சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்டதின் ஐம்பதாவது ஆண்டு

குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்திற்கு எதிரான RCL/SEP இன் அரசியல் போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி 1968 ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டதன் 50வது ஆண்டைக் குறிக்கும் விதமாக வெளியிடும் கட்டுரைத் தொடரில் இது மூன்றாவதாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) என ஸ்தாபிக்கப்பட்ட, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பிரிவு, 1996 இல் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) என மறுபெயரிடப்பட்டது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் 1968 ஜூன் 16-17 ஸ்தாபக மாநாட்டைக் குறிக்கும் விதமாக ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுரைகள் RCL இன் கொள்கைப் பிடிப்பான அடித்தளங்களை எடுத்துவிளக்குவதோடு, இந்த கோட்பாடுகளுக்காக கடந்த 50 ஆண்டு காலத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் இருந்தான அத்தியாவசியமான அரசியல் படிப்பினைகளையும் வெளிக்கொண்டுவரும். ட்ரொட்ஸ்கிச கட்சி எனக் கூறிக் கொண்ட லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), 1964ல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்ததன் மூலமாய் காட்டிக்கொடுத்த சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை அடித்தளமாகக் கொண்டு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

முதலாளித்துவ அபிவிருத்தி தாமதப்பட்ட நாடுகளில், தொழிலாள வர்க்கம் மட்டுமே, சர்வதேச அளவில் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளது அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்திற்கு தலைமை கொடுக்க இயலுமை கொண்ட ஒரே வர்க்கமாகும் என்று ஸ்தாபித்த ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கான போராட்டமே SEP இன் வேலைகளது மையப்புள்ளியாக இருந்து வந்திருக்கிறது. இந்தப் படிப்பினைகள் இலங்கையில் மட்டுமல்லாது, ஆசியா மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் எழுந்து வருகின்ற போராட்டங்களுக்கு இன்றியமையாதவை ஆகும்.

குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்திற்கு எதிரான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டமானது RCL/SEP இன் 50 ஆண்டு கால வரலாற்றில் ஒரு மையமான அம்சமாக இருந்து வந்திருக்கிறது, புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்றியமையாத படிப்பினைகளையும் இது கொண்டுள்ளது.

1964 இல் பண்டாரநாக்க அம்மையாரின் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) செய்த மிகப்பெரும் காட்டிக் கொடுப்புக்கு எதிரான போராட்டத்தில் 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்(RCL) ஸ்தாபிக்கப்பட்டது. பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தை பகிரங்கமாகக் கைவிட்டு SLFP இன் சிங்கள மேலாதிக்கவாதத்தை தழுவிக் கொண்டதன் மூலமாக, LSSP, இலங்கையில் வகுப்புவாத அரசியலின் கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்கு பாதையை திறந்து விட்டது.

அதில்விளைந்த அரசியல் குழப்பத்தை சுரண்டிக் கொள்வதற்கும் தீவிரமயப்பட்ட இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆதரவை பெறுவதற்கும் பல்வேறு குட்டி-முதலாளித்துவ தேசியவாதக் குழுக்கள் எழுந்தன. குறிப்பாக, ஜனதா விமுக்தி பெரமுன (JVP) அல்லது மக்கள் விடுதலை முன்னணி, LSSP இன் காட்டிக்கொடுப்புக்கு அடுத்த ஆண்டில், 1965 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அத்தனை குழுக்களையும் போலவே, மக்கள் விடுதலை முன்னணியும் “ஆயுதப் போராட்ட”த்தை போற்றுவதையும் உலகெங்கும் அந்நாளின் நாகரிகத் தத்துவங்களாய் இருந்த மாவோயிசம், காஸ்ட்ரோயிசம் மற்றும் குவாராயிசம் ஆகியவற்றின் தேர்ந்தெடுத்த அம்சங்களின் ஒரு கலவையையும் தனக்கு அடிப்படையாக அமைத்துக் கொண்டது. அவை அனைத்தும், மார்க்சிசத்திற்கு விரோதமான வகையில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்தன.

LSSP (R) ஆனது LSSP இன் காட்டிக்கொடுப்புக்குப் பின்னர் அதிலிருந்து உடைந்திருந்த போதிலும், முந்தைய தசாப்தத்தில் LSSP இன் அரசியல் பின்னடைவுக்கு பாதை வகுத்துத் தந்திருந்ததான ஐக்கிய செயலகத்தில் (United Secretariat - USec) உள்ளடங்கியிருந்த பப்லோவாத சந்தர்ப்பவாதத்தில் இருந்து முறித்துக் கொள்ளவில்லை. குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில், அழிவுகரமான பின்விளைவுகளை கொண்டிருந்த கெரில்லாவாதம் உள்ளிட குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்தின் அத்தனை வடிவங்களையும் ஊக்குவிப்பதில் ஐக்கிய செயலகம் முக்கிய கருவியாக இருந்தது.

1965 இல் பண்டாரநாயக்க அரசாங்கம் பொறிந்த பின்னரும், SLFP உடனான அதன் கூட்டணியைத் LSSP தொடர்ந்தது; இந்த ஆதரவு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CP) நீட்சி செய்யப்பட்டது. தொழிலாள வர்க்கத்திலும் கிராமப்புற ஏழைகள் மத்தியிலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு பெருகிச் சென்ற அதிருப்தியையும் எதிர்ப்பையும், SLFP-LSSP-CP கூட்டணியானது, ஏகாதிபத்திய-எதிர்ப்பு வார்த்தையாடல் மற்றும் வெற்று வாக்குறுதிகளின் ஒரு கலவையைக் கொண்டு, 1970 தேர்தலில் ஒரு மிகப்பெரும் பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு மீண்டும் திரும்புவதற்காக சுரண்டிக் கொண்டது.

தேர்தலின் போது, புதிதாக உருவாக்கப்பட்டிருந்த RCL ஒரு தந்திரோபாய தவறை செய்தது. LSSP மற்றும் CP இன் துரோகம் குறித்து கண்டனம் செய்து, அக்கூட்டணியின் பிற்போக்கான நோக்கங்கள் குறித்து எச்சரித்த அதேவேளையில், SLFP தலைமையிலான கூட்டணிக்கு விமர்சனரீதியான வாக்களிக்க அது அழைப்புவிடுத்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகத்தின் ஒரு தலைவரான மைக்கல் பண்டா, RCLக்கு எழுதிய ஒரு கடிதத்தில் விளக்கியதைப் போல, “அதன் கொள்கையானது சீர்திருத்தவாதிகளுக்கும் தீவிரப்பட்ட முதலாளித்துவத்திற்கும் தேவையற்று வழங்கப்பட்ட ஒரு சலுகையாக இருந்தது”

SLFP தலைமையிலான அரசாங்கத்திற்கு எந்த ஆதரவும் கொடுக்கக் கூடாது என்றும் LSSPயும் CPயும் கூட்டணியில் இருந்து முறித்துக் கொண்டு சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை உருவாக்குவதற்காக போராட வேண்டும் என்ற தந்திரோபாய கோரிக்கையைச் சூழ தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் பண்டா RCLக்கு அறிவுறுத்தினார். இந்த தந்திரோபாயத்தின் நோக்கமாய் இருந்தது, LSSP மற்றும் CPயின் சந்தர்ப்பவாத உத்திகள் மற்றும் கொள்கைகளில் பிரமைகளை வளர்த்தெடுப்பது அல்ல, மாறாக அவற்றை அம்பலப்படுத்துவதும், அதன்மூலமாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதும் இருந்தன.

வில்ஃபிரட் “ஸ்பைக்” பெரேரா, கீர்த்தி பாலசூரிய மற்றும் மைக் பண்டா

சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் விளக்குவதைப் போல, “கீர்த்தி பாலசூரிய மற்றும் RCL இன் பதிலிறுப்பு ஒரு மார்க்சிசக் கட்சி எவ்வாறு ஒரு கோட்பாடான திருத்தத்தை செய்கிறது என்பதற்கான மிகச்சிறந்த உதாரணத்தை வழங்குகிறது. பண்டாவின் கருத்துப்பரிமாற்றம் மற்றும் பிழையின் அரசியல் தாக்கங்கள் குறித்து ஒரு மிக விரிவான உட்கட்சி விவாதத்திற்கு கட்சித் தலைமை முதலில் துவக்கமளித்தது.” அதன்பின் அது அந்த பிழையை பகிரங்கமாக திருத்தம் செய்து ஒரு அறிக்கையில் இவ்வாறு அறிவித்தது: “சமசமாஜவாத மற்றும் ஸ்ராலினிச தலைவர்களை கூட்டணி அரசாங்கத்தில் இருந்து முறித்துக் கொள்வதற்கு நிர்ப்பந்திப்பதே தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சுயாதீனத்திற்கான போராட்டம் எடுக்கக் கூடிய வடிவமாகும்.”

அதேநேரத்தில், இந்தப் பிழையானது, செழித்துவளர்ந்த குட்டி-முதலாளித்துவ தீவிரவாதம் கட்சி மீது செலுத்திக் கொண்டிருந்த கணிசமான அழுத்தத்தின் விளைபொருளாய் இருந்தது என்பதை RCL இன் பொதுச் செயலாளர் பாலசூரிய புரிந்துகொண்டார். “RCL மீது செயல்பட்ட இதே குரோதமான வர்க்க அழுத்தம், பிற சூழ்நிலைகளில் பிறிதொரு வடிவத்தில் எழக்கூடும் என்பதால் இந்தப் பிழையின் வேர்களை” கிரகித்துக் கொள்வதன் அவசியத்தின் மீது கட்சியின் அறிக்கை வலியுறுத்தியது.

அந்த முடிவுக்கு வந்த பின்னர், மாவோ, காஸ்ட்ரோ மற்றும் ஹோ சி மின் ஐ போற்றுவதில் “நடுத்தர-வர்க்க தீவிரவாதத்தின் உச்சிக்கோபுரமாக” இருந்த ஜேவிபியை அரசியல்ரீதியாகவும் தத்துவார்த்தரீதியாகவும் அம்பலப்படுத்த பாலசூரிய முடிவுசெய்தார். RCL இன் சிங்கள மொழி செய்தித்தாளான கம்கரு புவத் (தொழிலாளர் செய்திகள்) இல் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலும் வர்க்கத் தன்மையும்என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரை அவர் எழுதினார், இது பின்னர் புத்தக வடிவத்திலும் வெளியிடப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலும் வர்க்கத் தன்மையும்

“புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு மையக்கருவாக இருக்கின்ற” மார்க்சிசத் தத்துவத்தை பாதுகாப்பதும் அபிவிருத்தி செய்வதுமே JVP ஐ அம்பலப்படுத்துவதன் நோக்கம் என்பதை புத்தகத்திற்கு எழுதிய முகவுரையில் பாலசூரிய குறிப்பிட்டுக் காட்டினார். RCL, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு, குறிப்பாக காஸ்ட்ரோ மற்றும் கியூபப் புரட்சியை பப்லோவாதம் புகழ்ந்து போற்றியதற்கு, எதிரான ICFI இன் போராட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நாடுகளில், “ஒரு மழுங்கிய கருவி”யைக் கொண்டே, அதாவது, ஒரு மார்க்சிசக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலும் இல்லாமலேயே, ஒரு தொழிலாளர்’ அரசை ஸ்தாபிப்பது சாத்தியமாகியிருந்ததாக பப்லோவாதிகள் தவறான முடிவுக்கு வந்தனர்.

பாலசூரிய தனது புத்தகத்தில் பின்வருமாறு விளக்கினார்: “காஸ்ட்ரோ, குவேரா மற்றும் மாவோ போலவே JVPயும் தொழிலாள வர்க்கத்திற்கு இயல்பாகவே குரோதமுடையதாக இருந்ததோடு பிற்போக்கான தேசியவாதத்தில் அது வேரூன்றியிருந்தது. JVP இன் திரிப்பான வார்த்தைப் பிரயோகத்தில், ‘பாட்டாளி வர்க்கம்’ என்பது விவசாயிகளின் ஒடுக்கப்பட்ட அடுக்குகளைக் குறிப்பிட்டது. தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டங்களை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ‘தேசப்பற்று’ போராட்டத்தில் இருந்து கவனம்திருப்புகின்ற “கஞ்சிக் குவளைகளுக்கான போராட்டங்கள்” என்று கூறி அந்த அமைப்பு சிறுமைப்படுத்தியது. காஸ்ட்ரோ மீது தனக்கு மாதிரியை அமைத்துக் கொண்டு, JVP, “தேசப்பற்றாளர்களின் ஒரு குழுவால் நடத்தப்படும் ஒரு கிளர்ச்சி ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தினை இல்லாதொழிக்க முடியும்” என்று அறிவித்தது.

JVPயின் தேசப்பற்றுவாதம் என்பது வகுப்புவாத அடிப்படையில் “தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும்” அதனை “முதலாளித்துவ வர்க்கத்திற்கு கீழ்ப்படியச் செய்வதற்கும்” இலங்கை ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட “சிங்கள தேசப்பற்றுவாதமாகவே” இருந்ததேயன்றி வேறொன்றுமில்லை என்பதை பாலசூரிய விளக்கினார். JVP தேசிய முதலாளித்துவ வர்க்கமாக சொல்லப்பட்டதன் முற்போக்கான தன்மையில் ஆபத்தான பிரமைகளை வளர்த்தெடுத்தது. SLFP-LSSP-CP கூட்டணியை ஆதரித்த அது, 1970 தேர்தலில் அது வென்றபோது அதனை ஒரு “முற்போக்கான அரசாங்கம்” என்றும் ஆரம்பத்தில் விவரித்தது.

JVP இன் நிலைப்பாடுகளை அம்பலப்படுத்துவதில், RCL தனது பகுப்பாய்வுக்கான அடிப்படையாக ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தைக் கொண்டிருந்தது. பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கம், தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளை பூர்த்தி செய்வதிலோ அல்லது சமூகப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதிலோ ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிப்பதற்கு திறனற்றதாகும் என்று அது வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கம் மட்டுமே, கிராமப்புற ஏழைகளையும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தனது தலைமையின் கீழ் அணிதிரட்டுவதன் மூலமாகவும் உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் பாகமாக ஒரு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலமும் இந்த தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். இதுவே 1917 இல் ரஷ்யாவில் வெற்றிபெற்ற சோசலிசப் புரட்சியின் படிப்பினையாக இருந்தது.

கீர்த்தி பாலசூரிய ஒரு கூட்டத்தில் உரையாற்றுகிறார்

JVP இன் ஏகாதிபத்திய-விரோத வாய்வீச்சில், “இந்திய விஸ்தரிப்புவாதம்” மற்றும் “சிறப்புச்சலுகை கொண்டிருந்த” தமிழ்-பேசும் தோட்டத் தொழிலாளர்கள் —இவர்களை சிங்களத் தொழிலாளர்களின் எதிரிகளாக அது முத்திரை குத்தியது— மீதான கண்டனங்களும் இடம்பெற்றிருந்தன. நாட்டின் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த நச்சுத்தனமான தொழிலாள-வர்க்க விரோத மற்றும் இனவாத அவதூறானது SLFP மற்றும் அதன் கூட்டாளிகளது சிங்கள ஜனரஞ்சகவாதத்தின் அதே பிளவுபடுத்தும் நோக்கத்திற்கே சேவைசெய்தது.

பாலசூரிய பின்வருமாறு எச்சரித்தார்: “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இலங்கையின் முதலாளித்துவ வர்க்கமும் தமது சொந்த வர்க்க நலன்களால் உந்தப்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை நாசம் செய்வதற்கு செலுத்தப்படுகின்றதொரு காலகட்டத்தில், அதே தொழிலாளர்களுக்கு எதிரான குட்டி-முதலாளித்துவ குரோதமானது ஏகபோக முதலாளித்துவத்தின் கரங்களிலான ஒரு ஆயுதமாக மாறுகிறது. இந்த இனவாதம் தான் பாசிசத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய ஒன்றாகும். வருங்காலத்தில் ஒரு பாசிச இயக்கத்தால் நன்கு பயன்படுத்திக் கொள்ளத்தக்க ஒரு தொழிலாள வர்க்க-விரோத இயக்கத்தை இலங்கையில் JVP உருவாக்கிக் கொண்டிருக்கிறது.”

இரண்டாவது கூட்டணி அரசாங்கமானது, “முற்போக்காக” இருப்பதெற்கெல்லாம் வெகுதூரத்தில், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது அதிகரித்த தாக்குதல்களை நடத்தியது. பதிலிறுப்பாக ஜேவிபி SLFP-LSSP-CP கூட்டணியை விமர்சனமற்று ஆதரித்த நிலையில் இருந்து, அதனை வெறித்தனமாய் கண்டனம் செய்கின்ற நிலைக்கு தாவியது. 1971 ஏப்ரலில் JVP, நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தில் இருந்து தனிமைப்பட்ட, கிராமப்புற இளைஞர்களின் ஒரு சாகசத்தனமான கிளர்ச்சியை தொடக்கியது; இது காவல் நிலையங்களை தாக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது. பதிலிறுப்பாக, கூட்டணி அரசாங்கமானது ஒரு போலிஸ்-இராணுவ இரத்தக்களரியை கட்டவிழ்த்து விட்டது, சுமார் 15,000 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர், JVP தலைவரான ரோஹண விஜேவீரா உள்ளிட ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மொத்தமொத்தமாய் சிறப்பு நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட்டு பல ஆண்டுகாலத்திற்கு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்த கொடூரமான அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக RCL ஒரு கோட்பாட்டுரீதியான நிலைப்பாட்டை எடுத்தது, JVP இன் பிற்போக்கான கொள்கைகளை தொடர்ந்தும் அது அம்பலப்படுத்திய அதேவேளையில், JVP இன் அரசியல் கைதிகளை விடுவிக்க அது கோரியது. அதன் விளைவாக, கூட்டணி அரசாங்கம் RCL தலைமையைக் குறிவைத்தது. லக்ஷ்மன் வீரக்கோன் மற்றும் எல்.ஜி.குணதாச ஆகிய இரண்டு மத்திய குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு கண்டி சிறையில் கொல்லப்பட்டனர். கட்சியின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வந்த வில்ஃபிரட் பெரேராவின் வீட்டில் போலிஸ் சோதனை நடத்தியது, அதன் நூலகம் மற்றும் ஆவணங்களை அழித்தது. அவசரகாலநிலை சட்டங்களின் கீழ், RCL மற்றும் அதன் இளைஞர் பிரிவின் வெளியீடுகள் தடைசெய்யப்பட்டன, கட்சியும் அதன் தலைவர்களும் தலைமறைவாகத் தள்ளப்பட்டனர்.

இருப்பினும் RCL, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்காக நாடெங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு உத்வேகமான போராட்டத்தை முன்னெடுத்தது. அதேநேரத்தில், JVP இன் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கத்திடம் வெற்று கோரிக்கைகளை விடுத்துக்கொண்டு, ஆனால் அரசாங்கத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவதையும் அரசு ஒடுக்குமுறைக்கு ஒரு முடிவுகட்டப்படுவதையும் எதிர்த்துவந்த LSSP (R) போன்ற குழுக்களது வேடத்தையும் அது அம்பலப்படுத்தியது

ரோஹண விஜேவீரா

RCL இன் பிரச்சாரம் பரவலான ஆதரவைப் பெற்றது. 1976 டிசம்பரில் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த பொது வேலைநிறுத்தத்தின் ஒரு முக்கியமான கோரிக்கையாக அரசியல் கைதிகளின் விடுதலை ஆனது. 1977 தேர்தலில் வெற்றி கண்ட UNP 1978 இல், விஜேவீராவையும் மற்ற அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நிர்ப்பந்தம் பெற்றது. விடுதலையான பின்னர், விஜேவீரா RCLக்கு பகிரங்கமாக நன்றி தெரிவிக்க தனிப்பட்ட விதத்தில் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அடுத்த நான்கு தசாப்தங்களில், JVPஇன் அரசியல் பயணப்பாதை குறித்தும் குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்தின் முட்டுச்சந்து குறித்துமான பாலசூரியாவின் எச்சரிக்கைகளை ஊர்ஜிதம் செய்யும் விதமாக, JVP வலது நோக்கி ஒரு கூர்மையான திருப்பத்தை செய்திருந்தது. இந்த வலதுநோக்கிய திருப்பத்தின் பின்னால், தேசியப் பொருளாதார நெறிப்படுத்தலின் பழைய வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த அத்தனை கட்சிகள், அமைப்புகள் மற்றும் ஸ்தாபனங்களையும் பலவீனப்படுத்தி விட்டிருந்த உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தால் உலகப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கொண்டுவரப்பட்டிருந்த பரந்த மாற்றங்கள் இருந்தன.

சமூக செலவினங்களை வெட்டுவது மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளை தனியார்மயமாக்குவது ஆகியவை உள்ளிட உலகில் முதன்முதலாக திறந்த சந்தைக் கொள்கைகளை அமல்படுத்திய அரசாங்கங்களில் ஒன்றாக பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் UNP அரசாங்கம் இருந்தது. தமிழர்-விரோத வகுப்புவாதத்தை தொடர்ச்சியாக கிளறிவிடுவதன் மூலமும் எதேச்சாதிகாரம் பாரியளவில் குவிக்கப்பட்ட, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதி அமைப்புமுறையை ஸ்தாபிப்பதன் மூலமும் ஜெயவர்த்தன தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவரது அரசாங்கத்தின் வர்க்கப் போருக்கு தயாரிப்பு செய்தார்.

1980 ஜூலையில், அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்து, பொதுத்துறை தொழிலாளர்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்தை தொடக்கினர், இதனை ஜெயவர்த்தன கிட்டத்தட்ட 100,000 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து நசுக்கினார். வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதில் அரசாங்கத்துக்கு உதவிகரமாக இருப்பதில் JVP ஒரு அதிமுக்கியமான பாத்திரம் வகித்தது, அதன்மூலம் அது பெருந்தொகை வேலைநீக்கங்களுக்கான அடிப்படையை அமைத்துக் கொடுத்தது.

ஆரம்பத்திலிருந்தே JVP இந்த வேலைநிறுத்தத்தை எதிர்த்தது, “[தொழிலாள] வர்க்கம் போராடத் தயார்நிலையில் இல்லை” என்றும் ”இது ஒடுக்குமுறையை வலிந்து அழைப்பதாகி விடும்” என்றும் அது வலியுறுத்தியது. பிரச்சினை தொழிலாளர்கள் போராட விருப்பமின்றி இருந்தார்கள் என்பதல்ல, மாறாக, JVP உள்ளிட்ட அதன் தலைமைகள் இந்த வேலைநிறுத்தத்தை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டமாக உருமாற்றுவதை எதிர்த்தன என்பதாகும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டாம் என்று JVP கூறியதையும் மீறி, இலங்கை ஆசிரியர்கள் சங்கம் (CTU), அதன் உறுப்பினர்கள் மத்தியில் பரவலான கோபத்துக்கு முகம்கொடுத்த நிலையில், JVPயில் இருந்து முறித்துக் கொண்டு வேலைநிறுத்தத்தில் சேர்ந்து கொண்டது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தொடர்ந்து பெருகிச் சென்ற நிலையில், ஜெயவர்த்தனா ஒன்றுமாற்றி ஒன்றாக தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களை அரங்கேற்றினார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான ஒரு நீண்டநெடிய இனவாதப் போருக்குள் நாட்டை பின்னர் மூழ்கச்செய்ய காரணமாக இருந்த 1983 இல் நடந்த தீவு-முழுமைக்குமான படுகொலைகளில் இது உச்சம்கண்டது. உண்மையில் அரசாங்க ஆதரவுடனான குண்டர்களாலேயே தொடக்கமளிக்கப்பட்டிருந்த கொழும்பு படுகொலைகளின் பழியை JVP மீது சுமத்தி அதனை ஜெயவர்த்தன தடைசெய்தார். அப்படியிருந்தும் JVP போரின் ஒரு உற்சாகமான ஆதரவாளராக ஆனது, தனது முந்தைய சோசலிச மற்றும் போலி-மார்க்சிச வார்த்தையாடல்களின் இடத்தில் கொச்சையான சிங்கள “தேசப்பற்று” விண்ணப்பங்களை பிரதியீடு செய்தது.

ஆர். ஏ. பிட்டவல

1987 இல், போரினாலும் பெருகிச் சென்ற சமூக அமைதியின்மையாலும் உருவாக்கப்பட்ட ஒரு ஆழமான அரசியல் நெருக்கடிக்கு முகம்கொடுத்த கொழும்பு அரசாங்கம், தனது ஆட்சிக்கு முட்டுக்கொடுக்க இந்தியாவை நோக்கித் திரும்பியது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்த தமிழ் உயரடுக்கினருக்கு வரம்புபட்ட அதிகாரங்களை பிரித்தளித்தது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழேபோடுவதற்கு அழைப்பு விடுத்தது. ஒப்பந்தத்தை மேற்பார்வை செய்வதற்கும் விடுதலைப்புலிகளை பலவந்தமாக ஆயுதங்களைக் கீழேபோடச் செய்வதற்கும் 100,000 இந்திய “அமைதிப்படையினரை” புதுடெல்லி அனுப்பியது.

JVP உடனடியாக ஒரு பேரினவாத “தாய்நாடு முதலில்” பிரச்சாரத்தை தொடக்கியது; “இந்திய விஸ்தரிப்புவாத”த்தை கண்டனம் செய்தது; நாட்டை பிளவுபடுத்துவதாக ஜெயவர்த்தன மீது குற்றம்சாட்டியது. JVP, ஒப்பந்தத்திற்கு எதிரான கலகங்களுக்கு ஏற்பாடு செய்ததோடு, அதன் இனவாதப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க மறுத்த எவர் மீதும் பாசிசத் தாக்குதல்களை நடத்தியது. JVPயின் துப்பாக்கிதாரிகள் நூற்றுக்கணக்கான அரசியல் எதிரிகளையும் தொழிலாளர்களையும் கொலைசெய்தனர், இதில் ஆர். ஏ. பிட்டவல, பீ. எச். குணபால மற்றும் கிரேஷன் கீகியனகே ஆகிய மூன்று RCL உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

பி.எச். குணபால

RCL, சிங்கள தேசத்தைப் பாதுகாக்கின்ற முன்னோக்கில் இருந்து அல்லாமல், தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்கின்ற முன்னோக்கில் இருந்து ஒப்பந்தத்தை எதிர்த்தது, அதன்மூலம் இலங்கை மற்றும் இந்தியத் தொழிலாளர்களை ஒரு பொதுவான சோசலிச முன்னோக்கில் ஐக்கியப்படுத்துவதற்காக அது போராடியது. UNP அரசாங்கத்தின் ஒடுக்குமுறையில் இருந்தும் JVPயின் பாசிசத் தாக்குதல்களில் இருந்தும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்க அமைப்புகளின் ஒரு ஐக்கிய முன்னணி உருவாக்கப்படுவதற்கு, ICFI இன் ஆதரவுடன், அது அழைப்புவிடுத்தது. அத்துடன் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இலங்கையில் இருக்கும் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளைப் பாதுகாப்பதற்கும் விண்ணப்பம் செய்தது.

இந்தப் போராட்டத்தில், சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான பிரச்சாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசக் குடியரசுகளின் ஒரு ஒன்றியம் உருவாக்கப்படுவதற்கான போராட்டத்தின் பாகமாகவும், லங்கா மற்றும் ஈழம் சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்ற முன்னோக்கை, ICFIம் RCLம் முதன்முறையாக முன்னெடுத்தன.

கிரேஷன் கீகியனகே

முதலில் JVP உடன் ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொள்கின்ற யோசனைக்கு தனது ஆற்றலை பயன்படுத்திய பின்னர், முதலில் ஜெயவர்த்தனவின் கீழும், அதன்பின் ஆர்.பிரேமதாசாவின் கீழுமான UNP அரசாங்கம், JVPக்கு எதிராய் மட்டுமல்லாது, அந்நியப்படுத்தப்பட்டிருந்த சிங்கள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் JVPக்கு இருந்த சமூக அடித்தளத்திற்கு எதிராகவும் ஒட்டுமொத்தமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. 1989-90 இல், இராணுவமும் போலிசும் சுமார் 60,000 இளைஞர்களைப் படுகொலை செய்தன, ஜேவிபியின் விஜேவீரா உள்ளிட்ட தலைவர்களைப் படுகொலை செய்து அதனை உருத்தெரியாமல் ஆக்கின. ஜேவிபியால் தனது காரியாளர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையிலும், அதற்கு எதிரான அரசாங்கத்தின் கொலைபாதகப் பிரச்சாரத்தை RCL ஒரு கோட்பாடான அடிப்படையில் எதிர்த்தது.

அதேகாலகட்டத்தில், கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டன, இது சந்தையின் வெற்றியையும் சோசலிசத்தின் முடிவையும் கட்டியம் கூறியதாக முதலாளித்துவ வட்டாரங்களில் ஒரு வெற்றிக்களியாட்டத்தின் அலையைத் தூண்டியது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பது உலகமயமாக்கத்தின் தாக்கம் மற்றும் தேசியத் தன்னிறைவு என்ற ஸ்ராலினிச வேலைத்திட்டம் ஆகியவற்றின் விளைபொருளாக இருந்தது என்பதை RCLம் ICFIம் நிறுவிய நேரத்தில், JVP “சோசலிசத்தின் தோல்வி”யை அறிவித்த குட்டிமுதலாளித்துவ தீவிரப்பட்ட அமைப்புகளது ஒரு நெடிய வரிசையில் இணைந்து கொண்டது.

1994 இல் சந்திரிகா குமாரதுங்கவின் கீழ் SLFP தலைமையிலான கூட்டணி, ஆட்சிக்கு வந்தவேளையில் தனது இராணுவக் களைப்படைந்த சீருடைகளை நாடாளுமன்ற இருக்கைகளுக்காய் பரிமாற்றம் செய்துகொள்ள கிட்டிய வாய்ப்பை JVP பயன்படுத்திக் கொண்டது. UNP மற்றும் SLFP ஆகிய முதலாளித்துவத்தின் இருபெரும் கட்சிகளுக்கும் எதிர்ப்பு பெருகிச் சென்ற நிலையில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது எதிர்ப்பை நாடாளுமன்ற அரசியலின் முட்டுச்சந்திற்குள் திருப்பிவிட்டதன் மூலமாக ஆளும் வர்க்கத்தின் ஒரு இன்றியமையாத அரசியல் அழுத்தம் குறைக்கும் கருவியாக JVP செயல்பட்டது.

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில், JVP முழுமையாக தன்னை கொழும்பின் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளாக ஒருங்கிணைத்துக் கொண்டுவிட்டிருக்கிறது. 1960கள் மற்றும் 1970களில், SLFP உடனான LSSPயின் கூட்டணியை கண்டனம் செய்ததன் மூலமாக சிங்கள இளைஞர்கள் மத்தியில் JVP ஒரு ஆதரவை பெற முடிந்திருந்தது. 2004 இல், அது குமாரதுங்கவின் SLFP-தலைமையிலான அரசாங்கத்தில் நுழைந்ததோடு, சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை திணிப்பதற்கான நேரடியான பொறுப்பை JVPயின் அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர்.

2006 இல் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் SLFP தலைமையிலான அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாதப் போரை மீண்டும் தொடக்கியபோது, அதன் உரத்தகுரலிலான வக்காலத்துவாதியாக JVP இருந்தது; பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும் 300,000 பேர் முகாம்களில் அடைபட்டதுமான 2009 இன் இறுதி இரத்தக்களரி வரையிலும் அரசாங்கத்தின் அத்தனை போர்க் குற்றங்களையும் அது பாதுகாத்தது.

கடந்தகாலத்தின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய்வீச்சாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனமான ஆதரவாளர்களாக ஆகிவிட்டிருக்கின்றனர். 2001 இல் JVP புஷ் நிர்வாகத்தின் மோசடியான “பயங்கரவாதத்தின் மீதான போரை”யும் ஆப்கானிஸ்தான் மீதான அதன் படையெடுப்பையும் —1947-48 இல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதற்குப் பின்னர் இந்திய துணைக்கண்டத்திலான முதல் ஏகாதிபத்திய இராணுவ ஆக்கிரமிப்பாகும் இது— ஆதரித்தது. JVP இன் தலைவர்கள் கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரகத்திற்கு பலமுறை சென்று விவாதித்து வந்தனர்.

ஜனாதிபதி இராஜபக்ஷவை அகற்றிவிட்டு மைத்ரிபால சிறிசேனவை அதிகாரத்தில் அமரவைப்பதற்காக வாஷிங்டனால் ஏற்பாடு செய்யப்பட்ட, கொழும்பில் 2015 ஜனவரி 8 அன்று நடந்த ஆட்சி-மாற்ற நடவடிக்கைக்கு JVP ஆதரவளித்தது என்பது தற்செயலானது அல்ல. அமெரிக்கா, இராஜபக்ஷவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானதாய் இல்லை, மாறாக சீனாவுடனான அவரது நெருக்கமான உறவுகளுக்கே எதிரானதாய் இருந்தது. சிறிசேன அரசாங்கம் வெளியுறவுக் கொள்கையை பெய்ஜிங்கை நோக்கியதாக இருந்ததில் இருந்து திருப்பி வாஷிங்டனை நோக்கியதாக துரிதமாக நோக்குநிலைமாற்றம் செய்தது.

JVP ஐயும் குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்தின் அத்தனை வடிவங்களையும் அம்பலப்படுத்துவதற்கான RCL/SEP இன் அரசியல் போராட்டமானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் மட்டுமே உருவடிவம் கொண்டிருக்கின்ற சமகால மார்க்சிசத்தின், அதாவது ட்ரொட்ஸ்கிசத்தின், ஒரு சக்திவாய்ந்த நிரூபணத்தைக் கொண்டிருக்கிறது. அதன் அரசியல் வரலாறு, முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்புமுறையால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இப்போதைய சூறையாடல்கள் மற்றும் பேரிடர்களுக்கு எதிராய் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக போராடுவதற்கான ஒரு வழியை எதிர்நோக்குகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கவனமாக கற்பதற்குத் தகுதிபடைத்ததாகும்.

Loading