸ்ராலினிச தலைமையோடு சேர்ந்து மாஸ்கோவில் உலக சோசலிசப் புரட்சியை நிர்மூலமாக்கினார் என்பது ஒவ்வொருவரின் நினைவிலும் பற்ற வைக்கப்பட வேண்டும்.

வூஹானில் தோல்வி

ECCIஇன் எட்டாம் அகல்பேரவையில் (பிளீனத்தில்) ஸ்ராலின் வூஹானை “புரட்சிகர மையமாக” புகழ்ந்து கொண்டிருக்கையில், “இடது" KMTஇன் பல தளபதிகள், தங்கள் கட்சியின் உத்தியோகப்பூர்வ கொள்கையை மீறி, ஏற்கனவே கம்யூனிஸ்டுகள், தொழற்சங்கங்கள் மற்றும் அப்பிராந்தியத்திலிருந்த விவசாய அமைப்புகளைத் தாக்கி வந்தனர். 1927 மே 17இல், அகல்பேரவையின் முன்னதாக, இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறைகளில் ஒன்று சான்ங்ஷாவில் (Changsha) நடந்தது, ஆனால் அதுகுறித்து அகல்பேரவையில் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. மாறாக, “இடது” KMT உடனான CCPஇன் தொடர் கூட்டணிக்கு எதிராக, சோவியத்களைக் கட்டியெழுப்பும் இடது எதிர்ப்பின் முறையீடுகளை ஸ்ராலின் கண்டனம் செய்தார். “தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத்தை இப்போது ஸ்தாபிப்பதென்பது சோவியத்துக்கள் மற்றும் ஹான்கோ (Hankow) அரசாங்கத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்டதைப் போல, ஓர் இரட்டை அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஒப்பானதென்பதையும், அது நிச்சயமாகவும், தவிர்க்கவியலாமலும் ஹான்கோ அரசாங்கத்தைத் தூக்கியெறிய அழைப்புவிடுக்கும் முழக்கத்திற்கு இட்டுச் செல்லுமென்பதையும் எதிர்ப்பு அறியுமா?” என்றவர் முழங்கினார். (The Tragedy of the Chinese Revolution, Harold R. Isaacs, Stanford University Press, 1961, p. 241)

இதற்கான ட்ரொட்ஸ்கியின் பதில் ஓராண்டிற்கு வெளியிடப்படாமல் இருந்தது. வரவிருப்பது குறித்த ஒரு சக்திவாய்ந்த எச்சரிப்பில், அவர் ஸ்ராலினின் கொள்கையை மறுத்துரைத்ததோடு, மூன்றாம் அகிலமும் (Comintern) அவ்வாறே செய்ய வேண்டுமென அழைப்புவிடுத்தார். “சீன விவசாயிகளிடம் நாங்கள் இதைத்தான் நேரடியாக கூறுகிறோம்: உங்களின் சொந்த சுயாதீனமான சோவியத்துக்களை நீங்கள் ஸ்தாபிக்காமல், ஊஹன் தலைமையை நீங்கள் பின்தொடர்வீர்களாயின், வாங் சின்ங்-வேய் மற்றும் அவரின் கூட்டாளிகள் போன்ற இடது கோமின்டாங் தலைவர்கள் தவிர்க்கவியலாமல் உங்களைக் காட்டி கொடுப்பர்... வாங் சின்ங்-வேய் வகை அரசியல்வாதிகள், கடினமான நிலைமைகளின்கீழ், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக சியாங் கேய்-ஷேக் உடன் பத்து மடங்கு உடன்படுவார்கள். அத்தகைய நிலைமைகளின்கீழ் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தில் இருக்கும் இரண்டு கம்யூனிஸ்டுகளும், உழைக்கும் வெகுஜனங்களுக்கு எதிரான ஒரு புதிய தாக்குதலைத் தயாரிப்பதற்கான ஒரு நேரடியான முகமூடியோடு இல்லையென்றாலும், அவர்கள் சக்தியற்ற பிணைக்கைதிகளைப் போலிருப்பர்... சீன முதலாளித்துவ ஜனநாயக புரட்சியானது ஒன்று சோவியத் வடிவில் முன்னோக்கி நகர முடியும் அல்லது நகரவே முடியாது.” (Leon Trotsky on China, Monad Press, New York, 1978, p234-235, emphasis in original).

மீண்டும் ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் நிரூபணமாயின. ஷங்காயில் நடந்த இரத்தக்குளியலுக்குப் பின்னர், வூஹானில் இருந்த முதலாளிமார்களும், நிலவுடைமையாளர்களும் ஆதரவிற்காக விரைவிலேயே சியாங் கேய்-ஷேக்கை எதிர்நோக்கி நின்றனர். ஆலைகள் மற்றும் கடைகளை மூடி, அவர்கள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை எதிர்த்தனர். திட்டமிட்டு வங்கிகளில் பண ஓட்டத்தை ஒழுங்கமைத்த அவர்கள், ஷங்காயிற்கு அவர்களின் வெள்ளிகளைக் கொண்டு வந்தனர். கிராமப்புறங்களில், வணிகர்களும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களும் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க மறுத்து, வசந்தகால விவசாயத்திற்கு அவர்கள் விதைகள் வாங்க முடியாதபடிக்குச் செய்தனர். தாங்கமுடியாத அளவிற்கு ஊக வணிகர்கள் விலைகளை ஏற்றிவிட்டிருந்த நிலையில், ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் ஆலைகளை மூடி அந்த நாசவேலையில் சேர்ந்து கொண்டன. பொருளாதார பொறிவுகளும், உயர்ந்துவந்த வெகுஜனப் போராட்டங்களும் வாங் சின்ங்-வேய்யை அச்சமூட்டின. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் “மிரட்டல்” நடவடிக்கைகளைக் குறைக்க, அவரது அரசாங்கத்தில் விவசாயத்துறை மற்றும் தொழிலாளர்துறையிலிருந்த இரண்டு கம்யூனிஸ்ட் மந்திரிகளும் அவர்களது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு அவர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

உத்தியோகபூர்வ CCP கொள்கையானது வெகுஜனப் போராட்டங்களோடு நேரடியாக முரண்பட்டிருந்தது. பல கிராமப்புறங்களில், விவசாய அமைப்புகள் நிலப்பிரபுக்களை விரட்டியடித்து, அவை உள்ளூர் அதிகாரங்களாக செயல்படத் தொடங்கின. ஊஹன் மற்றும் சான்ங்ஷா ஆகிய இரண்டு பிரதான நகரங்களில், பணவீக்கமும் வியாபார அடைப்புகளும் தொழிலாளர்களை கடினமாக பாதித்தது; அது ஆலைகளையும், கடைகளையும் கையிலெடுக்க வேண்டுமென்ற புரட்சிகர முறையீடுகளை உயர்த்த அவர்களை நிர்பந்தித்தது. சோவியத்துக்களைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற ட்ரொட்ஸ்கியின் முறையீடு சரியான நேரத்தில் வந்திருந்தது. ஸ்ராலின் வாதிட்டதைப் போல, சோவியத்துக்கள் வெறுமனே ஆயுதமேந்திய கிளர்ச்சியை வழிநடத்துவதற்கான ஒரு கருவியல்ல, மாறாக அவை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்களாக இருந்தன. அவற்றின்மூலம் புரட்சிகர எழுச்சியின் மத்தியிலிருந்த உழைக்கும் மக்கள் அவர்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வை மறுக்கட்டமைப்பு செய்து கொள்ள முடியும் என்பதோடு எதிர்-புரட்சிக்கு எதிரான அவர்களின் நலன்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஹூனன் மற்றும் ஹூபேயில் இருந்த தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் மில்லியன் கணக்கானவர்களை உறுப்பினர்களாக கொண்டிருந்ததாக பின்னர் பென்ங் ஷூஜி (Peng Shuzi) விவரித்தார். CCP அப்போது ட்ரொட்ஸ்கியின் ஆலோசனையைப் பின்பற்றி, இந்த ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன சக்தியைச் சார்ந்து இருந்திருந்தால், அதேநேரத்தில் தொழிலாளர்-விவசாயிகள்-சிப்பாய் சோவியத்தின் அமைப்பை மத்திய புரட்சிகர அமைப்பாக ஆக்குவதற்கு அழைப்புவிடுத்து, விவசாயப் புரட்சியை நடத்திய இத்தகைய ஆயுமேந்திய சோவியத்துக்கள் மூலமாக, விவசாயிகள் மற்றும் புரட்சிகர சிப்பாய்களுக்கு நிலங்களை அளித்திருந்தால், அவை ஹூனன் மற்றும் ஹூபேயில் அனைத்து ஏழை மக்களையும் சோவியத்துகளுக்குள் கொண்டு வந்திருக்கும் என்பது மட்டுமல்ல, மாறாக அவை நேரடியாக பிற்போக்குதனமான நிர்வாகிகளின் அஸ்திவாரத்தையும் உடனடியாக அழித்திருக்கக்கூடும் மற்றும் மறைமுகமாக சியாங்கின் இராணுவத்தையே நிலைகுலைய செய்திருக்கும். இவ்விதத்தில், அந்த புரட்சி எதிர்புரட்சிகர சக்தியின் வேர்களின் அழிப்பிலிருந்து அபிவிருத்தி அடைந்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பாதையில் முன்னேறியிருக்கக்கூடும். (Leon Trotsky on China, Monad Press, New York, 1978, p. 66, emphasis in original).

“இடது” KMT குறித்த தம்முடைய மடத்தனமான புகழ்ச்சிகளுக்கு இடையில், ஸ்ராலின் அவருடைய கொள்கை முடமாகி வந்ததையும் உணர்ந்தார். CCP 20,000 கம்யூனிஸ்டுகள் மற்றும் 50,000 தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் அதன் சொந்த இராணுவத்தை உருவாக்க, 1927 ஜூன் 1இல், அதற்கு உத்தரவிட்டார். ஆனால் புரட்சிகள் அதிகாரத்துவத்தின் ஆணைக்கிணங்க ஏற்படுவதில்லை. ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, ஒரு புரட்சிகர இராணுவத்தைக் கட்டியமைப்பதற்கான முன்நிபந்தனையானது, வெகுஜனங்களிடையே இருக்கும் கட்சியின் ஒருங்கிணைந்த செல்வாக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையில் கூட்டணியை உருவாக்குவதற்கான ஒரு திடமான வழிவகையுமே ஆகும். சோவியத்துக்களை கட்டியெழுப்புவதை நிராகரித்ததன் மூலமாக, CCP அதன் சொந்த இராணுவத்தை ஸ்தாபிப்பதற்கு அவசியமான அடித்தளத்தை உருவாக்குவதிலிருந்து அதை தடுத்தார்.

வாங் சின்ங்-வேய்யின் தவிர்க்கவியலாத காட்டிக்கொடுப்பு வெளிப்படையாக வந்ததும், கட்சி KMTஇல் இருந்து வெளியேற வேண்டுமென மீண்டுமொருமுறை CCP தலைவர் சென்-துஹ்ஷியூ (Chen Duxiu) முறையிட்டார். மீண்டும், மூன்றாம் அகிலம் அந்த முறையீட்டை நிராகரித்தது. ஜூலையின் தொடக்கத்தில், ஷென் கோபத்துடன் கட்சியின் பொது செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார். ஷென்னை அடுத்துவந்த ஷூ குய்பா உடனடியாக, இந்த வாழ்வா சாவா தருணத்திலும் கூட, “இயல்பிலேயே தேசிய புரட்சியை முன்னெடுக்கும் நிலையில் KMT உள்ளது” என்று அறிவித்து, ஸ்ராலினுக்கு அவருடைய விசுவாசத்தைக் காட்டினார்.

கம்யூனிஸ்டுகள் அனைவரும் KMTஐ விட்டு விலக வேண்டும் அல்லது கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியதிருக்குமென கோரும் ஓர் உத்தரவை, ஜூலை 15இல், வாங் சின்ங்-வேய் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டார். சியாங்கைப் போன்றே, “எலுமிச்சம்பழத்தைப் போல” CCPஐ பிசைத்தெடுத்த Wangஉம், பின்னர், கம்யூனிஸ்டுகளுக்கும் எழுச்சியுற்ற வெகுஜனங்களுக்கும் எதிராக, இன்னும் கொடுமையான, மற்றொரு ஒடுக்குமுறை அலையைக் கட்டவிழ்த்துவிட்டார்.

அக்காலத்திய செய்தியறிக்கையொன்று பின்வருமாறு விவரித்தது: “கடந்த மூன்று மாதங்களில், இன்று வரையில் கீழ்-யாங்க்ட்ஜியிலிருந்து பரவியுள்ள எதிர்வினை தேசிய கட்டுப்பாடு என்றழைக்கப்படுவதன்கீழ் அனைத்து பிராந்தியங்களிலும் செல்வாக்கு பெற்றுள்ளது. யுத்தகள இராணுவ தளபதிகளைவிட டாங் ஷெங்-சின் படுகொலை பிரிவுகளின் மிகவும் திறமையான தளபதி என்பதை அவரே நிரூபித்துள்ளார். ஹூனனில் அவருக்குகீழ் இருந்த தளபதிகள் செய்த “கம்யூனிஸ்டுகளின்” ஒரு துடைப்பிற்கு இணையாக சியாங் கேய்-ஷேக் கூட செய்ய முடியாது. சுட்டுத்தள்ளுதல், தலையைச் சீவுதல்போன்ற வழக்கமான முறைகள் சித்திரவதை மற்றும் ஊனப்படுத்துதல் போன்ற முறைகளோடு சேர்ந்து கொண்டிருந்தது. அவை இருண்ட காலங்கள் மற்றும் நீதிவிசாரணைகளின் கொடூரங்களை நினைவிற்குக் கொண்டு வருகின்றன.

அந்த விளைவுகள் வியத்தகு முறையில் இருந்தன. ஹூனனில் இருந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் (இவை ஒட்டுமொத்த நாட்டிலேயே மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டவையாக இருந்திருக்கக்கூடும்) முற்றிலுமாக நசுக்கப்பட்டன. எண்ணெய்யில் எரிக்கப்படுவதிலிருந்தும், உயிரோடு புதைக்கப்படுவதிலிருந்தும், வயர் மூலமாக மெதுவாக மூச்சுத்திணறி கொல்லப்படும் சித்திரவதை, மற்றும் கூறுவதற்கே மிகவும் கொடூரமான ஏனைய படுகொலை வடிவங்களில் இருந்து தப்பித்த தலைவர்கள் நாட்டைவிட்டு தப்பி ஓடினர் அல்லது எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு மிகவும் கவனமாக மறைந்திருந்தனர்...” (The Tragedy of the Chinese Revolution, Harold R. Isaacs, Stanford University Press, 1961, p. 272)

ஆயினும்கூட, ஸ்ராலின் அவருடைய கொள்கைகள் சரியென்று வலியுறுத்தியதோடு, தோல்விகளுக்கு CCP தலைவர்களை, அதுவும் குறிப்பாக ஷென்னை குற்றஞ்சாட்டினார். இடது எதிர்ப்பின் விமர்சனங்கள் தொடர்ந்து சோவியத் தொழிலாள வர்க்கத்திடையே செல்வாக்கு பெறத் தொடங்கியிருந்த நிலையில், ஸ்ராலின் சந்தர்ப்பவாதத்திலிருந்து அதன் நேரெதிரான சாகசவாதத்திற்கு கூர்மையாக திரும்பியதன் மூலமாக, அவர் அவருடைய மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினார். CCP மற்றும் சீன வெகுஜனங்களை இரண்டு தோல்விகள் நசுக்குவதற்கு பொறுப்பான ஸ்ராலின், அந்த நொருங்கிப் போயிருந்த கட்சியை, நிச்சயமாக தோல்விக்கு இட்டுச்செல்லும், ஒரு தொடர்ச்சியான ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். 1930களின் தொடக்கத்தில் “மூன்றாம் காலத்திய" (Third Period) அதிதீவிர-இடது கோட்பாட்டை முன்கூட்டியே எடுத்துக்காட்டும் விதமாக, சீனப் புரட்சி பின்னடைவு கண்டிருந்த சரியான நேரத்தில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதை உடனடி பணியாக பாட்டாளி வர்க்கத்திடம் ஒப்படைத்தார். ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, அப்போது CCP மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு மறுசீரமைப்பு, பாதுகாப்பான ஜனநாயக முழக்கங்கள் மற்றும் அனைத்திற்கும் மேலாக அவசியமான படிப்பினைகளை வரையறுப்பதே தேவைப்பட்டது---அவை அனைத்தும் ஸ்ராலினால் பிடிவாதமாக மறுக்கப்பட்டன.

குவாங்ஜோவ் சோவியத்தின் படிப்பினை

சீனப் புரட்சியின் இறுதி மூச்சுத்திணறல், அதாவது டிசம்பர் 1927இல் நடந்த குவாங்ஜோவ் எழுச்சியானது, கிரிமினல் வகையிலானதன்றி வேறொன்றுமில்லை. அது குவாங்ஜோவ் வெகுஜனப் போராட்டத்தோடு அல்லாமல், மாறாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பதினைந்தாவது காங்கிரஸின் ஆரம்பத்தோடு சரியாக பொருந்தி நின்றது. ஸ்ராலினிச தலைமையின் செல்வாக்கை வளர்த்தெடுப்பதும், இடது எதிர்ப்பின் விமர்சனங்களை ஒடுக்குவதுமே அதன் முதன்மை நோக்கமாக இருந்தது. பாரிய ஆதரவின்றி, சில ஆயிரம் கட்சி தொண்டர்களோடு ஒரு சோவியத் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சி, வெற்றிக்கான சாத்தியக்கூறை பெற்றிருக்கவில்லை. குறுகிய காலமே நீடித்த குவாங்ஜோவ் “சோவியத்தைக்” காப்பாற்ற சுமார் 5,700 பேர், (அவர்களில் பலர் உயிர்வாழ்ந்துவந்த சிறந்த புரட்சிகர போராளிகளாக இருந்தனர்) அந்த வீரதீர யுத்தத்தில் உயிரிழந்தனர்.

ஸ்ராலினின் சோவியத் கோட்பாடு இறுதியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மிக முக்கியமாக, “ஜனநாயக” கட்டம் முடிவுறுவதற்கு முன்கூட்டியே அல்லாமல், கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு ஒரு கருவியாக இறுதி கட்டத்தில் தான் சோவியத்துக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென, புரட்சி முழுவதிலுமே, ஸ்ராலின் வலியுறுத்தி வந்தார். ஆனால், ட்ரொட்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தியதைப் போல, எதார்த்தத்தில், அரசியல் போராட்டத்திற்குள் உழைக்கும் வெகுஜனங்களின் பரந்த அடுக்குகளை ஈர்ப்பதற்கான கருவியாக சோவியத்துக்கள் இருந்தன. அவற்றை மேலிருந்து திணிக்க முடியாது, மாறாக தொழிற்சாலை குழுக்கள் மற்றும் வேலைநிறுத்த குழுக்கள் உட்பட புரட்சிகர அடிமட்ட வேர் இயக்கத்திலிருந்து அவை எழுகின்றன. புரட்சிகர நெருக்கடி அபிவிருத்தி அடைந்த நிலையில், சோவியத்துக்கள் தொழிலாளர் வர்க்க அதிகாரத்தின் புதிய அங்கங்களாக பரிணமிக்கக் கூடும்.

குவாங்ஜோவில் ஒரு கிளர்ச்சியை நடத்துவதற்கான கருவியாக “சோவியத்” என்றழைக்கப்பட்ட ஓர் அமைப்பை CCP அங்கே அதிகாரத்துவரீதியில் ஸ்தாபித்தது. ஆனால் சோவியத் என்றழைக்கப்பட்ட அதில் தங்களின் “பிரதிநிதிகளை” சாதாரண தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளால் அறிய முடியாததால், ஸ்ராலினால் எதிர்பார்க்கப்பட்ட “மகத்தான விடையிறுப்பு” அதற்கு கிடைக்கவில்லை. தொழிலாளர்களில் ஒரு மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களே குவாங்ஜோவ் “சோவியத்” அரசாங்கத்தை ஆதரித்தனர். அது விரைவிலேயே நசுக்கப்பட்டது.

முதலாளித்துவ ஜனநாயகமே குவாங்ஜோவ் எழுச்சியின் பணிகள் என்பதை ஸ்ராலின் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனால் ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டியதைப் போல, இந்த தோல்வியுற்ற வீரசாகசத்திலும் கூட, பாட்டாளிவர்க்கம் மேற்கொண்டு நகர நிர்பந்திக்கப்பட்டிருந்தது. அது இருந்த அந்த குறுகிய காலத்தின் போது, பெரிய தொழில்துறை மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவது உட்பட தீவிர சமூக முறைமைகளைச் செய்ய CCP அதன் சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டிருந்தது. ட்ரொட்ஸ்கி அறிவித்ததைப் போல, இந்த முறைமைகள் “முதலாளித்துவம்” என்றால், ஒரு பாட்டாளிவர்க்க சீனப் புரட்சியானது எவ்வாறு இருக்குமென்று அனுமானிப்பது மிகவும் கடினமாக போய்விடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குவாங்ஜோவ் கிளர்ச்சியிலும் கூட, CCP தலைமை ஸ்ராலினின் “இரண்டு-கட்ட” கோட்பாட்டை அல்லாமல், நிரந்தர புரட்சியின் தர்க்கத்தைப் பின்தொடர நிர்பந்திக்கப்பட்டிருந்தது.

1927 இல் மாவோ சேதுங்

குவாங்ஜோவ் எழுச்சியின் தோல்வி நகரப்புற மையங்களில் புரட்சி முடிவடைந்ததைக் குறித்தது. மாவோ சேதுங் போன்ற இடது எதிர்ப்பில் சேராத CCP தலைவர்கள், கிராமப்புறங்களுக்குப் பறந்துவிட்டனர். ஸ்ராலினிச அதிகாரத்துவத்திலிருந்து மூன்றாம் அகிலத்தின் “மூன்றாம் காலக்கட்டம்” மற்றும் “சோவியத்துக்களை” ஸ்தாபிப்பது வரையிலான அழுத்தங்களின்கீழ், CCPஇல் ஒருபுதிய சக்தி எழுந்தது. மாவோவால் பிரேரிக்கப்பட்ட இந்த போக்கு துல்லியமாக தொழிலாள வர்க்கத்தின் வேர்களைத் துண்டித்துவிட்டு, விவசாயிகளை அடிப்படையாக கொண்டிருந்தது. “ஆயுதமேந்திய போராட்டத்தைத்” தொடர, முக்கியமாக விவசாயிகளைக் கொண்ட “செம்படையை” CCP உருவாக்கி, சீனாவின் கிராமப்புற உட்பகுதிகளில் “சோவியத்துக்களை” ஸ்தாபித்தது. 1930களின் தொடக்கத்தில், CCP தோற்றப்பாட்டளவில் நகர்புற தொழிலாள வர்க்கத்திற்குள் அதன் வேலைகளைக் கைவிட்டிருந்தது.

மார்க்சிசத்தின் விவசாயிகள் வெகுஜனவாதத்தோடு (peasant populism) மாவோவின் அரசியல் கண்ணோட்டம் வெகுவாக பொருந்தி இருந்ததால், அவர் மிக இயல்பாகவே இந்த போக்கின் புதிய தலைவராக உருவானார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு முன்னால், அவர் ரஷ்ய நரோட்னிக்களால் தோற்றுவிக்கப்பட்டிருந்த “புதிய கிராமம்” (New Village) எனும் ஒரு ஜப்பானிய கற்பனாவாத சோசலிச பயிலகத்தின் ஆழ்ந்த தாக்கத்தைக் கொண்டிருந்தார். புதிய கிராமம், “சோசலிசத்திற்கான” ஒரு பாதையாக கூட்டு விவசாயம், சமூக நுகர்வு மற்றும் தன்னாட்சிபெற்ற கிராமங்களிடையே பரஸ்பர உதவி போன்றவற்றை ஊக்குவித்தது. இந்த “கிராமப்புற சோசலிசம்” புரட்சிகர பாட்டாளிவர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக அது முதலாளித்துவத்தின்கீழ் சிறு-விவசாய அழிப்பினால் உண்டாகி சீரழிந்த விவசாயிகளின் குரோதத்தைப் பிரதிபலித்தது.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னரும் கூட, விவசாயிகளின்பால் கொண்டிருந்த இந்த நோக்குநிலையை மாவோ ஒருபோதும் கைவிடவில்லை என்பதோடு 1925-1927இன் எழுச்சிகளின் போது தவறின்றி அவர் கட்சியின் வலதுசாரியில் இருந்தார். 1927 தொழிலாள வர்க்க போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் கூட, சீனப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் ஒரு முக்கியமற்ற காரணியாக இருந்தது என்பதையே மாவோ தொடர்ந்து தூக்கிப் பிடித்திருந்தார். “ஜனநாயக புரட்சியின் சாதனைக்கு நாம் 10 புள்ளிகள் அளிக்கிறோமென்றால், பின்னர்... நகரத்தார் மற்றும் இராணுவ பிரிவுகளுக்கு மூன்று புள்ளிகள் மட்டுமே பெறுகின்றன, அதேவேளை மீதமிருக்கும் ஏழு புள்ளிகள் விவசாயிகளுக்கே போக வேண்டும்...” (Stalin's Failure in China 1924-1927, Conrad Brandt, The Norton Library, New York, 1966, p. 109).

தோல்வியின் விளைவுகள்

சீனப் புரட்சியின் தோல்விக்குப் பின்னர் வெகுவிரைவில், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ட்ரொட்ஸ்கி உள்நாட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு சீனப் புரட்சியில் எது பணயமாக இருந்ததென்பதை ட்ரொட்ஸ்கியும், இடது எதிர்ப்பும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை 1925-1927 சீன ஆவணம் தெளிவுபடுத்துகின்றது. மூன்றாம் அகிலத்தின் கொள்கையை மாற்றவும், ஒரு புரட்சிகர வெற்றிக்கு சிறந்த நிலைமைகளை உருவாக்கவும் ஒரு மாபெரும் அரசியல் போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி ஈடுபட்டிருந்தார். எல்லாவற்றையும்விட குறைந்தபட்சமாக உத்தியோகபூர்வமாக சரியென்று நிரூபிக்கப்பட்ட ஒரு பிரச்சினையாக அது இருந்தது.

1928இல் அவர் நாடுகடத்தப்பட்டிருந்த போது எழுதப்பட்ட, அவருடைய சுயசரிதையான எனது வாழ்க்கை (My Life) இல், சியாங் கேய்-ஷேக் ஷாங்காய் தொழிலாளர்களை இரத்தத்தில் மூழ்கடித்தப் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்ந்திருந்தார். “கட்சி முழுவதும் பரபரப்பு அலையென மோதியது. எதிர்தரப்பு அதன் தலையைத் தூக்கியது. ... ஸ்ராலினின் கொள்கையின் அப்பட்டமான திவால்தன்மை எதிர்தரப்பை வெற்றிக்கு அருகில் கொண்டு வருவதோடு பிணைந்துள்ளதாக பல இளம் தோழர்கள் கருதினர். சியாங் கேய்-ஷேக்கால் ஆட்சிமாற்றம் நடந்த முதல் ஒருசில நாட்களுக்குப் பின்னர், என்னுடைய இளம் தோழர்களின் சூடான தலைகளில் (இளைஞர்கள் அல்லாத சிலரின் மீதும் கூட) பல வாளி குளிர்ந்த நீரை நான் ஊற்ற வேண்டியதாயிற்று. சீனப் புரட்சியின் தோல்வியிலிருந்து எதிர்தரப்பு மேலெழ முடியாது என்பதை அவர்களுக்கு நான் காட்ட முயன்றேன். எங்களுடைய கணிப்பு சரியென்று நிரூபணமான உண்மை ஓராயிரம், ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் புதிய ஆதரவாளர்களையும் கூட எங்கள் பக்கம் ஈர்க்கக்கூடும். ஆனால் மில்லியன் கணக்கானவர்களுக்கு எங்களுடைய கணிப்பு முக்கியமான விஷயமாக இருக்கவில்லை, மாறாக சீனப் பாட்டாளி வர்க்கம் நசுக்கப்படுகிறது என்ற உண்மையே முக்கியமானதாக இருந்தது. 1923இல் ஜேர்மன் புரட்சியின் தோல்விக்குப் பின்னர், 1926இல் ஆங்கிலேய பொது வேலைநிறுத்தம் முறிக்கப்பட்ட பின்னர், சீனாவில் இந்த புதிய பேரழிவு சர்வதேச புரட்சியின் மீது வெகுஜனங்களின் ஏமாற்றத்தைத் தீவிரப்படுத்த மட்டுமே செய்யும். மேலும் இதே ஏமாற்றம் தான், ஸ்ராலினின் தேசிய-சீர்திருத்த கொள்கைக்கான முதன்மை உளவியல் ஆதாரமாக இருந்து உதவியது.” (My Life: An Attempt at an Autobiography, Leon Trotsky, Penguin Books, 1979, pp. 552-553).

மூன்றாம் அகிலம் மற்றும் CCPஇன் இதர பிரிவுகளிலிருந்து ஸ்ராலின் ட்ரொட்ஸ்கிக்கு வேலிப்போட முயன்றாலும் கூட, அவருடைய முயற்சிகள் பகுதியளவிற்கே வெற்றி பெற்றன. சோவியத் ஒன்றியத்தில் படித்துவந்த சீன மாணவர்களின் ஒரு குழு இடது எதிர்ப்பின் தாக்கத்தின்கீழ் வந்தது. அது, அக்டோபர் புரட்சியின் அதிகாரத்துவத்தின் 10ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு இடையில், செஞ்சதுக்கத்தில், 1928 நவம்பர் 7இல் அதன் போராட்டத்தில் பங்குபெற்றது. 1928இன் இறுதிவாக்கில், குறைந்தபட்சம் 145 சீன மாணவர்கள் மாஸ்கோ மற்றும் லெனின்கிராடில் இரகசிய ட்ரொட்ஸ்கிச அமைப்புகளை ஸ்தாபித்திருந்தனர்.

அதேநேரத்தில், மூன்றாம் அகிலத்தின் ஆறாவது காங்கிரஸின் போது, மூன்றாம் அகில வேலைத்திட்டத்தின் மீது அவருடைய பிரபல விமர்சனத்தை எழுதினார். வாங் பாங்க்சி உட்பட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருசில பிரதிநிதிகள், ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் படித்து, இடது எதிர்ப்பின் பகுப்பாய்வுகளை ஏற்றுக் கொண்டனர். 1929இல் இந்த சீன மாணவர்களில் சிலர் சீனாவிற்குத் திரும்பிய பின்னர், சென் டுக்சியு மற்றும் பெங் ஷூஜி உட்பட CCP தலைவர்களின் ஒரு பிரிவு ட்ரொட்ஸ்கிசத்திற்குத் திரும்பி, சீன இடது எதிர்ப்பை ஸ்தாபித்தனர்.

சீனாவில், பாரிய புரட்சிகர எழுச்சிகளைப் பயன்படுத்தி அதன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டிருந்த KMT, அந்நாட்டை “ஜனநாயகரீதியில்” சேர்த்து நிறுத்தவோ அல்லது அவ்விதத்தில் ஆட்சி செலுத்தவோ முற்றிலும் இலாயக்கற்று இருந்ததை நிரூபித்தது. கோமின்டாங்கின் “வெண்மை பயங்கரம்” பல ஆண்டுகளுக்கு நீடித்தது. 1927 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில், 38,000 பேர் கொல்லப்பட்டதாகவும், 32,000த்திற்கும் மேற்பட்டோர் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஒரு மதிப்பீடு குறிப்பிட்டது. 1928 ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரையில், 27,000த்திற்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டனர். 1930வாக்கில், அண்ணளவாக 140,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது சிறையிலேயே இறந்தனர் என்று CCP மதிப்பிட்டது. 1931இல், 38,000த்திற்கும் மேற்பட்டோர் அரசியல் எதிரிகளாக கொல்லப்பட்டனர். சீன இடது எதிர்ப்பு KMTஇன் பொலிசால் வேட்டையாடப்பட்டது மட்டுமின்றி, அத்தோடு அது ஸ்ராலினிச CCP தலைமையால் அதிகாரிகளிடம் காட்டிக் கொடுக்கப்பட்டது.

தோல்வியுற்ற புரட்சியின் அரசியல் விளைவுகள் சீன எல்லைகளுக்கும் அப்பால் நீண்டிருந்தது. அதேபோல், ஒரு வெற்றியானது ஆசியா முழுவதிலும் மற்றும் ஏனைய காலனித்துவ நாடுகளிலும் ஒரு பிரமாண்டமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். மற்றவற்றுடன், 1930களில் ஜப்பானிய இராணுவவாதத்தின் எழுச்சி மற்றும் உலக யுத்தத்தை நோக்கி சரிந்தமைக்கு எதிரான ஜப்பானிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் அது பெரும் தூண்டுதலை அளித்திருக்கும்.

இராணுவவாதம் மற்றும் யுத்த உந்துதல்களோடு உலக முதலாளித்துவம் மீண்டுமொருமுறை நெருக்கடிக்குள் வீழ்கின்ற நிலையில், சீன மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம், சீனப் புரட்சியின் தோல்வியிலிருந்து பெற்ற அரசியல் படிப்பினைகளை முற்றிலுமாக உள்வாங்கி கொள்வதன் மூலமாக மட்டுமே வரவிருக்கும் எழுச்சிகளுக்கு தயாரிப்பு செய்து கொள்ள முடியும்.


முற்றும்

Loading