இரு முகங்கள் (ரஷ்ய புரட்சியின் உள்ளார்ந்த சக்திகள்)

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

17 March 1917

உலக சோசலிச வலைத்தளம் 1917 பிப்ரவரி யிலிருந்து மார்ச் வரையிலான லியோன்ட் ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் புதிய மொழி பெயர்ப்புக்களை வெளியிடுகிறது. பலவிடயங்களில், இக்கட்டுரைகள் முதல் முறையாக இப்போதுதான் ஆங்கிலத்தில் வருகின்றன.

இக்கட்டுரை நியூ யோர்க் நோவிமிர் (புதியஉலகு) எனும் செய்தித்தாளில் மார்ச் 17, 1917 இல் வெளியிடப்பட்டது. இது 1923 இல் ட்ரொட்ஸ்கியின் யுத்தமும் புரட்சியும் (Voina i Revoliutsiia) என்ற நூலில் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது பக்கம் 434-438. ஆங்கிலத்தில் ட்ரொட்ஸ்கியின் பேச்சுக்கள் என்ற நூலில் வெளியிடப்பட்டது. கீழேஉள்ளதுமூல மொழிபெயர்ப்பாகும். (மொழிபெயர்ப்பாளர்: ஃபிரெட்வில்லியம்ஸ், பதிப்புரிமை; WSWS)

என்ன நடக்கின்றது என்று உன்னிப்பாகக் கவனிப்போம்.

நிக்கொலாய் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார், மற்றும் சில தகவலாதாரங்களின்படி, காவலில் கூட இருக்கிறார். மிகவும் முக்கிய கறுப்பு நூற்றுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களுள் மிகவும் வெறுக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர்வாதிகள், மிதவாதிகள் மற்றும் தீவிரப் போக்குடைய கெரென்ஸ்கி ஆகியோரைக் கொண்ட ஒரு புதிய அமைச்சகம் ஒன்றுகூடியுள்ளது. பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாம் பளிச்சிடும் உண்மைகள், பெரிய உண்மைகள். இவை, வெளி உலகிற்கு மிக நன்கு தெரியும் உண்மைகள். அரசாங்கத்தின் மிக உயர் மட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களின் அடிப்படையில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் நிகழ்வுகளின் அர்த்தத்தை மதிப்பீடு செய்து, புரட்சியானது வெற்றி அடைந்திருக்கிறது மற்றும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்று அறிவித்தன.

ஜாரும் அவரது கருப்பு நூற்றுவர்களும் அதிகாரத்தை தக்கவைக்கவே போராடுகின்றனர். ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் ஏகாதிபத்தியத் திட்டங்கள், யுத்தம், கூட்டு நாடுகளின் நலன்கள் – இவை அனைத்தும் பின்புலத்தில் மறையத் தொடங்குகின்றன. தங்களின் மிக நம்பிக்கையான படைகளை சுதந்திரமாய் விடும்பொருட்டு மற்றும் தங்களின் சொந்த மக்கள் மீதே ஏவும் பொருட்டு, அவர்கள் எந்த நேரத்திலும் ஜேர்மன் முடியாட்சியான Hohenzollern மற்றும் ஆஸ்திரிய முடியாட்சியினரான Habsburg உடன் ஒரு அமைதி பேரத்திற்குள் செல்லத் தயாராக இருந்தார்கள்.

டுமாவில் உள்ள முற்போக்குக் கூட்டு (Progressive Bloc) ஜாரையும் அவரது அமைச்சர்களையும் நம்பவில்லை. இந்தக் கூட்டானது ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரால் உருவாக்கப்பட்டது. அதற்கு இரு இலக்குகள் இருக்கின்றன: முதலாவதாக இறுதிவரைக்கும் வெற்றியடையும்வரை யுத்தத்தைத் தொடர்வது; இரண்டாவதாக அதிகஒழுங்கு, கட்டுப்பாடு மற்றும் பொறுப்புடமை மூலம் நாட்டில் சீர்திருத்தம் செய்வது. ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்திற்கு சந்தைகளை வென்றெடுக்க, எல்லைகளைப் பெற, செல்வந்தராக வெற்றி தேவை. வெற்றியைச் சாத்தியமாக்குவதற்கு ரஷ்ய முதலாளித்துவத்திற்கு பிரதானமாய் சீர்திருத்தங்கள் தேவை.

ஆனால் முற்போக்கு-ஏகாதிபத்திய கூட்டு அமைதி வழியில் சீர்திருத்தங்களை விரும்புகிறது. மிதவாதிகள் முடியாட்சி மீது அழுத்தம் கொடுக்க டுமாவை விரும்பினர் மற்றும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களுடன் ஒத்துழைப்பை சோதித்துப் பார்ப்பதில் அதைப் பற்றிக்கொள்கின்றனர். அவர்கள் புரட்சியை விரும்பவில்லை. புரட்சியானது தொழிலாள வர்க்கத்தை முன்னணியில் வைப்பது அவர்களின் மேலாதிக்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலைக் குறிக்கிறது என்று அவர்கள் அறிவார்கள் மற்றும் பெரும்பாலான அனைத்துமே அவர்களின் ஏகாதிபத்திய திட்டங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் என்று அறிவார்கள். உழைக்கும் வெகுஜனங்கள் — நகரங்களில், கிராமங்களில் மற்றும் இராணுவம் தாமுமே அமைதியை விரும்புகின்றனர். மிதவாதிகள் இதை அறிவார்கள். ஆகையால் அவர்கள் புரட்சியின் பகைவரோடு எப்போதும் இருந்துவிடுகின்றனர். சிலமாதங்களுக்கு முன்னர் மிலியுக்கோவ் டுமாவில் பின்வருமாறு அறிவித்தார்: “வெற்றிக்காக ஒரு புரட்சி தேவைப்பட்டால், பின்னர் நான் வெற்றிக்கு எதிராக இருப்பேன்.”

ஆனால் மிதவாதிகள் இப்போது அதிகாரத்திற்கு வந்திருக்கின்றனர் புரட்சிக்கு நன்றி சொல்ல வேண்டும். முதலாளித்துவ இதழாளர்களுக்கு இந்த உண்மையைத் தவிர வேறு தெரியாது. வெளிவிவகார அமைச்சகத்தின் புதிய அமைச்சர் என்ற வகையில், மிலியுக்கோவ் ஏற்கனவே-புரட்சியானது வெளிநாட்டு எதிரியை வெல்லல் என்ற பெயரில் நடத்தப்பட்டிருந்தது, புது அரசாங்கம் தாமே போரை நடத்தும் பணியை அது தன் மிகச் சிறந்த முடிவுக்குப் போக எடுத்துக் கொண்டிருக்கிறது என்று அறிவித்தார். நியூயோர்க் வெடிபொருட்கள் பங்குச்சந்தை ரஷ்ய புரட்சியை துல்லியமாக இந்த வழியில் கணக்கு எடுத்துள்ளது: மிதவாதிகள் அதிகாரத்தில் இருக்கின்றனர் — அதன் பொருள் மேலும் நிறைய குண்டுகள் தேவைப்படும்.

பங்குச் சந்தையில் அநேக புத்திசாலிகள் உள்ளனர், பத்திரிகையாளர் மத்தியிலும் கூட புத்திசாலிகள் உள்ளனர். ஆனால் அது வெகுஜன இயக்கங்களாக வந்த உடனேயே அவர்கள் அனைவரும் தங்களின் முழு முட்டாள்தனத்தையும் காட்டி விடுகின்றனர். அது அவர்களுக்கு மிலுயுக்கோவே புரட்சியை நிர்வகிப்பதாகத் தெரிகிறது, அவர்கள் தங்களின் வங்கிகளை அல்லது பத்திரிகைகளை நிர்வகிப்பது போல. அவர்கள் விரிந்து வரும் நிகழ்வுகள் பற்றிய மிதவாத அரசாங்கத்தின் எதிரொலிப்பை, வரலாற்று உணவின் மேல் இருக்கும் பொங்கும் நுரையை மட்டும் அவர்கள் பார்கிகின்றனர்.

நீண்டகாலமாக கட்டுப்படுத்தப்பட்ட வெகுஜனங்களின் அதிருப்தியானது யுத்தத்தின் முப்பத்திரெண்டாவது மாதத்தில் அந்த அளவு தாமதமாக மேற்பரப்பில் வெடித்திருப்பது, போரின் போக்கில் பெரிதும் பலவீனம் அடைந்திருந்த போலீஸ் தடுப்பு அரணுடன் ஏற்பட்ட வெகுஜனங்களின் மோதலின் காரணமாக அல்ல, மாறாக தங்களது சமூக தேசபக்தி அரசியல் ஆதரவாளர்களுடன் முடியும், அனைத்து மிதவாத நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் தொழிலாள வர்க்கத்தின் மிகக் குறைந்த நனவுடைய தட்டின் மீது பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்து, ”தேசபக்த” ஒழுக்கம் மற்றும் ஒழுங்கினை அவர்களில் சிறிதுசிறிதாகப் புகட்ட முயற்சிப்பதனால் ஆகும். கடைசித் தருணத்தில் பட்டினி கிடக்கும் பெண்கள் வீதிக்கு வரும்பொழுது மற்றும் தொழிலாளர் அவர்களை ஒரு வேலைநிறுத்தத்தினால் ஆதரிக்கத் தயாரித்தபொழுது, மிதவாத முதலாளித்துவ வாதிகள் அண்மைய தந்திகளின்படி, வேண்டுகோள்கள், அறிவுரைகள் மூலம் நிகழ்வுகளின் அபிவிருத்தியை கையில் பிடித்துவைத்திருக்க முயல்கின்றனர், எப்படி என்ன்றால் டிக்கன்சின் கதாநாயகிகளுள் ஒருவர் துடைப்பத்தால் கடலலையைக் கட்டுப்படுத்த விரும்புவது போல.

ஆனால் இயக்கமானது தொழிலாளர் குடியுருப்புக்களில் இருந்து கீழிருந்து வளர்ந்தது. திட்டமின்மை, பரஸ்பர துப்பாக்கிச்சூடு மற்றும் சிறுசிறு கைகலப்புக்களின் மணித்தியாலங்கள் மற்றும் நாட்களுக்குப் பின்னர், பெரும்திரளான இராணுவத்தின் சிறந்த பிரிவுகளுடன் ஆரம்பித்து, துருப்புக்கள் கீழிருந்து வந்த கிளர்ச்சிகளுடன் சேர்ந்துகொண்டனர். பழைய ஆட்சியானது களைத்துவிட்டது, சீர்குலைந்துவிட்டது மற்றும் அந்நியப்பட்டுவிட்டது என்று நிரூபனமாக இருந்தது. கறுப்பு நூற்றுவர் அதிகாரத்துவத்தினர், தங்களின் மூலைகளில் கரப்பான் பூச்சிகள் ஒளிவது போல தங்களை மறைத்துக் கொண்டனர்.

பின்னர் டுமாவின் முறை வந்தது. கடைசி நிமிடத்தில் ஜார் அதனைக் கலைக்க முயற்சித்தார். “கடந்தகாலங்களின் எடுத்துக்காட்டுகளை அடுத்து”, அது இணக்கமான வகையில் கலைக்கப்பட்டிருக்கலாம், அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு அதிகம் கொடுக்கப்பட்டிருந்தால். ஆனால் தலைநகர்களில் புரட்சிகர மக்கள் ஏற்கனவே மேலோங்கி இருந்தனர். மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பிற்கு எதிரான அதேமக்கள், போரிட வீதிகளுக்கு வந்துவிட்டனர். இராணுவம் மக்களுடன் இருந்தது. முதலாளித்துவ வர்க்கம் அதன் சொந்த ஆட்சியை ஒழுங்கமைக்க முயற்சிக்காது இருந்திருந்தால், ஒரு புரட்சிகர அரசாங்கமானது கிளர்ந்தெழும் தொழிலாள வர்க்க வெகுஜனங்களிலிருந்து தோன்றியிருக்கும், ஜூன் மூன்று டுமாவானது ஜாரிசத்திடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற துணிவு கொண்டிருந்திருக்காது. ஆனால் அது உருவாக்கப்பட்டிருந்த இடைமருவு ஆட்சிக் காலத்தை பயன்படுத்தத் தவறவில்லை: முடியாட்சி தற்காலிகமாக பூமியின் எதிரிலிருந்து மறைந்து விட்டிருந்தது, ஆனால் ஒரு புரட்சிகர ஆட்சி இன்னும் உருவாகாதிருந்தது.

அது நிகழ்ந்திருக்கலாம், சந்தேகமே கூட இல்லை. Rodziankos, இந்த சூழ்நிலைகளில், கவனத்தை திருடியிருக்க முயற்சித்திருப்பார். ஆனால் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு தூதரகங்கள் இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்தன. “நேச சக்திகள்” ஐயத்திற்கிடமின்றி தற்காலிக அரசாங்கம் அமைப்பதில் பங்கேற்றன. நிக்கோலாயிடமிருந்து வரும் தனித்த அமைதி மற்றும் உழைக்கும் மக்களிடமிருந்து வரும் புரட்சிகர அமைதி இவற்றுக்கிடையில் நின்றுகொண்டு, நேச அரசாங்கங்கள் முற்போக்கு ஏகாதிபத்தியக் கூட்டின் கைகளில் அதிகாரத்தை மாற்றுவதில் தனித்தீர்வொன்றை எண்ணிப்பார்த்தன. ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் இப்பொழுது நிதிரீதியாக மிகப் பிணைப்புடன் லண்டனைச் சார்ந்து இருந்தது, மற்றும் பிரிட்டிஷ் தூதரின் “அறிவுரை” அவர்களுக்கான ஒரு கட்டளை போல இருந்தது. முந்தைய வரலாறு அனைத்தும் இருந்தபோதிலும், அவர்களது சொந்தக் கொள்கை இருந்த போதிலும், அவர்களது சொந்த விருப்பு இருந்த போதிலும், மிதவாத முதலாளித்துவ வர்க்கம் தங்களை அதிகாரத்தில் கண்டுகொண்டனர்.

மிலியுக்கோவ் இப்பொழுது “ஒரு முடிவு வரை” போரைத் தொடர்ந்து நடத்துவது பற்றிப் பேசுகிறார். அந்த வார்த்தைகள் அவர் உதடுகளை எளிதாகக் கடக்கவில்லை: அவர்கள் புது ஆட்சிக்கு எதிராக பரந்த வெகுஜனங்களின் சினத்தைத் தட்டி எழுப்புவார்கள் என்பதை அறிவார். ஆனால் மிலியுக்கோவ் லண்டனுக்காக, பாரிசுக்காக மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைக்காக இந்த வார்த்தைகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளார். மிலியுக்கோவ் தனது போர்வெறிக் கூச்சல் அறிவிப்பை, தனது சொந்த நாட்டிடம் இருந்து மறைக்கும் அதேவேளை, வெளிநாடுகளுக்கு தந்தி அனுப்புவதை பெரிதும் விரும்பலாம். தற்போதைய நிலைமையின் கீழ் மிலியுக்கோவ், யுத்தத்தை தொடுப்பதற்கு, ஜேர்மனியை நசுக்குவதற்கு, ஆஸ்திரியாவை துண்டிப்பதற்கு மற்றும் கான்ஸ்டாண்டிநோபிள் மற்றும் போலந்து இரண்டையும் கைப்பற்றுவதற்கு அவரால் இயலாது என்பதை மிலியுக்கோவ் நன்கு அறிவார்.

வெகுஜனங்கள் ரொட்டிக்கும் அமைதிக்குமான கோரிக்கைகளுடன் கிளர்ந்தெழுந்துள்ளனர். சில மிதவாதிகள் அதிகாரத்திற்கு வருவதால் பட்டினிகிடப்போருக்கு உணவளிக்கப்போவதுமில்லை, எவரொருவரது காயத்தையும் ஆற்றப்போவதுமில்லை. மக்களின் மிகவும் அவசியமான மற்றும் மிகவும் பின்தள்ளிப் போட முடியாத தேவைகளை திருப்திப்படுத்தும் பொருட்டு அமைதி தேவைப்படுகிறது. ஆனால் மிதவாத ஏகாதிபத்திய கூட்டானது அமைதி பற்றி குறிப்பிடக்கூட துணிவற்று உள்ளது. இதற்கு காரணம் அனைத்துக்கும் முதலாக அது வைத்துள்ள கூட்டின் காரணமாக. இரண்டாவதாக மக்களின் கண்களின் முன்னே யுத்தத்திற்கான பொறுப்பின் பாரிய பங்கை ரஷ்ய மிதவாத முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருப்பதன் காரணத்தால் ஆகும். மிலியுக்கோவ்களும் குச்கோவ்களும் ரோமனோவ் கமரில்லாவுடன் சேர்ந்து நாட்டை இந்த, பயங்கரமான ஏகாதிபத்திய சாகசத்திற்குள் மூழ்கடித்துவிட்டனர். இந்த துன்பகரமான யுத்தத்தை நிறுத்தி அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வேண்டும் என்பதன் பொருள், அவர்களை மக்களுக்கு பதில் கூறக் கடமைப்பட்டுள்ளவர்களாக்க வேண்டும். மிலியுக்கோவ்களும் குச்கோவ்களும் யுத்தத்தை கலைப்பதற்கு அஞ்சுவது புரட்சிக்கு அஞ்சுவதை விடவும் குறைந்ததல்ல.

எப்படி அவர்கள் அதிகாரத்தில் நிற்கிறாற்போல் இருக்கிறார்கள் என்பது இதுதான்: அவர்களால் வெற்றியை அடையலாம் என கணிப்பிடமுடியாதுள்ளபோதிலும் அவர்கள் கட்டாயம் போரை நடாத்த வேண்டும், அவர்கள் மக்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள், மக்களும் அவர்களை நம்பவில்லை.

“..மிக ஆரம்பத்திலேயே மக்களைக் காட்டிக் கொடுக்கவும் பழைய சமூகத்தின் கிரீடம் சூடிய பிரதிநிதிகளுடன் சமரசம் செய்துகொள்ளவும் அவர்கள் தயாராக இருந்தனர். அவர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் பழைய சமூகத்தை சேர்ந்தவர்களே;…. புரட்சியை கட்டுப்படுத்தும் தலைமைநிலையில் அல்ல, ஏனெனில் மக்கள் அதன் பின்னே நின்றனர், மக்கள் அவர்களை முன்னே தள்ளியதன்…. காரணமாக….. அவர்களில் நம்பிக்கை இல்லாமல், மக்களின் மேல் நம்பிக்கை இல்லாமல், மேலே உள்ளவர்களைக் குறைபட்டுக் கொண்டு, கீழே உள்ளவர்களைக் கண்டு நடுங்கிக் கொண்டு; இரு முனைகளிலும் சுயநலம் கொண்டு, மற்றும் அவர்களின் சுயநலம்பற்றி நனவுடனே; பழமைவாதிகளின்பால் புரட்சிகர நோக்கும், புரட்சியாளர்கள்பால் பழமைவாத நோக்கும்; தங்களுடைய சொந்த முழக்கங்கள் மீதே நம்பிக்கை இல்லாமல், கருத்துக்களுக்குப் பதிலாக சொற்றொடர்களைப் பயன்படுத்திக்கொண்டு; உலகக் கடல் நீர்ச்சுழலால் நடுக்கமடைந்து, அதேநேரம் அதைச் சுரண்டிக் கொண்டு, --- ……அற்பமே, அவர்கள் மூலத்தன்மையை முழுதும் தவிர்ப்பதற்காக, அவர்களின் அற்பத்தன்மையில் மட்டுமே மூலத்தன்மை உடையோராய் – முன்முயற்சி இல்லாமல், தங்களின்மீதே நம்பிக்கை இல்லாமல், மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல், ஒரு உலக வரலாற்று திட்டப்பணி இல்லாமல், தங்களின் ஆசைகளில் ஆதாயமடையக் கூடிய--- அவர்கள் சக்தி மிக்க மக்களின் முதலாவது இளம் நகர்வுகளை தனது முதுமைத்தளர்ச்சியின் நலன்களால் அவதூறு செய்யும் நிலைக்கு விடப்பட்ட ஒரு வயதான மனிதனைப் போல அவர்கள் இருக்கிறார்கள் -- கண்கள் இல்லாமல், காதுகள் இல்லாமல், பற்கள் இல்லாமல், ஒவ்வொன்றும் இல்லாமல் – மார்ச் புரட்சிக்குப் பின்னர் இப்படித்தான் பிரஷ்யன் பூர்சுவா பிரஷ்யன் அரசின் தலைமைநிலை மீது நின்றது” (கார்ல் மார்க்ஸ், “பூர்ஷூவாவும் புரட்சியும்” [1848] )

மாபெரும் ஆசானின் இந்த வார்த்தைகள் எமது மார்ச் புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்தின் உச்சியில் எம்முன் அது நிற்கையில் ரஷ்ய மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு துல்லியமான உருவப்படத்தைக் கொண்டிருக்கிறது. “தன்னிலேயே நம்பிக்கை இல்லாமல், மக்களின் மேல் நம்பிக்கை இல்லாமல், கண்கள் இல்லாமல், பற்கள் இல்லாமல்” – அதுதான் அதன் அரசியல் முகம்.

அதிர்ஷ்டவசமாக ரஷ்யாவையும் ஐரோப்பாவையும் பொறுத்தவரை, ரஷ்யப் புரட்சியானது இன்னொரு உண்மையான முகத்தைக் கொண்டிருக்கிறது: இடைக்கால அரசாங்கத்திற்கு எதிர்ப்பில் அங்கு தொழிலாளர் குழு இருக்கிறது, அது புரட்சியை திருடும் மிதவாத முயற்சிக்கும் முடியாட்சியிடம் மக்களைக் காட்டிக்கொடுக்கும் அதன் முயற்சிக்கும் எதிராக ஏற்கனவே எதிர்ப்புக் குரலை எழுப்பி இருக்கிறது.

மிதவாதம் கோருகின்றவாறு, புரட்சியானது இன்று நிறுத்தப்பட்டிருந்தால், அடுத்த மறுநாளே ஜாரிச-எதேச்சாதிகார–அதிகாரத்துவ பிற்போக்கானது அதன் சக்திகளை திரட்டி, அவர்களின் பாதுகாப்பற்ற அமைச்சரவை பதுங்கு குழிகளிலிலிருந்து குச்சகோவ்களையும் மிலியுக்கோவ்களையும் விரட்டியிருக்கும், பிரஷ்ய எதிர்ப்புரட்சி, அதன் நாளில் பிரஷ்ய மிதவாதத்தின் அனைத்துப் பிரதிநிதிகளையும் தூக்கி வீசியது போல. ஆனால் ரஷ்யப் புரட்சியானது நிற்கவில்லை. அதன் மேலும்கூடிய அபிவிருத்தியில், அதன் பாதையைத் தடுத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ மிதவாதிகளை, அது இப்பொழுது ஜாரிசப் பிற்போக்கை துடைத்தழித்துச் செல்லுவதுபோல துடைத்துச் செல்லும்.

Novy mir, 17 March 1917

Loading