மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
முற்போக்கு ரஷ்ய: கலை, பண்பாடு, புரட்சி
காண் கலைகளுக்கான செயின்ஸ்பரி மையம், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம், நார்விச், ஐக்கிய இராஜ்ஜியம் 2018 பிப்ரவரி 11 வரை காணலாம்
1917 அக்டோபர் புரட்சியைக் குறிக்கும் வகையில் இலண்டனிலும் சர்வதேச அளவிலும் நிகழ்த்தப்பெற்றுள்ள ஆரவாரமான காட்சிகளுடன் ஒப்புநோக்கின் நார்விச்சில் இடம்பெற்றுள்ள ”முற்போக்கு ரஷ்ய” கண்காட்சி சின்னஞ்சிறியதே. ஆனால் இதற்காக யாரும் ஊக்கமிழந்து அங்கு போகாமல் இருந்து விடக்கூடாது.
காட்சியமைப்பாளர்களான ரஷ்ய வரலாற்றுப் பேராசிரியர் பீட்டர் வால்ட்ரன், அவரின் உதவியாளர்கள் ஜெமீ பிரீமன், ரயன் ஹேல் ஆகியோர் முந்துபுதுமை (avant-garde) ஓவியக்கலையின் வெவ்வேறு களங்களை பிரதிபலிக்கும் காட்சிப்பொருட்களைக் கவனமாகத் தெரிந்தெடுத்துள்ளனர் — போல்ஷிவிக் புரட்சிக்கு முன்னும் பின்னுமான இக்கலையின் வளர்ச்சி பற்றிய உன்னிப்பான வரலாற்றுக் கதையாடலை இந்தக் காட்சிப்பொருட்கள் வழங்குவது வரவேற்கத்தக்கது.
செயின்ஸ்பரி மையத்தில் அமைக்கப்பெற்ற “அரச பொன்முட்டைகள்” எனும் இணைக் கண்காட்சியை ஊக்கப்பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கண்காட்சி ஜாரின் ரஷ்ய செல்வச் செழிப்பில் உல்லாசமாய் ஒதுங்கியிருந்த நிலையை விரிந்து பரந்த ஜனநாயக அபிலாஷைகள் புரட்சியால் பேணி வளர்க்கப்பட்ட நிலையுடன் ஒப்பீட்டுக் காட்டுவதாக அமைந்தது.
இந்த ஆண்டு நடைபெற்ற பிற கண்காட்சிகளைப் போலல்லாமல், ”முற்போக்கு ரஷ்ய” கண்காட்சி அக்டோபர் புரட்சியை ஒருவிதமான வரலாற்றுப் பிழையென்றோ, ரஷ்யாவின் இயல்பான வளர்ச்சியிலிருந்து விலகிச் சென்ற செயல் என்றோ காட்டவில்லை. கலைஞர்களை போல்ஷிவிக் கருத்துப் பரப்பல்-எந்திரம் ஏவிய ஏமாற்றுக்கார்களாகச் சித்திரிக்கவும் இல்லை.
இந்தக் கண்காட்சி, விரைவான தொழில் வளர்ச்சி, நகரமயமாக்கம், “அனைத்து மட்டங்களிலும்… புதிய நடவடிக்கையின் திசையில் செல்லவிருந்த” சமூகம், முதல் உலகப் போரின் பெருந்தாக்கம் ஆகியவற்றின் எதிரே 300 ஆண்டுக் கால ரொமனோவ் அரசாட்சி சிதைவுற்றதை முறையாக ஆவணமாக்குகிறது.
பேரரசுத் தலைநகரமாக இருந்து போல்ஷிவிக் செல்வாக்கிற்கும் ஆதரவுக்கும் மையமாக மாறவிருந்த செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரம் “பேரரசு முழுவதும் பரவியிருந்த பதட்டங்கள் புட்டியில் அடைக்கப்பட்டதாக” விளங்கிற்று.
எப்படி ரொமனோவ் அரசகுலம் சமயப் பழமையும், கட்டற்ற மன்னராட்சியும், “புனித ரஷ்ய” தேசியமும் சேர்ந்த ஒரு கொள்கையைத் திணிக்க முயன்றது என்பதையும், அது எப்படி ”நாட்டின் ஆட்சியதிகாரத்தில் மக்கள் பங்கேற்பு என்ற கருத்தை மறுதலித்து வந்தது,” 1905ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின்னரே ஆட்சியாளர்கள் ”சலுகைகள் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும் கண்காட்சியின் அட்டவணைக் குறிப்பேடு விளக்கிச் சொல்கிறது. எப்படி “இரண்டாம் நிக்கோலசும் அவருக்கான அறிவுரைஞர்களும் புதிய நாடாளுமன்றத்தை வெறுப்புடன் நடத்தினர், அதன் அதிகாரத்தை முடிந்த வரை கட்டுத்தளைகளிட்டு நெருக்கிச் சுருக்க முயன்றனர்” என்று அது சுட்டிக்காட்டுகிறது.
1914ஆம் ஆண்டு போர் மூண்ட காலத்திற்குள் ரஷ்ய சமூகத்தில் அநேகமாய் ஒவ்வொரு பிரிவினருமே, குறிப்பாக உழவர்களும் மென்மேலும் பெருந்தொகையான தொழிலாளர்களும் மன்னராட்சி தங்களுக்கு இரண்டகம் செய்து விட்டதாகக் கருதினார்கள்” உழவர்கள் பிரபுக்களாலும் ஆளும் உயரடுக்காலும் சுரண்டப்படுவதை மென்மேலும் வெறுத்தார்கள். சீர்திருத்தங்களால் உழவர்களின் அன்றாட வாழ்வில் பெரிதாக எந்த நன்மையும் விளையவில்லை. போரினால் இந்தச் சிக்கல்கள் முற்றிய போதிலும், 1914க்கு முன்பே புரட்சி தவிர்க்கவியலாததாயிற்று” என்கிறது அட்டவணைக் குறிப்பேடு.
கலைத்துவ வெளியில், “ஜாரின் ஒடுக்குமுறை அரசு மூர்க்கமான தணிக்கைமுறையைக் கருவியாகக் கொண்டு சமூக, அரசியல் சிக்கல்களை வெளிப்படையாகப் பேசுவதை ரஷ்யர்களுக்கு கடினமாக்கியது” எப்படி என்பதை அட்டவணைக் குறிப்பேடு விளக்கிச் சொல்கிறது. ஆகவே ஓவியர்கள் ஓவியக் கலையைப் பயன்படுத்தி அக்கால நிலைமைகளைப் பற்றி ஆழ்ந்த வாதக் கணைகள் தொடுத்தார்கள் என்பதை அதிலிருந்து அறிய முடிகிறது.
பெரும்பாலான ஓவியர்கள் தங்களை ஒரு சர்வதேச கலை இயக்கத்தின் பகுதியாக அறிந்தேற்றுக் கொண்ட போதிலும் ரஷ்ய சமய, தேசிய படிமத் தொகுதிக்கு உட்பட்டே தமது “கலகத்தை” வெளிப்படுத்திக் கொண்டார்கள். பிற்காலத்தில் புரட்சியை ஆதரிக்கவிருந்த பல முந்துபுதுமை ஓவியக் கலைஞர்களும் இதிலடங்குவர். முந்துபுதுமை ஓவியக்கலையும் ஓவியர்களும் தேக்க நிலையை அடைந்து விட்டதாகவே தோன்றிற்று. புரட்சியால்தான் அவர்களைக் காப்பாற்ற முடிந்தது.
எடுத்துக்காட்டாக, நத்தாலியா கொஞ்சொரோவ்-இன் 1911ஆம் ஆண்டு ஓவியமாகிய நற்செய்தியாளர்கள் என்பதன் சமய உள்ளடக்கம் தெளிவாகக் காணும்படி உள்ளது. ஆனால் புனிதப் பேராயர், இந்த ஓவியமும் அத்துடன் இன்னும் 22 ஓவியங்களும் சமய நிந்தனை செய்வதாகக் கருதினார். நத்தாலியாவின் 1914 செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் கண்காட்சியில் இந்த ஒவியத்தைத் தடை செய்யத் திருச்சபை முயன்றது. புரட்சிக்குப் பின் கொஞ்சொரோவா புதிய ஓவியக் கலையின் முன்னோடிகளில் ஒருவரானார். இந்தக் கலையின் வெளிப்பாடாக பாலே நடனக்காரி சேர்ஜ் தியாகிலேவ்-இன் துடிப்பான எளிய உருப்படம் (1919) இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
கசிமீர் மலெவிச்-இன் புகழ் பெற்ற ஓவியமான தூய வரைவடிவ கறுப்புச் சதுரம் (1915) “கடைசி எதிர்காலவியல் ஓவியக் கண்காட்சி 0.10 [சுழியம்-பத்து]” என்பதன் உச்சி மூலையில் இடம்பெற்றதைக் காட்டும் ஒளிப்படம் ஒன்றுள்ளது. மத அடையாளம் அந்த இடத்தில் தொங்குவதுதான் மரபு என்பதை மீறித்தான் இந்தப் படம் இவ்வாறு இடம்பெற்றது. அந்த ஓவியர் இந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருந்த போதே, தேசபக்த போருக்கு ஆதரவான அஞ்சலட்டைகளையும் படைத்துக் கொண்டிருந்தார். எடுத்துக் காட்டாக, “ஆஸ்திரியன் ஒருவன் ரட்சிவில்லுக்குச் சென்றான், நேராகப் போய் உழவுப் பெண்ணின் கவைக் கோலில் சிக்கினான்” என்ற ஓவியத்தைச் சொல்லலாம்.
எப்படிப் புரட்சிக்கு முன் ஓவியர்கள் செல்வந்த புரவலர்களின் ஆசைக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள் என்பதைக் கண்காட்சி விளக்குகிறது. தொடர்வண்டிப் பெருமுதலாளி சவ்வா மமொண்டோவ் ஓவியர் மிக்கைல் விருபெல்-இன் படைப்புக்கு ஆதரவளித்தார். வதையுற்ற பேய்களை ஓவியங்களாக வரைந்து நினைவில் நிற்கும் இந்த ஓவியர் “கலைக்கு ஒரு சமூக நோக்கம் இருக்க வேண்டும்” என்ற கருத்தை வெளிப்படையாகவே மறுதலித்தவர் ஆவார்.
செல்வச் செழிப்புமிக்க மாஸ்கோ வணிகர் நிக்கொலாய் ரியாபுஷின்ஸ்கி நீல ரோசா ஓவியக் குழுவை ஆதரித்தார். “இந்தக் குழுவில் பலர் கலையை யதார்த்தத்திலிருந்து தப்பும் வழியாகப் பயன்படுத்தவும், மாறாக ஒரு கருத்தியல் உலகையும், சிலநேரம் அற்புத உலகையும் சித்திரிக்கவும் விரும்பினர்.”
”அக்டோபர் புரட்சி அடிப்படையாகவே ரஷ்ய பண்பாட்டை மீளுருவாக்கம் செய்தது” என்று கண்காட்சியின் அட்டவணைக் குறிப்பேடு அறுதியிட்டுரைக்கிறது. ”மூன்றாண்டுக் காலப் போருக்குப் பின் நடைபெற்ற அக்டோபர் புரட்சி ஒரு புதிய ஒழுங்குக்கான பேரார்வ அலையைக் கட்டவிழ்த்து விட்டது. ஓவியர்கள் பலரும் அரசியலில் ஈடுபட்ட பட்டறிவு அவர்களுக்குக் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் போல்ஷிவிக் குறிக்கோளின் பக்கம் திரண்டனர்.”
”சீர்குலைவாளர்களும், சிலநேரம் முறைகேடர்களுமான சில ஆண்களும் பெண்களும் கலை தொடர்பாகத் தனித்துவமான ரஷ்ய புதுமவிய அணுகுமுறை ஒன்றை வளர்த்துக் கொண்டிருந்தனரே, அவர்கள் இப்போது சற்றும் எதிர்பாராதபடி புதிய போல்ஷ்விக் அரசெங்கிலும் தங்கள் முற்போக்குக் கருத்துகளுக்கு ஊக்கம் கிடைக்கக் கண்டனர்.”
”ரஷ்யாவின் முற்போக்கு ஓவியர்கள் புரட்சிக்குப் பின் பத்தாண்டுக் காலம் அசாதாரண படைப்புத் திறனும் ஆற்றலும் பட்டறிவாகப் பெற்றார்கள். போல்ஷ்விக்குகளின் பேரார்வத்தைப் பயன்படுத்திக் கொண்டு ரஷ்ய வாழ்க்கையின் ஒவ்வொரு துறைக்கும் புரட்சியை விரிவாக்கினார்கள். சோவியத் அரசில் 1920களில் நிலவிய புதிய சமூக, பண்பாட்டு சுதந்திரம் தந்த வாய்ப்பில் முந்துபுதுமை ஓவியர்களால் சோதனை செய்யவும் தமது படைப்புக்கு பெருந்திரள் பார்வையாளர்களை பெறவும் முடிந்தது.”
இந்த ஆய்வுக் கருத்து போல்ஷ்விக்குகளுக்குக் கலைஞர்களிடம் பெரிய ஆதரவில்லை என்றும் அவர்கள் முந்துபுதுமை இயக்கத்தை நசுக்க முயன்றார்கள் என்றும் கூறிக் கொள்வோருக்கு ஒரு கண்டனம் ஆகும்.
ஆக்கபூர்வவாத ஓவியக்கலைஞர் விளாடிமிர் தத்லின் ”மூன்றாம் அகிலத்துக்கு நினைவுச்சின்னம்” என்ற முன்மொழிவுக்குப் புகழ் பெற்றவர், இதன் மாதிரியுரு செயின்ஸ்பரி மையத்திற்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் 1918இல் அறிவொளி அமைச்சகத்தின் (நர்கம்ப்ராஸ்) கலைத் துறையில் மாஸ்கோ தலைவராக அமர்த்தப்பெற்றார். மலெவிச் அவருடன் இணைந்து கொண்டார். மார்க் ஷகால் புதுமக்கால பெலாருஸ்-இல் உள்ள விதெப்ஸ்க்-இல் மக்கள் ஓவியப் பள்ளி ஒன்றை நிறுவினார். எல் லிசிட்ஸ்கி போன்றவர்கள் இப்பள்ளியால் ஈர்க்கப்பெற்றார்கள். லிசிட்ஸ்கின் மலைக்க வைக்கும் கல்விக் கருவியான “கணிதவியலின் நான்கு அடிப்படை வழிகள்” என்ற ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
1918க்கும் 1921க்கும் இடையில் உள்நாட்டுப் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது, நர்கம்ப்ராஸ் (அறிவொளி அமைச்சகம்) 36 புதிய அருங்காட்சியகங்களை அமைத்தது. இந்தக் கல்விமுனைவுகளில் ஓவியர்கள் திரண்டார்கள். தாங்கள் செல்ல வேண்டிய திசை என்ன? புதிய படிமத் தொகுதியை வளர்த்தெடுப்பது எப்படி? என்ற மும்முரமான விவாதங்களில் ஈடுபட்டிருந்தார்கள். விரைவான வீடுகட்டும் திட்டத்துக்கும் அன்றாடத் தேவைப்பொருட்களின் ஆக்கத்துக்குமான வடிவமைப்புகளில் பலர் ஈடுபடலானார்கள்.
எடுத்துக்காட்டாக, அரிவாள் சுத்தி சின்னத்தைப் படைப்பதில் தொடர்புற்ற சேர்ஜ் செக்கோனின் பேரரசுப் பீங்கான் தொழிற்சாலையின் கலை இயக்குநரானார். மிகவும் திறமை படைத்த வடிவமைப்பாளர்களை அவர் அமர்த்திக் கொண்டார். அவர்களில் ஒருவர் நத்தாலியா டாங்கோ. இவரது ”சிவப்புகளும் வெள்ளைகளும்” சதுரங்கத் தொகுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் உழவுப் பெண்கள் சிவப்புப் பகடைகளாவர். அவர்களுக்கு ஆலைத் தொழிலாளர்களும் படைவீரர்களும் பின்வலு ஆவர். எதிர்த்து நிற்கும் வெள்ளைப் பகடைகள் கறுப்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டு, எலும்புக்கூடான வெள்ளை அரசனின் மேற்பார்வையில் வருகின்றன.
டாங்கோவின் சகோதரி குறிப்பிட்டார்: “அந்தக் காலத்து பெட்ரோகிராட் யாருக்காவது நினைவிருக்குமானால், —அதன் நிழற்சாலைகளின் வெறிச்சோடிய வனாந்திரச் சூழலும், இருளிலும் குளிரிலும் மூழ்கிய அதன் ஆளற்ற வீடுகளும், அண்மையில் குண்டுகள் துளைத்த அவற்றின் சாளரங்களும் நினைவிருக்குமானால்— சாளரங்களில் அடுக்கி வைத்த பீங்கான்களின் காட்சியும் நினைவிருக்கும்.… வழிப்போக்கர்கள் சாளரமருகே நின்று பீங்கான் வரிசையை நெடுநேரம் உற்றுநோக்குவார்கள். இந்தப் பீங்கான் அழகான வருங்காலத்திலிருந்து ஒரு செய்தியாயிற்று.
லெனினிசம் தவிர்க்கவியலாத படி ஸ்ராலினிசத்துக்கு இட்டுச் சென்றது” என்று மற்ற இடங்களில் ஆட்சிசெய்யும் பொய்மையில் சிக்காமல் சென்ற பெருமை முற்போக்கு ரஷ்ய கண்காட்சியை சாரும். புரட்சி சீரழிந்தமைக்கான பொருண்மியக் காரணங்களை அது சுட்டுகிறது. ஸ்ராலின் அதிகாரத்துக்கு வந்த போது “தனியொரு நாட்டில் சோசலிசம்,” கட்டாயக் கூட்டுமயமாக்கம், கட்டாயத் தொழில்மயமாக்கம் பற்றிய கசப்பான பூசல்கள் எழுந்தன என்பதைச் சுட்டுகிறது. மற்றக் கண்காட்சிகளைப் போலல்லாமல், ஸ்ராலினிசத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பில் ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பாளர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
அவற்றின் இடத்தில் சோசலிச யதார்த்தவாதம் திணிக்கப்பட்டது. இதனால் ஓவியர்கள் வெளிநாடுகளில் குடியேறச் சென்றனர். தற்கொலை செய்து கொண்டனர். கொலைத் தண்டனைக்கு ஆளாயினர் அல்லது கட்டாயமாக இருட்டில் தள்ளப்பட்டனர். கண்காட்சி அட்டவணைக் குறிப்பேட்டின் முடிவில் வேதனையைக் கிளறும் ஒரு நிழற்படம், 1935இல் அதிகம் பேர் கலந்து கொள்ளாத மலெவிச் இறுதி ஊர்வலப் படம். அதில் தூய வரைவடிவத்தில் அவரது சவப்பெட்டி ஒரு லாரியில் ஏற்றப்பட்டு, அவரது கறுப்புச் சதுரத்தின் படி ஒன்று லாரியின் முகட்டில் பொருத்தப்பட்டிருந்தது.
