பெருகி வரும் எதிர்ப்புகளுக்கு எதிராக அல்ஜீரிய ஆட்சி போலிஸ் வன்முறையை அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அல்ஜீரியாவின் இராணுவ ஆட்சி அதன் மோசடியான அரசியல் "மாற்றத்திற்கு" எதிரான அரசாங்க விரோத எதிர்ப்பு அதிகரிப்புக்கு முன்னெப்போதும் இல்லாத வன்முறையான பொலிஸ் அடக்கு முறைக்கு திரும்புவதன் மூலம் பதிலளித்திருக்கிறது.

செவ்வாயன்று பிற்பகலில் ஒரு தேசிய ரீதியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட உரையில் தளபதி அஹ்மெட் கய்ட் சலாஹ், போராடிவரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை வெளியிட்டார். "மக்களைக் காப்பாற்றுவதற்கான இராணுவ முடிவு" என்பது "மாற்ற முடியாதது" என்று அறிவித்தார். "ஆயினும் கூட, மக்கள் வன்முறைக்கு உதவுவதை தவிர்க்கவும், பொது மற்றும் தனியார் சொத்துக்களைக் காப்பாற்றவும் குடிமக்களின் நலன்களுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்" என்று தொடர்ந்து கூறினார்.

“மக்களுடைய கோரிக்கைகளுக்கு பின்னால் சதி செய்வதற்கும், தேசிய மக்கள் இராணுவத்தின் தீர்வுகளை தடுக்கவும், நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு திட்டத்திற்கான முன்மொழிவுகளைத் தடுக்கும் நிழல்களில் நடைபெறும் பெயரிடப்படாத சந்தேகத்திற்கிடமான சந்திப்புகளைப் பற்றியும் சலாஹ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளியன்று ஆர்ப்பாட்டங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறையை இராணுவம் விரிவுபடுத்துவதற்கு தயாராகி வருகின்றது என்பதற்கான ஒரு எச்சரிக்கையே இந்த கருத்துக்கள் ஆகும். மக்கள் கோபத்தை உக்கிரப்படுத்தும் என்று அஞ்சி, அரசாங்கம் எட்டு வாரங்களுக்கு மேலாக எதிர்ப்பாளர்களுடன் போலிஸ் மோதலைக் கட்டுப்படுத்தியதுடன் தற்போது அல்ஜியர்சில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் இரப்பர் தோட்டாக்களைக் பயன்படுத்துவதற்கு போலிஸிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

"சுரங்கப் பாதைக்கு உள்ளே இருந்த அல்லது அதை விட்டு வெளியேறும் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டன" என்று ஒரு எதிர்ப்பாளர் தலைநகரில் உள்ள Tunnel of the Facultés சுரங்கப்பாதையை El Watan இடம் குறிப்பிட்டுள்ளார். "திடீரென ஒரு கண்ணீர்ப்புகை குப்பி ஓடான் சதுக்கத்தின் நடுவில் விழுந்தது. அதைத் தொடர்ந்து பல டஜன் கணக்கானவை வந்து வீழ்ந்தன. பின்னர் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களிடையே பீதி தொடங்கியமையால் Tunnel of the Facultés ஐ விட்டு வெளியேறினர்... வயதான பெண்கள், குழந்தைகள் விழுந்துவிட்டார்கள். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள் உட்பட சிலர் நோய்வாய்ப்பட்டனர்” என்று பத்திரிகை தெரிவித்தது.

எதிர்ப்பாளர்களை மிரட்டுவதற்கான ஒரு முயற்சியாக, நகரம் முழுவதிலும் பெருமளவில் ஆயுதமேந்திய பயங்கரவாத-எதிர்ப்பு பொலிஸார் இருந்தனர் என்று Tout sur l’Algérieதெரிவித்தது. சனிக்கிழமை காலை, தேசிய தபால் நிலையத்திற்கு வெளியே ஒரு சிற்றுண்டிச்சாலையில் இருந்த ஒரு பெண் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு போலிஸால் கைது செய்யப்பட்டு பாரகி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டனர். அங்கே அவர்கள் வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கப்பட்டு உடல் ரீதியாக சோதனையிடப்பட்டனர்.

"சொத்துக்களை மதித்தல்" எனும் சலாஹ்ஹின் குறிப்பு, குறிப்பாக போலிஸுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களை முன்னெடுப்பதற்கும் அத்துடன் வெள்ளியன்று அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கும் ஒரு போலிக்காரணத்தை வழங்குவதற்கும் அரசாங்கம் குண்டர்களை பயன்படுத்தி வருவதாக பரவலான அறிக்கைகள் கொடுக்கப்பட்டன. எந்த அதிகாரிகளும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஒற்றை பொலிஸ் வாகனம், அன்றைய நாளில் தீ வைக்கப்பட்டது.

மாதத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இராணுவ ஆதரவு மாற்ற செயல்முறையின் அறிவிப்பைத் தொடர்ந்து இன்னும் கூடுதலான வெளிப்படையான அடக்குமுறைக்கு இராணுவம் திரும்புவதானது, எதிர்ப்புக்கள் தொடர்ந்து விரிவடைவதற்கு அதன் பதிலாகும். தலைநகர் அல்ஜியரில் பத்தாயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதே நாளில் சலாஹ்வின் உரை இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் தவிர, இது எந்த ஆர்ப்பாட்டத்தையும் விட மிகப்பெரியது ஆகும்.

பெப்ரவரி 22 இல் இருந்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொழிலாள வர்க்கத்தில் பெருகிவரும் வேலைநிறுத்த இயக்கத்தை முன்னெடுப்பதற்கான முயற்சியில், இராணுவம் ஆனது ஜனாதிபதி அப்தலசீஸ் புட்டஃபிளிக்காவின் இராஜிநாமாவை கோருவதுடன் அதன் தலைமைப் பிரமுகர் இல்லாத ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காக, புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தது.

செவ்வாயன்று நீண்டகால புட்டஃபிளிக்காவின் கூட்டாளியும் ஜூலை 4 ம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலை மேற்பார்வை செய்யும் பொறுப்பாளராகவும் இருக்கும் Tayib Belaiz, எனும் அரசியலமைப்பு சபையின் பதவி விலகலை ஆட்சி அறிவித்தது.

அல்ஜீரிய தொழிலாள வர்க்கத்திலும் மாணவர்களிடத்திலும் இடம்பெறும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் சர்வதேச அளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ந்து வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாகும். அண்மையிலுள்ள மொராக்கோவில், மார்ச் 3 முதல் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர். திங்களன்று, கல்வித்துறை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்துமாறும் நிரந்தர பதவிகளுக்குரிய அவர்களது கோரிக்கைகளை பூர்த்தி செய்யாமல் வேலைக்கு திரும்புவது "தற்காலிகமானது" மட்டுமே என்று கூறி 55,000 ஒப்பந்த ஆசிரியர்களை வேலைக்கு திரும்புமாறும் உத்தரவிட்டது. திங்கட்கிழமை அவர்கள் வேலைக்குத் திரும்பிய போது, வேலை நிறுத்தத்தின் போது அவர்கள் வராமையை விளக்கி ஆவணங்களை நிரப்பவும் கையெழுத்திடவும் கூறியமையால் ஆசிரியர்கள் கலகம் செய்தனர்.

போலந்தில், 1989 இல் முதலாளித்துவ மீட்சிக்கு பின்னர், பல தசாப்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, 1993 முதன்முதலாக ஆரம்பித்து தற்போது ஏப்ரல் 8 முதல் தேசிய வேலைநிறுத்தத்தில் நூறாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த வியாழன், சூடானில் ஆட்சியின் வீழ்ச்சியைக் கோரி பல மாதங்களாக இடம்பெற்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட இராணுவ தடுப்பு சதியில் ஜனாதிபதி ஒமர் எல் பஷீர் வெளியேற்றப்பட்டார். வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், 48 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில், ஆட்சி இராணுவ தலைவர் அவட் முகமது அஹ்மத் இபின் ஆஃபின் பதவி விலகலை அறிவித்தது. எதிர்ப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அப்போதிலிருந்து ஆட்சியின் மற்றைய அதிகாரிகள் தொடர்ச்சியாக அகற்றப்பட்டனர்.

அல்ஜீரிய இராணுவம் ஒரு இரத்தக்களரி அடக்குமுறைக்குத் தயாரிப்பு செய்து வருகின்ற அநேக அறிகுறிகள், லூயிஸ் ஹனூனின் போலி-இடது தொழிலாளர் கட்சி மற்றும் பிரான்சின் ஏகாதிபத்திய-சார்பு புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடன் இணைந்துள்ள சோசலிச தொழிலாளர் கட்சி ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட துரோகத்தனமான மற்றும் பேரழிவுக் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகின்றன.

இராணுவத்தை அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்யாமல் விலகி இருக்குமாறு வெற்று அழைப்புக்களை விடுக்கும் அதேவேளை, பல ஆண்டுகளாக புட்டஃபிளிக்காவிற்கு ஒரு விசுவாசமான எதிர்ப்பாக செயல்பட்டு வருகிற ஹனூன், இராணுவம் ஜனநாயகத்திற்கு ஒரு கருவியாக செயல்பட முடியும் என்ற மாயையை ஊக்குவிக்க முற்படுகிறார். இராணுவம் "அரசியல் இல்லை," "நமது தேசியப் பாதுகாப்பையும், எல்லைகளையும், மற்றும் வெளிநாட்டு தலையீட்டிற்கு எதிராக அனைத்து சாத்தியமான விழிப்புணர்வுடனும் பதிலளிப்பதே இராணுவத்தின் பொறுப்பாகும்" என்று ஹனூன் கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

"மக்களை, அவர்களின் சமூக உரிமைகள் மற்றும் நல்வாழ்வு, அவர்களின் தேசிய இறையாண்மை, எல்லைகள் மற்றும் அவர்களின் அரசியல் இறையாண்மை ஆகியவற்றை பாதுகாப்பதே" இராணுவத்தின் பங்கு என்று அறிவித்து ஏப்ரல் 5 ம் தேதி PST ஒரு அறிக்கையை வெளியிட்டது. இராணுவ மற்றும் அரசு எந்திரம் முதலாளித்துவ வர்க்கத்தின் கருவிகளாக உள்ளன என்ற மார்க்சிச கருத்தை ஒடுக்குவதற்கு இந்த கட்சிகள் போராடுவதுடன், தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்திற்கு எதிராக தங்கள் சொத்துக்களையும் நலன்களையும் பாதுகாப்பதற்காக இரக்கமற்ற முறையில் பதிலளிக்கிறார்கள்.

போலி இடதுகள், பல தசாப்தங்களாக தேசிய விடுதலை முன்னணி ஆட்சியை ஊக்குவித்த தேசியவாத மற்றும் சோசலிச எதிர்ப்பு முன்னோக்கே இந்த அறிக்கைகளுக்கு அடிப்படை ஆகும். ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சியின் தத்துவத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தில் அடித்தளமிட்ட சுயாதீன சோசலிச கட்சிகளை கட்டியெழுப்பும் போராட்டத்தை நிராகரித்து, ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து விட்டோடிய பப்லோவாத அமைப்புக்கள், FLN உம் பிற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கு ஒரு புதிய பாதையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அறிவித்தன.

இன்று, PT மற்றும் PST பல தேசிய தொழிற்சங்கங்களின் தலைமையில் அவர்களின் நிலைப்பாடுகளால், ஆட்சியுடன் தொடர்புடைய நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளின் சார்பில் பேசுகின்றன. முதலாளித்துவத்திற்கும் மற்றும் சமூக சமத்துவமின்மை மற்றும் நசுக்கும் வறுமை நிலைகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு போராட்டத்திற்கும் அவர்கள் விரோதப் போக்கு கொண்டுள்ளனர். ஆட்சி சலுகைகள் செய்வதற்கும் தானே ஜனநாயகமயமாகுவதற்கும் அதற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்ற பிரமையை அவர்கள் முன்னிலைப்படுத்துகிறார்கள்.

அல்ஜீரியாவில் தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கி செல்லும் பாதை, அது ஒருபோதும் வழங்கியிராத ஜனநாயக சீர்திருத்தங்களுக்காக இராணுவ சர்வாதிகாரத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்களில் அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிந்து, தனது சொந்த கையில் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதன் மூலமும் சர்வதேச ரீதியாக அதன் புரட்சிகர போராட்டத்தை விரிவாக்குவதன் மூலமாகவும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதில் ஆகும்.

Loading