அரசியல் திவால்நிலைமையின் ஒரு மாநாடு: வரலாற்று சடவாதம் மற்றும் ஜாகோபின் சஞ்சிகை "நமது காலத்தில் சோசலிசம்" மாநாடு நடத்துகின்றன

16 April 2019

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 13-14 இல், இங்கிலாந்தை மையமாக கொண்ட Historical Materialism சஞ்சிகையும் அமெரிக்காவை மையமாக கொண்ட ஜாகோபின் சஞ்சிகையும் நியூ யோர்க் நகரில் "நமது காலத்தில் சோசலிசம்" என்ற மாநாட்டை நடத்தின. இந்நிகழ்வானது, ஜாகோபின் இணைப்பு கொண்டுள்ள அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) முன்வைக்கும் ஆளுமையான அரசியல் போக்குடன், அமெரிக்காவின் பிரதான போலி-இடது அமைப்புகளில் பெரும்பாலானவற்றை ஒருங்கிணைத்து கொண்டு வந்தது.

உண்மையில் இம்மாநாட்டுக்கும் சோசலிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நமது காலத்திலும் சரி அல்லது வேறெந்த காலத்திலும் சரி. “நமது காலத்தில் ஜனநாயகக் கட்சி அரசியல்" என்பது வேண்டுமானால் இந்நிகழ்வுக்கு மிகவும் சரியான தலைப்பாக இருந்திருக்கும். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும், அதன் 74 குழு விவாதங்களும் மற்றும் பட்டறைகளும் அரசியல் மழுப்பல் மற்றும் இரட்டை வேஷத்திற்கான ஒரு பயிற்சியாக இருந்தன, அதில் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க அரசியல் பிரச்சினையும் புறக்கணிக்கப்பட்டு இருந்தது அல்லது தொழிற்சங்கங்களுக்கான ஆதரவையும் மற்றும், அனைத்திற்கும் மேலாக, பேர்ணி சாண்டர்ஸின் ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்திற்கான ஆதரவையும் நியாயப்படுத்தும் நோக்கில், இதை ஜாகோபினும் DSA உம் உத்வேகத்துடன் ஊக்குவித்து வருகின்ற நிலையில், மழுங்கடிக்கும் வார்த்தைஜாலங்களில் மூடிமறைக்கப்பட்டன.

அங்கே அதிவலது மற்றும் பாசிசவாத இயக்கங்களின் சர்வதேச அளவிலான வளர்ச்சி குறித்தோ, வர்க்க போராட்டங்களின் வளர்ச்சி மீதான முக்கியத்துவம் குறித்தோ அல்லது உலக போர் அபாயம் குறித்தோ எந்த விவாதமும் இல்லை. எவரொருவருமே ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதோ அல்லது அதன் வலதுசாரி கொள்கைகளுக்கு ஒத்துழைப்பதில் ஜனநாயகக் கட்சி வகிக்கும் பாத்திரம் குறித்தோ எந்த ஆழ்ந்த மதிப்பீட்டையும் வழங்கவில்லை.

இலண்டனில் ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டு வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் அது நடத்தப்பட்டிருந்தது என்றாலும், அதுவும் குறிப்பிடப்படாமலேயே கடந்து செல்லப்பட்டது. விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் பிடிக்கப்பட்டமை மற்றும் அமெரிக்காவுக்கு அவர் விசாரணை கைதியாக ஒப்படைக்கப்படக்கூடிய அவர் மீதான அச்சுறுத்தல் ஆகியவை ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதுடன் என்ன தொடர்பு கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து எவரும் கவலைப்படவில்லை.

வரலாறைப் பொறுத்த வரையில், இது தான் அம்மாநாட்டின் பாசாங்குத்தனமான கருப்பொருளாக இருந்தது என்ற நிலையில், அதில் பங்கெடுத்தவர்கள் வரலாற்று முன்வரலாறு குறித்து எதையும் குறிப்பிடுவதை வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டனர், அது அவர்களின் சொந்த காட்டிக்கொடுப்பு மற்றும் துரோகத்தின் முன்வரலாறை மட்டுமே அம்பலப்படுத்துவதாக இருந்திருக்கும்.

ஜனவரியில், சோசலிச சமத்துவக் கட்சி (SEP) "பாசிசத்திற்கு எதிரான போராட்டமும் வரலாற்றின் படிப்பினைகளும்" என்ற தலைப்பில் அம்மாநாட்டு குழு விவாதத்திற்கான ஒரு முன்மொழிவைச் சமர்பித்தது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei - SGP) துணை தேசிய செயலாளரும், அவர்கள் ஏன் திரும்பி வந்துள்ளார்கள்? வரலாற்று பொய்மைப்படுத்தல், அரசியல் சதி மற்றும் ஜேர்மனியில் பாசிசவாதத்தின் மீளெழுச்சி என்ற நூலின் ஆசிரியருமான கிறிஸ்தோப் வாண்ட்ரியர் அது குறித்து உரையாற்றுபவராக முன்வைக்கப்பட்டிருந்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியினது (SEP) குழு விவாதத்திற்கான முன்மொழிவு அம்மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டது. நிஜமான சோசலிசத்தின் எந்தவொரு வெளிப்பாடும் தவிர்க்கப்படுவதாக இருந்தது. அம்மாநாட்டில் ஒரேயொரு குழு மட்டுந்தான் "ஜேர்மனியின் மறைமுக நெருக்கடி" என்ற தலைப்பில் ஜேர்மனியின் அரசியல் நிலைமை மீது ஒருமுனைப்பட்டிருந்தது, அதிலும் பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் வளர்ச்சி குறித்து எதுவும் குறிப்பிடப்படவே இல்லை. அதற்கு பதிலாக, ஜேர்மனியின் பொருளாதார மாற்றங்கள் என்று கூறப்படுவது எவ்வாறு தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளை ஒருவருக்கு எதிராக ஒருவரை எதிர் நிறுத்தியது என்பதன் மீது தார்மீகத்தன்மை இழந்த ஒரு விவாதத்தில் மூழ்கியிருந்த அது, இடதுசாரி அரசியலின் அடிப்படையையே கீழறுத்தது.

“சோசலிச இயக்கத்திற்கு ஏன் எமது சொந்த கட்சி தேவைப்படுகிறது,” என்ற தலைப்பில் விவாதித்த அம்மாநாட்டின் முக்கிய குழு, மேலோங்கிய அரசியல் முன்னோக்கையே உள்ளடக்கி இருந்தது. கடந்த மாதம் கலைக்கப்படுவதற்கு முன்னர் வரையில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) தலைவராக இருந்த டோட் கிரெத்தியான்; ஜாகோபின் பதிப்பாசிரியரும் DSA இன் உறுப்பினருமான பாஸ்கர் சங்காரா; மற்றும் ஜாகோபின் எழுத்தாளரும் DSA இன் உறுப்பினருமான மீகன் டே ஆகியோர் அத்தலைப்பின் மீது உரையாற்றினர்.

சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் அக்கறையின்மையையும் சங்காரா தொகுத்தளித்தார். அவரின் ஆரம்ப அறிக்கையில் மூன்று வெவ்வேறு தருணங்களில், “என்னிடம் பதில் இல்லை,” என்பதை அறிவித்தார், இதே வார்த்தை பின்னர் கிரெத்தியானால் மீண்டும் கூறப்பட்டது.

சங்காரா பேசிய விடயங்களில் பெரும்பாலானவற்றைப் பொறுத்த வரையில், அந்த அரசியல்ரீதியில் பொருத்தமற்ற அறிவிப்பு ஐயத்திற்கிடமின்றி உண்மையானது தான். எவ்வாறிருப்பினும், ஜனநாயகக் கட்சி மீதான கேள்வியைப் பொறுத்த வரையில், அவரின் பதில் தெளிவாக இருந்தது. DSA, “பழைய கட்சியின் [அதாவது ஜனநாயகக் கட்சியின்] கூட்டுக்குள் தொழிலாள வர்க்கத்தின் முதன்மை கட்சியைக் கட்ட" முயன்று வருகிறது என்றவர் வலியுறுத்தினார். “நேரம் வரும் போது நமது சொந்த வாக்காளர் அணியில் மோதல் ஏற்படலாம்,” என்பதை சேர்த்துக் கொண்ட அவர், ஆனால் தெளிவான இதுபோன்ற ஒன்று வெகுகாலத்திற்குப் பின்னரே நடக்கக்கூடும் என்று கருத்துரைத்தார்.

DSA தொடங்கப்பட்டதில் இருந்து அது ஆதரித்து வந்துள்ள, சலித்துப் போன ஜனநாயகக் கட்சி அரசியலை நெறிப்படுத்துவதில் ஒரு புதிய வழியைக் கண்டு பிடித்திருப்பது குறித்து சங்காரா ஒருவேளை தனக்குத்தானே சந்தோஷப்பட்டிருப்பார். உண்மையில், பதவிகளுக்கான அதன் சொந்த அபிலாஷைகளைத் தவிர, DSA, ஜனநாயகக் கட்சிக்குள் எதையும் "சீர்படுத்தி" இருக்கவில்லை. இப்போது அது ஒவ்வொன்றையும் 77 வயதான பேர்ணி சாண்டர்ஸின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் மீது பணயம் வைக்கிறது, 2020 இல் இவரின் வெற்றி அமெரிக்காவில் வறுமையை இல்லாமல் ஆவதற்கான தொடக்கமாக ஜாகோபின் சித்தரித்துக் காட்டி வருகிறது.

சாண்டர்ஸ் வெறும் வாகனம் தான், அவரை வைத்து ஜனநாயகக் கட்சிக்கு அவர்கள் வழங்கும் ஆதரவை நியாயப்படுத்துகிறார்கள். அவர் வேட்பாளர் ஆக்கப்பட்டால், அவர் தவிர்க்கவியலாமல் நடத்தும் ஒவ்வொரு காட்டிக்கொடுப்பையும் DSA பாதுகாக்கும்.

இந்த வலதுசாரி பெருவணிக கட்சிக்கு அவர்களின் சொந்த நடவடிக்கைகளை அடிபணிய செய்யும் கோட்பாடற்ற தன்மைக்கு அப்பாற்பட்டு, DSA இன் ஒட்டுமொத்த அரசியல் மூலோபாயமும் தற்போதைய ஜனாதிபதியை விட ஐந்தாண்டுகள் முதியவரான ஒரேயொரு மனிதரைச் சுற்றி சுழல்கிறது. சாண்டர்ஸால் தொடர முடியாமல் போனால் என்னாவது? அவர் வேட்பாளர் நியமனத்தை இழந்தாலும் கூட பதில் இதே தான்: ஜனநாயகக் கட்சி தேர்ந்தெடுக்கும் வலதுசாரி வேட்பாளர் யாராக இருந்தாலும் DSA ஆதரவளிக்கும்.

அம்மாநாட்டில் பங்கெடுத்த, ISO இன் சிதைவுகளில் இருந்து கரை ஒதுங்கிய பல அரசியல் அகதிகளில் கிரெத்தியானும் ஒருவர். நான்கு தசாப்தங்களுக்கும் அதிக காலமாக உயிர்பிழைத்திருந்து சில வாரங்களில் மூடப்பட்ட அவரின் முன்னாள் கட்சி கலைக்கப்பட்டதைக் குறித்து கிரெத்தியானிடம் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை. “காலத்தின் கட்டாயங்களுக்கு எதிராக போராடிய ஒரு குறிப்பிடத்தக்க அமைப்பாக" ISO இருந்தது என்றாலும், அவர் கூறினார், “நாங்கள் தோல்விகளின் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருந்தோம்.” ஒரு புதிய காலகட்டத்தை எதிர்கொண்ட போது, “எங்களின் சொந்த குறைபாடுகள் குறுக்கிட்டன, ஒரு சுமூகமான வழியில் எல்லாம் முடிந்தது.”

WSWS பகுப்பாய்வு செய்துள்ளதைப் போல, கற்பழிப்பு குற்றச்சாட்டுக்களின் அவதூறுகளில் தொடங்கிய ISO இன் நெருக்கடிக்குப் பின்னால், அடையாள அரசியலின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மற்றும் விதைக்கப்பட்ட நடுத்தர வர்க்க சக்திகளின் வலதை நோக்கிய கூர்மையான திருப்பம் உள்ளது. அந்த அமைப்பு ஜனநாயகக் கட்சியுடன் அணிசேர்ந்த அமைப்புக்களுடன் அதீத நிதி உறவுகளை அபிவிருத்தி செய்திருந்தது, இவை அதன் இலாப நோக்கமில்லா கழக அமைப்பான பொருளாதார ஆய்வு மற்றும் சமூக மாற்றத்திற்கான மையத்திற்கு (CERSC) மில்லியன் கணக்கான டாலர்கள் நிதியுதவி வழங்கி உள்ளது.

“செயலிழப்புக்கான குறுக்கீட்டை" தொடர்ந்து, கிரெத்தியான் கூறினார், முன்னாள் உறுப்பினர்கள் எவ்வாறு "ஒரு புதிய இடதைக் கட்டமைப்பதில் பங்களிக்கலாம்" என்பதை தீர்மானித்துவிட்டதால் அவர்கள் இப்போது "நிம்மதி பெருமூச்சு" விடுகின்றனர். எவ்வாறிருப்பினும் கிரெத்தியான் மற்றும் ஏனைய ISO முன்னாள்-உறுப்பினர்களின் சுவாசம் குறிப்பாக ஆழமாக இல்லை. அவர்கள் ஏற்கனவே ஜனநாயகக் கட்சிக்குள் தங்களின் புதிய இடத்தைத் தேட தொடங்கிவிட்டனர்.

அவரின் ஆரம்ப கருத்துக்களின் போது, கிரெத்தியான், ஸ்பெயினில் உள்ள பொடெமோஸ், தென் ஆபிரிக்காவில் உள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், மெக்சிகோவில் AMLO மற்றும் குறிப்பாக கிரீசில் சிரிசா ஆகியவற்றை சாத்தியமான முன்மாதிரியாக மேற்கோளிட்டு, “நமக்கு நமது சொந்த கட்சி தேவைப்படுகிறது,” என்று பணிவோடு அறிவுறுத்தினார். முதலாளித்துவக் கட்சிகளான இவை அனைத்தும் முதலாளித்துவ ஆட்சியைப் பேணுவதில் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்து வருகின்றன. “தீவிர இடதின் கூட்டணி", சிரிசா, நான்காண்டுகளுக்கும் அதிகமாக கிரீஸில் அதிகாரத்தில் இருந்து வருகிறது, இக்காலத்தில் அது ஐரோப்பிய வங்கிகள் கோரிய சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி உள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள்-விரோத கொள்கையில் முன்னணி அரசாக இருந்து சேவையாற்றி உள்ளது.

“நமக்கு நமது சொந்த கட்சி" தேவை குறித்த கிரெத்தியானின் கருத்து, சங்காராவை இவ்வாறு கூற தூண்டியது, "நாம் எல்லோரும் ஒரே குடும்பம்" என்று கூறி அவர் சரி செய்து கொள்வதற்கு முன்னதாக DSA அங்கத்தவர்களால் குழுவில் "Todd விஞ்சிவிட்டார்" என்று கூறினார். இதில், கிரெத்தியான் உடனடியாக உடன்பட்டார், பேர்ணி சாண்டர்ஸ் பிரச்சாரத்தில் "சில பலவீனங்கள் இருப்பதாக" அவர் கருதுகிறார் என்றாலும், அது தான் "நாம் வளர்வதற்குரிய ஒரு தொடக்க புள்ளியாகும்" மற்றும் "தேர்தலுக்கான ஒரு நிஜமான தொடக்கத்தை" வழங்குகிறது என்று அறிவித்தார்.

DSA ஜனநாயகக் கட்சியின் ஒரு கன்னை என்ற அதேவேளையில், முன்னதாக ISO ஜனநாயகக் கட்சியினருக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து, ஒரு துணை முகமையாக சேவையாற்றி உள்ளது. அதிகரித்து வரும் வர்க்க போராட்ட நிலைமைகளின் கீழ், முதலாளித்துவ அரசியலில் இருந்து இனியும் எவ்விதத்திலும் சுதந்திரமாக இருப்பதாக காட்டிக் கொள்ள முடியாது என்பதை ISO புரிந்து கொண்டது என்ற உண்மையின் ஒரு வெளிப்பாடு தான் அதன் கலைப்பு.

ஜனநாயகக் கட்சியை தாங்கிப்பிடிப்பது என்ற தீர்மானம், ஜனநாயகக் கட்சியினர் அவர்களே இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்ந்து வரும் வேளையில் நிகழ்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புக்கு எதிரான எதிர்ப்பை அவர்களின் ரஷ்ய-விரோத பிரசாரத்தின் மீது மையப்படுத்தி இருந்தனர், இது இணைய தணிக்கையை, விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜ் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கும் மற்றும் மத்திய கிழக்கிலும் ரஷ்யாவுக்கு எதிராகவும் இன்னும் ஆக்ரோஷமான போரைக் கோருவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனநாயகக் கட்சியினர் யாருக்காக பேசுகிறார்களோ அந்த அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் ஏகாதிபத்திய திட்டநிரலை ஆதரிப்பதில் ISO ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. இது முன்னாள் ISO தலைவர் அஸ்லி ஸ்மித் உரையாற்றிய பல குழு விவாதங்களின் போது அம்மாநாட்டில் வெளிப்பட்டது, அந்த உரைகள் சிரியாவில் அமெரிக்க போர் முனைவை எதிர்த்தவர்களைக் கண்டிப்பதற்காக அர்பணிக்கப்பட்டிருந்தன. இத்தகைய குழு விவாதங்கள் ஒன்றில், “கோட்பாட்டுரீதியான ஏகாதிபத்திய-எதிர்ப்பை மீளக்கட்டமைப்பது" என்பதில், ISO இன் சோசலிஸ்ட் வேர்க்கர்ஸ் வலைத் தளத்தில் வழமையாக எழுதி வந்த ஷெரீன் அக்ரம்-போஷர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது "அதீத ஒருமுனைப்பு" செலுத்தியவர்களைத் தாக்கியதுடன், சிரியாவில் சிஐஏ ஆதரவிலான எதிர்ப்புக்கு அதிக ஆயுதங்களை வழங்காததற்காக அமெரிக்க அரசாங்கத்தை விமர்சித்தார்.

அது DSA இன் மீகென் தினமாக இருந்தது, இவர் ஒட்டுமொத்தமாக அந்நிகழ்வு மீது கண்ணோட்டத்திற்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டை வழங்கினார். ஐரோப்பாவில் சமூக ஜனநாயக கட்சிகளின் பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி, அப்பெண்மணி கூறுகையில், “நம் முதுகில் குத்தும் அமைப்புகள் இதுவரையில் நம்மிடம் இல்லை. இதுமாதிரியான அமைப்புகளை தான் நாம் கட்டமைக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு,” என்றார்.

இந்த கருத்து, DSA, முன்னாள் ISO, மற்றும் நம் காலத்தில் சோசலிசம் மாநாட்டில் பங்கெடுத்திருந்த ஏனைய போலி-இடது அமைப்புகளின் பாத்திரத்தைப் போதுமானளவுக்குத் தொகுத்தளிக்க சேவையாற்றுவதாக இருக்கும்—அவர்கள் அவர்களின் முதுகில் குத்த மாட்டார்கள், மாறாக தொழிலாள வர்க்கத்தின் முதுகில் குத்துவர்கள் என்பதே காப்புவாசகமாக உள்ளது. இந்த அமைப்புகள் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட நடுத்தர அடுக்குகளைப் பொறுத்த வரையில், அவை இந்த செயல்பாட்டில் பங்கெடுக்க எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த கருத்தை கூறும்.

Joseph Kishore