தெற்காசியா, அமெரிக்காவின் “முன்னிலை” கொள்கை மற்றும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் மே 3 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மே தின இணையவழி கூட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) பொதுச் செயலாளர் விஜே டயஸ் ஆற்றிய உரை

தோழர்களே, நான் இலங்கையின் கொழும்பில் இருந்து பேசுகிறேன்.

உலகம் பூராவும் புவியரசியல் பகைமைகளதும் போர் அபாயங்களதும் வளர்ச்சியானது தெற்காசியாவில் மிகவும் கூர்மையான வடிவத்தை எடுத்துள்ளது. அமெரக்க ஏகாதிபத்தியமானது பூகோள மேலாதிக்கத்திற்கான அதன் குறிக்கோள்களையும் சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதை இலக்காகக் கொண்ட அதன் “ஆசியாவில் முன்னிலை” கொள்கையையும் முன்னெடுக்கின்ற நிலையில், இந்த முழு பிராந்தியமும் இந்த கட்டுக்கடங்கா குழப்பத்தினுள் இழுபட்டுச் செல்கின்றது.

தசாப்த காலத்திற்குப் பின்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி கொழும்புக்கு விஜயம் செய்துள்ள நிலையில், இதன் விளைவுகள் இலங்கையில் மிகவும் கூர்மையாக வெளிப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை “மறுசீரமைப்பதே” அவரது இலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினால், இது மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இந்தத் தீவை அமெரிக்க செயல் எல்லைக்குள் உறுதியாக இருத்துவதாகும்.

வாஷிங்டன் ஏற்கனவே உறவுகளை “மறுசீரமைக்க” பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் சீனாவுடன் கொண்டிருந்த உறவுகளையிட்டு எரிச்சலடைந்த அமெரிக்கா, இராஜபக்ஷ தன் வழியை மாற்றிக்கொள்வதற்கு நெருக்குவதற்காக “மனித உரிமைகள்” பிரச்சாரம் ஒன்றை அடுத்தடுத்து முன்னெடுத்தது. அது தோல்விகண்ட நிலையில், வாஷிங்டன் ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவை பதிலீடு செய்வதற்கான முயற்சிக்கு ஒத்துழைத்தது. இதில் கெர்ரி ஒரு நேரடியான பங்காற்றினார். சிறிசேனவிடம் “ஆட்சி அமைதியாக கையளிக்கப்படுவதை” கான வெள்ளை மாளிகை விரும்புகிறது என அவர் தேர்தல் நடந்த அன்று இரவு இராஜபக்ஷவை தொடர்புகொண்டு எச்சரித்தார்.

கடந்த மூன்று மாதங்களாக புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்புக்கு அடுத்தடுத்து வந்த உயர் மட்ட அமெரிக்க இராணுவ மற்றும் இராஜதந்திர அதிகாரிகளின் பயணத்தின் தொடர்ச்சியாகவே கெர்ரி இந்த வாரக் கடைசியில் இலங்கைக்கு வந்தார். சிறிசேன வாஷிங்டனின் தாளத்திற்கு முழுமையாக இயங்குகிறார், சீனாவுக்கு எதிரான எந்தவொரு மோதலின் போதும் அவர் தம்முடன் இருப்பார் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதே கெர்ரியின் பணியாகும்.

கொழும்பில் நடந்த ஆட்சி மாற்ற நடவடிக்கை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஈவிரக்கமின்மை பற்றிய ஒரு எச்சரிக்கையாகும். அது விளைவுகளையிட்டு முழு அலட்சியத்துடன் ஒட்டு மொத்த பிராந்தியத்தையும் ஸ்திரமற்றதாக்குகின்றது. பூகோள முதலாளித்துவத்தின் மோசமடைந்து வரும் வீழ்ச்சியினால் உந்தப்பட்டுள்ள அமெரிக்காவானது இராஜதந்திர சதிகள் மற்றும் ஆத்திரமூட்டல்கள், மற்றும் இராணுவ வழிமுறைகள் ஊடாகவும் தனது வரலற்று வீழ்ச்சியில் இருந்து தப்பிக்கொள்ள ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது.

தெற்காசியாவில் வாஷிங்டனின் திட்டத்தின் மைய இலக்கு இந்தியாவுடனான அதன் மூலோபாய பங்காண்மையாகும். இது இந்து மேலாதிக்கவாத நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதுடன் ஆழமடைந்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம் விரோத படுகொலைகளில் அவர் ஆற்றிய மத்திய பங்கின் காரணமாக மோடி நாட்டுக்குள் நுழையாமல் அமெரிக்கா பல ஆண்டுகள் தடை விதித்திருந்தது. இப்போது அதே மோடி, வாஷிங்டனின் விருப்பத்துக்குரிய பங்காளியாகியுள்ளார். அவரது “மனித உரிமை சாதனைகள்” அலட்சியம் செய்யப்பட்டு அவருக்கு இராஜ மரியாதை வழங்கப்படுகின்றது.

பரபரப்பான உத்தியோகபூர்வ கொடுக்கல் வாங்கல்களே விடயங்களை வெளிப்படுத்துகின்றன. ஒரு ஆண்டுக்குள், கெர்ரியும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சக் ஹெகலும் புது டெல்லிக்குச் சென்றிருந்ததோடு மோடி வாஷிங்டனுக்குச் சென்றுவந்தார். முதல் முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி, ஒபாமா, ஜனவரியில் இந்தியாவின் குடியரசு தினத்தில் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ரஷ்யா அன்றி, இப்போது அமெரிக்காவே இந்தியாவின் மிகப்பெரும் இராணுவ விநோயகத்தராக ஆகியுள்ளமை, இந்த நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அமெரிக்காவின் ஆதரவு, இந்திய ஆளும் வர்க்கம் தமது பலத்தை எல்லா இடத்திலும் விரிவாக்குவதற்கு மட்டுமே ஊக்கமளிக்கின்றது. மோடி ஏற்கனவே பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக மிகவும் ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே மூன்று போர்களில் மோதிக்கொண்டுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவும் சீனாவும் இரத்தம் தோய்ந்த எல்லைப் போரில் ஈடுபட்டன. இப்போது இந்த மூன்று நாடுகளும் அனு ஆயுதங்களைக் கொண்டுள்ளன.

ஒரு முன்னணி அமெரிக்க மூலோபாயவாதியான ஆன்டனி கோர்ட்ஸ்மன் முன்வைத்துள்ள ஒரு பயங்கரமான அறிக்கையில், தெற்காசியாவில் வெகுஜனங்களின் தலைவிதி தொடர்பான அமெரிக்காவின் அலட்சியம் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனு ஆயுதப் போரில், பத்தாயிரக்கணக்கானவர்கள் அல்லது கோடிக்கணக்கானவர்கள் கோரமான முறையில் மரணமடைவார்கள் என அவர் முன்னறிவிக்கிறார். ஆனால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பை பொறுத்தளவில், இந்தப் போர் “தீர்க்கமான மூலோபாய விளைவுகளை நிச்சயம் கொண்டிருக்காது, ஆனால் நிச்சயமாக நன்மைகளைக் கொண்டிருக்கும்” என அவர் அறிவிக்கின்றார்.

தசாப்தத்திற்கும் மேலான யுத்தம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பினால் அமெரிக்கா ஏற்கனவே ஆப்கானிஸ்தானை நாசமாக்கியுள்ளது. ஒபாமா ஆட்சிக்கு வந்த பின்னர், ஆப்கான், ஆப்பாக் (AfPak) யுத்தமாக ஆகியுள்ளது. சிஐஏ, பாகிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் ஆளில்லா விமான ஏவுகணைகளை தொடர்ந்தும் பொழிந்து நூற்றுக் கணக்கான பொது மக்களை கொல்கின்றது. இது பாகிஸ்தான் அரசாங்கத்தின் நெருக்கடியை குவிப்பதோடு இந்தியாவுடன் மேலும் பதட்டங்களுக்கு எரியூட்டுகின்றது.

ஏகாதிபத்திய தலையீட்டில் இருந்து தெற்காசியாவில் எந்த மூலையும் தப்பவில்லை. 2004 சுனாமியை இலங்கையில் அமெரிக்க கடற்படையை நுழைப்பதற்காக வாஷிங்டன் பயன்படுத்திக் கொண்டது போலவே, நேபாளத்துக்குள் அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதற்கான ஒரு சாக்குப் போக்காக, அந்த நாட்டுக்குள் நடந்த அழிவுகரமான பூமி அதிர்ச்சியை பென்டகன் சுரண்டிக்கொள்கின்றது.

முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டு வரும் அழிவுக்கு, சோசலிச சர்வதேசியவாதத்துக்கான போராட்டத்துடன் பதிலளிப்பதற்காக உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழைப்பு விடுக்கின்றது. இதன் அர்த்தம், தெற்காசியாவில் தொழிலாள வர்க்கம், அனைத்து கட்சிகள், முதலாளித்துவத்தின் சகல பிரிவுகள் மற்றும் அவர்களின் ஸ்ராலினிச, தொழிற்சங்க, போலி இடது ஆதரவாளர்களையும் நிராகரிக்க வேண்டும். ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக சேவை செய்வதன் மூலமும் உழைக்கும் மக்களின் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமை மீதான தாக்குதலை உக்கிரமாக்குவதன் மூலமுமே ஆளும் வர்க்கங்கள் இதற்குப் பிரதிபலிக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை மழுங்கடிப்பதன் மூலம், அவர்கள் தேசியவாத, பிராந்தியவாத, மொழி மற்றும் மதவாத பிளவுகளை கிளறிவிட்டு தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்த முயற்சிக்கின்றனர்.

இதை தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும். பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவம், வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை இட்டு நிரப்ப முற்றிலும் இலாயக்கற்றது, என ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே லியோன் ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் விளக்கினார். இது மீண்டும் மீண்டும் இந்திய துணைக் கண்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் கசப்பான அனுபவங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் நகர்ப்புற வறியவர்களை அணிதிரட்டுவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே போர் ஆபத்துக்கு முடிவுகட்டவும், ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்தவும் மற்றும் மனித இனத்திற்கு கெளரவமான எதிர்காலத்தை வழங்கவும் முடியும். இது ஒரு சர்வதேச போராட்டமாகும். இதில் இந்தியாவில் உள்ள அரை பில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களும் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுமாக தெற்காசியாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் பங்குபற்ற வேண்டும். புரட்சிகர வேலைத் திட்டம் மற்றும் முன்னோக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக புரட்சிகரத் தலைமைத்துவமும் தீர்க்கமான பிரச்சினையாகும். இதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே வழங்குகின்றது.

வரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நாம் தெற்காசியாவிலும் அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய மையங்கள் உட்பட உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

Loading